Advertisement

கூடு – 1

கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் கி.மு 776 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டன.

அந்த நாளின் ஓட்டத்திற்கான பொழுது தொடங்கிவிட்டதை உணர்ந்த மனிதர்கள் தங்கள் ஓட்டத்திற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்

வாசல் பெருக்குகிறேன் பேர்வழி என்று தங்கள் வீட்டுக் குப்பையை எதிர் வீட்டுக்காரி விழிப்பதற்குள் அவள் வீட்டை நோக்கி தள்ளிவிடும் சாமர்த்தியசாலி பெண்கள்

டீக் கடை பென்ச்சில் அமர்ந்து அரசியல் பேசியபடியே சினிமா பக்கத்தில் பெரிதாய் இருக்கும் கவர்ச்சி நடிகையின் புகைப்படத்தை திருட்டுத்தனமாய் ரசிக்கும் பெருசுகள்

எப்பமா சன்டே வரும்..?’’ என்ற கேள்வியோடும், “இன்னைக்கும் ஸ்கூல்லுக்கு போகணுமா?’’ என்ற அலுப்போடும் பல் தேய்கிறேன் பேர்வழி என்று தெருவை வேடிக்கை பார்க்கும் சிறுசுகள்.  

இப்படி ஆள் ஆளுக்கு ஒரு வகையில் தங்கள் விடியலை தொடங்கி இருக்க, ஊர்க் கோடியில் இருந்த மைதானத்தில் பரணி மூச்சைப் பிடித்து ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன் தன் கைக் கடிகாரத்தில் நேரத்தைக் கணக்கிட்டபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார்

கமான் பரணி…. உன்னால முடியும்…. ஸ்பீட் அப்…. இன்னும் தெர்ட்டி செகண்ட்ஸ் தான் இருக்கு…. கமான் மேன்…’’ 

அவர் இங்கே குரல் கொடுக்க கொடுக்க, அவன் தேக்கு மரக் கால்கள் நீரை கிழிக்கும் துடுப்பை போல, நிலத்தில் தாவி வேகத்தை அதிகப்படுத்தின

தனக்கு முன்னால் இருந்த எல்லைக் கோட்டை அவன் மூச்சு வாங்க கடக்கும் போது, 40 நொடிகளாகி இருந்தது. எல்லைக் கோட்டை கடந்தும் சற்று நேரம் தன்னுடைய சமநிலைக்காக ஓடியவன், அப்படியே மடங்கி மண்ணில் அமர்ந்தான்

அமர்ந்த வேகத்தில் கை முஷ்டியால் மண்ணில் ஓங்கிக் குத்தினான். “சை…’’ அவனால் அந்த வார்த்தையை தவிர தற்சமயம் வேறு வார்த்தை பேச முடியவில்லை. உடல் முழுக்க வேர்த்து, மூச்சு வாங்ககால்களை முன்னால் நீட்டியவன், வேக வேகமாய் பிராண வாயுவை உள்ளிழுக்க தொடங்கினான்.  

அவன் அருகில் வேகமாய் வந்து நின்ற அவன் பயிற்சியாளர் சிதம்பரம், “பரணி…. விடுய்யா…. பத்து செகண்ட்ஸ் டிபரன்ட் தான இன்னும் ஐஞ்சாறு நாள் போனா ஸ்பீட் பண்ணிக்கலாம்யாசும்மா எமோசனல் ஆகாத….ஒரு ஸ்போர்ட்ஸ் மேனுக்கு அவன் உடம்பை விட மனசு சரியா இருக்கணும் உனக்கு தெரியாததா என்ன…?’’ 

அவர் அவனிடம் பேசிக் கொண்டே அவன் பையில் இருந்த குளுகோஸ் டப்பாவை எடுத்துக் கொடுக்க, அதை அப்படியே தன் வாயில் சரித்துக் கொண்டவன், அடுத்த ஐந்து நிமிடத்தில் எழுந்து நின்றான்

இன்னும் பத்து நிமிசத்துல அடுத்த ப்ராக்டிஸ் போலாம் மாஸ்டர்…’’ அவன் குரலில் வெளிப்பட்ட பிடிவாதத்தில் சிதம்பரம் சற்றே திகைத்துப் போனார்

பரணி நமக்கு இன்னும் டைம் இருக்கு. நீ ஏன்யா உன்ன இவ்ளோ ஸ்ட்ரைன் பண்ணிக்கிறஇப்போதைக்கு வார்ம் அப் மட்டும் பண்ணுமீதியெல்லாம் நாளைக்கு பாக்கலாம்காலைல நாலு மணியில இருந்து ஓடிக்கிட்டு இருக்கஇப்ப மணி ஆறு…’’ அவர் குரலில் இருந்த கட்டளைத் தொனியில் எழுந்து நின்றவன் ஒன்றும் பேசாமல் மெதுவாக ஜாகிங் முறையில் ஓடத் தொடங்கினான்

பரணி தன் பயிற்சியை முடித்துக் கொண்டு மைதானத்தை விட்டுக் கிளம்பும் போது மணி ஏழு. “நாளைக்கு பாக்கலாம் பரணிஎன்று அவனிடம் கைகுலுக்கிய பயிற்சியாளர் தன் ஆக்டிவா வண்டியில் கிளம்பினார்.

தன் பையில் இருந்த சாம்பல் நிற டீஷர்டை எடுத்து அணிந்துக் கொண்டவன்., தன் டுகாட்டி வண்டியைக் கிளப்பினான் பாரதி நகர் நோக்கி

பரணி தாமிரபரணி ஆறு ஓடும் திருநெல்வேலி ஜில்லாக்காரன். வீரமும், ஈரமும் சரிபங்காய்  கொண்ட மண்ணின் மைந்தர்களில் அவனும் ஒருவன். முணுக்கென மூக்கின் மேல் கோபம் வந்தாலும்

ஏய்யா பரணி….ஒருவா சாப்பிட்டு போய்யா…’’ என்ற தாயின் அன்பிற்கு  மகுடிக்கு மயங்கும் பாம்பாய் கட்டுப்பட்டு நிற்பவன். ஆறடி உயரமும், போர் வீரனின் உடலும் அவன் உயிர் மூச்சான கால்பந்து விளையாட்டு அவனுக்கு அளித்த வரம்

மாநிறமாய் இருந்தாலும் களையான முகம் அவன் தாய் செல்வாம்பிகை அவனுக்கு அளித்த வரம். வீட்டில் அவன் கடைக் குட்டி. இதுவரை எந்த பொறுப்பும் அவன் தோள் மேல் ஏறவில்லை

அவன் சிந்தனை, மூச்சு, செயல்பாடு எல்லாம் கால்பந்து கால்பந்து கால்பந்து ஒன்றே. வள்ளியூரின் பாரதி நகரின் வடக்கு வீதியில் நுழைந்து அவன் தன் வண்டியை வீட்டின் முன் நிறுத்திவிட்டு இறங்கும் போதே அவன் ஆச்சி நாகம்மையின் குரல் எட்டு கஜத்தில் வாயிலில் ஒலித்தது

ஏடே ராசு….துணைக்கு தொப்பி போட்டு மறவன் குடி பொறந்த பய இல்லடா நீஈன சிறுக்கி எம்புட்டு நெஞ்சழுத்தம் இருந்தா மறுபடி நம்ம மண்ணை மிதிச்சி இருப்பா…. குறத்தி கையில குருத்தறுவா கொடுத்து அவ கொண்டை முடியை சீவி ஊருக்கு அப்பால இருக்குற கிணத்துல தள்ளி சோலிய முடிக்காமஒய்யாரமா உக்காந்து ஓலை வாசிக்கியோ ஓலை..’’ 

அவர் ஆவேசமாக பேசியதில் காதில் இருந்த தண்டட்டி இருபுறமும் ஊஞ்சலாட, வீட்டுக்குள் நுழைந்த பரணி கண்டது, ஓரமாய் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்த சிவாத்மிகா அத்தையை தான்

கூடத்தில் தந்தை கைகளை கட்டியபடி நின்றுக் கொண்டிருக்க, செல்வாம்பிகை சமயல் கூடத்தில் நின்று கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தார்

பரணியின் உள்மனம் சொல்லிற்று ஏதோ சரியில்லையென. “என்னப்பா…’’ அவர் எதிரே சென்று நின்றவன் கேட்க, பதில் அவன் ஆச்சியிடமிருந்து வந்தது

ஏலே பரணிஅந்த மலைக்காரி மறுபடி ஊருக்குள்ள வந்துட்டாடாகுடி கெடுத்த சிறுக்கி மறுபடி நம்ம மண்ணை மிதிச்சிட்டாஉங்க மாமன் வந்து காலையில தான் தகவல் சொல்லிட்டு போறான்விசயத்தை கேட்டதுல இருந்து எம் மக உடஞ்சி போயி கிடக்கா…’’ 

அவ்வளவு நேரம் கத்திக் கொண்டிருந்த மூதாட்டி மகளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விடவும், பரணியுடன் ஒட்டிப் பிறந்த குணமான மூர்க்கமான கோபம் மூக்கைக் கடந்து நேராய் மூளைக்கு ஏறி என்னிடம் பலியாகப் போவது யார்..?’ என்ற ரீதியில் சிலிர்த்துக் கொண்டு நின்றது

அதே கோபத்துடன் அப்பாவை நோக்கி திரும்பியவன், “என்னப்பா இதெல்லாம் யாரு வந்து இருக்கா…. அந்த ஆளு வெக்கமே இல்லாம அந்த பொம்பளையை இழுத்துகிட்டு மறுபடி ஊருக்குள்ள காலை வச்சிட்டாறா….அத்தை உக்காந்து அழுதுக்கிட்டு இருக்குஅப்புறம் எதுக்குப்பா நாம வேட்டி கட்டி, மீசை வச்சி ஆம்பளைங்கன்னு இந்த வீட்ல மூணு பேர் இருக்கோம்நம்ம வீட்டுப் பொண்ணை ஒருத்தன் அழ வச்சா அவன் உசுரு உடம்புல இருக்கலாமா…?’’ 

நெற்றிப் புடைக்க, ஆவேசமாய் கேள்வி கேட்கும் மகனை அமைதியாய் பார்த்தவர், “மகனே பிரச்சனையே வேறப்பா…’’ அவனைப் பார்த்து பெருமூச்சை வெளியேற்றியவர் ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில் பேச துவங்கினார். 

ஊருக்குள்ள வந்து இருக்குறது உங்க மாமனோ, இல்ல அவன் தொடுப்போ இல்லய்யா…. அந்த உறவுக்கு பேர் சொல்லிப் பொறந்த பொறப்பு…. அந்த வேலுநாட்சியா வந்து இருக்கா வந்தவ அவ பேருக்கு பின்னாடி வேலுநாட்சியா கஜபதிபாண்டியன்னு  அவ அப்பன் பேரை சேத்து நான் இன்னார் குடும்பத்து வாரிசு தான்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டு இருக்கா...பனிரெண்டு வருசமா அடங்கி இருந்த ஊர் வாய் மறுபடி அவுளு கிடச்ச தினவுல உங்க அயித்த கதைய மென்னு துப்ப ஆரம்பிச்சிடுச்சிப்பா….. பொட்ட புள்ளன்னு பாக்குறேன்…’’அடக்கப்பட்ட ஆத்திரக் குரலில் ராசுமதுரவன் பொரிந்தார்.

மூலையில் அமர்ந்து அதுவரை அமைதியாய் அழுதுக் கொண்டிருந்த சிவாத்மிகா முடியை கொண்டையிட்டவாறே ஆங்காரமாய் எழுந்தார்

இதோ பாரு அண்ணே….அந்த ஆளு ஒரு எடுபட்ட சிரிக்கியோட ஊருக்குள்ள காலெடுத்து வச்சப்பையே…. அவ மென்னியை திருகி கதைய முடிச்சி இருந்தாரெண்டு பொட்ட புள்ளைங்களோட நான் இன்னைக்கு வாழா வெட்டியா உன் வீட்ல வந்து உக்காந்து இருந்து இருக்க மாட்டேன்….

அந்த பொம்பளை மாசமா இருக்குன்னு கர்ப்பிணி பொம்பளை சாபம் ஏழு தலை முறையை தொடரும்ஆணை பூனைன்னு அம்பத்திரெண்டு கதை பேசி ஊருக்குள்ள ஒதுக்கு புற வீட்ல இருந்தவளை நீங்களும் உங்க ஐயாவும் கண்டுக்கிடாம விட்டீக…. 

அந்த ஆளும் வீட்டுக்கு ரெண்டு வாசல் மாதிரி இங்குட்டும் அங்குட்டும் அல்லாடிக்கிட்டு இருந்தான்…. பொச கெட்ட மனுஷன் பிள்ளைங்க சடங்காகி நின்ன நேரத்துல அந்த பொம்பளைய இழுத்துகிட்டு ஊரைவிட்டே ஓடிப்போயி எங்களை மூலையில முடக்கிப் போட்டான்….

நீ இன்னும் பொம்பளைபிள்ள அது இதுன்னு பாவம் பாத்துக்கிட்டு கிடந்த வீட்ல ஒரு ஆம்பளை மிஞ்சாமா அவளுக முந்தியில முடிஞ்சிக்கிட்டு போயிடுவாளுக….. அம்புட்டுதேன் சொல்லுவேன்…’’ 

கத்தி முடித்தவர், மீண்டும் அமர்ந்து கண்ணீர் வடித்த படியே, “பத்து வருசமாகுது அந்த ஆள் முகத்த பாத்துதுரோகம் பண்ணின புருஷன்னாலும் நெஞ்சுக் குழி அந்த ஆள் நினைப்புல ஏங்கி கிடக்குஇன்னைக்கு அப்பா வருவார் நாளைக்கு அப்பா வருவார்னு சொல்லி சொல்லி வளத்த பெரியவ கல்யாணம் முடிஞ்சி சீமந்தம் பண்ணியாச்சு…. இருக்குற மிச்ச உசுரு போறதுக்குள்ள எம் புருஷனை ஒருதரம் கண்ணுல காட்டிடு அண்ணே..!’’

அவர் தேம்பித் தேம்பி அழவும், “அவ எங்கப்பா இருக்கா….’’ என மதுரவனே மிரளும் ஆத்திரக் குரலில் பரணி கேட்டான்.

செல்வாம்பிகை சமையல் கூடத்தில் இருந்து,“ஐயா பரணி..’’ என குரல் கொடுத்தார். அவர் குரலுக்கு எல்லாம் அவன் தற்சமயம் செவி சாய்க்கும் நிலையில் இல்லை. “அப்பா…’’ அவன் குரலில் வெளிப்பட்ட பிடிவாதத்தில்

“அவளை அப்படியெல்லாம் சுலபமா பாத்துற முடியாது பரணி…. இப்ப அவ நாம ஊரை விட்டு விரட்டின சின்ன பொண்ணு வேலுநாட்சியா இல்லதிருநெல்வேலி சப் கலெக்டர் வேலுநாட்சியா…. 

சொல்லிவிட்டு அவர் அங்கிருந்த நாற்காலியில் அமரவும், அழுதுக் கொண்டிருந்த அத்தையை ஒரு பார்வை பார்த்தவன், அடுத்த நொடி தன் வண்டியில் பறக்கத் தொடங்கினான் திருநெல்வேலி ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி.

கூடு தேடும். 

Advertisement