Advertisement

9
“என்ன!!” என்றாள் அவள் அதிர்ந்து.
“என்னமோ கேக்கணும்ன்னு தோணிச்சு கேட்டுட்டேன்”
“இங்க பாருங்க உங்க சூழ்நிலையை நான் பயன்படுத்திக்கறேன்னு நீங்க நினைக்கலாம். அது அப்படியில்லைன்னு நான் பொய் சொல்ல விரும்பலை”
“ஆமா எனக்கு சாதகமா யோசிக்கறேன். அதுல உங்களுக்கும் நன்மை நிச்சயமா இருக்கும். எங்க வீட்டுல உங்களுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்புமும் கிடைக்கும். என்னைக்கு இருந்தாலும் நீங்க ஒரு மேரேஜ் பண்ணிக்க தானே வேணும்…”
“அதுக்கு”
“அது நானான்னு யோசிக்க உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு…”
“அதுக்கு முன்னாடி என்னைப்பத்தி நான் சொல்லிடறேன். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு” என்று அவன் சொல்ல அவள் பார்வையில் கனல் கூடியது.
“அவ என்னைவிட்டு வேற ஒருத்தனோட ஓடிப்போயிட்டா. நான் அக்மார்க் எலிஜிபில் பேச்சிலர் தான், இன்னொன்னும் சேர்த்தே சொல்லிடறேன். இன்னும் நான் கன்னிப்பையன் தான்” என்று அவன் சொல்லிய விதத்தில் அவள் முகம் சிவந்தது.
“இப்படி எல்லாம் பேசறேன்னு நினைக்காதீங்க. எதையும் மறைக்கக் கூடாதுன்னு தான் எல்லாமே சொல்றேன். என்னோட முதல் மனைவிக்கு என்னைப் பிடிக்கலை” என்றவன் அவளிடத்தில் எல்லாம் சொல்லியிருந்தான்.
“உங்களை நான் எந்தவிதத்துலயும் கட்டாயப்படுத்த மாட்டேன். உங்ககிட்ட இதை கேட்கணும்ன்னு நினைச்சும் நான் இங்க வரலை. உங்ககிட்ட பேசிட்டு இருக்கும் போது தான் தோணிச்சு கேட்டுட்டேன். யோசிச்சு பதில் சொல்லுங்க. உங்களுக்கு வேண்டாம்ன்னாலும் சரி தான்”
“நீங்க கேட்ட உதவியை நான் செய்ய மாட்டேன்னு நினைச்சு கவலைப்பட வேண்டாம். கண்டிப்பா நீங்க கேட்ட மாதிரி வீடோ இல்லை ஹாஸ்டலோ கண்டிப்பா பார்த்து தர்றேன்”
“சரி நேரமாச்சு நான் கிளம்பறேன்” என்று அவன் எழவும் அவள் முகத்தில் மீண்டும் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. அவளும் எழுந்து நின்றிருந்தாள் இப்போது.
“என்னாச்சு??”

“இல்லை நீங்க… இங்க இருக்கவே எனக்கு பயமா இருக்கு… நீங்க என்னை இப்போவே இங்க இருந்து கூட்டிட்டு போக முடியுமா??”
“என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சுதான் பேசறீங்களா??”
“ப்ளீஸ்…”
“உங்க அத்தைக்கிட்ட சொல்லிட்டு நாளைக்கு வாங்களேன். யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க…”
“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. ஒரே அருவருப்பா இருக்கு…”
அவளின் மனநிலை அவனுக்கு புரிந்தது. “என்னோட ஆபீஸ்ல ஒரு பெட்ரூம் சேர்த்து தான் இருக்கும். இப்போதைக்கு அங்க வேணா தங்கிக்கோங்க… வீடு கிடைச்சதும் அப்புறம் அங்க மாறிக்கலாம்” என்றான்.
“தேங்க்ஸ்”
“உங்களுக்கு தேவையான முக்கியமான திங்க்ஸ் மட்டும் எடுத்து வைச்சுக்கோங்க” என்று அவன் சொல்லவும் திருச்சியில் இருந்து சென்னை வரும் போது அவள் தந்தை சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
அவசர அவசரமாக அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து இரு பெட்டிகளில் அடைத்துக் கொண்டு தயாராய் வந்தாள்.
“நிஜமாவே என்னை நம்பி வர்றீங்களா??” என்றான் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்குடன்.
அவள் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். ‘இந்த பார்வைக்கு என்ன அர்த்தமோ’ என்று எண்ணிக்கொண்டே அவளிடமிருந்து ஒரு பையை வாங்கிக்கொண்டான்.
கீழே வந்து வருணை அழைத்து சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அவன் அலுவலகத்தில் இருந்த அந்த அறையில் விட்டு கதவை பூட்டிக்கொள்ள சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
இரவெல்லாம் தூங்காது இருந்திருப்பாள் போல காலையிலேயே அவனுக்கு அழைத்துவிட்டாள். நல்ல உறக்கத்தில் இருந்தவன் அதைக்கண்டு கொள்ளவில்லை. அவனாகவே எழுந்த பிறகே தான் குளித்து வந்து போனை எடுத்துப் பார்க்க அருளாசினி அழைத்திருந்தாள்.
“அப்போவே போட்டிருக்காங்க போல, எதுக்கு கால் பண்ணியிருக்காங்கன்னு தெரியலையே… எதுக்கு போன் பண்ணிக்கிட்டு நேராவே போய் பார்த்திடுவோம்” என்று எண்ணிக்கொண்டவன் சாப்பிட்டு கிளம்பினான் அங்கு.
செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் அவளுக்கு காலை உணவையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தான் கையோடு.
வெளியில் இருந்து இவன் போன் செய்யவும் கதவைத் திறந்தாள் அவள். “போன் பண்ணியிருந்தீங்க போல, நான் நைட் லேட்டா தானே தூங்கினோம் அதான் அசந்து தூங்கிட்டேன். சரி நேர்லவே பேசிக்கலாம்ன்னு கிளம்பி வந்திட்டேன்” என்றான்.
அங்கிருந்த ஓர் இருக்கையை எடுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்துக் கொண்டான். “முதல்ல சாப்பிடுங்க எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்” என்றவன் பார்சலை அவளிடம் கொடுத்தான்.
“இல்லை நான் முதல்ல பேசிடறேன்”
“சாப்பிட்டு சொல்லுங்க, நான் போய் ஆபீஸ் திறக்கறேன். சாமி கும்பிட்டு வர்றேன்” என்றவன் எழுந்துச் சென்றுவிட்டான் அடுத்த தடுப்பில் இருந்த அவன் அலுவல் அறைக்கு.
அரைமணி நேரம் கழித்தே தான் மீண்டும் அங்கு வந்தான். அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். “சாப்பிட்டீங்களா??”
“ஹ்ம்ம்…”
“ஓகே இப்போ சொல்லுங்க என்ன விஷயம்ன்னு”
“உங்களை மேரேஜ் பண்ணிக்கறது பத்தி கேட்டீங்கல்ல”
“ஹ்ம்ம்…”
“ஓகே…”
“என்ன சொல்றீங்க?? என்னை மேரேஜ் பண்ணிக்க தான் இப்போ நீங்க ஓகே சொன்னீங்களா??” என்றான் உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன்.
“ஹ்ம்ம் ஆமா, எனக்கு சம்மதம்”
“உங்களுக்கு எந்த கட்டாயமும் இல்லை. நான் போர்ஸ் பண்ணுறதா நினைக்க கூடாது…”
“நீங்க என்னை போர்ஸ் பண்ணவே இல்லையே. நடப்புன்னு ஒண்ணு இருக்குல, எல்லாம் யோசிச்சு தான் நான் சரின்னு சொன்னேன்”
இரவெல்லாம் யோசித்தவளுக்கு வேறு ஒன்றும் தோன்றியிருக்கவில்லை. அவள் முடிவை அவள் தந்தையிடம் ஒப்படைத்தாள். சிறு வயதில் தன் ஒவ்வொரு முடிவையும் ஒரு சீட்டு எழுதிப்போட்டு கடவுளின் முன் அதைபோட்டு ஒன்றை எடுப்பாள்.
அதில் என்ன வருகிறதோ அதன்படி தான் நடக்கும் என்பது அவளின் எண்ணம். அதுவே சில முக்கிய முடிவுகளின் போதும் அவளால் பின்பற்றப்பட்டது.
இதோ தன் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம் அதை தானாக எடுப்பதை விட இப்படி சீட்டு எழுதிப்போட்டு முடிவெடுப்போம் என்ற எண்ணம் அவளுக்கு. ஏனெனில் எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் நிலையில் அவள் இல்லை.
குழப்பமான மனநிலையே இருந்தது. அதானாலே இறுதியாய் இப்படி ஒன்று தோன்ற எப்போதும் கடவுளின் முன் சீட்டு எழுதிப்போட்டு அதை எடுப்பவள் கடவுளாகிவிட்ட தந்தையின் படத்திற்கு முன் சீட்டு எழுதிப் போட்டிருந்தாள்.
ஆருத்ரனை திருமணம் செய்வது, மீண்டும் சொந்த ஊருக்கே செல்வது, ஹாஸ்டலில் தங்கி வேலைப் பார்ப்பது என்று மூன்று சீட்டை எழுதியிருந்தாள்.
எப்பொழுதும் ஒரு முடிவை எடுப்பதற்கு ஒரே தடவை செய்து பார்க்க மாட்டாள். மூன்று முறை குலுக்கிப்போட்டு அதில் பெரும்பான்மையாய் வரும் முடிவையே எடுப்பாள். இதுவரை இரண்டு முடிவுகள் தான் இருக்கும், இந்த முறை தான் மூன்று வழிகள் இருக்க அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியதாய் இருந்தது அவளுக்கு.
முதலில் குழப்பம் தான் அவளுக்கு. மூன்று முறையும் மூன்று முடிவுகள் வந்தால் என்ன செய்வது என்று. அப்படி வந்தால் அடுத்து என்னவென்று பார்க்கலாம் என்று தனக்குத் தானே சமாதானம் செய்துக்கொண்டு இவள் சீட்டை எடுத்தாள்.
மூன்று முறையும் அவள் ஆருத்ரனை மணக்கவேண்டும் என்ற சீட்டே வந்திருக்க அது தான் தன் தந்தையின் முடிவென்பதாய் எடுத்துக்கொண்டாள். இதோ அவனையும் வரவைத்து சொல்லிவிட்டிருந்தாள்.
“எனக்கொரு கண்டிஷன் இருக்கு அதைச் சொல்லணும்” என்று அவள் ஆரம்பிக்க “அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லிடறேன், அதையும் கேட்டுட்டே உங்க முடிவை நீங்க சொல்லலாம்”என்று அவன் சொல்லியிருக்க அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“முதல்ல ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு தெளிவுப்படுத்திடறேன். உங்ககிட்ட இதை நான் முன்னாடியே சொல்லியிருக்கேன், திரும்பவும் சொல்றேன் எங்க வீட்டில நீங்க தைரியமா பயமில்லாம பாதுகாப்போட இருக்கலாம்”
“எங்க அம்மா மட்டும் தான் வீட்டில இருக்காங்க. ஒரே ஒரு அக்காவும் மட்டும் தான் அவங்களும் வெளிநாட்டுல இருக்காங்க”
“அடுத்த விஷயம் ரொம்பவும் முக்கியமானது. நம்ம கல்யாணம் முடிஞ்சதும் குழந்தை பெத்துக்கணும், எக்காரணத்தை கொண்டும் லேட் பண்ணக்கூடாது” என்றான் தீவிரமான குரலில்.
“ஏன் அப்படி??” என்றாள் மெதுவாய்.
“ப்ளீஸ் ரொம்ப கேள்வி கேட்காதீங்க…”
“கேள்வி கேட்கலை ஆனா எனக்கு பதில் தெரிஞ்சுக்கணும்”
“என்னோட முன்னாள் மனைவியை பத்தி உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல. என்னைவிட்டு போனவ என் மேல சுமத்துன பழியே நான் எதுக்கும் லாயக்கில்லாதவன்னு தான்…”
“அதுக்காக தான் இப்போ கல்யாணம் பண்ணிக்கறீங்களா??”
“அப்படி செய்யணும்ன்னு நினைச்சிருந்தா நாலு வருஷத்துக்கு முன்னாடியே நான் கல்யாணம் பண்ணியிருப்பேன். கோர்ட்ல நான் என்னை நிருப்பிச்சிருந்தாலும் அந்த பழிச்சொல் அப்படியே தான் இருந்துச்சு”
“எனக்கு இன்னொரு கல்யாணம் அப்படிங்கற விஷயமே கசந்துச்சு. திரும்பவும் அப்படியொரு ரிஸ்க்கை என் வாழ்க்கையில நான் எடுக்கக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன்”
“உங்ககிட்ட நேத்து ஏன் அப்படி கேட்டேன்னு எனக்கு தெரியலை” என்றவன் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவாறே “ஓகே இப்போ நான் கேட்டாச்சு நீங்களும் சரின்னு சொல்லியாச்சு…”
“நான் இப்போ சொன்ன விஷயத்துக்காக இன்னொரு முறை கூட யோசிச்சு பதில் சொல்லுங்க. நான் வெயிட் பண்ணுறேன்” என்று முடித்திருந்தான்.
சில நொடி மௌனத்தில் கழிய “எங்கப்பா எனக்கு எந்த கெட்டதும் செய்ய மாட்டாருன்னு நம்புறேன். அவர் முடிவு தான் என் முடிவும்” என்றவளை புரியாமல் பார்த்தான் அவன்.
“எங்கப்பா எனக்கு கடவுளா நின்னு வழிக்காட்டுவாருன்னு நம்புறேன். வேற ஒண்ணுமில்லை”
“ஓ!!”
“எனக்கொரு கண்டிஷன் இருக்குன்னு சொன்னேன்ல. அது நான் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போவேன். எங்கப்பாவோட வேலை எனக்கு எந்த நேரத்திலும் கிடைச்சிடும். அதுக்கு உங்களோட பதில்…”
“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று சொல்லியிருந்தான்.
அதன் பின் மளமளவென வேலைகள் தொடங்கப்பட்டது. அவன் அன்னைக்கு போன் செய்து அடுத்து வரும் நல்ல முகூர்த்த நாள் ஒன்றைச் சொல்லச் சொல்ல அவரும் நான்கு நாட்களில் நல்ல நாள் இருப்பதாகச் சொல்லியிருக்க “அன்னைக்கு எனக்கு கல்யாணம்” என்றிருந்தான் அவன்.
“ருத்ரா நீ என்னடா சொல்றே??”
“ஆமாம்மா நிஜமா தான் சொல்றேன். பொண்ணை நான் பார்த்திட்டேன், ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. நீங்க அடுத்து நடக்க வேண்டியதை எல்லாம் பாருங்க”
“அக்கா வரமுடியுமான்னு எனக்கு தெரியலை. ஆனாலும் அவகிட்ட விஷயத்தை சொல்லிடுங்க. நானும் போன் பண்ணி பேசிடறேன். நம்ம வீட்டு பக்கத்துல இருக்க சிலருக்கு சொன்னா போதும்”
“கல்யாணத்தை கோவில்லவே வைச்சுக்கலாம். நான் பூசாரிக்கிட்ட போய் பேசிட்டு வந்திடறேன். நீங்க புடவை, தாலி இதெல்லாம் பார்த்துக்கோங்க”
“ருத்ரா எதுக்கு இந்த அவசரம் ஏன்பா??”
“அம்மா நீங்க நிறுத்தி நிதானமா தான் என் கல்யாணத்தை பண்ணீங்க. அப்போ மட்டும் என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க… நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தானே தினமும் சொல்லிட்டு இருப்பீங்க. இப்போ அவசரப்படுறேன்னு சொல்றீங்க” என்று அவன் கேட்டதும் ஒன்றும் சொல்லாமல் அமைதியானார் அவர்.
தான் பார்த்து செய்து வைத்தது தான் தன் மகனுக்கு நன்றாக அமையவில்லை. அவனாக ஒன்றை முடிவு செய்திருக்கிறான் அதுவாவது அவனுக்கு நன்றாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலை கடவுளிடம் வைத்து வேலையை தொடங்கினார் அவர்.
திருமணத்தை கோவிலில் முடித்து மதிய உணவை அவர்கள் வீட்டில் வெளியில் பந்தலிட்டு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தனர்.
பெண் யார் பெயர் என்ன எங்கிருக்கிறாள் எதையும் அவர் கேட்கவில்லை. புடவை எடுக்கும் போது மகனை அழைத்துச் சென்றிருந்தார். அவன் எடுத்த புடவை நிறத்தை வைத்து தான் பெண் கலராக இருப்பாள் போல என்று எண்ணிக்கொண்டார்.
பின் அவன் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு அவள் வேலைக்கு செல்ல கேட்டதையும் தான் வேண்டாம் என்றதையும் சொல்லியிருந்தான். அன்னப்பூரணி மகனை ஏறிட்டார். “அந்த பொண்ணு வேலைக்கு போறேன்னு சொல்லியிருக்கு நீ ஏன் வேணாம்ன்னு சொன்னே??”
“இல்லைம்மா இங்க அவளுக்கு என்ன குறை இருக்கு. வேலைக்கு போய் என்னாகப்போகுது இங்கவே சந்தோசமா இருக்கட்டும்ன்னு நினைச்சேன்ம்மா. வேற எதுவும் பெரிசா காரணமில்லை” என்றான்.

Advertisement