Advertisement

8
“ஹலோ”
“ஹலோ ஆருத்ரனா” என்றாள் ரகசிய குரலில்.
“நீங்க யாரு?? ப்ரீசர் பாக்ஸ் எதுவும் வேணுமா??”
“இல்லை நான்… நான் வந்து இன்னைக்கு ஈவினிங் பார்த்தோமே என் அத்தை பையனை கூட அடிச்சீங்களே” என்று அவள் விளக்கவும் இவன் பரபரப்பானான்.
“என்னாச்சுங்க உங்க அத்தை பையன் எதுவும் கலாட்டா பண்றானா??”
“ப்ளீஸ் நீங்க இங்க கொஞ்சம் வரமுடியுமா” என்றவளின் குரல் உடைந்திருந்ததை உணர்ந்தான்.
“ஒண்ணும் பயப்படாதீங்க வர்றேன்”
அவள் போனை வைத்துவிட்டாள். ஏதோ எண்ணம் தோன்ற இவன் இப்போது அவளுக்கு அழைத்தான். முழு அழைப்பும் அடித்து ஓய்ந்திருக்க அடுத்த சில நொடிகளில் அவளே அழைத்துவிட்டாள்.
“சாரி போன் சைலென்ட்ல வைச்சேன்… சொல்லுங்க”
“உங்க அத்தை ஊர்ல இருந்து வந்திட்டாங்களா??”
“இல்லை காலையில தான் வருவாங்க”
“ஓகே நான் உடனே வந்திடறேன்” என்றுவிட்டு போனை வைத்தவன் அலுவலகத்தில் தான் தங்கியிருந்தான் அன்று. உடனே அலுவலகத்தை பூட்டிவிட்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கே விரைந்தான்.
வெளிவாசல் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அவள் மொபைலுக்கு அழைத்தான். உடனே எடுத்தவள் “எங்க இருக்கீங்க??” என்றாள் கண்ணீருடன். 
“கீழே தாங்க இருக்கேன், வீடு பூட்டி இருக்கு”
“நிஜமாவே வந்துட்டீங்களா??”
“அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு”
“இதோ வர்றேன்” என்றவள் பாய்ந்து வெளியில் வந்திருந்தாள். சாவியை தேடி எடுத்து கையோடு கொண்டு வந்திருந்தவள் கதவை திறந்தாள்.
“என்னாச்சுங்க??”
“மேல வர்றீங்களா??”
அவனுக்கு செல்வதா வேண்டாமா என்ற யோசனை. நடுராத்திரியில் ஒரு பெண் அழைக்கிறாள் என்றதும் தான் ஓடிவந்துவிட்டோமே. இப்போது அவள் வீட்டிற்கு வேறு அழைக்கிறாள், இது சரியா என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது அவனை.
தப்பான பெண் போல தெரியவில்லை. அதனால் தானே தான் அவளுக்கு உதவி செய்தோம் இப்போது எதற்கு இந்த எண்ணம் என்று அவன் மனதில் ஓடியதை கடிவாளமிட்டு அடக்கியவன் அவளுடன் சென்றான்.
மேலே சென்றவள் ஒரு மூடியிருந்த கதவை சுட்டிக்காட்டிவிட்டு குலுங்கி குலுங்கி அழுக அவனுக்கு பதறிப் போனது. 
‘இன்னைக்கு அவனை புடைச்சு எடுத்திடணும்’ என்ற ஆத்திரத்துடன் அவன் கதவைத் திறக்க மத்திம வயதை தாண்டிய ஒருவர் நின்றிருந்தார்.
“யாருங்க இவரு??”
“மாமா…”

“என்ன??”
“எங்க அத்தையோட ஹஸ்…” என்று அவள் முடிக்கவில்லை பாய்ந்து சென்று அவரை அடிக்க ஆரம்பித்துவிட்டான் அவன்.
ஏற்கனவே அவள் வேறு அடித்திருப்பாள் போல முதல் நாள் தான் மகனை வெளுத்திருந்தாள். இன்று தந்தை அவள் என்ன செய்வாள்.
“எத்தனை நாளா நடக்குது??” என்றான் அவளிடம்.
“நான் இங்க வந்ததுல இருந்தே அவர் பார்வை சரியில்லை”
“உங்க அப்பா இருக்கும் போதேவா”
“ஆமா ஆனா அப்போ பக்கத்துல எல்லாம் அவர் வந்ததேயில்லை. அப்பா போனதுக்கு அப்புறம் என்கிட்ட பேசுவாரு. மாடிக்கு வந்து என்ன வேணும் எதாச்சும் உதவி வேணும்ன்னா சொல்லுன்னு சொல்வாரு…”
“ஆரம்பத்துல அது ஏதோ அக்கறையிலன்னு நான் கொஞ்சம் அமைதியா இருந்தேன். எதாச்சும் வாங்கிட்டு வந்து கையை பிடிச்சு கொடுக்கறது கன்னத்தை தட்டு…” அவளால் முடிக்க முடியவில்லை, கேவல் வெடித்தது.
“அத்தை இல்லாத சமயங்கள்ல என்னை இடிக்கிற மாதிரி போறது வர்றதுன்னு…”
“உங்க அத்தைக்கு இதெல்லாம் தெரியுமா??”
“தெரியாது”
“ஏன் சொல்லலை??”
“அவங்களுக்கு நான் அவங்க பையனை கட்டிக்கணும்ன்னு ஆசை. ஒரு பக்கம் இவரு இன்னொரு பக்கம் இவரு பையன், அத்தைன்னு எனக்கு என்ன செய்யன்னே தெரியலை” என்றவள் இருகைகளாலும் கண்களை மூடிக்கொண்டு அழுதாள்.
“கீழ அவன் இருக்கானா??”
“யாரு??”
“இவன் புள்ளை”
“சார் சார் அதெல்லாம் வேணாம். இனிமே இப்படி நடக்காது சார்” என்றார் அவர் முதன்முறையாக வாய்திறந்து.
“நீ பேசாத… பேசாத…” என்றவன் அவர் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். அப்படியே அவரை தரதரவென்று கீழே இழுத்துச் சென்றவன் கீழ் வீட்டின் கதவை ஓங்கி தட்டினான்.
சில பல தட்டல்களுக்கு பின்னே கதவு திறக்கப்பட்டது. வருண் இரவு உடையுடன் கண்களை கசக்கிக்கொண்டு நின்றிருந்தான்.
“உங்கப்பன் எங்கடா??” என்றான் ஆருத்ரன் அவரை தன் பின்னே மறைத்து நின்றவாறே.
“உள்ள தூங்குறாரு…”
“அவரை கூட்டிட்டு வா”
“எதுக்கு??”
“கூப்பிடுறியா இல்லையா”
வருண் உள்ளே சென்றவன் சில நொடிகளில் திரும்பி வந்தான். “அப்பாவை காணோம்”
“இங்க தான் இருக்காரு” என்று அவன் அவரை இழுத்து முன்னே விட காயங்களுடன் தந்தையை பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னாச்சு எங்கப்பாவுக்கு என்னாச்சு??”
“நான் தான் அடிச்சேன்…”
“டேய் எதுக்குடா அவரை அடிச்சே, நான் தான் அருள்கிட்ட கலாட்டா பண்ணேன். அவரை எதுக்குடா அடிச்சே”
“நீயாச்சும் வெறுமே கலாட்டா தான் பண்ணியிருக்க உங்கப்பன் அவளை தொடவே நினைச்சிருக்கான். அதுக்கு தான் அடிச்சேன். ஒரு பொண்ணு உங்களை நம்பி தனியா வந்து இங்க இருக்கு அவளுக்கு நீங்க பாதுகாப்பா இல்லைன்னா கூட பரவாயில்லை”
“எதுக்குடா இப்படி ஆள் மாத்தி ஆள் அவளை விரட்டுறீங்க… நிம்மதியா இருக்க விடமாட்டீங்களாடா…”
“என்னது எங்கப்பாவா??” என்றவன் படிகளில் நின்றிருந்த அருளாசினியை பார்க்க அவளின் பார்வையே சொன்னது ஆமென்று. அதில் கூனிக்குறுகிப் போனான் வருண். 
“ஆமா கதவு இப்போ லாக் ஆகி இருந்துச்சே எப்படி?? உங்கப்பன் மேல வரும் போது கதவை திறந்து வைச்சுட்டு தானே வந்திருப்பான்??” என்று கேள்வி எழுப்பினான் ஆருத்ரன்.
அவனுக்கு இது அப்பனும் மகனும் சேர்ந்து செய்த செயலாக இருக்குமோ என்ற எண்ணம் அதனாலேயே அப்படிக் கேட்டிருந்தான்.
“இல்லை இது ஆட்டோமெட்டிக் லாக் வெளிய இருக்கவங்க சாவி போட்டு திறக்க வேண்டி இருக்கும். உள்ள நாங்க லாக் ரிலீஸ் பண்ணா கதவு திறந்திடும்” என்றான் வருண்.
“உங்கப்பனை பார்த்துக்கோ…” என்றுவிட்டு அவன் அருளாசினியை பார்க்க கையெடுத்து கும்பிட்டாள் அவனுக்கு.
“கொஞ்சம் வாங்க உங்ககிட்ட பேசணும்” என்று அவன் சொல்லவும் அவள் படியேறினாள்.
“நீங்க இனிமேலும் இங்க இருக்க போறீங்களா??”
“எனக்கு வேற வீடு கிடைக்குமா வாடகைக்கு”
“கிடைக்கும், ஆனா நீங்க ஊர்ல இருந்து வந்து இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். பேசாம அங்கவே போயிடுங்களேன்” என்றான் இவன்.
“அங்கயும் நான் தனியாத்தான் இருக்கணும்”
“இருந்தாலும் அது தெரிஞ்ச ஊர் இல்லியா”
“தெரிஞ்ச ஊர் தான் தெரிஞ்ச மனுஷங்க யாரும் ஒரு உதவிக்கு கூட வரமாட்டாங்க அங்க…”
“ஏன் அப்படி??”
“அம்மா சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. அப்பாவும் நானும் தான் எங்க அவங்களுக்கு தொந்திரவா இருந்திடுவோமோன்னு யாரும் ரொம்ப ஒட்டலை எங்ககிட்ட, அப்பாவும் வேணாம்ன்னு விட்டுட்டார்…”
“ஓ!!”
“எனக்கு வீடு கிடைக்கும்ல”
“கிடைக்கும்… கிடைக்கும்…” என்றவன் யோசனைக்குள் இருந்தான்.
“என்ன யோசிக்கறீங்க??”
“இல்லை இந்த ஊர்ல நீங்க என்ன பண்ணப் போறீங்க இனிமே??”
“அப்பா சர்வீஸ்ல இருக்கும் போது தவறினதுனால அவங்க வேலை எனக்கு கிடைக்கும். அவங்க ஸ்கூல்க்கு இப்போ வந்திருந்த பிரின்சிபால் என்னை கூப்பிட்டு சொன்னாரு”
“அப்பாக்கு நான் டீச்சர் ஆகணும்ன்னு ஆசை. இப்போவும் நான் டீச்சர் வேலை தான் பார்க்கறேன் நர்சரி பசங்களுக்கு. அப்பாவோட ஞாபகமா அவர் மூலமா வர்ற வேலையை இனி பார்க்கலாம்ன்னு இருக்கேன்”
“வேற வீட்டுக்கு மாறினா மட்டும் உங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்ன்னு நினைக்கறீங்களா”
“ஏன் அப்படி கேட்கறீங்க??”
“தனியா இருக்கீங்க எல்லாத்தையும் நீங்க தான் சமாளிக்கணும். உங்க ஐடியா என்னன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்கறேன்”
“நான் தனியா போய்ட்டா இவங்க ஏன் பிரச்சனை பண்ணப் போறாங்க. அத்தை வந்ததும் எப்படியும் விஷயம் தெரிஞ்சுடும் அவங்க பார்த்துப்பாங்க இனி”
“இவ்வளவு அப்பாவியா நீங்க?? உங்க அத்தைக்கும் மாமாவுக்கும் கல்யாணம் ஆகி ஒரு முப்பது வருஷமாச்சும் இருக்குமா. அவங்க கணவரை பத்தி அவங்களுக்கு கொஞ்சமாச்சும் தெரிஞ்சிருக்காதா என்ன??”
“தெரிஞ்சிருந்தா அவங்க என்னை இங்க குடி வைச்சு இருக்க மாட்டேங்களே…”
“நீங்க இங்க வரும் போது உங்க அப்பாவும் தானே இருந்தார். தவிர நம்ம வீட்டு பொண்ணுகிட்ட எல்லாம் அவங்க ஹஸ்பென்ட் அப்படி நடந்துக்குவார்ன்னு அவங்க நினைக்காம வேணா இருந்திருக்கலாம்”
“இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க??” என்றாள் கலவரமான முகப்பாவத்துடன்.
“நான் உங்களை பயமுறுத்த நினைக்கலை. நீங்க வேற ஏரியாக்கு போன பிறகு உங்க மாமாக்கு இன்னமும் வசதியாகி போய்ட்டா, அங்கயும் அவங்க வந்து நின்னா என்ன செய்வீங்க… அவங்க இல்லைன்னாலும் அங்க இது போல ஒரு புது பிரச்சனையை நீங்க சந்திக்க மாட்டீங்கன்னுக்கு என்ன நிச்சயம்” என்று அவன் கேட்க அதற்கு அவளிடத்தில் பதிலில்லை.
“பேசாம ஒரு லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கிக்கலாமா??” என்றாள் அவனிடம்.
ஒரு அந்நிய ஆடவனிடம் இவ்வளவும் பேசுகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு எங்குமே எழவில்லை. அவன் உதவி செய்த போதே ஏதோ தெரிந்தவர் உதவி செய்வது போலத்தான் நினைத்திருந்தாள். அதனால் தான் இரவென்றும் பாராமல் அவனுக்கு தயங்காமல் அழைத்திருந்தாள்.
அவனுமே அவன் எண்ணை ஏன் அவளிடம் கொடுத்து வந்தான் என்று இன்று வரை புரியாது தானிருந்தான். அவனிடம் மீண்டும் யோசனை.
“லேடிஸ் ஹாஸ்டலும் சேப் இல்லைங்களா??”
“நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா??” என்று அவன் பட்டென்று கேட்டுவிட அதிர்ந்து நின்றாள் அவள்.

Advertisement