Advertisement

50
சில நொடிகள் அமைதியிலேயே கழிய அப்போது தான் அவன் முகத்தை பார்த்தவள் தான் அதிகப்படியாய் பேசிவிட்டோம் என்று உணர்ந்தாள்.
“என்னங்க??” என்றழைக்க பதிலில்லை அவனிடத்தில்.
“ப்ளீஸ் என்னை பாருங்க” என்று அவன் தாடையை தன் புறம் திருப்பினாள்.
“இனிமே இப்படி சொல்ல மாட்டேன் போதுமா சாரி”
“எனக்கு உன் சாரி ஒண்ணும் வேணாம். இப்போ கூட என் முகம் மாறிடுச்சேன்னு தான் நீ சாரி கேட்கறே… உன் மனசுல அந்த உறுத்தல் இன்னமும் இருக்கு”
அதை ஆருத்ரன் சொல்லாது போனாலும் அவள் மனம் அதையே தான் எண்ணியிருந்தது. அதனால் அமைதியையே பதிலாய் கொடுத்தாள் அவள்.
“நீ காணோமா எங்காச்சும் போயிருக்கியான்னு கூட எங்களுக்கு தெரியாது. ஒரு நைட் முழுக்க திருச்சி, ஸ்ரீரங்கம்ன்னு சல்லடையாய் சலிச்சோம் உன்னைத்தேடி”
“உனக்கு போன் பண்ணா போகலை. ஸ்கூல்ல நீ கிளம்பிட்டன்னு சொல்றாங்க எப்படி இருந்திருக்கும் எனக்குன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா. அன்னைக்கு அவ்வளவு ஈசியா சொல்றே நான் ஓடி போயிட்டேன்னு நினைச்சீங்களான்னு”
“எல்லாரும் ஒரே மாதிரின்னு நினைக்கிற ஆளா நானு. என் கூட வாழ்ந்து நீ என்னை எந்தளவுக்கு புரிஞ்சு வைச்சிருக்கே சொல்லு. இதான் நீ என்னை புரிஞ்சுகிட்ட லட்சணமா” என்று சற்று கடுமையாகவே சொன்னான்.
“ஒருத்தனோட வேதனையில குத்திக்காட்டுறது தான் நீ கத்துக்கிட்டதா. உன்கிட்ட நான் சத்தியமா இதை எதிர்பார்க்கவே இல்லை. நான் வேணாம்ன்னு நீ நினைச்சிருந்தா எப்பவோ நீ மறுத்திருக்கலாம்”
“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம குழந்தையையும் சுமந்துக்கிட்டு தான் போகணுமா. நீ என்னைவிட்டு போயிட்டேன்னு ஒரு இடத்துல கூட எனக்கு தோணவே இல்லை”
“எங்க தேடியும் நீ கிடைக்காம அடுத்து போலீஸ்ல போய் கம்பிளைன்ட் பண்ணேன். பிரண்டு ஒருத்தன் மூலமா உன்னோட செல் டவர் எங்கயோ அவுட்டர்ல சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது தெரிஞ்சது”
“நீ காணாம போயிருக்கேன்னா யாரும் கடத்தியிருப்பாங்கன்னு தோணிச்சு. யாரெல்லாம் இருக்கலாம்ன்னு யோசிச்சப்போ என் சைடுல இருந்து கவுன்சிலர் தம்பி இல்லைன்னா அஞ்சனா மூலமா பிரச்சனை வந்திருக்கலாம்ன்னு நினைச்சேன்”
“உன் சைடுல இருந்து வருண் இல்லைன்னா உன்னோட சொந்தக்காரங்களால இருக்கலாம்ன்னு யோசிச்சேன். நேர்ல போய் அவங்களை மிரட்டாத குறையா பேசிட்டு தான் வந்தேன்”
“ஒருத்தரையும் விடலை, ஆனா எந்த துப்பும் கிடைக்கலை. நான் உடைஞ்சு போகணும்ன்னு நினைக்கிறது தான் அவங்களுக்கு வேணும்னா அதை நான் செய்யவே கூடாதுன்னு உறுதியா இருந்தேன்”
“உன்னை தேடுறதையும் விடலை, ஒவ்வொருத்தர் பின்னாடியும் என்னோட பசங்களை விட்டு பாலோ பண்ணேன். அர்ஜுனா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கவே நினைக்கலை”
“சிசிடிவி புட்டேஜ் பார்த்தப்போ தான் அவன் மேல டவுட்டே வந்துச்சு. நான் சென்னை வரவும் அவன் தானா வந்து சிக்குனான். இதுல உன்கூட வேலைப்பார்த்தவங்க வேற நீ அர்ஜுனை தான் புருஷன்னு சொன்னதா சொல்லி எங்களை குழப்பிவிட்டாங்க”
“என்னது நான் சொன்னேனா நான் ஒண்ணும் அப்படி சொல்லலை”
“அவங்க ஏன் அப்படி சொன்னாங்கன்னு எனக்கு தெரியலை. மே பீ நீ சொன்னதை அவங்க தப்பா புரிஞ்சு இருந்திருக்கலாம்”
“நான் உங்ககூட இருக்கும் போது பார்த்திருப்பான்னு நினைச்சு தான் நான் அப்படி சொன்னேன். அவ கேட்டதுக்கு முதல் நாள் தான் நீங்க வந்திருந்தீங்க. அதான் அவ கேக்கவும் நீங்கன்னு சொன்னேன்”
“நான் அப்படித்தான் எதாச்சும் இருக்கும்ன்னு போலீஸ்கிட்ட கூட சொல்லிட்டு வந்தேன். இளமாறன் இங்க வந்தபிறகு தான் எல்லாமே மாறிச்சு”
“விடுங்க நான் ஏதோ கேட்டேன்னு நீங்க எனக்கு விளக்கம் சொல்லணுமா”
“இதெல்லாம் சொல்லி என்னை நான் ப்ரூவ் பண்ணிக்கணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை தான். மத்தவங்களுக்கு இதை சொல்லலைன்னாலும் உனக்கு தெரிஞ்சிருக்கணும். ஏன்னா திரும்பவும் ஒரு தரம் நீ ஓடிபோயிட்டேன் நான் நினைச்சதா நீ கேட்கக்கூடாது அதுக்கு தான் இந்த விளக்கம்”
“தெரியாம கேட்டேன் விடுங்க ப்ளீஸ்” என்றவளுக்கு என்னவோ போலானது அவனின் இந்த விளக்கத்தில்.
“கவுன்சிலர் முதல் கொண்டு எல்லாரையும் ஒரு வழியாக்கிட்டேன் எல்லாம் உன்னால. நீ இல்லாம, இதுல அந்த அஞ்சனா வேற வெந்த புண்ணுல வேலை பாய்ச்சின மாதிரி பேசவும் அவ புருஷன் முன்னாடியே அவளை ரொம்பவும் பேசிட்டேன்”
“ரொம்பவும் வருத்தப்படுற மாதிரி தெரியுது”
“ஆமா”
“எதுக்கு??” என்றாள் முறைப்போடு.
“அவ எப்படியோ வாழ்ந்துட்டு போகட்டும்ன்னு தானே அவ்வளவு நாளும் பேசாம இருந்தேன். என்னவோ அன்னைக்கு நான் என் கண்ட்ரோல்லவே இல்லை. வாய்க்கு வந்ததெல்லாம் கேட்டுவிட்டுட்டேன்”
“உங்களை ஏன் யாரும் புரிஞ்சுக்கலை, உங்க நல்ல மனசு ஏன் அவங்களுக்கு தெரியலை” என்றாள் நிஜமாகவே அவளுக்கு அது புரியாத புதிராகத் தானிருந்தது.
“நான் ஒண்ணும் நல்லவனில்லை”
“நீங்க கெட்டவரும் இல்லை”
“நல்லதும் கெட்டதும் நாம நடந்துக்கறதுல மட்டுமில்லை. பார்க்கறவங்க பார்வையில தான் இருக்கு”
“எனக்கு நீங்க நல்லவரா தானே தெரியறீங்க…”
“உன் பார்வை வேற அவங்க பார்வை வேற. அஞ்சனாவை பொறுத்தவரை என்னை முதல்ல இருந்தே பிடிக்கலை, அது இப்போவரைக்கும் தொடருது. நான் அவளுக்கு நல்லதே செஞ்சிருந்தாலும் செஞ்சாலும் அதை அவ அப்படி எடுத்துக்க மாட்டா எப்பவும். அது அவளோட எண்ணம்”
“அதெப்படி நல்லது செஞ்சா அது கண்ணுக்கு தெரியாதா. நீங்க என்ன கெடுதல் செஞ்சீங்க”
“அர்ஜுன்க்கு ஏன் என்னை பிடிக்கலை. நான் அவனுக்கு என்ன கெடுதல் செஞ்சேன். என் மனசறிஞ்சு நான் எதையும் செய்யலை. அப்புறம் ஏன் அவனுக்கு என்னை பிடிக்கலை”
“நல்லதும் கெட்டதும் பார்க்கற பார்வையில தான் இருக்கு. நல்லதுலயும் ஒரு கெட்டது இருக்கு, கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குன்னு நினைக்கிற மனசும் அறிவும் இருந்தா போதும். அது பக்குவப்படும் போது அவங்களுக்கு வரலாம், இல்லை வராமலே கூட போகலாம்”
“என்னை யாரும் நல்லவன்னு சொல்லணும்ன்னு நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை, கெட்டவன்னு சொன்னாலும் கவலைப்பட போறதுமில்லை. அவங்களுக்கு நான் சரின்னு நினைச்சா சரியா இருந்திட்டு போறேன், கெட்டவன்னு நினைச்சா கெட்டவனாவே இருந்திட்டு போறேன் அவ்வளவு தானே”
“நீங்க எல்லாமே ரொம்ப ஈசியா சொல்றீங்க. நான் இந்தளவுக்கு எதையும் யோசிச்சு பார்த்தது இல்லை. எனக்கு எப்பவும் எல்லாமே ஈசியா தான் இருந்துச்சு. அம்மா இல்லைங்கறதை தவிர எனக்கு எந்த குறையும் வரவிட்டதில்லை அப்பா”
“அவங்க போன பிறகு தான் வாழ்க்கை மேல ஒரு பயமே வந்துச்சு. அப்போ தான் நீங்க வந்தீங்க, என் வாழ்க்கையில நான் துணிஞ்சு எடுத்த முடிவு உங்களை கல்யாணம் பண்ணது தான். என்னோட முடிவு தப்பில்லைன்னு ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்ந்திட்டு தான் இருக்கேன். உங்களால தான் எனக்கு அத்தை கிடைச்சாங்க”
“அப்போ நான் கிடைச்சதுல உனக்கு சந்தோசமில்லையா”
“பேச விடுங்களேன் என்னை”
“ஹ்ம்ம் சொல்லு”
“உங்களால தான் அவங்க கிடைச்சாங்க. அவங்களால தான் நீங்க இந்த உலகத்துக்கு வந்தீங்க. அத்தை எனக்கு கிடைச்ச வரம் நீங்க என்னோட வாழ்க்கை” என்று அவள் நெகிழ்ந்து கூற சில நொடி மௌனம் அங்கு. 
“நான் ஒண்ணு சொல்லவா??” என்று அவளே தொடர்ந்தாள்.
“ஹ்ம்ம்”
“சாரி”
“எதுக்கு மறுபடியும் முதல்ல இருந்தா…”
“நீங்க முதல்ல சொன்ன மாதிரி அப்போ நான் உணர்ந்து மன்னிப்பு கேட்கலை. உங்களை சமாதானப்படுத்த தான் கேட்டேன், ஆனா இப்போ உணர்ந்து கேட்கறேன். உங்க வலி புரியாம நான் அப்படி பேசியிருக்க கூடாது”
“விடு இனிமே அந்த கதை நாம பேச வேண்டாம். என்ன சொல்லிட்டு போனான் உன் பிரண்டு கிளம்பும் போது அவன் முகத்துல பல்ப் எரிஞ்சுது”
“அந்த கதையை ஏன் கேட்கறீங்க?? அவனுக்கு உடனே கல்யாணம் பண்ணிக்கணுமாம், பொண்ணு எதாச்சும் இருந்தா பாருன்னு சொன்னான்”
“திடிர்ன்னு அவனுக்கு எப்படி ஞானோதயம் வந்துச்சு??”
“நீங்க வரவும் அவனை அப்படியே டீல்ல விட்டு உங்களை பார்க்க வந்திட்டேன்ல. அதுல கடுப்பாகிட்டான்  போல. இப்படித்தான் பொண்டாட்டி ஒடுவாளா புருஷன் வந்தான்னு கேட்டான். ஆமா நீயும் கல்யாணம் பண்ணிப்பாருன்னு சொல்லிட்டேன்”
“அதான் கிளம்பும் போது அப்படி சொல்லிட்டு போனான். கண்டிப்பா உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகும்ன்னு சொன்னேன். அதான் சார்க்கு பல்ப் எரிஞ்சிருக்கும்”
————

Advertisement