Advertisement

5
அருளாசினி டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அன்னப்பூரணி அவள் இடைப்பகுதியை கவனித்தார். அதில் அழுத்தமாய் ருத்ரனின் விரல்கள் தெரிய தன் மகனின் செயலை அவரால் மன்னிக்கவே முடியவில்லை.
எப்படியும் அவனை தனியே அழைத்து அது குறித்து பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார். அருளாசினி தாளிப்பை எல்லாம் செய்தாள், சிக்கனை மட்டும் பூரணியை விட்டே போடச் செய்தாள்.
அதற்கு பின் அடுப்பை அவரின் பொறுப்பிலேயே விட்டுவிட்டாள். அவள் வெறுமே குறிப்பு மட்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
ஆருத்ரன் வீட்டிற்கு வருவதற்கு இரண்டரை மணியாகிவிட்டது. சரியான பசியோடு தான் வந்தான். ‘நாம தானே சமைக்கணும், பசிக்குதே. பேசாம கடையில போய் சாப்பிட்டுக்குவோமா’ என்று எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவனை பிரியாணியின் மணம் ஏகபோகமாய் வரவேற்றது.
“ம்மோவ்” என்று அவன் குரல் கொடுக்க அருளாசினியும் பூரணியும் ஹாலுக்கு வந்தனர்.
“ஏன்டா ஒரு போனு போட்டா எடுக்க மாட்டியாடா?? இப்போ தான் வீட்டுக்கு வர்றதா??” என்றார் எப்போதும் போல புலம்பிக்கொண்டே
“சும்மா இரும்மா தொணதொணன்னு பேசிட்டு. ஆமா பிரியாணி வாசனை அடிக்குது நீயா பண்ணே?? இல்லை கடையில வாங்கிட்டு வந்தியா??”
“இல்லையில்ல வீட்டில தான் பண்ணது…”
“என்னாது நீ பண்ணியா??”
“ஏன்டா அதுக்கின்னா இப்போ??”
“கஞ்சி காய்ச்சி வைச்சிருக்கியா?? இல்லை களி கிண்டி வைச்சிருக்கியா??”
“அது கஞ்சியா?? களியான்னு?? நீ சாப்பிட்டு பார்த்திட்டு சொல்லுடா” என்றவர் “அருளு நீ அவனுக்கு சாப்பாடு வைம்மா” என்றார்.
“ம்மோவ் நீயே வை, அவளுக்கு சங்கடமா இருக்காதா??”
“ஹ்க்கும் நல்லா இருந்துச்சு போ” என்றவர் தானே அவனுக்கு பரிமாறினார்.
ஒரு வாய் சாப்பிட்டதும் அன்னையை நிமிர்ந்து பார்த்தான் அவன். “என்னாடா பாக்குறே, நல்லாயில்லையா??”
“எப்படிம்மா இன்னைக்கு அசத்தியிருக்க போ. எப்பவும் நீ இப்படி பண்ணா நான் ஏன் அவசர அவசரமா ஓடியாறனும் பிரியாணி பண்ண”
“நான் செய்யலைடா எல்லாம் அருளு தான் செஞ்சா”
“என்னம்மா சொல்றே??” என்றவனின் பார்வை தன் மனைவியை தொட்டு நின்றது இப்போது.
அவன் பார்வையை உணர்ந்தாலும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவள். “நிஜமாவே அவ தான் செஞ்சாளா?? எதுக்கும்மா?? ஏன்மா நான் தான் சொன்னேன்ல அது அய்யர் வீட்டு பொண்ணுன்னு ஏன்மா இப்படி பண்ணுறே??”
“டேய் நான் ஒண்ணும் செய்ய சொல்லலைடா… உனக்கு போட்டா நீ எடுக்கலை. கவிதாவை கூப்பிட்டு செய்ய சொல்லலாம்ன்னு நினைச்சேன். அருளு தான் வேணாம்ன்னு சொல்லிருச்சு. நானே செய்யறேன் நீங்க உதவி பண்ணுங்கன்னு”
“அவ தான் எல்லாம் தாளிச்சு கொடுத்தா, நான் கறி மட்டும் தான் கட் பண்ணி கழுவி போட்டேன். மத்தப்படி செய்முறையெல்லாம் அந்த பிள்ள சொல்ல சொல்ல செஞ்சது தான்டா”
“தேவையில்லாத வேலை”
“இப்போ என்னடா சொல்ல வர்றே”
“நல்லாயிருக்கு ஆனா இனிமே இப்படியெல்லாம் கஷ்டப்படுத்திக்க வேணாம்” என்றான் பொதுவாய்.
“அதை உன் பொண்டாட்டிகிட்ட நேராவே சொல்லேன்” என்றுவிட்டு நகர்ந்துக் கொண்டார் அவர்.
அவன் ஒன்றும் பேசாமல் அள்ளி வைத்துக்கொண்டு சாப்பிட்டான். உள்ளே சென்றுவிட்டு வந்த பூரணி “டேய் டேய் என்னடா எனக்கு மிச்சம் வைக்காம எல்லாத்தையுமே நீயே சாப்பிடுற”
“ஏன் நீ இன்னுமாம்மா சாப்பிடலை”
“நீ வரட்டும்ன்னு காத்திட்டு இருந்தோம்டா”
“உனக்கு எத்தனை தடவை சொல்றது நேரத்துக்கு சாப்பிடுன்னு. அப்புறம் நீ மயங்கி விழுந்திட்டா யாரு பாக்குறது உன்னை”
“இனிமே அம்மா நேரத்துக்கு சாப்பிடணும் அதை நீ தான் பார்த்துக்கணும்” என்றான் மனைவியிடத்தில்.
“ஹ்ம்ம்” என்றாள் பதிலுக்கு.
“அம்மா அவளுக்கு சாப்பிட என்ன செஞ்சே??”
“அதும் அவளே செஞ்சுட்டாடா, காய்கறி போட்டு பிரியாணி”
“ஓ!!” என்றுவிட்டு அவன் சாப்பிட்டு எழவும் அவர்கள் இருவரும் எதிரெதிரே அமர்ந்துக் கொண்டனர். “டேய் இந்த சோறு எனக்கு பத்தாதேடா”
“அதான் அந்த காய்கறி பிரியாணி இருக்குல அதுல கொஞ்சத்தை வைச்சு சாப்பிடு”
“ருத்ரா இப்படியாடா சட்டியை காலி பண்ணி வைப்ப”
“ம்மோவ் புலம்பாத நான் வேணா கடையில பிரயாணி வாங்கினு வந்து தரேன்”
“ஒண்ணும் வேணாம் எனக்கு”
“அப்போ எதுக்கு கத்திட்டு இருந்த, சரி நான் கொஞ்ச நேரம் போய் படுக்கறேன். லோகு வருவான் அவன் குரல் கொடுத்ததும் எழுப்புங்க” என்றுவிட்டு அவன் அறைக்குள் செல்ல அருளாசினியின் முகத்தில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது.
அன்னப்பூரணி தன்னை பார்ப்பதை உணர்ந்ததும் அதை முயன்று சரி செய்துக் கொண்டவள் மெதுவாய் உண்ணவாரம்பித்தாள்.
“உனக்கு தான் சிப்ஸ் வாங்கிட்டு வரச்சொன்னேன். அதை எடுத்து வைச்சு சாப்பிடு அருளு” என்றார் பூரணி.
சாப்பிட்டு அவர்களின் அறைக்கு செல்லவே கொஞ்சம் அச்சமாக இருந்தது அவளுக்கு. முதல் நாள் கோவிலுக்கு சென்று வந்தபிறகு அஞ்சனாவின் மீதான கோபத்தை தன் மேல் இறக்கியது போல இன்னும் மிச்சம் மீதியாய் இன்றும் தன்னை வாட்டுவானோ என்றிருந்தது அவளுக்கு.
‘இதெல்லாம் தெரிஞ்சு தானே நீ வந்தே அப்புறம் என்ன பயம்’ என்று உள்மனம் எடுத்துக்கொடுக்க கதவை திறந்தவளுக்கு அப்பாடா என்றானது. ஆருத்ரன் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான் அங்கு.
சத்தமில்லாமல் கட்டிலில் சென்று அமர்ந்துக்கொண்டாள். கடந்த சில மாதங்களில் தன் வாழ்க்கையே மாறிப்போன விந்தையை எண்ணிக் கொண்டிருந்தாள்.
அவள் தந்தை இருக்கும் வரை இப்படியொரு வீட்டில் அவள் வாழ்க்கைப்படுவாள் என்பதையே அவள் நம்பியிருக்க மாட்டாள். எல்லாமே அவரின் மறைவுக்கு பிறகு தான் என்பதை வலியோடு உணர்ந்தாள்.
கண்களில் இருந்து கண்ணீர் கோடாய் இறங்கியது. தொண்டையை அடைக்கும் உணர்வு, பெருத்த கேவல் வெடிக்கும் நேரம் அதை விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அவள் நினைவுகளை தடை செய்வது போல அறைக்கதவு தட்டப்பட எழுந்து சென்றவளிடம் பூரணி “அவனை எழுப்பும்மா லோகு வந்திருக்கான்னு சொல்லு” என்றார் அவர்.
திரும்பி வந்தவள் ருத்ரனை எழுப்ப கண் விழித்தவன் “என்ன??” என்றான்.
“லோகு வந்திருக்காங்களாம் அத்தை எழுப்பச் சொன்னாங்க…”
“ஓ!!” என்றவன் கண்ணை கசக்கி எழுந்து அமர்ந்தான்.
அவன் எழுந்து முகம் கழுவி வேறு உடைக்கு மாறி தயாராகிக் கொண்டிருந்தான். இன்று எப்படியும் அவனுக்கு நினைவுப்படுத்த வேண்டும் என்று அவள் காலையில் நினைத்திருந்தாள்.
அவன் முகத்துக்கு பவுடர் போட்டு திரும்பவும் பின்னால் நின்றிருந்தவளின் மீது இடித்துவிட ஆவென்று கத்திவிட்டாள் அவள்.
“என்னாச்சு இங்க ஏன் நிக்கறே??”
“இல்லை ஒண்ணுமில்லை…”
“எங்க இடிச்சது??”
“பரவாயில்லை” என்றவள் அவளின் தோள்பட்டையை தேய்த்தவாறே சென்று கட்டிலில் அமர்ந்தாள்.
“நான் நீ இருந்ததை பார்க்கலை”
“தெரியும் என்னோட தப்பு தான்…”
“எதுக்கு அங்க வந்து நின்னே??”
“ஒரு விஷயம் பேசணும் அதான்”
“என்ன விஷயம்??” என்று ஆரம்பிக்கவும் “ருத்ரா லோகு நேரமாவுதுன்னு கத்தின்னு இருக்கான்டா” என்று தன் பெருத்த தொண்டையில் கத்தினார் அன்னப்பூரணி.
“வர்றேன்னு சொல்லும்மோவ்” என்றவன் “இப்போ அவசரமா வெளிய கிளம்பணும், அப்புறம் பேசலாமா??”
“ஹ்ம்ம் சரி…” என்று அவள் சொல்ல கிளம்பியவன் அறை வாசலில் ஓரிரு நிமிடம் நின்று அவளை பார்த்துவிட்டு பின் சென்றுவிட்டான்.
இரவு பத்து மணி போல வீட்டிற்கு வந்தவன் வெகுவாய் சோர்ந்திருந்தான். சாப்பிட்டு படுக்கச் சென்றுவிட்டான்.
பின்னோடே மனைவி அறைக்குள் வரவும் அவளை பேசவிடாமல் விளக்கணைத்து அவளையும் அணைத்திருந்தான்.
காலையில் எழுந்திருந்த அருளாசினிக்கு இன்று அவனிடம் பேசியே தீரவேண்டும் என்ற எண்ணம் தான். குளித்து வெளியில் வந்து தன் மாமியாருக்கு உதவி செய்ய அங்கு வேலை செய்யும் பெண்மணி அன்று வந்துவிட்டார்.
“வாடி சிந்தாமணி இப்போ தான் உனக்கு ஊரு பாசம் விட்டுச்சா. நீ என்னைக்கு வர்றேன்னு சொல்லிட்டு எப்போ வர்றே??”
“இன்னாக்கா பண்ணுறது நானே வருசத்துக்கு ஒரு தரம் ஊருக்கு போறேன். அக்கா பிள்ளைங்க அண்ணன் பிள்ளைகன்னு வீடே கலகலன்னு ஆகிப்போச்சு. இரு இருன்னு எல்லாம் சொல்லவும் கூட ரெண்டு நாள் சேர்ந்தாப்புல தங்கிட்டேன்” என்றாள் அவள்.
“ஆமாக்கா யாரு இது உறமுறையா??” என்றாள் அருளாசினியை பார்த்து.
‘இவளுமா இனி இவள் வேறு எத்தனையாவது மருமகள் என்று கேட்பாளோ தெரியவில்லையே’என்று ஓடியது அவளுக்கு.
“மருமவ… ருத்ரனுக்கு திடுதிப்புன்னு கல்யாணம் முடிஞ்சிருச்சு.  உனக்கு கூட சொல்ல முடியலை… கோவிச்சுக்காத சிந்தா”
“நிஜமாவாக்கா இப்போ தான் எனக்கு சந்தோசமா இருக்கு. நீ புலம்பினே இருந்தியே பாரு நல்ல பொண்ணா அமைஞ்சு இருக்குது. இதாச்சும் நிலைச்சு இருக்கணும் அந்த புள்ளைக்கு” என்று அவள் கடைசியாய் சொல்ல ‘நான் ஏன் ஒடப்போறேன்’ என்ற எண்ணம் தான் அவளுக்கு.
“அருளு அவனை எழுப்பும்மா காபி எடுத்திட்டு போய்டு அப்படியே” என்றார் மருமகளைப் பார்த்து.
அவள் காபியுடன் நகரவும் “சிந்தா என்ன பேச்சு பேசறே. அந்த புள்ளை மூஞ்சியே வாடிப்போச்சு. அந்த ஓடுகாலி போனா எல்லாரும் அதே மாதிரி இருப்பாங்களா என்ன” என்றார் பூரணி சிந்தாமணியிடம்.
அவருக்கு மெதுவாகக் கூட பேச வரும் என்று அப்போ தான் கண்டுக்கொண்டாள் அருளாசினி. அவர் மெதுவாய் பேசினாலும் அந்த குரலை ஒரேடியாய் அவரால் மாற்ற முடியாதே. அவர் பேசியது செல்லும் அவளுக்கும் கேட்டிருந்தது.
நின்று அதை கவனிக்காதவள் அறைகதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
இங்கு சிந்தாமணியோ “நான் என்னக்கா தப்பா சொல்லிட்டேன், எதுக்கு நீ என்னை திட்டுறே??” என்றாள்.
“இதாச்சும் நிலைச்சு இருக்கணும்ன்னு சொல்றே, அதை கேட்டு அந்த புள்ள எப்படி வருத்தப்படும்” என்று சொன்ன அன்னப்பூரணி புதிதாய் தெரிந்தார் சிந்தாமணிக்கு.
பூரணி மருமகளுக்காய் பரிந்து பேசியது அவருக்கு புதிதாய் தான் தெரிந்தது. யாருக்காவும் அவர் அப்படி இதுவரை பேசியதில்லை வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று போட்டுடைக்கும் ரகம் அவர்.
அறையில் அருளாசினி தன் கணவனை எழுப்பிக் கொண்டிருந்தாள். எழுந்து அமர்ந்தவன் காபியை குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்ள ‘என்ன மனுஷன் இவரு இப்படி தூங்கறாரு’ என்று முதல் முறையாய் சலிப்பாய் உணர்ந்தாள் அவள்.
அவன் மட்டும் படுக்காது சற்று தள்ளி நின்றிருந்தவளின் கரத்தை அவன் எட்டிப்பிடிக்க ‘இதென்ன காலையிலேவா’ என்று பீதியாகிப் போனது அவளுக்கு. “நான் குளி… குளிச்சுட்டேன்” என்றாள் திக்கி.
“இன்னொரு தரம் வேணா குளிச்சுக்கோ” என்றவன் அவளை இழுத்து கட்டிலில் தன் புறத்தில் சாய்த்துக் கொண்டான். தன் தேவை முடிந்த பின்னே தான் அவளைவிட்டான்.
அவள் எழும் முன்னே அவன் எழுந்து குளியலறை சென்றுவிட வெறுமையான ஒரு மனநிலையில் படுத்திருந்தாள் அவள்.
சிறிது நேரத்தில் இடுப்பில் கட்டிய துண்டுடன் அவன் வெளியில் வர இவள் எழுந்து சென்றாள். அவள் திரும்பி வரும் போது அவன் அறையில் இல்லை.
மீண்டும் தலை சீவி தன்னை சீர் படுத்திக்கொண்டு அவள் வெளியில் வர ஆருத்ரன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான்.
“என்னம்மா இது இட்லிக்கு சாம்பாரு சட்னி வைச்சிருக்க. குடல் குழம்பு வைச்சிருக்கலாம்ல” 
“டேய் ஒரு நாளைக்கு சாப்பிடேன்டா, குடல் செஞ்சா எனக்கே குடல் எல்லாம் வெளிய வந்திடும் போல வாடை அடிக்கும். அந்த புள்ளைக்கு கஷ்டமா இருக்காது”
“ம்மோவ் நீ முதல்ல உன் புள்ளைய பாரு. அப்புறம் அந்த புள்ளைய பார்ப்பே. ஆமா என்னவோ சொன்னியே குடல் செஞ்சா உன் ககுடலு வெளிய வந்திடுமா. அப்போ சாப்பிடும் போது மட்டும் நல்லா சப்புக்கொட்டி எப்படி சாப்பிடுறியாம்” என்றான் அவன்.
“சாப்பிட்டா அதெல்லாம் தெரியலை”
“இப்போ என்னா சாம்பாரு தானா”
“ஒரு நாளைக்கு சாப்பிடு”
“எனக்கு வேணாம், நான் பாண்டியன் ஹோட்டல்ல வாங்கியாந்துக்கறேன்” என்றுவிட்டு எழுந்துவிட பின்னால் நின்றிருந்தாள் அருளாசினி.
“உங்ககிட்ட பேசணும்”
“நேத்தே சொன்னல, முதல்ல சாப்பிட்டு வா. நான் ரூம்ல இருக்கேன்” என்று நகர்ந்தான் அவன்.
அவள் சாப்பிட்டு அறைக்கு செல்ல அவன் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். இவள் வரவை உணர்ந்ததும் அதை கீழே வைத்துவிட்டு “சொல்லு” என்றான்.
“நான் வேலைக்கு போகணும் இ…”
“அதெல்லாம் வேணாம்”
“இல்லை போகணும்…”
“வேணாம்”
“நாம ஏற்கனவே அதைப்பத்தி பேசியிருக்கோம்”
“ஆமா பேசியிருக்கோம், ஆனா வேணாம். உனக்கு இங்க என்ன குறை பாதுக்காப்பா இருக்கே, தங்க வீடு, மூணு வேளை சாப்பாடுன்னு எதுவும் குறையில்லை தானே. அப்புறம் நீ எதுக்கு தனியா சம்பாதிக்கணும்”
“நீ கொண்டு வந்து இங்க எதையும் நிறைக்க வேண்டியதில்லை” என்று முடித்துவிட்டு அவ்வளவு தான் என்பது போல கிளம்பிச் சென்றுவிட்டான் அவன்.

Advertisement