Advertisement

49
அன்னப்பூரணி சின்ன கட்டிலை விரித்து தலையணை வைத்துவிட்டு மாத்திரை விழுங்கிவாறே கட்டிலில் அமர்ந்தார். பெரிய கட்டிலில் அருளாசினியும் இனியாளும் படுத்துக் கொள்வதால் அன்னைக்கென்று ஆருத்ரன் சின்ன கயிற்றுக்கட்டில் வாங்கியிருந்தான் படுப்பதற்காய்.
“அத்தை” என்று அருளாசினி அழைக்க தண்ணீர் செம்பை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து மருமகளை பார்த்தார்.
அவரிடம் கேட்டுவிடவேண்டும் என்று அழைத்துவிட்டவளுக்கு இப்போது வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது. ஆருத்ரனின் அறைக்கு செல்கிறோம் என்று கேட்பதற்கு வெட்கமாக இருந்தது.
“அருளு நீயும் பாப்பாவும் இனிமே அங்கவே படுத்துக்கோங்க. அதான் விஷேசம் எல்லாம் முடிஞ்சுதுல. நான் பாப்பாக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைக்கறேன். நீ பாப்பாவை தூக்கு” என்றவர் தன் போக்கில் அந்த வேலையை செய்ய அருளாசினி ஒன்றும் புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“என்ன அருளு அப்படியே உட்கார்ந்து இருக்க. எழுந்திரு உன் புருஷன் தூங்கிட்டா கும்பகர்ணன் எழுப்பறதுக்குள்ள அவ்வளவு தான் கிளம்பு” என்று அவர் மீண்டும் சொல்லவும் தான் குழந்தையை கையில் தூக்கினாள் எப்படி இவருக்கு புரிந்தது என்ற யோசனையும் உள்ளே ஓடியது.
அது புரிந்தவராக கதவை திறந்துக் கொண்டிருந்தவர் “உன் புருஷனோட சேர்த்து எனக்கு ரெண்டு புள்ளைங்க. உன்னைத்தான்டி தானே நானும் வந்திருக்கேன். யோசிக்காம கிளம்பு” என்று தன் போக்கிலேயே சொல்லிக்கொண்டு மகனின் அறைக்கதவை தட்டியிருந்தார் அப்பெண்மணி.
“ஹேய் நிஜமாவா சொல்றே எங்கம்மாவே உன்னை இங்க அனுப்பிட்டாங்களா??”
“அப்போ நானா அவங்ககிட்ட சண்டை பிடிச்சு இங்க வந்தேன், பேசாம போய்டுங்க”
ஆருத்ரனுக்கு சிரிப்பாய் வந்தது அவன் சிரித்துக்கொண்டே மனைவியை பார்க்க அவள் கண்களில் கண்ணீர். குழந்தையிடம் ஒரு பார்வை வைத்துக்கொண்டே “என்னாச்சு எதுக்கு கண்ணு கலங்குது உனக்கு??” என்றான்.
“தெரியலை” என்றவள் அவன் மீது சாய்ந்துக் கொண்டாள்.
“தெரியாம தான் அழுவாங்களா??”
“எங்கம்மாப்பத்தி நான் அதிகம் நினைச்சதில்லை. ஆனா அத்தை அவங்களை ரொம்ப ஞாபகப்படுத்தறாங்க. எங்கம்மா இப்படித்தான் இருந்திருப்பாங்களான்னு நிறைய நேரம் யோசிக்க வைக்கறாங்க. நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவரு”
“அடிப்பாவி இப்படி கூசாம சொல்றியே??” என்று அவன் சொல்லவும் அவனிடமிருந்து விலகி “என்ன சொல்லிட்டேனாம்” என்றாள்.
“பின்ன என்ன எனக்கே அப்பப்போ சந்தேகம் வருது அவங்க எனக்கு அம்மாவா இல்லை உனக்கான்னு. எனக்காக எங்க பேசியிருக்காங்க, உனக்காக தான் எப்பவும் என்கிட்டே பேசுவாங்க. ஏன் சண்டை கூட போட்டிருக்காங்க” என்றான் அவன்.
“தெரியும் அத்தை சொன்னாங்க. என்னை நீங்க தேடலைன்னு உங்ககிட்ட சண்டை போட்டதா சொன்னாங்க” என்றாள் அவள்.
“நீயும் தானே என்கிட்ட அதை கேட்டே??” என்றான் அவன் குற்றம் சாட்டும் தொனியில். அவள் பதில் சொல்லும் முன் குழந்தை சிணுங்கவும் மகளை எடுத்து மனைவியின் கையில் கொடுத்தான்.
“எதுக்கு அழறா??”
“உச்சா போய்ட்டால்ல வயிறு பசிச்சு இருக்கும்” என்றவள் வசதியாய் திரும்பி அமர்ந்தாள் கட்டிலில்.
“சரி நான் வெளிய இருக்கேன்” என்று எழுந்தான் ஆருத்ரன்.
“எதுக்கு??”
“நீ தான் பசியாத்துறல்ல”
“அதுக்காக”
“அதான் வெளிய போறேன்”
“அன்னைக்கும் இப்படித்தான் வெளிய போறேன்னு கிளம்புனீங்க. என்ன பிரச்சனை உங்களுக்கு??”
“இன்னைக்கு என் கண்ணுல ஏதோ கோளாறு. அன்னைக்கு மாதிரி இல்லை”
“அப்படின்னா”
“கன்னாபின்னான்னு அலைபாயுது அதான் சொல்றேன் வெளிய இருக்கேன்”
“வெளிய இருந்தாலும் படுக்க உள்ள தானே வரணும்”
“அப்போ என்ன செய்யலாம்ன்னு நீயே சொல்லு”
“புதுசா செய்ய என்ன இருக்கு ஒரு பிள்ளையும் பெத்தாச்சு இதெல்லாம் நான் சொல்லித் தரணுமா உங்களுக்கு”
“ஹேய் என்னடி சொல்றே??”
“சொல்றாங்க சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு போய்யா. நாங்களே இங்க வருவோமாம் இவரு வெளிய போயிடுவாராம் போய்யா அப்புறம் ஆசினி பூசினின்னு கொஞ்சிட்டு உள்ள வந்தீங்க விரட்டிவிட்டிருவேன் சொல்லிட்டேன்” என்று அவள் சொல்லிய தினுசில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“உனக்கு ரொம்ப வாயாகிடுச்சு, ரொம்பத்தான் பேசுறே…”
“நீங்க பேசலை அதான் நான் பேசறேன், உங்ககிட்ட தானே பேசறேன் அதுக்கென்ன இப்போ”
“நல்ல பேசின போ. பாப்பா தூங்கிட்டா பாரு” என்றான்.
குழந்தை தோளில் போட்டு தட்டிவிட்டு படுக்கையில் கிடத்தினாள். ஆருத்ரனின் அருகே நெருங்கி அமர்ந்தவள் அவன் முகம் பார்க்க “என்ன கேட்கணும் உனக்கு??”
“நான் ஏதோ கேட்கப் போறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்”
“மூச புடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியாதா”
“அப்போ நான் நாயா”
“ஆமா பொமரேனியன் குட்டி”
“உங்களை ரொம்ப வாய் தான்”
“சரி சொல்லு”
“அர்ஜுன் வர்றது உங்களுக்கு எப்படி தெரியும்??”
“அது தான் உன் தலையாய சந்தேகமா??”
“அது மட்டுமில்லை ஆனா அதுவும் தெரியணும். நீங்க வீட்டுக்கு நான் கூப்பிட்டப்பவே வந்திருந்தா எனக்கு எதுவும் தோணியிருக்காது. வரமாட்டேன் அது இதுன்னு சொல்லவும் எனக்கு உங்க மேல டவுட் வருது. சொல்லுங்க உங்களுக்கு எப்படி தெரியும்??”
“சும்மா ஒரு கெஸ்ஸிங் தான்”
“நம்புற மாதிரி இல்லையே”
“நிஜம் தான் அவன் வருவான்னு தெரியும், இன்னைக்கு வரவைச்சது என்னோட பிளான் தான்”
“பிளானா??”
“ஹ்ம்ம், இளாகிட்ட நம்ம வீட்டில இது போல பங்க்ஷன் இருக்குன்னு வந்திடுன்னு அவன் அர்ஜுன் கூட இருக்கும் போது சொன்னேன். வருவானா மாட்டானான்னு உறுதியா தெரியாம தான் இருந்துச்சு”
“அப்புறம்”
“அப்புறம் இளா தான் சொன்னான் பாஸ் கிளம்பிட்டாரு வந்திடுவாருன்னு”
“அப்போ அவருக்கு தெரியுமா அர்ஜுன் இங்க வர்றது”
“அர்ஜுன் வெளிய கிளம்பின வரை தான் அவன் சொன்னது. இங்க வர்றான்னு நானே தான் யூகிச்சேன்”
“என்னத்துக்கு இந்த விளையாட்டு??”
“விளையாட்டு எல்லாம் இல்லை அவன் வருவான்னு தோணிச்சு. அவன் மாறியிருந்தா நீ சொன்ன மாதிரி அவன் அம்மாவோட வருவான்னு நினைச்சேன், வந்தான் அவ்வளவு தான்”
“அவன் இங்க வந்தா என்ன, நீங்க ஏன் கிளம்பி போனீங்க??”
“ஒருத்தர்க்கு நம்பலை பிடிக்கலைனா விலகி போய்டணும். அதான் அவன் வரும் போது நான் இல்லை. அவன் உன்னையும் இனியாளையும் பார்க்க வர்றான். நான் இருந்திருந்தா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வைச்சிருப்பான்”
“நீ எதுக்கு என்னை முறைக்கிறே?? அவன் உம்முன்னு இருக்கும் போது நிஜமாவே அப்படித்தான் இருக்கான்”
“சரி போகட்டும் விடுங்க. ஆமா உங்களுக்கு ஏன் திடிர்னு கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிக்கணும்ன்னு தோணிச்சு”
“திடிர்ன்னு யார் சொன்னா??”
“அர்ஜுன் தான் சொன்னான்ல இவ்வளோ நாள் இல்லாம இப்போ தான் வந்திருக்கீங்கன்னு”
“அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். சரி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு”
அவள் தலையாட்டினாள் கேளுங்க என்பது போல “நாம இப்போ எப்படி இருக்கோம்”
“கட்டிக்கிட்டு இருக்கோம்”
“ஹா ஹா அடியேய் நான் அதை கேட்கலை. நம்ம வசதியா இருக்க மாதிரி உனக்கு தோணுதா”
“சிரிக்காதீங்க கேட்கும் போதே தெளிவா கேட்டிருக்கணும்”
“சரி சொல்லு”
“நம்ம நல்லா தானே இருக்கோம்”
“நல்லான்னா ஓரளவுக்கு வசதியா இருக்கறதா உனக்கு தோணுதா இல்லையா”
“ஹ்ம்ம் வசதியா தான் இருக்கோம். வீடு, காருன்னு எல்லாமே இருக்கு எதுக்கு அதை கேட்கறீங்க??”
“இதெல்லாம் எப்படி வந்துச்சுன்னு நினைக்கிறே??” என்று அவன் கேட்கும் போது தான் ஏதோ புரிவது போலிருந்தது அவளுக்கு. அவனே சொல்லட்டும் என்று பார்த்திருந்தாள். 
“நான் இப்போ பார்க்கற வேலையில இவ்வளவு சம்பாதிக்க முடியும்ன்னு நினைக்கிறியா??”
அவள் தலை புரியாது தலையாட்டியது. “என்ன நினைக்கிறேன்னு வாய்விட்டு சொல்லு”
“தெரியலை எனக்கெப்படி தெரியும்”
“இந்த வேலை என் திருப்திக்காக நான் செய்யறது. நான் ரெண்டு வருஷம் டெல்லில வேலை பார்த்தேன் அது உனக்கு தெரியும் தானே. அப்பா இருக்கும் போதே அக்காவுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க”
“எனக்கு எந்த கஷ்டமும் எங்கப்பா வைக்கவே இல்லை. அவங்க இருக்கும் போதே எல்லா கடமையும் முடிச்சுட்டு போய்ட்டாங்க. என்னோட சம்பாத்தியத்துக்கு பெரிசா எந்த செலவும் வந்ததில்லை”
“லட்சங்கள்ள தான் என்னோட வருமானம். வீட்டு செலவுக்கு அனுப்பினது போக மொத்தமும் அப்படியே தான் என்னோட சேவிங்க்ஸ்ல இருந்துச்சு. அக்காவுக்கு தேவையானதை செஞ்சிருந்தாலும் என் சம்பளம் அப்படியே தான் இருக்கும்”
“அதை கொஞ்சம் இன்வெஸ்ட் பண்ணேன் ஷேர்ஸ்ல. ஆரம்பத்துல சில சறுக்கல்கள் இருந்துச்சு. அப்புறம் அதை பத்தி தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். எப்படி இன்வெஸ்ட் பண்ணனும்ன்னு பார்த்து பார்த்து செஞ்சேன். வருமானம் கூடிச்சு”
“நான் முன்னாடியே முடிவு பண்ணது தான் இந்த ப்ரீசர் பாக்ஸ் வேலை செய்யணும்ன்னு. அதுக்கு எவ்வளவு செலவாகும்ன்னு எனக்கு அப்போ தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் அதுக்கு என்ன தேவைன்னு எல்லாம் பார்த்து பார்த்து சேர்த்தேன். ரெண்டு வருஷம் கழிச்சு வேலையைவிட்டு இங்கவே வந்துட்டேன்”
“அப்போ சம்பாதிச்சது தான் இப்பவும் வைச்சு இருக்கீங்களா”
“ஹேய் அறிவு பேசி முடிக்கறதுக்கு முன்னாடி ஆர்வகோளாறா கேள்வி கேட்காத. இரு சொல்றேன்”
வாயை கோணி அவனுக்கு அழகு காட்டினாள் ரொம்பத்தான் என்பது போல. “என் பிரண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட் பண்ணான் தனியா. அதுல நானும் பார்ட்னர் ரெண்டு பேரும் பிப்டி பிப்டி பார்ட்டனர்ஸ்”
“இப்பவுமா”
“ஹ்ம்ம்”
“அதுல அவ்வளவு வருமானம் வருதா??”
“வரும்”
“நீங்க இங்க தானே இருக்கீங்க வேற எந்த வேலையும் பார்க்கற மாதிரி எனக்கு தெரியலையே. நடுராத்திரில எப்போ யார் கூப்பிட்டாலும் ப்ரீசர் பாக்ஸ் எடுக்க கிளம்பிடறீங்க அப்புறம் எப்படி??”
“நம்ம ஆபீஸ்ல ஒரு தனி ரூம் இருக்கில்ல, நீ கூட தங்கியிருந்தல்ல. அங்க என்னோட லேப் எல்லாம் இருக்கு. ஆபீஸ்ல இருந்தே வேலை பார்த்துக்குவேன்”
“அப்போ அந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ்??” என்று இழுத்தாள்.
“அது டெல்லில தான்”
“என்ன!!” என்று வாய் பிளந்தாள்.
“இங்க இருந்தே அங்க வேலை பார்க்கறீங்களா??”
“அவனுக்கு என்னோட லட்சியம் தெரியும். என்னால பெரிசா அவனுக்கு உதவ முடியாதுன்னு சொல்லித்தான் அவனோட பார்ட்னர் ஆனேன்”
“அப்படியும் சில சமயம் அவனுக்கு எதாச்சும் உதவி தேவைப்படும் போது என்னை கூப்பிடுவான். முக்கியமான ப்ராஜெக்ட்ல நான் உதவி செய்வேன், சமயத்துல நானே டிசைன்ஸ் செஞ்சிருக்கேன்”
“உன் பிரண்டுக்கு தெரியாது அவன் ப்ராஜெக்ட் சிலது மிஸ் பண்ணது எங்களால தான். அதுல ரெண்டு முறை நான் டிசைன் பண்ணேன், ஒரு டைம் ஜாவித் பண்ணான்”
“ஜாவித் தான் உங்க டெல்லி பிரண்டா”

“ஹ்ம்ம் ஆமா”
“ஓ!!”
“இங்க அதோட பிரான்ச் ஓபன் பண்ணுற ஐடியா நீ கேட்டதுக்கு அப்புறம் தான் யோசிச்சேன். ஏன் நான் படிச்சதுக்கான வேலை பார்க்கலைன்னு கேட்டல்ல. சரி ஆரம்பிப்போம்ன்னு ஒரு எண்ணம். நீ ஊர்ல இருக்கும் போது தான் அதுக்கான எல்லா வேலையும் முடிஞ்சது”
“கான்ட்ராக்ட் ஓகே ஆகிட்டா சொல்லலாம்ன்னு நினைச்சிருந்தேன். நீங்க இங்க வந்ததும் பூஜை போட்டு ஆபீஸ் ஓபன் பண்ணலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ளே என்னென்னவோ நடந்து போச்சு”
“என்ன பெரிசா நடந்துச்சு நீங்க தான் என்னை பொறுமையா தேடி கண்டுப்பிடிச்சிருக்கீங்களே. நானே கிளம்பி வீட்டுக்கு வந்திருப்பேன் போல அவ்வளவு ஸ்லோவா கண்டுப்பிடிக்கறீங்க” என்று மீண்டும் குறைப்படித்தாள் அவன் மனைவி. அது அவனை காயப்படுத்தியது, நொடியில் அவன் முகம் மாறிப் போனது.

Advertisement