Advertisement

48
“அண்ணன் அவரை கூட்டிட்டு வர்றீங்களா??”
“இல்லைம்மா அண்ணன் போகும் போதே சொல்லிட்டு தான் போனாங்க…”
“என்னன்னு??”
“நீங்க வேணா போன் பண்ணி பாருங்களேன்” என்று நகர்ந்துவிட்டான் லோகு.
குழப்பத்தோடே ஆருத்ரனுக்கு அழைத்தாள் அருளாசினி. “ஹ்ம்ம் சொல்லும்மா…” என்றான் அவள் அழைப்பை எதிர்பார்த்தவன் போல்.
“அர்ஜுன் வந்திருக்கான்”
“சரி பார்த்துக்கோ”
“என்னது பார்த்துக்கவா… நீங்க எங்க இருக்கீங்க முதல்ல வீட்டுக்கு வாங்க…”
“நான் கொஞ்சம் வேலையா வந்திருக்கேன்”
“அவன் வந்திருக்கான் சொல்றேன்ல”
“நீ தான் இருக்கல்ல அம்மா இருக்காங்க பார்த்துக்கோங்க”
“எதுக்கு வந்திருக்கான்னு தெரியலை. நீங்க வந்தா என்ன” என்றாள் குரலில் லேசாய் கோபம் எட்டிப்பார்த்தது.
“நான் வந்தா கலவரம் தான் நடக்கும் பரவாயில்லையா??”
“ஏன்??”
“அவன் என்னை பார்த்தா இயல்பா இருக்க மாட்டான்”
“அப்போ அவன் வர்றது உங்களுக்கு தெரியும். தெரிஞ்சு தான் வெளிய கிளம்பி இருக்கீங்க”
“ஹ்ம்ம் தெரியும்”
“ஏன் என்கிட்ட சொல்லலை??”
“உன் பிரண்ட் வர்றது உனக்கு சந்தோசமில்லையா”
“சும்மா பேச்சை மாத்தாதீங்க. ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்??”
“தெரியும் விடேன். நீ அவங்களை கவனி நான் அப்புறம் வர்றேன்” என்று போனை வைத்துவிட்டான்.
“எப்படி இருக்க அருள்??” என்றார் அர்ஜுனின் அம்மா.
“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி??”
“அத்தை இப்போ ஆன்ட்டி ஆகிடுச்சா??” என்றார் அவர்.
“சாரி அத்தை”
“இப்போ தான் இவன் நடந்ததெல்லாம் சொன்னான். அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் அருள்”

“என்னத்தை இதெல்லாம் நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிட்டு”
“எங்க உன் குழந்தை?? என்ன பேரு வைச்சு இருக்கீங்க??” என்றார் அவர்.
பின்னால் திரும்பி அர்ஜுனை முறைத்தவர் “நீ எதுக்கு இங்க வந்தே?? அதை செய் முதல்ல” என்று அவனிடம் சொல்லவும் தவறவில்லை அவர்.
“என்னாச்சு அவனை எதுக்கு திட்டுறீங்க??”
“அவன் செஞ்சதுக்கு திட்டாம கொஞ்சுவாங்களா??” என்றார் அவர் முறைப்போடு.
அப்போது அன்னப்பூரணி அங்கு வர அர்ஜுனை கண்டதும் நேரே அவன் முன் சென்றவர் “எப்போ தம்பி வந்தீங்க?? நல்லா இருக்கீங்களா??” என்றார் மலர்ந்த முகத்துடன்.
“நல்லாயிருக்கேன்” என்றான் அவன்.
“அத்தை இவங்க அர்ஜுனோட அம்மா” என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் அவள்.
உள்ளே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் அவர்களை கூட்டிச்சென்று காண்பித்தாள். அர்ஜுனுக்கு முகமே இல்லை எதுவோ போல அமர்ந்திருந்தான்.
அருளாசினிக்கு தெரியும் தானே அர்ஜுனின் அன்னைப் பற்றி. கோபம் வந்தால் வைத்து விளாசிவிடுவார் வார்த்தைகளால் மட்டுமல்ல.
அன்னப்பூரணியும் அவரும் ஒன்றாய் இணைந்துக்கொள்ள ஒட்டாது அமர்ந்திருந்தான் அர்ஜுன். வந்ததுமே குழந்தையின் கழுத்தில் செயினை போட்டுவிட்டிருந்தான்.
“என்னாச்சு??” என்ற குரலில் திடுக்கிட்டவன் நிமிர்ந்து அருளாசினியை பார்த்தான் பின் ஒன்றுமில்லை என்பதாய் தலையாட்டினான்.
“அத்தை ரொம்ப பேசிட்டாங்களோ”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஆமா எங்க உன் புருஷன்”
“வெளிய போயிருக்கார்”
“ஓ!!” என்றவன் “அருள்” தயங்கியவாறே அழைத்தான்.
“சொல்லு…”
“நான் செஞ்சது சரியா தப்பான்னு நான் பேச வரலை. உனக்கு நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது” என்றான்.
“என்ன திடிர்ன்னு??”
“எவ்வளோ அசிங்கம் எனக்கு இது தேவையா??”
“என்ன பீல் பண்றியா போடா பேசாம” என்றாள் அவள்.
“நான் பீல் பண்ணுறது உனக்கு காமெடியா இருக்கா??”
“ஆமா எவனாச்சும் கடத்தி வைச்சுட்டு அவனே கடத்துனவன் வீட்டுக்கு ஆளனுப்புவானா” என்று அவன் பேச்சை இலகுவாக்க முயற்சி செய்தாள். அவளுக்கு இன்னமும் கோபம் தான் ஆருத்ரன் வேறு சொல்லியிருந்ததால் குத்திக்காட்ட வேண்டாம் என்று விட்டுவிட்டாள். தவிர அவனே வருந்திக் கொண்டிருப்பது புரிந்தது.
“முன்ன பின்ன செத்தா தான் சுடுகாடு தெரியும்ன்னு சொல்வாங்க. நான் என்ன முன்னப்பின்ன நூறு பேரை கடத்தி வைச்சிருந்தேனா என்ன. என்னவோ அவன் மேல இருந்த துவேஷம் அப்படி செஞ்சிட்டேன். நீயா இல்லாம இருந்திருந்தா இப்படி செஞ்சிருப்பேனான்னு தெரியலை”
“நீன்னு தெரிஞ்ச பிறகு தான் அப்படி செஞ்சிருக்கேன். உன்கிட்ட நான் அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன்” என்றான்.
“போதும் போ ரொம்ப போரடிக்கிறே?? அங்க பாரு உங்கம்மா சாப்பிட உட்கார்ந்திட்டாங்க நீயும் எழுந்து போய் சாப்பிடு” என்றவள் பின் “எங்க வீட்டில நீ சாப்பிடுவியா இல்லை…” என்று நிறுத்தினாள்.
“இங்க பாரு உன் புருஷன் சொன்ன மாதிரி நான் ஜாதி எல்லாம் பார்த்து பழகறவன் இல்லை. அவனை எனக்கு புடிக்கலை நான் அவன் கூட நெருங்கி பழகலை. எங்கப்பாவே நீ அவன்கூட பழகுன்னு சொல்லியிருந்தாலும் நான் அதை செஞ்சிருக்க மாட்டேன்”
“ஏன்னா எனக்கு அவனோட ஒத்துவரலை. அப்படியே நான் இருந்திடறேன், மத்தப்படி நான் அப்படி ஆளில்லை. இனிமே இப்படி பேசினே பல்லை உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்”
“ஏன்டா உங்களுக்கெல்லாம் எனக்கு பல்லு இருக்கறது பிடிக்கலையா எப்போ பார்த்தாலும் அதையவே உடைக்கறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க”
“வேற யார் சொன்னா??”
“என் புருஷன் தான்”
“அவன் எதுக்கு சொன்னான்?? அடிக்கிறானா உன்னை?? வேற என்ன சொன்னான், சொல்லு அவனை ஒரு கை பார்த்திடுறேன்” என்று எகிறிக்  கொண்டு வந்தான் அர்ஜுன்.
“போதும் போதும் நீ அடங்கு, நாங்க ஆயிரம் பேசுவோம். அதுல இதுவும் ஒண்ணு”
“நிஜமாவே ஒண்ணுமில்லைல”
“உன்னைய என் புருஷன் ஒண்ணும் செய்யாம விட்டான்ல அதான் அவரை ஒரு கை பார்க்குறேன்னு சொல்றே நீ”
“எங்க என் மேல அவனை கை வைக்க சொல்லு பார்ப்போம்”
“அவர் அடிச்சா நீ தாங்க மாட்டே போ”
“ரொம்ப ஓவரா தான் உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணுறே…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆருத்ரன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அருளாசினி அர்ஜுனின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை உள்ளே நுழையும் போதே கண்டுவிட்டிருந்தவன் அவனிடம் ஒன்றும் பேசாது அவனறைக்குள் நுழைய அர்ஜுனை பாதியில் விட்டு அருளாசினி எழுந்து உள்ளே சென்றாள்.
“நீ என்ன என் பின்னாடியே வந்து நிக்கறே??” என்றான் ஆருத்ரன் திரும்பாமலே.
கதவை அடைத்துவிட்டவள் அதன் மீதே சாய்ந்துக்கொண்டு “சும்மா தான்” என்றாள்.
“சரி நம்பிட்டேன்” என்றவன் குளியலறைக்குள் நுழையப் போக சட்டென்று அவன் கைப்பிடித்து இழுத்தவள் அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.
“ஹேய் நான் குளிக்கலை”
“பரவாயில்லை” என்றவள் அவன் மார்பில் சுகமாய் சாய்ந்துக் கொண்டாள்.
“பாவம் அவனை வெளிய அம்போன்னு விட்டு வந்து இங்க வந்து கட்டிப்பிடிச்சுட்டு நிக்கறே”
“ஆமால” என்று விலகியவள் “உங்ககிட்ட பேசணும் அப்புறம் பேசுவோம்” என்று தீவிரமான முகத்தோடு சொல்லிவிட்டு வெளியேற போனவள் நின்று “நீங்க வந்து வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.
ஆருத்ரனும் வந்தவன் அவர்களிடம் நன்றாகவே பேசினான். அர்ஜுன் விலகித்தான் நின்றான், அப்போது அர்ஜுனிடம் வேலைப் பார்க்கும் இளமாறனும் உள்ளே வந்தான்.
“பாஸ் நீங்க இங்க தான் இருக்கீங்களா??” என்று வாயெல்லாம் பல்லாக அவன் உள்ளே நுழையும் போது தான் அர்ஜுனுக்கு எங்கே தவறு நடந்தது என்று புரிந்தது. இருந்தும் அதை பெரிதாக்கும் எண்ணம் எதுவும் இப்போது இல்லாததால் சாதாரணமாகவே பார்த்தான் மற்றவனை.
“நான் வந்தது இருக்கட்டும் நீ இங்க என்ன பண்றே??”
“சார் என் பிரண்டு குழந்தைக்கு தொட்டில் போடுறேன் வாங்கன்னு சொன்னார். அதான் பாஸ் வந்தேன்” 
ஒரு வழியாய் அர்ஜுனும் அவன் அன்னையும் கிளம்பினர். அர்ஜுனின் அன்னை அன்னப்பூரணி, ஆருத்ரன் என்று தனித்தனியே இருவரிடத்திலும் மகனுக்காய் மன்னிப்பு கேட்டு அங்கு கிளம்பியிருந்தார். வந்ததிற்கு அர்ஜுனின் முகமும் சற்று தெளிந்திருந்தது கிளம்பும் தருவாயில்.
அருளாசினி மகளுக்கு பசியாற்றிவிட்டு அவளை படுக்கையில் கிடத்த அன்னப்பூரணி மகனை அழைத்தார்.
“என்னம்மா” என்றவாறே அன்னையின் அறைக்குள் நுழைந்தவன் அங்கு விளையாடும் மகளைக் கண்டதும் முகத்தில் புன்முறுவல் பூக்க அவளை நோக்கிச் சென்றான்.
“ருத்ரா உன் பொண்டாட்டி பக்கத்துல உட்காருடா. அருளு நீ பாப்பாவை உன் மடியில போட்டுக்க. சுத்தி போட்டுர்றேன், இன்னைக்கு எல்லார் கண்ணும் உங்க மேல தான். என் கண்ணே பட்டிருச்சு” என்றவர் அவர்களுக்கு திருஷ்டி சுத்தி வெளியே சென்றார்.
“குழந்தையை பிடிங்க” என்று அருளாசினி ஆருத்ரனிடம் சொல்ல “என்னாச்சு??”
“என் சேலையை நனைச்சுட்டா??”
“பன்னீர்ன்னு சொல்லு”
“ஆமா பன்னீர் தான் தூவிட்டா… அவளுக்கு வேற ட்ரெஸ் மாத்தணும் பிடிங்க” என்றவள் மகளை அவன் மடியில் கிடத்தினாள்.
ஆருத்ரன் சிறிது நேரம் மகளுடன் விளையாடிவிட்டு அவனறைக்கு சென்றுவிட்டான். அருளாசினி தாமரை ஊருக்கு சென்ற அன்று மட்டும் தான் அவனறையில் படுத்துக்கொண்டாள். மறுநாளில் இருந்து வழக்கம் போல அன்னப்பூரணியின் அறையில் தான் அவளின் இருப்பு. 
அன்றைக்கு அன்னப்பூரணி வேண்டுதலுக்காய் கோவிலுக்கு சென்றிருந்ததால் மருமகளை அனுப்பியிருந்தார்.
தனியே அறையில் புரண்டு புரண்டு படுத்திருந்தவனுக்கு உறக்கமே வரவில்லை. காலையில் இருந்து அலைச்சல் என்பதால் நேரமாகவே படுக்க வந்திருந்தான். இருந்தும் உறக்கம் அண்டவில்லை அவனை.
“ருத்ரா” என்று அன்னை அழைக்கும் குரல் கேட்க என்னவோ ஏதோவென்று அடித்துப்பிடித்து எழுந்தவன் கதவை திறக்க அருளாசினி குழந்தையுடன் நின்றிருந்தாள்.
“அருளு இனிமே இங்கவே படுக்கட்டும், பார்த்துக்கோ எனக்கு தூக்கம் வருது மாத்திரை போட்டு படுக்க போறேன்” என்றவர் குழந்தைக்கு தேவையானதெல்லாம் கொண்டு வந்து அறையில் வைத்துவிட்டு தன் போக்கில் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.
மனைவிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டவன் அவளைப் பார்த்துக்கொண்டே குழந்தையை கட்டிலில் படுக்க வைக்கப் போக “இருங்க அவளுக்கு விரிப்பை போடுறேன்” என்று விரித்துக் கொடுக்க மகளை படுக்க வைத்தான் ஆருத்ரன்.
அதற்குள் அருளாசினி கதவடைத்து வந்திருந்தாள். ஆருத்ரன் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். “இனியாள் நைட்ல தூங்கமா இப்படித்தான் தினமும் விளையாடுறாளா” என்றான் மனைவியிடம்.
“இப்போ பாப்பாவை எப்படி கூப்பிட்டீங்க??”
“இனியாள்ன்னு ஏன் என்னாச்சு??”
“அப்பா அப்படித்தான் அம்மாவை கூப்பிடுவாங்களாம்…” என்றவளின் விழிகள் கலங்கியிருந்தது. அதை துடைக்க அவள் கை நீளும் முன்னே கணவனின் கரம் அதை செவ்வனே செய்திருந்தது. 
“எங்கம்மா பேரு உங்களுக்கு எப்படி தெரியும். நான் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே??”
“ஊர்ல பார்த்தேன் மாமாவோட டேபிள்ல ஒரு டைரி இருந்துச்சு அதுல அவங்க எழுதி வைச்சிருந்தாங்க முதல் பக்கத்துல”
“நான் எதிர்ப்பார்க்கலை”
“நானும் தான்”
“நீங்க எதை எதிர்ப்பார்க்கலை”
“நீ இன்னைக்கு இங்க வந்து படுப்பேன்னு. அன்னைக்கு மாதிரி எனக்கு பல்ப் கொடுத்திட்டு போய்டுவேன்னு நினைச்சேன். அம்மாவே வந்து சொல்லி விட்டு போறாங்க… என்ன பண்ணே??”

Advertisement