Advertisement

47
“இது தான் நடந்துச்சா?? இதிலென்ன இருக்கு…” என்று அவள் சாதாரணமாக சொன்னாள். அர்ஜுன் செய்ததை அவள் குறைத்து நினைக்கவில்லை என்றாலும் அது அவளுக்கு ‘இதுக்காகவா அவனை விட்டீங்க’ என்று நினைக்கத்தான் வைத்தது.
“நீ புரிஞ்சு தான் பேசறியா… அவன் தான் எல்லாத்துக்கு காரணம் உன்னை கடத்தினான் எல்லாம் எனக்கும் கோபம் தான். ஆனா அவன் கடசியா செஞ்சதை என்னால சாதாரணமா எடுத்துக்கவே முயட்யலை. உன்னோட திங்க்ஸ் எடுக்க வீட்டுக்கு வந்தா வீட்டை சுத்தம் பண்ணிட்டு உட்கார்ந்திட்டு இருக்கான். அவனை எதுல சேர்க்கன்னு எனக்கே புரியலை”
“நானே இதெல்லாம் செய்வனான்னு எனக்கு தெரியாது. நீ ரொம்ப ஈஸியா சொல்றே. இத்தனைக்கும் அவன் கூட பிறந்தவங்க கூட யாருமில்லை. அவனுக்கு கல்யாணம் கூட ஆகலை. இதெல்லாம் எடுத்து செய்யறது ஒண்ணும் சாதாரணமுமில்லை”
“நீ எப்படி வேணா எடுத்துக்கோ எனக்கு அதைப்பத்தி கவலையில்லை. என்னை பொறுத்தவரை என் குழந்தையும் நீயும் எந்த பிரச்சனையும் இல்லாம கிடைச்சதுக்கு காரணம் அவன் தான். அந்த நிமிஷம் எனக்கு அப்படித்தான் தோணிச்சு”
“அம்மாகிட்ட கூட சொன்னேன், ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுக்காக வேணா இதை செய்யலாம். பசங்க யாரும் இப்படி செய்ய மாட்டாங்க. புருஷன் செய்யலாம் அவனுக்கு கடமையிருக்கு. அந்த பையன் இதெல்லாம் செய்யணும்ன்னு என்ன இருக்குன்னு”
“எந்தவொரு கூச்சமும் படாம செய்யுதுன்னா அதெல்லாம் பெரிய விஷயம்ன்னு சொன்னாங்க. அதனால தான் அவங்களுக்கும் அவ மேல கோபமில்லைன்னு நினைக்கிறேன்” என்று அவன் சொன்னதை இப்போது அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
“சந்தோஷ் அண்ணன் தெரியும்ல அவர் கூட ஒரு முறை சொல்லியிருக்கார். அவருக்கு தெரிஞ்ச ஆட்டோக்காரர் பிரசவ வலி கண்ட ஒரு பொண்ணை ஆட்டோல ஏத்திட்டு போகும் போது இப்படித்தான் அவங்களுக்கு பனிக்குடம் உடைஞ்சிடுச்சாம்”
“இறங்கும் போது அந்த பொண்ணோட அம்மா தம்பி நான் துடைச்சு கொடுத்திறேன்ப்பான்னு சொன்னதுக்கு அந்த ஆட்டோக்காரர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா. இதெல்லாம் பெரிய விஷயமில்லை நீங்க முதல்ல அவங்களை கவனிங்க. இதை நான் பார்த்துக்கறேன்னு”
“நீ நினைக்கிற மாதிரி இது ஒண்ணும் சுலபமில்லை ஆசினி. யாரும் சட்டுன்னு செஞ்சிட முடியாது. அம்மா அப்பாக்கே உடம்பு முடியலைன்னா அவங்களை சுத்தம் பண்ணவே யோசிக்கற பசங்க இருக்கற இந்த காலத்துல அவன் செஞ்சது எனக்கு பெரிய விஷயம் தான்”
“அவன் கடத்தலைன்னா இதெல்லாம் நடந்திருக்காதே” என்றாள் அவளுக்கு இன்னமும் அர்ஜுன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“அவன் கடத்தலைன்னாலும் உனக்கு பனிக்குடம் உடைஞ்சிருந்தா. அதுவும் நீ வேலைக்கு போன இடத்துல அப்படி நடந்திருந்தா. உன்னை சேப்பா அவங்க ஆஸ்பிட்டல்ல சேர்த்திருப்பாங்க”
“அது வேற விஷயம் ஆனா வீட்டுக்கு யார் தகவல் கொடுத்திருப்பா. நம்ம வீட்டுக்கு உன் பிரண்ட்ஸ்ன்னு யாருமே வந்ததேயில்லைன்னு தெரியும். எப்படியோ உன் போன்ல இருந்து போன் பண்ணி அம்மா வரணும். அவங்களுக்கு அந்த ஊர் புதுசு தானே, என்ன செஞ்சிருப்பாங்க சொல்லு”
“நானும் பக்கத்துல இல்லை. நடந்தது நன்மைக்கேன்னு தான் நான் நினைக்கிறேன். எந்த தொடர்பும் இல்லாம நம்ம வாழ்க்கையில எந்த விஷயமும் நடக்கறதில்லை நான் நம்புறேன். அந்த ஆண்டவனுக்கு தெரியும் எது எப்படி நடந்தா நல்லதுன்னு. நம்ம விஷயத்துல நல்லது தான் நடந்துச்சுன்னு நான் எடுத்துக்கறேன்”
“சில விஷயங்கள் வாழ்க்கையில ஏன் நடக்குதுன்னு தெரியாது. அஞ்சனா என் வாழ்க்கையைவிட்டு விலகினப்போ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு அப்படியொரு வேதனை இருந்துச்சு”
“என் வாழ்க்கையே இனி அவ்வளவுத்தான்னு இருந்தப்போ உன்னை பார்த்தேன். தென்றல் மாதிரி வீசி என் வாழ்க்கையை நீ அழகாக்கினே. நமக்குன்னு ஒரு புது உறவு இதெல்லாம் ஏன் நடந்துச்சு எதுக்கு நடந்துச்சு. எல்லா கஷ்டங்களுக்கு பின்னாலையும் ஒரு சிறப்பான நல்லது காத்திட்டு இருக்கு”
“நான் அப்படித்தான் நினைக்கிறேன். என்னை நான் எப்பவும் பூஸ்ட் பண்ணிக்கற விஷயம் என்ன தெரியுமா. எப்போ எல்லாம் நான் டவுன் ஆகறனோ அப்போவெல்லாம் நான் நினைக்கிற ஒரு விஷயம் இதுவும் நல்லதுக்கு தான்னு”
“இந்த நிமிஷம் நீயும் பாப்பாவும் இப்போ நல்லா இருக்கீங்கன்னா அதுக்கு அர்ஜுன் ஒரு காரணம் தான். என்னால அவன் மேல கோபப்பட முடியலை”
“தப்பு செஞ்சிட்டானே தவிர அவனுக்கு அதை சரி பண்ணுற வழி தெரியலை. அவனோட இடத்துல இருந்து அவனால இறங்கி வரவும் முடியலை. இனிமே அவனை குத்திக்காட்டாத விட்டிரு”
“அவன் என்னோட பிரண்டு அவன் எப்படியோ போகட்டும்ன்னு உங்களை மாதிரி என்னால விட முடியாது. அவன் செஞ்சது தப்புன்னா எடுத்து சொல்லத்தான் செய்வேன்” என்றாள் அவள்.
“நான் எப்படியோ போகட்டும்ன்னு எப்போ சொன்னேன். சும்மா சும்மா கடத்தின கடத்தினன்னு சொல்லாத. அந்த வார்த்தை அவனை ரொம்ப ஹர்ட் பண்ணுது. நான் சொன்னா அவன் கேப்பான்னா ஆயிரம் அட்வைஸ் பண்ணக்கூட நான் தயார் தான்.  ஆனா அவன் கேட்க மாட்டேன். நீ அட்வைஸ் பண்ணு நான் அதை தப்பு சொல்லலை”
———–
குழந்தைக்கும் அருளாசினிக்கும் தலைக்கு ஊற்றி புண்ணியாதானம் செய்து முடித்தனர் அன்று. மறுநாள் குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்று முடிவு செய்துக் கொண்டனர்.
“என்னங்க பாப்பாக்கு பூரணின்னு பேரு வைப்போமா??”
கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டிருந்தவன் அதன் வழியாகவே தன் மனைவியை நோக்கி“பார்றா…” என்று சிரித்தான்.
“அதான் பார்த்திட்டு இருக்கீங்களே அப்புறம் என்ன??”
“எங்கம்மா மேல தான் உனக்கு எம்புட்டு பாசம். கண்ணு வேர்க்குதுடி எனக்கு”
“வேர்க்கும் வேர்க்கும், இவருக்கு மட்டும் அர்ஜுன் செஞ்சதை பார்த்து கண்ணு வேர்த்தா தப்பில்லையாம். எனக்கு அத்தை செய்யறது இவருக்கு வேர்க்குதாம்”
“அடியேய் நான் எப்போ அதை தப்புன்னு சொன்னேன். எனக்கு உன் பாசத்தை நினைச்சு தான் கண்ணு வேர்க்குது” என்றவன் சீப்பை அதனிடத்தில் வைத்துவிட்டு மனைவியை நோக்கி திரும்பினான்.
“அப்போ நான் சொன்ன பேரு ஓகே தானே”
“நான் வேற பேரு வைக்கலாம்ன்னு யோசிச்சேன்”
“என்ன பேரு??”
“ஆசினி”
“சொல்லுங்க அதான் என்ன பேருன்னு கேட்கறேன்ல”
“அதான் இப்போ சொன்னேனே ஆசினி”
கணவன் சொன்ன பேரில் அருளாசினி முகம் ஜிவு ஜிவ்வென்று சிவந்தது. “இப்போ எதுக்கு இந்த உஷ்ண பெருமூச்சு. எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்” என்றான் அவன்.
“அதெப்படி என் பேரை அவளுக்கு வைக்கலாம்ன்னு சொல்வீங்க”
“அம்மா பொண்ணு ரெண்டு பேரையும் நான் ஒரே பேர்ல கூப்பிடத்தான்”
“இதுக்கு மேல ஏதாச்சும் சொன்னீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன். என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல, என் பேரை உங்க பொண்ணுக்கு வைப்பீங்களா”
“பாரேன் அதுல என்னோட பேரோட முதல் எழுத்தும் உன் பேரோட கடைசி ரெண்டு எழுத்தும் வருது. அம்மா பேரோட கடைசி எழுத்தும் வருது. அந்த பேரு ரொம்ப பொருத்தமா இருக்கும்ல” என்று அவன் சிரிப்பை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு அவளுக்கு விளக்க கொதிநிலையின் உச்சத்தில் இருந்தவள் சில பல அடிகளை அவனுக்கு வாரி வழங்கினாள்.
“பாப்பா உங்கம்மா என்னை அடிக்கிறாடா என்னன்னு கேளுடா. அப்பா பாவம்ல” என்று கட்டிலில் படுத்துக்கொண்டு கையை காலை உதைத்துக் கொண்டு அங்கு என்ன நடக்கிறது என்று புரியாது தன் போக்கில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்து பேசினான் ஆருத்ரன்.
“உங்ககிட்ட பேசிட்டு இருக்கவளைவிட்டு அவளுக்கு என்ன புரியும்ன்னு அங்க பேசிட்டு இருக்கீங்க”என்று முறைத்தாள் அவன் இல்லத்தரசி.
“சரி சொல்லு உங்கிட்டவே பேசறேன்”
“அந்த பேர் சொல்லி நீங்க என்னை மட்டும் தான் கூப்பிடணும். பாப்பாக்கு நான் சொன்ன பேரு வைச்சாலும் சரி இல்லை வேற பேரு வைச்சாலும் சரி நான் எதுவும் கேட்க மாட்டேன்”
“நிஜமா எதுவும் கேட்க மாட்டியா??”
“ஏன் வேற பேரு எதுவும் முடிவு பண்ணி இருக்கீங்களா??”
“வைக்கும் போது கேட்டுக்கோ” என்றுவிட்டு நகர்ந்தான் அவன்.
“சொல்லிட்டு போங்க” என்று இவள் சொன்னது அறையை திறந்து வெளியில் சென்றவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.
விழா நாள் இனிதாகவே தொடங்கியது. அன்று முழுவதுமே சாப்பாடு வெளியில் இருந்து வரவழைத்திருந்தான் ஆருத்ரன். லோகுவும் இன்னும் சிலரும் வந்திருந்தனர் வீட்டை அலங்கரிக்க.
அன்னப்பூரணியின் அறையில் அமர்ந்திருந்தனர் அருளாசினியும் குழந்தையும். அன்னப்பூரணி எதையோ எடுக்க அறைக்குள் வந்திருக்க “அத்தை” என்றழைத்திருந்தாள் மருமகள்.
“சொல்லு அருளு, ஏதாச்சும் வேணுமா பசிக்குதா உனக்கு. அச்சோ பாரேன் நான் நேரமாகுறதை கவனிக்கவேயில்லை. இரு உனக்கு சாப்பாடு கொண்டு வரேன்” என்று தன் போக்கில் பேசிக்கொண்டே வெளியே செல்லப் போனவரை அருளாசினியின் குரல் தடுத்தது.
“அத்தை இருங்க இருங்க நான் அதைக் கேட்க வரலை. ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று அவள் சொல்லவும் திரும்பி பார்த்தார் அவர்.
“சொல்லு அருளு”
“இல்லை வந்து அவர்… அவரு…” என்று அவள் இழுக்க “எதுனாலும் பட்டுன்னு கேளு அருளு” என்றார் அவர் தன் கணீர் குரலில்.
“அவர் பாப்பாக்கு என்ன பேரு வைக்கப் போறேன்னு உங்ககிட்ட சொன்னாரா அத்தை”
“இதைக் கேட்கத்தான் கூப்பிட்டியா?? ஆமா அவன் உன்கிட்ட எதுவும் சொல்லலியா??”
இல்லையென்பதாய் தலையாட்டினாள் அவள். “எனக்கும் சொல்லலை நானும் நேத்துல இருந்து கேட்டுட்டு இருக்கேன். பேரு வைக்கும் போது தெரிஞ்சுக்கோங்கன்னு சொல்லிட்டான்”
“எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. பார்ப்போம் என் புள்ளை அப்படித்தான் செய்வான்னு நினைக்கிறேன்” என்றார் அவர்.
“என்ன சந்தேகம் எனக்கும் சொல்லுங்க”
“அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் சொல்லப் போறானே அப்போ தெரிஞ்சுக்கோ” என்று அவரும் தன் அனுமானத்தை சொல்லாமல் போக அருளாசினிக்கு தலை வெடித்தும் போலானது.
நேரம் தன்னை போல விரைந்திருக்க விருந்தினர்களும் உறவினர்களும் வர ஆரம்பித்திருந்தனர். வீட்டு ஹாலிலேயே அனைத்தும் தயார் செய்திருக்க தொட்டில் ஒன்று அலங்கரிக்கப்பட்டு நடுவே வீற்றிருந்தது.
“ம்மோவ் எங்க உன் மருமவ” என்று அவனறையில் இருந்து குரல் கொடுத்தான் ஆருத்ரன்.
“என்னாத்துக்குடா இப்படி கத்துறே… குழந்தையை ரெடி பண்ணிட்டு அவ கிளம்ப வேணாமா இரு வர சொல்றேன்” என்று பதிலுக்கு அவரும் தன் தொண்டையை திறந்து கத்தினார்.
“ஏன் இந்த ரூம்ல வந்து டிரஸ் மாத்துறது” என்று தன்னறை கதவை அடைத்துக் கொண்டு சத்தமாகவே சொல்லிக்கொண்டான் அவன்.
சிறிது நேரத்தில் அறைக்கதவு தட்டப்பட யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே கதவைத் திறந்க்க அவன் மனைவி தான் அழகாய் தயாராகி நின்றிருந்தாள். கண்கள் மின்ன ஆர்வமாய் அவளை அவன் பார்க்க அவளோ “கூப்பிட்டீங்களாம் அத்தை சொன்னாங்க” என்றாள்.
“உள்ள வா” என்றவன் கதவை மெல்ல திறக்க அவள் வரவும் பட்டென்று அறைக்கதவை தாழிட்டான்.
“என்ன பண்றீங்க எதுக்கு இப்போ கதவை அடைக்கறீங்க. எல்லாம் வெளிய வந்து இருக்காங்க என்ன நினைப்பாங்க”
“என்ன வேணா நினைக்கட்டும் எனக்கென்ன என் பொண்டாட்டியோட தானே இருக்கேன்” என்றான் அவன் அசால்டாய்.
“என்னவோ போங்க, நீங்க நினைக்கறதை தான் செய்வீங்க. என்ன வேணும் அதை சொல்லுங்க”
“நீ தான் வேணும்”
“அதான் முழுசா கொடுத்தாச்சே அப்புறம் என்ன??”
“பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு. பக்கத்துல வந்தா தள்ளி தள்ளி போறியே” என்றவன் பேசிக்கொண்டே அவளை இடையோடு அணைக்க “தள்ளிப்போங்க” என்றவளின் குரல் அவளுக்கே கேட்டிருக்கவில்லை.
“தள்ளிப் போகணுமா என்ன??” என்றான் அவளின் முணுமுணுப்பை கவனித்து.
அவள் பதில் சொல்லாது உதட்டை கடிக்க அவள் இதழ்களால் அவளிதழை அணைத்து சில நொடிகளில் விடுவித்தான் அவன்.
“போ…” என்று அவன் சொல்லியும் நகர முடியாது நின்றிருந்தது அவள் கால்கள்.
லேசாய் சிரித்துக்கொண்டே அவளை அணைத்தவாறே கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்தான். அவள் மோனநிலை குழந்தையின் அழு குரல் கேட்கவும் பட்டென்று அறுந்துவிட விரைந்து சென்று குழந்தையை வாங்கியிருந்தாள் அன்னப்பூரணியிடம்.
குழந்தையை தொட்டிலில் இட ஆருத்ரன் அன்னப்பூரணியின் காதில் ஏதோ சொல்ல அவர் இப்போது குனிந்து குழந்தையின் காதில் “அமுதினியாள்…” என்று மூன்று முறை கூற அருளாசினியின் விழிகள் நிறைந்து போனது.
திரும்பி அருகில் நின்றிருந்தவனை பார்க்க அவனும் தன் மனைவியை தான் பார்த்திருந்தான். அமுதினியாள் அருளாசினியின் அன்னையின் பெயர். அவளின் தந்தை தாயைப் பற்றி சொல்லும் போதெல்லாம் நெகிழ்ந்து பேசியதெல்லாம் நினைவில் வந்து அவள் அழுகையை அதிகப்படுத்த ஆருத்ரன் அவள் கரத்தை பற்றி அழுத்தினான்.
“எதுக்கு அழறே?? இது சந்தோசமான நேரம்” என்றான். அருளாசினி நொடியில் தன்னை சுதாரித்துக்கொண்டு விழாவை கவனிக்க ஆரம்பித்தாள். 
வந்தவர்கள் எல்லாம் அவர்களை வாழ்த்தி ஒவ்வொருவராய் கிளம்பிக்கொண்டிருக்க வெளிக்கேட்டை தள்ளித் திறந்துக்கொண்டு வந்தவனை ஆச்சரியமிக பார்த்துக் கொண்டிருந்தாள் அருளாசினி.
அர்ஜுன் தன் அன்னையுடன் வருவான் என்று அவள் சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. திரும்பி அருகில் தேட ஆருத்ரன் அங்கில்லை. வேறெதையும் யோசிக்காது வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றாள் அவள்.

Advertisement