Advertisement

46
தாமரை ஊருக்கு கிளம்பும் வரை வீடு சலசலவென்றிருந்தது. ஆருத்ரனும் அருளாசினியும் பேசுவதென்பதே அரிதாக இருந்தது. குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று தாமரை விரும்ப அருளாசினியும் அவள் ஆசையை கெடுக்க விரும்பவில்லை.
தாமரை மருமகளை பார்க்கவே அவ்வளவு தூரத்தில் இருந்து ஒற்றையாய் வந்திருக்கிறாள் அவளை நோகடிப்பதா என்ற எண்ணமும் சேர்ந்துக் கொண்டது. முன்புக்கு இப்போது அதிகம் மாறியிருக்கிறாள் என்பது உணர முடிந்தது அவளால். 
அருளாசினி காணாமல் போன விஷயம் கேட்டு அன்னப்பூரணியிடம் வருந்திப் பேசியதாக அவர் சொன்ன போது கூட அருளாசினிக்கு பெரிதாய் நம்பிக்கையில்லை.
ஆனால் அவள் நேரிலேயே இவள் கையை பிடித்துக் கொண்டு “என்னை மன்னிச்சிடு அருளு. நான் உன்னை பேசப் போய் தான் உனக்கு இப்படியாகிப் போச்சுன்னு எனக்கு மனசுக்குள்ள பெரிய வருத்தம்”
“அவரு அதை சொல்லியே காட்டிட்டாரு. நீ தான் கரிச்சு கொட்டினே பாரு அந்த பொண்ணுக்கு என்னமோ ஆகிட்டு. அவ கிடைக்கலைன்னா எல்லா பாவமும் உனக்கு தான் அப்படி இப்படின்னு ரொம்ப பேசிட்டாங்க. நான் அப்போ பேசினது எல்லாம் முதல்ல ஒண்ணு அப்படியாகிட்டேன்னு மனசுல வைச்சு பேசிட்டேன்”
“நான் அவ்வளவு பேசியும் நீ எதிர்த்து ஒரு வார்த்தை என்னை பேசலை. எல்லாரும் திட்டினப்போ மனசுவிட்டுப் போனது என்னமோ உண்மை தான். ஊருக்கு போன பிறகு நிதானமா யோசிச்ச பிறகு தான் எனக்கு புரிஞ்சது. நான் செஞ்சது தப்புன்னு. உடனே மன்னிப்பு கேட்க ரொம்ப சங்கடமா இருந்துச்சு. என்னை மன்னிச்சிரு அருளு. நீ காணாம போகவும் உண்மைக்குமே நான் அவ்வளவு அழுதேன்”
“குழந்தையை பார்க்க வந்ததை விட உன்னை பார்க்கணும்ன்னு தான் நான் வந்ததே” என்று வேறு அவள் சொல்ல எதையும் மனதில் வைத்துக்கொள்ளாத அருள் அவள் மீது கொஞ்ச நஞ்சமிருந்த வருத்தத்தையும் துடைத்தெறிந்தாள்.
அவர்கள் அன்னப்பூரணியின் அறையிலேயே படுத்துக்கொள்ள ஆருத்ரன் குழந்தையை பார்க்க அவ்வப்போது வருவான். பக்கத்தில் அம்மாவோ அல்லது அக்காவோ யாராவது ஒருவர் இருப்பதால் மனைவியிடம் மனம்விட்டு பேச முடியவில்லை அவனால்.
தூரத்தில் இருந்த போது தேடியதை விட அருகில் இருக்கும் அவளைத்தான் இன்னமும் அதிகம் தேடியது அவனுக்கு, உடன் மகளையும். அறையில் தனியாக படுக்கும் போது பெரும் சோதனையாகவே இருந்தது அவனுக்கு.
மறுநாள் தாமரை ஊருக்கு கிளம்பியிருந்தாள். அவளைவிட்டு வர ஆருத்ரன் ஏர்போர்ட் சென்றிருந்தான். அவன் வீட்டிற்கு வரும் போது நள்ளிரவாகி இருந்தது. ‘இன்னைக்கும் அங்க தான் படுத்திருப்பா, போய் குப்புற படு’ என்று மனசாட்சி எடுத்துக்கொடுக்க கடுப்பாகி உள்ளே நுழைந்தவன் வெளிக்கேட்டை எட்டி உதைத்தான்.
அது பலத்த சத்தத்துடன் பின்னால் இடித்து இவனை மீதே வந்து மோதி நிற்க சரியாய் வலித்தது அவனுக்கு. ‘எல்லாம் சோதிக்குது’ என்று எண்ணிக்கொண்டே கேட்டை மெல்ல சாரி உள்ளே நுழைந்தான்.
ஹால் கதவை அடைத்துவிட்டு நிமிர்ந்தவனின் பார்வை எதிரில் இருந்த அறையின் மீதே இருந்தது. கிளம்பும் போது மனைவியும் மகளும் அங்கு தானிருந்தனர். அவள் குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்ததால் குழந்தையை பார்க்காமலே கிளம்பிவிட்டிருந்தான்.
ஒரு பெருமூச்சுடன் அவன் அறைக்கதவை திறந்தவனுக்கு இனிய அதிர்ச்சி. மனைவியும் மகளும் கட்டிலில் படுத்திருந்தனர். குழந்தை உறங்கியிருக்க அருளாசினி உள்ளே நுழைந்தவனை தான் பார்த்திருந்தாள்.
அதுவே அவனுக்கு பெரிய சந்தோசமாக இருந்தது. அவள் மீது பார்வையை செலுத்திக்கொண்டே ஒரு துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை நுழைந்தான்.
அருளாசினியும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். தாமரை கிளம்பியதுமே அன்னப்பூரணி சொல்லிவிட்டார் “நீ அந்த ரூமுக்கு போய்டும்மா” என்று. உடன் கவனமாக இருக்குமாறு சேர்த்து சொல்லிவிட்டார்.
அருளாசினியும் அவர்கள் அறைக்கு எப்போதடா செல்வோம் என்று தானே எதிர்பார்த்திருந்தாள். எத்தனை மாதங்கள் ஆகிறது, அவளுக்குமே அவனை தேடியது. அவளுக்கு அவனிடத்தில் சொல்ல கேட்க ஆயிரம் இருக்கிறதே.
குளித்துவிட்டு வெளியில் வந்தவன் பார்வை அடிவயிற்றில் ஒருவித அவஸ்தையை கொடுக்க முழிச்சிட்டு இருந்தது தப்போ என்று எண்ணத்தை தான் அவளுக்கு கொடுத்தது.
சட்டென்று திரும்பி படுத்தால் அது அவனை புறக்கணிப்பது போலாகும் என்று எண்ணியவள் அவனைப்  பார்த்தவாறே மெல்ல இறங்கி தலையணையில் படுத்தாள்.
“லைட் இருக்கட்டுமா??” என்றான்.
‘என்ன கேட்கிறான்’ என்று ஒன்றும் புரியாமல் அவள் விழிக்க “லைட் இருக்கட்டும்மா இல்லை அணைச்சுடட்டுமா” என்றான் அவன்.
“நைட் லைட் போட்டு படுங்க”
“பாப்பா எழுந்திட்டா திரும்பவும் போடணுமே அதான் கேட்டேன்”
“எழுந்தா நான் போட்டுக்கறேன் அதான் கட்டில் பக்கத்துல இன்னொரு ஸ்விட்ச் இருக்கே” என்று அவள் சொல்லவும் தான் அவனுக்குமே அது ஞாபகத்திற்கு வந்தது.
விளக்கணைத்து வந்தவன் தலையணை எடுத்து கீழே படுக்கப் போக பதறினாள் அவள்.
“என்னாச்சுங்க எதுக்கு கீழே படுக்கறீங்க??”
“இல்லை நீங்க ப்ரீயா படுப்பீங்களேன்னு தான்”
“ஒண்ணும் வேணாம் இவ்வளவு பெரிய கட்டில்ல எங்களால ப்ரீயா படுக்க முடியாதா என்ன, மேலே படுங்க” என்றாள் அவள்.
அது இருவருக்குமே சோதனையாக இருக்கப்போவதை தெரிந்தே தான் சொல்லியிருந்தாள். ஆருத்ரன் தனியே கீழே படுக்க அவள் மட்டும் மேலே படுப்பாளா என்ன.
மனைவி சொல்லவும் எழுந்து கட்டிலில் அவளருகே படுத்தவன் பார்வை அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தது.
‘ரொம்பவே அழகா வேற இருக்காளே பேசாம படுக்க முடியுமா’ என்றிருந்தது அவனுக்கு. கண்மூடி படுத்திருந்தவளால் தன் கணவனின் பார்வையை உணர முடிந்தது.
தூக்கத்தில் புரண்டு படுப்பதாக பாவனை செய்து மெல்ல குழந்தையின் புறம் திரும்பி படுத்தாள். எப்போதும் நைட்டியுடன் இருப்பவள் அன்று வேறு உடை மாற்றாது புடவையுடனே படுத்திருந்தாள்.
அவளின் வளைவுகளில் அவன் பார்வை விழுந்தது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாது எழுந்து அமர்ந்துவிட்டான்.
திரும்பி பார்த்தவள் “என்னாச்சு??” என்றாள்.
“ஒண்ணுமில்லை…”
“நிஜமா தான் சொல்றீங்களா??”
“ஹ்ம்ம்”
“சரி படுங்க”
“தூக்கம் வரலை” என்று அவன் சொல்லும் போதே அவன் மகள் சிணுங்கினாள்.
“பாப்பா எழுந்திட்டா பாரு” என்றான்.
“தூக்கம் வரலைன்னு சொன்னீங்கள்ள அதுக்கு தான் அப்பாவுக்கு கம்பெனி கொடுக்க எழுந்திருக்கா உங்க பொண்ணு” என்றவள் குழந்தையை தூக்க அவள் உடையை நனைத்திருந்தாள்.
வேறு மாற்றவும் பசிக்கு அவள் அழ குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள். ஆருத்ரன் எழுந்து வெளியே செல்ல போக “எங்க போறீங்க??” என்றாள்.
“பால் கொடு நான் அப்புறம் வர்றேன்”
“உட்காருய்யா பேசாம” என்று அவள் சொல்லவும் முதலில் அதிர்ந்தவன் பின் சிரித்துக் கொண்டே அமர்ந்தான்.
“என்ன இப்படி பொசுக்குன்னு வாய்யா போய்யான்னு சொல்ற??”
“வேற எப்படி சொல்றதாம், பண்ணுறது எல்லாம் கிறுக்குத்தனம்”

“ஏய் என்னைப் பார்த்தா எப்படிடி தெரியுது உனக்கு”
“வெறும் வாய் சவடால் தான்னு தோணுது”
“அடிங்க”
“சும்மா என்கிட்ட தான் பாய்வீங்க??”
“வேற யார்கிட்ட பாயணுமாம்??”
“உங்க பாய்ச்சல் அர்ஜுன்கிட்ட ஏன் இல்லை??” என்றாள் அவனை அளவிடும் பார்வையோடு.
அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். “கேள்வி கேட்டா பதில் சொல்லணும்”
“இப்போ என்ன பண்ணனுங்கற??”
“எதுக்கு நீங்க அவனை சும்மா விட்டீங்க?? எனக்கு பதில் தெரிஞ்சாகணும்” என்று ஆருத்ரனை கேட்டுக் கொண்டிருந்தாள் அருளாசினி.
“எனக்கும் நெறைய கோபம் இருந்துச்சு தான். இன்னும் கொஞ்ச நேரம் எங்க வாக்குவாதம் போயிருந்தா அடுத்து அவனுக்கு அடி தான் விழுந்திருக்கும்”
“நான் அதை கேட்கலை போலீஸ் ஏன் கூட்டிட்டு வரலை”
“யாரோன்னு நினைச்சு தான் நான் போலீஸ் கம்பிளைன்ட் வர போனேன். அர்ஜுன்னு எனக்கு தெரியாது”
“தெரிஞ்ச பிறகு அவனை அப்படியே விட்டீங்க அப்படித்தானே”
“ஏய் அவன் வளர்ந்து இருக்கானே தவிர கெட்டவன் எல்லாம் இல்லை”
“அது எனக்கும் தெரியும்”
“அப்புறம் ஏன் என்னை அப்படி கேட்கறே??” என்றான் அவன்.
குழந்தை உறங்கிவிட தோளில் போட்டு தட்டியவள் குழந்தை ஏப்பம் விடவும் படுக்கையில் கிடத்தினாள்.
“எனக்கு அவன் பிரண்டு அதனால தெரியும். நானே நீங்க ஏன் எதுவும் செய்யலைன்னு கேட்கற அளவுக்கு நீங்க இருக்கறது தான் எனக்கு ஆச்சரியமே”
“விடு ஆசினி”
“விட முடியாது எனக்கு தெரியணும். அத்தையும் வந்தாங்க, அவங்களும் அவனை எதுவும் சொல்லலை. என்ன நடக்குது இங்க. அப்படி என்ன பண்ணான் அவன் உங்களுக்கு. எனக்கு தெரிஞ்சு அவன் முதல்ல உங்ககிட்ட எப்படி பேசினானோ கிளம்பற வரை அப்படியே தான் இருந்தான்”
“நீங்க தான் வித்தியாசமா இருக்கீங்க?? என்னன்னு சொல்லுங்க??”என்றாள் கூர் பார்வையோடு.
“நீ இந்த பேச்சை விடமாட்டியா?? நான் இதை பேசுற மூட்ல இப்போ இல்லை” என்றவன் அவள் மீதான பார்வையை விலக்க முடியாது எங்கெங்கோ பார்வையை திருப்ப முனைந்தான்.
“என்னைப் பாருங்க” என்று சொல்லி அவன் தாடையை பற்றி தன் புறம் திருப்பினாள். அவன் கண்ணோடு கண் நோக்கி “இப்போ நீங்க சொல்றீங்க??” என்றாள் அழுத்தமாய்.
“என்ன தெரியும் உனக்கு இப்போ??”
“நான் என்ன கேட்டேன்னு உங்களுக்கு தெரியாதா??” என்றாள் முறைத்தவாறே.
“சொல்றேன்”
————
அருளாசினிக்கு வலி கண்டதும் அர்ஜுன் தானே வண்டி எடுப்பதாக சொல்லி வெளியேறியிருக்க ஆருத்ரன் தன் மனைவியை தூக்கி வந்தான்.
அர்ஜுன் ஆருத்ரனின் வண்டியை விடுத்து அவன் வண்டியை எடுத்து வந்திருந்தான். ஒரு கணம் ஆருத்ரனுக்குள் ‘இவன் வண்டியில ஏறலாமா’ என்று தான் ஓடியது.
“என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்க அவளை வண்டியில ஏத்து” என்று கத்தினான் அர்ஜுன்.
“ஹ்ம்ம்” என்றவன் “என் வண்டி அங்க தான் இருக்கு, அதை எடுக்கலாமே”
“இந்த நேரத்துல எந்த வண்டியை எடுத்தா என்ன??” என்று சிடுசிடுத்தான் மற்றவன்.
அதன் பின் ஒன்றும் சொல்லாமல் அருளாசினியை வண்டியில் ஏற்றியவன் தானும் அவளருகில் அமர்ந்துக் கொண்டான்.
ஒரு வகையில் அர்ஜுன் அங்கு இருந்ததும் நல்லதாகத் தான் தோன்றியது அவனுக்கு. பின்னே தெரியாத ஊர் தமிழ் பேசுபவர்கள் இருந்தாலும் கன்னடம் கலந்து பேசும் தமிழ் அவனுக்கு சரியாய் விளங்கவில்லை. தவிர மருத்துவமனை தேடி அலைய வேண்டும் என்று இவன் யோசித்துக் கொண்டிருக்க வண்டி ஆளே இல்லாத சாலையில் சென்றுக் கொண்டிருந்தது.
‘இவனை நம்பி ஏறிட்டோமே??’ என்று மீண்டும் தோன்றியது ஆருத்ரனுக்கு. அதை அவனிடத்தில் கேட்கவும் செய்தான்.
அருளாசினி ஆருத்ரனின் மீது சாய்ந்திருந்தவள் அப்படியே கண் மூடி மெல்ல உறக்க நிலைக்கு சென்றுக் கொண்டிருந்தாள். கார் அந்த நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்ததில் முகத்தில் மோதிய காற்று அவளை உறங்க வைத்துக் கொண்டிருந்தது தன் நிலையையும் மீறி.
“அர்ஜுன் நீ ஆஸ்பிட்டல்க்கு தான் போறியா??”
“ஏன் அப்படி கேட்கறே??”
“உன்னை நம்பி ஏறிட்டேன். இது எங்க வாழ்க்கை அர்ஜுன் ப்ளீஸ் அதுல விளையாடிடாத”
“அவ என்னோட பிரண்டு”
“அவ என்னோட மனைவி”
“அதுக்கென்ன இப்போ??”
“ஆஸ்பிட்டல்??”
“அங்க தான் கூட்டிட்டு போறேன். எவ்வளவு நல்ல எண்ணம் உனக்கு என்னைப் பத்தி. அருளை எனக்கும் பிடிக்கும். இதுக்கு மேல ஏதாச்சும் பேசினே அவ்வளவு தான்” என்று முறைத்தவன் ஒரு வழியாய் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்.
அதன் பின்னே தான் ஆருத்ரனுக்கு மூச்சே வந்தது. அர்ஜுன் முதலில் இறங்கியவன் உள்ளே சென்று நிலைமையை சொல்லி ஸ்ட்ரெச்சர் எடுத்துவர ஏற்பாடு செய்திருக்க அது வரவும் அருளாசினியை அதில் படுக்க வைத்தனர்.
ஆருத்ரன் அப்போது தான் கவனித்தான். வண்டி முழுதும் நனைந்திருந்தது. கீழேயெல்லாம் ஈரம் தான். “சாரி அர்ஜுன்” என்று அவன் சொல்ல புரியாது விழித்தவனோ ஆருத்ரன் பார்வை போன திக்கைக் கண்டு தானும் திரும்பி பார்த்தான்.
பின் மீண்டும் ஆருத்ரனை பார்த்து முறைத்தவன் “உன் சாரி ஒண்ணும் எனக்கு தேவையில்லை. உள்ள உன்னை தான் தேடுவாங்க, முதல்ல போ” என்று அவனை விரட்ட அருளாசினியின் பின்னே சென்றிருந்தான் ஆருத்ரன்.
குழந்தை பிறந்த பிறகு குழந்தையை குளிப்பாட்ட எடுத்துச் சென்றிருக்க அந்த நேரத்தில் உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ரனின் விழிகளில் அர்ஜுன் ஏதோ குனிந்து செய்வது கண்ணில்ப்பட்டது.
‘இவன் என்ன பண்றான்’ என்று யோசித்துக்கொண்டே அவன் வாயிலுக்கு வர அவன் வண்டியை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் ஆருத்ரனின் இதயத்துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது.
வேகமாய் அவனருகே சென்றவன் “அர்ஜுன் என்ன பண்றே நீ?? விடு அதை வாட்டர் வாஷ் கொடுத்துக்கலாம், நீ ஏன் இதெல்லாம் பண்றே??”
“ஏன் செஞ்சா என்ன?? கீழே ஈரமா இருக்குல அதை தான் துடைச்சுவிட்டேன்”
“வேணாம் விடு”
“இதில என்ன இருக்கு”
“நான் வேணா உனக்கு வேற கார் வாங்கி கொடுத்திடட்டுமா??”
“அப்படியே ஒரு ஏரோப்ளேனும் சேர்த்து வாங்கிக் கொடுத்திடேன்” என்றான் அர்ஜுன் நக்கலாய்.
“நான் நிஜமா தான் சொல்றேன்”
“ஒண்ணும் தேவையில்லை”
“இல்லை அர்ஜுன் இதெல்லாம், கொடு நான் கிளீன் பண்றேன்” என்று அவனிடமிருந்த துணியை கைப்பற்றப் போக அவன் கையை பின்னால் இழுத்தான்.
“எதுக்கு இப்படி பண்றே?? விடு அவளுக்கு நான் செய்ய மாட்டேனா இதெல்லாம். எனக்காக அவ எவ்வளவோ செஞ்சிருக்கா. அம்மாகிட்ட அடிவாங்கிட்டு சாப்பிடாம இருப்பேன். அவங்க வீட்டில தான் என்னை சாப்பிட வைப்பா”

“எத்தனையோ நாள் அவங்க வீட்டிலவே படுத்து தூங்கியிருக்கேன். அவங்கப்பான்னா எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும். நான் ஒரு பக்கம் அவ ஒரு பக்கம் படுத்துக்குவோம். ஒரு நாள் நைட் தூக்கத்துல பாத்ரூம் போயிட்டேன்” என்றவனுக்கு இதெல்லாம் ஏன் இவன்கிட்ட சொல்றோம் என்று தோன்றிவிட “இப்போ என்ன வேணும் உனக்கு போ பேசாம. வண்டியை நான் வாட்டர் வாஷ் விட்டுக்கறேன். நீ போ குழந்தையை பாரு, நான் கடைக்கு போயிட்டு வர்றேன்” என்று கிளம்பிவிட்டிருந்தான்.

Advertisement