Advertisement

45
லோகு வண்டியை நிறுத்தியது தான் தாமதம் அன்னப்பூரணி வண்டியில் இருந்து குதிக்காத குறையாகத் தான் இறங்கினார். அவருக்கு தன் பேத்தியையும் அருளாசினியையும் காணும் ஆவல்.
தன் உடம்பை கூட பொருட்படுத்தாது வேகமாக அவர் வர எதிரில் ஆருத்ரன் அவரை எதிர்க்கொண்டான். “அம்மா பொறுமையா வாங்க” என்று சொல்ல “அடப்போடா” என்றவர் அவனைத் தாண்டிக் கொண்டு சென்றார்.
சட்டென்று திரும்பி “எந்த ரூமு??” என்று அவர் கேட்டது அவனுக்கு என்னவோ போலிருக்க “நீங்க நிக்கற ரூம் தான் உள்ள போங்க” என்று அவன் சொல்லி முடிப்பதற்கும் அருளாசினி “அத்தை” என்று அழைக்கவும் சரியாக இருந்தது.
“அருளு…” என்றவர் முதலில் அவளைத் தாவி அணைத்துக் கொண்டார். அவர் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அவளைப் பார்க்கும் வரையில் அவர் அவராகவே இல்லையே.
“அத்தை நான் நல்லா தான் இருக்கேன் அழாதீங்க. எனக்கும் அழுகை வருது” என்றவள் சொன்னப் பின்னே தான் அவர் கண்ணீர் குறைந்தது.
“உங்க பேத்தியை பார்க்கலையா நீங்க, நேரா என்கிட்ட வந்துட்டீங்க” என்றாள் சிரித்துக் கொண்டே, மெல்ல அவளிடமிருந்து விலகினார் அவர்.
“நீ தான் முதல்ல…” என்று நன்றாக கண்ணீரை துடைத்துக் கொண்டவர் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த பேத்தியின் புறம் சென்றார்.
குழந்தையை வாரியணைத்துக் கொண்டார், மீண்டும் கண்களில் கண்ணீர். ஆருத்ரன் அவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படி இப்படியொரு அன்பு என்று சற்று பொறாமையாகக் கூட இருந்தது அவனுக்கு.
“இவன் ரொம்ப மோசம் அருளு. உன்னை பார்க்கணும்ன்னு நான் அங்க தவியா தவிச்சுட்டு இருக்கேன். எப்போ வரவைச்சு இருக்கான் பாரு” என்று மகனை போட்டுக் கொடுத்தார் மருமகளிடத்தில். அவளும் பின்னால் நின்றிருந்த ஆருத்ரனை தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஆமா ருத்ரா இதென்ன ஊருடா பேரே வாய்ல நுழைய மாட்டேங்குது. வர்றதுக்குள்ள என் இடுப்பே போச்சு, எவ்வளவு தூரம்” என்றார் அவர்.
“அம்மா நான் அதுக்காக தான் சொன்னேன் உங்களை வரவேண்டாம்ன்னு. ஆசினியை கூட்டிட்டு நானே வந்திடலாம்ன்னு பார்த்தேன். நீங்க நேத்து அடம் பிடிக்கவும் தான் வரச்சொன்னேன்” என்றான்.
அன்னப்பூரணியின் கையில் இருந்த அவரின் பேத்தி அவர் மேல் பன்னீரை தெளித்திருந்தாள். “பாருடா என் பேத்தியை என்னைய வரவேற்கிறா”
‘இவங்க என்ன சொல்றாங்க’ என்று அவன் பார்க்க “அத்தை அவ இப்படித்தான் அடிக்கடி பாத்ரூம் போறா” என்று அருளாசினி சொல்லவும் தான் அவனுக்கு புரிந்தது.
“குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும் அருளு” என்றவர் பேத்தியின் துணியை மாற்றினார்.
மஞ்சுளாம்மா அப்போது தான் அவளுக்கு உணவெடுத்துக் கொண்டு வந்தார். அன்னப்பூரணியை கண்டு சற்று தயங்கி அவர் நிற்க “மஞ்சும்மா உள்ள வாங்க. அவங்க என்னோட அத்தை” என்று அறிமுகம் செய்தாள் அருளாசினி.
“வணக்கம்மா” என்றார் மஞ்சுளா.
“அத்தை இவங்க மஞ்சும்மா என்னை இவங்க தான் பார்த்துக்கிட்டாங்க. இப்பவும் பார்த்துக்கறாங்க” என்றாள் அவள்.
குழந்தையை மருமகளிடம் கொடுத்து பசியாற்ற சொல்லிவிட்டு மஞ்சுளாம்மாவின் அருகில் வந்த அன்னப்பூரணி அவர் கையை பிடித்துக் கொண்டு “ரொம்ப நன்றிம்மா ருத்ரன் சொன்னான். நீங்க தான் அருளை பார்த்துக்கறீங்கன்னு” என்று மனமார நன்றி கூறினார்.
மஞ்சுளாம்மாவுக்கு ஆச்சரியம் தான் இப்படியும் ஒரு மாமியாரா, மருமகள் மேல் எவ்வளவு பாசம் என்று அருளாசினி அவரைக் குறித்து பேசியதில் எந்த தவறுமில்லை என்று தான் தோன்றியது.
ஆருத்ரன் மருத்துவரை பார்க்கச் சென்றிருந்தான் டிஸ்சார்ஜ் குறித்து பேசுவதற்காய். “உட்காருங்க” என்று அவர் இருக்கையை காட்ட அமர்ந்தவன் “டாக்டர்”
“சொல்லுங்க டிஸ்சார்ஜ்க்கு தான் ஓகே சொல்லிட்டனே அப்புறமென்ன??”
“அதில்லை டாக்டர் நாங்க அவளை சென்னைக்கு கூட்டிட்டு போறோம். போகலாமா அதைக் கேட்கத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”
“உங்க வீடு எங்க இருக்கு??”
“சென்னையில”
“அப்போ அவங்க அம்மா வீடு இங்க இருக்கா அதான் இங்க வந்தீங்களா??” என்றார் அவர்.
“இல்லை டாக்டர் அவளுக்கு யாருமில்லை”
“சாரி, இந்த ஊர்க்கு எதுக்கு வந்தீங்க… உங்க பர்சனல் கேட்கறேன்னு நினைக்க வேண்டாம் சொல்றதுன்னா சொல்லுங்க”
ஆருத்ரன் யோசித்தவன் “இங்க அவளோட பிரண்ட் அம்மா இருக்காங்க. அவங்க சீமந்தம் முடிஞ்சு அவளை இங்க கூட்டிட்டு வந்தாங்க. அவளுக்கு யாருமில்லைல அந்த குறை தெரியக் கூடாதுன்னு அவங்க தான் பார்த்துக்கிட்டாங்க”
“எங்களாலையும் அப்போ மறுக்க முடியலை. இதுக்கு மேலயும் அவங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாதுல அதான் ஊருக்கு கிளம்பறோம்” என்றான் சமாளிப்பாய்.
“ஓ” என்றவர் யோசித்தார். “தையல் போட்டிருக்கோம், அதை பிரிக்க வேண்டியது இல்லை அதுவா உதிர்ந்திரும். ஹ்ம்ம் ஒரு பத்து நாள் கழிச்சு கிளம்ப முடியாதா” என்றார் அவர்.
ஆருத்ரன் யோசிப்பதைக் கண்டவர் “சரி ஒரு ரெண்டு நாள் மட்டும் இருங்க”
“இங்கவே இருக்கலாமா??”
“இங்கயா அப்போ டிஸ்சார்ஜ் வேணாமா??”
“இல்லை அவங்களுக்கு…” என்று இவன் இழுக்கவும் அர்ஜுன் கதவைத்தட்டி உள்ளே வந்தான்.
“டாக்டர் அவங்க இருப்பாங்க ரெண்டு நாள் தானே. ஒண்ணும் பிரச்சனையில்லை எங்கம்மா பார்த்துப்பாங்க” என்றான் அவன்.
“இவர் தான் நீங்க சொன்ன பிரண்டா??” என்றார் மருத்துவர்.
ஆருத்ரன் மெல்ல தலையசைத்தான். “சரி அப்போ நீங்க ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு கிளம்புங்க. கிளம்ப முன்னாடி இங்க வந்து என்னை பார்த்திடுங்க. தையல் ஆறியிருக்கான்னு நான் ஒரு டைம் பார்த்துக்கறேன்”
“அப்புறம் நீங்க ஊருக்கு கூட்டிட்டு கிளம்புங்க. கவனமா கூட்டிட்டு போங்க, அங்க போனதும் உங்க டாக்டர்கிட்ட ஒன்ஸ் காட்டிருங்க” என்று அவனுக்கு சில பல ஆலோசனைகள் சொல்ல அங்கிருந்து கிளம்பினான் அவன்.
வெளியில் வந்த ஆருத்ரன் “இங்க பக்கத்துல ஹோட்டல் இருக்குமா” என்றான்.
“எதுக்கு??”
“ஸ்டே பண்ணத்தான் வேற எதுக்கு கேட்பாங்க”
“அதுக்கு ஒண்ணும் அவசியமில்லை, ஒழுங்கா வீட்டுக்கு கூட்டிட்டு வா. ரெண்டு நாள் தானே அங்க இருந்துட்டு கிளம்புங்க”
“வேணாம்…”
“சொன்னா புரியாதா உனக்கு”
ஆருத்ரனுக்கு அங்கிருக்க விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை அது கர்நாடகாவின் எல்லையில் அமைந்திருந்த ஒரு ஊர். எங்கோ செல்வதற்கு அதுவே மேல் என்று தோன்றியது.
ஆசினியிடமும் சொல்ல அவளும் அவனைப் போலவே மறுத்தாள். அவளை சமாளித்து அர்ஜுன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள். ஒரு வழியாக இரண்டு நாட்கள் கடந்திருக்க அங்கிருந்து கிளம்பினார்கள். அர்ஜுன் அவர்கள் அங்கிருந்தவரை அவர்கள் கண்ணிலேயே படவில்லை.
அவனுக்கு அன்னப்பூரணியை பார்க்கவே பயமாக இருந்தது. மருத்துவமனையில் அவரை தூரத்தில் பார்த்ததுமே இவரா ருத்ரன் அம்மா என்று தான் பார்த்தான். அவர் உருவமும் அப்படி ஆளை அடித்துவிடுவாரோ என்று தானே இருக்கும்.
என்ன இருந்தாலும் அவங்க அம்மா அவங்க எதுவும் சொல்லிட்டா என்று நிஜமாகவே அவனுக்கு பயமாக இருந்தது. 
ஆனால் அவர்கள் ஊருக்கும் கிளம்பும் போது வராமல் இருக்க முடியாதே. இதோ வந்து நின்றுவிட்டான். ஆருத்ரனும் போன் செய்திருந்தான் நேரில் வரச்சொல்லி.
“அர்ஜுன் நான் சொன்னதெல்லாம் மனசுல இருக்கட்டும் நாங்க கிளம்பறோம்” என்றாள் அருளாசினி. அவளை முறைத்தான் அர்ஜுன். போடா என்று பதில் பார்வை வீசினாள் அவள்.
அன்னப்பூரணி அவன் கையை பிடித்துக்கொண்டு நன்றி சொன்னார். “அய்யோ அம்மா நீங்க என் கையை பிடிச்சு நன்றி சொல்றதா. நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை” என்றான்.
“உன்னை அடிக்கணும்ன்னு எனக்கும் கோபம் தான் ஆனா இப்போ இல்லைப்பா” என்றார் அவர்.
‘இதென்ன’ என்று தான் பார்த்தான் அவன். அவன் மட்டுமில்லை அருளாசினியும் அப்படித்தான் பார்த்தாள். ‘என்னடா ஆச்சு அம்மாக்கும் பிள்ளைக்கும் தாம் தூம்ன்னு எல்லாத்துக்கும் குதிப்பாங்க இதுக்கு மட்டும் ஒண்ணும் சொல்லாம இருக்காங்க. ரெண்டு பேருக்கும் நான் காணாம போனதுல மறை கழண்டு இருக்குமோ’ என்று தான் எண்ண வைத்தது.
மஞ்சுளாவிற்கு மீண்டும் நன்றி சொல்லி அங்கிருந்து அனைவரும் கிளம்ப ஆருத்ரன் மட்டும் தேங்கினான்.
‘இவன் எதுக்கு இங்க நிக்கறான் கூட போகாம’ என்று யோசித்தான் அர்ஜுன்.
ஆருத்ரன் தன் பர்ஸில் இருந்து சில இரண்டாயிரம் தாள்களை எடுத்து அர்ஜுனின் முன் நீட்டினான். “வாங்கிக்கோ”
“எதுக்கு??”
“என்னோட பொண்டாட்டி இங்க இருந்ததுக்கு”
“என்ன பிச்சை போடுறியா??”
“இல்லை என் மனைவிக்கு நான் தானே செய்யணும்”
“ஒழுங்கா போய்டு கடுப்பாகிடுவேன்”
“என்ன வேணா ஆகிக்கோ எனக்கு அதைப்பத்தி எதுவுமில்லை. அவளுக்கு நீ சாப்பாடு போட்டேன்னு இருக்க வேணாம்” என்றவன் அங்கிருந்த மேஜையில் அந்த காசை வைத்திருந்தான்.
அர்ஜுன் முகம் இறுகியிருந்தது ருத்ரனின் செயலில். ‘போடா பெரிய இவன்’ என்று ஆருத்ரனை மனதிற்குள் தாளித்துக் கொண்டவன் “அருள்” என்று சென்றுக் கொண்டிருந்தவளை நிறுத்தினான்.
அவள் என்னவென்று நின்று திரும்பிப் பார்க்க அவளருகே வந்தவன் பாக்கெட்டில் வைத்திருந்ததை வெளியில் எடுத்தான். அது ஒரு நகைப்பெட்டி அதை திறந்தவன் அதிலிருந்த செயினை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட போக “ஹே என்ன இதெல்லாம்” என்று குழந்தையை சற்று தள்ளிப் பிடித்தாள் அவள்.
“என்னன்னு தெரியாதா செயின்”
“அதெல்லாம் வேணாம்”
“ஏன்?? ஏன் வேணாம்??”
“எதுக்கு இதெல்லாம்”
“உனக்கொண்ணும் போடலை, பேபிக்காக போட்டேன். வேணாம்ன்னா அம்மாக்கு போன் பண்ணித்தர்றேன் நீயே சொல்லிடு”
“அப்போ நீ எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லிட்டியா என்ன??” என்றாள் அவள் நக்கல் குரலில். அதில் அவன் முகம் சிறுக்கத்தான் செய்தது.
“ஆசினி” என்றான் ஆருத்ரன் அழுத்தமான குரலில். அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க விடு என்றான் அவன் பார்வையாலே.
“இதை அம்மா போட சொன்னாங்க போட்டேன். நீ என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ”
“அம்மாவை நேர்ல வந்து கொடுக்கச் சொல்லு” என்றவள் அதை மறுத்து நகர அர்ஜுன் முகம் மொத்தமாய் விழுந்தது.
எப்படியும் இதை அவளிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாய் ஆருத்ரனை நெருங்கியவன் அதை அவன் கையில் சட்டையில் திணித்துவிட்டான். “அர்ஜுன்” என்றான் ஆருத்ரன்.
“நீ எதுவும் பேச வேணாம்”
“நான் தான் பேசிட்டேன்ல உன்கிட்ட, கிளம்புற நேரத்துல வம்பு பண்ணாத” என்றவள் ஆருத்ரனை நெருங்கி அந்த பெட்டியை எடுத்தவள் அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு திரும்பியும் பாராமல் வண்டியில் ஏறிவிட்டாள்.
அவர்கள் வீடு வந்து சேர இரவாகிப் போனது. அருளாசினிக்கு கஷ்டமாக இருக்குமோ என்று அவ்வப்போது கிடைக்கும் இடத்தில் எல்லாம் இறங்கி சற்று இளைப்பாறி என்று வந்ததில் அவ்வளவு தாமதமாகிப் போயிருந்தது.
வாசலில் வண்டி வந்து நிற்கவும் தாமரை ஆலம் கரைத்து எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்து நிற்கவும் ஆருத்ரன் தன் அன்னையைப் பார்த்தான். தமக்கை வந்திருப்பது பற்றி அவர் ஒன்றும் சொல்லியிருக்கவில்லை அது நேரம் வரை. அருளாசினிக்கும் ஆச்சரியம் தான். தாமரையின் முகம் பார்க்கும் போதே புரிந்தது அவள் மனதார தான் மற்றவளுக்கு ஆலம் சுற்றுகிறாள் என்று.
“அக்கா நான் ஊருக்கு கிளம்ப முதல் நாள் தான் வந்தா??”
“ஏன்மா சொல்லலை??”
“நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை ருத்ரா. அக்கா மாறியிருக்கறதை நேர்ல பார்த்தா புரிஞ்சுக்குவீங்கன்னு தான் நான் எதுவும் சொல்லலை” என்றார் அவர்.
“அக்கா எப்படியிருந்தாலும் எனக்கு அக்கா இல்லைன்னு ஆகிடுமா. அக்காவை அதோட நிறை குறையோட நான் ஏத்துக்க மாட்டேனா??” என்றான் மகன் ஆதங்கமாய்.
“உள்ளே போய் பேசிக்கலாம் ருத்ரா அம்மாவை திட்டாதே. நான் தான் சர்பிரைஸா இருக்கட்டும்ன்னு சொல்லிட்டேன்” என்று அவர்கள் பேச்சை கவனித்து பதில் கொடுத்தாள் தாமரை.
———
“எதுக்கு நீங்க அவனை சும்மா விட்டீங்க?? எனக்கு பதில் தெரிஞ்சாகணும்” என்று ஆருத்ரனை கேட்டுக் கொண்டிருந்தாள் அருளாசினி.

Advertisement