Advertisement

44
“நான் உன்னை என்ன பண்ணிட்டேன். என்னமோ கொடுமை படுத்துன மாதிரி பேசறே?? நல்லாத்தானே பார்த்துக்கிட்டேன். உனக்காக மஞ்சும்மாவை டெல்லில இருந்து வரவைச்சேன். என்னை நீ பேசுவியா” என்றான் கோபமாய்.
“நீ செஞ்சது சரின்னு இப்பவும் சொல்றியா??”
அதற்கு அவனிடத்தில் பதிலில்லை, பேசாமல் அமர்ந்திருந்தான். “என்ன அமைதியா இருக்கே பதில் சொல்ல முடியலைல”
“இப்போ என்ன வேணும் உனக்கு?? என்னை திட்டுறதுக்கு தான் கூப்பிட்டியா?? நான் ஒண்ணும் உன் புருஷன் இல்லை திட்டுறதுக்கு”
“எருமை எருமை பேச்சைப் பாரு. அவரை ஏன்டா நான் திட்டணும், அவர் என்ன உன்னை மாதிரி என்னை கடத்திட்டு வைச்சுட்டு இருந்தாரா”
“ஆமாமாம் அவன் உலக மகா யோக்கியன் கடத்திலாம் வைக்க மாட்டான். ஆனா உன்னோட சூழ்நிலையை பயன்படுத்தி கல்யாணமே பண்ணிக்குவான். அவன் நல்லவன் நான் கெட்டவன் தான்” என்றான் அவன்.
அருளாசினிக்கு சுர்ரென்று கோபம் ஏறியது. “இதுக்கு மேலே அவரைப்பத்தி ஏதாச்சும் பேசினே அவ்வளவுதான் சொல்லிட்டேன்”
“அப்போ நீ என்னைப்பத்தி பேசாத”
“பேசுவேன் ஏன்னா அவர் பேச மாட்டேங்குறார் அதான் நான் பேசறேன். எனக்கு புரியலை அவர் ஏன் உன்னை எதுவும் செய்யலைன்னு”
“என்ன பயமுறுத்தறியா அவன் என்ன பெரிய சண்டியனா. என்னமோ பூச்சாண்டி காட்டி பயமுறுத்தற மாதிரி பண்ணுறே??”
“என்கிட்ட வம்பு பண்ணின வருண் அடிவாங்கினது உனக்கு தெரியாது. அவர்க்கு கை அதிகம் பேசும் வாய் பேசாது”
“ஷப்பா புருஷனுக்கு என்னா பில்டப்பு” என்றான் அவன் அப்போதும்.
“உன் விஷயத்துல என்னன்னு எனக்கும் புரியலை” என்றாள் இன்னமும் யோசனையோடு.
“வருண்??”
“அப்போவே அனுப்பிட்டேன்”
“அவனை நீ தேவையில்லாம இதுல இழுத்திருக்க வேணாம்”
“அவன் ரொம்ப நல்லவன் பாரு. நீங்க வீட்டில இல்லாத நேரம் உங்க வீட்டுக்கு வந்தான் உன்னைத் தேடி. அவனை கூப்பிட்டு விசாரிச்சா லூசு மாதிரி பேசிட்டு இருந்தான். உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன் அது இதுன்னு”
“உன்னை மாதிரின்னு சொல்லு”
“என்னை அவனோட சேர்த்து பேசாத”
“பேசுவேன் நீயும் என்கிட்ட அப்படித்தானே பேசுனே??”
அப்போது தான் வீட்டில் இருந்து வந்திருந்த மஞ்சும்மா உள்ளே வந்து பையை வைத்துவிட்டு இருவரையும் பார்த்தார். “அம்மா மெதுவா பேசுடா, தையல் போட்டிருக்கு கவனமா இருக்கணும்” என்றார் அவளிடம்.
அவரிடம் அவள் தலையாட்ட அவர் குழந்தையை எட்டி பார்த்தார். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். பின் வெளியே சென்றுவிட்டார் அவர்.
“நம்ம அப்புறம் பேசிக்கலாம் நான் கிளம்பறேன்” என்று எழுந்தான் அர்ஜுன்.
“உட்காரு”
“சொல்றேன்ல”
“நானும் உன்கிட்ட சொல்லிட்டு தான் இருக்கேன் உட்காரு” என்று அவள் சொல்ல அமர்ந்தான்.
“இன்னும் என்ன??”
“என்னாச்சு அர்ஜுன் உனக்கு எதுக்கு இப்படி நடந்துக்கறே??” என்றாள் தன்மையாகவே.
“அவன் என் வழியில வராம இருந்தா நான் ஏன் இதெல்லாம் செய்யப் போறேன்”
“நிஜமாவே நீ லூசு தான்டா”
“ஏய்”
“கோபம் மட்டும் ஊருக்கு முன்ன வருது. அவருக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்டா அவர் டெல்லில இருந்து வந்த பிறகு எவ்வளவோ வருஷம் கழிச்சு இப்போ தானே திரும்பவும் இந்த வேலை எடுத்து பண்ணுறார். அப்போ நீ என்ன பண்ணிட்டு இருந்தே”
“அப்போ எல்லாம் என் வேலை நல்லா தான் போயிட்டு இருந்துச்சு”
“அப்போ எல்லாம் உனக்கு எந்த ப்ராஜெக்ட்டும் போகலையா”
“அதெல்லாம் எதுக்கு உனக்கு”
“சொல்லு சொல்றேன்”
“ஒண்ணு ரெண்டு போகத்தான் செய்யும். அதெல்லாம் தொழில்ல இருக்கறது தானே”
“இந்த அறிவு மட்டும் அவர் விஷயத்துல உனக்கு வேலை செய்யாதா. அவரும் அதே தொழில் தானே செய்யறாரு”
“நீ பேசாத எப்போ பார்த்தாலும் அவனுக்கு சப்போர்ட் பண்ணுறே” என்று இருக்கையில் இருந்து எழுந்து கத்த வெளியில் இருந்து மஞ்சுளாம்மா எட்டிப் பார்த்தார். அதில் அடங்கியவன் மீண்டும் அமர்ந்தான்.
“தன்னோட திறமை மேல நம்பிக்கை இல்லாதவன் தான் இப்படி எல்லாம் யோசிப்பான்” என்று குத்தினாள் அவள்.
“உன் புருஷனோட திறமையை தெரிஞ்சவனும் இப்படி யோசிப்பான்”என்றான் அவன் பதிலுக்கு.
‘இதென்ன பாராட்டா இல்லை பொறாமையா’ என்று தான் தோன்றியது அவளுக்கு.
“எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே” என்றாள் சம்மந்தமேயில்லாமல்.
“என் கல்யாணத்தை பத்தி உனக்கென்ன கவலை”
“கேட்டதுக்கு பதில் சொல்லு”
“உனக்கெதுக்கு நான் பதில் சொல்லணும்”
“சொல்லாத போ, நான் உங்கம்மாகிட்ட பேசிக்கறேன்”
“எதுக்கு அவங்க என்னை பேசியே கொல்லவா”
“அப்போ நீயே சொல்லு”
“எனக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லை”
“ஏன்??”
“ஏன்னு தான் முன்னாடியே சொல்லிட்டனே அப்புறம் என்ன கேள்வி. உங்கப்பா தான் என்னை வேணாம்ன்னு சொல்லிட்டாரே அப்புறமென்ன” என்று எரிந்து விழுந்தான்.
“எங்கப்பாக்கு நான் உன்னை எப்படி நினைக்கிறேன்னு தெரிஞ்சிருக்கு அதான் அப்படி சொல்லியிருக்கார். நீ என்னை நினைச்சுட்டு தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கியா” என்று அவள் கேட்கவும் அப்படியில்லை என்று அவன் மனம் சொன்னது. அதை சொல்லவும் செய்தான்.
“அப்படியெல்லாம் இல்லை எனக்கு பண்ணிக்கணும்ன்னு தோணலை”
“உங்கம்மா பொண்ணு பார்க்கலையா”
“பார்த்தாங்க எந்த பொண்ணும் என் மனசுக்கு பிடிக்கலை”
“ஏன்??”
“ஏன்னு எல்லாம் தெரியாது”
“ஒரு வேளை உன்னை யாரும் ரிஜெக்ட் பண்ணிட்டாங்களோ”
“என்னை யாரு ரிஜெக்ட் பண்ணுவா. நான் தான் வேணாம்ன்னு மறுத்தேன்”
“நீ ரிஜெக்ட் பண்ணலாம் அவங்க பண்ணக்கூடாதா என்ன”
“அதுக்கென்ன அவசியம் இருக்கு எனக்கென்ன குறை. நல்லாத்தானே இருக்கேன். நல்லா சம்பாதிக்கறேன்”
“இதெல்லாம் போதுமா ஒரு பொண்ணுக்கு”
“வேற என்ன வேணும்”
“நீ சரியில்லையே என்னை கடத்தி எல்லாம் வைச்சு நீ பண்ணது தெரிஞ்சா ஒரு பொண்ணும் உன்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டா”
“போதும் நிறுத்து, கடத்துனேன்னு இனிமே சொல்லாத”
“சரி சொல்லு என்னை நீ லவ் பண்ணியா??”
“லூசா நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுட்டு இருக்கே. அதான் சொன்னேன்ல”
“உனக்கு என் மேல இருந்தது லவ் இல்லை” என்று அவள் சொல்லவும் முறைத்தான் அவன்.
“எதுக்கு முறைக்கிறே?? நான் சொன்னது உண்மை தான். நாம நினைப்போம்ல இது போல பொண்ணு நமக்கு அமைஞ்சா நல்லா இருக்கும். இது போல ஒருத்தன் நமக்கு புருஷனா வரணும்ன்னு யோசிப்போம்ல. நீயும் அப்படித்தான் நினைச்சிருக்கே”
அப்படியும் இருக்கலாம் என்று இப்போது தோன்றியது அவனுக்கு. எதுவும் பேசாமல் இருந்தான்.
“நீ பார்த்த பொண்ணுங்கல்ல என்னோட சாயலை தேடியிருக்க அதான் எந்த பொண்ணும் உனக்கு பிடிக்கலை”
“ஒருத்தரோட சாயல்ல இன்னொருத்தர் இருக்கலாம். அவங்க இவங்களாக முடியாது, இவங்க அவங்களாக முடியாது. எல்லாருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். இனிமே அப்படிப் பாரு பொண்ணை”
“முடிச்சிட்டியா நான் கிளம்பறேன்” என்றான் அவன் சிடுசிடுப்பாய்.
“முடிக்கலை உனக்கு கல்யாணம் ஆகிட்டா குடும்பம்ன்னா என்னன்னு புரியும். அப்போ இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய மாட்டே அதுக்கு தான் சொன்னேன்”
அர்ஜுன் பல்லைக் கடித்தான் அவள் சொல்லச்சொல்ல. “சரி பல்லை கடிக்கற கடியில கொட்டிட போகுது. பொக்கை வாய்ன்னு சொல்லி அப்புறம் யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க”
“யாரும் பொண்ணுக்காக தவம் கிடக்கலை”
“சரி கடைசியா ஒண்ணு, அவர் தொடர்ந்து இந்த தொழில்ல தான் இருப்பார் இனிமே” என்று அவள் சொல்ல அவன் முகம் இறுகியது.
“இந்த ப்ராஜெக்ட் அவர்…”
“விலகலை நான் விலக வைப்பேன்” என்றான் அவன்.
“அவர் தான் விட்டுக்கொடுக்கறேன்னு சொல்லிட்டார்ல அதுக்கு மேல நான் அதைப்பத்தி பேச மாட்டேன். அதை நீயே எடுத்துக்கோ”
“ஆனா எல்லாத்துக்கும் இனிமே விட்டுக்கொடுக்க மாட்டார். கொடுக்கவும் நான் விடமாட்டேன்”
“அவன் ஒண்ணும் எனக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம்”
“நீ என்ன எதிர்பார்க்கிறே அர்ஜுன்” என்று அவள் கேட்கும் போதே குழந்தை லேசாய் சிணுங்கி அழ ஆரம்பித்தாள்.
“குழந்தையை பாரு” என்று எழுந்தான் இங்கிதமாய்.
“உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு அர்ஜுன். அதை நியாயமான வழியில உபயோகப்படுத்து. உன் திறமை மேல நீ நம்பிக்கை வை. நீ ஜெயிப்ப, இதுவரைக்கும் எப்படி இருந்தியோ அப்படி இரு”
“போட்டி போடு பொறாமை வேணாம். உன்னோட திறமையை அவரை ஜெயிக்கறதுல காட்டு. நீ ஜெயிச்சாலும் நான் சந்தோசம் தான் படுவேன்” என்றாள் அவள்.
அவன் ஒன்றும் சொல்லாமல் வெளியேற ஆருத்ரனும் மஞ்சுளாம்மாவும் உள்ளே வந்தார்கள். ‘இவன் என்ன மாதிரி ஆளு’ என்று இந்த முறை யோசிப்பது அர்ஜுனின் முறையானது.
‘மனைவியை கடத்தியவனிடம் இவன் பொண்டாட்டி பேச்சு வார்த்தை நடத்துவாலாம் இவன் வெளியே காவல் காப்பானாம். நானெல்லாம் இப்படி இருக்கமாட்டேன்’ என்று எண்ணிக் கொண்டான் அவன்.
“ஆசினி அம்மா போன் பண்ணாங்க” என்றான்.
“என்ன சொன்னாங்க எப்போ வர்றாங்க அத்தை. நான் அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றாள் அருளாசினி, மஞ்சும்மாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டே
“ஏன்மா நான் உன்னை நல்லா பார்த்துக்க மாட்டேனா”
“மஞ்சும்மா நான் அப்படி சொல்லலை. அவங்க என்னோட அத்தை மட்டுமில்லை அம்மா மாதிரி. மாதிரி கூட இல்லை அம்மான்னு தான் சொல்லணும். குழந்தையை அவங்க பார்க்க எவ்வளவு ஆசையா இருந்தாங்கன்னு எனக்கு தான் தெரியும்” என்றாள்.
மஞ்சுளா அவர்களை தனியே விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். “அவங்க முகம் வாடிப்போச்சு” என்றான்.
“நான் தப்பா சொல்லலையே”
“இல்லை” என்றான்.
“அத்தை வர்றதுக்கு எதுக்கு இத்தனை நாள்”
“இல்லை நான் தான் வர வேணாம்ன்னு சொன்னேன். டாக்டர் உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிட்டா ஊருக்கு போய்டலாம் உடனேன்னு நினைச்சேன். அதான் பொறுங்கம்மான்னு சொல்லி அவங்களை நிறுத்தி வைச்சேன்”
“டாக்டர் இப்படி ரெண்டு நாளாக்குவாங்கன்னு எனக்கு தெரியாதே. அவங்க என்ன ஆனாலும் சரின்னு நேத்து நைட் கிளம்பறேன்னு சொன்னாங்க. நான் தான் காலையில கிளம்புங்கன்னு சொன்னேன். கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க”
“அர்ஜுன்கிட்ட பேசிட்ட போல, முகமே செத்து போச்சு அவனுக்கு. என்ன சொன்னே??”
“என்னமோ சொன்னேன்”
“ஏன் எனக்கு சொல்ல மாட்டியா??”
“உங்களை திட்டணும் வீட்டுக்கு வந்து திட்டிக்கறேன்” என்று முகம் திருப்பினாள் அவள்.
“இப்போவே திட்டு” என்றான் அவன்.
“போய்யா” என்று அவள் சொல்ல ஆருத்ரன் உல்லாசமாய் சிரித்தான். எதற்காய் அவள் திட்டப் போகிறாள் என்று அறிந்திருந்தவன் முகம் இன்னமும் சிரித்தது.

Advertisement