Advertisement

43
“என்ன மிசர்ஸ் அருளாசினி இன்னைக்கு உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாமா. உங்க ஹஸ்பன்ட் வேற தினம் என்னை பார்க்கும் போதே அதே தான் கேட்கிறார்” என்ற மருத்துவர் அவளின் உடலை நிலைய ஆராய்ந்தார்.
“பேபிக்கு பீட் பண்றீங்கல்ல” என்றார்.
“ஹ்ம்ம் பண்றேன் டாக்டர். அப்போ இன்னைக்கு என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்கல்ல”
“இந்த விஷயத்துல புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க. நான் டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி பண்ணச் சொல்றேன். அப்புறம் வந்து அவரை என்னைப் பார்க்கச் சொல்லுங்க” என்று அவர் நகரவும் ஆருத்ரன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
அவன் முகம் மருத்துவரை ஒரு எதிர்பார்ப்புடன் நோக்க “உங்க வைப்கிட்ட சொல்லிட்டேன், அப்புறம் வந்து பாருங்க” என்று நகர்ந்துவிட்டார் அவர்.
“என்ன சொன்னாங்க??” என்றவன் மனைவியின் மடியில் நித்திரை கொண்டிருந்த மகளின் மீது பாய்ந்தது.
“இன்னைக்கு அனுப்பிடறேன்னு சொன்னாங்க. இங்க இருந்து நேரா நம்ம வீட்டுக்கு தானே போறோம்”
“அதான் யோசிக்கறேன் அவ்வளவு தூரம் உன்னால டிராவல் பண்ண முடியுமான்னு. இந்த ஊரு ரொம்ப அவுட்டர் சிட்டில இருந்து”
“அப்போ என்ன பண்ணுறதா உத்தேசம்” என்றவளின் முகம் இறுகியிருந்தது.
“அம்மா வந்திடுவாங்க கொஞ்ச நேரத்துல வந்ததும் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம்” என்றவன் குழந்தையின் பிஞ்சு பாதத்தை வருடினான் மெல்ல. அப்பப்பா அவன் மகள் கொஞ்ச நஞ்ச பாடாய் படுத்தியிருந்தாள்.
பனிக்குடம் உடைந்து மருத்துவமனை வந்திருக்க மருத்துவர் வலி வந்துவிடட்டும் என்று சொல்லி சென்றிருக்க அருளாசினி தான் தவித்து போயிருந்தாள்.
ஆருத்ரனுக்கு கோபம் வந்துவிட்டது மருத்துவரை நன்றாக வைத்து வாங்கிவிட்டான். “எதுக்கு சார் இப்படி கத்துறீங்க. உங்க வைப் மட்டும் தான் குழந்தை பெத்துக்கறாங்கலா எல்லாருக்கும் தான் இங்க குழந்தை பிறக்குது”
“நாங்க எல்லாரையும் தான் பார்த்திட்டு இருக்கோம். எங்களுக்கு தெரியாதா என்ன பண்ணனும்ன்னு” என்று மருத்துவர் சலிப்பாய் சொல்லிவிட்டிருந்தார். அது ஆருத்ரனை உசுப்பிவிட இதென்ன பொறுப்பில்லாத பதில் என்ற எண்ணம் தான் அவனுக்கு.
“உங்களுக்கு வேணா எல்லாரும் ஒரே மாதிரி இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை அவ எனக்கு முக்கியம், அவளுக்கு ஒண்ணுன்னா நான் கேட்க தானே செய்வேன்”
“அவளுக்கு வலிக்குது அவ துடிக்கிறா என்ன பண்ணனும் பக்கத்துல இருந்து பாருங்க இல்லை ஆளுங்களை பார்க்கவாச்சும் சொல்லுங்க. அதைவிட்டு உங்க இஷ்டத்துக்கு பேசறீங்க” என்று இவன் பதிலுக்கு எகிற அந்த நேரம் தான் வந்தார் இன்னொரு மருத்துவர்.
“இங்க என்ன பிரச்சனை??” என்று அவர் கேட்கவும் முதலில் பார்த்த மருத்துவர் சற்று பயந்து பதில் சொல்வது போலிருந்தது அவரிடம்.
“அவர் சொல்றது சரி தானே. அவங்க வலி அவங்களுக்கு தானே தெரியும். அவர் தான் சேர்க்கும் போதே சொன்னாரே, அவங்க அம்மா வர்றதுக்கு நேரமாகும். யாராச்சும் கூட ஹெல்ப் பண்ணுங்கன்னு. அப்புறம் எதுக்கு இப்படி பண்றீங்க” என்று அந்த மருத்துவரை கடிந்தவர் தானே உள்ளே வந்து அருளாசினியை பார்த்தார்.
“பனிக்குடம் உடைஞ்சிடுச்சு கிட்டதட்ட உள்ள தண்ணியே இல்லை. அப்புறம் குழந்தை எப்படி இருக்கும் உள்ள. இன்னும் பெயின் வரும்ன்னு எதுக்கு வெயிட் பண்றீங்க, அவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இவங்களை ஆபரேஷன் தியேட்டர் ஷிப்ட் பண்ணுங்க” என்று சென்றிருந்தார் அவர்.
அடுத்த அரைமணி நேரத்தில் அருளாசினியை தயார் செய்து உள்ளே அழைத்துச் சென்றனர். அருளாசினி கலங்கிய விழிகளுடன் உள்ளே செல்ல ஆருத்ரனுக்கும் என்னவோ போலானது.
“எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்க. அதெல்லாம் உன் பொண்டாட்டி இப்போ வந்திடுவா, சும்மா பீல் பண்ணிட்டு இருக்காம குழந்தைக்கு தேவையானதை வாங்கிட்டு வர்றதுக்கு பாரு” என்றான் அர்ஜுன்.
அப்போது தான் அவனுக்கு அந்த நினைவே வந்தது. இந்த நேரத்தில் எப்படி வெளியே போவது என்றும் புரியவில்லை.
“பக்கத்துல தான் இருக்கு கடை. அவசரத்துக்கு எனக்கு தெரிஞ்சதை வாங்கிட்டு வந்தேன்” என்று ஒரு பையை நீட்ட ஆருத்ரன் பணத்தை எடுத்து நீட்டினார். அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவன் மீதியை அவனிடத்தில் கொடுத்தான்.
“இதுக்கு காசு எடுக்கலையே” என்று அதில் தனியே இருந்த மற்றொரு கவரை காட்டிக் கேட்டான். 
“அது நான் வாங்கினேன்னு கொடுத்திடு” என்றான் அவன் எங்கோ பார்த்துக் கொண்டு.
“நீயே கொடு” என்று அதை அவனிடமே நீட்டினான் மற்றவன். “அப்புறம் தேங்க்ஸ்”
“தேவையில்லை” என்றவன் கவரை அங்கிருந்தே சேரில் வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டான்.
ஆருத்ரனுக்கு இருப்பு கொள்ளவில்லை. என்னாகுமோ என்ற பதட்டம் கூடிக்கொண்டு தான் போனது இன்னும். நல்ல வேளையாக கதவை திறந்துக் கொண்டு செவிலியர் ஒருவர் குழந்தையுடன் வெளியே வரவும் தான் நிம்மதி பெருமூச்சு அவனிடத்தில்.
“பெண் குழந்தை சார்” என்றவர் குழந்தையை அவனிடத்தில் நீட்ட அதை எப்படி வாங்கிக்கொள்ள என்று புரியாமல் விழித்தான் அவன்.
அவன் தமக்கையின் குழந்தைகளை கூட சற்று பெரிதாகவும் தான் கையிலேயே தூக்கியிருந்தான். தூர நின்றே தான் விளையாடுவான் எப்போதும்.
“இருங்க நான் கொடுக்கற மாதிரி வாங்குங்க” என்றவர் அவனை கையை நீட்டச் சொன்னார். அவன் விரிக்கவும் அவன் கையில் குழந்தையை வைத்து அணைவாக பிடித்துக்கொள்ளச் சொன்னார்.
“பார்த்துக்கோங்க அவங்களுக்கு ஸ்டிச் போட்டிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் ஆகும் அவங்க வர்றதுக்கு” என்று அவர் கிளம்ப போக “ஒரு நிமிஷம் சிஸ்டர்” என்றான்.
“ரொம்பவும் வலிக்குமா?? அழுதாளா??”
“அதை அவங்க வந்ததும் நீங்களே கேட்டுக்கோங்க” என்று சென்றுவிட்டார் அவர்.
அடுத்த சில மணியில் அவளை அறைக்கு மாற்றியிருந்தனர். அர்ஜுன் அப்போது தான் வந்தான் மீண்டும் உடன் மஞ்சுளாம்மாவோடு.
ஆருத்ரன் அவரை யாரென்று பார்த்தான். “என்னை வளர்த்தவங்க. நம்பிக்கையானவங்க அருளை இவங்க பார்த்துப்பாங்க அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் மொட்டையாய்.
‘என்கிட்ட தான் பேசினானா’ என்று தான் பார்த்தான் மற்றவன். வந்தவர் நேரே ஆருத்ரனின் கையில் இருந்த குழந்தையை வாங்க கையை நீட்ட ஆருத்ரன் அவர் முகத்தில் என்ன கண்டானோ உடனே கொடுத்துவிட்டான்.
“மன்னிச்சுடுங்க தம்பி. ருத்ரன் தம்பி சொன்னதை நம்பி நானும் ஏதேதோ பண்ணிட்டேன். நான் நல்லா திட்டிட்டேன் தம்பியை. இனிமே தம்பி இப்படி செய்யாது” என்றார் அவர்.
ஆருத்ரன் இன்னமும் புரியாது தான் விழித்தான். “நான் உள்ள போய் பார்க்கவா” என்று அவர் கேட்க “மஞ்சும்மா அவன் போய் முதல்ல பார்க்கட்டும். இப்போ தான் அருளை கூட்டிட்டு வந்திருக்காங்க. அவனே இன்னும் பார்க்கலை” என்று தடுத்தான் அர்ஜுன்.
‘இவனை எதில் சேர்க்க’ என்ற எண்ணத்தை ஒரு ஓரத்தில் ஒதுக்கி உள்ளே சென்றான் ஆருத்ரன் தன் மனைவியை பார்க்க.
அருளாசினி இவனை எதிர்பார்த்து படுத்திருந்தாள். அருகே சென்று அவள் தலையை தடவியவன் “எப்படி இருக்கே?? ரொம்ப வலிக்குதா??” என்றான் கரகரத்த குரலில்.
“இப்போ ஓகே”
“நிஜமா தான் சொல்றியா??”
“நிஜம் தான் பாப்பா எங்கே?? அங்க நான் சரியா பார்க்கலை” என்றாள் அவனிடத்தில்.
“இரு கொண்டு வரச் சொல்றேன்” என்றவன் வெளியே வந்து மஞ்சுமாவை அழைக்க அவரை அங்கு எதிர்பார்க்கவில்லை அருளாசினி.
வந்தவர் அவளிடம் பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆருத்ரன் அவளை கேள்வியாய் பார்த்தான். “நான் அங்க இருக்கும் போது இவங்க தான் என்னை பார்த்துக்கிட்டாங்க” என்றாள் அருளாசினி.
இரண்டு நாட்கள் மெதுவாய் கழிந்தது. ஊரில் இருந்து அன்னப்பூரணி போன் மேல் போன் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு குழந்தை பார்க்க அவ்வளவு ஆசை. ஆருத்ரன் லோகுவிடம் சொல்லி அவரை அழைத்து வரச் சொல்லியிருந்தான். 
அருளாசினி குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள். குழந்தை அப்படியே உறங்கிவிட அவள் மடியிலேயே தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க மஞ்சும்மா வேகமாய் வந்தார்.
“எப்போ குழந்தைக்கு பால் கொடுத்தாலும் தோள்ல போட்டு தட்டிக் கொடும்மா. இல்லைன்னா பொறப்பேரிக்கும்”
“பாப்பா தூங்கிட்டா அதான் மடியில போட்டு தட்டினேன்”
“பாப்பா தூங்கினாலும் நீ இப்படித்தான் செய்யணும்” என்று ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுத்தார் அவர்.
அவளை பார்க்கும் போதெல்லாம் அன்று நடந்ததிற்காய் அவர் அவ்வப்போது மன்னிப்பு கேட்க தவறுவதில்லை. அவர் குழந்தையை வாங்கி தொட்டிலில் போட்டுவிட்டு வெளியே செல்ல ஆருத்ரன் உள்ளே வந்தான்.
அருளாசினி ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள். “என்ன யோசனை பலமா இருக்கு. சொன்னா நானும் உனக்காக யோசிக்கறேன்” என்றான் அவன்.
“அவனை வரச்சொல்லுங்க” என்றாள் மொட்டையாய்.
“யாரை??”
“அர்ஜுன்”
“எதுக்கு??”
“வரச்சொல்லுங்க எனக்கு அவன்கிட்ட சில விஷயம் தெளிவாக்கிக்கணும்” என்றாள்.
“நீயே போன் பண்ணு. நான் பேசினா எடக்கா பதில் சொல்வான்” என்றவன் தன் போனில் இருந்து அர்ஜுனுக்கு அழைத்து அருளாசினியிடம் கொடுத்தான்.
“என்னடா எதுக்கு எனக்கு போன் பண்றே??” என்றான் அவன் எடுத்த எடுப்பிலேயே.
“ஆஸ்பிட்டல் வா உன்கிட்ட பேசணும்” என்ற அருளாசினியை அவன் எதிர்பார்க்கவில்லை. அன்று மாலையே மருத்துவமனை வந்திருந்தான்.
அருளாசினி ஆருத்ரனை பார்க்க அவன் வெளியேறிவிட்டான். மஞ்சுளாம்மா வீட்டிற்கு சென்றிருந்தார் அவளுக்கு உணவெடுத்து வர.
“உட்காரு” என்று எதிரில் இருந்த இருக்கையை காட்டினாள்.
“உட்கார எல்லாம் எனக்கு நேரமில்லை”
“கடத்துறதுக்கு தான் நேரமிருக்கா??”

“அருள்”
“என்ன அருள்??”
“எதுக்கு தேவையில்லாதது எல்லாம் பேசறே??”
“நீ செஞ்சதை தானே சொன்னேன். அது உனக்கு வலிக்குதா. சரி அதைவிடு இப்போ எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும் அதுக்கு பதில் சொல்லு”
“என்ன??”
“நீ நைட்ல எங்கே படுப்ப??”
“கட்டில்ல தான்…”
“நீ ரோட்ல கூட படு எருமை அதை யாரு கேட்டா” என்று அவள் பொசுக்கென்று மரியாதை விட்டு பேச அர்ஜுன் தன் சிறுவயது தோழியை அங்கு கண்டான்.
“அந்த வீட்டில நான் இருந்த ரூம்ல நீயும் இருந்தேன்னு மஞ்சும்மா சொன்னாங்க” என்றாள் அவன் முகம் பார்த்து.
“அந்தளவுக்கு ஒண்ணும் நான் தரங்கெட்டவன் இல்லை”
“அப்போ மஞ்சும்மா சொன்னது??”
“பொய்யில்லை அவங்களை பொறுத்தவரை. நான் தான் அவங்ககிட்ட அப்படிச் சொன்னேன். நான் உன் ரூமுக்கு வருவேன், ஆனா அதுல இருக்க இன்னொரு ரூம்ல தான் படுப்பேன்.  நான் அங்க வந்து தங்கினதே மொத்தமே நாலு தரம் தான்”
“உனக்கு வெட்கமாயில்லை இதைச் சொல்ல”
அர்ஜுனின் முகம் கன்றியது அவளின் பேச்சில். அவன் செய்த போது உணராத தவறை அவள் சுட்டிக்காட்டும் போது உணர்ந்தான். அது அவனை இன்னும் குன்றச் செய்ய அதை கேட்க மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு அவளை எதிர்த்து வேறு பேசினான்.

Advertisement