Advertisement

42
சத்தம் கேட்டு வெளியில் வந்திருந்த அருளாசினி அங்கு ஆருத்ரனை கண்டதும் விழிகளில் நீர் அரும்ப வேகமாய் நடந்து வர அதை கண்டவன் “இரு இரு நானே வர்றேன்” என்று சொல்லி அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டான்.
அருளாசினிக்கு பேச்சே வரவில்லை, அழுகை மட்டும் வந்துக் கொண்டிருந்தது. “ம்ப்ச் ஆசினி அழாதே அதான் நான் வந்திட்டேன்ல”
அழுகைனூடே “என்னைத் தேட உங்களுக்கு இவ்வளவு நாள் ஆச்சா?? இல்லை நானும் ஓடிப்போயிட்டேன்னு நினைச்சுட்டீங்களா??” என்றுவிட்டாள்.
அவள் பேச்சு அவன் நெஞ்சை தைத்தது. அவன் என்ன ஸ்பைடர் மேனா இல்லை சூப்பர் ஹீரோவா மனைவியை காணவில்லை என்றதும் அடுத்த நொடியே கண்டுப்பிடித்து கூட்டிவர. கடத்தியவன் யாரென்று தெரியாமல் எப்படி அவளை கண்டுப்பிடிப்பதாம். 
அவனால் முடிந்தவரை அவன் தேடித்தானே வந்திருந்தான். அவளைக் காணாமல் அவன் தவித்த தவிப்பு அவனையன்றி வேறு எவரும் அறியார். என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் என்று தானிருந்தது அவனுக்கு. 
தன்னை அதிகம் எதிர்ப்பார்த்திருப்பாள் போல அது தான் அப்படி சொல்கிறாள் என்று அவன் மனம் அவளுக்காய் வக்காலத்து வாங்கியது.
அவளும் வேண்டுமென்றெல்லாம் சொல்லவில்லை. ஆருத்ரன் வருவானோ மாட்டானோ என்ற பதட்டம் அவளுக்குள்ளே ஓடிக் கொண்டேயிருந்தது. 
அர்ஜுன் வேறு அவள் ஓடிப்போய்விட்டாள் என்பது போல செட் செய்திருப்பதாக சொல்லவும் அவனிடம் வீம்பாய் அவர் என்னை கண்டுப்பிடித்து கூட்டிப் போவார் என்று சொல்லியிருந்தாள். அவன் சொன்னது முதலே அவள் எண்ணத்தில் அது மையம் கொண்டுவிட்டது. ‘நான் ஓடிப்போயிட்டேன்னு நினைச்சிருப்பாரோ’ என்று. 
ஆருத்ரன் அமைதியாக இருந்தான் பதிலே சொல்லவில்லை. “ஏன் அமைதியா இருக்கீங்க அப்போ நான் ஓடிப்போயிட்டேன்னு தான் நீங்க நினைச்சீங்களா” என்றாள் அவன் பேசாதிருப்பது கண்டு.
“வேணாம் ஆசினி இதை நாம இங்க பேச வேணாம்”
“வேற எங்க பேசணும்” என்றாள் பதில் தெரியாமல் போகக்கூடாது என்ற எண்ணத்தில்.
“அர்ஜுன் வர்ற வரைக்கும் இங்க தான் இருக்கணும்ன்னு நினைக்கறியா??”
“அர்ஜுன் அர்ஜுனை உங்களுக்கு”
“ஏன் அவன் இந்நேரம் சொல்லலையா??” என்றான் அவன்.
“சொன்னான்”
“உனக்கெப்படி அவனைத் தெரியும்”
“ஸ்ரீரங்கத்தில நம்ம வீட்டு பக்கத்து வீடு அவங்களோடது தான். என்னோட சின்ன வயசு பிரண்ட்”
“ஹ்ம்ம்…”
“அவனோட என்னை”
“வேணாம் ஆசினி எதுவும் பேசாத எனக்கு கோபம் வருது. இவ்வளவு நேரமும் நீ சொன்னதை கேட்டு கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். போவோம் வா”
“நீங்க தனியாவா வந்தீங்க”

“ஆமா வேற யார் வரணும்”
“போலீஸ்ல சொல்லியிருக்கீங்கன்னு அர்ஜுன் சொன்னான். அவங்க வரலையா” என்று இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அர்ஜுன் கதவு உடைந்திருப்பது கண்டு வேகமாய் உள்ளே ஓடி வந்தான்.
“அதுக்குள்ளே வந்திட்டியா??” என்றான் அவன்.
“எப்போ வரணும்ன்னு நீ நினைச்சே??”
“அப்போ ரெண்டு பேரும் இனி இங்கவே இருங்க” என்றவன் ஹாலில் இருக்கும் கதவை மூடப் போக ஒரே எட்டில் அவனை அடைந்திருந்தான் ஆருத்ரன்.
அர்ஜுனின் கரத்தை அவனின் இரும்பு கரத்தால் ஒரே பிடியில் உள்ளே இழுத்தவன் அவனே ஹாலில் இருந்த கதவினை அடைத்தான்.
“இருக்கலாம் இங்கவே இருக்கலாம் நாங்க இல்லை நீ மட்டும்”
“ருத்ரா”
“என்ன உன் பிரச்சனை அர்ஜுன்??”
“உனக்கு நான் அர்ஜுன் இல்லை நான் ருத்ரன்”
“அப்போ நான் யாரு??” என்றான் அவனும்.
“அதானேடா என்னோட பிரச்சனையே. எங்க இருந்துடா வந்தே, எதுக்குடா என்னோட வாழ்க்கையில வந்து நீ டிஸ்டர்ப் பண்ணுறே”
“உண்மையை சொல்லு உன் வாழ்க்கையில நான் எங்க வந்தேன்”
“நீ தான் வந்தே, நான் படிக்க போனா அங்க நீ வந்தே. எனக்கு பிடிச்ச பொண்ணை நீ கல்யாணமே பண்ணிக்கிட்ட, என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட்ஸ் எல்லாமே உன்னால என் கையை விட்டு போச்சு. அது பத்தாதுன்னு இப்போ திரும்பவும் வந்திருக்கே என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட்டை டார்கெட் பண்ணி”
“அந்த இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட்ல நீயும் இருக்கியா” என்ற ஆருத்ரனுக்கு அர்ஜுன் ஏன் அருளாசினியை கடத்தினான் என்பது புரிவது போல இருந்தது.
“ஏன் உனக்கு தெரியாதா?? நடிக்காதடா”
“அப்போ அந்த ப்ராஜெக்ட் தான் உனக்கு முக்கியம்”
“கண்டிப்பா”
“நான் அதுல இனி இல்லை போதுமா”
“என்ன விட்டுக் கொடுக்கறியா”
“இல்லை என் குடும்பம் தான் எனக்கு முக்கியம்ன்னு சொல்றேன். இந்த ப்ராஜெக்ட் தான் உனக்கு வேணும்ன்னா அதை நீயே செய். எனக்கு தேவையில்லை, எனக்கு குடும்பமா வேலையான்னா குடும்பம் தான் முதல்ல”
“நீ ஒண்ணும் எனக்கு விட்டுக் கொடுக்கத் தேவையில்லை” என்றான் வீம்பாய்.
“நான் விட்டுக்கொடுக்கலை ஒதுங்கிக்கறேன்னு சொல்றேன்”
“தேவையில்லை” என்றான்.
“நீ கேட்டதை தான் நான் செய்யறேன்னு சொல்றேன் அப்புறம் என்ன வேணும் உனக்கு”
“நீங்க எதுக்கு அவன்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. போலீசை வரச் சொல்லுங்க அவனை அவங்க கவனிச்சுக்கட்டும்”
“ஆசினி பேசாம இரு”
அர்ஜுன் ஏதோ போல இருந்தான். அவன் என்ன நினைக்கிறான் என்று கணிக்கவே முடியவில்லை. அவனால் ஆருத்ரன் விட்டுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 
“அர்ஜுன் நான் போலீசை கூட்டிட்டு வரலை. ஏன் தெரியுமா ஏன்னா நீயும் வருணும் ஒண்ணு தான். உங்களுக்கு சொன்னாலும் புரியாது, நீங்களா புரிஞ்சா தான் உண்டு”
“என்னை அவனோட சேர்த்து பேசாத. உன்னை போய் அவனோட சேர்த்து பேசுவேனா. சார் அவரைவிட ஒரு படி மேல தான். படிச்ச முட்டாள்”
“டேய்… அப்படி சொல்லாத” என்றவன் ஆருத்ரனை அடிக்க கையை ஓங்கிவிட அவன் கையை தடுத்தான் மற்றவன்.
“உனக்கு என்ன தான்டா பிரச்சனை நானா இல்லை என்னோட பேரா. என்னோட பேரு தான் பிரச்சனைன்னா அதை நான் மாத்தினா உனக்கு சந்தோசமாகிடுமா??”
“உன் பிரச்சனை அதில்லை நான் தான் உனக்கு இப்போ பிரச்சனை அதானே. நான் முன்னாடி வர்றது தான் உனக்கு பிரச்சனை, தெரியும் எனக்கு உன்னோட பிரச்சனை அதான். இவன்லாம் எப்படின்னு நினைக்கிறே”
“எனக்கு தெரியும்டா நீ இல்லைன்னு சொன்னாலும் எனக்கு தெரியும். உங்கப்பா உனக்குள்ள விதைச்சது அதை உன்னால மாத்த முடியாது. எனக்கெப்படி தெரியும்ன்னு பார்க்கறியா”
“உங்கப்பாகிட்ட நீ என்னை காட்டினதும் தெரியும். அவரு இவன் பார்க்க xxxxx மாதிரி தெரியறான். இவனோடலாம் நீ எப்பவும் கூட்டு வைச்சுக்காதன்னு சொன்னதும் தெரியும்”
“உங்களைலாம் எல்லாம் என்னன்னு சொல்ல. எங்க ஊர்லவே இப்போ வரைக்கும் எங்க ஆளுங்களுக்கு டீ குடிக்க தனி கிளாஸ் தான். அதுவும் வாசல்ல நின்னு தான் குடிக்கணும்”
“நானே பார்த்திருக்கேன் எங்கப்பா டீ குடிக்க கூட்டிட்டு போவார். உள்ள பெஞ்சுல உட்கார்ந்து எல்லாம் குடிப்பாங்க. வாங்கப்பா உள்ள போய் உட்கார்ந்து குடிப்போம்ன்னு சொல்வேன். அங்கெல்லாம் நாம உட்காரக்கூடாதுப்பான்னு சொல்வார்”
“போதும்டா, நான் என்னடா பண்ணேன் உங்களை. கஷ்டப்பட்டு ஒருத்தன் படிச்சு முன்னாடி வர்றது அவ்வளவு பெரிய குற்றமா. எங்கப்பா ஊரைவிட்டு வந்து நல்லா பொழைச்சது கூட யாருக்கும் பொறுக்கலை”
“சொந்த ஊருல என்னை அடக்கம் பண்ணனும்ன்னு விரும்பின எங்கப்பாவோட விருப்பத்தை நிறைவேத்த கூட நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்”
“டேய் செத்தா எவனையும் பேர் சொல்லி கூப்பிட மாட்டாங்க. எல்லாரும் பொணம்ன்னு தான் சொல்வாங்க. அந்த சடலத்துக்கு தகுந்த மரியாதை கொடுத்து வழியனுப்பி வைக்கிறவன் நானு”
“ம்ப்ச் பேச்சு எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டு இருக்கு என் கதையை விடு” என்றவன் தலையை உலுக்கிக் கொண்டான். அருளாசினி பேசும் அவனை தான் பார்த்திருந்தாள்.
அவன் வாய் மொழியாக இதெல்லாம் இப்போது தானே கேட்கிறாள். “உனக்கு வேண்டியது அந்த ப்ராஜெக்ட் தான்னா நான் அதுல குறுக்க வரலை. எப்பவும் இப்படியே என்னால இருக்க முடியாது. என் குடும்பத்துக்காக நான் உழைக்க வேண்டி இருக்கு. இந்த ப்ராஜெக்ட் இல்லன்னா அடுத்ததுக்கு நான் போயிட்டே இருப்பேன்”
“ஒவ்வொரு ப்ராஜெக்ட்க்கும் நீ ஒவ்வொருத்தரை கடத்திட்டு இருப்பியா சொல்லு. அதான் உன்னோட வேலையா. உன்னோட திறமையை வேலையில காட்டு இது போல சின்னத்தனமான வேலையில நீ இறங்காத. நீ ரொம்ப அழகா இருக்கே” என்று விட்டு அவன் நிறுத்திவிட அருளாசினியுமே என்ன இவன் இப்படி சொல்றான் என்று பார்த்தாள் அவனை.
“ஆனா உன் எண்ணம் அழகானது இல்லை, உன் செயல் சரியானது இல்லை. இப்படி அடையற வெற்றி சந்தோசத்தையும் நிம்மதியையும் எப்பவும் கொடுக்காது”
“போதும் உன் அட்வைஸ் கேக்க எனக்கு நேரமில்லை”
“நானும் உனக்கு அட்வைஸ் பண்ண இங்க வரலை. எனக்கும் அது வேலையுமில்லை”
“இந்த ப்ராஜெக்ட்ல இருந்து நான் விலகிக்கறேன். இதை விட்டுக்கொடுக்கற மாதிரி எல்லாத்தையும் விட்டுக்கொடுத்திட்டு போயிட்டு இருக்க மாட்டேன். உன் முட்டாள்த்தனத்தை இனிமே என்கிட்ட காட்டாதே” என்றான்.
இவர்கள் இருவரும் ஆளுக்கொரு புறம் பேசிக்கொண்டிருக்கும் போதே அருளாசினி ஒரு மாதிரியாக உணர்ந்தாள். இருவருமே அவளை கவனித்திருக்கவில்லை.
அவளுக்கு உடனே கழிவறை செல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நடக்கும் தெம்பே இல்லாதது போல இருந்தது. 
அர்ஜுன் தான் கத்தினான் திடிரென்று “ருத்ரா அங்க பாரு கீழே எல்லாம் ஒரே தண்ணியா இருக்கு” என்று சொல்லவும் அருளாசினி நிற்க முடியாது தவிப்பதும் கண்ணில்ப்பட அருகே சென்று அவளைப் பிடித்துக் கொண்டான்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அருளாசினிக்கு பனிக்குடம் உடைந்திருந்தது. உடை முழுதும் நனைந்து போனது.
“ஆசினி என்ன செய்யுது உனக்கு”
“தெரியலை என்னவோ மாதிரி இருக்கு. நடக்க முடியலை” என்று அழுதாள். ஆருத்ரன் உடனே தன் அன்னைக்கு அழைத்துச் சொல்ல அவர் சொல்லியதை கேட்டவனுக்கு தலைச் சுற்றிப் போனது.
“ஆஸ்பிட்டல் போய்டலாம் வா” என்றவன் அவளை தூக்கிக் கொள்ள அவள் கண்கள் விடாது கண்ணீர் மழை பொழிந்தது.
அர்ஜுன் என்ன நினைத்தானோ “ருத்ரா நீ அருளோட இரு நான் வண்டி எடுக்கறேன்” என்றவன் வெளியே சென்று அவன் காரை எடுத்து வந்தான்.

Advertisement