Advertisement

40
“ஒரே பேரு தான் உன் பிரச்சனையா அதுக்காக தான் இதெல்லாம் செஞ்சியா?? நீ சொல்றது உனக்கே சின்னப்பிள்ளைத்தனமா தெரியலை”
“உனக்கு மட்டுமில்லை எங்கம்மா அப்பான்னு எல்லாருக்கும் அதே எண்ணம். என்னோட வலி உங்களுக்கு விளையாட்டா தெரியுதுல. நான் பொறாமையில இப்படி நடந்துக்கறேன்னு நினைக்கறீங்க அப்படித்தானே”
“நீ தான் ஜெயிக்க போறேன்னு சொல்லிட்டு அது நீ இல்லை இன்னொருத்தன்னு சொல்லும் போது எவ்வளவு வலிக்கும்ன்னு தெரியுமா உனக்கு. அவனால நான் இழந்தது கொஞ்ச நஞ்சமில்லை”
“இதெல்லாம் யோசிக்கக்கூடாதுன்னு நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்திட்டேன் என்னால முடியலை. என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட் அவன் கம்பெனியால போச்சு எனக்கு. அவனை விட என்னோடது தான் பெஸ்ட்டுன்னு லாஸ்ட் மினிட் வரை சொல்லிட்டு இருந்தாங்க”
“கொஞ்ச நேரத்துல எல்லாமே தலைகீழா ஆகிடுச்சு. அவங்களோடது தான் எல்லாத்தையும் விட சூப்பர்ன்னு சொல்லி செலக்ட் பண்ணிட்டாங்க”
“நீ எவ்வளவு செஞ்சிருப்பே இது ஒரு தோல்வியா உனக்கு. ஏன்டா இப்படி யோசிக்கறே, நீ உன்னோட பெஸ்ட் கொடுத்திருக்க அதை செலக்ட் பண்ணாதது அவங்க தப்பு. இதுல அவர் எங்க இருந்து வந்தாரு”
“செலெக்ஷன் கமிட்டியில இருந்தது அவங்க கம்பெனியோட ஆளுங்க தான். கடைசியா இருந்த ஒருத்தரும் எங்க காலேஜ் ரிடையர்ட் ப்ரொபசர். விட்டுட்டு அருள் பழசை திரும்ப கிளறாத, அதெல்லாம் இப்போ தான் மறக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்”
“அப்படியே மறந்திடு அர்ஜுன். அவர் உன் வழியில குறுக்க வரணும்ன்னு நிச்சயமா நினைச்சிருக்க மாட்டார். நடந்ததெல்லாம் ஒரு விசயமே இல்லை”
“சரி மறந்திடறேன். ஆனா அவன் ஏன் திரும்பவும் வர்றான் இப்போ. எதுவும் வேணாம்ன்னு ரெண்டு வருஷம் கழிச்சு ஊருக்கு போனவன் இத்தனை வருஷம் கழிச்சு திரும்பவும் எதுக்கு என் வேலையில குறுக்க வர்றான்”
“எனக்கு நிஜமாவே ஒண்ணுமே புரியலை” என்றாள் அருளாசினி சலிப்பாய்.
“அவர் வைச்சிருக்கறது ப்ரீசர் பாக்ஸ் சர்வீஸ் மட்டும் தான்டா”
“அப்படின்னு நினைச்சுட்டு இருக்கியா நீ… நானும் அப்படித்தான் நினைச்சிருந்தேன் கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும் அவன் திரும்பவும் வந்திட்டான்னு”
“மறுபடியும் என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட் அதுல அவனோட தான் போட்டி. செஞ்சிடுவான் ஏதாச்ச்சும் செஞ்சி அவன் வந்திடுவான், எப்பவும் போல நான் தோத்து போய்டுவேன். என்னோட கனவு மொத்தமும் போய்டும் அவ்வளவு தான்” என்று தனக்கு தானே புலம்பியவன் “இந்த முறை அவன் ஜெயிக்க மாட்டான்”
“நான் ஜெயிக்கவும் விட மாட்டேன். பொண்டாட்டி ஓடிப்போயிட்டா அவனோட கவனம் சிதறத்தானே செய்யும்”
“என்ன உளர்றே??” என்றாள் அவள்.
“அந்த கதை எல்லாம் உனக்கு முழுசா தெரியாதுல. உங்க வீட்டில இருந்த உன்னோட டிரஸ், நகை எல்லாம் எடுத்திட்டு வந்தாச்சு. ஆளுங்களை வைச்சு உன்னோட மாமியாரை வீட்டைவிட்டு வெளிய தள்ளிட்டேன்”
“செஞ்சது உன்னோட சொந்தக்காரங்கன்னு அவங்க நினைச்சுட்டு இருப்பாங்க. அவங்களை வெளிய அனுப்பிட்டு பக்கத்து வீட்டுக்காரனுக்கு உன்னோட மத்த திங்க்ஸ் எல்லாம் எடுக்கறது கஷ்டமா என்ன??”
“அவங்களோட கவனம் என் மேல வர வாய்ப்பே இல்லை. ஒண்ணு உன் சொந்தக்காரங்க மேல பாய்வாங்க. இல்லைன்னா அவனோட முத பொண்டாட்டி மாதிரி நீயும் ஓடி போயிட்டேன்னு தான் நினைப்பாங்க. எப்படி என் சாமர்த்தியம்”
“நீ நல்லாவே இருக்க மாட்டா அர்ஜுன்”
“ஏய் சொல்லாத நீ அப்படி சொல்லாத அருள்” என்று கத்தினான்.
“நான் தான் சொல்லணும் வேற யார் சொல்வாங்க. என்னவொரு குரூர புத்தி உனக்கு. உன் சாமர்த்தியத்தை நீ ஜெயிக்கறது காமிக்கறதை விட்டுட்டு அடுத்தவனை கீழே தள்ளுறது காட்டியிருக்க நீ எப்படி நல்லா இருக்க முடியும். நீ ஏன் தெரியுமா ஜெயிக்கலை, உன்னோட இந்த சின்னப்புத்தியால தான்”
“சின்ன வயசுல பசங்க சாப்பிடுற சாக்லெட்டை பிடுங்கி நீ சாப்பிடுவ. உங்க வீட்டில உனக்கு நீ போதும் போதும் சொல்ற அளவுக்கு வாங்கி கொடுத்தாலும் உனக்கு அதுல திருப்தி வராதா. கேட்டா இதான் நல்லா இருக்குன்னு சொல்வே. அது மாதிரி தான் நீ இப்பவும் இருக்க, உன்னோட அந்த சின்னப்புத்தி இன்னும் மாறலை”
“வேணாம் அருள் தேவையில்லாதது எல்லாம் பேசாத. எனக்கு கோபம் வருது, எனக்கு உன்னை பிடிக்கும் அதுக்காக தான் நீ என்ன பேசினாலும் பேசாம இருக்கேன். எப்பவும் அப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது. அவன் மேல இருக்க கோபத்தை உன் மேல காட்ட வைச்சிடாதே”
“உன் கோபம் என்னை எதுவும் செய்யாது அர்ஜுன். நீ வேணா பாரு அவர் சீக்கிரமே இங்க வந்து என்னை கூட்டிட்டு போவாரு”
“அது நடக்கவே நடக்காது. இத்தனை நாளா கண்டிப்பிக்காதவன் இனிமே வரப் போறனா என்ன. அவனால நான் தான் இதை செஞ்சேன்னு கண்டுப்பிடிக்கவே முடியாது. அவனை குழப்பி விடுறதுக்கு தான் உங்க அண்ணன்னு சொல்லி ஒருத்தனை அவனை பார்க்க அனுப்பி இருக்கேன்”
“உன் புருஷன் உன்னை கண்டுப்பிடிக்க நாயா அலையறானாம். ஒரு பக்கம் நீ ஓடிப்போயிட்டேன்னு அவன் காதுப்படவே பேச ஆளுங்களை செட் பண்ணி வைச்சிருக்கேன். சீக்கிரமே உன்னை தேடுறதை விட்டிடுவான்”
“போலீஸ் சிசிடிவி எல்லாம் செக் பண்ணி உன் கூட இருந்தவங்க போட்டோஸ் எல்லாம் எடுத்திட்டாங்களாம்”
“அப்போ நீ மாட்டிட்டன்னு சொல்லு”
“அதான் இல்லை வருண் தான் மாட்டியிருப்பான். அவன் கூடத்தானே நீ வந்தே. என்னோட நீ இருக்க போட்டோவை காட்டி தான் உங்கண்ணன்னு சொல்லிட்டு அங்க போன என்னோட ஆளு இவன் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லியிருக்கான்”
“அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டானாம் உன் புருஷன். அவன் அவ்வளவு சீக்கிரம் என்னை நெருங்கவே முடியாது. எல்லாமே பக்காவா பிளான் பண்ணியிருக்கேன்”

“இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு அந்த ப்ராஜெக்ட்க்கு. அதுவரைக்கும் நீ இங்க தான். ஒரு வாரம் கழிச்சு நீ போறதுன்னாலும் சரி இல்லை இங்கவே இருக்கறதுனாலும் எனக்கு சந்தோசம் தான்” என்றான்.
“எனக்கு இங்க என்ன வேலை நான் ஏன் இங்க இருக்க போறேன். நாளைக்கே நான் இங்க இருந்து கிளம்பினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை”
“உன்னோட நம்பிக்கைக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்”
“நான் எங்க இருக்கேன்னு தெரியற வரைக்கும் தான் அவர் அமைதியா இருப்பார். என்னை கடத்தினது நீ தெரிஞ்சா அவர் சும்மா இருக்க மாட்டாரு”
“என்ன என் கழுத்தை அறுத்திடுவானா”
அருளாசினி பதில் சொல்லவில்லை லேசாய் புன்னகைத்தாள்.
————–
அஞ்சனா கோலம் போட்டு முடித்து நிமிர்ந்தவள் அப்படியே அதிர்ந்து நின்றாள். அடிவயிற்றில் இருந்து ஏதோவொரு பயம் உருண்டு வந்து அவள் தொண்டை குழிக்குள் நின்றது அங்கிருந்தவரை பார்த்து.
அன்னப்பூரணி தான் அங்கு நின்றிருந்தார் கண்ணில் கனலுடன். ஆருத்ரனை பல முறை சீண்டியவளுக்கு அன்னப்பூரணியை கண்டு எப்போதும் ஒரு பயம் உண்டு.
அது ஏனென்று அவள் அறியாள். அவள் ஆருத்ரன் மீது பழி போட்டு பிரிந்து வந்த போது கூட முதலில் அது கணவன் மனைவி பிரச்சனை என்று ஒதுங்கி இருந்தவர், அஞ்சனா மகன் மீது அனாவசிய பழி போட்டது தெரிந்ததும் ஒரு ஆட்டம் ஆடித்தீர்த்துவிட்டார்.
அப்போது அஞ்சனாவின் அன்னை பதிலுக்கு பதில் பேசியிருக்க அவள் அவரை கண்டதும் எழுந்து வீட்டின் உள்ளே சென்றுவிட்டிருந்தாள் அப்போது.
இப்போது ஓடவும் முடியாது என்ற நிலை அப்படியே நின்றவள் அவர் மேற்கொண்டு எதுவும் பேசிவிடுவாரோ என்று உள்ளே செல்ல போக “நில்லுடி” என்ற குரலில் அவள் கால்கள் தந்தியடித்தது.
அவள் முன் வந்து நின்ற அன்னப்பூரணி “என்னடி சொன்னே என் புள்ளைய, சொல்லுடி என்ன சொன்ன?? இப்போ கல்லுப்பிள்ளையார் மாதிரி நிக்கறே?? சொல்லு என்ன சொன்னே??” என்ற அவர் கேட்ட தொணியே அவளுக்கு பெரிதாய் ஏதோ நடக்கப் போவதாகவே சொன்னது.
“உன்னை போனா போகுதுன்னு விட்டா என்ன வேணா பேசுவியா நீ. அவன் என்னடி பண்ணான் உன்னை. உனக்கு எம்புட்டு தைரியம் இருக்கும் அவனை நாக்கு மேல பல்லு போட்டு பேச”
“உன்னையெல்லாம் விளக்குமாத்தால விளாசி இருக்கணும். உன்னை இப்படி வளர்த்திட்டு அன்னைக்கு என் புள்ளைய என்ன பேச்செல்லாம் பேசினா உங்கம்மா. இன்னைக்கு இருக்கு அவளுக்கும்”
“கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம என் புள்ளைய தப்பா பேசினியே உன் நாக்கு அழுகி போகாது. அவன் அமைதியா வந்திருக்கான்னா அது உனக்கு நல்ல நேரம்ன்னு நீ விலகி போயிருக்கணும்”
“அதைவிட்டு அவனை என்ன பேச்சு பேசியிருக்கே நீ. எங்க அவன் உன்னை புதுசா கட்டினவன்.  உன் லட்சணம் தெரியாம எப்படி கட்டிக்கிட்டான் அவன். கூப்பிடு அவனை” என்று அவர் பேசப்பேச அவள் கண்கள் குளமாகியது.
ஆருத்ரனை கடைசியாய் சந்தித்து வந்ததில் இருந்தே அவர்கள் இருவருக்குள்ளும் இயல்பானதொரு பேச்சு வார்த்தையே இல்லை. இதில் இவர் வேறு இப்படி பேசுகிறாரே என்று தான் இருந்தது அவளுக்கு.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று எண்ணியவள் சட்டென்று அவர் காலில் விழுந்துவிட “ச்சீய்…” என்று தள்ளிப் போனார் அவர்.
“என்னை மன்னிச்சிடுங்க அத்தை”
“என்ன சொன்னே??”
அவர் கேட்டப் பின்னே தான் அத்தை என்று அவரை அழைத்தது ஞாபகம் வர “மன்னிச்சிடுங்கம்மா. இனிமே நான் யார் வழிக்கும் வர மாட்டேன். என்னவோ எனக்கும் அவருக்கும் சேராம போய்டுச்சு”
“எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு. நீங்க வந்து அதை கெடுத்திடாதீங்கம்மா”
“என்ன மாதிரி பொம்பளைடி நீ. உன்கிட்ட பேசினா ச்சே உன்னை பார்த்தா கூட பாவம்டி. உன் வாழ்க்கை கெடக்கூடாதுன்னு என் கால்ல விழுந்தியே என் புள்ளைக்கிட்ட ஒரு வார்த்தை உன்னை புடிக்கலை வேற ஒருத்தரை தான் பிடிச்சிருக்குன்னு நீ சொல்லியிருந்தா அவனே உங்களை சேர்த்து வைச்சிருப்பான்”
“அவன் பார்க்க தான் முரடன் மாதிரி இருப்பான். மனசு லேசானது அவனுக்கு. அவன் மேல பழி போடா உனக்கு எப்படிடி மனசு வந்துச்சு. அவன் வாழ்க்கையை கெடுக்க நினைச்ச நீ நல்லா இருக்கணும் நினைச்சான் பாரு அவனை மாதிரி ஒரு பிள்ளைய பெத்ததை நினைச்சு நான் சந்தோசப்படுறேன். உன்னை மாதிரி ஒரு பிள்ளைய நான் பெத்திருந்தா என் கையால உன்னைய நானே கொன்னே போட்டிருப்பேன்”
“போ நீ வாழ்ந்திட்டு போ உன் வாழ்க்கையை கெடுக்க ஒண்ணும் நான் வரலை. ஆனா என் பிள்ளை வாழ்க்கையில இன்னொரு தரம் நீ வந்தேன்னு தெரிஞ்சுது அதுக்கு பிறகு நீ ரொம்ப வருத்தப்படுவே” என்றவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
மகன் வீட்டிற்கு வராததால் வருத்தமான அன்னப்பூரணி அவனைப் பார்க்க நேராய் அலுவலகம் வந்துவிட்டிருந்தார்.
சவரம் செய்யப்படாத முகம் சோர்ந்திருக்க கையை தலைக்கு பின்னால் கொடுத்து விட்டத்தை இலக்கின்றி வெறித்திருந்தவனை காண சகிக்கவில்லை அவருக்கு. 
“ருத்ரா” என்ற அவர் அழைப்பில் சட்டென்று எழுந்து நின்றிருந்தான்.
“ஏன்பா இப்படி இருக்கே??”
“ஒண்ணுமில்லைம்மா”
“அம்மாவை மன்னிச்சிடுப்பா உன்னோட கவலை தெரியாம பேசிட்டேன்” என்றான் உள்ளார்ந்து.
“விடுங்கம்மா”
“வீட்டுக்கு வா ருத்ரா”
“நான் மட்டும் வரமாட்டேன்ம்மா”
“ருத்ரா அம்மா தான் ஏதோ கோபத்தில புரியாம பேசிட்டேன்னு சொல்றேன்ல”
“எனக்கு கோபமெல்லாம் இல்லைம்மா. நான் ரொம்ப சீரியஸா தான் சொல்றேன் அவ இல்லாம நான் வீட்டுக்கு வரமாட்டேன்” என்றான் உறுதியாய்.
“அருளு எங்க இருக்கான்னு தெரிஞ்சுதாப்பா”
“இன்னும் இல்லைம்மா, கவலைப்படாதீங்க. அவளை சீக்கிரம் கூட்டிட்டு வந்திடுவேன்”
“ருத்ரா அவளுக்கு தலைப்பிரசவம்ப்பா இன்னும் பதினஞ்சு நாள் தான் இருக்கு டாக்டர் கொடுத்த தேதிக்கு. இப்போவே எனக்கு பயமா இருக்கு. அவளுக்கு குழந்தை பிறந்திருக்குமோன்னு” என்று அவன் உண்மையான கவலையோடு சொன்னார்.
அவரின் கவலை இப்போது ஆருத்ரனையும் தொற்றிக்கொண்டது மிகத்தீவிரமாய். “அம்மா அதான் இன்னும் நாளிருக்கே அதுக்குள்ளே குழந்தை பிறந்திடும்மாம்மா”
“மழை பெய்யறதும் பூ பூக்கறதும் எப்போ நடக்கும்ன்னு சொல்ல முடியாதுன்னு சொல்வாங்க. அது மாதிரி தான்ப்பா பொம்பளைக்கு குழந்தை பிறக்கறதும்” என்று அவர் சொல்ல அவனுக்கு அப்படியொரு கோபம் எழுந்தது அர்ஜுனின் மேல்.
அவன் கையில் கிடைத்தால் அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுட வேண்டும் என்று வெறியேறியது அவனுக்கு.
—————
வாசல் கதவு உடைபடும் சத்தம் கேட்க அருளாசினி உள்ளே அமர்ந்திருந்தவள் மெதுவாய் வெளியே எட்டிப்பார்த்தாள்.
சற்று முன்பு தான் அர்ஜுன் வெளியே சென்றிருந்தான் உணவு வாங்கி வர. வீட்டில் அவளைத் தவிர யாருமில்லை என்பதால் வெளியே கேட்ட சத்தம் அவளுக்கு பயத்தை கொடுத்தது.
இருந்தாலும் எழ முடியாமல் எழுந்து வெளியே அவள் வரவும் ஆருத்ரன் கதவை திறந்து உள்ளே வந்திருந்தான்.

Advertisement