Advertisement

4
ருத்ரன் பதினோரு மணி போலத்தான் வீட்டிற்கே வந்தான். அவன் நடையில் என்றுமில்லாத தள்ளாட்டம் இன்று. பூரணி இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டிக்கொண்டே வாயிலுக்கு வந்தார் மகனை அழைத்துச் செல்ல.
“ஏன்டா லோகு உனக்காச்சும் அறிவிருக்க வேணாம். அவனுக்கு இப்போ தானே கல்யாணம் ஆகி இருக்கு, அவனைப் போய் குடிக்க வைச்சு கூட்டிட்டு வந்திருக்க”
“மோவ் நான் என்ன மோவ் பண்ணேன். அண்ணன் தான் சொல்ல சொல்ல கேட்காம அப்படியே வாய்ல ஊத்திக்கிச்சு. ஒரே புலம்பலு வேற, என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப சாப்பிட்டுச்சும்மா பார்த்துக்கோம்மா”
“இப்போ வந்து நான் இன்னாத்தை பாத்துக்கறது. நாள் பூராவும் அவனோட தானே இருக்கறீங்க அப்போலாம் பாக்க மாட்டானுங்க. இங்க வந்து நம்மளை பார்க்க சொல்வானுங்க” என்று புலம்பிக்கொண்டே மகனை கைத்தாங்கலாய் பற்றி அவர் உள்ளே வரவும் அருளாசினி அவர்களறையில் இருந்து வந்தாள்.
“ஒண்ணுமில்லைம்மா இன்னைக்கு தான் முதோ முறையா எவனோ பழக்கி விட்டிருக்கானுங்க… நான் சொல்லிடறேன்ம்மா நீ உள்ளப்போ” என்று மருமகளைப் பார்த்து சொல்ல அதை நம்பாதவள் அவருக்காக உள்ளே சென்றாள்.
“டேய் ஏன்டா இப்படி பண்ணுறே?? உனக்கு இப்போ என்னா குறை லட்சுமியாட்டமா பொண்ணு கட்டினு வந்துட்டு இப்போ இப்படி ஏத்தினு வந்துருக்க எதுக்குடா இப்படி பண்றே?? அந்த பொண்ணு நம்ம வீட்டு பொண்ணுடா அதுகிட்ட தான் உன் வீரத்தை எல்லாம் காட்டுவியா நீ… எவ மேல இருக்கற கோவத்தை அந்த புள்ளை மேல காட்டியிருக்க, வேணாம்டா அந்த பாவம் நமக்கு சொல்லுறதை கேளு ருத்ரா…”
“நீ நல்லவன்டா சாமி. எப்பவும் உன் குணம் மாறாம இருய்யா. உங்கப்பாரும் அதைத்தான் விரும்புவாரு. நான் கட்டி வைச்சது தான் நாசமா போச்சு. நீயா கட்டி கூட்டிட்டு வந்திருக்க அப்போ நீ அந்த புள்ளைய எப்படி பார்த்துக்கணும் சொல்லு. நல்லா பார்த்துக்கோய்யா” என்று அவர் மகனிடம் வெளியில் பேசுவது உள்ளிருந்தவளுக்கு தெளிவாக கேட்டது.
தனக்காகவும் யோசிக்க ஒரு ஜீவன் இருக்கிறதே என்று எண்ணி அவளால் மகிழத்தான் முடியவில்லை. கண்கள் கரித்தது தன்னை தனியே விட்டுச் சென்ற தன் தந்தையை நினைத்து.
“எல்லாம் எனக்கு தெரியும் நீ போம்மா” என்ற குரல் கேட்டது வெளியில்.
சிறிது நேரத்தில் அறைக்கதவை தள்ளித் திறந்துக்கொண்டு உள்ளே வந்தான் ருத்ரன். அருளாசினியை நிமிர்ந்து கூட பார்க்காது நேரே குளியலறைக்குள் புகுந்திருந்தான்.
வெகு நேரமாகியும் அவன் வராததால் அருளாசினி குரல் கொடுத்தாள், சத்தமேயில்லை அங்கு. “கதவை திறங்க” என்று அவள் பலமாய் விடாது தட்டவும் தான் கதவை திறந்தான் அவன்.
“என்ன??”
“இங்க சும்மா நின்னுட்டு என்ன பண்ணுறீங்க??”
“பாத்ரூம்ல என்ன பண்ணுவாங்க, குளிக்க வந்தேன்” என்றவன் உடையை கூட கழற்றியிருக்கவில்லை.
“குளிச்ச மாதிரி தெரியலையே” என்று அவள் சொல்ல அவன் ஒங்கரித்துக் கொண்டு உள்ளே ஓடினான். வெகு நேரமாய் வாந்தி எடுக்கத்தான் தவித்திருந்தான் போல. மொத்தமாய் எடுத்து முடித்திருந்தான்.
அவன் உடையெல்லாம் வாடை அடித்தது இப்போது. “குளிங்க”
“தெரியும் நீ போ” என்றவன் ஷவரை திறக்க தடவிக் கொண்டிருக்க “ரொம்ப தள்ளாடுறீங்க” என்றவள் ஷவரை அவன் புறம் திருப்பிவிட்டு அதை திறந்து விட முழுவதுமாய் நனைந்தான் அவன்.
அருகே வந்து அவன் சட்டை பட்டனை கழற்ற தட்டிவிட்டான் அவன்.
“நீ ஏன் இங்கலாம் கை வைக்கிறே??” என்று அவன் சொல்லவும் அவள் பார்த்த பார்வையில் சட்டென்று அடங்கினான்.
சட்டையை வேகமாய் கழற்றியவள் அவன் பேன்ட்டின் மீது கை வைக்க “நான் பார்த்துக்கறேன் நீ போ” என்று அவளை வெளியே அனுப்புவதிலேயே குறியாய் இருந்தான்.
“நான் போறேன் ஆனா கதவை சாத்த வேண்டாம்” என்றுவிட்டு அவள் நகர கதவை தாழிடாமல் சாற்றியவன் அங்கிருந்த டவலை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஷவரின் அடியில் மீண்டும் நின்றான்.
அருளாசினி மீண்டும் கதவை தட்ட “குளிச்சிட்டேன்” என்றான்.
கதவை திறந்தவள் கீழே போட்டிருந்த அவன் துணியை எடுத்து ஒரு பக்கெட்டில் போட்டு தண்ணீரை ஊற்றினாள். ருத்ரன் இன்னமும் வெளியேறாமல் அங்கேயே நின்றான்.
“இன்னும் ஏன் இங்க நிக்கறீங்க??”
“டவல் நனைஞ்சு போச்சு…”
“சரி கழட்டி இதுல போடுங்க நான் வேற எடுத்திட்டு வந்து தர்றேன்…” என்றவள் வெளியே வர அவன் டவலை கழற்றி அதே பக்கெட்டில் போட்டான்.
அவள் பீரோவை திறந்து சில பல நிமிடம் தேடி எடுத்து ஒரு துண்டை எடுத்து வந்தாள். கதவை அவள் தள்ளித் திறக்க “ஹேய் ஹேய் என்ன இது நான் பப்பி ஷேமா இருக்கேன், நீ பாட்டுக்கு உள்ள வர” என்றான் அவன்.
இன்னமும் அவனுக்கு முழுதாய் போதை தெளிந்திருக்கவில்லை. அவன் பப்பி ஷேமா இருக்கேன் என்று சொன்ன விதத்தில் அவளுக்கு லேசாய் சிரிப்பு வந்தது. 
‘என்னது பப்பி ஷேமா இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்திட்டு பப்பி ஷேமா. அது பப்பி ஷேம் இல்லை ஹப்பி ஷேம்’ என்று கிண்டலடித்தது அவளுக்குள் வெளிவந்திருந்தது அவள் தொலைத்திருந்த ரசிகமனம். உள்ளே காத்திருப்பவன் நினைவிற்கு வர   “டவலை கொடுக்க வேணாமா” என்றாள்.
“அங்கே இருந்தே கொடு நான் வாங்கிக்கறேன்” என்றவன் பாதி கதவை திறந்து அவள் நீட்டிய டவலை வாங்கியவன் “ஹேய் இது எங்க இருந்து கிடைச்சது உனக்கு. இது எனக்கு வேணாம் இதை தூக்கிப் போடு…” என்று கத்தியவன் அதை தூக்கி வெளியில் எறிந்தான்.
“என்னாச்சு??”
“அது வேணாம்…” என்றான் சத்தமாய்.
அவளுக்கு ஏதோ புரிந்தது போல இருக்க மீண்டும் அவன் பீரோவை ஆராய்ந்தாள். எதுவும் அவள் கண்ணில் அகப்படவில்லை, அவள் பெட்டியில் மீது அவள் மாலையில் குளித்து காயப்போட்டிருந்த டவல் என்னை எடுத்துக்கொடேன் என்பது போல பார்க்க அதை கையில் எடுத்துக் கொண்டாள்.
வெளியில் இருந்தவாறே “உங்க டவல் எங்க இருக்குன்னு எனக்கு தெரியலை. என்னோடது தான் இருக்கு உங்களுக்கு ஓகேவா” என்று கேட்க பதில் இல்லை உள்ளிருந்து.
அதையே சம்மதமாய் எடுத்துக்கொண்டவள் துண்டை அவனிடம் நீட்ட அதை வாங்கிக்கொண்டான் அவன். சிறிது நேரத்தில் அவன் வெளியில் வர “ஒரு நிமிஷம் அங்கவே இருங்க” என்று அவள் சொல்ல அப்படியே நின்றான்.
முதலில் நீட்டிய துண்டு இன்னும் அவள் கையில் இருக்க “இதை ஏன் இங்க வைச்சிருக்கே தூக்கி குப்பையில போடுன்னு சொன்னேன்ல” 
“எதுக்கு இதை பார்த்து டென்ஷன் ஆகறீங்க”
“ஏன்னு உனக்கு தனியா வேற சொல்லணுமா”
“ஒரு நிமிஷம் இருங்க” என்றவள் குளியலறை வாயிலில் ஏற்கனவே போட்டிருந்த விரிப்பின் மீதே இந்த துண்டையும் மடித்து போட்டாள்.
‘இது எதுக்கு செய்யறா’ என்று பார்த்தான் அவன்.
“இப்போ அதுல காலை துடைச்சுட்டு வாங்க” என்று அவள் சொல்லவும் தன்னை மீறி ஒரு புன்னகை அவன் முகத்தில். கீழே இறங்கி நன்றாய் அந்த துண்டை மிதித்து காலைத் துடைத்தான்.
“தேங்க்ஸ்” என்றுவிட்டு அவன் உடைமாற்றச் செல்ல அவள் கதவை திறந்து வெளியில் சென்றாள்.
பூரணி இன்னமும் உறங்காமல் சோபாவிலேயே தான் அமர்ந்திருந்தார் யோசனையுடன். இவர்கள் அறையில் இருந்து சத்தம் வரவும் கொஞ்சம் பயந்து தான் போயிருந்தார். உறக்கம் வேறு பிடிக்கவில்லை அவருக்கு. அவரைக் கண்ட அருளாசினி “நீங்க இன்னும் தூங்கலையா??” என்றாள்.
“தூக்கம் வரலை… நீ??” என்றார். அவருக்கு பதில் சொல்லாமல் “லெமன் இருக்கா??” என்றாள்.
“ப்ரிட்ஜ்ல இருக்கு…” என்றவர் எழுந்து வந்து எடுத்து தந்தார் “என்னம்மா செய்யப் போறே??” என்றவாறே.
“அவர் ரொம்ப வாமிட் பண்ணிட்டார். அதான் ஜூஸ் கொடுக்கலாம்ன்னு”
“இதை இப்போ குடிச்சா போதை இறங்கிடுமே குடிக்க மாட்டானே” என்று அவர் சொல்ல திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தாள்.
“குடிப்பார்” என்று பதில் சொன்னவள் வெந்நீர் வைத்து இறக்கி அதில் லெமன் ஜூசை பிழிந்து சிறிது சர்க்கரை சேர்த்து எடுத்துச் சென்றாள் உள்ளே. செல்லும் முன் “எதையும் யோசிக்காம போய் தூங்குங்க” என்றிருக்க தன்னைப் போல் தலையாட்டினார் அவர்.
“இதை குடிங்க” என்று அவனிடம் நீட்ட அதை வாங்கியவன் வெந்நீர் என நினைத்து அதை வாங்கி ஒரே மடக்கில் அருந்தியிருக்க குடித்த பின்னே தான் தெரிந்தது அது எலுமிச்சை சாறு என்று.
“இது எதுக்கு எனக்கு கொடுத்தே??”
“வாந்தி நிக்கத்தான்…” என்று அவள் சொல்லவும் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் எழுந்தவன் முன் தினம் எதுவுமே நடக்காதது போலவே இருந்தான். குளித்து முடித்து கடவுளை தொழுது விபூதி பூசி அம்சமாய் தயாராகி வந்திருக்க மகனை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டார் பூரணி.
“அம்மா இன்னைக்கு கறி வாங்கி அனுப்பறேன். மதியத்துக்கு பிரியாணி பண்ணிடுங்க. அப்படியே சிக்கன் 65 சேர்த்து பண்ணிடுங்க… நான் கடைக்கு கிளம்பறேன்” என்றவன் காலை உணவை கூட உண்ணவில்லை.
“இப்போ டிபன் சாப்பிடலையாடா நீ??” என்று அவர் கேட்க “இன்னைக்கு கார்த்திக் பாட்டிக்கு சாமி கும்பிடுறாங்க அங்க வந்து சாப்பிட சொன்னான் அவன்…”
“என்னமோ போ…” என்று மகனை திட்டிவிட்டு அவர் திரும்பி பார்க்க அருளாசினி நின்றிருந்தாள். “எப்போம்மா வந்தே??” என்றார் அவளிடம்.
“அவங்க பிரியாணி செய்ய சொல்லும் போதே வந்திட்டேன்” என்றாள் அவள்.
“அச்சோ மறந்திட்டேனே டேய் ருத்ரா பிரியாணி நீ தான்டா செய்யணும். சீக்கிரம் வீட்டுக்கு வந்திடு” என்றார் அவர் பெரிய தொண்டையை வைத்து.
வெளியில் வண்டியை எடுத்துக் கொண்டிருந்தவன் “சரிம்மோவ்” என்று கிளம்பிவிட்டான்.
“ஏன் அத்தை நீங்க பிரியாணி செய்ய மாட்டீங்களா??”
“நான் செஞ்சா அவனுக்கு பிடிக்காதும்மா. ஒண்ணு குழைச்சிட்டன்னு சொல்லுவான், இல்லைன்னா விதையா இருக்குன்னு சொல்வான், அதுவும் இல்லைன்னா ருசி இல்லைம்பான்மா. போடா இனிமே நீயே பண்ணிக்கோன்னு சொல்லிட்டேன் நானு”
“கறி குழம்பு, மீன் குழம்புன்னு எதை வேணும்னாலும் நான் வைச்சிடுவேன்மா. ஆனா இந்த பிரியாணி மட்டும் இவன் கேக்குறா போல எனக்கு வர்றதில்லை”
“இன்னைக்கு நான் பிரியாணி செய்யறேன்”

“என்னது!!” என்று அதிர்ந்தார் அவர்.
“மேல் வேலை எல்லாம் நான் செய்யறேன். சிக்கனை சுத்தம் பண்ணி போடுறதை மட்டும் நீங்க பண்ணுங்க” என்றாள் அவள்.
“அய்யோ அதெல்லாம் வேணாம்மா பாவம்…”
“ஒரு பாவமும் இல்லை. நான்வெஜ் சாப்பிடாதவங்க கூட நல்லா நான்வெஜ் செய்வாங்க தெரியும்ல…”
“நிஜவா சொல்றே??”
“நிஜம் தான்…”
“உனக்கு என்ன செய்யட்டும் மதியானம்”
“வெஜ் பிரியாணி செஞ்சுக்கறேன்”
“போதுமா”
“போதும்…”
காலை உணவை இருவரும் சேர்ந்து அருந்தினர். பூரணிக்கு அவளை பிரியாணி செய்ய வைக்க மனம் ஒப்பவில்லை. மகனுக்கு அழைத்தார், அவனோ அழைப்பை ஏற்கவில்லை.
‘எப்போ பார்த்தாலும் இப்படித்தான் பண்ணுவான். போன் எதுக்கு வைச்சுக்குறான் தெரியலை. இதுவே நாம எடுக்காம இருக்கட்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான். உனக்கெல்லாம் போனு ஒரு கேடான்னு’ என்று திட்டிக்கொண்டார் மகனை.  
‘இப்போ என்ன செய்ய அந்த பொண்ணை செய்ய வைக்கணுமா, பேசாம மேல வீட்டு கவிதாவை கூப்பிட்டா என்ன’ என்ற யோசனை ஓடியது அவருக்கு.
“அத்தை காய்கறி எல்லாம் இருக்கா??”
“மறந்திட்டேன்ம்மா இரு…” என்றவர் வெளியே வந்து கீழே நின்றவாறே குரல் கொடுத்தார் “கவிதா”
“என்னக்கா??”
“காய்கறி எடுத்துனு வருவாளே அவ வந்துட்டாளா”
“இனிமே தான்க்கா வருவா”

“அவ வந்தா எனக்கு குரல் கொடு. நான் வாங்க மாட்டேன்னு அவ கிளம்பிட போறா”
“சரிக்கா உங்களை வந்து பார்க்கச் சொல்றேன்” என்றாள் அப்பெண்.
“காய்கறி இப்போ வந்திடும்மா”
“மேல யார் இருக்காங்க”
“மேல இரண்டு வீட்டுக்காரங்க குடித்தனம் இருக்காங்க… அன்னைக்கு வந்தாங்களே கனகாவும் அப்புறம் கவிதாவும்”
“ஓ!!”
“துணி எல்லாம் எங்க காயப்போடுறது”
“பின்னாடி கொஞ்ச இடம் இருக்கே அங்கு போடும்மா… ஆமா துணி நீயா துவைச்ச” என்றவருக்கு அப்போது தான் அந்த நினைவே வந்தது.
“ஹ்ம்ம் ஆமா அத்தை இன்னைக்கு தான் துவைச்சேன். இவங்க வாந்தி வேற எடுத்திட்டாங்கள்ள அதையும் வாஷ் பண்ணேன்”
“அதெல்லாம் நீ ஏன்மா பண்ணே?? இங்க தான் வாஷின் மெஷின் இருக்கே. பாத்திரம் விளக்க துவைக்க, துணியை காயப்போடன்னு வேலைக்கு ஒரு ஆள் இருக்கு. அவ நாலு நாள் லீவு கேட்டிருந்தா அதான் நானும் மறந்திட்டேன். நீ இனிமே துணியை கையில அலசாத, மெஷின்ல போட்டுக்கலாம்” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க மாடி வீட்டு கவிதாவின் குரல் கேட்டது.
“பூரணிக்கா காய்கறி வந்திருக்கு பாருங்க, கேட்டை திறங்க” என்று குரல் கொடுக்க பூரணி மருமகளையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார்.
“உனக்கு என்ன காய்கறி வேணுமோ பார்த்து வாங்கிக்கோம்மா” என்றார் அவளிடம்.
“என்னா பூரணிக்கா நீ இதெல்லாம் வாங்க மாட்டியே. இன்னைக்கு அமாவாசையா என்னா??”
“உனக்கு இன்னாத்துக்குடி அதெல்லாம். காய்கறி தானே விக்கறே, பேசாம அந்த வேலையை பாரேன்” என்றார் பூரணி கடுப்பாய்.
“இது யாரு புதுச்சாகுது??”
“என் மருமவ”
“எத்தினியாவது??” என்று அவள் கேட்டுவிட அவளிடம் வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு சென்றார் அன்னப்பூரணி.

Advertisement