Advertisement

39
“ஆர். ருத்ரன்” என்ற அழைப்பில் அவ்விருவரும் திரும்பி பார்த்தனர்.
“எஸ் சார்” என்றனர் இருவரும் ஒருங்கே.
“யூ போத் ஆர். ருத்ரன்” என்றார் அவர்.
“சார் ஐ யம் ஆருத்ரன்” என்ற ருத்ரனை திரும்பி பார்த்தான் ஆர். ருத்ரன் என்ற அர்ஜுன்.
அர்ஜுன் வீட்டினரின் செல்ல அழைப்பு, ருத்ரன் என்பது அவனின் ஜாதகப் பெயர், பள்ளி, கல்லூரி சர்டிபிகேட்ஸ் அனைத்திலும் ருத்ரன் தான் அவனின் அடையாளம். அது அவனின் தாத்தா பெயரும் கூட. அதனாலேயே வீட்டில் அதை சொல்லி அழைப்பதில்லை.
“நான் கூப்பிட்டது ஆர். ருத்ரன்” என்றார் அவர் இப்போது.
“சாரி சார்” என்ற ருத்ரன் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அது தான் அவர்களின் முதல் அறிமுகம், ஏனோ அந்த சந்திப்பே அர்ஜுனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. அவர்கள் டெல்லிக்கு வந்த பிறகு அவன் படித்த இடங்களில் எல்லாம் அதே போன்ற பெயர் வேறு இருந்ததில்லை.
அவன் வகுப்பில் ஒரே பெயரில் நான்கைந்து பெயர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். அவன் பெயர் எப்போதும் தனித்து தெரியும், அதில் ஒரு அல்ப சந்தோசம் அவனுக்கு.
இப்போது அவன் கல்லூரி சேர வந்த இடத்தில் அவன் பெயர் போலவே இருந்த ஆருத்ரனை அவனுக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அவன் எப்படி போனா எனக்கென்ன என்னோட மேஜர் மட்டும் எடுக்காம இருந்தா போதும்’ என்று எண்ணிக்கொண்டு பணத்தை கட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அடுத்த ஒரு மாதத்தில் கல்லூரி தொடங்க அங்கு இருவரும் சந்தித்துக் கொண்டனர். ஆருத்ரனுக்கு மற்றவனை தெரிந்திருக்கவில்லை. அர்ஜுனுக்கு அவனை அடையாளம் தெரிந்திருந்தது.
‘இவன் எங்க இங்க வந்தான்’ என்று சலிப்பாய் உணர்ந்தான். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அவனுக்கு பிடித்தமில்லாமல் போன விஷயம் கடைசி வரை அப்படியே தொடர்ந்தது.
ஆருத்ரனுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை சிறு வயது முதலே இருந்தது. அவன் குடும்பத்தில் யாருமே அதிகம் படித்ததேயில்லை. அதுவே அவனை படிக்கத் தூண்டியது.
அவன் ஆசையை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற எண்ணிய அவன் தந்தை அவன் விரும்பிய படிப்பை படிக்க வைத்தார். தான் கஷ்டப்பட்டாலும் தன் மகனை நன்றாகவே படிக்க வைத்தார்.
ஆருத்ரனுக்கு யாருமே எட்டாத ஒரு உயரத்தை எட்ட வேண்டும் என்ற ஆசை. இவெனல்லாம் படிச்சு என்னாகப் போறான்னு என்று சொல்லியவர்கள் மத்தியில் படித்து பெரியாளாக வந்துவிட வேண்டும் என்ற அவா.
ஐஐடி டெல்லியில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் பள்ளியில் அவன் ஆசிரியர் அவனுக்குள் விதைத்த விதை. அவர் மாணவன் ஒருவன் படித்து நல்ல நிலையில் இருந்ததை மேற்கோள் காட்டியதில் அதை அப்படியே பிடித்து இதோ கல்லூரியிலும் சேர்ந்துவிட்டான்.
அங்கோ அவனை பார்த்த மற்ற மாணவர்கள் எல்லாம் அவனை ஊர்நாட்டான் என்பதைப் போலவே பார்த்தனர். அவன் அதற்கெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.
ஆங்கிலம் கூட அவனுக்கு சற்று தகராறு தான். முதல் அறிமுகப்படலத்தின் போது அவன் பேசியதை கேட்டு பலர் கொல்லென்று சிரித்திருந்தனர், அதில் அர்ஜுனும் ஒருவன்.
ஒருவன் முன்னேற தடையாக இருப்பதே மற்றவர்கள் பேசும் கிண்டல், கேலி, சீண்டல்,தலையீடு இதனால் தான். அதையெல்லாம் படியாகவே மாற்றி மேலே ஏறிச் செல்பவன் மட்டுமே வெற்றியை ருசிக்க தகுந்தவன்.
ஆருத்ரன் எண்ணம் ஒரே நேர்கோடாக மட்டுமே இருந்தது. அதனால் குறுக்கீட்டை கண்டு அவன் தயங்கவே இல்லை. முதல் நாள் கேலிக்கு ஆளானாவன் தன்னை செதுக்கிக் கொண்டு அடுத்து வந்த தேர்வில் தன்னை நிரூபித்திருந்தான்.
வகுப்பில் முதலில் வருபவர்கள் பட்டியலில் அவன் பெயர் எப்போதும் இருந்தது. அவனுக்கு அடுத்ததாக அர்ஜுனும் இருந்தான்.
அவர்களுக்கு ப்ராஜெக்ட் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அனைவருமே பார்த்து பார்த்து செய்தனர். ஏனென்றால் அது அவர்களின் சொந்தப் படைப்பாயிற்றே. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை பேராசிரியர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறியிருக்க கடுமையாக உழைத்தனர்.
அவர்களின் படைப்பை மேடையேற்றும் அந்நாளும் சிறப்பாக விடிந்தது. சிறந்த ஐந்தில் முதலிடத்தில் இருந்தவரின் பெயரை படிக்க மீண்டும் ஒரு குழப்பம் அங்கு ஆரம்பித்தது.
“பர்ஸ்ட் பிளேஸ் கோஸ் டு ஆருத்ரன்” என்று அவர்கள் சொல்ல அர்ஜுன் மகிழ்ச்சியோடு எழுந்து முன்னே வர ஆருத்ரனும் பின்னோடு வந்திருந்தான்.
மேடைக்கு இருவருமே வந்து நிற்கவும் அங்கிருந்தோரும் சற்று குழம்ப பெயர் சரிபார்க்கப்பட்டு ஆருத்ரன் என்று சொல்ல அர்ஜுன் பெரிதாய் அடிவாங்கினான் அங்கு. அவனின் படைப்பும் நான்காவதாக தேர்வாகி இருந்த போதும் அவனால் சந்தோசப்படவே முடியவில்லை.
“ப்ளீஸ் எக்ஸ்பிளைன் யுவர் ப்ராஜெக்ட்” என்று ஆருத்ரனை பார்த்து மேடையில் இருந்தவர் சொல்ல அவனுடன் படிப்பவர்கள் சிரிப்பை மென்றுக் கொண்டிருக்க கம்பீரமாய் மேடையேறியவன் எளிய ஆங்கிலத்தில் அனைவருக்கும் புரியும் விதமாக அதை விளக்க முதல் நாள் அறிமுகப்படலத்தில் இருந்த பேராசிரியர் கூட அவனை வியந்து தான் பார்த்தார்.
அர்ஜுனுக்கு தான் முதலாவதாக வரமுடியவில்லையே என்ற ஆதங்கம் இன்னமும் அதிகமாகியது. அவன் பெயர் கொண்டவன் அனைத்தும் சாதிக்கிறான் தான் இன்னமும் பின் தங்கியே இருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது.
அதோ இதொவென்று அவர்களின் இறுதியாண்டும் வந்திருந்தது. ஆருத்ரனுடன் எப்போதும் போல் மற்ற மாணவர்கள் தள்ளியே தானிருந்தனர் ஓரிருவர் தவிர. கேட்கவே வேண்டியதில்லை அதில் நம் அர்ஜுனும் ஒருவனே.
இறுதியாண்டு தேர்வுகளும் முடிந்திருந்தது. ஆருத்ரனின் ப்ராஜெக்ட் சிறந்த படைப்பாக தேர்வாகி இருந்ததில் அவனுக்கு நான்கைந்து கம்பெனியில் இருந்து வேலை தேடி வந்திருந்தது.
அர்ஜுன் என்று ஒருவன் இருப்பதை ஆருத்ரன் எப்போதும் கண்டுக்கொண்டதேயில்லை. உடன் படிப்பவன் என்ற எண்ணம் தவிர வேறு இருந்ததில்லை.
பட்டமளிப்பு விழா நடந்துக் கொண்டிருக்க மீண்டும் அவர்களின் இருவரின் பெயர் குழப்பம் வந்தது. இந்த முறை படித்தவர் ஆர். ருத்ரன் என்றே படித்துவிட ஆருத்ரனை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்து மேடைக்கு சென்ற அர்ஜுன் பட்டத்தை சந்தோசமாய் வாங்கிக் கொண்டு திரும்பியவன் அதில் இருந்த பெயரை பார்த்து முகத்தை சுருக்கினான். அப்பட்டமான எரிச்சலை அவன் முகம் காட்டிவிட அதை வாங்கியவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவர் ஒன்றும் புரியாமல் விழித்து நிற்க பேராசிரியர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது. முதல் வருடமும் ப்ராஜெக்ட்டின் போதும் நடந்த விஷயம் அவர்களுக்கு நினைவிருக்க அதன் பிறகு இருவரின் பெயரையும் தெளிவாகவே அவர்கள் சொல்ல ஆரம்பித்திருந்தனர்.
பட்டமளிப்பு விழா அனைத்து துறைகளுக்குமானதாக இருக்க அதன் பொறுப்பை வேறு துறையில் உள்ளவர் தான் படித்திருந்தார். அதன் பொருட்டே மீண்டும் அக்குழப்பம்.
இம்முறை ஆருத்ரனின் பெயரை அவனின் பேராசிரியரே உரைக்க அவன் மேடையேறினான். கண்கள் கலங்கிப் போனது அவனுக்கு, அவனே இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் அந்நொடி அதை ஆழ்ந்து அனுபவித்தான்.
அர்ஜுனுக்காய் ஒரு நொடி அவன் மனம் வருந்தத் தான் செய்தது. ஆனாலும் இதில் அவன் தவறென்ன அதன் பின் அவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். அர்ஜுனும் நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தான்.
ஆருத்ரன் மூன்றாமிடத்தில் இருக்க அர்ஜுன் ஏழாம் இடம் பெற்றிருந்தான். ஆருத்ரன் அங்கேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான். அதே நிறுவனத்தில் அவனுக்கு அடுத்த பதவியில் ருத்ரனுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்க அதை மொத்தமாய் மறுத்திருந்தான் அவன்.
“ஏன்டா உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு. அந்த கம்பெனி தான் பெரிய கம்பெனி அதுல வேலை கிடைக்கணும்ன்னு நீ எத்தனை தடவை சொல்வே. இப்போ அந்த கம்பெனில வேலை வீடு தேடி வருது வேண்டாகிறே” என்றார் அவன் அன்னை.
“ம்மா ப்ளீஸ் பேசாம இருங்க நீங்க.. என்னை வெறுப்பேத்தாதீங்க. எனக்கு அந்த வேலை வேண்டாம்ன்னா வேண்டாம் தான்” என்றான் அவன் முடிவாய்.
“அதான் எதுக்கு வேண்டாம்ன்னு கேட்கிறேன்” என்றார் அவரும் விடாது.
“அந்த ஆருத்ரனுக்கு கீழ என்னை வேலை பார்க்க சொல்றீங்களா??”
“என்னடா சொல்றே??”
“நான் தான் சொல்லி இருக்கேன்ல என் பேரை வைச்சுட்டு ஒருத்தன் என் கூட படிச்சான்னு”
“அதுக்கென்ன இப்போ அவன் எங்க வேலை பார்த்தா உனக்கென்ன. நீ ஆசைப்பட்ட கம்பெனிடா அந்த வேலையை உதறி தள்ளுவியா நீ. படிச்ச முட்டாள்ன்னு உன்னைத் தான்டா சொல்லணும்” என்று திட்டினார் அவர்.
“விடும்மா அவன் தான் வேண்டாம்ன்னு சொல்றான்ல. சும்மா அவனை சத்தம் போட்டுட்டு இருக்கே” என்ற அவன் தந்தை “அப்புறம் அர்ஜுன் நீ வேற என்ன பண்ணுறதா இருக்கே”
“எனக்கு தனியா கம்பெனி ஆரம்பிக்கணும்”
“அதுக்கு உனக்கு அனுபவம் வேணாமா??”
“அந்த அனுபவம் கம்பெனி ஆரம்பிச்சாலும் கிடைக்கும்” என்றான் அவன்.
“அர்ஜுன் உன் மேல எனக்கு அதிகமா நம்பிக்கை இருக்கு. ஆனாலும் என் திருப்திக்காக நீ ஒண்ணு செய்வியா” என்றார் அவர்.
“சொல்லுங்கப்பா”
“அந்த கம்பெனிக்கு நீ வேலைக்கு போகணும்”
“ப்பா!!” என்றான் அதிர்ந்து.
“நான் இன்னும் முடிக்கலை. நீ அந்த கம்பெனிக்கு வேலைக்கு போ, இல்லையா வேற கம்பெனிக்கு போறதுனாலும் சொல்லு நானே என் பிரண்ட்ஸ்கிட்ட பேசறேன். ஒரு மாசம் அங்க நடக்கிறதை பாரு. அப்புறம் வந்து சொல்லு நீ என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறேன்னு” என்றார் அவர்.
அவர் சொல்வதும் அவனுக்கு சரியாகவே பட வேறு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தான். ஆருத்ரன் வேலையில் கெட்டியாய் இருக்க அவன் டிசைன் செய்த கட்டிடங்கள் நகரத்தில் ஆங்காங்கே எழும்பியது அழகாய். அங்கும் அவன் ஆருத்ரனை தான் போட்டியாக நினைத்தான். அவன் வேலை பார்த்த அலுவலகமும் ஆருத்ரன் வேலை செய்த இடமும் போட்டி கம்பெனிகள்.
எல்லா வேலையும் முடியும் தருவாயில் இறுதியாக ஆருத்ரன் செய்யும் டிசைன்ஸ் மட்டுமே பெரும்பாலும் உறுதியாகிவிடும். எல்லாம் சேர்ந்து அர்ஜுனை இன்னமும் வெறியாக்கி ஒரு முறை ஆருத்ரனிடம் நேரிலேயே சண்டையும் போட்டிருக்கிறான் ஒரு ப்ராஜெக்ட் கை நழுவி சென்ற போது.
“என்னடா பண்றே நீ?? நான் என்ன செஞ்சேன் உன்னை. யாரோடது நல்லா இருக்கோ அதை தானே அவங்க ஓகே பண்ணுவாங்க. நான் என்ன உன்னோட உழைப்பையா திருடினேன். தவிர இதை செலக்ட் பண்ணுற இடத்துலயும் நான் கிடையாது. நடக்குறதுக்கு நீ ஏன் என்னை பொறுப்பாக்குறே” என்று அப்போதே எடுத்து சொன்னான்.
அது அர்ஜுனுக்கு புரிந்தால் தானே. இதோ அது அருளாசினியை கடத்தி கொண்டு வந்து வைக்கும் அளவில் வந்து நிற்கிறது.
ஏதேச்சையாய் தான் அவன் அருளாசினியை ஸ்ரீரங்கத்தில் சந்தித்தான். பார்த்ததுமே அவனுக்கு அதிர்ச்சி தான், அவளிடத்தில் கேட்க பிறகு சொல்கிறேன் என்று அவள் சொல்லிவிட தனக்கு விதித்தது அவ்வளவு தான் என்று தான் தோன்றியது அக்கணம்.
அதற்கு மேல் பெரிதாய் அவன் யோசித்திருக்கவில்லை. அடுத்த முறை அவளை ஆருத்ரனுடன் சந்தித்த போது தான் அவனுக்குள் அப்படியொரு தீராத வெறி எழுந்தது.
அவன்கிட்ட என்ன இருக்குன்னு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. எனக்கென்ன குறைச்சல் என்று அங்கும் அவன் ஒப்பீடே செய்து ஓய்ந்து போனான். அதன் பின்னே தான் அவளிடம் அவளைப்பற்றி விசாரித்தான்.
அவள் வாயாலேயே ஒவ்வொன்றும் கேட்டறிந்துக் கொண்டான். தெளிவாய் திட்டம் தீட்டி வருணை அதில் சிக்க வைத்து இவன் அவளை கடத்தி வந்திருந்தான். 
ஒரு வேளை ஆருத்ரன் அருளாசினி அவளை விட்டு ஓடிவிட்டாள் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணியவன் வேண்டுமென்றே அவள் துணிமணிகள் நகைகள் அனைத்தும் அவன் ஆட்களை வைத்து கொண்டு வந்திருந்தான்.
அவளை கடத்த வேறு காரணமும் அவனுக்கிருந்ததே அது தற்போது ஆருத்ரன் மீண்டும் அவனுடன் போட்டி போடுவது தான். இந்த முறை ஆருத்ரனை தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்குள்.
நடந்த விஷயத்திற்கு அருளாசினியின் குடும்பத்தினர் என்பது போல் செய்திருந்தான். அவளின் குடும்பத்தினரை பொறுத்த வரையில் வேண்டாம் என்றால் ஒதுங்கி ஒதுக்கிவிடுவர் அவ்வளவே. அவர்களை தேடிச் சென்று எதையும் செய்ய அவர்கள் எப்போதும் முனைந்ததில்லை.
ஆருத்ரனுக்கு சந்தேகமே அந்த இடத்தில் தான் ஆரம்பித்திருந்தது. அவர்களின் வீட்டிற்கு சென்று அவன் சத்தமிட்ட போது அவர்கள் பெரிதாய் எந்த ரியாக்சனும் காட்டியிருக்கவில்லை. அப்போது தான் அவளின் அண்ணன் முறையில் இருந்த ஸ்ரீவத்சன் அவனுக்கு போன் செய்திருந்தான். “ஹலோ நான் ஸ்ரீவத்சன் பேசறேன் அருளோட அண்ணன்”
“என்ன??” என்றான் ஆருத்ரன்.
“வீடியோ கால் வர்றீங்களா உங்ககிட்ட பேசணும்” என்றவன் சொல்ல ஆருத்ரனும் அவனுக்கு போன் செய்தான் அவன் சொன்னது போலவே.
“எப்படியிருக்கீங்க??”
“ஹ்ம்ம் இருக்கேன்”
“நீங்க வீட்டுக்கு வந்தீங்கன்னு என்னோட தங்கச்சி சொன்னா… அருள் எப்படியிருக்கா??”
“எப்படி இருக்கா?? எங்க இருக்கான்னு நீங்களும் உங்க குடும்பமும் தான் சொல்லணும்” என்றான் ஆருத்ரன் கோபமாகவே.
“நிஜமாவே எங்களுக்கு தெரியாதுங்க. எனக்கு அருளை ரொம்ப பிடிக்கும், என்னோட தங்கச்சி சகுந்தலா மாதிரி தான் அவளும் எனக்கு”
“எங்க வீட்டில பிடிக்கலைன்னா ஒதுங்கிடுவாங்க தவிர இப்படி எல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க. அவங்களுக்காக வக்காலத்து வாங்க நான் இப்போ உங்ககிட்ட பேசலை. அருள் பத்தி தெரிஞ்சுக்கத்தான் பேசினேன்”
“நான் ஸ்ரீரங்கம் வந்திருக்கும் போது அவளை நேர்ல பார்த்தேன்.  ஆனா என்கிட்ட பேச மாட்டேன்னு கோவிச்சுக்கிட்டு போய்ட்டா. அவகிட்ட சொல்லுங்க நான் எப்பவும் அவளுக்கு அண்ணன் தான். மத்தவங்க மாதிரி நான் அவளை ஒதுக்கலைன்னு”
“இப்போ என்ன நீங்க நல்லவர்ன்னு நான் ஒத்துக்கணுமா??”
“அவசியமில்லை எங்களை நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம். அருள் கண்டிப்பா நல்லா இருக்கான்னு உங்களை பார்க்கும் போது எனக்கு புரியுது. கண்டிப்பா அவ சீக்கிரம் உங்ககிட்ட வருவா. நான் வேண்டிக்கறேன், அவ கிடைச்சதும் என்னை நீங்க நம்பினா போன் பண்ணுங்க” என்று சொல்லி அவன் வைத்துவிட்டான்.
அப்போது ஆரம்பித்தது தான் அவனுக்கு குழப்பம். அதனால் தான் அவன் திருச்சியில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டிருந்தான். எங்கு ஆரம்பிப்பது என்று புரியாதிருந்த வேளையில் தான் சிசிடிவி கைக்கொடுத்தது. இளமாறனின் வருகை அனைத்தையும் உறுதி செய்தது. ஆருத்ரனுக்கு புரியாதது அர்ஜுன் எதற்காய் அருளாசினியை கடத்த வேண்டும் என்பதே.
அடுத்த இரண்டே நாளில் அருளாசினியின் முன் வந்து நின்றான் ஆருத்ரன். அர்ஜுனின் எண்ணத்தை முறியடித்து அருளாசினியையும் அவனிடமிருந்து எவ்வாறு மீட்டு வெற்றி கொள்வானாவென பார்போம்.

Advertisement