“நானே தான் அருள், என்னை உனக்கு அடையாளம் தெரியலையா??” என்றான் வேண்டுமென்றே ஆருத்ரனின் குரலில்.
“அர்ஜுன் விளையாடாத ஒழுங்க பேசு”
“உன் கூட விளையாடி இனிமே எனக்கு என்னாக போகுது சொல்லு. ஆனாலும் உங்கப்பாக்கு ரொம்ப தான் ஓரவஞ்சனை உன்னை பொண்ணு கேட்டா என்கிட்ட முடியாது என் பொண்ணு வேலை பார்க்கணும்ன்னு பிரியப்படுறா அது இதுன்னு என்னென்னவோ கதைவிட்டாரு”
“கடைசியில நீ இப்படி எவனுக்கோ கழுத்தை நீட்டிட்டு நிக்கறே. எனக்கென்ன குறைச்சல் உங்கப்பாக்கு ஏன் என்னை பிடிக்கலை??”
“அர்ஜுன் நீ என்னை விரும்பினியா??”
“நடிக்காதடி உனக்கு கொஞ்சம் கூட தெரியாமலா போச்சு”
“நீ என்கிட்ட சொன்னியா அப்படி, எப்போவாச்சும் அப்புறம் எப்படி எனக்கு தெரியும்”
“சொல்லியிருந்தா உடனே ஓகே சொல்லியிருப்பியா”
“தெரியாது” என்றாள்.
“உனக்கு சர்பிரைஸ் பண்ணலாம்ன்னு உங்கப்பாகிட்ட பேசி ஓகே வாங்கிட்டு அப்புறம் உனக்கு சொல்லலாம்ன்னு இருந்தா எனக்கு ஆப்பு வைச்சுட்டான் உங்கப்பன்”
“எங்கப்பாவை தப்பா பேசாத அர்ஜுன். நீ சின்னப்போ பார்த்தப்போ இப்படி இல்லையேடா”
“சின்ன வயசுல நீ கூட தான் அஜு அஜுன்னு என்னையே சுத்தி சுத்தி வருவ”
“இப்பவும் நீ என்னோட அஜு தான்டா”
“இன்னொரு தடவை சொல்லு”
“அஜு நீ என்னோட பிரண்ட்டா”
“போடி பிரண்டாம் பிரண்டு”
“என்னை எதுக்கு கடத்தினே?? என்ன வேணும் உனக்கு??”
“நேரா விஷயத்துக்கே வந்திட்ட போல. ஹ்ம்ம் ஓகே நானும் நேராவே சொல்லிடுறேன். எனக்கு இரண்டு விஷயம் முடியணும்”
“என்ன??”
“நீ குழந்தையை பெத்து உன் புருஷன்கிட்டே கொடுத்திட்டு என் கூட வந்திடு. அவன் உனக்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லை அருள்”
“அர்ஜுன்!!” என்றாள் கோபமாய்.
“அதுக்காக தானே அவன் உன்னை கட்டிக்கிட்டான். அப்புறம் எதுக்கு என்னை கத்துறே…”
“அவர் அப்படி கிடையாது”
“அவனுக்கு பொண்டாட்டி ஓடி போறது எல்லாம் புதுசில்லை அருள். நீ என் கூட ஓடி வந்திடு, ஐ ஸ்டில் லவ் யூ. இன்னும் எனக்கு ஒரு கல்யாணம் கூட ஆகலை தெரியுமா”
“ச்சீய்!! டேய் ஏன்டா இப்படி பேசறே?? உனக்கு அறிவில்லை”
“நெறைய அறிவிருக்கு, அதான் இப்படி பேசிட்டு இருக்கேன்”
“உன்னை என்னோட பிரண்டுன்னு நினைச்சு நான் எல்லாம் சொன்னது என்னோட தப்பு தான்டா. பிரண்டா இருந்தா கூட கணவன், மனைவிக்கு இடையில நடக்குற விஷயத்தை பேசக்கூடாதுன்னு நீ எனக்கு புரிய வைச்சுட்டடா”
அர்ஜுன் இகழ்ச்சியாய் ஒரு புன்னகை புரிந்தான். அர்ஜுன் அருளாசினியின் பால்யகால நண்பன். அவளின் வயதினன் அல்ல, அவளை விட பெரியவன், அவள் வீட்டின் அருகில் தான் அவனது வீடும்.
அடுத்த வீடே அவர்களது தான், யாருடனும் பெரிதாய் பொருந்திப் போகாதவளின் ஒரே நண்பன் அவன் மட்டுமே. அவனுமே சில வருடங்களில் அவனின் தந்தைக்கு வேலை மாற்றலாகி இருக்க வேறு இடம் பெயர்ந்தான்.
அந்த வீடு அப்போதும் அவனது வீடாகவே தான் இருந்தது. எப்போதாவது விடுமுறைக்கு அவன் அங்கு வருவான். அருளாசினி அவன் வரும் பொழுதுகளில் அவனுடன் தான் இருப்பாள்.
அது அவள் பெரிய பெண்ணாகி இருந்த தருணம். பள்ளியில் இருந்து அவளை அப்போது தான் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். அவளின் தந்தை கோவிந்தனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அவரின் அண்ணன் வீட்டினருக்கு நேரிலேயே சென்று சொல்லிவிட்டு சீக்கிரம் வருமாறு கேட்க அவர்களோ “என்ன கோவிந்தா இதுக்கெல்லாம் போய் எங்களை கூப்பிட்டுக்கிட்டு. உன் பொண்டாட்டி வீட்டில இருந்து தான் வந்து முறை செய்யணும்” என்றார் அவரின் அண்ணன்.
அதற்கு மேல் அங்கிருக்க அவருக்கு பிடிக்கவில்லை. அவரின் மனைவியுடன் பிறந்தவர்கள் யாருமில்லை என்றே தெரிந்தே அவர்கள் பேசுவது தான் அப்போது அவருக்கு வேதனையாக இருந்தது.
அவர்களின் எண்ணம் புரியவும் கிளம்பிவிட்டார். வீட்டிற்கு வந்தால் அப்போது தான் அர்ஜுனின் அன்னை வந்தார் அங்கு.
“என்னண்ணா எங்க போயிட்டு வர்றீங்க. இப்போ தான் நம்ம அருளுகூட படிக்கிற சுகந்தி சொன்னா அருளு பெரிய மனுஷியாகிட்டான்னு. உடனே கிளம்பி வர்றேன் பார்க்கலாம்ன்னு”
“அம்மா எனக்கு ஒரு உதவி செய்யணும்”
“சொல்லுங்கண்ணே”
“எனக்கு என்ன பண்ணனும் தெரியலை. கொஞ்சம் உதவி பண்றியா” என்று அவர் கேட்கவும் அவருக்கு என்னவோ போலானது.
“நான் செய்ய மாட்டேனா” என்று சொல்லியவர் தானே அவளுக்கு அனைத்தும் செய்தார். அவருக்கு கோவிந்தனின் பழக்க வழக்கம் தெரியவில்லை. அவரிடம் கேட்டால் அவருக்கும் பெரிதாய் தெரிந்திருக்கவில்லை.
அதனால் தங்கள் வீட்டில் என்ன செய்வார்களோ அது போலவே எல்லாம் செய்தார் அவர். அர்ஜுனும் அப்போது அவருடன் வந்திருக்க அவன் தான் அவளுக்கு மாமன் முறையாய் எல்லாம் செய்தான்.
அவளின் மனதில் எப்போதும் போல் அது நண்பனாகவே பதிந்திருக்க அர்ஜுனின் மனதில் தான் அது வேறு மாதிரியான தாக்கத்தை உருவாக்கியிருந்தது. அரும்பு மீசை முளைவிட்டிருந்த தருணம் அது.
தொலைக்காட்சியில் காதல் பாடல்களை பார்த்த காலம். தோழியாய் இருந்தவளின் மீதான அவனின் பார்வை மாறியிருந்தது. அவனின் அன்னை வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப்பாவாடை தாவணியில் பெரிய பெண்ணாய் அமர்ந்திருந்தவளின் மீதே அவன் மொத்த பார்வையும் இருந்தது.
ஊருக்கு சென்றாலும் அவ்வப்போது அவன் அங்கு வருவதுண்டு. அது அருளாசினியை பார்ப்பதற்காய் மட்டுமே. அவள் எப்போது அவனைப் பார்த்தாலும் நண்பனாய் பார்த்து பேசியது அவனுக்கு பிடிக்கவில்லை.
தன்னைப் போல அவளின் மனதிலும் ஒரு பிடித்தம் உருவாக வேண்டும் என்று எண்ணினான். ஊருக்கு வந்தாலும் அவளைப் பார்ப்பதை தவிர்த்தான்.
அவனின் அன்னை மூலமாக அது அவளை வந்தடைந்தாலும் அவனுக்கோ ஏதோ வேலை என்று அவள் எண்ணியிருக்க அவன் எண்ணமோ இந்த விலகல் அவளுக்கு தன் மீது பிடித்ததை ஏற்படுத்தும் என்று நினைத்தான்.
அவன் அன்னை அவளின் வீட்டில் இருந்து வந்ததுமே கேட்பான் “அம்மா அருள் என்னைக் கேட்டாளா” என்று.
“அவ உன்னைத் தவிர வேற யாரைடா கேட்கறா. என்னைப்பத்தி கூட கேட்கலை உன்னைத்தான் விசாரிக்கறா” என்று அவர் சொன்னது அவனுக்கு அவ்வளவு உவப்பாக இருந்தது அப்போது.
அதன் பின் அவன் படிப்பில் கவனமாகிவிட அவனுக்கு அருளாசினியின் நினைவு ஒரு ஓரத்திற்கு சென்றுவிட்டது. படித்து முடித்து ஒரு கட்டுமான நிறுவனத்தை நிறுவி ஒரு நிலைக்கு வந்த பின்னே தான் அருளின் தந்தையை வந்து பார்த்தான் அவளை பெண் கேட்டு.
அவரின் எண்ணமோ மகளை தன் கண் பார்வையிலேயே வைத்து நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். இதே ஊரிலேயே அவளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணமாக இருந்தது.
தவிர மகள் அர்ஜுனை நண்பனாக தான் பார்க்கிறாள் என்பதும் அவரறிவார். மகளின் ஆசிரியர் கனவும் அறிந்தவராதலால் அவனின் கோரிக்கையை இதமாக மறுத்துவிட்டிருந்தார்.
அப்போது போனவன் தான் மீண்டும் திரும்பி வந்த போது அருளாசினி வயிறு பெரிதாய் அவன் முன் நின்றிருந்தாள், பேரதிர்ச்சி அவனுக்கு.
மாடியில் துணி காயப்போட வந்தவளை பார்த்தவன் “அருள்” என்று குரல் கொடுத்து விட்டிருந்தான்.
“ஹேய் அர்ஜுன் நீ எப்போடா வந்தே??” என்றாள் உற்சாகத்துடன்.
“நான் வந்தது இருக்கட்டும். இதெல்லாம் எப்போ நடந்துச்சு” என்றான் அவளின் வயிறை சுட்டிக்காட்டி.
“அதெல்லாம் பெரிய கதை அஜு நாம இன்னொரு நாள் பேசுவோம். வீட்டுக்கு வாடா” என்றாள் அவள்.
“ஹ்ம்ம் வர்றேன்” என்று நகர்ந்துவிட்டான் அவன்.
மீண்டும் ஒரு நாள் அவளை நேரில் பார்த்தவன் அவளை அருகில் இருந்த பார்க்கிற்கு அழைத்துச் சென்று அவளைப் பற்றி மொத்த விபரங்களையும் அவள் வாயாலேயே சொல்ல வைத்திருந்தான்.
தன் நம்பிக்கையான சிநேகிதன் என்றெண்ணி அவள் அனைத்தும் பகிர்ந்திருந்தாள். அதை தான் சொல்லிக் காட்டியிருந்தான் அவன்.
“பிளாஸ்பேக் எல்லாம் ஓட்டி பார்த்திட்டியா அப்புறம் என்ன முடிவு பண்ணியிருக்க அருள்??”
“நான் என்ன முடிவு எடுக்கணும்??”
“உன்னோட குழந்தையை பெத்து அவன்கிட்ட கொடுத்திட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கறது பத்தி”
“முட்டாள் மாதிரி பேசாதே அர்ஜுன்”
“ஹேய்” என்று கத்தினான் அவன்.
“முட்டாள் தான்டா நீ, அப்படித்தான் சொல்வேன். பேசாம என்னை கூட்டிட்டு போய் அவர்கிட்ட விட்டிருடா”
“என்னது அவன்கிட்ட விடுறதா அது மட்டும் இப்போதைக்கு நடக்காது. முடிவா கேட்கறேன் என்னை கல்யாணம் பண்ணிக்கறது பத்தி உன்னோட எண்ணம் என்ன??”
“அது நடக்கவே நடக்காது”
“அவன் என்ன அவ்வளவு பெரிய இவனா”
“அர்ஜுன்!!” என்று கண்டிப்பாய் சொன்னவள் “ஆமா அவர் தான் எனக்கு எல்லாம்” என்றாள் சேர்த்து.
“அவன் என்னைவிட என்ன உசத்தியா இருக்கான்”
“அவர் எனக்கு எல்லா விதத்திலயும் உசத்தி தான் போதுமா”
“ஓகே” என்றவன் ஏதோ சொல்ல வர அருளாசினிக்கு அவள் வருணனை தான் கடைசியாய் பார்த்தது ஞாபகத்தில் வந்தது.
குழப்பம் மேலிட அர்ஜூனிடம் “நான் வருணை தானே லாஸ்ட் டா பார்த்தேன். அப்போ நீ தான் அவனை இதுல இழுத்துவிட்டிருக்கணும். ஏன் அப்படி செஞ்சே??”
“அப்போ தானே அவன் பேர்ல பழி விழும் அதுக்கு தான். அவன் ஒரு லூசு நான் சொன்னது எல்லாம் நம்பிட்டான். உன்னைத் தேடி இங்க வந்தவனை என் வேலைக்கு யூஸ் பண்ணிகிட்டேன்”
“அவன் எங்கே இப்போ??”
“பத்திரமா தான் இருக்கான். வேலை முடியட்டும் அப்புறம் அனுப்பிக்கறேன்”
“என்னையும் அனுப்பிடுவியா அர்ஜுன்” என்றாள்.
“அதுக்காக உன்னை இங்க கூட்டிட்டு வரலைன்னு சொன்னேன்ல. நான் முன்னாடியே ஒரு விஷயம் சொன்னேன் நீ கவனில்லையா??”
“என்ன”
“எனக்கு இரண்டு விஷயம் முடியணும்ன்னு சொன்னேன். ஒண்ணு முடியாதுன்னு உன் பேச்சுலவே தெரிஞ்சிடுச்சு”
“இன்னொன்னு தான் ரொம்பவும் முக்கியமானது”
“என்ன அது”
“அந்த ருத்ரனை நான் ஜெயிக்கணும்”
———–
“இது யாருன்னு தெரியுதா??” என்று இன்னொரு படத்தையும் காட்டினான் ஆருத்ரன் அந்த ஸ்ரீவத்சன் என்பவனிடம்.
“தெரியலை…”
“நிஜமா தெரியலையா??”
“தெரிஞ்சா தெரியுதுன்னு சொல்லப்போறேன், நான் ஏன் பொய் சொல்லணும்” என்றான் அவன்.
“நல்ல உறவுகள் நீங்க” என்றான் ஆருத்ரன் மற்றவனை கிண்டலாய்.
“இங்க பாருங்க வீட்டில பெரியவங்க அந்த காலத்து ஆளுங்க இன்னும் பழமை மாறாம இருக்காங்க. அதுக்காக நானும் அப்படியே இருப்பேன்னு நீங்க நினைக்க வேண்டாம். எனக்கு அருள் நல்லா இருந்தா அதுவே சந்தோசம் தான்” என்றான் அவன்.
“நீங்க அவளுக்கு எந்த வகையில உறவு??”
“அதான் சொன்னேனே அண்ணன்னு. அவங்கப்பாவோட சொந்தம் தான். நான் ஜாப் கிடைச்சு பாரின் போயிட்டேன் அதனால இங்க நடந்தது எதுவும் எனக்கு தெரியாது”
“ஏன் யாரும் போன் பண்ணிக்கூட சொல்ல மாட்டாங்களா??”
“அவங்க ஊரை விட்டு வேலை விஷயமா போனது தெரியும். அப்பா இறந்தது தெரியும், அருளுக்கு கல்யாணம் ஆனது எல்லாம் அவளை நேர்ல பார்த்தப்போ தான் தெரியும்”
“அப்புறம் இன்னும் எவ்வளவு நேரம் நீ என்கிட்ட கதை சொல்லிட்டே இருப்பே சொல்லுடா. நீ சொல்றது எல்லாம் நான் நம்புறேன்னு நினைப்பா உனக்கு”
“அது சரி நீ ஸ்ரீவத்சனா நான் நம்பிடுவேனா. அவ வீட்டில இருக்கவங்களை நான் தெரிஞ்சுக்காம கூடவா இருப்பேன். அந்த ஸ்ரீவத்சன் இப்போ அமேரிக்கால இருக்கான். பார்க்கறியா இல்லை அவன் கூட பேசறியா??”