Advertisement

36
ருத்ரன் என்ற பெயரை கேட்டதில் இருந்து அருளாசினிக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்க அது மீண்டும் மீண்டும் ருத்ரனிலேயே வந்து நிற்க அமைதிப்படுத்த முடியவில்லை அவளால். அப்படியே கண் மூடி படுத்துவிட்டாள்.
“அம்மா அம்மா…” என்று அப்பெண்மணி கதவை தட்டும் சத்தம் கேட்டும் திறக்கவில்லை அவள். அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.
மறுநாள் காலையில் மனம் சற்றே தெளிந்திருக்க மீண்டும் அவரின் முன் சென்று நின்றாள். “ஏன்மா நேத்து நீ சாப்பிடாமலே படுத்திட்டியே, குழந்தைக்கு என்னாகறது. இந்தா முதல்ல இதைக்குடி” என்று சொல்லி அவளிடம் பாலை நீட்டினார். மறுக்காமல் அதை வாங்கி அருந்தினாள். 
“உங்ககிட்ட போன் இருக்கா??”
“இருக்கும்மா”
“எடுங்க அதை”
“இந்தாம்மா” என்றவர் ஒரு அதர பழசான மொபைலை அவளின் முன் நீட்டினார். 
அதை வாங்கி அவள் அதில் இருக்கும் எண்களை பார்வையிட்டாள். ஒரு எண் கூட அவளுக்கு தெரிந்த எண்ணாக இல்லை. அதில் வெறும் எண்கள் மட்டுமே பதிவேற்றி இருந்தார், பெயரில்லை.
அவள் ஆருத்ரனின் எண்ணை அழுத்தி காதில் வைக்க மொபைலில் பேலன்ஸ் இல்லையென்றது. “இதுல காசு போடலையா நீங்க”
“நான் யாருக்கும்மா போட்டு பேச எனக்கு சொந்தமா பந்தமா. புருஷன் செத்து இருவது வருஷமாவுது. புள்ளையும் கிடையாது, சொந்தப்பந்தம் எல்லாம் வேணாம்ன்னு தான் நான் இங்க வந்து வேலை பாக்குறேன்” என்றார் அவர்.
இன்னமும் அவள் மனம் அமைதியடையவில்லை. எதுவோ சரியில்லை என்றே தோன்றியது அவளுக்கு இன்னமும். ஏதோ பக்காவாக பிளான் செய்து செய்தது போலவே உணர்ந்தாள்.
கடைசியாக நடந்த விசயங்களை ஞாபகம் செய்து பார்த்தாள். அவளின் சீமந்தம் நடந்தது ஆருத்ரனும் அவளும் மொட்டைமாடியில் மனம்விட்டு பேசியது எல்லாம் நினைவிற்கு வந்தது.
அன்னப்பூரணி வேலைக்கு லீவு சொல்லிவிட்டு சென்னைக்கு கிளம்பலாம் என்று சொன்னதும் அவள் சரியென்று சொன்னதும் ஓரிரு நாட்களிலேயே அவள் அதற்கான முயற்சி எடுத்திருக்க லீவும் ஓகே ஆகியிருந்தது.
அவளுக்கு நினைவிற்கு வந்துவிட்டது. ‘அன்னைக்கு வருண் தானே வந்தான். அவன் ஏதோ சொன்னானே அதுக்கு பிறகு தான் எனக்கு எதுவுமே ஞாபகத்தில இல்லை’ என்ற ஞாபகம் வர வேலை செய்யும் பெண்மணியை முறைத்து பார்த்தாள்.
“வருண் உங்களுக்கு என்ன வேணும்” என்றாள் அதே முறைப்போடு.
“வருண் யாரும்மா??” என்றார் அவர்.
“எனக்கு தெரியும், வருண் தான் என்னை இங்க கடத்தி வைச்சிருக்கான். என்ன நடந்துச்சுன்னு நீங்க இப்போ உண்மையை சொல்லலை அப்புறம் நடக்கறதே வேற” என்று மிரட்டினாள்.
“சத்தியமா எனக்கு வருண் யாருன்னு தெரியாதும்மா. உன்னை யாரும் இங்க கடத்தி வைக்கலை, நீ எங்க தம்பியோட சம்சாரம் தான்” என்றார் அவர்.
“உங்க தம்பி எங்கே?? அவரை நான் பார்க்கணும்”
“அவர் வரும் போது நீ நல்லா தூங்கிடுறம்மா. தினமும் தம்பி இங்க வந்திட்டு தானே போறாங்க. காலையில தான் கிளம்பி போவாங்க” என்று அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்தாள்.
அது கூட தெரியாமலா தானிருக்கிறோம் என்று தான் தோன்றியது அவளுக்கு. “அவரை நான் பார்க்கணும்”
“என்னம்மா சொல்றே நீ தினமும் ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் இருக்கீங்க. பார்க்கணும்ன்னு என்கிட்ட சொன்னா எப்படி??” என்று சொல்லி அவளை மேலும் மேலும் அவளை குழப்ப தலைவலியே வந்துவிட்டது அவளுக்கு.
‘என்ன தான்டா நடக்குது, கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கறே!!’ என்று நினைக்கும் போது கண்கள் கலங்கிப் போனது அவளுக்கு.
அவளறிந்த ஆருத்ரனை முரட்டுத்தனமாய், கோபமாய், ஆசையாய் பார்த்திருக்கிறாள். அவனிடத்தில் இதுவரை எந்தவிதமான போலித்தனங்களையும் அவள் கண்டதேயில்லை. 
இவங்க சொல்றதை பார்த்தா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது என்று யோசிக்க யோசிக்க தலைவலியே வந்துவிட்டது அவளுக்கு.
“டிபன் சாப்பிட்டும்மா??” என்று அவளருகே வந்தவரை ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்தாள் அவள்.
“நேரத்துக்கு சாப்பிடலைன்னா இப்படித்தான்மா கோபம் வரும். உனக்கு பீபி வேற கொஞ்சம் இருக்காமே. கண்டதும் யோசிச்சு குழப்பிக்காதம்மா. உனக்கு யாரும் எந்த கெடுதலும் நினைக்கலை. நல்லது தான் உனக்கு நடக்குதுன்னு நம்பும்மா”
“இந்த மாதிரி நேரத்துல அப்படித்தான் நினைக்கணும். அது தான் உனக்கும் உள்ள இருக்க பாப்பாக்கும் நல்லது” என்றார் அவர்.
“நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா” என்றாள் வெடுக்கென்று.
“மன்னிச்சுடும்மா” என்று உடனே அவர் கேட்ட என்னவோ போலானது அவளுக்கு. தனக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“உங்க பேரென்ன??”
“மஞ்சுளா”
“உங்களை மஞ்சும்மான்னு கூப்பிடலாமா??”
“சந்தோசமா கூப்பிடும்மா…” என்றார் அவர் மலர்ந்த முகத்தோடு.
“மஞ்சும்மா எனக்கு சாப்பாடு வேண்டாம்”
“ஏன்மா உனக்கு பொங்கல் பிடிக்கலையா. இட்லி இல்லை தோசை வேணா ஊத்தவா. வேற எதுனாலும் கேளும்மா செஞ்சு தர்றேன்” என்றார் அவர்.
“நீங்க எது செஞ்சுக் கொடுத்தாலும் நான் சாப்பிட மாட்டேன்”
“நான் செய்யறது பிடிக்கலைன்னா ஹோட்டல்ல வாங்கிட்டு வரச்சொல்லவா”
“யாரை வாங்கிட்டு வர சொல்லுவீங்க??”
“தம்பியை தான்”
“எப்படி போன் பண்ணுவீங்க??”
“தம்பியே இப்போ போன் போடும்மா. மணி ஒன்பதாக போகுதுல்ல நீ சாப்பிட்டியான்னு கேட்க போன்ய போடும்” என்றார் அவர்.
“நான் ஒரு நாள் கூட நீங்க பேசி பார்த்ததில்லையே”
“எல்லா நேரமும் பேசாதும்மா. நீங்க சாப்பிடுற நேரம் போன் போட்டு கேட்கும். அதான் வீடியோ பார்க்குமாமே பார்த்திட்டு தான் கூப்பிடும்” என்று அவர் விளக்க சட்டென்று எழுந்து சுற்றுமுற்றும் அப்போது தான் பார்த்தாள் அவள்.
அவன் சிசிடிவியை வைத்திருப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வெளியில் பார்த்தாள், ஹாலில் கூட ஓரிடத்தில் இருந்தது. 
இப்போது பார்வையை அங்குலம் அங்குலமாக சூலழவிட அவள் விளக்கென்று நினைத்திருந்த இடத்தில் எல்லாம் கேமரா மட்டுமே. 
எதுவோ சரியில்லை என்று தான் எண்ணியது உறுதியாகவே அவளுக்கு புரிந்து போனது.
வீடு முழுக்கவே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதுவரையிலும் எங்கோ ஒரு மூலையில் இருந்தது அவள் மூளையில் பதிந்திருக்கவில்லை. இப்போதோ பார்வை எட்டுத்திக்கும் சென்றது அவளுக்கு. அவள் இருந்த அறையில் கூட இரண்டு கேமரா இருந்தது.
“ஏன்மா தம்பி போன் போட்டா உனக்கு என்ன வாங்கிட்டு வரச்சொல்லட்டும்”
“கொஞ்சம் விஷம் வாங்கிட்டு வரச்சொல்லுங்க” என்றாள் சுள்ளென்று.
“ம்மா!!”
“நீங்க என்ன பைத்தியமா ஒருத்தன் என்ன சொன்னாலும் நம்புவீங்களா” என்று கத்தினாள் அவள்.
“ம்மா… ம்மா கத்தாதம்மா. வேணாம்மா, உனக்கு எதுவும் ஆகிடப் போகுது” என்றார் அவர் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.
“அய்யோ என்னை ஏன் இப்படி படுத்தறீங்க நீங்க. உங்களை ஒண்ணும் சொல்லவும் முடியலை. நீங்க அப்பாவியா இல்லை பாவியான்னு எனக்கு புரியலை”
“எது எப்படி இருந்தாலும் சரி. இந்த வீட்டில இனி நான் சாப்பிடுறதா இல்லை. நான் செத்தாலும் இனி இந்த வீட்டில இருந்து பச்சைத்தண்ணி கூட குடிக்கறதா இல்லை”
“ஏன்மா இப்படில்லாம் பேசுறே. உனக்கு என்ன வேணுமோ சொல்லும்மா, நான் பார்த்துக்கறேன். இப்படில்லாம் நீ பேசக்கூடாதுடாம்மா”
“மஞ்சும்மா நீங்க என்ன கொஞ்சுனாலும் கெஞ்சுனாலும் சரி நான் சாப்பிட மாட்டேன். எனக்கு அவனை பார்க்கணும் இப்போவே. சுத்தி கேமரா வைச்சிருக்கான்ல இதையும் அவன் பார்த்திட்டு தான் இருப்பான்”
“டேய் கேட்குதாடா, சிசிடிவி கேமரால பேசுறது கேட்காது தான். இவ்வளவு செஞ்ச நீ நான் பேசுறதை கேட்கறதுக்கு எதுவும் டிவைஸ் வைச்சு இருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை”
“நீ என் முன்னாடி வரலைன்னா அதுக்கான பின் விளைவுகளை நீ சந்திக்க வேண்டி இருக்கும்” என்று தனியாக வேறு கத்த ஆரம்பித்தாள் அவள்.
“அம்மா நீ கோவப்படாதம்மா. தம்பி போன் போட்டா நான் உடனே வீட்டுக்கு வரச்சொல்றேன்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் கைபேசி ஒலியெழுப்பியது.
“இதோ பண்ணிட்டான் உங்க தங்க கம்பி எடுங்க” என்றவள் அவர் பேசும் முன் அவரிடம் இருந்து போனை பறித்தாள்.
“என்ன நான் தான்னு சொன்னா நீ நம்ப மாட்டியா” என்ற ஆருத்ரன் குரல் அவளை குழப்பியடிக்க அடுத்த பேச்சில் சட்டென்று தெளிந்தாள் அவள்.
“என் குரல் கூட உனக்கு தெரியலையா அருள்” என்று  அவன் சொல்ல மென்னகை அவளிடத்தில் ‘இது அவரில்லை’ என்ற நிம்மதியும் மனதில் எழுந்தது.
“அருள் பேச மாட்டியா என்கிட்ட??” என்றது அக்குரல்.
போனை மஞ்சுளாவிடம் நீட்டியவள் “அவரை நேர்ல பார்க்காம பேச மாட்டேன்னு சொல்லிடுங்க. அவர் வரலைன்னா இங்க ரெண்டு உயிருக்கு அவர் பதில் சொல்ல வேண்டி இருக்கும்ன்னு சொல்லிடுங்க” என்று சத்தமாகவே சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
அவள் கொடுத்த போனை வாங்கியவர் “தம்பி கேட்டீங்களா அவங்க பேசினதை”
“ஹ்ம்ம் கேட்டுச்சும்மா”
“உங்க சம்சாரம் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்குது என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குது தம்பி. நீங்க நேர்ல வந்தா தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிக்குதுப்பா. ரொம்பவும் பிடிவாதமா இருக்கு, இப்படியே இருந்த குழந்தைக்கு எதுவும் ஆகிடுமோன்னு பயமா இருக்கு” என்றார் அவர்.
எதிர்முனையில் அவன் என்ன சொன்னானோ அவர் இப்படியும் அப்படியுமாக தலையை ஆட்டுவதை கட்டிலில் அமர்ந்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் அருளாசினி.
அவர் மீண்டும் அவளிடத்தில் வந்து “அம்மா நீ மாத்திரை போடுற நேரமாகுதும்மா. இந்த ஜூஸ் மட்டும் குடிம்மா அதுக்கு அப்புறம் நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன்ம்மா” என்று கெஞ்சினார் அவர்.
அவள் பதிலே பேசவில்லை. “ஏதாச்சும் பேசும்மா” என்று மீண்டும் மீண்டும் வந்து அவர் பேசிப்பார்க்க பலன் பூஜ்ஜியமாகவே இருந்தது.
அங்கிருந்து அகன்றவர் அரை மணி நேரத்தில் மீண்டும் வந்தார். “அம்மா நான் வீட்டுக்கு கிளம்பறேன். தம்பி கொஞ்ச நேரத்துல வந்திடும்” என்று தகவல் சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க அவருக்காக நிமிர்ந்து அவரை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு பின் திரும்பிக் கொண்டாள் அவள்.
ஒரு பெருமூச்சுடன் அவர் அங்கிருந்து கிளம்பினார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்க அருளாசினியின் ஐம்புலன்களும் விழித்துக் கொண்டது.
அந்த நடையை தன்னவனுடன் பொருத்திப் பார்க்க அது சற்றும் பொருந்தாததை உணர்ந்தாள் அவள். அவனுக்காய் தான் காத்திருப்பதை அவன் உணரக்கூடாது என்று பிரயத்தனப்பட்டு வேறு புறம் திரும்பி அவள் அமர்ந்திருக்க அவளின் அறைக்கதவை பெரிதாய் விரித்து திறந்து உள்ளே நுழைந்தான்.
“என்ன அருள் என்னை பார்க்க மாட்டியா??” என்ற பழகிய குரலில் அவள் தலை தன்னைப் போல் திரும்பியது “அர்ஜுன்!! நீயா!!” என்றாள் வாய் திறந்து.

Advertisement