Advertisement

35
லோகு கோவிலில் நடந்தது அனைத்தும் சொல்ல முடித்திருக்க அன்னப்பூரணியோ “அவ அப்படியா பேசினா. அவளுக்கு நேர்ல போய் வைச்சுக்கறேன் கச்சேரி”
“எங்கயோ போச்சு கழிசடைன்னு தள்ளிப்போனா என் புள்ளை மேலவா சேத்தை வாரியிறைச்சா அவ. அவ நல்லாவே இருக்க மாட்டா” என்று வார்த்தைகளை இறைத்தார் அவர்.
“அம்மா விடும்மா, அண்ணன் நீ கேக்கறதுக்கு எதையும் மிச்சம் வைக்கலை. அண்ணனே எல்லாத்தையும் கொட்டி தீர்த்திடுச்சு. பக்கத்துல அவ புருஷன் வேற இருந்தான், அண்ணன் எதையும் பார்க்கலை, நல்லா வைச்சு வாங்கிடுச்சும்மா”
“அவன் கேட்டது எல்லாம் அவளுக்கு பத்தாதுடா. நான் போய் கேட்டா தான் என் மனசு ஆறும்” என்றார் அவர்.
“என்னைக்குமே என்னை ஒரு சொல் சொல்லாத என் புள்ளையவே பேச வைச்சுட்டால்ல. அவளை அப்படியே விட்டிற முடியுமா. அவளுக்கும் அவ அம்மாவுக்கும் இருக்கு” என்றார் அவர் கோபமாக.
————–
ஆருத்ரன் கோவிலில் அமர்ந்திருக்க அவனுக்கு திருச்சியில் இருந்து போன் வந்திருந்தது. ஒரு முக்கிய தகவல் சொல்ல அவனை நேரிலேயே வருமாறு சொல்லியிருக்க அங்கிருந்து அப்படியே திருச்சிக்கு கிளம்பிவிட்டான் அவன்.
இங்கோ ஆருத்ரனை காண வேண்டும் என்று சொல்லி அவன் அலுவலகத்திற்கு வந்திருந்தான். லோகு வந்திருக்கவில்லை வேறு ஒருவன் தான் இருந்தான். 
“இங்க ஆருத்ரன்??”
“எங்க அண்ணன் தான் சொல்லுங்க சார், என்ன விஷயம்??”

“அவர்கிட்ட தான் பேசணும்”
“சொல்லு சார் நீங்க என்ன ஆளுங்க சொல்லு சார் சிறப்பா செஞ்சிடலாம்” என்றான் மற்றவன்.
“என்ன சிறப்பா செய்வீங்க எனக்கு புரியலை” என்றான் வந்திருந்தவன்.
“நீ எதுக்கு சார் அண்ணனை பார்க்க வந்திருக்க போறே. அதுக்கு தான் சொல்றேன், செத்தது யாரு??” என்று வேறு அவன் கேட்க வந்திருந்தவன் கடுப்பாகிப் போனான்.
“ஹலோ என்ன விபரம்ன்னு கேட்காம நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு என்னென்னவோ பேசிட்டு போறீங்க… ஆருத்ரனை நான் கொஞ்சம் அவசரமா பார்க்கணும், அவர் எப்போ வருவார்?? இல்லன்னா அவர் வீட்டு அட்ரஸ் சொல்லுங்க நான் நேர்ல போய் பார்த்துக்கறேன்”
“சாரி சார் நீ அண்ணனை பார்க்கணும்ன்னு சொன்னதும் அதுக்கா தான் இருக்கும்ன்னு நினைச்சுட்டேன், மன்னிச்சுடு சார். அண்ணன் காலையில குளிச்சுட்டு வெளிய போச்சு, எப்போ வருவார்ன்னு தெரியலையே”
“ஏன் அவருக்கு போன் இல்லையா பேசுங்க எப்போ வருவார்ன்னு கேளுங்க” என்று அவசரப்படுத்தினான் வந்தவன்.
“இரு சார் அர்ஜன்ட் பண்ணாத” என்றவன் ஆருத்ரனுக்கு அழைக்க அவன் வண்டி சுங்கச்சாவடியில் நின்றிருக்க அவன் போனை எடுக்கவில்லை. யார் என்று பார்த்துவிட்டு அவசரமில்லை என்று எண்ணி அப்படியே வைத்துவிட்டான்.
“அண்ணன் போன் எடுக்க மாட்டேங்குறார்”
“அவர் வீடு எங்க இருக்கு??”
“அண்ணன் வீட்டில இல்லை இப்போ??”
“வீட்டு அட்ரஸ் சொல்லுப்பா நான் போய் பார்த்துக்கறேன்”
“சார்…” என்று இவன் ஆரம்பிக்கும் போதே லோகு உள்ளே நுழைந்தான்.
“யாரு ராகுல்??”
“அண்ணனை பார்க்கணும்ன்னு வந்திருக்கார் லோகு”
“சொல்லுங்க சார் என்ன விஷயம்??” என்று லோகுவும் முதலாமவன் போல் கேட்க இன்னும் எத்தனை பேருக்குடா விளக்கம் சொல்லணும் என்ற மனநிலை வந்தவனுக்கு.
“ஆருத்ரனை பார்க்கணும் கொஞ்சம் அவசரம்”
“அண்ணன் வெளியூர் போயிருக்காரு”
“இன்னா லோகு சொல்றே, அண்ணன் காலையில கூட இங்க தானே இருந்துச்சு” என்றான் அந்த ராகுல் என்பவன்.
“இப்போ கொஞ்சம் முன்னாடி அண்ணன் போன் பண்ணாரு. திருச்சிக்கு போய்கிட்டு இருக்காரு, அனேகமா நாளைக்கு தான் திரும்பி வருவாரு”
“திருச்சிக்கா??” என்றான் வந்திருந்தவன்.
“ஆமா சார்”
“அங்க எதுக்கு??”
“இதெல்லாம் நீங்க எதுக்கு சார் கேட்கறீங்க??”
“சொல்லுங்க முதல்ல”
“நீங்க முதல்ல உங்க பேரை சொல்லுங்க”
“என் பேரு ஸ்ரீவத்சன்”
“எங்க இருந்து வர்றீங்க??”
“ஏன் நான் போகும் போது எனக்கு டிக்கெட் போட போறீங்களா. நான் எங்க இருந்து வந்தா உங்களுக்கென்ன சார்”
“அண்ணன் பேரை சொல்றீங்களேன்னு தான் பேசாம இருக்கேன். வந்ததுல இருந்து உங்க பேச்சு ராங்காவே இருக்கு. மிரட்டுற மாதிரியே பேசறீங்க” என்றான் ராகுல்.
“என்ன சார் பிரச்சனை உங்களுக்கு??” என்று லோகுவும் இப்போது கேட்க இது வேலைக்காகாது என்று முடிவு செய்து ஸ்ரீவத்சன் கிளம்பினான்.
“நாளைக்கு வந்திடுவார்ல நான் அப்போவே வந்து பேசிக்கறேன்” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்ப “சார் இரு சார் நீயா வந்த என்ன விஷயம்ன்னு சொல்லாமலே கிளம்புற”
“அண்ணன் வந்தா எங்களை திட்டும் என்ன விஷயம்ன்னு கேட்காம ஏன் அனுப்புனோம்ன்னு”
“நான் அவர்கிட்ட மட்டும் தான் பேசணும், ரொம்ப பெர்சனல்ன்னு சொல்லுங்க” என்றுவிட்டு அவன் வெளியேறிவிட்டான்.
“யாருடா என்னன்னு கேட்க மாட்டியா நீ” என்று ராகுலை திட்டினான் லோகு.
“எனக்கென்னடா தெரியும் அவன் ஒண்ணையுமே சொல்லலை என்கிட்ட” என்றான் ராகுல்.
ஆருத்ரன் மாலை தான் திருச்சியை வந்தடைந்திருந்தான். நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் சென்றான்.
“ரொம்ப பாஸ்டா வந்திட்டீங்க சார், நாளைக்கு தான் வருவீங்கன்னு நினைச்சேன்” என்றார் அந்த அதிகாரி.
“காணாம போனது என்னோட பொண்டாட்டிங்க சீக்கிரம் வராம எப்படி இருக்க முடியும். நீங்க என்ன விஷயம்ன்னு சொல்லுங்க எதுவும் தகவல் தெரிஞ்சதா அவ எங்க இருக்கா இப்போ??” என்றான் அவன் தெரிந்துக்கொள்ளும் ஆவலில்.
“சார் சார் இருங்க. நான் சொல்லி முடிச்சிடறேன் அப்புறம் நீங்க பேசுங்க”
“சொல்லுங்க”
“மேடம் கூட வேலை பார்த்த டீச்சர் மூலமா ஒரு தகவல் கிடைச்சது அதுக்காகத்தான் உங்களை வரச் சொன்னேன். ஸ்கூல் இப்போ தான் முடிஞ்சிருக்கும் நினைக்கிறேன். நான் போன் பண்ணி அவங்களை வெயிட் பண்ணச் சொல்றேன். நாம உடனே கிளம்புவோம்” என்று துரிதப்படுத்தினார் அவர்.
“என்ன தகவல் சார்??” என்றான் ஆருத்ரன் அவருடன் நடந்தவாறே.
“நேர்ல பாருங்க புரியும்” என்றார் அவர்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் பள்ளி வாயிலில் நின்றிருந்தனர். பிள்ளைகள் எல்லாம் பள்ளியில் இருந்து கிளம்பியிருக்க ஆசிரியை இன்னமும் கிளம்பியிருக்கவில்லை.
காவல் அதிகாரி அந்த ஆசிரியைக்கு போன் செய்ய அவர் வெளியில் வந்தார். “இவங்க பேரு சுதா. இங்க டீச்சரா இருக்காங்க. உங்க மிஸ்ஸஸ்க்கு பிரண்டு” என்றார் சேர்த்து.
“என்ன இவரோட மிஸ்ஸஸா” என்றார் அந்த பெண்மணி.
“ஆமா மேடம் அருளாசினி உங்க பிரண்டு தானே”
“ஆமா…”
“அவங்களோட கணவர் இவர் தான்”
“என்ன சார் சொல்றீங்க?? நான் அவரைத்தான் அருளோட ஹஸ்பன்ட்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்” என்றாள் சுதா.
அதிகாரி ஆருத்ரனை இப்போது அர்த்தத்துடன் பார்த்தார். ‘எதற்காக உங்களை இங்கு வரவைத்தோம் என்று புரிகிறதா’என்பதான பார்வை அது.
ஆருத்ரனும் புரிந்தது என்பதான பார்வை கொடுத்தவன் அப்பெண்ணை நோக்கி திரும்பினான். “நீங்க நம்பலைன்னு நினைக்கிறேன்” என்றவன் சீமந்தத்தின் போது எடுத்த புகைப்படத்தை காண்பித்தான்.
“சாரி சார் எனக்கு தெரியாது. நான் இங்க வந்து இப்போ தான் ஒரு மாசம் ஆகுது. அருள் மட்டும் தான் எனக்கு கொஞ்சம் தெரியும், வீட்டை பத்தி எல்லாம் நாங்க பேசினது இல்லை”
“வழியில அருளை அவரோட ரெண்டு மூணு தரம் பார்த்திருக்கேன். ரெண்டு பேரும் சிரிச்சு பேசுறதை பார்த்து நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போல. ஒரு டைம் அருள்கிட்ட கேட்டப்போ ஹஸ்பன்ட்ன்னு சொன்னா. அதான் அப்படி நினைச்சுட்டேன்” என்றாள் அவள் நீண்ட விளக்கமாய்.
“நீங்க பார்த்தவர் எப்படி இருந்தார்??” என்றான் ஆருத்ரன்.
அவள் பதில் சொல்லும் முன் காவலதிகாரி தன் கைபேசியில் இருந் சில புகைப்படங்களை எடுத்து அப்பெண்ணின் முன்னால் நீட்டினார்.
“நீங்க பார்த்தவர் இந்த படத்துல எதுலயாச்சும் இருக்காரான்னு பார்த்து சொல்லுங்க” என்று சொல்லி அந்த புகைப்படத்தை காண்பித்தார்.
அப்பெண் அந்த போனை வாங்காது இருவரையும் பார்த்தாள். “சார் தப்பா எடுத்துக்கலைன்னா என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?? நீங்க அன்னைக்கு வந்தப்பவே கேட்டேன் நீங்க பதில் சொல்லலை”
“இவர் வைப்பை காணோம்”
“சார் என்ன சொல்றீங்க சார்??” என்றவளின் குரலில் ஒரு பதட்டம்.
“நான் அவங்க லீவ்ல இருக்காங்கன்னு நினைச்சேன். போன் போட்டா கூட போகலை அவங்களும் போன் பண்ணலைன்னு கோபமா வேற இருந்தேன் சார்” என்றாள் அவள்.
“அவங்க போன் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு. கடைசியா இந்த ஊர் டவர் தான் காட்டுது. எங்க இருக்காங்கன்னு எந்த ஹின்ட்டும் இல்லை”
“போன வாரமே இங்க எல்லாரையும் விசாரிக்க வந்தேன். நீங்க மட்டும் தான் மிஸ்ஸிங். அதான் நேத்து வந்து விசாரிச்சேன்… இந்த போட்டோஸ் பார்த்து சொல்லுங்க” என்று மீண்டும் தன் கைபேசியை நீட்டினார் அவர்.
அதை வாங்கியவள் ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த புகைப்படங்கள் எல்லாம் சிசிடிவி பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது.
ஆருத்ரன் மறுநாள் காலையிலேயே சென்னை வந்தடைந்திருந்தான். விடிய விடிய ஒரு பொட்டு உறக்கமில்லை அவனுக்கு. 
நேராய் அவன் அலுவலகத்திற்கு வந்து அருகில் இருந்த அறையில் குளித்துவிட்டு அவன் கட்டிலில் அமர்ந்திருந்தான். அவனிருகைகள் அவன் தலையை தாங்கிப் பிடித்திருந்தது.
எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தானோ யாரோ அழைக்கும் சத்தம் கேட்க எழுந்து வெளியில் வந்தான். “சொல்லுங்க சார்”
“ஆருத்ரன்??” என்றான் அவன் கேள்வியாய்.
“நான் தான் நீங்க??”
“ஸ்ரீவத்சன் அருளோட அண்ணன்”
“என்ன!!” என்றான் ஆருத்ரன்.
“என்னை உங்களுக்கு தெரியாது. உங்களை எனக்கு தெரியும் அருள் சொல்லியிருக்கா…”
“எப்போ??”
“திருச்சியில அவளை ஒரு நாள் பார்த்தேன், அப்போ தான் சொன்னா”
“சரி என்ன விஷயம்??” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தான் ஆருத்ரன். அவனுக்கு அவளின் உறவுகள் மேல் அப்படியொன்றும் அக்கறையில்லை என்பதாக இருந்தது அச்செயல்.
அதை புரிந்தவனாய் வந்தவனும் வந்த விஷயத்தை பேச ஆரம்பித்தான். “நீங்க வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டு போனதா வீட்டுல எங்கப்பா சொன்னாரு?? அருளை காணோம்ன்னு நீங்க சொன்னீங்களாமே. அது உண்மையா??”
“ஓ!! அப்போ நான் பொய்யா வந்து தான் உங்க வீட்டு ஆளுங்களை பேசினேன்னு சொல்ல வர்றீங்களா”
“எதுக்கு கோபப்படுறீங்க?? தெரிஞ்சுக்க தானே கேட்டேன்” என்றான் அவன்.
ஆருத்ரன் முகத்தை திருப்பிக் கொண்டான். “சரி ஓகே விடுங்க. எனக்கு ஒரு விஷயம் உறுத்தலா இருந்துச்சு அதைத்தான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன். ஒரு நாள் அருளை அவன் கூட பார்த்தேன்”
“அவன்னா யாரு??”
“அர்ஜுன்??”
“அர்ஜுனா யார் அது??” என்றவனுக்கு சுதா அடையாளம் காட்டிய புகைப்படம் ஞாபகம் வர அதை எடுத்து ஸ்ரீவத்சனிடம் காண்பித்தான்.
முதல் நாள் அந்த ஆசிரியை அதிகாரி கொடுத்த புகைப்படங்களை பார்த்து அதில் இருந்த ஒன்றில் இருந்தவனை தான் அவள் அடையாளம் காட்டியிருந்தாள். அதைத்தான் ஆருத்ரன் மற்றவனிடம் காட்டியிருந்தான்.
“இவனான்னு பாருங்க” என்று அவன் காட்ட மற்றவனும் “இவன் தான் அர்ஜுன் உங்களுக்கு தெரியுமா இவனை??” என்று கேட்டான்.
‘யாருடா இவன் புதுசா எனக்கு வில்லனா’ என்று தான் ஓடியது ஆருத்ரனுக்கு.

Advertisement