Advertisement

34
“அம்மா அவர் இப்போ எங்க??”
“ஆஸ்பிட்டல்ல”
“என்னது ஆஸ்பிட்டல்லயா என்னாச்சு அவருக்கு??”
“அவருக்கு ஒண்ணும் ஆகலைம்மா. வந்திடுவாரு, எப்பவும் போறது தானே”
“இது யார் வீடு?? திருச்சில இருந்து இங்க எப்படி வந்தோம்??”
“உன் புருஷன் கூடத்தானேம்மா வந்தே…”
“இல்லை…” என்று அவள் கத்த “அம்மாம்மா இப்படில்லாம் கத்தாதம்மா, வயித்து பிள்ளைக்காரி உடம்புக்கு எதுவும் வந்திட போகுது. நீ கத்துனா உள்ள இருக்க புள்ளையும் பயந்துக்கும்” என்று அவர் சொல்ல அமைதியானாள்.
அவள் அங்கு வந்த முதல் இரண்டு நாட்கள் ஏதோ உறக்கத்திலேயே கழிந்திருந்தது. அவளுக்கு என்ன நாள் என்று எதுவும் தெரியக்கூட இல்லை. அந்த அம்மாவை தவிர வேறு யாரும் அந்த வீட்டில் இல்லை.
இரண்டு பெட்ரூம் ஹால் கிட்சன் என்று அளவான வீடு அது. வேலையும் செய்யும் பெண்மணி தவிர அருகில் எந்த அரவமும் இல்லை. பெரும்பாலான வீடுகள் பூட்டியே இருந்ததை ஜன்னலின் வழியே பார்த்திருந்தாள்.
“உண்மையை சொல்லுங்க நீங்க யாரு?? என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க??”
“அம்மா என்னைப் பார்த்தா உனக்கு எப்படிம்மா தெரியுது. நானே என் பொழைப்புக்கு இங்க வேலைக்கு வர்றேன், என்னை போய் இப்படி கேக்குறியேம்மா”
“உனக்கு உடம்பு சரியில்லைன்னு அப்போவே அந்த தம்பி சொல்லுச்சும்மா. நீ ஒண்ணும் கவலைப்படாதம்மா எல்லாம் சீக்கிரம் சரியாகிடும், அதுக்கு தானே தம்பி ஆஸ்பிட்டல் போயிருக்கு” என்றார் அவர். 
“எங்கே அவரு??”
“அதான் சொன்னேனேம்மா ஆஸ்பிட்டலுக்கு” என்று அவர் சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு கொடு என்று பதினாறு வயதினிலே கமலை போல சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னதில் அவளுக்கு எரிச்சலானது.
இவர்கிட்ட பேசுறது வேஸ்ட் என்று முடிவு செய்தவள் மீண்டும் அறைக்குள் வர அங்கு அவள் உடைமைகள் அனைத்தும் அங்கிருந்த செல்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதை கண்டவளுக்கு பெரும் குழப்பம். ‘இதெல்லாம் இங்க எப்படி வந்துச்சு, ஒரு வேளை அந்தம்மா சொல்றது எல்லாம் சரி தானோ’ என்று ஒரு கணம் அவளையே நினைக்க வைத்தது.
‘அப்போ அத்தை’ என்ற யோசனை வர வெளியே வந்தாள். “அத்தை எங்கே??”
“உங்க மாமியாரா??”
“ஆமா…”
“அவங்க ஊர்ல இருக்காங்களாமே தம்பி தான் சொல்லுச்சு” என்று எந்த பேச்சை ஆரம்பித்தாலும் தம்பியில் வந்து தான் முடித்தார் அந்த பெண்மணி.
அவரைப் பார்த்தால் பொய் சொல்பவராய் தெரியவில்லை. அவருக்கு தெரிந்ததை அவர் அறிந்ததை தான் அவர் திரும்ப திரும்ப சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது அவளுக்கு.
“என் போன் எங்கே??”
“உங்ககிட்ட தான் போனே இல்லையேம்மா…”
“அம்மா ப்ளீஸ்ம்மா எனக்கு கோபம் வரவைக்காதீங்க. நான் அதிகம் கோபப்பட்டதில்லை. இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம எனக்கு டென்ஷன் ஆகுது. தலையே வெடிச்சிடும் போல இருக்கு”
“இங்க இருக்கவே எனக்கு பிடிக்கலை. இது எனக்கு வேண்டாத இடம்ன்னு என் மனசு சொல்லுது. என் புருஷன் என்னை நிச்சயமா இங்க கூட்டிட்டு வந்திருக்க மாட்டாரு. நீங்க சொன்னீங்களே அந்த தம்பி பேரு என்ன??” என்றாள் அவள்.
“ருத்ரன் தம்பி அப்படியெல்லாம் இல்லைம்மா. ரொம்ப நல்ல பிள்ளை நான் எத்தனை வருஷமா அவரை பார்க்கறேன்”
‘என்னது ருத்ரனா!!’ என்று அதிர்ந்து நின்றாள் அவள்.
————
அஞ்சனாவின் பேச்சு ஆருத்ரனை நிதானத்தை இழக்க வைத்தது. அவன் எப்போதுமே தன்னிலை இழப்பது அஞ்சனாவை பார்க்கும் தருணங்களில் மட்டுமே. பணமில்லாத போது கூட உழைத்து படித்து என்று முன்னுக்கு வந்திருந்தான்.
அஞ்சனா ஏற்படுத்தியிருந்த காயத்தில் இருந்து இன்னமும் அவனால் வெளியில் வர முடியவில்லை. அவன் வரவேண்டும் என்று நினைத்தால் கூட அவள் அவனை பார்க்கும் வேளையில் எல்லாம் பேசி பேசி அவன் அதிலிருந்து மீளமுடியாமல் செய்திருந்தாள்.
இப்போது கூட அதே டென்ஷனில் தான் வீட்டிற்கு வந்திருந்தான். ஏற்கனவே அருளாசினியை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதில் அவ்வளவு அழுத்தமும் பாரமும் கூடியிருந்தது அவனுக்கு.
‘எனக்கு எல்லாமே தோல்வி தானா, என்னால் எதுவுமே முடியாதா’ என்று தனியே கேள்விக் கேட்டுக் கொண்டான். லோகு ஆருத்ரனை வீட்டில் விட அவனின் சோர்ந்த தோற்றமே அப்படியே விட்டுச்செல்லக் கூடாது என்று தோன்றிவிட வண்டியை நிறுத்திவிட்டு அவன் பின்னே செல்ல முடிவு செய்தான்.
ஆருத்ரன் உள்ளே நுழைந்தது தான் தாமதம் அன்னப்பூரணி ஆரம்பித்துவிட்டார். “ருத்ரா நீ ஏன்டா இப்படி இருக்கே?? அருளு காணாம போயி இருபது நாளாகுது நீ எதுவுமே செய்யாம இருக்கே??”
“என்னடா பண்ணப் போறே அவளை கூட்டிட்டு வர்றதுக்கு, இப்படி பொறுமையா இருந்தா என் பேரப்பிள்ளையே வெளிய வந்து கேள்வி கேட்கும்டா. இவ்வளவு தான் உன் சாமர்த்தியமா, எவ்வளவு பேரை தெரிஞ்சு வைச்சு இருக்கே”
“எவ்வளவு செஞ்சு இருப்பே ஒவ்வொருத்தனுக்கும், எவனும் ஒரு உதவி கூட பண்ண மாட்டானாடா உனக்கு” என்று அவர் பாட்டுக்கு அவனைப் பேசவிடாது பேசிக் கொண்டிருக்க ஆருத்ரனின் பொறுமை முற்றிலும் உடைந்தது.
“ம்மோவ் பேசாம நிறுத்துறியா இல்லையா” என்று வீடே அதிர கத்த லோகு சத்தம் கேட்டு நடந்து வந்துக் கொண்டிருந்தவன் ஓடி உள்ளே வந்தான்.
“அண்ணா என்னாச்சு?? என்னாச்சும்மா??” என்றான்.
“எதுக்குடா என்னை நிறுத்த சொல்றே… நான் அங்கவே இருக்கேன்னு சொன்னேன் என்னை இங்க கூட்டிட்டு வந்திட்டு பேசுறான் பேச்சு. ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லைடா நீ” என்று அவர் அருளாசினி கிடைக்காத வருத்தத்தில் பேசிவிட அது ஆருத்ரனை காயப்படுத்தியது.
“ஆமா நான் எதுக்கும் லாயக்கில்லாதவன் முன்னாடி அவ சொன்னா. இப்போ பெத்த அம்மா நீயும் சொல்லிட்டம்மா. ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு”
“டேய் நான் எதுக்கு சொன்னேன் நீ எதை பேசிட்டு இருக்கே” என்றார் அன்னப்பூரணி. தான் பேசியதன் பொருள் மகன் சொல்லும் போது தான் உணர்ந்திருந்தார் அவர்.
“போதும்மா போதும், எல்லாரும் சேர்ந்து என்னை நல்லா தான் பேசறீங்க. மனசு குளிர்ந்து போச்சும்மா, குளிர்ந்து போச்சு” என்றவனின் பார்வையில் அவ்வளவு கனல்.
“அம்மா இப்போ எதுவும் பேசாதம்மா” என்றான் லோகு.
“இன்னாத்துக்குடா என்னை பேசக் கூடாதுன்னு சொல்றீங்க. நான் இன்னாடா பண்ணேன், என் மருமவளை காணோம், நான் கவலைப்படக் கூடாதா. இதோ இவனை மாதிரி எதுவும் செய்யாம இருக்க சொல்றியா என்னை”
“ஆமா நான் எதுவும் செய்யலை, இப்போ என்னங்கறீங்க?? இப்போ நான் இந்த நிலைமையில நிக்க யாரு காரணம், நீங்க… நீங்க மட்டும் தான் காரணம். இப்போ நீங்களே என்னை எதுவும் லாயக்கில்லாதவன்னு சொல்றீங்க”
“பார்த்து பார்த்து எனக்கு ஒருத்தியை கட்டி வைக்குறேன்னு வைச்சீங்களே. அதோட விளைவு இப்போ வரை என்னை துரத்துது. அதுக்கு யாரு காரணம் நீங்க தானே. நானா ஒருத்தியை கட்டிட்டு வந்தா அவ காணாம போனதுக்கு என்னையே சொல்றீங்க”
“என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. நல்லது செய்யறேன்னு சொல்லி சொல்லி என் வாழ்க்கையை மொத்தமா பாழாக்கிட்டீங்க நீங்க. என்னமோ உங்களுக்கு மட்டும் தான் உங்க மருமக மேல அக்கறை இருக்க மாதிரி பேசறீங்க”
“எனக்கில்லை என் பொண்டாட்டி மேல. எனக்கு மேலயா உங்களுக்கு அக்கறை வந்திடும். என் உசுரை சுமத்துட்டு இருக்கா, அவ எப்படியோ போகணும்ன்னு நான் இருப்பேனா”
“மத்தவங்க தான் என்னை புரிஞ்சுக்காம பேசுறாங்கன்னா உனக்கெங்கம்மா போச்சு அறிவு. பெரிசா பேச வந்துட்ட என்னை” என்றவன் கத்திவிட்டு தொப்பென்று சோபாவில் விழுந்தான்.
“ஏன்டா என்னடா சொன்னே இப்போ. என்ன சொன்னே, நான் உன் வாழ்க்கை பாழாக்கிட்டேன்னா. உன் வாழ்க்கை பாழா போகணும்ன்னு நினைச்சுத்தான் நான் அதெல்லாம் செஞ்சனா”
“பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு இதைத்தான் சொன்னாங்க போல. நல்லா பேசிட்டடா நீ சொன்ன மாதிரி எனக்கும் நல்லா குளிர்ந்து போச்சுடா. உன்னை பெத்த வயிறு குளிர்ந்து போச்சுடா”
“இனி நீ எப்படி போனாலும் நான் எதையும் கேட்க மாட்டேன், பேசவும் மாட்டேன்” என்றவர் எழுந்து அவர் அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்ள லோகு பின்னாலேயே ஓடினான்.
ஆருத்ரன் அவனுக்கிருந்த மன அழுத்தத்தில் வார்த்தைகளை கொட்டியிருக்க அன்னப்பூரணி இப்படி சொல்வார் என்று அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஏதோ எண்ணத்தில் இருக்கிறான் என்று அவராவது அமைதியாக இருந்திருக்க வேண்டும். அல்லது அவர் ஏதோ மனக்கவலையில் பேசுகிறார் என்று அவனாவது பேசாது இருந்திருக்கலாம்.
இப்போது பேசிய பின்னே இருவருமே வருந்தினர். “அம்மா கதவை திறங்கம்மா” என்று லோகு கதவை தட்டிக் கொண்டிருக்க ஆருத்ரன் வேகமாய் எழுந்து வந்தான்.
“ம்மோவ்… ம்மோவ் கதவை திற ம்மோவ்…”
“நான் ஒண்ணும் செத்திட மாட்டேன். நீங்க போங்க…” என்று சொல்லும் போது அவர் குரல் உடைந்திருந்ததோ.
“அண்ணா நீ பீல் ஆவாத” என்று லோகு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆருத்ரன் விருட்டென்று கிளம்பிச் சென்றுவிட்டான்.
அவனுக்கு பைத்தியம் ஒன்று தான் பிடிக்காதிருந்தது. இடையில் நான்கு முறை ஸ்ரீரங்கம் சென்று வந்திருந்தான். ஒரு புதிய தகவலும் இல்லை. சிசிடிவி கேமரா பதிவுகள் என்று அனைத்தும் பார்த்துவிட்டான் பெரிதாய் எதுவுமே புலப்படவில்லை.
ஒரு துப்பும் இல்லாதது சென்றவளை கண்டுப்பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமான மனிதனான அவனால் எப்படி முடியும். அவனுக்கு இருந்தே ஒரே ஆதாரம் ஸ்ரீரங்கம் வீட்டிற்கு முகமறியாத மனிதர்கள் வந்து சென்றது மட்டுமே.
அவர்களும் அன்று விட்டால் போதும் என்று ஓடியிருந்தனர். அவர்களின் புகைப்படங்களை போலீஸில் கொடுத்து தான் வந்திருந்தான். 
அருளாசினியின் சொந்தங்களைப் பற்றிய தகவலை காயத்ரி மூலம் அறிந்துக் கொண்டிருந்தவன் அந்த வழியாகவும் முழுக்க விசாரித்துவிட்டிருந்தான். 
அருளாசினியின் தந்தையின் நண்பரை கூட விட்டு வைக்கவில்லை. என்ன முயன்றும் பலன் தான் பூஜ்ஜியமாக இருந்தது. 
இரவு முழுக்க ஆருத்ரன் வீட்டிற்கு வரவேயில்லை. அன்னப்பூரணிக்கு பதட்டமும் பயமும் தொற்றிக் கொண்டது. லோகுவிற்கு அழைக்க அவனும் எடுக்கவில்லை. வேறு நேரம் கழித்து போன் செய்த லோகு “சொல்லுங்கம்மா” என்றான்.
“எங்கேடா இருக்கீங்க. அவன் ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை”
“ம்மா…” என்றான் தயக்கமாய்.
“சொல்லுடா எங்க இருக்கீங்க??”
“அம்மா அண்ணன் முழு போதையில இருக்காரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அதான் அவரைவிட்டு நகராம இங்கவே இருக்கேன். அண்ணி வந்தா தான் இனி அண்ணன் வீட்டுக்கே வருமாம். ரொம்ப பீல் பண்ணுறார்ம்மா அவரு. உங்களை வேற பேசிட்டோம்ன்னு என்னென்னவோ பேசிட்டு இருக்காரு இப்போ”
“இப்போ பீல் பண்ணி இன்னா பண்ணுறது”
“ம்மா தப்பா எடுத்துக்காதம்மா அண்ணன் ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருந்துச்சு நீங்களும் பேசவும் பதிலுக்கு பேசிடுச்சு”
“என்ன டென்ஷன் அவனுக்கு??” என்று அவர் கேட்க லோகு கோவிலில் நடந்ததை சொல்ல அன்னப்பூரணி கொதித்துப் போனார்.
காலையில் எழுந்து குளித்து நேரே காளிகாம்பாளின் முன் சென்று தான் நின்றான் ஆருத்ரன். எனக்கொரு வழி கொடு இல்லையென்றால் இங்கிருந்து போக மாட்டேன் என்பது போல் அவன் நின்றிருக்க அவனைத் தேடி ஒருவர் அவன் அலுவலகத்திற்கு வந்திருந்தார் அருளாசினிப் பற்றி தகவலோடு.

Advertisement