ஆருத்ரனின் வண்டி நேரே சென்று நின்றது காளிகாம்பாள் கோவிலின் முன் தான். அருளாசினி உண்டாகியிருக்கிறாள் என்று தெரிந்த அன்று சென்றது தான் அதன் பிறகு இன்று தான் செல்கிறான்.
எப்படி சந்தோஷ தருணத்தை பகிர அவனுக்கு கடவுளின் அருள் தேவையாக இருந்ததோ, இதோ அவன் மனபாரத்தை இறக்கி வைக்கவும் அவனுக்கு அந்த கடவுள் தேவைப்பட்டார்.
“விடுடா அவன் எங்கயும் போக மாட்டான். அவனா இருந்தா நம்மகிட்ட ரொம்ப நாளைக்கு ஓடி ஒளிய முடியாதுடா” என்று பேசிக்கொண்டே எலுமிச்சை மாலை ஒன்றை வாங்கியிருந்தான் ஆருத்ரன்.
கோவிலுக்கு சென்று மாலையை கொடுத்துவிட்டு அவன் எப்போதும் போல ஓரிடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டான், உடன் லோகுவும்.
கண்ணை மூடி தியானத்தில் இருந்தவனின் வேண்டுதல் முழுக்க என் மனைவி என்னிடம் சேர்ப்பித்துவிடு என்பதே. ‘தாயே அவளுக்கு எந்த தீங்கும் நேராம பார்த்துக்கோ. எங்க குழந்தையையும் காப்பாத்து. சீக்கிரமே அவளை என்கிட்டே கொடுத்திடு’ என்று தான் வேண்டிக் கொண்டிருந்தான்.
அவனின் வேண்டுதல் பலித்துவிடும் என்பது போல் சரியாக அந்நேரம் மணியோசை கேட்டது. அதுவே அவன் மனபாரத்தை குறைத்தது என்று சொல்லலாம்.
கண்கள் கண்ணீரை சொரிய அவன் அமர்ந்திருந்த தோற்றம் லோகுவை என்னவோ செய்தது. அந்த கோவிலில் அதுவரை பெண்கள் அமர்ந்து கண்ணீர் மல்க தங்கள் குறைகளை சொல்லி பார்த்திருக்கிறான் அவன்.
இதோ முதல் முறையாக ஒரு ஆண் தன் வேண்டுதலை முன் வைத்து அழுவதை இப்போது தான் பார்க்கிறான். அதுவே அவனை என்னவோ செய்ய அவன் கவலைகள் தூரச் சென்று ஆருத்ரனுக்காய் அவன் பிரார்த்தனை இருந்தது.
‘கடவுளே எங்க அண்ணன் என்ன வேண்டுச்சோ அதை நிறைவேத்தி கொடுத்திடு எனக்கு வேற எதுவும் வேண்டாம்’ என்று வேண்டிக் கொண்டான்.
ஒரு வழியாய் அவர்கள் அங்கிருந்து கிளம்ப ஆருத்ரன் அடுத்து கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றான். லோகுவும் எந்த மறுப்பும் சொல்லாது அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றான்.
ஆண்டவனை தொழுது முடித்து அவர்கள் வெளியில் வர அஞ்சனா அவன் கண்ணில் விழுந்தாள். அவள் எல்லாம் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதாய் அவன் கடந்துச் செல்ல முற்பட “என்ன உன் பொண்டாட்டியை காணோம்ன்னு கேள்வி பட்டேன்” என்று வம்படியாய் வந்து வாய் கொடுத்தாள் அவள்.
அவளின் தோழி ஒருத்தி ஆருத்ரனின் எதிர்வீட்டிலேயே இருந்ததால் அவளுக்கு அனைத்து தகவலும் உடனுக்குடன் வந்துவிடும் எப்போதும். அதன் பொருட்டு தான் இப்போதும் அவனை பேச வாய்ப்பு கிடைத்ததென்று பேசியிருந்தாள்.
அவளுக்கு அன்று முதல் ஜென்ம சனி ஆரம்பிக்க போவதறியாமல் பேசிவிட்டிருந்தாள். முன்பே அதை தெரிந்திருந்தால் அது போல சொல்லியிருக்க மாட்டாளோ?? என்னவோ??
அவள் அவ்வளவு பேசிய போதும் ஆருத்ரன் அமைதியாகத் தான் இருந்தான். மனநிம்மதி தேடி கோவிலுக்கு வந்தாயிற்று அது முழுதாய் அவனுக்கு கிடைக்காது போனாலும் அவன் பாரம் குறைந்திருந்தது.
இந்த நேரத்தில் அஞ்சனாவிடம் பேசி அவன் நிம்மதி தொலைய அவன் விரும்பவில்லை. பேசாமல் அவன் நடந்துச் செல்ல அவள் விடுவதாயில்லை.
“என்ன கேட்டுட்டே இருக்கேன். பேசாம போயிட்டு இருக்கீங்க. உன் கூடலாம் இருக்கறதை விட அவ போனதே நல்லது. நான் சொன்னது அவளுக்கு புரிஞ்சிடுச்சு போல அதான் ஓடிப் போயிட்டா” என்று அவள் சொல்லி முடிக்கவும் ருத்ரனாய் நின்றிருந்தான் அவளின் முன்பு.
“என்ன சொன்னே?? என்னடி சொன்னே??” என்று அவன் உறுமியதில் அடிவயிற்றில் ஒரு பயம் எழத்தான் செய்தது அவளுக்கு.
“இனி ஒரு வார்த்தை பேசினே உன்னை கொன்னே போட்டிருவேன் பார்த்துக்கோ”
“என்னடி தெரியும் உனக்கு என் பொண்டாட்டி பத்தி. அவளை உன்னை மாதிரின்னு நினைச்சியா. இனிமே இப்படி பேசினே தொலைச்சிடுவேன் தொலைச்சி”
“அப்படித்தான்டா பேசுவேன் என்னடா செய்வே. என்னையே மிரட்டுறியா, இப்படித்தான் அவகிட்டயும் பேசியிருப்பே அதான் ஓடிட்டா” என்று மீண்டும் மீண்டும் ஓடிவிட்டாள் என்று பேசியே அவனை வெறியேற்றிக் கொண்டிருந்தாள்.
அவள் கழுத்தை அப்படியே பிடித்துவிட்டான் அவன். “ஏய் விடு” என்று அவள் தட்ட முயல லோகுவும் இவனின் ஆவேசம் கண்டு அவனை தன் புறம் இழுக்க முயல எதுவும் எடுபடவில்லை அவனிடம்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்தான் அவளின் கணவன் விக்னேஷ். “அண்ணா ப்ளீஸ் அவளை விட்டிடுங்க” என்று சொல்ல சட்டென்று விட்டுவிட்டான் அவன்.
“சொல்லி வை உன் பொண்டாட்டிகிட்ட என் பொண்டாட்டி பத்தி பேச அவளுக்கு எந்த தகுதியும் இல்லை”
“ஏன் அவளும் என்னை மாதிரி ஒரு பொம்பளை தானே”
“அவளும் பெண் தான் ஆனா உன்னை மாதிரி ஓடிப் போறவ கிடையாது. நீ என்னமோ பெரிய யோக்கியம் மாதிரி பேசுற, நீயே ஒழுக்கங்கெட்டவ நீ எப்படி என் பொண்டாட்டியை பேசலாம். உனக்கென்ன தகுதி இருக்கு அதுக்கு”
“ஏய் யாரைப்பார்த்து ஒழுக்கங்கெட்டவன்னு சொல்றே… நீ தான்டா எதுக்கும் லாயக்கில்லாதவன்”
“கொன்னுடுவேன்டி உன்னை இனிமே இப்படி பேசினே கொன்னுடுவேன். நான் லாயக்கில்லாதவன்னு சொல்றியே எப்படிடி சொல்றே. சொல்லு எப்படி சொன்னே. நீ என் கூட வாழ்ந்து பார்த்தியா, எத்தனை நாள் வாழ்ந்தே”
“வாய் கூசாம என் மேல பழி போட்டு இவன் கூட ஓடிப்போனவ தானே நீ”
“உன்னையெல்லாம் அப்போவே வெட்டி போட்டிருந்தேன்னா நீ இவ்வளவு தூரம் பேசிட்டு நிப்பியா என் முன்னாடி. இதோ இவன் கெஞ்சினான் என்கிட்ட நான் அவளை உயிரா விரும்பறேன். எங்களை வாழவிடுங்கன்னு. அதனால தான் இத்தனை நாள் பேசாம இருந்தேன்” என்று அவன் சொல்லவும் அஞ்சனா திரும்பி விக்னேஷை பார்க்க அவனோ தலை குனிந்து நின்றிருந்தான்.
“ஒதுங்கி போறவன்கிட்ட வந்து வேணும்ன்னே வம்பு பண்ணது நீ. உன்னால தான் இன்னைக்கு நான் இவ்வளவு பேசவேண்டியதா போச்சு”
“டேய் இவளை நீ நம்பாதடா. இவளுக்கு நான் வேணாம்ன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை வேணாம்ன்னு சொல்லியிருக்க முடியாதா என்ன”
“கேளு அவளால இல்லைன்னு சொல்ல முடியுமா. இன்னமும் நாங்க அவளுக்கு போட்ட நகையை தான் போட்டுட்டு சுத்துறா. இப்போவே தெரியலையா அவளோட லட்சணம் என்னன்னு”
“போனா போகுதுன்னு நான் எதையுமே கேட்காம விட்டது இவங்க மாதிரி இறங்கி பேச விருப்பமில்லாம தான். எதுவுமே செய்ய முடியாம எல்லாம் இல்லை”
அஞ்சனாவிற்கு கூசிப்போனது ஆருத்ரன் பேசப்பேச. அவள் ஆரம்பித்தது தான் அது அவளுக்கெதிராய் திரும்பும் என்று அவளே எதிர்பார்த்திருக்கவில்லை.
அவள் அன்னை தாலி செயினை மட்டும் தான் திருப்பிக்கொடுக்க சொன்னாள். அன்றே அதை கழற்றி கொடுத்துவிட்டிருந்தாள். “அம்மா இந்த நகையும் அவங்க போட்டது தானே”
“அது இருக்கட்டும் விடுடி அதெல்லாம் அவங்களுக்கு ஞாபகம் இருக்காது. இவ்வளவு தூரம் உன்னை கொண்டு வந்துவிட்டதுக்கு ஈடா இருக்கட்டும் விடு” என்று அவர் சொல்லிவிட்டிருக்க அவளும் சரியென்று இருந்திருந்தாள் அன்று.
அது எவ்வளவு பெரிய தவறு என்று ஆருத்ரன் திருப்பி கொடுத்த போதே புரிந்தது அவளுக்கு. அருகில் நின்றிருந்த விக்னேஷ் பார்த்திருந்த பார்வை வேறு அவளை கொன்றது.
“உன்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நினைக்கிறே. எல்லாம் உன் தோற்றத்தை பார்த்து தான். என் தோற்றம் பிடிக்காம அப்புறம் உன்னை பார்த்திருக்கா அப்போன்னா அவ எப்படின்னு நீ தெரிஞ்சுக்கோ”
“எல்லாம் இந்த தோற்றத்துக்காக தான். அது ஒரு நாள் போய்டும், அப்போ இவ என்ன செய்வா. அதை நான் என் வாயால சொல்லணுமா என்ன. என்னை பணத்துக்காக கல்யாணம் பண்ணா, உன்னை தோற்றத்துக்காக” என்று அவன் சொல்ல விக்னேஷின் திரும்பி அஞ்சனாவைத் தான் பார்த்தான்.
ஆருத்ரன் சொன்னது ஒண்ணும் பொய்யில்லையே என்று தான் அவனுக்கு தோன்றியது. நடந்ததில் அவன் தவறும் இருக்கிறது என்ற போதும் எப்போதும் போல் பழியை பெண்ணின் மீது போட்டு தப்பும் மாறாத ஆண் வர்க்கமாக இருந்தான் அவனும்.
“அவகிட்ட சொல்லி வைங்க. இனிமே இந்த ஓடிப்போனா நாயெல்லாம் என்னைப் பேசினா நான் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன். இது தான் கடைசி நான் இவளை பார்க்கறது, அப்படியே என்னை வெளிய பார்த்தாலும் இவ பேசாம போய்டணும். மீறிப் பேசினா அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்”
விக்னேஷிற்கு ஆருத்ரன் தன் மனைவியை நாயென்று சொன்னது அவ்வளவு கஷ்டமா இருந்தது. அவள் மேல் வருத்தம் இருந்தாலும் அதை அவனிடம் காட்டிக்கொள்ளாது “மன்னிச்சிடுங்க அண்ணா இனிமே அவ இப்படி பேச மாட்டா. நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்”
“உன்னோட மன்னிப்பு எனக்கெதுக்கு. நான் எந்த தப்பும் பண்ணாதவன் என்னை இவ பேசுனா எனக்கொண்ணும் கவலையில்லை. என் பொண்டாட்டியை இவ தப்பா பேசினா அதனால தான் நானும் பேச வேண்டியதா போச்சு”
“நான் யாருன்னு உனக்கு தெரிய வைக்கணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. ஏன்னா இப்போ உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் யாருன்னு என் பொண்டாட்டிக்கு தெரியும். அவளைப் பார்த்து நீ தெரிஞ்சுக்கோ” என்ற ஆருத்ரன் வண்டி எடுக்கச் சென்றான்.
அவன் பேசிச் சென்ற பின்னே மழையடித்து ஓய்ந்தது போல இருந்தது. அதுவரை மனதில் தேக்கி வைத்திருந்ததை கொட்டித் தீர்த்துவிட்டான் ஒரே நாளில்.
அஞ்சனா திரும்பி தன் கணவனைப்பார்க்க அவன் பார்வையோ இவளை யாரோ போல் பார்த்து வைக்க அந்த ஒரே பார்வையில் இவள் அடிபட்டுப் போனாள். “என்னங்க அவன் என்னமோ லூசு மாதிரி உளறிட்டு போறான்” என்று இவள் பேச “உண்மையை தானே சொல்லிட்டு போறாரு” என்றவன் மீண்டும் வண்டி எடுக்கச் சென்றான்.
“கோவிலுக்கு போகலையே”
“நிம்மதியே போச்சு, இனிமே அங்க போய் என்னத்தை தேட” என்றான் அவன் விரக்தியாய்.
அவள் செய்த பாவத்திற்கு தண்டனையை தினம் தினம் தன் கணவனின் பேச்சில் அவள் அனுபவிக்க தான் போகிறாள் இனி.
லோகு ஆருத்ரனையே மலைப்பாய் பார்த்திருந்தான். “அண்ணா என்னண்ணா இப்படி பேசிட்டே??”
“என்னைக்கோ பேச வேண்டியது இதுவே லேட்டு”
“இருந்தாலும் அவ புருஷன் முகமே மாறிப் போச்சு”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்??”
அவன் சொன்னது சரி தானே இனி அவன் என்ன செய்ய முடியும் அதற்கு.
“கவுன்சிலர் வீட்டுல கூட நிதானமா தானே இருந்தே… இப்போ இப்படி பொங்கிட்டியே அண்ணா”
“அவரு ஒண்ணும் எனக்கு எதிரியில்லைடா. ஆனா இவ எனக்கு வேண்டாதவ பார்த்தேல்ல என் பொண்டாட்டியை பத்தி என்னெல்லாம் பேசினான்னு. இவளை எல்லாம் அன்னைக்கே ஏதாச்சும் செஞ்சு இருக்கணும், அப்படியே விட்டது என்னோட தப்பு தான். அதனால தான் அப்பப்போ வந்து கடிச்சுட்டு போச்சு”
“இப்போ திருப்பி கொடுத்திட்டேன்ல இனிமே என் பக்கமே வராது” என்றான் ஆருத்ரன்.
“சரி வண்டி எடுண்ணா அந்த வருண் வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்”
“வேண்டாம்டா மனசே என்னமோ போல இருக்கு. நான் வீட்டுக்கு போறேன் நீ கடையை பார்த்துக்கோ. என்னை வீட்டில விட்டுட்டு நீ வேணா வண்டி எடுத்திட்டு போ” என்றவன் லோகுவை வண்டி ஓட்டவிட்டு அவன் பின்னால் ஏறிக் கொண்டான்.