Advertisement

32
“உங்க பேச்செல்லாம் இன்னைக்கு ரொம்ப புதுசா இருக்கு”
“அதனாலென்ன இப்போ கெட்டுப் போச்சு”
“ஒண்ணும் கெடலை, நான் ஒண்ணு கேட்கவா??”
“என்ன??”
“என் பேரு சொல்லி நீங்க சரியாவே கூப்பிடுறதில்லையே ஏன்??”
“ஒவ்வொரு தடவையும் என்னமோ பெரிசா கூப்பிடா என்னவோ அந்நியமா தோணுது. சின்னதா சுருக்கி கூப்பிடணும்ன்னு தோணுச்சு”
“அப்போ அத்தை கூப்பிடுற மாதிரி அருள்ன்னு கூப்பிட வேண்டியது தானே”
“அதெல்லாம் வேணாம் அது பையன் பேரு மாதிரி இருக்கு”
“நீங்க ஒருத்தர் தான் சொல்லலை நீங்களும் சொல்லியாச்சு இப்போ. பேசாம நீங்க இந்த டார்லிங், டியர்ன்னு, கண்ணம்மா, செல்லம்மா, குட்டியம்மான்னு கூப்பிடலாம்ல”
“அந்த டியர், டார்லிங் எல்லாம் இங்கிலீஷ்ல கூப்பிடுறது. அப்புறம் நீ சொன்ன மத்த எல்லாம் எனக்கு கூப்பிடணும்ன்னு தோணலை. உன்னை உன் பேரு சொல்லித் தானே கூப்பிடணும்”
“ஷப்பா அருள் கூப்பிட மாட்டேங்க. அருளாசினி பெரிசா இருக்கு. அப்புறம் எப்படித்தான் கூப்பிட போறீங்க சினின்னா. ஏன்னா அது தான் என் பேருல பின் பாதியில இருக்கு”
“ஹா ஹா நான் ஆசினினு கூப்பிடறேன்”
“என்னது ஹாசினியா”
“ஹாசினி இல்லை ஆசினி.உன் பேரை பிரிச்சா அருள் + ஆசினி தானே வரும். தமிழ் ஆ தானே போடணும்”
“புலவரே என்ன இப்படி இறங்கிட்டீங்க” என்று அவனை கிண்டலாக சொன்னாலும் அவன் தேடிப்பிடித்து சொன்ன பெயர் அவளுக்கு பிடித்திருந்தது.
“ஏன் பிடிக்கலியா??”
“நீங்க என் பேரை கூப்பிட்டாலே பிடிக்கும். எப்படி கூப்பிட்டா என்ன, ஆனாலும் நீங்க ஸ்பெஷலா கூப்பிடுறது பிடிச்சிருக்கு. எங்க ஒரு தரம் கூப்பிடுங்க பார்க்கலாம்”
“அதெல்லாம் பேச்சு வாக்குல தானா வரணும். நீ கேட்டு நான் சொன்னா அதுல கிக்கு இருக்காது”
“நீங்க இவ்வளவு பேசுவீங்கன்னு இப்போ தான் தெரியுது எனக்கு”
“அதெல்லாம் நல்லா தான் பேசுவேன்”
“என்கிட்ட இப்போ தானே பேசறீங்க”
“பேசக்கூடாதுன்னு எல்லாம் இல்லை. என்னவோ ஒரு தரம் அடிப்பட்டது என்னை நிறைய யோசிக்க வைக்குது” என்று அவன் சொல்லவும் அவள் முகம் வாடியது.
“உங்களுக்கு நானும் அப்படி போய்டுவே…” என்று அவள் முடிக்கும் முன்னே அவன் கரம் அவள் வாயை மூடியது.
“நான் உன்னை அப்படி என்னைக்கும் நினைக்க மாட்டேன். ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தரும் இருக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்கறதில்லைல அது போல தான்”
“நான் சொல்ல வந்தது அந்த விஷயத்துல நான் அடிப்பட்டதுனால எதையும் நான் சொல்லவோ பேசவோ ஒரு தயக்கம் இருந்திட்டே இருக்கு. ஒரு பக்கம் கொஞ்சம் முரடா ஆகிப்போனேன்”
“ஏன்னா என்னை இளிச்சவாயன்னு நினைச்சிட கூடாதுல்ல, அதனால தான். அதே தான் ஆரம்பத்துலயும் உன்கிட்ட அப்படியெல்லாம் நடக்க வைச்சிடுச்சு. டாக்டர் என்னை திட்டினதுல தப்பேயில்லை. அப்போ தான் உன்கிட்ட பேச எனக்கு தயக்கம் வந்துச்சு. இந்த நிமிஷம் அப்படி எந்த தடையும் இல்லை, தளையும் இல்லை” என்று உணர்ந்து அவன் சொன்னதை அவளும் உணர்ந்தாள்.
“சரி அந்த பேச்சை விடுங்க. வேற பேசுவோம்”
“என்ன பேசணும்??”
“நீங்க ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிக்கும் போது எப்படி இருப்பீங்க??”
“அந்த போட்டோ எல்லாம் ஊர்ல நம்ம வீட்டுல இருக்கு. நீ அங்க வரும் போது காட்டுறேன்”
“ஆளைப்பாரு நான் போட்டோவா கேட்டேன். நான் கேட்டது அப்போ நீங்க எப்படி நடந்துக்குவீங்க. ஜாலியா இருப்பீங்களா, இல்லை இதே மாதிரி தானா. இல்லை ரொமான்ஸ் ஹீரோவா எப்படின்னு சொல்லுங்க”
“அதுவா நான் ரொம்ப படிப்பாளி தான். எங்க ஊர்ல எங்க ஆளுங்கல்ல யாரும் அதிகம் படிச்சதில்லை. நான் தான் படிச்சிருக்கேன். எல்லாத்துக்கும் காரணம் எங்கப்பா தான். அவர் சொல்லிட்டே இருப்பாரு, நீ படிடா அப்போ தான் நம்மளை எல்லாரும் மதிப்பாங்கன்னு”
“ஆனா படிப்புக்கு மட்டும் மரியாதையில்லை பணத்துக்கும் சேர்த்து தான் மரியாதைன்னு நான் வளர்ந்த பிறகு தான் புரிஞ்சுகிட்டேன்”
“எந்தளவுக்கு வெறித்தனமா படிச்சேனோ அந்தளவுக்கு வெறித்தனமா வேலையும் பார்த்தேன்”
“உங்க கதை ஜாலியா இருக்கும்ன்னு நினைச்சு கேட்டா இப்படி சொல்றீங்க. ஜாலியா எதுவும் உங்க வாழ்க்கையில நடக்கலையா”
“ஹ்ம்ம் நடந்துச்சு”
“அப்போ அதை சொல்லுங்க” என்றாள் அவள் ஆர்வமாய்.
“உன்னை கல்யாணம் பண்ண பிறகு தான் வாழ்க்கை இனிமையா இருக்கு. அது தான் சந்தோசமான நிகழ்வுகளை எனக்கு கொடுக்குது” என்று அவன் சொல்ல அவளுக்கு என்னவோ போலானது.
அவள் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் உண்டு தான். ஆனாலும் பெரிதாய் எந்தவொரு மாற்றங்களும் இல்லாது தான் அது சென்றது. ஆனால் ஆருத்ரன் தன் வாழக்கையில் பெரிதாய் கஷ்டப்பட்டிருக்கிறான் என்பது அவன் பேச்சிலேயே புரிந்தது.
தன்னைத் தான் அவன் வாழ்வின் சந்தோஷ தருணமாக நினைக்கிறேன் என்று சொன்னது அவளை திக்குமுக்காட செய்தது. பேச்சின் திசை எங்கோ செல்வது புரிய அதை மாற்றினாள்.
“கால் வலிக்குது நடந்து நடந்து உட்காரலாமா”
“கீழ போய்டலாமா அப்போ??”
“இங்கவே உட்காருவோம் அன்னைக்கு மாதிரி”
“என்னது அன்னைக்கு மாதிரியா?? ஆளைவிடும்மா” என்றான் ஆருத்ரன்.
“ஏன் என்னை தாங்கிக்க மாட்டீங்களா??”
“குழந்தை பிறந்து பிறகு உங்க ரெண்டு பேரையும் ராஜ்கிரண் சார் மாதிரி ஆளுக்கொரு தோள்ல கூட தூக்கிக்கறேன். இப்போ வேணாம், போன முறை வயிறு இவ்வளவு பெரிசு இல்லை. இப்போ பாப்பா வளர்ந்தாச்சு”
“அன்னைக்கு மாதிரி உட்கார கஷ்டமா இருக்கும் உங்க ரெண்டு பேருக்கும். அதுக்கு தான் சொல்றேன்” என்று அவன் அக்கறையாக சொன்னது மிகப்பிடித்தது அவளுக்கு. அவன் உட்கார்ந்துக் கொண்டு அவளுக்கு கைக்கொடுக்க அருகே அமர்ந்துக் கொண்டாள். அவன் தோள் சாய்ந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள் உரிமையாய்.
“எங்கப்பா பார்த்து கட்டி வைச்சிருந்தா கூட இப்படி ஒருத்தர் எனக்கு கிடைச்சு இருப்பாங்களான்னு தெரியலை. நான் ரொம்பவே லக்கி தான்” என்றாள் உணர்ந்து.
“நிஜமா தான் சொல்றியா. நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லை. உன்னை எந்த நிலையில நான் கல்யாணம் பண்ணேன்னு தெரிஞ்சும் இப்படி சொல்றே”
“என் கையை காலை கட்டி ஒண்ணும் நீங்க கல்யாணம் பண்ணலை. இனிமே அதே சொன்னீங்க அப்புறம் பாருங்க நான் கோவிச்சுட்டு எங்காச்சும் போய்டுவேன்”
“வேணாம்மா வேணாம், நீ கோவிச்சுட்டு போனாக் கூட உன் பொண்டாட்டி ஓடி போயட்டாளான்னு தான் எல்லாரும் என்கிட்ட கேட்பாங்க” என்று அவன் சொல்ல அவன் பேச்சு அவளை வருந்தச் செய்தது. சந்தோசமாக பேச வந்த இடத்தில் ஒன்று அவளை சந்தோசத்தில் திக்குமுக்காட செய்தான். அல்லது வருந்தச் செய்தான். 
அவள் விளையாட்டாக பேசப்பேச அது அவன் ஆழ்மனத்தின் வலிகளை வெளிக்கொண்டு வந்துக்  கொண்டிருந்ததை அவள் உணர்ந்துக் கொண்டாள்.
“நான் ஏதோ சொன்னா மறுபடியும் அங்கவே வந்து நிக்கறீங்க. நான் உங்களைவிட்டு எங்கயும் போக மாட்டேன், கோவிச்சுக்கிட்டு கூட” என்றவள் எக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். அதுவே அவன் மனக்கவலை போக்கியது.  
“அம்மா உன்னை இன்னும் பத்து இருபது நாள் தான் வேலைக்கு போகச் சொன்னாங்க போல. உனக்கொண்ணும் பிரச்சனையில்லையே”
“ஹ்ம்ம் அத்தை என்கிட்ட பேசினாங்க. எனக்கொண்ணும் பிரச்சனையில்லை மாசம் நெருங்குதுல. எப்படியும் நான் லீவு போட்டு தானே ஆகணும். அவங்க சொல்றது சரி தானே. நானும் ஓகே சொல்லிட்டேன் அவங்ககிட்ட”
இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் நம்ம ஒண்ணா இருக்கலாம். குழந்தை பிறந்த பிறகு இங்க சென்னைக்கு மாற்றல் கேட்டு ஒரேதா இங்க வந்திடறேன். அப்புறம் எங்கயும் போக வேண்டி இருக்காது” என்றாள்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். உனக்காக தான் நான் அப்போ எந்த முயற்சியும் எடுக்கலை. நீ தான் உன் பிறந்த ஊரு அது இதுன்னு சொல்லிட்டு என்னைவிட்டு போகணும்ன்னு நினைச்சே. பிள்ளைத்தாச்சி பொண்ணு ஆசைப்பட்டு கேட்கறதை சும்மாவிட முடியுமா அதான் சரின்னு விட்டுட்டேன். இல்லையின்னா அப்போவே எம்எல்ஏகிட்ட சொல்லி உன் போஸ்டிங்கை இங்க மாத்தி இருப்பேன்” என்றவனை பெருமை பொங்க பார்த்தாள் அவள்.
அன்று பேசியதெல்லாம் இப்போது நடந்தது போல இருந்தது. ‘விட்டு போக மாட்டேன்னு சொன்னியே எங்க இருக்க ஆசினி. சீக்கிரம் வந்திடேன் என்கிட்ட’ என்று மனதார அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் அவன்.
“அண்ணா வருண் வீட்டுக்கு போய்டலாம்ல”
“போகலாம்டா அதுக்கு முன்ன கடையில கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சுட்டு போய்டலாம்”
“என்ன வேலைன்னு சொல்லுண்ணா நான் போய் முடிச்சிடறேன்”
“சம்பளம் போடணும்டா”
“ண்ணா அதுக்கு இப்போ என்ன அவசரம்??”
“நாம கவலையா இருக்கோம்ன்னு அடுத்தவனை பட்டினி போட முடியுமாடா. அந்த பாவம் நமக்கு வேண்டாம் லோகு. கொஞ்ச நேர வேலை தான் முடிச்சுட்டு போவோம்” என்றவனின் வண்டி அவன் அலுவலகத்தை அடைந்தது.
அரைமணி நேரத்தில் வந்த வேலை முடிந்துவிட அவன் கால்கள் அருகிருந்த அந்த படுக்கையறைக்குள் நுழைந்தது. அருளாசினியை காயத்ரியின் வீட்டில் இருந்து அழைத்து வந்த போது அங்கு தானே தங்க வைத்திருந்தான்.
இந்த இடத்தில் தானே அவள் அமர்ந்திருந்தாள். என்னை திருமணம் செய்ய சம்மதித்ததும் இங்கு தானே என்று அவன் நினைவுகள் அந்நாளை நினைக்க வைத்தது. கண்கள் கண்ணீர் பொழிந்து விடுமோ என்று அவனுக்கு அச்சமாகியிருக்க சட்டென்று அந்த அறையில் இருந்து வெளியில் வந்தான். 
“எங்க அண்ணா போய்ட்ட??” என்றான் லோகுவிடம் “இங்க தான் இருந்தேன் லோகு” என்றான் அவன்.
“சாப்பிடுண்ணா முதல்ல அப்புறம் வருணை பார்க்க போகலாம்”
“சாப்பிடுற மூடு இல்லைடா”
“அய்யர் ஹோட்டல்ல தான் வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடு”
“அவ சாப்பிட்டாளா இல்லையான்னு தெரியலையேடா”
“அண்ணா ப்ளீஸ் இப்படில்லாம் பேசாத” என்றான் லோகு.
—————-
அந்த உருவம் அவளருகே வந்து அவளை எழுப்பியது. “அம்மா அம்மா எழுந்திரும்மா” என்று.
“நீங்க யாரு??” என்று இவள் கேட்க அறையில் சட்டென்று ஒளி வந்தது.
“கரண்ட் போய்டுச்சும்மா எனக்கு இருட்டுல எது எங்க இருக்குன்னு தெரியலை. அதான் விளக்கு தேடி எடுத்திட்டு வர முடியலை”
“நீங்க யாருன்னு கேட்டேன்”
“இங்க வேலை செய்யறேன்ம்மா”
“என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க??”
“நான் எங்கம்மா கூட்டிட்டு வந்தேன். உன் புருஷன் தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்காரு” என்றார் அப்பெண்மணி.
‘என்னது ஆருத்ரனா, அவரா என்னை இங்கு அழைத்து வந்திருக்கிறார்’

Advertisement