Advertisement

3
அஞ்சனாவை பார்த்த போதே அவள் கணித்திருந்தாள் ஆருத்ரன் சொன்ன பெண் அவளாகத் தானிருக்கும் என்று. அதனால் பெரிதாய் அவளை கண்டுக்கொள்ளவில்லை அவள்.
“என்ன அப்படியே ஷாக் ஆகிட்டியா??”
“இல்லை”
“இல்லையா!! ஓ!! முன்னாடியே சொல்லியாச்சா”
“இப்படி ஒரு விஷயம்ன்னு சொன்னாங்க. அது நீங்கன்னு நானா தான் தெரிஞ்சுக்கிட்டேன்”
“என்னை மாதிரி தான் நீயும் ஆகப்போறே” என்று அவள் சொல்ல ருத்ரன் அவளை முறைத்தான்.
“என்னை எதுக்கு முறைக்கிறே??”
“நீங்க உங்களை மாதிரியே எல்லாரையும் நினைக்கறீங்க போல. நான் அப்படியெல்லாம் இன்னொருத்தரோட ஓடமாட்டேன்” என்று அருளாசினி சொல்லவும் இப்போது அஞ்சனாவின் முகம் விழுந்தது.
‘என்னை எப்படி இவ சொல்லலாம்’ என்ற ஆத்திரம் தலைத்தூக்கி நிற்க ருத்ரனை காயப்படுத்தினாள் அவள்.
“நான் போனது ஏன்னு அவனுக்கே தெரியும். இவனைவிட்டு போனதுக்கு அப்புறம் தான் நான் இப்படி இருக்கேன், இவனோட இருந்தா என் ஜென்மத்துலயும் உனக்கு இப்படியொரு சம்பவம் நடக்காது” என்று தன் மேடிட்ட வயிற்றை காட்டி அவள் சொல்ல அது பலமாய் அவனை தாக்கியது.
அவளின் உடல்நிலை கருத்தில் கொண்டு எதையும் செய்ய இயலாத நிலையில் நின்றிருந்தவன் தன் கோபத்தையெல்லாம் அருளாசினியின் கையை பற்றியதில் காண்பித்திருக்க அவள் வளையல் உடைந்து காயமானது.
அதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் அவனில்லை. அருளாசினியை இழுத்துக்கொண்டு வண்டிக்கு அருகில் சென்றான். “ஏறு” என்று உறுமியவன் வண்டியை முறுக்கிய முறுக்கில் வண்டி சாலையில் பறந்தது.
 
அடுத்து அது நின்றது அவனின் வீட்டில் தான். அவள் இறங்கினாளா அவன் பின்னோடு வருகிறாளா இல்லையா எதையும் அவன் கண்டுக்கொள்ளவில்லை. கேட்டை படார் என்று திறக்க அது பெருத்த ஓசையுடன் திறந்து சுவற்றில் முட்டி அந்த வேகத்தில் முன்னால் வந்தது.
பின்னால் வந்த அருளாசினி அவன் கோபத்தை கண்டவளாய் கதவை மெதுவாய் மூடிவிட்டு உள்ளே வந்தாள். ருத்ரன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கண்ணை மூடி பின்னால் சாய்ந்திருந்தான். 
“என்னம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சா. அர்ச்சனை எதுவும் பண்ணலையா??” என்றார் அவர்கள் வெறும் கையோடு வந்ததை பார்த்து.
“நல்ல தரிசனம் தான் அத்தை”
“சரி நீ போய் புடவை மாத்திட்டு வந்திடு” என்றவர் “ஆமா உனக்கு சமைக்க தெரியும் தானே” என்றார் தொடர்ந்து.
“ஹ்ம்ம் தெரியும்”
“லோகு இப்போ கறி எடுத்திட்டு வருவான். குடலை எடுத்து குழம்பு வைச்சுட்டு கறியை சுக்கா பண்ணிடு”
“ம்மோவ்…” என்று கத்தினான் ருத்ரன்.
“என்னடா”
“அவ இதெல்லாம் செய்ய மாட்டா”
“ஏன்டா?? அதான் சமைக்க தெரியும்ன்னு அந்த பொண்ணு சொல்லுச்சே”
“அதெல்லாம் தெரியாதும்மா நீ பேசாம இரு”
“ஏன்டா உன் பொண்டாட்டி சமைக்கக்கூடாதா??”
“அய்யர் வீட்டு பொண்ணும்மா”
“டேய் ஏன்டா இப்படி பண்ணுறே நீ… இதெல்லாம் நீ என்கிட்ட சொல்லவே இல்லையே…”
“இதெல்லாம் பாவமில்லையாடா. உனக்கு தினம் கவுச்சி இல்லாம சோறு இறங்காது. அந்த புள்ளை என்னடா பண்ணும் பாவம்…” என்றவருக்கு என்னவோ போலானது.
“அவளை சாப்பிட சொல்லி யார் சொன்னது. நான் எப்பவும் போல சாப்பிடுவேன். வேணும்ன்னா அவளும் சாப்பிடட்டும்” என்றவனை கொலைவெறியாய் பார்த்தார் அவன் அன்னை.
“அந்த புள்ளைய வைச்சுக்கிட்டு எப்படிடா சாப்பிடுவ, அதுக்கு சங்கடமா இருக்காது…” என்று அவர் சொல்லவும் தான் அவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
“நான் சாப்பிட மாட்டேன், நீங்க எப்பவும் போல இருங்க. எனக்கு வித்தியாசமா எதுவும் தெரியாது. ஸ்கூல்ல, காலேஜ்ல எல்லாம் கூட படிக்கிற பிள்ளைங்க எடுத்திட்டு வருவாங்க…”
“அதுவும் இதுவும் ஒண்ணாம்மா”
“எல்லாம் ஒண்ணு தான்…” என்றுவிட்டு உள்ளே செல்ல ருத்ரனும் எழுந்தான்.
“அம்மா தூங்க போறேன் யாரும் தொந்திரவு பண்ண வேணாம். சாப்பிடுறதுக்கு எழுப்பறேன்னு சொன்னா செம கடுப்பாகிடுவேன். நானா எழுந்து வந்து சாப்பிட்டுக்கறேன் சரியா” என்றுவிட்டு உள்ளே செல்லப் போனான்.
“நீ எப்படியோ போ அந்த பொண்ணுக்கு இப்போ என்ன செய்யட்டும்”
“லோகுவை ஹோட்டல்ல வாங்கினு வரச்சொல்லு. அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தான் தூங்க போறோம், சும்மா கதவை தட்டி தொல்லைப் பண்ணாதம்மா” என்றவன் அவனறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டான்.
“அம்மான்னு கூட பார்க்காம என்னெல்லாம் சொல்லிட்டு போறான் இவன்” என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் பூரணி.
அருளாசினி உள்ளே செல்லவும் ருத்ரனும் வரவும் ஏதோ சொல்ல வருகிறான் போல என்று எண்ணிக்கொண்டு “என்ன சொல்லணும்??” என்றாள் அவன் முகம் பார்த்து.
“எதுவும் சொல்ல வரலை, செய்ய வந்திருக்கேன்” என்றவனின் கரம் அவள் பின்னை கழற்றி லேசாய் மேலே போட்டிருந்த முந்தானையை இவன் வரவும் இழுத்து இடுப்பில் சொருகியிருக்க அதனை பிடித்து இழுத்தது.
அஞ்சனாவின் மீதிருந்த கோபத்திற்கான வடிக்காலாய் ஆகிப்போனாள் அருளாசினி அக்கணம். அவள் வலியில் முகம் சுருக்கியதை கூட அவன் கணக்கில் எடுத்துக்கொள்ளவேயில்லை. ஒரு அரக்கனை போலவே நடந்துக் கொண்டிருந்தான் அவன்.
மாலை  ஐந்து மணி போல எழுந்தவன் குளித்து  முடித்து  வெளியில் வந்தவன் தனக்கு உணவு எதுவும் வேண்டாம் என்று சொல்லி வெளியே சென்றுவிட்டான்.
“அந்த பொண்ணுடா”
“தூங்குறா எழுப்ப வேணாம்” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
“இவன் தான் இப்படின்னா அந்த பொண்ணாச்சும் கொஞ்சம் பொறுப்பா இருக்கக்கூடாது. நான் பார்த்து கட்டி வைச்சது தான் சரியில்லைன்னு இவன் போக்குல விட்டது தப்பு போல”
“எதையும் என்கிட்ட சொல்லலை. ஒரு பொண்ணை பார்த்தேன். அடுத்த வாரம் கல்யாணம் தாலி வாங்கணும், புடவை வாங்கணும்ன்னு சொன்னவன் பொண்ணை கூட கல்யாணத்தன்னைக்கு தான் கண்ணுலவே காட்டினான்… என்னவோ இதாச்சும் இவனுக்கு தோதா இருக்கணும் இருக்கன்குடி மாரியம்மா” என்று வாய்விட்டு தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தார் பூரணி.
அருளாசினி மெதுவாய் கண் விழித்து பார்க்க அறையெங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அருகில் இருந்த சுவிட்சை தட்ட வெளிச்சம் பரவியது அறையில்.
அங்கிருந்த தன் கைக்கடிக்காரத்தில் நேரம் பார்க்க அது ஆறரை மணியை காட்டியது. அவரசமாய் எழுந்து அமர்ந்தவள் மெதுவாய் குளியலறை சென்று குளித்து வெளியில் வந்திருந்தாள்.
கை காலெல்லாம் விட்டுவிடும் போல ஒரு வலி பரவியது. அவள் கதவை திறந்து வெளியில் வரவும் சோபாவில் அமர்ந்திருந்த பூரணி எப்போது வருவாள் என்று அவள் அறைக்கதவை நிமிர்ந்து பார்க்கவும் சரியாக இருந்தது.
‘ஒரு பொம்பளைபிள்ளை இவ்வளவு நேரம் தூங்கலாமா’ என்று கேட்க நினைத்த கேள்வியை ஏனோ கேட்காமலே விட்டார் அவர். அது நல்லது தான் என்பதை அவள் அவரை நோக்கி நடந்து வரும் போது தான் புரிந்துக் கொண்டார் அவர்.
ஒரு பெண்ணாய் மற்றொரு பெண்ணின் நிலையை அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு தாயாய் தன் மகனை நினைத்து அக்கணம் வெட்கினார் அவர். தன் மகன் இவ்வளவு மோசமாகக் கூட நடந்துக் கொள்வானா என்று தானிருந்தது அவருக்கு.
“உட்காரும்மா சாப்பிடறியா இல்லை கொஞ்ச நேரம் ஆகட்டுமா”
“பசிக்குது எனக்கு” என்று அவள் சொல்லவும் உருகிப் போனது அவருக்கு.
அவர் பார்ப்பதற்கு பலாசுளை போல கரடுமுரடாய் தெரிந்தாலும் உள்ளிருக்கும் கனியை போல இனிப்பானவரே.
“இல்லை வந்து நாங்க செஞ்சது எல்லாம் நீ சாப்பிடுவியாம்மா. நானே இட்லி ஊத்தி சாம்பார் வைச்சேன்” என்றார் அவர்.
“உங்க மகன் கையால தாலி வாங்கிட்டேன், இந்த வீட்டில சாப்பிட மாட்டேனா” என்று அவள் சொல்லவும் மொத்தமாய் உருகிப் போனார் அப்பெண்மணி.
“இங்க வந்து உட்கார்ந்துக்கோம்மா” என்று டைனிங் டேபிளை அவர் காட்ட மெதுவாய் நடந்து வந்து அமர்ந்தாள். அவள் போதும் போதும் என்று சொல்ல சொல்ல அவளுக்கு பரிமாறினார் அவர்.
“கொஞ்சம் காபி குடிக்கறியாம்மா”
“இப்போ வேணாம் அத்தை”
“நீங்க சாப்பிட்டீங்களான்னு நான் கேட்கவே மறந்திட்டேன்…”
“எனக்கென்ன வயசான கட்டை நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்”
“மணியாகுது நீங்களும் சாப்பிடுங்க, நான் எடுத்து வைக்கவா”
“எனக்கு குழம்பு பக்கத்துல குக்கர்ல கொதிக்குதும்மா அது ரெடியாகவும் சாப்பிடறேன். நீ போய் அங்க உட்கார்ந்து டிவி பாரு” என்றவர் தானே வந்து டிவியை ஆன் செய்து ரிமோட்டை அவளிடம் கொடுத்தார்.
“நான் இதெல்லாம் பார்க்கறதில்லை”

“உனக்கு சீரியல் பிடிக்கலைன்னா பாட்டு பாரு…”
“எனக்கு டிவி வேணாம்” என்று அவள் சொல்ல அதை ஆப் செய்துவிட்டு அவளெதிரில் அமர்ந்துக் கொண்டார் அவர்.
“இன்னைக்கு கோவில்ல யாரையாச்சும் பார்த்தீங்களா” என்று சரியாய் கணித்து கேட்டார் அவர்.
“முக்கியமா யாரையும் பார்க்கலையே”
“நீங்க பார்த்த ஆளு முக்கியமானவங்களா நிச்சயம் இருக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும்” என்றவரின் பதிலே எனக்கு தெரியும் என்றது.
“என்ன சொன்னா அவ என் மவனை பார்த்து” என்றார் சற்று டென்ஷனான குரலில்.
“எதுக்கு நீங்க டென்ஷன் ஆகறீங்க??”
“அப்போ அவ ஏதோ சொல்லியிருக்கா”
“அத்தை நான் ஒண்ணு சொல்வேன் கேளுங்க. அவங்க வேணும்ன்னே பேசறாங்க. அதை கேட்டு நாம டென்ஷன் ஆகறதை பார்த்து அவங்களுக்கு ஒரு சந்தோசம். அதை ஏன் அவங்களுக்கு கொடுக்கணும் சொல்லுங்க. நாம அவங்களை கண்டுக்காம விட்டாலே போதும்”
“என்ன சொல்லும்மா என்னால முடியலை… ருத்ரன் உன்கிட்ட அவளைப்பத்தி சொல்லியிருக்கானா முன்னாடியே, என்னன்னு சொன்னான்…”
“தெரியும் சொல்லியிருக்காங்க”
“என்ன சொன்னான்??”
“என்ன நடந்திச்சோ அதை சொன்னாங்க…”
“உனக்கு எதுவும்??”
“அதெல்லாம் எதுக்கு இப்போ விடுங்க”
“நான் ஒண்ணு கேட்பேன் நீ சொல்வியா??”
“கேளுங்க…”
“உங்க அம்மா?? அப்பா??”
“உயிரோட இல்லை…”
“அப்போ உனக்கு யாருமே…”
“இப்போ இல்லை…”
“நாங்க இருக்கோம்…” என்ற அவர் பதிலை கேட்டு விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்த்தாள் அவள்.

Advertisement