ஆருத்ரன் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறான். கவுன்சிலரின் தம்பி சிவநேசன் ஆட்களை வைத்து அவனை தாக்கியிருக்க கையில் கட்டுடன் அவன் மருத்துவமனையில் இருக்கிறான்.
வீட்டிற்கு இன்னமும் விபரம் தெரிவித்திருக்கவில்லை. பயந்துவிடுவார்கள் என்று ஆருத்ரன் சொல்லியிருந்ததால் லோகு வேறு வழியில்லாது அமைதியாக இருந்தான்.
அவன் தான் அவனுடன் மருத்துவமனையிலேயே இருக்கிறான். அன்னப்பூரணியிடம் இருந்து விடாது அழைப்பு வந்துக் கொண்டிருக்கிறது. ஆருத்ரனுக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.
காயம் கொஞ்சம் பெரிது தான். இடது கையில் ஒரு கட்டு, காலிலும் நல்ல அடி. ஆருத்ரன் திடமானவனே அடித்தவர்கள் திடிரென்று வந்து தாக்கிவிட அவனால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது. அவன் தடுக்க பார்த்த போது தான் கையில் பலத்த அடியானது. போலீஸ் கம்பிளைன்ட்டும் கொடுத்தாயிற்று.
மீண்டும் மீண்டும் அன்னப்பூரணியிடம் இருந்து அழைப்பு வந்துக் கொண்டிருக்க வேறு வழியில்லாது போனை எடுத்தான் லோகு.
“ஹலோ ருத்ரா” என்றவரின் குரலில் பதட்டம்.
“அம்மா நான் லோகு பேசறேன்மா”
“லோகு ருத்ரா எங்கே நீ ஏன் போன் எடுக்கறே??”
“அண்ணன் பக்கத்துல ஒரு வேலையா போயிருக்கார்ம்மா போனை வைச்சுட்டு போயிருக்கார். சொல்லுங்கம்மா அண்ணன் வந்தா நான் சொல்லிடறேன்”
“அம்மா அண்ணிக்கு எதுவும் பிரச்சனையில்லையே” என்றான் சந்தேகமாய்.
“நீ அவனை பேசச் சொல்லு” என்று அவர் போனை வைத்துவிட இவனுக்கு ஏதோ குழப்பம் உடனே அங்கு இருந்த தன் மனைவிக்கு அழைத்துவிட்டான்.
“சொல்லுங்க” என்றவளின் குரலும் சரியில்லை.
“வாணி அங்க என்ன பிரச்சனை??”
“நான் அப்புறம் பேசறேன்”
“வாணி அம்மா பக்கத்துல இருந்தா நீயே கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க இல்லாதப்போ எனக்கு கூப்பிடு. எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் சீக்கிரம்” என்றுவிட்டு இவன் போனை வைத்தான்.
ஆருத்ரன் அப்போது தான் கண் விழித்தான். “யார்கிட்ட பேசிட்டு இருந்தே லோகு” என்றான் வலியோடு. ஆம் அவனுக்கு உடலெல்லாம் அப்படியொரு வலி.
“அம்மா ரொம்ப நேரமா போன் போட்டுட்டே இருக்காங்க அண்ணா. நான் எடுக்கவேயில்லை, இப்போ தான் எடுத்தேன். உங்களை போன் பண்ண சொன்னாங்க”
“அங்க ஏதாச்சும் பிரச்சனையான்னு தெரியலை. அம்மா குரலே சரியில்லை. நீ ஒருவாட்டி பேசிடு அண்ணே” என்று அவன் சொல்லவும் பட்டென்று விழிகளை திறந்தான்.
“போன் போடு” என்று இவன் சொல்லும் போதே லோகுவின் மனைவி இவனுக்கு அழைத்தாள்.
“வாணி கூப்பிடுறா என்னன்னு கேட்டுட்டு வர்றேன்” என்று அவன் நகரப்போக “போனை ஸ்பீக்கர்ல போடு லோகு” என்றான் இவன்.
“அண்ணா…”
“போடுடா” என்று ஆருத்ரன் சொல்லவும் போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டான் அவன்.
“ஹலோ என்னங்க??”
“சொல்லு வாணி”
“இங்க அருளை காணோங்க. இன்னும் வீட்டுக்கு வரலைன்னு இப்போதான் ஸ்கூல்க்கு பார்க்க வந்தேன். அவங்க அப்போவே கிளம்பிட்டாங்கன்னு சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்றாள் அவள்.
ஆருத்ரனின் கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருப்பதும் பொருட்படுத்தாது எழுந்து அமரப் போக “ண்ணா நீ படு” என்று அவசரமாய் எழுந்தான் லோகு.
“ஏங்க அண்ணன் பக்கத்துலவா இருக்காங்க” என்றாள் அவன் மனைவி.
“வாணி நான் அம்மாக்கு போன் பண்றேன். உங்ககிட்ட அப்புறம் பேசறேன், அம்மாவை பார்த்துக்கோ” என்று போனை வைத்துவிட்டான்.
“லோகு அம்மாக்கு போன் பண்ணு”
“அண்ணா நீ படு முதல்ல நான் போன் பண்றேன்”
“ட்ரிப்ஸ் எடுத்துவிட சொல்லுடா, போய் நர்ஸ் கூட்டிட்டு வா. வீட்டுக்கு போகலாம், இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. போ… போய் கூட்டிட்டு வா…”
“ண்ணா பதட்டப்படாத ப்ளீஸ் நீ பேசாம படு. நான் போய் கேட்டுட்டு வர்றேன்”
“கேட்டுட்டு எல்லாம் வரத் தேவையில்லை என்னை உடனே டிஸ்சார்ஜ் பண்ணச்சொல்லுடா” என்றான் சத்தமாக.
லோகு வெளியே ஓடினான். நர்ஸ் உடன் வர “என்ன சார் உடனே டிஸ்சார்ஜ் பண்ணணும்ன்னு சொன்னீங்களாம். இன்னைக்கு தான் கொஞ்சம் நல்லா இருக்கீங்க”
“இப்போ இந்த ட்ரிப்ஸ் முதல்ல எடுத்து விடுங்க” என்றான் அவன்.
“ட்ரிப்ஸ் முடியட்டும் சார் எடுத்து விடறேன்”
“மேடம் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க எடுத்து விடுங்க. டாக்டர் எப்போ வருவார் நான் அவர்கிட்ட பேசணும்” என்றான் பொறுமையாகவே.
“ரவுண்ட்ஸ்ல தான் இருக்கார். கொஞ்ச நேரத்துல இங்க வருவார்”
“ரொம்ப தேங்க்ஸ் இதை மட்டும் ரிமூவ் பண்ணுங்க” என்று அவன் மீண்டும் கேட்க அவள் அதை எடுத்துவிட்டு சென்றாள்.
இவன் எழுந்து அமரவும் லோகு அன்னப்பூரணிக்கு அழைத்து அவனிடம் கொடுத்தான்.
அவர் எடுத்ததுமே “ருத்ரா” என்று தான் பெருங்குரல் எடுத்து கத்தினார்.
“அம்மா என்னம்மா” என்றவனின் குரலும் பிசிறியதோ என்று தான் தோன்றியது லோகுவிற்கு.
“அருளை காணோம்டா உனக்கு போன் போட்டா எடுக்கலை. எங்கடா போனே, எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு இன்னும் வீட்டுக்கு வரலையே என்ன செய்யன்னு தெரியலை”
“வாணி தான் ஸ்கூல்க்கு போய் பார்க்கறேன்னு போயிருக்கு. எனக்கு என்னமோ படபடன்னு இருக்கு ருத்ரா. நீ கிளம்பி இங்க வாயேன்”
“அம்மா இன்னும் ரெண்டு நாள் தானேம்மா வேலைக்கு போறதா இருந்தா… அதுக்கு அப்புறம் இங்க கூட்டிட்டு வந்திடறதா தானே பேசிட்டு இருந்தோம்”
“ஆமாப்பா காலையில கூட என்கிட்ட அதைப்பத்தி பேசிட்டு தான் போனா. சீக்கிரமே ஊருக்கு போகணும்ன்னு. நீ வா ருத்ரா” என்றார் மீண்டும்.
“வர்றேம்மா நீங்க பயப்படாதீங்க. ஒண்ணும் ஆகாது” என்று தனக்குமாக சேர்த்தே சொல்லிக் கொண்டான். அதற்குள் அங்கு வாணி வந்து சேர்ந்திருந்தாள் போல அவள் அருளாசினி பள்ளியில் இருந்து கிளம்பிய விபரத்தை சொல்லியிருக்க அன்னப்பூரணி வெகுவாய் துவண்டு போனார்.
ஆருத்ரனுக்கு தான் முன்பே அந்த விபரம் தெரியுமே. சற்று முன் தான் அவள் லோகுவிற்கு அழைத்துச் சொல்லியிருந்தாலே.
“ருத்ரா வாணி சொன்னது கேட்டா எனக்கு பயமா இருக்குப்பா. பிள்ளைத்தாச்சி பொண்ணு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட்டா என்ன செய்ய நீ உடனே கிளம்பி வா ருத்ரா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றவரின் குரல் முற்றிலும் உடைந்திருந்தது.
“என்னண்ணா நடக்குது, உன்னை போட்டு அடிச்சு வைச்சுருக்காங்க. அண்ணியை வேற காணோம். என்னால தானேண்ணா இதெல்லாம் உனக்கு நடக்குது. எனக்கு அந்த சிவநேசன் மேல தான் சந்தேகமா இருக்குண்ணா”
“லோகு பேசாம இரு. நீ வேற என்னை குழப்பாத. என்னை அடிச்சாங்கன்னா நான் இங்க இருக்கேன், அவளை எப்படி அவங்களுக்கு தெரியும், ஒண்ணும் இருக்காதுடா”
“அண்ணா”
“வேணாம் லோகு எதுவும் சொல்லாத அப்படியெல்லாம் இருக்காது. நீ சொல்றது மட்டும் நடந்திருந்துச்சு அவன் செத்தான்” என்றான் ஆருத்ரன் ஆக்ரோஷமாய்.
அவன் கத்திக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் உள்ளே நுழைந்தார். “என்ன மிஸ்டர் ஆருத்ரன் எதுக்கு இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க?? நீங்க தான் அவரை டென்ஷன் பண்றீங்களா” என்று லோகுவையும் கேட்க “ஒண்ணுமில்லை டாக்டர்” என்றான் ஆருத்ரன்.
அவர் வழக்கமான செக்கப்பை செய்ய அவருக்கு ஒத்துழைத்தான் அவன். “கை வலி எப்படி இருக்கு??”
“இப்போ ஓகே தான்”
“சிஸ்டர் இந்த ட்ரிப்ஸ் ஏன் ரிமூவ் பண்ணீங்க. இது முடியற வரை கண்டினியூ பண்ணுங்க”
“டாக்டர் நான் தான் எடுக்கச் சொன்னேன். நான் இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகணும், இப்போவே ப்ளீஸ்…”
“என்ன ஆருத்ரன் பேசறீங்க. உங்க கண்டிஷன் இப்போ தான் தெறித்து வருது. நீங்க இப்போ போய் இப்படி சொல்றீங்க. இன்னும் ஒன் ஆர் டூ டேஸ் நீங்க இங்க தான் இருக்கணும்”
“சார் ப்ளீஸ் நான் இப்போ போக வேண்டிய கட்டாயம். என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க”
“என்ன பேசிட்டு இருக்கார் இவரு. கொஞ்சம் சொல்லுங்க இவருக்கு” என்று அவர் லோகுவிடம் திரும்பி பேச “டாக்டர் நீங்க தான் மனசு வைக்கணும், ப்ளீஸ் அண்ணனை டிஸ்சார்ஜ் பண்ணுங்க”
“அவங்க வைப் காணோம், மாசமா வேற இருக்காங்க. நாங்க உடனே ஸ்ரீரங்கம் போகணும் புரிஞ்சுக்கோங்க டாக்டர்” என்று லோகு விளக்க மருத்துவர் யோசித்தார்.
“இவர் கண்டிஷன் அப்படி ஒண்ணும் நல்லாகிடலையே. ட்ராவலிங்ல இவர் போன்ஸ் எதுவும் டிஸ்லோகெட் ஆகிட்டா கஷ்டம் இல்லையா”
“நீங்க என்ன சொல்றீங்களோ அதை கேட்கறோம் டாக்டர். ஆனா நாங்க இப்போ கண்டிப்பா ஊருக்கு போகணும். இவங்க அம்மா அங்க தனியா இருக்காங்க அவங்களே உடம்பு முடியாதவங்க, ப்ளீஸ் டாக்டர்” என்றான் லோகு.
“சரி வெயிட் பண்ணுங்க” என்றவர் வெளியே சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் “நான் பெரிய டாக்டர்கிட்ட பேசிட்டேன். நீங்க டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம். போய் என்ன செட்டில்மென்ட்ன்னு பார்த்திட்டு வாங்க. அதுக்குள்ளே டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி ஆகிடும்” என்றுவிட்டு அவனுக்கு ஆலோசனைகள் கொடுத்து அகன்றார் அவர்.
“லோகு என்னோட கார்ட் அந்த பர்ஸ்ல இருக்குடா” என்றான் ஆருத்ரன்.
“வண்டி சொல்லிடு லோகு”
“ண்ணா நம்ம வண்டியே எடுத்துக்கலாம்”
“வேணாம்டா நீ ஓட்டிட்டு வரணும். உனக்கும் ரெஸ்ட் இல்லை”
“அதெல்லாம் பரவாயில்லை நீ தான் இப்போ முக்கியம். நான் போயிட்டு வந்திடறேன்” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.
அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி அங்கிருந்து கிளம்பவே ஏழு மணியாகிவிட்டது. வீட்டிற்கு சென்று தேவையானதை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.
“ண்ணா அந்த கவுன்சிலரை பார்த்திட்டு போய்டலாமா”
“வேணாம்டா அவன் தான் பண்ணான்னு நமக்கு தெரியாதே”
“உன்னை இப்படி ஆக்கினது அவன் தான். அது எனக்கு நல்லா தெரியும்”
“அதை போலீஸ் சொல்லட்டும்டா”
“உனக்கே தெரியும் அப்புறம் எதுக்கு இல்லைன்னு சொல்றே”
“லோகு பேசாம விடு. எனக்கு இப்போ அதெல்லாம் யோசிக்கற மூட் இல்லை, ப்ளீஸ் வண்டியை ஸ்ரீரங்கத்துக்கு விடு” என்றுவிட்டு சீட்டில் சாய்ந்துக் கொண்டான்.
உறக்கம் வரவில்லை அவனுக்கு. இந்த முறை ஊருக்கு சென்று வந்ததில் இருந்தே அவனுக்கு ஏனோ மனதே சரியில்லை.
அது சரியே என்பது போல இரண்டு நாட்களுக்கு முன் சிவநேசன் ஆள் வைத்து இவனை அடித்திருந்தான். ஆருத்ரன் அறிவான் செய்தது அவன் தான் என்று. வேண்டும் என்று தான் போலீசில் கம்பிளைன்ட் செய்திருந்தான்.
அடித்தவனின் அங்க அடையாளம் சொன்னவன் சிவநேசனை மொத்த குறிப்புகளையும் தான் கொடுத்தான். அவர்களே பிடிக்கட்டும் என்று. மனதில் ஒன்றை நினைத்து தான் செய்திருந்தான்.அதற்குள் அடுத்த இடியாக இதோ அருளாசினியை காணவில்லை.
அவன் அடிப்பட்டது கூட அவனுக்கு இப்போது வலிக்கவில்லை. ஏனோ அருளாசினியை காணவில்லை என்று சொன்னதில் இருந்து மனது ஒரு நிலையில் இல்லை அவனுக்கு.
நள்ளிரவு நேரத்தில் அவன் வீட்டிற்கு வந்திறங்க அன்னப்பூரணி, வாணி மற்றும் அவளுடைய குழந்தைகள் அனைவரும் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
“என்னம்மா என்னாச்சு நீங்க ஏன் இங்க வந்து நிக்கறீங்க??” என்றான் ஆருத்ரன்.