Advertisement

28
“டேய் காபி குடிக்கிறியாடா உனக்கு போட்டேன். அப்போவே எடுத்திட்டு வந்தேன், நீ போய் படுத்திட்ட, இப்போ குடிக்கிறியாடா??”
“அம்மா அண்ணாக்கு நீங்க போடுற காபிலாம் புடிக்காதும்மா. அண்ணா இப்போலாம் அய்யர் ஹோட்டல்ல தான் காபி குடிக்கிறார்ம்மா. நம்ம முக்கு கடை கணேஷ் கடையில தானே எப்பவும் குடிப்பார், இப்போலாம் பல்லு படாம டபரா செட் காபி தான்” என்று லோகு பேசப்பேச ஆருத்ரனுக்கு வெட்கமாகிப் போனது.
‘இப்படி வாருறானே’ என்று தான் பார்த்தான். அவனை அடக்கவே முடியவில்லை. ஆருத்ரன் ‘லோகு’ என்று ஒரு குரல் கொடுத்தாலே ‘சொல்லுண்ணா’ என்று வந்து நிற்பவன் இன்று ஆருத்ரனை வைத்து செய்தான்.
வீடே விருந்தினர்களால் நிறைந்திருக்க கலகலப்பாய் இருந்தது. தாமரையை அழைத்திருக்க அவள் இப்போது பிள்ளைகளுக்கு பரீட்சை நேரம் வரமுடியாது என்று விட்டிருந்தாள்.
‘சரித்தான் போடி என் மருமக வளைக்காப்பை எப்படி நடத்திக்காட்டுறேன் பார்’ என்று மகளை மனதுக்குள் திட்டிக்கொண்ட அன்னப்பூரணி அதை சிறப்பாகவே செய்துக் கொண்டிருந்தார்.
“ஏன்டா ருத்ரா காபி அய்யர் ஹோட்டலயா குடிக்கிறே??” என்றார் அன்னப்பூரணியும்.
“ம்மோவ்…” என்றான் அவன். ஆருத்ரனின் வெட்கம் அந்த குரலில் நன்றாகவே தெரிந்தது. 
ஏனோ அருளாசினிக்கு அவன் வெட்கம் கண்டதும் ஒரு பாடலின் வரி நினைவிற்கு வந்தது. ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்.
“அம்மா அண்ணனை எதுக்கு கேட்கறீங்க நான் தான் சொல்றேன்ல… நிஜம் தான் மா” என்றான் லோகு தொடர்ந்து.
“அது மட்டுமில்லைம்மா அண்ணன் இப்போலாம்…” என்று அவன் ஆரம்பிக்கவும் ஆருத்ரன் வேகமாய் அவனருகில் வந்தவன் லோகுவின் வாயை பொத்த “டேய் அவனை ஏன்டா அடக்குற, அவன் சொல்லட்டும் நீ சொல்லுடா லோகு” என்றார் அன்னப்பூரணி.
“நான் வெளிய கிளம்பறேன்” என்று செல்லப் போனவனை இழுத்து அருளாசினியின் அருகில் அமர வைத்தான் லோகு.
“எங்க அண்ணா ஓடுற உட்காரு. இப்போ தான் சொல்லவே ஆரம்பிச்சு இருக்கேன். அதுக்குள்ளே ஓடினா எப்படி??”
“ஆமா லோகு நீ சொல்லு. நான்லாம் ருத்ராவை பார்க்கறதோட சரி நீ தான் கூடவே சுத்துற உனக்கு தான் நல்லா தெரியும்” என்றான் சந்தோஷும்.
“ண்ணா நீங்களுமா” என்று தலை குனிந்துக் கொண்டான் ஆருத்ரன்.
“எல்லாம் அமைதியா இருங்க. நீங்க பேசிட்டு இருந்தா அப்புறம் நான் எல்லாம் மறந்திடுவேன். அண்ணன் ஜாலி மூட்ல இருக்கும் போதே எல்லாம் சொல்லிடறேன்” என்றான் லோகு.
“சொல்லும் சொல்லித் தொலையும்” என்றான் ஆருத்ரன்.
“இன்னாண்ணா நீ கூட கவுன்ட்டர்லாம் போடுறே”
“டேய் எங்களை சொல்லிட்டு நீ தான்டா இப்போ ஜவ்வு மாதிரி இழுக்கறே. சொல்லி முடிடா” என்றார் அன்னப்பூரணி.
“அப்புறம் நடந்த கதை இருக்கே அது பெருங்கதை. ம்மா நீங்களும் அண்ணியும் இங்க வந்திட்டீங்கல்ல அண்ணன் வீடே தங்குறது இல்லை”
“நைட் வரைக்கும் கடையில தான் இருக்குது. படுக்க மட்டும் தான் வீட்டுக்கு வர்றது எல்லாம். நீங்க இங்க வந்த புதுசுன்னு நினைக்கிறேன். அன்னைக்கு வீட்டில தான் இருந்தோம். அண்ணன் என்னை கூப்பிட்டுச்சு” என்று அன்றைய நாளை நினைவு கூர்ந்தான் அவன். 
லோகு சொல்லச் சொல்ல ஆருத்ரனுக்கு அந்நாள் நினைவிற்கு வந்து போனது.
“லோகு”
“சொல்லுண்ணா”
“சாப்பாடு வாங்கிட்டு வாடா”
“சரிண்ணா நான் வாங்கிட்டு வந்திடறேன்” என்று அவன் கிளம்ப “டேய் காசு வாங்காம போறே”
“ண்ணா நம்ம பாய் தானே அப்புறம் கொடுத்துக்கலாம். நமக்கு இல்லைன்னு சொல்லிடுவாரா அவரு”
“டேய் பாய் கடையில எதுவும் வாங்கிட்டு வராத”
“அப்போ என்னண்ணா வாங்கிட்டு வரட்டும்?? சாந்திக்கா கடையில மீன் குழம்பும் கடமா வறுவலும் வாங்கிட்டு வரவா. உனக்கு இறா பிடிக்கும்ல, அதை வாங்கிட்டு வரவா” என்று அவன் கேட்க இவன் முகம் சுளித்தான்.
“டேய் என்னை பேசவிடுடா நீயே பேசுறே…”
“சரி நீயே சொல்லுண்ணா”
“மெயின் ரோட்ல ஒரு அய்யர் ஹோட்டல் இருக்குல”
“ஆமா இருக்கு, அது பக்கத்துல ஒரு மிலிட்டரி ஹோட்டல் இருக்கே அங்க வாங்கிட்டு வரவா”
“டேய் வாயை கொஞ்சம் மூடுடா, எப்போ பார்த்தாலும் நான்வெஜ்ஜாவே சொல்லிட்டு இருக்கே. எனக்கு அய்யர் ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கிட்டு வாடா” என்றான் ஆருத்ரன்.
“ண்ணா இது எப்போ இருந்து??”
“டேய் வாங்கிட்டு வாடா”
“அண்ணா என்னை பாரு நிஜமாவா. இனிமே நீ நான்வெஜ் சாப்பிட மாட்டியா”
“டேய் நான் எப்போடா அப்படிச் சொன்னேன்”
“அப்போ எதுக்கு இப்போ அய்யர் ஹோட்டல் சாப்பாடு நான் போய் பிரியாணி வாங்கிட்டு வர்றேன்”
“டேய் டேய் வேணாம்டா, நான் இப்போலாம் அதை சாப்பிடுறது இல்லை”
“நிஜமாவா சொல்றே,பாரேன் எங்க அண்ணன் முகத்துல ஒரு ஒளி தெரியுது. இப்போ தான் உன்னை சந்தோசமா பாக்குறேன் அண்ணா. எப்பவும் இப்படியே இருண்ணா” என்றவன் மகிழ்ச்சியாய் அவனுக்கு சாப்பாடு வாங்கச் சென்றிருந்தான் அன்று.
லோகு சொல்லி முடித்திருக்க சந்தோஷும் அவனுடன் சேர்ந்துக் கொண்டு, ஆருத்ரனை ஓட்டி எடுத்துவிட்டனர்.
அருளாசினி பிறர் அறியாமல் அவன் கையை பிடித்துக் கொள்ள காலையில் இருந்து இறுக்கமாய் இருந்தவன் முற்றிலும் தளர்ந்திருந்தான். அந்த நொடி அவனுக்கு மிகப் பிடித்தது.
அருளாசினிக்கு மனதில் அப்படியொரு சந்தோஷ ஊற்று பொங்கியது. வீடு மட்டும் நிறைந்திருக்கவில்லை அனைவரின் மனதும் நிறைந்திருந்தது.
ஆருத்ரன் அனைவருக்கும் படுக்க வசதி செய்து அவர்களுக்கு அது வசதியாய் இருக்கிறதா என்று கேட்டு உறுதி செய்த பின்னரே படுக்க வந்தான் அவர்கள் அறைக்கு.
அருளாசினி கண் மூடி படுத்திருந்தாள். உறங்கிவிட்டால் போல என்று எண்ணிக் கொண்டு இவன் அவளுக்கு முதுகுக்காட்டி படுத்தான்.
இவன் படுக்கவும் அவளிடம் அசைவு தெரிந்தது. மெதுவாய் குரல் கொடுத்தாள். “நீங்க தூங்கலை தானே” என்று.
“என்ன விஷயம்??” என்றான் இவன் திரும்பாமலே.
“என்னால உங்களை கட்டிக்க முடியலை. நீங்க என்னை கட்டிக்கறீங்களா??”
“என்ன??”
அவனுக்கு அவள் சொன்னது சட்டென்று புரியவில்லை. எழுந்து அமர்ந்துவிட்டான்.
“என்ன பார்க்கறீங்க?? இன்னும் உங்க கோபம் போகலையா??”
அவன் தலை இல்லையென்பதாய் ஆடியது. அதைக் கண்டவளின் முகம் வாடியது. “சரி பரவாயில்லை நானே கஷ்டப்பட்டு கட்டுக்கட்டுமா”
“எனக்கு உன் மேல இப்போ எந்த கோபமும் இல்லைன்னு தான் தலையாட்டினேன். நீ பேசின வருத்தம் இப்பவும் இருக்கு. இந்த நிமிஷம் மனசு லேசாய் தான் இருக்கு எனக்கு. நீ என்ன சொல்றேன்னு தான் எனக்கு சட்டுன்னு புரியலை அதான்…”
“உங்களை என்னால ஹக் பண்ண முடியலை. நம்ம பேபிக்கு கஷ்டம் அதான் உங்களை கட்டி பிடிக்கச் சொன்னேன்” என்று அவள் விளக்கவும் அவன் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி வந்து ஒட்டிக் கொண்டது.
அவள் புறம் திரும்பி அவளை கட்டிக்கொண்டான். மேடிட்ட வயிற்றின் மீது கையை அணைவாய் போட்டுக் கொண்டான்.
குழந்தையின் அசைவை உணர முடிந்தது அந்நொடி, அதற்கு ஈடு இணையே இல்லை என்று தோன்றியது. இத்தனை நாட்களாக இதை அனுபவிக்காமல் விட்டுவிட்டோமே என்று தன்னையே நொந்துக் கொண்டான்.
இதெல்லாம் பொக்கிஷ தருணங்கள் என்று உணர்ந்து, அதை சந்தோசமாய் அனுபவித்தான். 
குழந்தையுடன் இருந்த நொடி மட்டுமல்ல மனைவியுடனான இணக்கமும் அவனுக்கு பிடித்திருந்தது.
எத்தனை சண்டை போட்டாலும் என்ன பேசினாலும் கோபித்துக் கொண்டாலும் மனைவியை அணைக்கும் தருணம் அனைத்தும் மறந்தே போகிறதே எப்படி என்று தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டான் அவன்.
அதே உணர்வு தான் அவளுக்கும். அவன் பாராமுகம் பேசாதிருப்பது என்று அனைத்தையும் மீறி அவள் எல்லா நேரங்களிலும் அவனைத் தான் தேடினாள், அவன் அருகே இல்லாத போதும். அன்றைய அவனின் பேச்சிற்கு பின் தான் எதெல்லாம் செய்யக்கூடாது என்பதை அவள் அறிந்துக் கொண்டாள். அவன் விலகினால் என்ன நான் அவனைவிட்டு விலகேன் என்று உறுதி கொண்டாள்.
அதன் பொருட்டே அவன் தனக்கு இதெல்லாம் மறக்க தாமதமாகும் என்ற போது ஒன்றும் சொல்லாமல் சரியென்று விட்டாள். 
அவன் பேசினாலும் பேசாவிட்டாலும் இவள் தினமும் அவனிடம் பேசினாள். அவளைப் பற்றி குழந்தையின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு சொன்னாள்.
அதை அனுபவிக்க வேண்டும் என்று அப்போது அவனுக்கு தோன்றினாலும் ஏதோவொன்று அவனை ஊர் பக்கம் வரவிடாமல் செய்தது. வேறென்ன அவள் சொன்ன வார்த்தைகளின் தாக்கம் தான். குழந்தை தான் முக்கியம் என்று மீண்டும் பேச்சு வந்துவிடுமோ என்று கூட நினைத்திருக்கலாம்.
“என்னங்க அமைதியா இருக்கீங்க??”
“அமைதியா இருக்க முடியுமான்னு தெரியலை” என்றான் அவன் பதிலுக்கு.
அவன் சொன்னது உடனே புரியவில்லை அவளுக்கு. மெல்ல எழுந்து அமர்ந்தாள். “எதுக்கு எழறே??” என்று அவன் கேட்கும் போதே அவனைப் பார்த்தவாறே திரும்பிப் படுத்தாள்.
“அமைதியா இருக்க சொல்லி உங்களை யார் சொன்னா??” என்று அவள் இப்போது கேட்கவும் “டாக்டர் திட்டுவாங்க”
“அவங்க சொன்ன நாலு மாசம் எப்பவோ முடிஞ்சி போச்சுன்னு நினைக்கிறேன்” என்றாள் இவள்.
“நிஜமாவா ஒண்ணும் சொல்ல மாட்டாங்கல்ல” என்றான் இவன் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள.
“உங்ககிட்ட பேசுறதே வேஸ்ட் போங்க. குழந்தை பிறக்கட்டும் நான் டாக்டர்கிட்ட திட்டு வாங்குற அளவுக்கு உங்களை ஒரு வழியாக்குறேன் பாருங்க” என்று சொல்லி இவள் முகத்தை திருப்பிக் கொள்ள அவனுக்கு சிரிப்பு வந்தது. எட்டி அவள் நெற்றியில் இதழ் பதித்தான். கன்னத்தில் இதழில் என்று அவன் ஊர்வலத்தை தொடங்கினான். ஊடல் முடிவிற்கு வந்து கூடலாகியிருந்தது.
இருவருமே நிறைவாய் உணர்ந்தனர். இதுவரை உடலளவில் மட்டுமே இணைந்திருந்த அவர்களின் உள்ளம் மனதளவில் ஒன்றிணைந்திருந்தது. அவர்களின் மகிழ்ச்சிக்கு ஆயள் குறைவு போல இருவரையும் தனித்தனியே பிரிக்க காலம் காத்திருந்தது வெகு அருகிலேயே.
மறுநாள் சீமந்தம் அவர்கள் அளவில் வெகு சிறப்பாகவே நடந்து முடிந்திருந்தது. அவர்கள் வீட்டு விஷேசம் பற்றிய தகவல் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களால் அவளின் உறவுகளை சென்றடைந்திருந்தது.
“இந்த பொண்ணுக்கு எவ்வளவு திண்ணக்கம் இருக்கணும். வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணிக்கிச்சுன்னு பார்த்தா, அவனை கூட்டிட்டு இங்கவே வந்து குடும்பம் நடத்துது. இப்போ சீமந்தம் வேற பண்றாங்க…” என்று கொதித்து போயினர் அவளின் தந்தை வழி உறவினர்கள்.
லோகு தன் மனைவியை அவர்களுக்கு துணையாய் அங்கேயே விட்டுச் சென்றான். அது ஆருத்ரனின் ஏற்பாடு தான். 
ஆருத்ரன் மற்றும் அவன் உடன் வந்தவர்கள் அனைவருமே மேலும் இரண்டு நாட்கள் அங்கிருந்துவிட்டு ஊருக்கு கிளம்பிச் சென்றனர். ஆருத்ரனுக்கு கிளம்பவே மனதில்லை. அவனுக்கு அருளாசினியுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு தெரியவில்லை அவன் திரும்பி அங்கு வரும் போது அவள் அங்கிருக்கப் போவதில்லை என்று. 

Advertisement