Advertisement

27
“ருத்ரா எப்போ கிளம்ப போறே?? நாளைக்கு சீமந்தம் நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னா எப்படி??” என்ற அன்னப்பூரணி காலையிலேயே அழைத்துவிட்டார் தன் மகனுக்கு.
 
“நாளைக்கு தானேம்மா சீமந்தம் காலையில அங்க இருப்பேன்”
“ருத்ரா உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே நீ” என்றார் அவர் கோபமாய்.
“வர்றேன்ம்மா”
“எப்போ??”
“இன்னைக்கு வர்றேன் போதுமா”
“நான் சொன்ன மாதிரி கவிதா, சந்தோசு, கனகா எல்லாரையும் கூட்டிட்டு வந்திடறியா”
“சரிம்மா வந்திடறேன்” என்றுவிட்டு போனை வைத்தவன் மற்றவர்கள் தயாராய் இருக்கிறார்களா என்று பார்த்தான்.
அவர்களை இன்றே அனுப்பிவிட்டு இவன் மறுநாள் கிளம்புவதாக எண்ணியிருந்தான். அன்னப்பூரணி வேறு இன்னும் கிளம்பவில்லையா என்று சொல்லிட அவனும்  அவர்களுடனே கிளம்ப முடிவெடுத்தான்.
வண்டிக்கு சொல்லியிருக்க அது வருவதற்காய் காத்திருந்தான். காயத்ரிக்கு கூட இவன் அழைப்பு விடுத்திருக்க அவர் வரமுடியாது என்று முன்பே சொல்லிவிட்டிருந்தார். அவன் கிளம்பி வெளியில் நின்றிருக்க காயத்ரி முதலில் வந்தார். “நீங்களும் வர்றீங்களா??”
“இல்லைப்பா இதை கொடுத்திட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்” என்றவர் இரண்டு தூக்கு நிறைய பலகாரத்தை கொண்டு வந்து கொடுத்தார்.
“இதெல்லாம் எதுக்குங்க”
“தாய் வீட்டு சீருன்னு ஒண்ணு இருக்கில்ல. என்னால வரமுடியலை ஏதோ என்னால முடிஞ்சது”
“அப்புறம் ஊர்ல வேலைக்கு ஆளு கேட்டு இருந்தீங்கல்ல என்னோட பிரண்ட் பத்தி சொன்னேனே. அவ வேற ஊருக்கு போயிட்டதா சொன்னா, நான் வேற ஒருத்தர்கிட்ட பேசியிருக்கேன் அவங்க சரின்னு சொன்னதும் நான் உங்ககிட்ட சொல்றேன்”
“ஆளு கிடைக்கலைனா பரவாயில்லைங்க. இப்போதைக்கு வீட்டுக்கு வேலைக்கு ஒருத்தர் வந்திருக்காங்க. சமையலை அவங்க ரெண்டு பேருமே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்சனையில்லை”
“உடனே சொல்லலைன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்தப்போ அவர் இருந்தார் அதான் எதுவும் பேச முடியலை”
“பரவாயில்லை” என்று அவன் சொல்லிவிட அவர் கொண்டு வந்ததை அங்கே இறக்கி வைத்தார்.
“இதை கண்டிப்பா எடுத்திட்டு போய்டுங்க, மறந்திடாதீங்க” என்றார் அவர்.
“கண்டிப்பா” என்று இவன் சொல்ல அவர் கிளம்பிவிட்டார்.
அவர் சென்ற அடுத்த பத்து நிமிடத்திற்குள் வருண் இவன் முன் வந்து நின்றான் முறைத்துக் கொண்டு.
‘இவன் எதுக்கு இங்க வந்தான்’ என்று தான் பார்த்தான் ஆருத்ரன். அவனாக சென்று எதையும் அவனிடத்தில் கேட்கவில்லை.
வண்டி வேறு இன்னும் வராததால் போன் செய்து பேசிக் கொண்டிருந்தான் அவன். “அஞ்சு நிமிசத்துல வந்திடுறோம் சார்” என்று அவர்கள் சொல்லி வைத்துவிட சந்தோஷுக்கு அழைத்து கீழே இறங்கி வருமாறு சொன்னான்.
வருண் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆருத்ரன் உள்ளே சென்று அவன் உடமைகளை எடுத்து வர செல்ல இவனும் பின்னோடு வந்தான்.
“உனக்கெல்லாம் வெக்கமா இல்லை” என்ற குரலில் திரும்பி பார்த்தான் ஆருத்ரன்.
“எதுக்கு வெட்கம் வரணும், நீ என்ன என் முறைப்பையனா?? அப்படியே நீ என் முறைப்பையனா இருந்தாலும் நான் ஒண்ணும் பெண்ணில்லையே உன்னை பார்த்து வெட்கப்பட” என்றான் அவன் கிண்டல் குரலில்.
“என்ன நக்கல் பண்றியா??”
“ஆமாடா அப்படித்தான்னு வைச்சுக்கோ போ”
“நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு என்னவோன்னு போறே”
“இங்க பாருடா உன்கிட்ட பேச எனக்கு நேரமில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு நீ கிளம்பு”
“உன்கிட்ட நான் பேசணும்”
“அதை முதல்ல சொல்லிட்டு கிளம்பு”
“ஏன் இப்படி பண்ணே??”
“எப்படி பண்ணேன்??”
“அருளை நீ கல்யாணம் பண்ணிக்கத்தான் அவ முன்னாடி என்னை பொறுக்கி மாதிரி காமிச்சியா”
“நீ எப்பவுமே இப்படித்தானாடா” என்று அவன் லூசா என்பது போல கையாட்டி சொல்ல அதில் கடுப்பானான் அவன்.
“என்னைப் பார்த்தா உனக்கு லூசு மாதிரி இருக்கா. ஆனா கடைசியில என்னை அப்படித்தான் ஆக்கிட்டீங்க”
“இங்க பாரு என்ன விஷயமோ சட்டுப்புட்டுன்னு சொல்லி முடி. இப்படி விட்டுவிட்டு சொல்லிட்டு இருக்காத. நான் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன்”
“எந்த ஊருக்கு??”
“அதை எதுக்கு உன்கிட்ட சொல்லணும்”
“நானே தெரிஞ்சுக்கறேன்”
“அப்போச்சரி கிளம்பு”
“எதுக்கு என்னை லூசுன்னு சொன்னே??”
“அட எவன்டா இவன், என்னடா உனக்கு பிரச்சனை இப்போ?? நானடா உன்னை பொறுக்கியா காமிச்சேன். நீ அவகிட்ட நடந்துக்கிட்டதுக்கு பேரு என்னன்னு நீயே சொல்லு. அப்பனும் புள்ளையும் செய்யக்கூடிய வேலையாடா செஞ்சீங்க”
“போனா போகுதுன்னு பேசாம இருக்கேன் என்னை எதுவும் செய்ய வைச்சுடாதா”
“இனிமே என்னடா இருக்கு நீ செய்ய… அதான் கல்யாணமே பண்ணிட்டியே அவளை. நான் கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணை நீ கல்யாணம் முடிச்சிட்டியேடா”

“டேய் என்னடா முட்டாள்த்தனமா பேசிட்டு இருக்கே. உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு அவ எப்போடா சொன்னா??”
“அவளை நான் சொல்ல வைச்சிருப்பேன் நீ தான் நடுவுல வந்து கெடுத்திட்ட”

“ஷ்ஷு முடியலைடா உன்னோட, திடிர்ன்னு உனக்கு இன்னைக்கு தான் ஞானோதயம் வந்துச்சாடா. இவ்வளவு நாள் விட்டு இப்போ வந்து என் உயிரை எடுக்கறே??”
“இவ்வளவு நாள் எனக்கு தெரியாது நீ தான் அவளை கல்யாணம் பண்ணேன்னு. அவ எங்கயோ போயிட்டான்னு தான் நினைச்சேன். அம்மா உங்களை பார்க்க வந்த பிறகு தான் எனக்கே தெரியும்”
“அப்பவும் அவங்களா சொல்லவே இல்லை. நானே அவங்களை இப்போ பாலோ பண்ணி வந்து தான் கண்டுப்பிடிச்சேன் உன் வீட்டை. அவ ஸ்கூல்க்கு போனா செக்யூரிட்டி விட்டு என்னை விரட்டி அடிக்கறா”
“அன்னைக்கு உன்னை எங்க வீட்டுக்கிட்ட பார்த்தேன். அம்மாவும் நீயும் பேசிட்டு இருந்தீங்க அப்போ தான் அம்மாக்கு விஷயம் தெரியும்ன்னே எனக்கு தெரியும். அன்னைக்கு தான் அம்மா சொன்னாங்க அருளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு”
“அதான் தெரிஞ்சிடுச்சுல்ல நீ கிளம்பு போய் வேற பிழைப்பு இருந்தா பாரு”
“அதெப்படி விட முடியும்”
“சத்தியமா உனக்கு என்ன வேணும்ன்னு எனக்கு புரியலைடா” என்று ஆருத்ரன் சலித்து போனான்.
“அண்ணா வண்டி வந்திடுச்சு வாங்க” என்று வெளியில் இருந்து ஒருவன் ஓடி வந்தான். 
“சரி நாம இன்னொரு நாள் பேசலாம் நீ கிளம்பு” என்றவன் வீட்டைப் பூட்டினான்.
வருணோ இன்னும் அந்த இடத்தை விட்டு அசையாது இருந்தான். அனைவரும் வந்து வண்டியில் ஏறியிருக்க சந்தோஷ் உள்ளே வந்தான்.
“என்ன ருத்ரா நீ இங்க நிக்கறே வா போலாம்” என்றார் அவர்.
“வர்றேன் அண்ணா மத்த எல்லாரும் ஏறியாச்சா”
“ஏறியாச்சுப்பா உனக்கு தான் வெயிட்டிங்”
இவன் அவருடன் நடக்க “எங்கடா போறே எனக்கொரு வழி சொல்லிட்டு போ. எனக்கு அருள் வேணும்” என்ற வருண் முன்னே வந்து இவன் சட்டையை பிடித்திழுக்க அவனுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறியது.
கையில் வைத்திருந்த பையாலேயே அவனை ஓங்கி அடித்தான். “டேய் என்னடா” என்று அவன் இன்னும் பாய்ந்துக் கொண்டு வர சந்தோஷ் வருணை பிடித்துக் கொண்டான்.
“யாருடா நீ எதுக்குடா வந்து வம்பு பண்ணிட்டு இருக்கே. எங்க வீட்டு புள்ளை மேலவே கை வைக்கிறியா. கையில்லாம போய்டுவா பார்த்துக்க”
“எங்க எடு என் கையை எடு பார்ப்போம்” என்று அவனும் பதிலுக்கு கையை நீட்ட “யாரு ருத்ரா இவன் பார்க்க லூசு மாதிரி இருக்கான்” என்று சந்தோஷும் கேட்க அதில் வருணுக்கு அப்படியொரு கோபம் எழுந்தது. 
“என்னடா ஆளாளுக்கு லூசு லூசுன்னு சொல்றீங்க” என்றவன் இருவரையும் அடிக்க பார்க்க ஆருத்ரன் அவன் கையை பிடித்து முறுக்கி பின்புறம் மடக்கினான்.
“அண்ணே இவனை பிடிங்க” என்று சந்தோஷிடம் சொல்ல அவ வருணை பிடித்துக்கொள்ள இவன் காயத்ரிக்கு அழைத்தான்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவர் வந்துவிட்டார். “டேய் நீ எதுக்குடா இங்க வந்தே??”
“அம்மா இவன் பிராடும்மா இவன் என்னவோ பண்ணி அருளை கல்யாணம் பண்ணிக்கிட்டான்ம்மா. இவன் நல்லவன் இல்லைம்மா, அதான் இவன் முத பொண்டாட்டி இவனைவிட்டு ஓடி போயிடுச்சும்மா”

“அருளை என்கிட்ட கொடுத்திட சொல்லுங்கம்மா. நான் அவளை நல்லா பார்த்துக்கறேன்” என்று அவன் சொல்ல சொல்ல ஆருத்ரனின் கண்கள் சிவந்தது.
காயத்ரிக்கு அவன் முதல் திருமண கதையெல்லாம் அவ்வளவாக தெரியாது. மகன் சொல்லவும் அவரும் என்னவோ என்று தான் பார்த்தார்.
“இவனை நீங்க இப்போ இங்க இருந்து கூட்டிட்டு போகலைன்னா அப்புறம் இங்க இருந்து ப்ரீசர் பாக்ஸ்ல தான் இவனை அனுப்ப வேண்டி இருக்கும் பார்த்துக்கோங்க” என்று அடிக்குரலில் சீறலாய் சொன்னான் ஆருத்ரன்.
அவன் கண்களில் தெரிந்த கனலிலேயே அரண்டு தான் போயிருந்தார் காயத்ரி. மகனை இழுத்துக் கொண்டு அவர் வெளியேற முயல “டேய் என்னடா பயமுறுத்துறியா. அன்னைக்கு மாதிரி எல்லாம் நான் போக மாட்டேன்”
“அருளை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்ன்னு எனக்கு தெரியும். என்னையா ப்ரீசர் பாக்ஸ்ல அனுப்பறேன்னு சொன்னே, உன்னை அனுப்பறேன் பாருடா” என்று அவன் சத்தமிட ஆருத்ரன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
ஊருக்கு கிளம்பும் நேரத்தில் அது பெரிய அசம்பாவிதமாகவே தெரிந்தது அவனுக்கு. ‘நிம்மதியா என்னை இருக்கவே விடமாட்டாங்களா, தெரியாம ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டேன். அவ என்னைவிட்டு போனதுக்கு ஏன்டா எல்லாரும் என்னை பழி சொல்றீங்க’ என்று அவன் மனம் குமுறியது.
“ருத்ரா அவன் ஏதோ கிறுக்கன் மாதிரி பேசிட்டு இருக்கான். மனநிலை எதுவும் பாதிக்கப்பட்டிருக்கும் நினைக்கிறேன். இதையெல்லாம் நினைச்சு நீ கவலைப்படாதே வண்டியில ஏறு” என்றவர் அவனுக்கு கைக்கொடுக்க அதை பற்றிக்கொண்டு எழுந்திருந்தான்.
எந்தவொரு பாவமும் இல்லாது முகம் துடைத்து வைத்தது போல இருந்தது இப்போது. ஆருத்ரனை யாரும் எந்த கேள்வியும் கேட்க விடாது பார்த்துக் கொண்டான் சந்தோஷ்.
திருச்சி நெருங்க நெருங்க அவன் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை. இதோ ஸ்ரீரங்கத்திற்கும் அவர்கள் வந்து சேர்ந்துவிட்டனர். ஒரு துளி சந்தோசம் கூட அவன் முகத்தில் இல்லை.
வண்டி வந்ததும் அன்னப்பூரணி தான் வாயெல்லாம் பல்லாக அனைவரையும் வரவேற்றார். ஆருத்ரன் பொம்மை போலத்தான் வந்தான். 
“எல்லாரும் சாப்பிட்டீங்களா?? ருத்ரா என்னடா சாப்பிட வைச்சி தான் கூட்டிட்டு வந்தியாடா??” என்றார் அன்னப்பூரணி.
“ஹ்ம்ம் சாப்பிட்டாச்சும்மா”
“காபி போடவா” என்றவர் லோகுவின் மனைவியை அழைத்து காபியை போடச்சொல்ல ஆருத்ரன் உள்ளே சென்றுவிட்டான்.
அருளாசினி வேலைக்கு சென்றிருந்தாள் போல வீட்டில் இல்லை. அதைப்பற்றி எதுவும் அவன் கேட்கவில்லை. கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். அன்னப்பூரணி வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்ததால் அவரும் அவனை கண்டுக்கொள்ளவில்லை.
அருளாசினி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்திருந்தாள். வந்தவர்களை புன்னகை முகமாக வரவேற்றவள் அறைக்குள் வந்தாள்.
வரும் போதே அவளின் கண்கள் ஆருத்ரனை தான் தேடியது. அவள் தேடியவன் தான் வெளியில் இல்லையே. சோர்வாய் அவள் அறைக்குள் நுழைய ஆருத்ரன் ஒருக்களித்து படுத்திருப்பது கண்டு இதழ்கள் விரிந்தது.
மெதுவாய் அவனருகே சென்று பார்க்க கண்ணை மூடி படுத்திருந்தான் அவன். அவனை தொந்திரவு செய்யாமல் வேறு உடைக்கு மாறியிருக்க ஆருத்ரன் திரும்பி படுத்தான்.
அவன் கண் விழித்திருப்பது கண்டு அருகே சென்றாள். “எப்போ வந்தீங்க??”
“கொஞ்சம் முன்னாடி தான்”
“ஏன் இங்க படுத்து இருக்கீங்க?? தலைவலிக்குதா??” என்றாள் அவன் முகம் பார்த்து.
“இல்லை ஒண்ணுமில்லை ட்ராவல் பண்ணி வந்தது கொஞ்சம் டயர்டா இருந்துச்சு அதான் படுத்தேன்”
“இப்போ ஓகே வா வெளிய போகலாமா??”
“ஹ்ம்ம் போகலாம்” என்றவன் அவளுடன் வெளியில் வர லோகு ஆர்ப்பாட்டமாய் வரவேற்றான் இருவரையும்.
“ஹேய் இதோ வந்துட்டாருய்யா ஹீரோ. ஹீரோயின் இல்லைன்னு தான் அண்ணன்னுக்கு மூஞ்சே இல்லை போல.அண்ணி வந்ததும் தான் வர்றாரு பாருங்க” என்று அவன் கிண்டல் செய்ய ஆருத்ரன் முகத்தில் லேசாய் புன்னகை கீற்று.

Advertisement