Advertisement

26
“எங்கடா இருக்கான் அவன்??”
“வீட்டில தான் இருப்பான் அண்ணா”
“வா வந்து வண்டியில ஏறு…”
“அண்ணா அவங்க பெரிய ஆளுங்க நமக்கு எதுக்கு வம்புண்ணா…”
“நேத்து ரோட்ல வைச்சு பேசினவன் நாளைக்கு உன் வீட்டுக்கே வந்து உன் பொண்டாட்டி கையை பிடிப்பான் பரவாயில்லையா உனக்கு” என்ற ஆருத்ரனின் கண்களில் கனலை காண முடிந்தது.
“நான் ஊரைவிட்டு போயிடறேன் அண்ணா”
“லோகு… லோகு… என்னைப்பாருடா”
அவன் மெதுவாய் தலை நிமிர கண்கள் கலங்கி நின்றிருந்தான். “ஏன்டா நீ எப்போ இப்படி கோழையா போனே, இத்தனை வருஷமா என் கூட இருக்கல்லடா. அப்புறம் எப்படிடா இப்படி ஆனே??”
“ண்ணா நானும் அவளும் மட்டும்ன்னா எதைப்பத்தி யோசிக்க மாட்டேன். குழந்தைகளை வைச்சுட்டு நான் என்ன அண்ணா செய்ய?? நான் வெட்டு குத்துன்னு இறங்கிட்டா என் புள்ளைங்களும் பொண்டாட்டியும் நடுத்தெருவுல நிக்க வைக்கவா முடியும். சொல்லுங்க அண்ணா”
“உன்னை யாரு வெட்டு குத்துன்னு இறங்க சொன்னது”
“அவன் பேசின பேச்சுக்கு அவனை கொல்லணும்ன்னு தான் தோணிச்சு அண்ணா”
“நீ அவனைப் பேசவிட்டு கேட்டுட்டு வந்ததுக்கு பதிலா அவனை ஓங்கி நாலு அறை விட்டிருந்தா அவன் திரும்பி பார்த்திருப்பானாடா” என்றான் ஆருத்ரன்.
“ண்ணா அவன் கவுன்சிலர் தம்பி, நான் எப்படி அவனை…”
“தப்பு பண்ணவன் கவுன்சிலர் தம்பியா இருந்தா என்ன கவுன்சிலராவே இருந்தா என்னடா. தப்பு யாரு செஞ்சாலும் சரின்னு ஆகிடாதுல்ல… நீ வா வந்து வண்டியில ஏறு நான் பார்த்துக்கறேன்”
“நாம இப்போ பேசத்தான் போறோம். வேற எதுவும் இல்லை சரியா வா” என்று அழைக்க லோகு அவன் வண்டியில் ஏறினான்.
பிரச்சனை இது தான் லோகுவின் மனைவியை மார்க்கெட் செல்லும் வழியில் பார்த்திருந்த கவுன்சிலரின் தம்பி சிவநேசன் அவளின் அழகில் மயங்கிவிட அதிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பித்தது.
முன்பே அவன் பெண் பித்தனாய் தான் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் நினைத்தை அடைய எதையும் செய்யும் ரகம். அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்தே பின்னே லோகுவிடமே சென்று பேசிவிட்டிருந்தான் அவன்.
லோகுவும் அவன் மனைவியும் முதல் நாள் எங்கோ சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்த வழியில் அவர்களை நிறுத்தி பேசியிருந்தான் அவன்.
அதைத்தான் லோகு ஆருத்ரனிடம் கூறியிருக்க இதோ அவர்கள் கவுன்சிலரின் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
“அண்ணா அவன் பேசின விதமே சரியில்லை. எதுக்கும் துணிஞ்சவனா பேசுறான்”
“லோகு நீ பேசாம வா…” என்றான் ஆருத்ரன் கண்டிப்பான குரலில்.
கவுன்சிலரின் வீட்டிற்கு செல்ல அங்கு அவர் இல்லை. அவரின் மனைவி மட்டுமே வீட்டில் இருந்தார். “ம்மா வீட்டில யாரும் இல்லையா??” என்ற குரலில் கவுன்சிலரின் மனைவி எழுந்து வெளியே வந்தாள்.
“நீங்க??”
“மாணிக்கம் அண்ணன் இல்லையா??”
“கட்சி ஆபீஸ் வரைக்கும் போயிருக்கார்”
“எப்போ வருவாங்க??”
“தெரியலையே. என்ன விஷயம்??”
“அவர் தம்பி இல்லையா??”
“தம்பியும் வெளிய தான் போனாங்க”
“ஓ!!”
“என்ன விஷயம்ன்னு நீங்க சொல்லவே இல்லையே??”
“அண்ணன்கிட்ட பேசலாம்ன்னு தான். நாளைக்கு காலையில வந்தா அண்ணனை பார்க்கலாமா??”
“ஹ்ம்ம் வாங்க நான் அவர்கிட்ட நீங்க வந்துட்டு போனீங்கன்னு சொல்றேன். உங்க பேரு??”
“ஆருத்ரன் ப்ரீசர் பாக்ஸ் சர்வீஸ்ன்னு சொன்னா சார்க்கு தெரியும்”
“ஓ!! ஞாபகம் இருக்கு அத்தை இறந்தப்போ நீங்க தான் எல்லா ஏற்பாடும் பண்ணீங்கல்ல. அதான் உங்களை எங்கயோ பார்த்த ஞாபகம் வந்துச்சேன்னு நினைச்சேன். நீங்க போயிட்டு வாங்க நான் அவர்கிட்ட கண்டிப்பா சொல்றேன்” என்றார் அவர்.
“தேங்க்ஸ்ங்க” என்றவன் வெளியில் வர சிவநேசன் உள்ளே வந்துக்கொண்டிருந்தான்.
“அடடே நம்ம சகலை, வாங்க சகலை எங்க இந்தப்பக்கம்” என்று அவன் கேட்க ஆருத்ரன் முன்னால் வந்து நின்றான்.
“யாரு உனக்கு சகலை??”
“நீ யாருடா இவனுக்கு அடியாளா உன்னையவா கூட்டிட்டு வந்தான் இவன். என்னடா வேற ஆளு கிடைக்கலையா உனக்கு” என்று பேச்சை ஆருத்ரனிடம் ஆரம்பித்து லோகுவிடம் முடித்தான் அவன்.
“ஆமா அடியாள் தான், சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு யாரு உனக்கு சகலை”
“இவன் தான் வேற யாரு”
“எந்த விதத்துல உனக்கு சகலை, உன் பொண்டாட்டியோட அக்காவை கட்டியிருக்கானா இல்லை தங்கச்சியை கட்டியிருக்கானா”
“அவன் பொண்டாட்டியவே வைச்சுக்கலாம்ன்னு இருக்கேன் அந்த முறைக்கு தான் அவன் எனக்கு சகலை” என்று அவன் இன்னும் திமிராகவே பேசிக் கொண்டிருக்க சப்பென்று ஒரு அறைவிட்டான் ஆருத்ரன்.
“டேய் நான் யாருன்னு தெரியாம இப்படி பண்ணுறே??” என்று அவனும் பதிலுக்கு பாய்ந்துக் கொண்டு வர ஆருத்ரன் அவனை அடி அடியென்று அடித்து துவைத்துவிட்டான்.
அப்போது தான் இவனிடம் பேசிவிட்டு உள்ளே சென்றிருந்த கவுன்சிலரின் மனைவி சத்தம் கேட்டு வெளியில் வந்தவள் ஆருத்ரன் அடிப்பதை பார்த்து பதறிக் கொண்டு ஓடி வந்தார்.
“ஏங்க என்னங்க பண்றீங்க நீங்க?? அவரை பார்க்க வந்தேன் சொன்னீங்க, இப்போ இவரை அடிக்கறீங்க”
“கொல்லாம விட்டேன்னு சந்தோசப்படுங்க” என்றான் ஆருத்ரன் ஆத்திரம் அடங்காமல்.
“டேய் என்னை அடிச்சதுக்கு நீ அனுபவிப்படா உன்னை சும்மா விடமாட்டேன். அண்ணன் வரட்டும் அப்புறம் வைச்சுக்கறேன்டா உனக்கு. என் மேல என் கை வைச்சதுக்காக உன்னை அழ வைக்கிறேன் பாருடா” என்றான் அவனும் விடாது.
“இனி நீ என் முன்னாடி வந்தே உன் தலை உன் உடம்புல இருக்காது சொல்லிட்டேன்” என்றவன் கவுன்சிலரின் மனைவியின் புறம் திரும்பி “சொல்லி வைங்க” என்றுவிட்டு சென்றுவிட்டான்.
“அண்ணன் அவன் பேசுறது பார்த்தா எனக்கு பயமா இருக்குண்ணே. அவன் பழி வாங்க கூடிய ஆளுன்னு தான் பேசிக்கறாங்க”
“அவனால எதுவும் பண்ண முடியாது லோகு. நீ பயப்படாதே, நீ எப்பவும் போல இரு”
“அண்ணே”
“என்னடா பயமா இருக்கா. வேணா ஒண்ணு பண்ணு ஒரு வாரம் பத்து நாளைக்கு நீ உன் பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிட்டு ஊருக்கு போயிட்டு வா. அதுக்குள்ளே இந்த பிரச்சனைய தீர்த்து வைச்சிடறேன் சரியா”
“அண்ணே…”
“போயிட்டு வாடா இனிமே அவன் வழிக்கு வரமாட்டான். நீ வேணா ஸ்ரீரங்கம் போறியா??”
“அங்க எதுக்குண்ணே??”
“சீமந்தம் பண்ணணும்ன்னு சொன்னாங்க. நீ போய் அவங்களுக்கு வேணுங்கறதை செய், பசங்களுக்கும் புது ஊரு பிடிக்கும். போயிட்டு வா நான் அம்மாகிட்ட பேசறேன், நீ போகும் போது நம்ம வண்டியை எடுத்திட்டு போ”
“நீ எப்போண்ணே வருவே??”
“நான் சீமந்தம் அன்னைக்கு காலையில வந்திடுவேன்” என்றவன் லோகுவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டுவிட்டு அவன் வீட்டிற்குள் நுழைந்தான்.
இப்போதெல்லாம் அவனுக்கு இந்த தனிமை கூட பிடித்திருந்தது. அது தானே அவனுக்கு துணையாய் இருக்கிறது இத்தனை நாட்களில். அவனுக்கும் திருமணத்திற்கும் மனைவி என்ற உறவிற்கும் ராசியே இல்லை போல.
அப்படித்தான் அவனுக்கு தோன்றியது. அன்று கோபமாய் கிளம்பி வந்துவிட்டவன் தான் அதன் பின் ஒரு மாதம் அந்த பக்கம் அவன் தலையே காட்டவில்லை.
அன்னப்பூரணி மறுநாள் காலையில் எழுந்து வந்தவர் மகனை தேட சரியாய் அவன் அவருக்கு அழைத்துவிட்டான்.
“இவன் என்ன வீட்டுக்குள்ள இருந்துட்டே போனு போடுறான்” என்று முணுமுணுத்துக் கொண்டே போனை எடுத்தார்.
“சொல்லு ருத்ரா”
“அம்மா நைட் ஒரு முக்கியமான வேலை நான் சென்னைக்கு கிளம்பி வந்திட்டேன். உன்கிட்ட சொல்லாம கிளம்பிட்டேன்னு கோச்சுக்காத ம்மோவ்” என்றான்.
“ஏன்டா என்னை எழுப்பி சொல்லிட்டு போறதுக்கு என்ன உனக்கு??”
“இல்லைம்மா நீ அப்போ தான் மாத்திரை போட்டு கிளம்புனியா அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மனசு வரலை. இங்க காலையில முடிக்க வேண்டிய முக்கியமான வேலை அதான் வந்திட்டேன், சாரிம்மா”
“சரி போ மன்னிச்சுட்டேன்”
அருளாசினிக்கு ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியாக இருந்தது. தன்னால் தான் அவன் கோபமாய் கிளம்பி சென்றுவிட்டான் என்று புரிந்தது. அவனுக்கு போன் செய்தால் இவள் அழைப்பை அவன் ஏற்கவே இல்லை.
மெசேஜ் செய்தாள் மன்னிப்பை வேண்டி. அது பார்த்ததிற்கான அடையாளத்தை மட்டுமே கொடுத்தது. ஆனால் எந்த பதிலும் இல்லை அவனிடத்தில் இருந்து.
அன்னப்பூரணியிடம் இதைப்பற்றி பேச அவள் எண்ணவில்லை. பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது வந்து செல்பவன் ஒரு மாதம் கடந்து வராததால் அன்னப்பூரணி அவனுக்கு அழைத்தார்.
“ருத்ரா நீ எப்போ இங்க வர்றே??”
“வேலை இருக்கும்மா புதுசா ஒரு வேலை அதுக்காக அலைச்சல்” என்றான்.
“அப்படியென்ன வேலை”
“அதை முடிச்சுட்டு சொல்றேன்ம்மா”
“சரி இருக்கட்டும் ஆனா இங்க வந்து போறதுக்கு என்ன. இப்படித்தான் போன வாரம் ஆஸ்பத்திரிக்கும் என்னையவே போயிட்டு வரச்சொன்னே. நீ வராம அருளு ரொம்ப வாடி போயிருக்குடா. பிள்ளைத்தாச்சி பொண்ணுடா ஏங்க வைக்காத…”
“சரிம்மா வர்றேன்” என்று வைத்துவிட்டான். 
ஒரே ஒரு முறை வந்தான் ஒரே நாள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பிவிட்டான். ஆருத்ரனுக்கு புரிந்தது அருளாசினி எதனால் அப்படி பேசினாள் என்று. அந்தநேரம் அவனுக்கு கோபப்பட்டு கிளம்பிவிட்டிருந்தான்.
வீட்டிற்கு வந்த பின்னே நிதானமாய் யோசிக்க அவள் மனம் புரிந்தது. ஆனாலும் அவள் பேசிய வார்த்தைகளை அவனால் இப்போதும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அது எதனால் என்று தெரிந்தாலும் அவன் மனம் அந்த வார்த்தைகளையே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே இப்படித்தான் ஒரு பேச்சு அவனை கொன்றது. மீண்டும் ஒரு பேச்சு அவனை கொல்லாமல் கொன்றது.
முதலினதை ஒதுக்க முடியாவிட்டாலும் ஒதுங்கி சென்றுவிட்டான். அருளாசினி பேசியதை அவன் உள்ளம் ஒவ்வொரு கணமும் யோசித்தது. இப்படி பேசிவிட்டாலே என்று. சொல் பொறுக்க மாட்டாதவன் அவன். 
அவர்கள் வேறு சாதி என்று ஒதுக்கி அவன் ஊரில் உள்ளவர்கள் அவன் தந்தையை அடக்கம் செய்யக்கூட விடாது செய்ததிருந்தில் ஆரம்பித்தது இன்று வரை யாரும் ஒரு சொல் சொன்னவிட்டதில்லை அவன். சொல்லும் வரையும் அவன் நடந்துக் கொண்டதில்லை.
அன்று இரவு அவர்கள் அறைக்கு அவன் வந்த போது அருளாசினி பேச முயற்சி செய்ய “வேணாம் எதுவும் பேச வேணாம். நீ இப்படித்தான்னு என் மனசு எப்போ ஏத்துக்குதோ அப்போ நானே பேசறேன்”
“நான் இப்படித்தான்னு நீங்களா முடிவுக்கு வந்திடாதீங்க. அன்னைக்கு நான் பேசினது…”
“வேணாம்மா திரும்பவும் ஆரம்பிக்க வேணாம். நீ இப்படித்தான்னு உன்னை தப்பா பேச வரலை. நீ பேசினதை எப்போ எனக்கு ஒத்துக்க முடியுதோ அப்போ நானே சகஜமாகிடுவேன்னு நினைக்கிறேன்”
“அதுவரைக்கும் உன்னால காத்திட்டு இருக்க முடியாதா”
“காத்திட்டு இருப்பேன். ஆனா ஒரு விஷயம்”
“என்ன??”
“என்னை நீங்க தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும். அந்த நேரத்துல வரமுடியலைன்னு எந்த சாக்கும் சொல்லக் கூடாது” என்றிருந்தாள்.
“சரி” என்று முடித்திருந்தான் அப்போது.
அங்கிருந்து கிளம்பும் போது தான் அன்னப்பூரணி மகனிடம் பேசியிருந்தார். அருளாசினிக்கு ஏழாம் மாதமே சீமந்தம் செய்துவிடலாம் என்று. நல்ல நாளும் பார்த்து அவர் சொல்லியிருக்க அதை நினைவில் வைத்துத்தான் லோகுவை இப்போது அங்கே அனுப்ப முடிவு செய்தான்.
லோகுவிற்கும் அது ஒரு மாற்றமாய் இருக்கும் என்ற எண்ணமும் உடன் சேர்ந்துக் கொண்டிருந்தது. லோகு அங்கு வந்து சேர்ந்தவன் அவர்களுக்கு உதவியாக இருந்தான். லோகுவின் மனைவியும் அருளாசினியுடன் நன்றாக சேர்ந்துக் கொண்டிருந்தாள். சீமந்த நாளும் விடிந்திருந்தது.

Advertisement