Advertisement

24
திடிரென்ற அவளின் அணைப்பில் ஒரு நொடி அதிர்ந்தவன் பின் அவனும் அவளை சேர்த்தணைத்துக் கொண்டான்.
“ஏன் போன் எடுக்கலை??”
“நான் போன் எடுத்தேன்ல”
“இன்னைக்கு வர்றேன்னு சொல்லவே இல்லையே. அப்புறம் பேசறேன்னு சொல்லி வைச்சுட்டீங்க”
“வேலை இருந்ததால அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வைச்சுட்டேன். வேலை முடியவும் அங்க இருந்து கிளம்பிட்டேன்”
“கிளம்ப முன்னாடி போன் பண்ணி சொல்ல மாட்டீங்களா… அத்தையும் போன் பண்ணாங்க நீங்க எடுக்கலை”
“அம்மாக்கு அப்புறம் போன் பண்ணி சொல்லிட்டனே வந்திட்டு இருக்கேன்னு”
“நிஜமாவா அத்தை என்கிட்ட சொல்லவே இல்லையே”
“இங்கவே நின்னு பேசிட்டு இருக்கறதா” என்றான் அவர்கள் வெளியில் நின்றிருப்பதை கருத்தில் கொண்டு.
“சாரி” என்றவள் விலகிப் போகவே “இப்படியே உள்ள போகலாம், எனக்கொண்ணும் ப்ரோப்ளம் இல்லை” என்றான் சிரிப்போடு.
தான் அவனை இவ்வளவு தேடியிருக்கிறோமா என்று அக்கணம் அவளுக்கு வெட்கமாகிப் போனது. “ஒரு நிமிஷம் உள்ள கொஞ்சம் திங்க்ஸ் இருக்கு” என்றவன் டிக்கியை திறந்து உள்ளிருந்த பைகளை எடுத்துக் கொண்டான்.
“இவ்வளவா என்ன வாங்கிட்டு வந்தீங்க??”
“உள்ள வா…”
“என்கிட்ட கொஞ்சம் கொடுங்க” என்று கை நீட்டினாள்.
“இந்த வெயிட்டு கூட தூக்கமாட்டனா என்ன??” என்றவன் அவளுடன் உள்ளே சென்றான்.
ஹாலில் இருந்த சோபாவில் அதை வைத்துவிட்டு இவர்கள் அறைக்கு அடுத்திருந்த அறையில் எட்டிப் பார்த்தான்.
“அத்தை தூங்கிட்டாங்க” என்றாள் இவன் மனைவி.
“அதுக்குள்ளவா…” என்றவாறே அவரருகே சென்றான்.
“ஏன்டா தூங்கிட்டு இருந்தா கூட எழுப்பிவிடுவியாடா” என்றார் அவர் கண் திறவாமலே.
“ம்மோவ் முழிச்சுட்டு தான் இருக்கியா?? எழுந்து வாம்மா” என்றான்.
“ஏன்டா வந்தோமா பொண்டாட்டியை பார்த்து பேசுனோமா தூங்குனோமான்னு இல்லாம என்னை ஏன்டா உசுப்பறே. சாப்பிட்டு வந்திட்டன்னா பேசாம போய் படு. காலையில என்கிட்ட பேசிக்கலாம். எனக்கு தூக்கம் வருது, போங்க ரெண்டு பேரும்” என்று சொல்ல அருளாசினிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
ஆருத்ரன் தான் “ம்மோவ் எதுக்கும்மா திட்டுறே?? ஒரு வாரம் ஆச்சே உன்னைப் பார்த்துன்னு வந்தா ரொம்ப தான்மா பண்றே நீ”
“இப்போ என்னாடா வேணும் உனக்கு” என்றவர் எழுந்து அமர “பார்த்திட்டியா என்னை போதுமா, பேசாம போய் தூங்குடா” என்றார் அவனிடம்.
அருளாசினி வாய் விட்டு சிரித்துக் கொண்டே வெளியில் சென்றுவிட “எதுக்குமா என்னை அவ முன்னாடி திட்டுற, பாரு சிரிக்கிறா” என்றான் குறையாய்.
“ஊருக்குன்னா முன்ன போய் நிக்க தெரியுது, இதெல்லாம் எப்போ புரியப் போகுதுன்னு தெரியலை” என்றவர் எட்டி மருமகள் இருக்கிறாளா என்று பார்த்தார்.
பின் அவனிடம் “நீ வரலைன்னு தேடிட்டு இருந்தா, போய் என்னன்னு பாரு. நான் தூங்கறேன், நீ போ. ஆமா நீ சாப்பிட்டியா ருத்ரா” என்றார் அவர்.
“சாப்பிட்டேன்ம்மா” என்றவனுக்கு தன் அன்னையை குறித்து அப்படியொரு சந்தோசம். அம்மாவுக்கு இணை அம்மா மட்டுமே வேறு யாரும் அதில் இடைப்புகவே முடியாது என்று தான் தோன்றியது.
பொண்டாட்டி பின்னேயே செல்கிறான் என்று ஓரோர் அம்மாக்கள் சொல்வதை கேட்டதுண்டு. அது போலவே ஒரு சில மனைவிகளும் அம்மா தான் அவருக்கு எல்லாம் நானெல்லாம் முக்கியமே அல்ல என்று கூட சண்டையிடுவது பார்த்திருக்கிறான்.
இங்கு புதுவிதமாக இருந்தது, அருளாசினி அன்னப்பூரணி இருவரும் இருவேறு ரகமாக இருந்தாலும் அவன் வாழ்வை இசைக்க செய்யும் அழகிய ராகங்களாக இருந்தனர்.
“சரிம்மா படு நான் காலையில பேசறேன்” என்றவன் வெளியில் வந்து அறைக்கதவை சாற்றி தங்கள் அறைக்குள் நுழைந்தான். அருளாசினி கட்டிலில் அமர்ந்துக் கொண்டு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“இப்போ என்னாச்சுனு நீ சிரிக்கிறே??”
“ஒண்ணுமில்லை…” என்றவள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
“உனக்கு தூக்கம் வருதா??”
“இல்லை ஸ்கூல் விட்டு வந்ததும் கொஞ்சம் நேரம் படுத்திட்டேன். இப்போ தூக்கம் வரலை”
“கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாமா??” என்று அவன் கேட்கவும் சந்தோசமாக சம்மதித்தாள்.
“இரு வரேன்” என்று எழுந்து வெளியில் சென்றவன் கையில் ஒரு பையோடு வந்தான். அதை தன் மனைவியிடம் கொடுக்க அதை வாங்கி திறந்தாள்.
“ஜூவல்ஸ் இருக்கு இதுல”
“இது எப்படி உங்ககிட்ட, இதெலலம் லாக்கர்ல தானே இருந்துச்சு”
“ஹ்ம்ம் உன்னோட அத்தை தான் கொண்டு வந்து கொடுத்தாங்க” என்றவன் காயத்ரி வந்த விஷயத்தை சொல்லிட அந்த நகைகளை கையில் எடுத்து பார்த்தாள்.
“என்னாச்சு?? ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட??”
“ஒண்ணும்மில்லை” என்றவளுக்கு கண்கள் கலங்கியது.
“சரி அதை விடு, உங்க அத்தைகிட்ட நீ கன்சீவா இருக்க விஷயத்தை சொல்லிட்டேன். அவங்க உனக்காக ஏதோ செஞ்சு கொடுத்து விட்டிருக்காங்க”
“ஏன் அதெல்லாம் வாங்குனீங்க??”
“அவங்க ஆசையா கொடுக்கும் போது எப்படி அவாய்ட் பண்ண முடியும்”
“எனக்கு நம்ம அத்தை செய்யறதே பிடிச்சிருக்கு. நானுமே சமைப்பேன் எங்களுக்கு பிடிச்சதை நான் செய்ய மாட்டேனா”
“சரி இனிமே வாங்கலை… நாளைக்கு லீவு சொல்லிட்டியா ஸ்கூல்ல”
“ஹ்ம்ம் ஹாப் டே லீவ் சொல்லியிருக்கேன்”
“அது எப்படி பத்தும் ஸ்கேன் வேற பண்ணணும்ல சென்னையில ஸ்கேன் பண்ண எவ்வளவு நேரமாச்சு மறந்திட்டியா??”
“பார்த்துக்கலாம் விடுங்க”
“இங்க வேலைக்கு ஆளு கேட்டிருக்கேன் உங்க அத்தைக்கிட்ட, எப்படியும் கிடைச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன்”
“ஹ்ம்ம்”
“பேபி மூவ்மென்ட்ஸ் தெரியுதா உனக்கு. போன தடவையே டாக்டர் சொன்னங்கல்ல இனி கொஞ்சம் கொஞ்சமா மூவ்மென்ட்ஸ் பீல் பண்ணுவீங்கன்னு”
“ஹ்ம்ம் தெரியுது”
“என்ன சொல்றாங்க பேபி?? நான் வாங்கிட்டு வந்த ப்ரோட்டீன் பவுடர் பால்ல கலந்து சாப்பிடறியா?? ஒழுங்கா சாப்பிடுறல்ல. பழங்கள் நெறைய வாங்கிட்டு வந்தேன், எல்லாம் சாப்பிடு. பிரண்டு ஒருத்தர்கிட்ட குங்குமப்பூ கேட்டிருந்தேன், வாங்கிட்டு வந்திருக்கார். எல்லாம் வெளிய பேக்ல இருக்கு”
“நாளைக்கு எடுத்து தர்றேன். அதையும் இனி சேர்த்துக்கோ. எதையும் வேஸ்ட் பண்ணாம சாப்பிடு அப்போ தான் பேபி நல்லா இருக்கும்” என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தவன் தன் மனைவியை கவனிக்கவேயில்லை.
வந்ததில் இருந்து குழந்தையை பற்றிய பேச்சை தவிர அவன் வேறு எதுவும் பேசவில்லை. அவளுக்கு தனிமைவுணர்வு அதிகம் வாட்டியது. பிறந்ததில் இருந்தே அவள் தனி தான்.
திருமணமாகி ஐந்து வருடம் கழித்து இவள் பிறந்திருந்தாள். தவமாய் தவமிருந்து தான் இவளைப் பெற்றிருந்தனர். இவள் பிறந்த போது அவள் அன்னைக்கு அதிகமான உதிரப்போக்கு கண்டு, பின் ஜன்னியும் கண்டு அவர் உடல் நிலை மோசமாகி இறந்துவிட்டிருந்தார்.
அதன்பின் அவளும் அவள் தந்தையும் தான். உடன்பிறந்தவர்கள் என்று யாருமில்லை. உறவினர்களும் அவர்கள் வீட்டிற்கு விசேஷத்திற்கு அழைப்பதற்கு வந்து செல்வது தான்.
அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு செல்லும் போது அவர்களை பார்ப்பதுடன் சரி. இரண்டு தெரு தள்ளித்தான் அவள் தந்தையின் வழி உறவினர்கள் வீடு இருக்கிறது. யாரும் வந்து செல்ல இருந்ததில்லை.
அவர்கள் சென்னை வந்த கொஞ்ச நாட்களில் அவளுக்கென்று இருந்த ஒரே சொந்தமான அவளின் தந்தையும் விட்டுச் சென்றிருந்தார். அதற்கு பின்னான நாட்கள் அவளுக்கு நரகமானதாக இருந்தது.
ஆருத்ரன் வந்து அவளை திருமணம் செய்யக் கேட்டபோது அவளுக்கு எதுவும் தோன்றியிருக்கவில்லை. அவன் கதையை கேட்டப்பின் சரியென்று சொல்லத் தோன்றினாலும் அவளுக்கு முடிவெடுக்க யோசனையாய் இருக்க அவள் தந்தையின் படத்தின் முன் சீட்டு குலுக்கிப் போட்டு தன் வாழ்க்கையை முடிவு செய்தாள்.
அவளுக்கு தெரியும் கணவன் என்பவன் மற்ற அனைவரையும் விட தன் வாழ்வில் மிக முக்கியமானவன் என்று. ஆருத்ரன் கதை தெரிந்த பின்னே அவளுக்கு தோன்றிய விஷயம் ஒன்று தான். அவன் மனைவி என்ற உறவின் உன்னதத்தை உணர்ந்தவனாயிருப்பான் என்று நினைத்தாள் அவள்.
தான் அவனுக்கு முக்கியமானவளாக இருப்போம் என்று நினைத்தாள். அவனால் அன்னையாய் அன்னப்பூரணி என்ற உறவு கிடைத்ததில் அவ்வளவு சந்தோசம் அவளுக்கு.
எத்தனை உறவிருந்தும் இந்த நொடி அவள் எதிர்பார்த்தது அவனைத்தான். குழந்தையை பற்றி அவனிடத்தில் சொல்ல அவளுக்கும் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் அவன் எப்போதும் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை விடுப்பதாகவே தோன்றியது அவளுக்கு.
அவள் யோசனையிலிருக்க அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தான். “நல்லா வேலை பார்க்கணும், அப்போ தான் பேபி நார்மலா பிறக்கும்ன்னு கவிதாக்கா சொன்னாங்க”
“எனக்கு எப்போ பாப்பாவை பார்ப்போம்ன்னு இருக்கு” என்று இவன் கண்களில் கற்பனை விரிய பேசிக் கொண்டிருக்க அவள் படுத்துவிட்டிருந்தாள்.
அவன் இன்னும் ஏதோ பேசிக் கொண்டிருந்தவன் திரும்பி அருகே பார்க்க அருளாசினி உறங்கிவிட்டிருந்தாள். “நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் இவ என்ன தூங்கிட்டா, ஒருத்தன் வேலைமெனக்கெட்டு எதுக்கு இங்க வர்றான்” என்று முனகிக்கொண்டே அவளை தொந்திரவு செய்யாமல் அவனும் படுத்துவிட்டான்.
காலையில் எழுந்திருந்தவள் குளித்து முடிந்து உணவருந்திக் கொண்டிருக்க அப்போது தான் எழுந்து வந்தான் ஆருத்ரன்.
“ஹேய் மணி பத்தாகப் போகுது. ஏன் என்னை எழுப்பலை??” என்றவாறே வந்து அவளருகில் அமர்ந்துக் கொண்டான்.
அன்னப்பூரணி அவனுக்கு காபியை கொண்டு வந்த தர “இரும்மா வர்றேன்” என்றவன் பல் துலக்கி வந்து அதை எடுத்துக் கொண்டான்.
“இன்னாடா அதிசயமா இருக்குது” என்றார் மகனைப் பார்த்து.
“சும்மா சும்மா கண்ணு வைக்காதம்மா போய் டிபன் எடுத்து வை. நாங்க சாப்பிட்டு டாக்டர்கிட்ட போகணும்” என்றவன் சொல்ல அவர் உள்ளே சென்றார்.
“பேபி காட்டுவீங்களா டாக்டர்”

“இங்க என்ன எக்சிபிஷனா காட்டுறோம். பேபி காட்டுவீங்களான்னு கேட்கறீங்க??”
“இல்லை சென்னையில ஸ்கேன் பண்ணும் போது காமிச்சாங்க”
“அப்போ அங்கவே போய் காட்டியிருக்கலாமே இங்க எதுக்கு வந்தீங்க??” என்றார் அம்மருத்துவர்.
‘நமக்கும் டாக்டருக்கும் எப்பவும் செட்டே ஆகாது போல’ என்று எண்ணியவனின் முகம் வாடியது. அவர் ஸ்கேன் முடித்து அருளாசினியை வெளியே அனுப்பிவிட “நீ பார்த்தியா பேபியை”
“எப்படி இருந்தாங்க” என்றான் அவன் ஆர்வமாய்.
“ஹ்ம்ம் பார்த்தேன், பேபி எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருந்தாங்க” என்றுவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள் அவள்.
‘நான் என்ன கேட்டாலும் பதில் சொல்லக் கூடாதுன்னு எல்லாம் கங்கணம் கட்டிட்டு இருக்காங்க போல. பேபி எப்படி இருக்கணுமோ அப்படி இருக்காம். இது எனக்கு தெரியாது பாரு’ என்று கடுப்பாகியது அவனுக்கு.
அவனுக்கு தெரியவில்லை வந்ததில் இருந்து அவன் தான் குழந்தையை பற்றியே அதிகம் பேசி அவளை கடுப்பிற்குள்ளாக்கி இருக்கிறோம் என்று.
சிறிது நேரத்தில் நர்ஸ் ஒருவர் வந்து “ரிப்போர்ட் ரெடி ஆகிடுச்சு வாங்கிட்டு போய் டாக்டரை பாருங்க” என்று சொல்ல ஆருத்ரன் சென்று அதை வாங்கி வந்தான்.
“என்னம்மா பீபி கொஞ்சம் கூடியிருக்கு. என்ன டென்ஷன் உனக்கு??” என்றார் மருத்துவர்.
ஆருத்ரனும் அவளைத் தான் பார்த்திருந்தான். “சொல்லும்மா எதையாச்சும் யோசிக்கறியா என்ன??”
“அப்படியெல்லாம் எதுவுமில்லை டாக்டர்”
“ரொம்பவும் கூட இருக்கு அதனால தான் கேட்கறேன். போன தடவை இவ்வளவு இல்லை, எதுக்கும் அடுத்த தடவை பார்ப்போம். சாப்பாட்டுல உப்பு கொஞ்சம் குறைச்சு போட்டு சாப்பிடுங்க”
“ஆயில் ஐட்டம் அதிகம் சாப்பிடாதீங்க. ஊறுகாய் எல்லாம் தொடவே தொடாதீங்க” என்றவர் மேலும் பல அறிவுரைகள் சொல்லி மறுத்து மாத்திரைகளை தொடரச்சொல்லி எழுதிக் கொடுத்தார்.
மருத்துவர் ரத்த அழுத்தத்தை பற்றி சொன்னதை மனதில் வைத்திருந்த ஆருத்ரன் அதைப்பற்றி அவளிடத்தில் கேட்க பேச்சு மீண்டும் குழந்தையிடம் செல்ல அவள் பொறுமையிழந்து தன் மொத்த எதிர்பார்ப்பையும் ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்துவிட்டாள் அவனிடத்தில். பதிலுக்கு அவனும் பேசிச் சென்றுவிட்டான் திரும்ப வரமாட்டேன் என்று.

Advertisement