Advertisement

23
ஆருத்ரன் வாரத்திற்கு ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று இரண்டு நாட்கள் இருந்துவிட்டு தான் வருவான். அருளாசினியும் வேலைக்கு சென்று வர ஆரம்பித்திருந்தாள்.
வீட்டு வேலைக்கு நம்பிக்கையான ஆளாய் தேடிக் கொண்டிருந்தான். இதுவரை யாரும் கிடைத்த பாடில்லை. அதன் பொருட்டு தான் அவன் வார வாரம் வீட்டிற்கு ஓடி வந்துக் கொண்டிருந்தான்.
அவர்களை கடைக்கு எங்கும் அனுப்புவதில்லை. அவன் வரும் நேரம் தான் அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று தேவையானவற்றை வாங்கி வருது எல்லாம். சென்னையில் அவளும் அவளின் அப்பாவும் இருந்த வீட்டில் இருந்த பொருட்கள் அப்போதே ஆருத்ரன் அவன் கடையில் இருந்த அறையில் போட்டு வைத்திருந்தான்.
அது இப்போது அவர்களுக்கு தேவைப்படும் என்று சென்ற வாரம் தான் வண்டியில் அனுப்பி வைத்திருந்தான். அருளாசினியை இன்னும் இரண்டு நாளில் செக்கப்பிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 
சென்னையில் இருந்து அவன் அன்னைக்கு வாங்க வேண்டிய மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டி கடைக்கு சென்றிருந்தவன் எல்லாம் முடித்து அப்போது தான் வீட்டிற்கு வந்தான்.
“அருள்” என்ற பெண் குரல் சோபாவில் இருந்தவாறே எட்டி வாயிலை பார்க்க காயத்ரி நின்றிருந்தார். ‘இவர் எதுக்கு இப்போ வந்திருக்கார்’ என்ற யோசனையோடே எழுந்து வெளியில் வந்தான்.
“அருள்…”
“ஊருக்கு போயிருக்கா??”
“ஊருக்கா!!”
“ஹ்ம்ம் வேலை லெட்டர் நீங்க தானே எடுத்திட்டு வந்தீங்க”
“எங்க வேலைன்னு எனக்கு தெரியாதே…”
“திருச்சியில தான் வேலை”
“உள்ள வரலாமா??” என்று கேட்டு அவர் வெளியில் நிற்க அதுவரையிலும் அவரை நிற்க வைத்தே பேசுகிறோம் என்று புரிந்தவன் ஒரு நொடி தயங்கி பின் அவரை உள்ளே அழைத்தான்.
“உட்காருங்க இதோ வந்திடறேன்” என்று வெளியில் சென்றான். லோகு அவன் வீட்டிற்கு பக்கத்து வீடு என்பதால் எப்போது அழைத்தாலும் உடனே வந்துவிடுவான்.
இப்போதும் அவனைத்தான் அழைத்தான். “சொல்லுண்ணே” என்று வந்து நின்றான் அவன்.
“யாராச்சும் இருந்தா கடைக்கு போய் காபி வாங்கிட்டு வரச்சொல்லுடா”
“நான் வாங்கியாறன் கொடுண்ணே”
“வேணாம் வேணாம் நீ என் கூட வா, வேற யாராச்சும் அனுப்பு” என்றவன் அவன் சென்று வேறு ஆளை அனுப்பி வரும் வரை அங்கேயே நின்றிருந்தான். இருவரும் ஒன்றாகவே உள்ளே வந்திருந்தனர்.
“லோகு அம்மா ரூம்ல மேல ஷெல்ப்ல கணக்கு நோட் இருக்கு. எடுத்து பாரு நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று சொல்ல அவனும் “சரிண்ணே” என்று அன்னப்பூரணியின் அறைக்கு சென்றான்.
“சொல்லுங்க” என்றவன் அவர் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.
அவர் கையில் இருந்த பை ஒன்றை எடுத்து அவன் முன் நீட்டினார். அவன் அதை வாங்காமல் கேள்வியாய் அவரைப் பார்த்தான்.
“வாங்கிக்கோங்க”
“என்ன இது??” என்றான் இன்னும் அதை வாங்காமலே.
“முதல்ல வாங்குங்க சொல்றேன்” என்றார் அவர்.
“சொல்லுங்க வாங்கிக்கறேன்” என்றான் அவனும் விடாப்பிடியாய்.
“இதுல நகைங்க இருக்கு”
“யாரோடது??”
“எல்லாமே அருளுக்கு சேர வேண்டியது” என்று அவர் சொல்லவும் அவன் ஒரு விளங்காத பார்வை பார்த்தான் அவரை.
“எங்க அண்ணன் இங்க வந்த புதுசுல இதை என்கிட்ட கொடுத்து பத்திரமா வைச்சுக்க சொன்னாங்க. எல்லாமே எங்க அண்ணியோட நகைங்க”
“உங்ககிட்ட கொடுத்தாங்களா எதுக்கு??” என்றான் புரியாமல்.
“ஏன்னு எனக்கு தெரியாது. அண்ணன்கிட்ட கேட்டதுக்கு ஊர்ல லாக்கர்ல இருந்து எடுத்திட்டு வந்திட்டேன். இங்க லாக்கர் அக்கவுன்ட் ஓபன் பண்ணதும் வாங்கிக்கறேன் நீ உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி உங்க லாக்கர்ல பத்திரமா வைன்னு சொன்னாங்க”
“ஓ!!”
“அவரைப் பத்தி எங்க அண்ணாக்கு அரைகுறையா தானே தெரியும். நான் அவர்கிட்ட இதைப்பத்தி சொல்லவேயில்லை. யாருக்கும் தெரியாம நானே தான் பத்திரமா வைச்சிருந்தேன்”
“அண்ணா ஸ்கூல்க்கு சேர்ந்த புதுசு உடனே பேங்க் போய் லாக்கர் அக்கவுன்ட் ஓபன் பண்ண நேரமில்லாம போகலை. ஒரு ரெண்டு மூணு தரம் நானும் கேட்டேன் எப்போ அக்கவுன்ட் ஓபன் பண்றாங்கன்னு அவங்க லீவு போட்டு போறேன்னு சொன்னாங்க. அதுக்குள்ளே அவங்களே போய்ட்டாங்க”
“அருள் எங்க வீட்டுக்கே மருமகளா வந்திடுவான்னு எனக்கு ஒரு எண்ணமிருந்துச்சு. அதனாலயும் சரி இது இங்கவே இருக்கட்டும்ன்னு நான் அவகிட்ட அப்போ திருப்பி கொடுக்கலை”
“இனிமே இது என்கிட்ட இருக்கறது நியாயமில்லை. அதான் கொடுத்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்று அவர் எடுத்துக் கொடுக்க இம்முறை எந்த மறுப்பும் சொல்லாது வாங்கிக் கொண்டான்.
“அதுல ஒரு நகை மட்டும்… மன்னிச்சுடுங்க ஒரு தேவைக்காக எடுத்து அடகு வைச்சிட்டேன், சீக்கிரமே அதை மீட்டு கொடுத்திடறேன்” என்றான் சங்கடமாக.
இதை அவர் சொல்லவில்லை என்றால் அவனுக்கு நிச்சயமாக தெரிந்திருக்காது. வீடேறி வந்து அதை அவனிடத்தில் கொடுத்து நடந்ததையும் சொன்னவரின் மீது கொஞ்சம் மதிப்பு வந்தது அவனுக்கு.
“அந்த நகை எங்க வைச்சீங்கன்னு சொல்லுங்க. நானே திருப்பிக்கறேன்” என்றான்.
“இல்லை வேணாம் நான் பார்த்துக்கறேன்”
“பரவாயில்லை நான் மீட்டுக்கறேன், நீங்க ஒரு தரம் கூட வந்தா போதும்”
“இல்லை…”
“ப்ளீஸ்” என்று அவன் முடிக்கவும் “ண்ணா” என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
“வா பாபு காபி வாங்கிட்டியா??” என்றவன் அதை வாங்கிக்கொண்டு காசைக் கொடுத்து அவனை அனுப்பினான்.
“லோகு” என்று குரல் கொடுக்க “அண்ணா இதோ வந்திட்டேன்” என்று எழுந்து வந்தான் அவன்.
“காபி வாங்கிட்டு வந்திட்டான்டா” என்றவன் அவனிடம் கொடுக்க அவன் உள்ளே சென்று ஒரு கோப்பையில் ஊற்றிக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தான்.
“எதுக்கு தம்பி”
“இருக்கட்டும் எடுத்துக்கங்க”
“லோகு நீ எடுத்துக்கிட்டயாடா”
“உள்ள வைச்சிருக்கேன், எடுத்துக்கறேண்ணா”
“சரி போ” என்றுவிட அவன் நகர்ந்துவிட்டான்.
“அப்புறம் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
“சொல்லுங்க தம்பி”
“அருளாசினி பிரக்னன்ட்டா இருக்கா”
“ரொம்ப சந்தோசம்ப்பா” என்றார் உணர்ந்து.
“உங்களால ஒரு உதவி ஆகணுமே”
“சொல்லுங்க நான் செய்யறேன்”
“உங்க வீட்டில எப்படி சமையல்ன்னு எனக்கு தெரியாது. அவளுக்கு என்ன பிடிக்கும்ன்னு எனக்கு தெரியாது. உங்க வீட்டு சமையல் தெரிஞ்ச ஒரு ஆளை ஏற்பாடு பண்ண முடியுமா. அம்மாக்கு சிம்பிளா தான் வெஜ் சமைக்க வரும்”
“ஊர்ல அவங்க கூட இருக்க மாதிரி ஆள் கிடைப்பாங்களா?? கொஞ்சம் விசாரிச்சு சொல்ல முடியுமா, என்ன சம்பளம் வேணும்னாலும் கொடுத்திடலாம்”
“சரி நான் விசாரிச்சுட்டு சொல்றேன். ஏன் அங்க யாரும் கிடைக்கலியா?? எங்களோட எல்லா சொந்தமும் அங்க தானே இருக்காங்க”
“இப்போவரை உங்களை யாரும் சேர்த்துக்கலைன்னு தெரியும். அப்புறம் எப்படி??”
“கவலைப்படாதீங்க அங்கவே எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் இருக்காங்க. என்னோட ரொம்ப கிளோஸ் பிரண்ட் அவ. அவகிட்ட பேசிட்டு சொல்றேன் உங்களுக்கு”
“தேங்க்ஸ்”
“நீங்க அடுத்து எப்போ ஊருக்கு போவீங்க??”
“நாளைக்கு கிளம்பறேன்”
“நாளைக்கேவா…”
“ஹ்ம்ம்”
“எப்போ கிளம்புவீங்கனு சொல்லுங்க நான் வர்றேன். அவளுக்கு பிடிக்குமா தெரியாது. நான் கொஞ்சம் சமைச்சு கொடுக்கறேன் அதை அவகிட்ட கொடுத்திடுங்க” என்றவர் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
சொன்னது போல மறுநாள் வந்திருந்தார் காயத்ரி. வத்த குழம்பு, பருப்பு பொடி, ரவா லட்டு, அல்வா எல்லாம் தயார் செய்து கையோடு கொண்டு வந்திருக்க ஆருத்ரன் உண்மையாகவே நெகிழ்ந்து போனான்.
மனிதர்களை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று தான் அவனுக்கு தோன்றியது. சில மாதங்களுக்கு முன்பு வரை இவர் தானே அவர் மகனுக்கு அவளை மணமுடிக்க ஆவலாய் இருந்தார்.
இன்று நிலைமை தலைக்கீழாய் மாறிய போதும் அவருக்கு அண்ணன் மகளின் மீது இன்னும் பாசம் மிச்சமிருக்கிறதே என்று தான் அவனால் எண்ண முடிந்தது.
அவரை கையோடு அழைத்துக்கொண்டு அந்த நகையை மீட்டு வந்தவன் அவரை வீட்டில் இறக்கிவிட்டு அப்படியே ஊருக்கு கிளம்பிவிட்டிருந்தான்.
“அத்தை இவங்க போன் பண்ணாங்களா??”
“இல்லையே அருளு…”
“நாளன்னிக்கு ஆஸ்பிட்டல் போகணும் எப்போ வர்றேன்னு சொல்லவே இல்லை. காலையில பேசினா அப்புறம் கூப்பிடுறேன்னு வைச்சுட்டாங்க”
“இரு நான் போடுறேன்” என்றவன் மகனுக்கு அழைக்க அவன் எடுக்கவேயில்லை.
“எடுக்க மாட்டேங்குறான் அருளு, வேலை இருக்கான் போல அவனே கூப்பிடுவான். நான் பேசறேன் அவன்கிட்ட நாளைக்கு வந்திடுவான் நினைக்கிறேன்” என்றார் அன்னப்பூரணி மருமகளை சமாதானப்படுத்த. “போன் எடுக்கலன்னா என்னன்னு நினைக்கிறது” என்று அவள் புலம்புவதை ஒரு சிரிப்புடன் பார்த்திருந்தார்.
“அருளு போதும் சும்மா புலம்பாத. நீ வந்து முதல்ல சாப்பிடு” என்று அவர் ஒரு அதட்டல் போட அது நன்றாய் வேலை செய்தது அவளிடத்தில்.
சாப்பிட்டு முடித்தவள் இன்னும் உள்ளே செல்லாமல் வெளியிலேயே அமர்ந்திருந்தாள். “அருளு மாத்திரை போட்டு படு. நானும் தூங்கணும் இன்னும் எதுக்கு முழிச்சுட்டு இருக்கே” என்றவர் பாலை காய்ச்சி எடுத்து வந்து அவளிடத்தில் கொடுத்தார்.
அவளும் குடித்து முடித்து ஒரு வழியாய் உள்ளே எழுந்து சென்றிருந்தாள். திருச்சிக்கு வந்த புதிதில் ஆருத்ரன் உடன் இல்லாது படுக்க அவளுக்கு எப்படியோ இருந்தது. சில மாதங்களாய் உணர்ந்த அவன் இருப்பை அவள் மனம் விரும்பியது அக்கணத்தில்.
தந்தையுடன் இருந்திருந்தாலும் அவள் தனியே தான் படுப்பாள் சிறு வயது முதல். திருமணத்திற்கு பின் தான் ஒரே அறையில் ஆருத்ரனுடன் இருக்க நேரிட்டது. ஓரிரு நாட்கள் அது எப்படியோ இருந்தாலும் பழகிப் போயிருந்தது சில நாட்களில்.
இப்போதோ அது தொடர வேண்டும் என்ற எண்ணம் தான் ஓடியது. மஞ்சள் கயிறு தன் மேஜிக்கை மெல்ல தொடங்கியிருந்தது. ஏதேதோ எண்ணங்கள் ஓட அவள் கண்ணயரும் வேளை வண்டி சத்தம் கேட்டது.
கண்ணைத் திறந்தவள் கதவைத் திறந்து எழுந்து வெளியில் வர ஆருத்ரன் வண்டியை உள்ளே எடுத்து நிறுத்திக் கொண்டிருந்தவன் இவளைப் பார்த்து புன்னகைக்க இவள் விரைந்து வந்து அவனை கட்டிக்கொண்டாள்.

Advertisement