Advertisement

22
“ஆமா இப்போ எங்க போச்சு உங்க கோபம்??”
“அதான் பேசிப்பேசி என்னை டைவர்ட் பண்ணிட்டியே. இந்த மொட்டைமாடி கதை எல்லாம் சும்மா தானே”
“இல்லை அது நிஜம் தான்”
“அப்போ நீ என்னை டைவர்ட் பண்ணலை நான் அதை நம்பணும்”
“நம்ப வேண்டாம்” என்றவள் எழுந்திருக்க அவன் எழுந்து நின்றான்.
“நம்பலைன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்”
“ஹ்க்கும்… ஆமா நாளைக்கே நீங்க ஊருக்கு கிளம்பிடுவீங்களா??”
“இல்லை”
“நிஜமாவா” என்றவளின் முகத்தில் ஒரு சந்தோசக்கீற்று.
“உன்னோட ஸ்கூல் எங்க இருக்குன்னு தெரியணும், நீ எப்படி போகறது என்னன்னு பார்க்கணும். வீட்டு வேலைக்கு ஆள் வைக்கணும், உன்னை ஸ்கூல்ல விட்டு கூட்டிட்டு வர்றதுக்கு ஆள் பார்க்கணும்” என்று அடுக்கினான்.
“போதும் போதும்… நான் என்ன சின்ன குழந்தையா?? ஸ்கூல் தூரம் எல்லாம் இல்லை நடந்து போற தூரம் நானே போய்டுவேன்”
“நான் பார்க்கணும் நாளைக்கு போவோம் அப்புறம் டிசைட் பண்ணிக்கலாம். வீட்டு வேலைக்கு ஆளுங்க கிடைப்பாங்களான்னு வேற பார்க்கணும்”
“வேணாமே…” என்றாள் உள்ளேப் போன குரலில்.
“ஏன்??”
“வேணாம்”
“அதான் ஏன்??”
“நான் பார்த்துப்பேன் முன்னாடி பார்த்தது தானே”
“அப்போ வேற, இப்போ வேணாம். அம்மாக்கும் முடியாது சமையல் அவங்க பார்த்துப்பாங்க, ஆனா வீட்டு வேலைக்கு ஆள் வைக்கணும். கூடவே இருக்க மாதிரி இருந்தா கூட எனக்கு ஓகே தான்”
“வரமாட்டாங்க யாரும்”
“ஏன்??”
“அப்படித்தான் விடுங்க”
“நல்ல மூட்ல இருக்கேன் அதை ஸ்பாயில் பண்ணிக்க விரும்பலை. இப்போ கீழே போகலாம், நேரமாச்சு” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு கீழே வந்திருந்தான்.
மறுநாள் அவளுடன் பள்ளிக்கு சென்று வந்தான். அருளாசினி சொன்னது போல பள்ளி நடந்து செல்லும் தூரத்தில் தான் இருந்தது. ஒரு கவலை தீர்ந்தது அவனுக்கு.
அடுத்து வீட்டு வேலைக்கு ஆள் தேடுவது மட்டுமே இருக்க அதற்கு தான் அவனுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் பேசலாம் என்றால் யாரும் பெரிதாய் அங்கு வந்து எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை. அருளாசினி கேட்கலாம் அவன் போய் கேட்க முடியாதே, புது ஊர் வேறு.
“அம்மா இங்க யாரும் வேலைக்கு கிடைப்பாங்களான்னு பார்க்கணும்”
“ஏன் அருளு உங்க ஊரு தானே, அக்கம் பக்கத்துல விசாரிச்சு சொல்லேன்” என்றார் அன்னப்பூரணி.
ஆருத்ரன் தன் அன்னையை மெச்சிக்கொண்டான் அவன் நினைத்ததை அவர் சொல்லிவிட்டாரே.
“வேணாம் அத்தை யாரும் வருவாங்கன்னு தோணலை”
“ஏன் அருளு அப்படி சொல்றே??”
“நாம இங்க வந்து மூணு நாள் ஆச்சு. ஒருத்தரும் வந்து என்னை ஏன்னு கேட்கலை??”
“புரியலை”
“அவங்கலாம் இன்னும் பழசாவே இருக்காங்க…”
“நம்ம கல்யாணம் விஷயமா” என்று யூகித்து கேட்டான் ஆருத்ரன்.
“ஹ்ம்ம் ஆமா, எல்லாருக்கும் இந்நேரம் அது தெரிஞ்சிருக்கும். அன்னைக்கு வந்தாரே என்னோட அப்பா பிரண்டு அவர் எல்லாம் சொல்லியிருப்பார்”
“அவரு உங்கப்பா பிரண்ட் தானே, உனக்கு நல்லது பண்ணாம ஏன் இப்படி பண்ணார்??”
“எல்லாருமே ஒரு வகையில சந்தர்ப்பவாதிகள் தான். அவங்கவங்களுக்குன்னு வரும் போது அடுத்தவங்களை பத்தி யோசிக்க மாட்டாங்க. அவரும் அப்படி ரகம் தான்…” என்று அவள் சொல்லவும் ஆருத்ரனுக்கு அவள் தன்னையே சொல்வது போல ஒரு உணர்வு.
முகம் ஒரு மாதிரியாகியது சட்டென்று தன்னை சமாளித்து “ஏன் அப்படி சொல்றே??” என்றிருந்தான்.
“நம்ம இங்க வரப்போறோமேன்னு இந்த வீட்டில இருக்கவங்ககிட்ட நானும் ஒரு வார்த்தை பேசி சீக்கிரம் வீட்டை காலி பண்ண வைக்க சொல்லலாம்ன்னு போன் பண்ணியிருந்தேன்”
“அவங்ககிட்ட பேசும் போது தான் தெரியும், அங்கிள் பண்ண வேலையெல்லாம்”
“அவங்க என்கிட்ட உடனே காலி பண்ணுறேன்னு ஒத்துக்கிட்டாங்க. அவசர அவசரமா அவங்க வீடு வாங்கி போகக் காரணம் இங்க வாடகை அதிகமாம். நான் கூட வாடகை அதிகமில்லையே என்ன இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன். அவங்க சொன்ன அமௌன்ட் நாங்க ஒரு நாளும் வாங்கினதே இல்லை”
“எங்ககிட்ட ஒரு அமௌன்ட் சொல்லிட்டு அங்கிள் வீட்டை கூடுதல் வாடகைக்கு விட்டிருக்கார். அட்வான்ஸ் கூட அதே போல அதிகமா வாங்கியிருக்கார். வீடு பெயின்ட் அடிச்சு கொடுக்கன்னு ஒரு அமௌன்ட் கழிக்கப் போறதாவும் சொல்லியிருக்கார்”
“எப்பவும் அவர் தான் காசை வாங்கி அக்கவுன்ட்ல போடுவார். மாசம் ஒண்ணாம் தேதி ஆனா சரியா வாடகை காசு வந்திடும். அதனால நாங்க மேற்கொண்டு எதையும் கேட்டதில்லை. இப்போ தானே எல்லாம் வெளிய வருது. அப்பா இறந்த அன்னைக்கு வந்திட்டு என்கிட்ட என்ன ஏதுன்னு கூட கேட்காம கிளம்பிட்டாரு. அன்னைக்கு என்னடான்னா நான் கல்யாணம் பண்ண விஷயத்தை சொல்லலைன்னு கேட்கறாரு”
“விடுங்க அவங்க எப்படின்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டேன் அதே போதும். வீட்டு வேலைக்கு நீங்க ஆள் தேட வேண்டாம். நானும் அத்தையும் செஞ்சுக்கறோம். முடியலைன்னா பார்த்துக்கலாம்” என்றாள்.
ஆருத்ரனுக்கு அதை அப்படியே விட்டுவிட எண்ணமில்லை. அன்று மாலை அவளை அருகில் இருந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.
சென்னையில் அவர்கள் செக்கப் செய்த பைலை உடன் கொண்டு வந்திருந்தவன் அதையும் அங்கு காண்ப்பித்து அவளுக்கு செக்கப் செய்துவிட்டு வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். மறுநாள் காலையில் அவர்கள் இருவருக்கும் ஆயிரம் பத்திரம் சொல்லி கிளம்பியிருந்தான்.
சென்னைக்கு வந்து இறங்கியிருந்தவனுக்கு வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை. எப்போதும் அவனும் அம்மாவும் மட்டுமே வளைய வந்த வீட்டில் அருளாசினியின் வரவும் அவளின் இருப்பும் இருவருக்குமே அப்படியொரு நிம்மதியை கொடுத்திருந்தது.
இப்போதோ அம்மாவும் வீட்டில் இல்லை அவளும் இல்லை என்று எண்ணிக்கொண்டே வண்டியை வீட்டில் நிறுத்தினான். கதவை திறந்து வீட்டிற்குள் நுழைய அதன் வெறுமை இன்னும் தாக்கியது அவனை.
“ம்மோவ்…” என்று அவன் அழைக்கக்கூட ஆளில்லையே. அப்படியே சோபாவில் அமர்ந்து கண்ணை மூடியிருந்தான். வண்டி ஓட்டிவந்த அலுப்பில் தன்னையுமறியாமல் உறங்கிவிட்டிருந்தான்.
வெகுநேரமாய் அவன் கைபேசி அடித்து ஓய்ந்ததிருந்தது போல. அது மீண்டும் அழைப்பைக் கொடுக்க இவன் அப்போது தான் கண் விழித்தான். போனை எடுத்துப் பார்த்தவனின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
அருளாசினி தான் அழைத்திருந்தாள். இவன் போனை அட்டென்ட் செய்யவும் “ஹலோ வந்துட்டீங்களா போன் பண்ணா ஏன் எடுக்கலை??” என்றாள் பதட்டமாய்.
“எனக்கு போன் வந்த சத்தமே கேட்கலை. வீட்டுக்கு வந்ததும் என்னவோ போல இருந்துச்சு உட்கார்ந்திட்டே இருந்தேன், அலுப்புல தூங்கிட்டேன் போல. இப்போ தான் எழுந்துக்கறேன்” என்றவன் நன்றாய் எழுந்து அமர்ந்தான்.
“நீ என்ன பண்றே??”
“காபி குடிக்கறேன்”
“மணி என்ன??” என்றான் அவன் மொபைலை பார்க்க பிரியப்படாமல்.
“ஆறு மணி ஆகப்போகுது” என்று அவள் சொல்லவும் தான் அறையின் இருள் கண்ணில் பட்டது. பேசிக்கொண்டே எழுந்துச் சென்று விளக்கைப் போட்டு வெளி வாயில் கதவை திறந்து வைத்தான். வெளி விளக்கையும் எரியவிட்டு மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான். “எனக்கு காபி கிடையாதா??”
“இங்க வாங்க அத்தை கொடுப்பாங்க”
“அப்போ இனிமே நான் பல்லு விளக்காம காபி குடிக்க முடியாதா…”
“அப்படி குடிக்க கூடாது, அது பேட் ஹாபிட் மாத்திக்கோங்க. நாளைக்கு உங்க பிள்ளைக்கு நீங்க தான் முன்னுதாரணமா இருக்கணும்”
“என்னது பல்லு விளக்குறதுல முன்னுதாரணமா இதெல்லாம் அநியாயம்”
“ஏதோ இவ்வளவு நாள் செஞ்சிட்டீங்க இனிமே மாத்திக்கோங்க”
“மாத்த முடியாது”
“மாத்துறதும் மாத்தாதும் உங்க இஷ்டம் நான் எது சரியோ அதை சொன்னேன்”
“ஆடு மாடெல்லாம்…” என்று அவன் ஆரம்பிக்க “போதும் போதும் அந்த டயலாக் நானும் கேட்டிருக்கேன். அதுக்கெல்லாம் ஐந்தறிவு. இதெல்லாம் சொன்னாலும் புரியுமா சொல்லுங்க”
“டீச்சர் போதும் டீச்சர் நீங்க ரொம்ப கிளாஸ் எடுக்கறீங்க” என்றான் கிண்டலாய். அவளுடன் நேரிலேயே இப்போது தான் ஒழுங்காய் பேசவே ஆரம்பித்திருக்கிறான். போனில் பேச்சு வார்த்தை அவ்வளவு சகஜமாக வந்தது அவனுக்கு.
“நான் எதுவும் சொல்ல மாட்டேன் போங்க” என்றாள் அவளும் கோபித்துக் கொள்ளும் குரலில். அவளுக்குமே அவனிடத்தில் இப்படியான உரையாடல் இதுவரை இருந்ததில்லை.
எல்லாமே நல்லதிற்கு தான் என்று எடுத்துக்கொள்ளும் அருளாசினி இந்த பிரிவைக் கூட அப்படித்தான் எடுத்துக் கொண்டாள். இதோ ஆருத்ரனிற்கும் அவளுக்குமான ஒரு பிணைப்பை அது ஏற்படுத்துவதாய் தான் தோன்றியது அவளுக்கு.
“வேணாம் வேணாம் நீ சொல்லு. நீ சொல்றதை கேட்கறனோ இல்லையோ எனக்கு பிடிச்சிருக்கு. எனக்கு எடுத்துச்சொல்ல அம்மாவுக்கு அப்புறம் நீ தான் இருக்க,நீ சொல்லு” என்று அவன் சொல்லவும் அவளுக்கு கண்கள் கலங்கியது.
அவன் தாய்க்கு நிகராக தன்னையும் பார்ப்பது ஒரு நெகிழ்வை கொடுக்க கண்கள் நிறைந்து போனது. அவளையே பார்த்திருந்த அன்னப்பூரணி அதை கவனித்துவிட மகன் ஏதோ சொல்லிவிட்டான் போல என்று எண்ணி “போனை கொடு அருளு” என்று கேட்க இவளும் என்ன ஏதென்று கேட்காமல் அவரிடத்தில் கொடுத்துவிட்டாள்.
“ருத்ரா எதுக்குடா அருளை திட்டுற??”
“ம்மோவ் நான் எப்போ திட்டுனேன்??” என்றான் இவன் புரியாது.
“அப்போ அருளு கண்ணு கலங்குச்சேடா” என்றவர் மருமகளை பார்க்க அவள் இப்போது சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவரிடத்தில் கை நீட்டி போனை கேட்க அவரும் கொடுத்தார். அதை ஸ்பீக்கரில் போட்டவள் “ஒண்ணுமில்லைங்க கண்ணுல தூசி விழுந்திடுச்சு கண்ணு கலங்கிருச்சு அத்தை நீங்க தான் ஏதோ சொல்லிட்டீங்கன்னு பயந்துட்டாங்க”
“நீங்க வீட்டுக்கு வந்திட்டீங்களான்னுகேட்கத் தானே பண்ணேன். அப்புறம் பேசறேன்” என்று சொல்லி வைத்துவிட்டாள் அவள்.
“என்ன அருளு நிஜமாவே அவன் ஒண்ணும் உன்னை திட்டலை தானே”
“இல்லை அத்தை” என்றவள் அவர் அருகே வந்து “நான் உங்களை கட்டிக்கவா அத்தை” என்று கேட்க அவரோ விழித்து நின்றார்.
பேச்சு தான் அவருக்கு பெரிதாய் இருக்குமே தவிர எதையுமே மனதில் வைத்துக்கொள்ள தெரியாத மனிதர் அவர். அவர் ஒன்றும் சொல்லாமல் பார்க்கவும் அவரை கட்டிக்கொண்டாள். 
கண்கள் கலங்கி கண்ணீர் துளி அவர் மீதும் விழ “உண்மையை சொல்லு அருளு அவன் என்ன சொன்னான்”
“அத்தை நான் ஒண்ணு சொல்லவா”
“சொல்லுன்னு தானே சொல்றேன் இன்னைக்கு அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்”
“அடுத்த ஜென்மத்துல நீங்க எனக்கு அம்மா பிறந்திடுங்க ப்ளீஸ்” என்று அவள் சொல்லவும் ‘இவ என்ன சொல்றா’ என்று பார்த்தார் அவர்.
“உங்க பிள்ளை என்னை எதுவும் சொல்லலை. அம்மாக்கு அப்புறம் நீன்னு சொல்லிட்டு இருந்தார். அதை கேட்டு கண்ணு கலங்கிருச்சு. அதுக்கு போய் நீங்க அவரை திட்டிட்டீங்க” என்றாள் அவரிடம் குறைபடுவது போல்.
“நிஜமா தான் சொல்றியா அருளு. ருத்ரா அப்படியா சொன்னான்” என்றவரின் மனம் நிறைந்து போனது. மகன் ஏனோ தானோவென்று சுத்திக் கொண்டிருக்கிறானே என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு.
அவன் அந்த தொழிலுக்கு சென்ற பிறகு அவனிடத்தில் முரட்டுத்தனம் வந்திருந்தது. அதனாலேயே தான் அவனுக்கு பெண் பார்த்து மணமுடிக்க நினைத்திருந்தார். அவர் பெண் பார்க்க ஆரம்பித்த போது அவன் தொழிலை கேட்டுவிட்டு ஒருவரும் அவனுக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை.
இறுதியில் அஞ்சனாவின் வீட்டினர் தான் பெண் கொடுக்க முன் வந்திருந்தனர். அதுவும் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்திருக்க அதுவும் பெரும் பழிச் சொல்லோடு நின்றிருக்க வெகுவாய் துவண்டு போயிருந்தார் அவர்.
இதோ இந்த நொடி அவருக்குள் அப்படியொரு சந்தோசமும் நிறைவும். ஆருத்ரனும் அருளாசினியும் நன்றாகவே வாழ்வர் என்ற எண்ணம் அவருக்கு வலுப்பெற ஆரம்பித்தது.

Advertisement