Advertisement

21
அவன் அமர்ந்திருந்த தோற்றம் அவளுக்கு வருத்தத்தை கொடுக்க அதிகமாக பேசிவிட்டோம் என்று உண்மையாகவே உணர்ந்து அவனைப் பார்த்தாள்.
கதவை மெதுவாய் சாற்றிவிட்டு அவனை நோக்கிச் சென்றாள். “இங்க என்ன பண்றீங்க??”
“நீ எதுக்கு இங்க வந்தே உள்ளே போ…”
“இல்லை நான் பேசினது…”
அவளை பேசாதே என்பது போல் கை நீட்டியவன் “அதைப்பத்தி பேச வேணாம்” என்றான் இறுக்கத்துடன்.
சில நொடி அமைதியில் கழிய “மாடிக்கு போவோமா”
“இந்த நேரத்துலயா வேணாம்” என்று மறுத்தான்.
“ப்ளீஸ் ரொம்ப நாளாச்சு போகலாம் வாங்க” என்று அவன் கையை பிடிக்க வெம்மையாய் இருந்த அவன் மனதில் லேசாய் குளிர்ச்சி பரவ ஆரம்பித்தது. அவள் இழுப்பிற்கு அவனும் எழுந்து மேலே சென்றான். 
அவள் வீட்டிற்கு பின் புறம் காவிரி மெல்ல வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தாள். ஊரடங்கி நிசப்தமாய் இருந்ததால் ஓடிக்கொண்டிருந்த நீரின் சலசலப்பு துல்லியமாய் காதில் விழுந்தது. பௌர்ணமி முடிந்து வெண்ணிலா மெல்ல தேய ஆரம்பித்திருந்தாலும் அவள் ஒளியை நன்றாகவே பரவவிட்டிருந்தாள்.
நிலவுடன் துணையாக நட்சத்திரங்களும் பவனி வந்துக் கொண்டிருந்தது வான் வீதியில். அவள் அண்ணாந்து பார்த்து அதை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“பனியடிக்குது கீழே போகலாம்”
“ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்”
“உனக்கு ஒத்துக்கலைன்னா…”
“இங்கவே பிறந்து வளர்ந்தவளுக்கு இது ஒத்துக்காதா என்ன”
சரி கொஞ்ச நேரம் தானே இருக்கட்டும் என்று அவனும் விட்டுவிட்டான். அவளே மீண்டும் “நான் ரொம்ப பேசிட்டேன் வேணும்ன்னு எல்லாம் பேசலை” என்று மெல்ல ஆரம்பித்தாள்.
“அதைப்பத்தி எதுவும் பேச வேணாம்ன்னு அப்போவே சொன்னேன்ல”
“சரி பேசலை” என்றவளுக்கு அவன் எவ்வளவு வருந்தியிருக்கிறான் என்று புரிந்தது.
“கொஞ்சம் நேரம் இங்க உட்காருவோமே” என்று அவள் அமரப் போக “வேணாம் வேணாம் தரை சில்லுன்னு இருக்கு” என்றான்.
“நான் ஒரு தடவையாச்சும் இங்க நைட்ல வரணும்ன்னு நினைப்பேன். மொட்டை மாடியில படுத்திட்டு நட்சத்திரத்தை எண்ணிப் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை எனக்கு. அப்பா விடமாட்டாங்க ஒரு வேளை அம்மா இருந்திருந்தா விட்டிருப்பாங்களோன்னு தோணும்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க இவன் கீழே அமர்ந்தான்.
அவளும் அருகே அமரப் போக “அங்க இல்லை இங்க உட்காரு” என்று அவள் கைப்பிடித்து மடி மீது அமர்த்திக் கொண்டான். அத்தருணம் அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் இதமான உணர்வை கொடுத்தது, ஆழ்ந்து அனுபவித்தாள் அதை.
“வெயிட்டா இருக்கேனா”
“இருந்தாலும் தாங்கிக்க மாட்டேனா என்ன??”
“அப்போ வெயிட்டு தான்ல??”
“இல்லை பஞ்சு மாதிரி மென்மையா இருக்கே” என்றவனின் இரு கரமும் அவளை அணைத்துக் கொண்டு அவள் கையை மென்மையாய் வருடிக் கொடுத்தது.
“இங்க தான் நானும் அப்பாவும் பசங்களுக்கு டியூஷன் எடுப்போம். இருபது பேர்க்கு மேல வருவாங்க. அப்பா சயின்ஸ் நல்லா எடுப்பாங்க, நான் மேத்ஸ் எடுப்பேன். சின்ன வயசுல நானும் அப்பாகிட்ட தான் படிச்சேன்”
“அவங்க சொல்லிக்கொடுக்கறது அவ்வளவு ஈசியா இருக்கும். புக் எடுத்து படிக்கவே தேவையிருக்காது அவ்வளவு சுலபமா இருக்கும்”
“ஹ்ம்ம்…”
“ஆமா நீங்க என்ன படிச்சிருக்கீங்க??” என்றாள். அவன் படிப்பைப் பற்றி இதுவரை அவள் தெரிந்துக் கொண்டிருக்கவில்லை, இப்போது தான் கேட்கிறாள்.
“B. Tech.,”
“என்னது B. Tech.,ஆ!!”  என்றாள் ஆச்சரியமாய்.
“அப்புறம் ஏன் இந்த வேலை பார்க்கறீங்க??” என்று அவள் கேட்கவும் அவன் முகம் சுருக்கினான்.
“ஏன் என் வேலைக்கு என்ன??” என்றான் கடினமாய்.
“உங்க வேலையை தப்பா சொல்லலை. உங்களை எனக்கு தெரிஞ்சதே அந்த வேலையால தான். நான் கேட்க வந்தது இவ்வளவு படிச்சு இருக்கீங்க அந்த லைன்ல போகாம எப்படின்னு தான் கேட்க வந்தேன்” என்று அவள் விளக்கவும் தான் அவன் முகம் தெளிந்தது.
“அது ஒரு பெரிய கதை”
“தெரியும்… தெரியும்… அன்னைக்கு யார்கிட்டயோ சொல்லிட்டு இருந்தீங்க??”
“என்னைக்கு??” என்றவனிடம் அன்றைய நாளை அவள் நினைவு கூர்ந்தாள்.
“அது மட்டும் தான் காரணமா??”
“ஹ்ம்ம் ஆமா… சரி நான் இந்த தொழில் செய்யறது உனக்கு பிடிக்கலையா??”
“பிடிக்கும் பிடிக்காதுன்னு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை. எல்லாமே வேலை தானே எந்த வேலையும் எதுக்கும் குறைஞ்சது இல்லை. நீங்க ஏன் இப்படி கேட்கறீங்கன்னு புரியுது. நீங்க செய்யற இந்த வேலையை பத்தி எனக்கு எந்த குறைவான எண்ணமும் இல்லை”
“தேங்க்ஸ், கீழே போகலாமா??”
“இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ், கால் ரொம்ப வலிக்குதா” என்றவள் அவன் அதற்காக சொல்கிறானோ என்று எழப்போக “அதெல்லாம் இல்லை உட்காரு” என்று இன்னும் வசதியாய் சாய்த்துக் கொண்டான் அவளை.
அவனிடத்தில் பேசியதில் மனதில் சொல்லொணாத நிம்மதி அவளுக்கு. ஏதோவொரு உந்துதலில் எட்டி அவன் நெற்றியில் இதழ் பதித்துவிட அவன் முற்றிலும் குளிர்ந்திருந்தான்.
அவள் இடையில் கைக்கொடுத்து தன் மேல் நன்றாக சாய்த்துக் கொண்டு அவள் மீது அவனும் சாய்ந்துக் கொண்டிருந்தான்.
“என்னை பிடிச்சிருக்கா உனக்கு??”
மெல்ல விலகி அவன் முகம் பார்த்தாள். பழைய விஷயங்களின் தாக்கம் அவனிடத்தில் இன்னமும் இருந்தது என்பதை அது காட்டியது.
“நான் அந்த விஷயத்தை மனசுல வைச்சு கேக்கலை, நிஜமாவே தெரிஞ்சுக்க தான் கேக்கறேன். நான் இப்போ வந்து இதை கேட்கறது நியாயமே இல்லைன்னு எனக்கு தெரியும். உனக்கு எதுக்கும் நான் அவகாசமே கொடுக்கலை, உன்னோட சூழ்நிலையை எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்”
“எதுக்கு இதெல்லாம் பேசறீங்க?? என் சூழ்நிலையை சாதகமாக்கி நீங்க என்கிட்ட தப்பா நடந்துக்கலையே. ஒத்துக்கறேன் உங்களோட சூழ்நிலை என்கிட்ட அப்படி கேட்க வைச்சுது. ஆனா முடிவெடுக்கற உரிமை என்கிட்ட தானே இருந்துச்சு”
“எனக்கு வேண்டாம்ன்னா நான் அப்போவே சொல்லியிருப்பேன். எங்கயாச்சும் ஒரு இடத்துல எனக்கு பிடிக்கலைன்னு தோணியிருந்தா கூட நம்மோட கல்யாணம் நடந்திருக்காது. சோ இனிமே உங்களுக்கு அந்த குற்றவுணர்ச்சி எப்பவும் வேண்டாம். நீங்க என்னை கட்டாயப்படுத்தலை”
“கிடைச்சதை வைச்சுட்டு திருப்தியா இருக்கணும்ன்னு எங்கப்பா எப்பவும் சொல்வாங்க. இது இல்லையேன்னு பீல் பண்ணுறதை விட இருக்கறதை கொண்டு சந்தோசமா வாழக் கத்துக்கணும் சொல்வாங்க”
“உங்களை பிடிச்சிருக்கான்னு நீங்க கேட்டீங்க. அதுக்கு பதில் இப்போ எனக்கு சொல்லத் தெரியலை” என்று அவள் நிறுத்தவும் அவன் முகம் ஒரு நொடி சுருங்கி பின் சுதாரித்தது.
“நிச்சயமா நீங்க வேணாம்ன்னு எனக்கு எங்கயும் ஒரு நிமிஷம் கூட தோணலை. எல்லாரோட வாழ்க்கையும் பார்த்ததும் பிடிக்கிறதுல தான் தொடங்குது. நம்ம வாழ்க்கையை சூழ்நிலை தொடக்கி வைச்சிருச்சு. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா??”
“நீ இன்னும் பதில் சொல்லலை என்னை கேட்கறே??”
“சொல்லுங்க நானும் சொல்றேன்”
“நீ சொன்ன மாதிரி தான் எனக்கும் தெரியலை. ஏதோ ஒண்ணு உன்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேட்க வைச்சிடுச்சு. நான் ரொம்பவும் மனஉளைச்சல்ல இருந்தேன் அப்போ. என்ன தான் நான் கோர்ட்ல என்னை நிரூபிச்சு இருந்தாலும் அதை யாரும் நம்பலை”
“இவனுக்கு வசதி இருக்கு காசைக் கொடுத்து வாயடைச்சு இருப்பான்னு தான் பேசுனாங்க. அவங்க பேசுறது எல்லாம் நான் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டது இல்லை தான். ஆனாலும் மனசுல ஒரு ஆறாத வடுவை அது கொடுத்திடுச்சு”
“திரும்ப ஒரு கல்யாணம் என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை. வேணாம்ன்னு தான் இருந்தேன், மறுபடியும் ரிஸ்க் எடுக்க முடியும்ன்னு எனக்கு அப்போ தோணலை. எங்க போனாலும் என்னை சுத்தி அந்த பேச்சு மட்டும் ஓயவே இல்லை. நான் அப்படி இல்லைன்னு சத்தம் போட்டு சொல்லணும் போல தோணும்”
“ஒரு கட்டத்துக்கு மேல உங்களுக்கு ஏன் நான் என்னை நிரூப்பிக்கணும்ன்னு கடந்து போகலாம்ன்னா, என்னால முடியலை. அதுக்கு அம்மாவும் ஒரு காரணம். அவங்களுக்கு நான் நல்லா இருக்கறதை பார்க்கணும்ன்னு ஆசை”
“என்கிட்ட சொல்லவும் பயம், ஒரு தப்பு நடந்திடுச்சு அது தன்னாலன்னு அவங்களுக்கு குற்றவுணர்வு. உடம்பை ரொம்பவும் கெடுத்துக்கிட்டாங்க. பிபி, சுகர்ன்னு எல்லாமே வந்திடுச்சு. அன்னைக்கு உன்னை வீட்டில விட்டுட்டு எங்க வீட்டுக்கு போகவும் அம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க”
“டாக்டர்கிட்ட போனா பிபி அதிகமா இருக்கு என்ன யோசனை அவங்களுக்கு. பத்திரமா பார்த்துக்க மாட்டீங்களான்னு சத்தம் போட்டாங்க. எனக்காக இல்லைன்னாலும் அம்மாக்காகன்னு நினைச்சு தான் கல்யாணம் பண்ணணும்ன்னு யோசிச்சேன்”
“எனக்கு புரியுது அம்மாக்காகன்னு சொல்லிட்டு கண்டிப்பா குழந்தை பெத்துக்கணும்ன்னு ஏன் சொன்னேன்னு யோசிக்கற தானே. அம்மாக்காக கல்யாணம்ன்னு சொல்லிக்கிட்டாலும் என்னை தொடர்ந்த பேச்சு வார்த்தைக்கும் ஒரேதா முற்றுப்புள்ளி வைக்கணும்ன்னு நினைச்சேன்”
“என் முன்னாடியே பேசுறவங்க அம்மா முன்னாடி இன்னும் அதிகமே பேசியிருக்க மாட்டாங்களா என்ன. நாங்க நகை ஈடு செஞ்சது கூட என் குறையை மறைக்கன்னு தான் பேச்சு வந்துச்சு”
“எதையும் மறக்க முடியலை, இப்போ கூட என்னை அந்த பேச்சு துரத்திட்டு தான் இருக்கு. எல்லாம் சேர்ந்து நான் உன்னைத்தான் அதிகம் கஷ்டப்படுத்திட்டேன். அன்னைக்கு டாக்டர் ஆஸ்பிட்டல் என்னை கூப்பிட்டு பேசினப்போ எவ்வளவு மிருகமா நடந்திட்டேன்னு எனக்கு என்னைவே பிடிக்கலை”
“நான் அப்படி நடந்துக்கறவன் கிடையாது. யாராவது தப்புன்னு அடி தடின்னு கூட இறங்கியிருக்கேன். ஆனா இந்த மாதிரி நடந்தது அதுக்கு என்ன விளக்கம் கொடுத்தாலும் நடந்ததை மாத்த முடியாதுல”
“யார் மேலயோ இருந்த கோபத்தை உன்கிட்ட காட்டினது எவ்வளவு தப்பு. உண்மையை சொல்லு நிஜமாவே அன்னைக்கு உனக்கு என்னை திட்டணும்ன்னு தோணலையா. ஒரு சின்ன மறுப்பு கூட நீ சொல்லலை, இப்போ வரைக்கும் ஒரு வார்த்தை கூட நீ கேட்கலை என்னை. உனக்கு என் மேல கோபமே வரலையா??”
“இன்னொரு முறை இதே கேட்டா கண்டிப்பா எனக்கு கோபம் வந்திடும்ன்னு தான் தோணுது”
“என்ன”
“பின்ன மறக்க வேண்டிய விஷயத்தை ஏன் பிடிச்சிட்டு தொங்கறீங்க. அதைவிட்டு தள்ளுங்க”
“அப்படியே விட முடியலை, நான் நிஜமாவே எப்படின்னு அந்த நிமிஷம் தான் தோணுச்சு”
“நீங்க எப்படியும் இல்லை எதுக்கு தேவையில்லாம யோசிக்கறீங்க. வேணா நாம இப்படி செய்வோம்”
“எப்படி??”
“உங்களோட கோபத்தை என்கிட்ட அன்னைக்கு காட்டினீங்கல்ல. அது மாதிரி எனக்கு கோபம் வரும் போது நான் உங்ககிட்ட காட்டுறேன்”
“எப்படி??” என்றான் விஷமமாய் சிரித்துக் கொண்டே
“உங்களை மாதிரியே தான். உங்களை திட்டின டாக்டர் அதுக்கு அப்புறம் என்னையும் திட்டுவாங்க”
“என்னன்னு” என்றான் குறும்பு கூத்தாட, அந்த பேச்சு அவனை லேசாக்கியது.
“உங்க பொண்டாட்டி ரொம்ப மோசம்ன்னு உங்ககிட்ட சொல்வாங்க”
“ஹா ஹா… அப்படி நடந்தா நல்லா தான் இருக்கும்” என்றான் உற்சாகமாக.
“ஹ்ம்ம் இருக்கும் இருக்கும்… சிரிக்காதீங்க, நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை. என்னை பிடிச்சுருக்கான்னு கேட்டேன்”
“அதுக்கு எனக்கு பதில் தெரியலை அதான் இப்படி சுத்தி வளைச்சு சொல்லிட்டு இருந்தேன். உன் கூட இருக்கும் போது நிம்மதியான ஒரு பீலிங் எனக்கு. அது இதுக்கு முன்னாடி எனக்கு கிடைச்சதில்லை”
“கம்பேர் பண்றதா நினைக்க வேண்டாம். என் மனசுல நான் உணர்ந்த ஒரு விஷயம் அது, அதான் சொன்னேன். என்னை கேட்டே நீ கூட தான் என்னை பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லை”
“எனக்கும் தெரியலை, எங்கப்பா கூட இருக்கும் போது எப்படி இருந்தேனோ அதைவிட பாதுகாப்பாவும் நல்லாவும் இருக்கேன்”
“நான் சொன்னேன்னு நீயும் சொல்றியா??”
“உங்ககிட்ட பொய் சொல்ல எனக்கென்ன அவசியம்”
“பொய் சொன்னேன்னு சொல்லலை. என் மனசு நிம்மதிக்காக சொல்லியிருக்கலாம்ன்னு சொன்னேன்”
“நிச்சயமா இல்லை, இங்க இருக்க வரை அப்பாவும் நானும் மட்டும் தான். நம்ம வீட்டில நீங்க, அம்மா மாதிரி எனக்கொரு அத்தை இப்போ நம்ம குழந்தை எல்லாரும் இருக்கீங்க ரொம்ப நிறைவா உணர்றேன்”
“அன்னைக்கு ஆஸ்பிட்டல்ல வைச்சு உன்னைப் பார்த்தேன். அப்போ குழந்தை உண்டானது பத்தி உன் முகத்துல எந்தவொரு பீலிங்க்ஸ் தெரியலை”
“அது அப்படியில்லை நாள் தள்ளி போனதை கூட கவனிக்காம இருந்திருக்கேனேன்னு ரொம்ப அசிங்கமா போச்சு. இதுல டாக்டர் என்கிட்ட கேட்ட கேள்விக்கு எனக்கு பதிலே சொல்ல முடியலை,அதான் அப்படி இருந்தேன்”
“பாரு ரொம்ப நேரமாச்சு வா போய் படுக்கலாம்” என்றவன் அவளை எழுப்பப் போக “ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்” என்றாள்.
“உங்களுக்கு என் மேல கோபமில்லையே??”
“தெரியலை”
“இல்லைன்னு சொல்லலாம்ல”
“இருந்துச்சு இல்லைன்னு ஏன் பொய் சொல்லணும். இப்போ அது காணாம போச்சு”

Advertisement