Advertisement

20
திருச்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையை ஒருவித முகச்சுளிப்புடன் பார்த்துக் கொண்டே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான் ஆருத்ரன்.
அருளாசினி அவனருகில் இருந்த இருக்கையில் சாய்ந்து படுத்திருக்க அன்னப்பூரணி பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அருளாசினி அவள் வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள் அவள் கணவனிடம். அவள் சொன்ன வழி ஸ்ரீரங்கம் செல்லும் வழியாக இருக்க மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்.
“ஸ்ரீரங்கமா??”
“ஆமா…”
“அங்க எங்க??”
“மாம்பழச்சாலை”
“உங்களுக்கு தெரியுமா??”
“இல்லை தெரியாது…” என்றவன் ஏதோ யோசித்துக் கொண்டே வந்தான்.
இதோ அவளின் வீடும் வந்துவிட்டது, “இங்க தான் அப்படியே ஓரமா நிறுத்துங்க” என்று அவள் சொல்லவும் வண்டியை வாசலின் முன் நிறுத்தினான்.
அவள் முன்பே அவளின் தந்தையின் நண்பரிடம் சொல்லியிருந்தாள் அவள் வீட்டிற்கு திரும்ப வருவதாக. அங்கு அங்கு குடியிருப்பவர்களை முடிந்தால் வேறு வீடு மாறிக்கொள்ளச் சொல்லி கேட்டிருந்தாள்.
இவளின் நல்ல நேரம் அவர்கள் வீடு வாங்கியிருக்க பத்து நாட்களுக்கு முன்பு தான் வீட்டை காலி செய்திருந்தனர். அவளின் தந்தையின் நண்பருக்கு இவள் போன் செய்ய அவரும் அங்கு வந்திருந்தார்.
இவளின் திருமணம் பற்றி யாரிடமும் அவள் சொல்லியிருக்கவில்லை. அக்கம் பக்கம் இருப்போர் அவள் வந்து இறங்கவும் எட்டி பார்த்தனர்.
“வாங்க அங்கிள் ரொம்ப நேரமா பண்ணிட்டனே”
“அதெல்லாம் இல்லைம்மா இந்தா சாவி…” என்று அவளிடம் நீட்டினார்.
“உங்கப்பா இங்க இருந்து போனவன் தான் திரும்பி வராமலே போய்டானேமா. திரும்பவும் பார்க்க முடியாம போய்டுவோம்ன்னு தெரிஞ்சு தான் அன்னைக்கு என்கிட்ட அவ்வளவு நேரம் பேசிட்டு போனானோ என்னவோ” என்று அவர் கண்கள் கலங்க பேச இவளின் விழிகளிலும் நீர் அரும்பியது.
“சரிம்மா நீ உள்ள போ…” என்றவர் “தம்பி யாரு??” என்று கேட்க அப்போது தான் நினைவு வந்தவளாய் “என்னோட ஹஸ்பன்ட் பேரு ஆருத்ரன், இவங்க என்னோட அத்தை” என்று அறிமுகம் செய்ய அப்படியே நின்றுவிட்டார் அவர்.
“உங்கப்பா இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே??”
“அதெல்லாம் பெரிய கதை அங்கிள் இங்க வைச்சு பேச எனக்கு விருப்பமில்லை”
“இருந்தாலும் யாருக்குமே ஒரு வார்த்தை சொல்லலையேம்மா??”
“நடந்தது எதையும் மாத்தமுடியாது அங்கிள். எனக்குன்னு யாரு இருக்கா எல்லாருக்கும் சொல்லிட்டு செய்ய”
“ஏன்மா நான் இல்லையா??”
“நீங்களும் அதுல விதிவிலக்கு இல்லையே அங்கிள்”
“எங்கப்பாக்கு நீங்க ரொம்ப வருஷ பிரண்டுன்னு எனக்கு தெரியும். ஆனா உங்களைப் பத்தி எனக்கு இப்போ தான் கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும் அங்கிள்”
“என்னம்மா சொல்றே??”
“வேணாம் அங்கிள் அதெல்லாம் பேச வேணாம். நீங்க என்ன பண்ணீங்கன்னு குத்திக்காட்ட நான் இங்க வரலை. ரொம்ப நன்றி அங்கிள் வீட்டோட சாவியை பத்திரமா வாங்கிக் கொடுத்ததுக்கு”

“கல்யாணம் ஆகி முத முதல்லா வீட்டுக்கு போறோம். ரொம்ப  நேரமா அவங்க என்னோட நிக்கறாங்க நான் கிளம்பறோம்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டாள் அவள்.
“என்ன ப்ரோப்ளம்??” என்றான் ஆருத்ரன் அருகே வந்து.
“ஒண்ணுமில்லை நீங்க வாங்க” என்றவள் கதவை திறக்க வீடு தூசியாய் இருந்தது. 
“அருளு ஒரே தூசியா இருக்கு. வீடு சுத்தம் பண்ணாமலே விட்டுட்டாங்களா. நீ வர்றேன்னு சொன்னே தானே…”
“சொன்னேன் அத்தை…”
“நீ இரு நான் சுத்தம் பண்றேன்” என்றவர் உள்ளே செல்லப் போக”அத்தை இருங்க நானும் வர்றேன்” என்றாள் அவள்.
“நீ பேசாம இரு நான் பார்த்துக்கறேன்” என்றவர் மகனிடம் தேவையானது எல்லாம் வாங்கி வரச்சொல்லி அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டை சுத்தம் செய்து முடித்திருந்தார்.
“வீட்டில எந்த பொருளும் இல்லையே??”
“எல்லாமே இங்க இருக்க இன்னொரு ரூம்ல இருக்கு அத்தை” என்றவள் பின்னால் இருந்த அந்த அறையை திறக்க சற்று பெரிய அறையாகவே இருந்த அந்த அறையில் முக்கிய பொருட்கள் எல்லாம் வைத்திருந்தனர்.
ஆருத்ரன் ஒற்றை ஆளாக எல்லாம் கொண்டு வந்து ஒழுங்குப்படுத்தி வைத்தான்.
“அம்மா நான் போய் புது கட்டில் வாங்கிட்டு வர்றேன்” என்று அவன் கிளம்ப “இல்லை அதெல்லாம் வேணாம் இங்க கட்டில் இருக்கு”
“புதுசு வாங்கிடறேன் ரொம்ப நாளா யூஸ் பண்ணாம இருக்குல அது வேணாமே. அந்த பழைய கட்டில் அம்மா யூஸ் பண்ணிக்கட்டும். மெத்தை புதுசா வாங்கிட்டு வந்திடறேன் அதுக்கும்” என்று முடித்தவன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
இரவுக்குள் எல்லாம் செய்து முடித்திருக்க ஒருவழியாய் உணவருந்தி படுத்தனர். அது பழைய வீடாக இருந்தாலும் புதிதாய் நிறைய மாற்றங்களை செய்திருந்தார் அருளாசினியின் தந்தை.
இருந்தாலும் அறைக்கதவு எல்லாம் பழைய மரக்கதவுகளே. நல்ல அழுத்தமாய் இருந்தது. அறைக்குள் வந்து கதவடைத்து அவள் படுக்கையில் அமர ஆருத்ரன் விட்டத்தை வெறித்து படுத்திருந்தான்.
அவனுக்கு அவளின் மேல் இன்னமும் வருத்தமிருந்தது. காயத்ரி அவளின் வேலைக்கான உத்தரவை கொண்டு வந்து கொடுத்த போது அவனுக்கும் கொஞ்சம் சந்தோசம் தான் அவள் விரும்பியது போல வேலை கிடைத்துவிட்டது என்று. ஆனால் அது ஓரிரு நிமிடம் தான் அருளாசினி அவனிடத்தில் அந்த உத்தரவை காண்பித்த போது எல்லாம் வடிந்து போன உணர்வு அவனுக்கு.
பின்னே வேலை அவளின் சொந்த ஊருக்கு மாற்றலாகி இருந்ததே. “இதென்ன திருச்சின்னு போட்டிருக்கு”
“ஆமா அங்க தான் கிடைச்சிருக்கு. எங்கப்பாவோட வேலை எங்களோட சொந்த ஊர்ல, எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றாள்.
“அவ்வளவு தூரம் எல்லாம் போக வேணாம்” என்று அவன் நினைத்ததை சொல்லிவிட்டான்.
அவள் முகம் கூம்பிவிட அன்னப்பூரணிக்கு என்னவோ போலானது. “ருத்ரா எதுக்கு அப்படி சொல்றே??”
“ம்மா அந்த ஊரு என்ன பக்கத்துலவா இருக்கு. தூரம்மா இப்போ அவ இருக்கற நிலையில அங்க போயே ஆகணுமா சொல்லுங்க”
“மாசமா இருக்கவங்க வேலைக்கே போறதில்லையா என்ன??”
“நான் அப்படி சொல்லலைம்மா” என்றவன் மனைவியின் முகம் பார்த்து மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் போ என்று மட்டும் அவன் சொல்லவேயில்லை.
இரண்டு நாட்களாய் அவளிடம் பாராமுகம் வேறு காட்ட அருளாசினிக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு மாதிரி வெறுத்த மனநிலை. ‘எனக்காக ஒன்றும் அவன் சொல்லவில்லையே, இதுவும் பிள்ளைக்காக தானே’ என்று தான் அவளை யோசிக்க வைத்தது.
அவளுக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. அவள் தந்தையின் வேலை என்பது ஒரு புறம் என்றாலும் அவள் பிறந்து வளர்ந்த வீடு அங்கிருக்கிறது. அன்னையை அவள் பார்த்தில்லை என்பதால் அந்த வீட்டை தான் அவள் அன்னையாக பாவித்தாள் அக்கணம்.
இது போன்ற நேரத்தில் தாயைத் தானே தேடுவர். அது போலவே தான் அவளுக்கும் அவள் மனம் தாய் வீட்டைத் தேடியது.
ஆருத்ரனிடம் பிடிவாதமாய் கேட்டு முதல் முறை போல உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதிக்க அவளுக்கு துளியும் விருப்பமில்லை.
இப்படி ஒவ்வொன்றுக்காய் போராடித்தான் பெற வேண்டுமா என்ற சலிப்பு வந்தது. இப்படியே போனால் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இராதே. ஒருவர் மீது ஒருவர் மனஸ்தாபத்துடன் தான் இருக்க வேண்டும்.
ஏற்கனவே இருவருக்குள்ளும் அப்படியொன்றும் பெரிதாய் விருப்பமென்பது இல்லை. இது போல விஷயங்கள் இன்னும் பெரிதாய் விலகலை ஏற்படுத்தும் என்றே அமைதி காத்தாள்.
தன் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள எண்ணமில்லை அவளுக்கு. ஆருத்ரன் ஒன்றும் கெட்டவனில்லை அவன் எண்ணப்போக்கும் அவளின் எண்ணப்போக்கும் வேறு வேறு என்றறிவாள். அதனால் தான் இந்த புரிதலின்மை என்பதும் உணர்ந்திருந்தாள்.
அவளாகவே ஏதேதோ யோசித்து பெரும் மனவுளைச்சலாகிப் போனது அவளுக்கு. அதன் பொருட்டு தான் மூன்றாம் நாள் காலையில் அவனிடம் அப்படி பேசிவிட்டிருந்தாள்.
ஆருத்ரன் இன்னமும் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. திருச்சி செல்வதற்கு இப்போது வரை அவன் சரியென்றும் சொல்லியிருக்கவில்லை. இவள் குளித்து பள்ளிச் செல்ல தயாராகி நின்றிருக்க அப்போது தான் எழுந்திருந்தான்.
“சாரி தூங்கிட்டேன், நீ போய் சாப்பிடு அதுக்குள்ளே குளிச்சிட்டு வந்திடறேன்”
“வேணாம் நானே போய்க்குவேன்” என்றவளை முறைத்தான்.
“நிஜம் தான் நானே போய்க்குவேன் ஆட்டோ அண்ணா தான் வர்றார்ல”
“சொன்னா கேட்கணும் தேவையில்லாம அடம் பிடிக்காதே”
“கவலைப்படாதீங்க உங்க பிள்ளையை நான் பத்திரமா தான் பார்த்துக்குவேன்” என்று அவள் சொல்லிவிட அவன் கண்கள் சிவந்துவிட “என்னே சொன்னே??” என்றான் ஆத்திரமாய்.
“எதுக்கு டென்ஷன் ஆகறீங்க?? நான் சொன்னது தானே உண்மை. நீங்க அதுக்காக தானே என் கூட வர்றீங்க. இப்போ கூட நான் திருச்சி போக சம்மதம் சொல்லாம இருக்கறதும் அதுக்காகத் தானே…”
“உங்க பிள்ளையை நான் நல்லபடியா பெத்துக் கொடுப்பேன் நீங்க நம்பலாம்”
“இப்போ என்ன உனக்கு நீ திருச்சி போகணும் அவ்வளவு தானே. சரி போ… நான் எதுவும் கேட்க மாட்டேன்”
“நீங்க போனா போகுதுன்னு சொல்லத் தேவையில்லை” என்று அவள் சொல்லவும் அவனுக்கு இன்னும் எரிச்சலானது.
“ஆமா நான் போனா போகுதுன்னு தான் சொல்றேன்னே வைச்சுக்கோ. இப்போ என்ன அதுக்கு, உனக்கு போகணும்ன்னு விருப்பம் எனக்கு வேணாம்ன்னு தோணுச்சு. அதை நான் சொல்லக் கூடாதா”
“நான் உன்னை போகச் சொல்லிட்டேன், இனி நீ போறதும் போகாததும் உன் விருப்பம். நீ போறதுன்னா சொல்லு தேவையான ஏற்பாட்டை பண்றேன்” என்று முடித்திருந்தான். அவள் ஊருக்கு செல்ல விரும்புவதை அன்னப்பூரணி தான் ஆரம்பித்தார்.
அவளாக அவனிடத்தில் எதுவும் சொல்லவில்லை. திருச்சிக்கும் வந்துவிட்டிருந்தனர். வண்டி வாங்க வேண்டும் என்று தன் அன்னையிடம் சொல்லியிருந்தவன் சொன்னது போலவே அதை வாங்கிவிட்டுமிருந்தான்.
புது வண்டிக்கு பூஜை போட்டு முதன் முதலாய் வெளியூர் பயணம் செய்து வந்திருந்தனர்.
“பால் குடிக்கறீங்களா??” என்ற மனைவியின் குரலில் கலைந்தான். 
அன்றைக்கு பிறகு இருவரும் அதிகம் பேசிக் கொண்டிருக்கவில்லை. எப்போதும் பெரிதாய் இருவருக்குள்ளும் பேச்சு என்பது இல்லை தான் என்றாலும் அது முற்றிலும் குறைந்திருந்தது.
“வேணாம்”
“சரியா சாப்பிடலை நீங்க??”
“என்னைப்பத்தி நீ எதுக்கு கவலைப்படுறே??”
“வேற யாரு கவலைப்படணும்”
“நான் தான் பிள்ளைக்காக பேசுறேன்னு சொன்னல்ல. அப்புறம் புதுசா எதுக்கு அக்கறை உனக்கு”
“பிள்ளையோட அப்பா நீங்க அப்படிங்கறதுனால இந்த அக்கறை வந்திருக்கலாம்” என்ற பதில் உறங்கியிருந்த அவன் கோபத்தை கிளறியது.
சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டான். அதிகமா பேசிட்டமோ என்று அவளுக்கு சங்கடமாகிப் போனது. வேண்டுமென்று அவள் ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் வார்த்தை வந்துவிட்டது, அவன் என்ன அவள் மீதான அக்கறையிலா அவளை கவனித்தான்.
பிள்ளை மீது உள்ள கரிசனையால் வந்தது தான் அதெல்லாமே. அதை சொல்லிக்காட்ட வேண்டும் என்று நினைக்காது போனாலும் மீண்டும் ஒரு முறை சொல்லியே விட்டிருந்தாள்.
சரி தப்பு யோசிக்க முடியவில்லை செல்லும் அவனை தடுக்க எண்ணி வேகமாய் வாசலுக்கு வர நல்ல வேளையாய் அவன் எங்கும் சென்றிருக்கவில்லை. மாடிக்கு செல்லும் படியில் தான் அமர்ந்திருந்தான் தலையில் கையை வைத்தவாறே…

Advertisement