Advertisement

2
அருளாசினியை விடியும் வேளையில் தான் உறங்கவிட்டிருந்தான் அவள் கணவன் ஆருத்ரன். ஆனாலும் எப்போதும் விழிக்கும் நேரத்திற்கு தன்னைப் போல அவள் கண்கள் திறந்தாள்.
எழுந்திருக்க முயல ருத்ரனின் கரம் அவள் இடையில் அழுத்தமாய் விழுந்திருந்தது. அதை தள்ள அவள் முயற்சிக்க அசைக்க முடியவில்லை அவளால்.
உழைத்து உரமேறியிருந்த கரங்கள் அவனது. நன்றாய் காய்ப்பு காய்ச்சி சொரசொரவென்றிருந்தது. மீண்டும் அவன் கையை அவள் தள்ளப் போக அவனாகவே திரும்பி படுக்கும் போது கையை எடுத்திருந்தான்.
பெருமூச்சுடன் அவள் எழுந்து குளியலறை புகுந்தாள். குளித்து வெளியில் வந்தவள் கதவை திறந்து வெளியே வர மருமகளின் வரவிற்காய் அறைக்கதவையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த அன்னப்பூரணியின் விழிகள் அவளை திருப்தியாய் பார்த்துக் கொண்டது.
“இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்டே, எப்பவும் இப்படித்தானா??”
“ஹ்ம்ம் ஆமா அத்தை”
“கொஞ்சம் நிறைய கூட பேசலாம். ஹ்ம்ம் ஹான் ஆமா இதைத்தவிர எதுவும் பேச மாட்டேங்கறியே??” என்ற அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றிருந்தாள்.
“பால் இன்னும் வரலை இனிமே தான் வரும். உனக்கு வேணும்னா ப்ரிட்ஜ்ல ஒரு கவர் இருக்கும் காபி போட்டு குடிச்சுக்க” என்றார் அவர்.
“உங்களுக்கும் போட்டு கொடுக்கவா அத்தை”
“எனக்கு வேணாம்மா நானும் அவனும் பசும்பால்ல தான் காபி போட்டு குடிப்போம். கொஞ்ச நேரத்துல லோகு கொண்டு வந்து கொடுப்பான், அப்போ குடிச்சுக்கறேன்” என்றுவிட்டார் அவர்.
அவள் தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தாள். தனக்கு மட்டுமாக பாலை காய்ச்சி காபி போட்டு அங்கேயே நின்று குடித்து முடித்து கழுவி வைத்து வெளியில் வந்தாள்.
வெளி வாயிலில் ஏதோ சத்தம் கேட்க பூரணி எழுந்துச் சென்றார். திரும்பி வரும் போது கையில் தூக்கு ஒன்று இருந்தது.
“பாலு வந்திருச்சு காப்பி போட்டு கொண்டாறியா. உன் புருஷனுக்கும் சேர்த்து போடு, அவனுக்கும் கொண்டு கொடு” என்றுவிட்டு அங்கிருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டார் அவர்.
அவள் செல்லாமல் அங்கேயே தயங்கி நிற்க “ஏதாச்சும் கேட்கணுமா??” என்றார் அவள் நிற்பதை பார்த்து.
“டிபன்??”
“அதை வாங்கிட்டு வரச்சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல வந்திடும்” என்றுவிட்டு அவ்வளவு தான் என்பது போல அவர் பேச்சை முடித்துக் கொண்டு கணக்கு நோட்டு ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் காபியுடன் வந்தாள். அதை வாங்கி ஒரு மிடறு விழுங்கியவர் “ஹ்ம்ம் நல்லாத்தான் போட்டிருக்கா” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
“என்னையவே ஏன் பார்த்திட்டு நிக்கறே. அவனுக்கு கொண்டு போய் கொடு” என்றார்.
காபியுடன் அவள் அறைக்குள் நுழைய ருத்ரன் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான். வெளியில் இருந்த பூரணி “தூங்கிட்டு இருக்கான்னு எழுப்பாம இருக்காதே, எழுப்பி கொடு. இல்லைன்னா திட்டுவான்…” என்றார்.
அங்கிருந்த மேஜையில் காபியை வைத்தவள் திமிங்கலம் போல் கட்டிலில் படுத்திருந்தவனின் அருகில் நெருங்கினாள்.
அவனை என்ன சொல்லி எழுப்ப என்று புரியவில்லை அவளுக்கு. “எழுந்திருங்க” என்று அவன் தோளை மெதுவாய் உலுக்கினாள்.
அது சற்றும் அவனை அசைத்திருக்கவில்லை. எனக்கென்ன என்பது போல படுத்திருந்தான். “காபி சூடா இருக்கு எழுந்து பல்லு விளக்கிட்டு குடிங்க, எழுந்திருங்க” என்று அவன் காதருகில் குனிந்து அவள் சத்தமாய் சொல்லியிருக்க கண் விழித்து பார்த்தான்.
“காபி குடிக்கறது நான் எதுக்கு பல்லு விளக்கணும்” என்றவாறே எழுந்து அமர பே என்று விழித்தாள் அவள்.
“அந்த காபியை எடுன்னு சொன்னா தான் எடுப்பியா” என்று அவன் சொல்ல அதை எடுத்துக் கொடுத்தாள்.
ஒரே மடக்கில் அதை வாங்கிக் குடித்தவன் “டைம் என்ன??” என்றான் அவளிடத்தில். அவள் சுற்று முற்றும் பார்த்தாள். பின் “தெரியலையே”
“போன் இல்லையா??”
“இல்லை…”
“என் போனு அந்த ஷெல்ப்ல சார்ஜ் போட்டிருக்கேன் அதை எடுத்திட்டு வா” என்று சொல்ல அதை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள் “மணி ஏழாகுது” என்றவாறே.
“ஏழு தானா… அப்போ கொஞ்ச நேரம் தூங்கறேன் என்னை ஒன்பது மணிக்கு எழுப்பிவிடு…” என்றுவிட்டு மீண்டும் அவன் படுக்கப் போக வெளியில் இருந்து தன் வெண்கல குரலை திறந்தார் அவன் அன்னை அன்னப்பூரணி.
“ருத்ரா திரும்ப படுத்து தூங்காத நேரமாவுது பாரு… ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வாங்க”
“அம்மா எப்போ போகணும்ன்னு எனக்கு தெரியும் நீ சும்மா இரும்மா” என்றவன் மீண்டும் படுத்துக்கொண்டான் “ஒன்பது மணிக்கு எழுப்பு” என்று ஞாபகப்படுத்திவிட்டு.
அறையை சாற்றிவிட்டு வெளியில் வந்தாள் அருளாசினி. “என்ன படிச்சிருக்கே??” என்றார் பூரணி.
“B.Ed.,” என்றாள் அவள்.
“என்ஜினியருக்கா படிச்சிருக்க??”
“இல்லை டீச்சருக்கு”
“ஹான்…” என்றவர் “படிச்சிருக்க தானே இந்த கணக்கை கொஞ்சம் பாரேன். எத்தனை முறை கூட்டினாலும் ரெண்டாயிரம் ரூவா இடிக்குது” என்றுவிட்டு அவர் பார்த்துக் கொண்டிருந்த நோட்டை அவளிடம் நீட்டினார்.
அதை வாங்கி கணக்கை சரிபார்த்தவள் “சரியா தானே இருக்கு” என்றாள்.
“எனக்கு உதைக்குதே, இதுல ரூவா இருக்கு. அதுல வர்றதும் இதும் சரியா இருக்கான்னு பாரு” என்றவர் காசு இருந்த பெட்டியை அவளிடம் நீட்டினார்.
அதை வாங்கி எண்ணியவள் “சரியா இருக்கு” என்றாள் மீண்டும்.
பூரணி அதை வாங்கியவர் மீண்டும் கூட்ட “இல்லையே இதுல ரெண்டாயிரம் ரூவா அதிகமா காட்டுதே. கீழ தப்பா கணக்கு கூட்டல் போட்டு வைச்சிருக்கானுங்க” என்றார்.
“சரியா தான் இருக்கு அத்தை” என்றவள் அவர் முன்பே ஒவ்வொன்றையும் கூட்டிச் சொல்ல சொல்ல கவனித்துக் கொண்டே வந்தார் அவர்.
“இது எட்டாயிரம் ரூவா தானே”
“இல்லைத்தை ஆறாயிரம்… எழுதும் போது அவசரமா எழுதியிருப்பாங்க போல,எட்டாயிரமா தெரியுது. அதுக்காக தான் இங்க இங்கிலீஷ்ல வேற எழுதி இருக்காங்க எவ்வளவு ரூபான்னு” என்று அவள் சொல்ல “ஓ அப்போ கணக்கு சரியா தான் இருக்கு” என்றுவிட்டு அந்த நோட்டையும் பெட்டியையும் எடுத்துக்கொண்டு அவர் அறைக்கு சென்றார்.
நேரம் செல்வேனா என்று நகர “ம்மோவ்… ம்மோவ்” என்ற குரல் கேட்க மாமியாரின் அறையை எட்டிப்பார்த்தாள் அவள். அது அடைத்திருக்கவே தானே எழுந்து வெளியில் சென்றாள்.
“அண்ணியா வாங்க அண்ணி… டிபன் கொண்டு வந்திருக்கேன், அம்மா வாங்கியாற சொல்லிச்சி, கொடுத்திருங்க” என்றுவிட்டு அந்த லோகு என்பவன் நகர “காசு??”
“அம்மா அப்போவே கொடுத்திருச்சு” என்றவன் திரும்பிப் போக பாதியில் நின்றவன் “அண்ணன்??” என்றான் கேள்வியாய்.
“தூங்குறாங்க…”
“ஓ!! சரியண்ணி” என்றுவிட்டு நகர்ந்தான்.
“எதுவும் சொல்லணுமா??”
“கார்த்திக் பாட்டியை நல்ல முறையா அடக்கம் பண்ணியாச்சுன்னு சொல்லிருங்க அண்ணி” என்றுவிட்டு சென்றுவிட்டான்.
உள்ளே அவள் வரவும் பூரணி அறையில் இருந்து வெளியே வந்திருந்தார். “யாரு லோகு வந்தானா. என்னை பார்க்காமலே போய்ட்டான், இருக்கு அவனுக்கு” என்றார்.
“நீயாச்சும் என்னை கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே” என்றார் மருமகளிடம் திரும்பி.
“இல்லை நீங்க உள்ள இருந்தீங்க ரூம் பூட்டி இருந்துச்சு அதான்…”
“பூட்டியிருந்தா தட்ட வேண்டியது தானே… இதெல்லாமா சொல்லணும், சரி சரி இதை எடுத்திட்டு போய் உள்ள வை. நான் இப்போ தான் மாத்திரை போட்டேன், ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்து சாப்பிடறேன்”
“நீ போய் உன் புருஷனை எழுப்பு…”
“இல்லை அவங்க ஒன்பது மணிக்கு தான் எழுப்பச் சொன்னாங்க…”
“அப்படித்தான் சொல்வான் கோவிலுக்கு போகணும்  நேரமாச்சுன்னு சொல்லு. அவன் எழுந்து குளிச்சு சாப்பிடவே சரியா இருக்கும்” என்றுவிட்டு மீண்டும் அவர் அறைக்குள் சென்றுவிட்டார்.
அவள் அறைக்குள் நுழைய ஆருத்ரன் குப்புற படுத்திருந்தான் இரு கைகளும் இரு புறமும் பறவை போல விரித்து படுத்திருந்தான்.
“என்னங்க…” என்று அவள் சொல்லும் போதே அவள் புறம் திரும்பியவன் “எழுந்திட்டேன் அப்போவே, குரலா அது என்னத்தை முழுங்குச்சு எங்கம்மான்னு தெரியலை” என்றவன் எழுந்திருந்தான் இப்போது.
“குளிச்சுட்டு வர்றேன் டிபன் எடுத்து வை…”
“ஹ்ம்ம்…”
“யாராச்சும் போன் பண்ணாங்களா” என்றான் துண்டுடன் குளியலறை நுழையும் முன்.
“தெரியலையே”
“போன் எங்கே??”
“மறுபடியும் அங்கேயே வைச்சுட்டேனே”
லேசாய் தலையில் அடித்துக்கொண்டவன் உள்ளே செல்லப் போக ஞாபகம் வந்தவளாக “ஒரு நிமிஷம்” எனவும் நின்று அவளை திரும்பி பார்த்தான்.
“ஒருத்தர் வந்தார் கார்த்திக் பாட்டியை நல்லபடியா அடக்கம் பண்ணிட்டாங்கன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு”
“யாரு லோகுவா??”
“இருக்கலாம்”
“இது ஒரு பதிலா”

“எனக்கு அவர் யாருன்னு தெரியாதே…”
“அது சரித்தான்” என்றவாறே குளியலறை புகுந்தான் அவன்.
அவன் வெளியில் வரும் வரை அங்கேயே அமர்ந்திருந்தாள். “பட்டுப்புடவை எடுத்து கட்டிக்கோ கோவிலுக்கு கிளம்பணும்”
“என்கிட்ட வேற பட்டுப்புடவை இல்லையே??”
“அந்த பீரோவை திற அதுல உனக்கு வேண்டிய துணிமணி எல்லாம் இருக்கும்” என்று கைக்காட்டினான் அவன்.
“அது… அது எனக்கு வேணாம்”
“ஏன்??”
“அது எனக்காக வாங்கினது இல்லை”
“உனக்காக வாங்கினது தான். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி கொடுத்தா நீ வாங்கிக்க மாட்டேன்னு தான் அப்போ கொடுக்கலை. எல்லாத்துக்கும் அளவு பிளவுஸ் நீ கொடுத்தது வைச்சு பிளவுசும் தைச்சு தான் வைச்சிருக்கு”
“இப்போவாச்சும் நம்புறியா அது உன்னோடது தான்னு. வேற யாரு உடுப்பையோ எல்லாம் உன்னை போட சொல்லலை…”
“இல்லை நான் அதுக்காக சொல்லலை…”
“எனக்கு தெரியும் கிளம்பு நான் வெளிய போறேன்” என்றவன் அவளிடம் பேசிக்கொண்டே உடுப்பை மாட்டியிருந்தான்.
மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம் அவனுக்கு. ஆள் நன்றாய் உயரமாய் வளர்ந்திருந்தான், உடம்புக்கு ஏற்ற கட்டுடல் அவனுக்கு. முகத்தில் எப்போதும் ஒரு இறுக்கம், அவன் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பை யாரும் கண்டதில்லை, அவனும் சிரித்ததில்லை.
“என்னை எதுக்கு பார்த்திட்டு நிக்கறே??” என்று அவன் சொல்லவும் தான் பார்வையை வேறு புறம் திருப்பினாள்.
“சீக்கிரம் மாத்திட்டு வா…” என்றுவிட்டு வெளியேறிவிட்டான்.
இதோ காலை உணவு முடித்து இருவரும் கோவிலுக்கு வந்துவிட்டனர். கடவுளை தொழுது அவர்கள் பிரகாரத்தின் ஒரு ஓரத்தில் வந்து அமர கோவிலுக்குள் நுழைந்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை முதலில் அவன் கண்டுக்கொள்ளவும் தன்னைப் போல அவன் உடலில் அப்படியொரு இறுக்கம் வந்தமர்ந்தது.
அவளும் இவனை கண்டுவிட இவர்களை நோக்கித்தான் வந்தாள். “கடைசியில ஒரு ஆளை பிடிச்சிட்ட போல, இவ தானா” என்றவள் அருளாசினியை மேலிருந்து கீழாக பார்த்தாள்.
“இவளையாச்சும் சந்தோசமா வைச்சிருப்பியா??” என்று அவனைப் பார்த்து கேட்க அவன் கை முஷ்டி இறுகியது. 
“அதைப்பத்தி உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றான் அவன்.
“பாரப்பா ரொம்ப தான்… அப்புறம் வேற யார்கிட்ட சொல்லுவியாம்??”
“என் பொண்டாட்டியை உன்கிட்ட காட்டத்தான் கூட்டிட்டு வந்தேன்”
“நான் யார்ன்னு சொன்னியா அவகிட்ட”
“இரு இரு நானே சொல்றேன்” என்றவள் “நானும் இவனோட பொண்டாட்டி தான், ஆனா இப்போ இல்லை” என்றாள் அவனின் முதல் மனைவி அஞ்சனா இகழ்ச்சியாக.

Advertisement