Advertisement

19
ஆருத்ரனின் கைபேசி ஒலியெழுப்பி கொண்டிருந்தது. அதை அவன் வைபிரேட் மோடில் வைத்திருந்தான். அது அந்த ஏரியா கவுன்சிலரின் வீடு. கவுன்சிலரின் அம்மா தவறியிருந்தார்.
அதற்குண்டான ஏற்பாட்டைத்தான் அவன் கவனித்துக் கொண்டிருந்தான். பேன்ட் வாத்திய சத்தம் காதை கிழிக்க அவன் போன் வைபிரேட் சத்தம் கூட அவனுக்கு கேட்கவில்லை. 
ஒருவாறு சத்தம் ஓய அடுத்து ஒப்பாரி சத்தம் கேட்க ஆரம்பித்த வேளையில் தான் அவன் போனையே கவனித்தான். அப்போது சரியாய் அழைப்பு நின்று போயிருக்க யாரென்று பார்க்க அவன் மனைவி தான் அழைத்திருந்தாள்.
இந்த நேரத்தில் அழைத்திருக்கிறாளே என்று உடனே அவளுக்கு அழைக்க “ஹலோ” என்றது எதிர்முனை.
“கால் பண்ணியிருந்தியா??”
“ஹ்ம்ம்…”
“சொல்லு…”
“கொஞ்சம் என் ஸ்கூல் வரைக்கும் வர முடியுமா??”
“என்னாச்சு எதுவும் பிரச்சனையா. உடம்புக்கு எதுவும் செய்யுதா??” என்றான் பதட்டமாக.
“இல்லையில்லை அதெல்லாம் ஒண்ணும்மில்லை”
“என்னன்னு சொல்லேன்”
“அத்தை வந்திருக்காங்க”
“அம்மாவா எதுக்கு??”
“இல்லை காயத்ரி அத்தை” என்று சொல்லவும் யோசனையானான்.
“என்னவாம்??”
“தெரியலை”
“நீ என்னனு கேட்கலையா??”
“இல்லை கேட்கலை. அவங்க வந்திருக்காங்கன்னு சொன்னாங்க, உடனே உங்களுக்கு போன் பண்றேன்”
“நான் உடனே வர முடியாதே. வீட்டுக்கு போய் குளிச்சுட்டு தான் வர முடியும்” என்றவன் மறுமுனையில் யோசிப்பது புரிந்தது இவளுக்கு.
“ஓகே ஒண்ணு பண்ணு நீ அவங்களை கூட்டிட்டு நேரா வீட்டுக்கு வந்திடறியா. ஒரு ஆட்டோ பிடிச்சு வந்திடு, சந்தோஷ் அண்ணன்கிட்ட நான் சொல்லிடறேன் இன்னைக்கு ரிட்டர்ன் இல்லைன்னு”

“என்ன அமைதியா இருக்கே?? பர்மிஷன் கேட்க முடியாதுன்னு அவங்களை வெயிட் பண்ணச் சொல்லு. இல்லை நாளைக்கு வரச்சொல்லு. இல்லைன்னா நீயே என்னன்னு கேட்டு சொல்லு” என்று அடுக்கினான் அவன்.
“எனக்கு இப்போ கிளாஸ் இல்லை. பசங்க தூங்கிட்டு தான் இருக்காங்க. பெல் அடிக்கவும் பேரன்ட்ஸ்கிட்ட ஒப்படைக்கணும். நான் பக்கத்து கிளாஸ் மிஸ்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு கிளம்பறேன்” என்றவள் சொன்னப்படியே பெர்மிஷனை போட்டுவிட்டு காயத்ரியுடன் கிளம்பியிருந்தாள்.
அந்த பெரிய வீட்டின் முன் வண்டி நிற்கவும் ‘இது யாரோட வீடு’ என்று தான் பார்த்தார் காயத்ரி.
அன்று அருளாசினியை அழைத்துச் சென்றிருந்த ஆருத்ரன் அவள் அத்தையிடம் வந்து மறுநாள் மிரட்டிவிட்டு சொல்லித்தான் சென்றிருந்தான் முதல்நாள் நடந்த விஷயங்களை.
அவள் வேறு எங்கோ தங்கியிருக்கிறாள் என்று தான் அவர் நினைத்திருந்தார். இரண்டு மூன்று முறை அவளை பள்ளியில் வந்து பார்க்க முயற்சியும் செய்திருக்கிறார்.
முதல் முறை அவள் திருமணம் முடிந்து ஆருத்ரனின் வீட்டில் இருந்த தருணம். அதன்பின் ஒரு முறை அவள் மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்கு வந்திருந்த போது சென்று பார்த்து வந்திருந்தார்.
இன்னொரு முறை வந்த போது அவள் வேலையாக இருந்ததால் யாரென்று பார்க்காமலே திருப்பி அனுப்பியிருந்தாள். இதோ இம்முறை தான் அவளை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று இருந்து பார்த்தார் அவளை.
அருளாசினி எப்போதும் போல் பள்ளி சீருடையில் இருந்ததால் அவருக்கு எந்த வித்தியாசமும் தெரிந்திருக்கவில்லை. அவள் தாலி கயிறை கூட சில நாட்கள் முன்பு தான் மாற்றி செயினில் கோர்த்திருந்தனர்.
“உள்ள வாங்க அத்தை” என்ற அருளாசினியை ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் காயத்ரி. 
“யாரும்மா இது??” என்று வந்தார் அன்னப்பூரணி.
“என்னோட அத்தை காயத்ரி” என்று அவள் அறிமுகம் செய்ய “உட்காரும்மா” என்றவர் “நான் போய் காபி கலந்துன்னு வரேன் அருளு. நீ பேசிட்டு இரு” என்று நகர்ந்தார்.
“நீங்க உட்காருங்க அத்தை இதோ வர்றேன்” என்ற அருளாசினி அவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தாள். ஆருத்ரன் வீட்டிற்கு வந்திருப்பான் போலும். குளியலறையில் நீர் விழும் ஓசை கேட்டது அவளுக்கு.
அவன் வருவதற்குள் உடைமாற்ற எண்ணி அவள் புடவையை மட்டுமே கழற்றியிருக்க அதற்குள் ஆருத்ரன் சரியாய் வெளியே வந்திருந்தான். 
அவிழ்திருந்த புடவையை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள் சங்கடமாய் நிற்க அவளுக்கு பின்னே தொட்டுவிடும் தூரத்தில் நின்றிருந்தான் அவன். அவனின் உடல் அவள் மேல் உரசியும் உரசாமலும் இருக்க அவன் இருப்பை அவளால் உணர முடிந்தது.
எதுவாவது செய்வானோ என்று அவள் இருக்க அவனோ “மாத்திக்கோ” என்று சொல்லி அவள் கட்டிலின் மீது எடுத்து வைத்திருந்த நைட்டியை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு தான் சப்பென்று ஆகிப் போனது.
“நான் பார்க்க மாட்டேன் நீ மாத்திக்கலாம்” என்று வேறு அவன் சொல்ல அப்படியொரு கோபம் எழுந்தது அவளுக்கு. நீ பார்த்தா பார்த்துக்கோ என்று நினைத்தவள் அவன் முன்னேயே உடையை மாற்றினாள், அவனுக்கு முதுக்காட்டிக் கொண்டு தான்.
“அத்தை வந்தாச்சு”
“ஹ்ம்ம் நீ போ நான் வர்றேன். காபி கொடுக்கச் சொல்லு அம்மாகிட்ட”
“அதெல்லாம் அத்தை யார் வந்தாலும் சிறப்பா கவனிச்சுடுவாங்க நான் சொல்லணும்ன்னு இல்லை” என்றவாறே வெளியே சென்றாள்.
‘இவ என்ன இந்த டிரஸ் போட்டு வர்றா. இது யார் வீடு’ என்று இன்னும் பார்த்திருந்தார் காயத்ரி. அவருக்கு தெரியவில்லை அவள் ஆருத்ரனை மணந்திருந்தது. காயத்ரி அப்போது மீண்டும் ஊருக்கு சென்றுவிட்டிருந்தார் தன் குடும்பத்துடன்.
ஆருத்ரன் ஓரிரு நொடிகளில் பின்னால் வரவும் குப்பென்று வியர்த்தது அவருக்கு. ‘இவனா’ என்று.
அவர் எழுந்து நின்று விட்டிருக்கவும் “உட்காருங்க” என்றான் அவன்.
“நீ எதுக்கு நிக்கறே?? நீயும் உட்காரு…” என்றான் அவன்.
“சொல்லுங்க என்ன விஷயம்??”
“நான் அருள்கிட்ட தான் பேச வந்தேன்” என்றார் அவர்.
“தெரியும் அவ தான் சொன்னா??”என்றவன் அவளிடம் திரும்பி “என்னன்னு கேட்க வேண்டியது தானே” என்றான்.
“ஹ்ம்ம் இப்போதான் கேட்டேன்” என்றவளின் முகம் அதுவரையில்லாத அளவு மலர்ந்திருந்தது. ‘என்னவாக இருக்கும்’ என்ற சிந்தனையோடு அவள் சொல்வதை கேட்க விழைந்தான்.
“அப்பாவோட வேலை கிடைச்சிருக்கு எனக்கு. அதோட ஆர்டர் லெட்டர் அங்க போயிருக்கு போல. அதைத்தான் அத்தை எடுத்திட்டு வந்திருக்காங்க” என்றாள் அவள் குதூகலமாய்.
“தேங்க்ஸ்” என்றான் அவன்.
“அருள்” என்றழைத்தார் காயத்ரி.
“சொல்லுங்க அத்தை” என்றவள் அவர் சற்று முன் கொடுத்த உறையை மீண்டும் ஒரு முறை வாசித்துக் மகிழ்ந்துக் கொண்டிருந்தாள்.
“உன்கிட்ட தனியா பேசணும்”
“எதுவா இருந்தாலும் இங்கவே பேசுங்க. எனக்கு தெரியாத எந்த ரகசியமும் இல்லை. அவளோட கணவனா எனக்கு அவளோட எல்லாமும் தெரிஞ்சிருக்கணும்” என்று அவன் சொல்லவும் அதிர்ந்து தன் அண்ணன் மகளைப் பார்த்தார் அவர்.
“அருள்!!”
ஆருத்ரனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது அவருக்கு தங்கள் திருமணத்தை தெரியப் படுத்தவில்லை என்று. அவர் பார்வை இருவரையும் மாற்றி மாற்றி பார்த்ததை கண்டதும் தான் அவரிடம் உண்மையை உடைத்திருந்தான்.
“சொல்லுங்க அத்தை என்ன விஷயம்??” என்றாள் அவள் அவரைப் பார்த்து.
“நான் கிளம்பறேன்” என்று அவர் எழ இவள் “சரி போயிட்டு வாங்க” என்றுவிட்டாள்.
“ஒரு நிமிஷம் அருள்” என்றவர் மற்றவர்களை ஒரு பார்வை பார்க்க “நீ பேசும்மா” என்ற அன்னப்பூரணி மகனுடன் உள்ளே சென்றுவிட்டார்.
காயத்ரியால் பெரிதாய் எந்த பிரச்சனையும் வராது என்று அறிந்ததினால் ஆருத்ரனும் உள்ளே சென்றுவிட்டான்.
“இப்போ சொல்லுங்க அத்தை”
“என்ன அருள் இதெல்லாம்?? இதெல்லாம் சரின்னு நீ நினைக்கிறியா?? என் பையனுக்கு என்ன குறைச்சல் அருள், உன்னை அவனுக்கு கட்டிவைக்க நான் ஆசைப்பட்டதுல என்ன தப்பு சொல்லு அருள்”
“நீ இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பதில் என் பையனையே கட்டியிருக்கலாம்ல. அவனை வேண்டாம்ன்னு சொல்லிட்டு உனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத இந்த வாழ்க்கை உனக்கு தேவையா அருள்” என்று மனதில் இருந்ததை கேட்டுவிட்டார் அவர்.
“எது பொருத்தமில்லாத வாழ்க்கை??” என்றாள் நிதானமாய்.
“நீங்க ரெண்டு பேருமே பொருத்தமில்லாதவங்க தான்…”
“அப்போ நீங்களும் உங்க புருஷனும் ரொம்ப பொருத்தமானவங்க தானா??” என்று அவள் கேட்க அவருக்கு ஒருமாதிரியாகிப் போனது.
“அருள்” என்றார் கண்டிப்பாய்.
“உங்க பையனை மாதிரி பொருப்பில்லாதவரும் இல்லை உங்க புருஷனை மாதிரி பொறுக்கியும் இல்லை. ஒரு நல்லவரை தான் நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்”
“உங்கப்பாவோட கடைசி ஆசை என்னன்னு தெரியுமா”
“நிச்சயமா உங்க பையனை கட்டுறது இல்லை”
“அருள் உனக்கென்ன தெரியும்”
“எங்கப்பாவே சொன்னாரு அவனை மட்டும் கட்டாதன்னு அது தெரியும் எனக்கு நல்லா” என்றாள்.
“அருள்…” என்று அவர் ஆரம்பிக்க “முதல்ல உங்க வாழ்க்கையை பாருங்க என் வாழ்க்கையை பத்தி உங்களுக்கு கவலை வேணாம்”
“அவன் நம்ம ஜாதி இல்லை”
“அப்போ நீங்க கட்டினவரு எந்த ஜாதி”
“அருள் அதனால தான் நான் இன்னைக்கு யாருமில்லாம தனிச்சு நிக்கறேன்”
“நீங்க பண்ணது முட்டாள்தனம் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கறதுல நீங்க கோட்டை விட்டுட்டீங்க. என் வாழ்க்கையில் அந்த தப்பு நடக்கலை. எனக்கு யாருமே இல்லாம போனாலும் அவர் இருப்பார்ன்னு எனக்கு தோணின பிறகு தான் கல்யாணத்துக்கே நான் சரின்னு சொன்னேன்”
“அவன் உன்னை பிளாக்மெயில் பண்ணானா??”
“இல்லை…”
“அவன்…”
“வேணாம் அத்தை என்னைப் பத்தின பேச்சை விட்டிருங்க. உங்க பொழைப்பை பாருங்க” என்றாள்.
“நம்ம சொந்தங்கள் உன்னை சேர்த்துக்க மாட்டாங்க” என்றார் அவர் அப்போதும் விடாது.
“அப்பா செத்ததுக்கு வந்துட்டு அன்னைக்கே கிளம்பி ஓடினவங்க தான் அந்த சொந்தங்கள் எல்லாம். நாங்க ஊர்ல இருக்கும் போதே ஒருத்தரும் எங்களுக்கு உதவலை. அப்போ நானும் அப்பாவும் யார் தயவையும் எதிர்பார்த்திருக்கலை”
“இப்போ அவங்க என்னை சேர்த்துக்கிட்டா என்ன சேர்க்கலைன்னா என்ன” 
“அவங்க பழக்கவழக்கம் வேற நம்மது வேற எப்படி ஒத்துப் போகும். அவங்க அசைவம் சாப்பிடுறவங்க. நீ அவங்க வழக்கத்துக்கு போவியா இல்லை அவங்க தான் நம்ம பழக்கத்து வருவாங்களா”
“அவர் ஏன் நம்ம பழக்கவழக்கத்துக்கு வரணும். நான் ஏன் அவங்க வழக்கத்தை மாத்தணும். நான் நானா தான் இப்போவரை இங்க இருக்கேன். எப்பவும் இருப்பேன், என் மேல உங்களோட அக்கறைக்கு ரொம்ப நன்றி” என்று அவள் சொல்லிவிட அதற்கு மேல் அவர் தாமதிக்காது கிளம்பிவிட்டிருந்தார்.
ஆருத்ரன் திரும்பி வர அவனிடத்தில் அந்த கடித உறையை அவள் கொடுக்கவும் படித்து பார்த்தவன் மீண்டும் முருங்கைமரம் ஏறியிருந்தான், வேலைக்கு செல்ல வேண்டாம் என்று.

Advertisement