Advertisement

18
“என்னம்மா எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு சொல்லு” என்றார் மருத்துவர் மீண்டும்.
“சொல்லு அருளு…” என்றார் அன்னப்பூரணி வாயெல்லாம் பல்லாக. ஆருத்ரனுக்குள்ளும் அப்படியொரு சந்தோசமே, அப்படியும் இருக்குமா என்று அவளையே பார்த்திருந்தான்.
“தெ… தெரியலை டாக்டர்”
“என்னது தெரியலையா??” என்றவர் அம்மாவையும் பிள்ளையையும் பார்த்தார்.
“அருளு நிஜமாவே உனக்கு ஞாபகமில்லையா. கல்யாணத்துக்கு அப்புறம் நீ தலைக்கு ஊத்திக்கிட்டியா இல்லையா” என்று அன்னப்பூரணி கேட்க “நீங்க வெளிய போய் உட்காருங்க, பேசிட்டு உங்களை கூப்பிடுறோம்” என்று மருத்துவர் ஆருத்ரனை வெளியே அனுப்பிவிட்டார்.
“இல்லை அத்தை”
“ஏன்மா உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு??”
“ஒரு மாசம் ஆகப் போகுது டாக்டர்”
“அப்போ நீ உங்க வீட்டில இருக்கும் போது தான் கடைசியா உனக்கு பீரியட்ஸ் வந்திருக்கு சரியா”
“ஹ்ம்ம்…”
“சரி உங்கம்மாகிட்ட கேட்டுப்பாரு”
அருளாசினிக்கு தொண்டையடைத்தது பதிலே சொல்ல வாய் வரவில்லை அன்னப்பூரணி தான் “டாக்டர் அருளுக்கு நாங்க தான் எல்லாமே” என்று சொல்ல விழிகள் நிறைந்து ஒரு கண்ணில் கண்ணீர் வழிந்தது. அதை துடைக்கக் கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள் அவள்.
“அவங்கப்பாம்மா??”
“நாங்க தான்னு சொல்றேன்ல டாக்டர் புரிஞ்சுக்கோங்க”
“இதுக்கு அர்த்தம் எப்படி வேணா எடுத்துக்கலாம், நீங்க தெளிவா சொல்லுங்க எனக்கு” என்றார் அவர்.
“அவங்க இல்லை”
“ஓ!! சரி இப்போ டேட் தெரியாம நான் எப்படி பார்க்க??” என்றவர் “எப்போ வரணும்ன்னு தோராயமா ஞாபகம் இருக்கா உனக்கு” என்றார்.
“ஹ்ம்ம்”
“என்ன தேதி??”
“இருபத்தி ரெண்டு தேதி போல வரவேண்டியது”
“அப்போ பத்து நாள் தான் தள்ளியிருக்கு” என்றவர் அவர் மேஜை இழுப்பறையில் இருந்து பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை எடுத்து அவளிடம் நீட்டினார்.
“இதை எப்படி யூஸ் பண்ணணும்ன்னு அதுலவே இருக்கு. பார்த்திட்டு எடுத்திட்டு வாங்க. ஆமா உன்னோட பீரியட்ஸ் சர்கிள் எவ்வளவு நாள்??”
“இருபத்தி அஞ்சு நாள்”
“அப்போ கடைசியா போன மாசம் 28, 29 தேதில உன்னோட தேதி வந்திருக்கும் நினைக்கிறேன்…” என்றவர் காலண்டரை பார்த்து தேதியை குறித்துக் கொண்டிருந்தார்.
“நீ என்ன இன்னும் இங்க நிக்கறே?? போய் டெஸ்ட் பண்ணிட்டு வா…” என்றவர் “சாரி சொல்ல மறந்திட்டேன் ரெஸ்ட் ரூம் வெளிய போனா ரைட் சைடுல வரும்” என்றார்.
“நீங்க கூட போயிட்டு வாங்க” என்று அன்னப்பூரணியை பார்த்து சொல்ல இருவரும் வெளியே வந்தனர்.
வெளியே இருந்த பெண் இவளிடம் ஒரு சின்ன டப்பாவை நீட்ட வாங்கிக் கொண்டாள். இவர்களுக்காக காத்திருந்த ருத்ரனோ இருவரின் முகத்தையும் பார்த்தான். 
“என்ன சொன்னாங்க??” என்று ஆர்வமாய் கேட்க “டெஸ்ட் பண்ணி பார்க்க சொன்னாங்க”
“வெளிய போய் பண்ணணுமா??”
“இல்லை இங்க தான்”
“அப்போச்சரி வாங்க போவோம்” என்று அவனும் உடன் நடக்க “ருத்ரா நீ வேணாம் நான் பார்த்திட்டு வர்றேன்” என்று மகனை நிறுத்தினார் அன்னப்பூரணி.
அவனுக்கு என்னவென்று தெரியாமல் தவிப்பாக இருந்தது. பரீட்சையின் முடிவை தெரிந்துக் கொள்ள காத்திருக்கும் மாணவனின் நிலை தான் அவனுக்கு இப்போது.
அங்குமிங்கும் நடைப்போட்டு கொண்டிருந்தான். ஆயிரத்தெட்டு வேண்டுதல்கள் வைத்திருந்தான் மருத்துவரின் சந்தேகம் உறுதியாக வேண்டுமென்று.
சில நிமிடங்களில் திரும்பி வந்திருந்தனர் அவனின் அன்னையும் மனைவியும். வேகமாய் அருகே வந்தவன் “டெஸ்ட் எடுத்தாச்சா என்ன சொன்னாங்க??” என்றான் அதே தவிப்புடன்.
அருளாசினிக்கு அவனைப் பார்க்க என்னவோ போலிருந்தது. அவன் ஆசை புரிந்தது ஆனாலும் மருத்துவர் உறுதி செய்யட்டும் என்று அமைதியாக இருந்தாள்.
“எதுக்குடா இப்படி பரபரக்குற, இரு டாக்டரை பார்த்திட்டு வர்றோம்” என்றவர் உள்ளே செல்ல சில நொடிகளில் அவனை உள்ளே அழைத்தனர்.
“உட்காருங்க” என்று அவனுக்கு இருக்கையை காட்ட அமர்ந்துக் கொண்டான்.
“உங்க வைப் பிரக்னன்ட்டா இருக்காங்க…” என்று அவர் சொல்லவுமே அவன் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. அவன் வேண்டுதல் பலித்துவிட்ட சந்தோசம் அப்பட்டமாய் காண முடிந்தது அவனிடத்தில்.
“தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லி மருத்துவரின் கையை பிடித்து குலுக்கிவிட்டான் அவன்.
“ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல” என்ற மருத்துவர் “முன்ன மாதிரி எதுவும் இருக்கக்கூடாது. நான் சொல்றது புரியுது தானே. நாலஞ்சு மாசம் வரைக்கும் அவங்க பக்கத்துலவே நீங்க போகக்கூடாது”
“ரொம்ப வீக்கா வேற இருக்காங்க அவங்க. அனிமிக்கா இருக்காங்க, சாப்பாட்டுல இரும்பு சத்து சம்மந்தமானதை சேர்த்துக்கோங்க. நானும் மருந்து மாத்திரை எல்லாம் எழுதிக் கொடுக்கறேன். தினமும் எடுக்கணும், அடுத்த மாசம் இதே தேதியில செக்கப்க்கு வரணும்” என்றவர் இன்னும் சில ஆலோசனைகளை சொல்லி அடுத்து வரும் போது எடுக்க வேண்டிய டெஸ்ட் எல்லாம் எழுதி கொடுத்து அனுப்பினார்.
அவனுக்கு அருளாசினியிடம் தனியே பேச வேண்டும் என்ற தோன்றியது. அன்னப்பூரணி அருகே இருக்க ஒன்றும் சொல்லாமல் உடன் நடந்தான்.
“அண்ணா வண்டியை பார்த்து ஓட்டிட்டு வாங்க…” என்றான்.
“நீயும் வாடா சேர்ந்தே போவோம்”
“வேணாம் நீங்க ப்ரீயா வாங்க. நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடறேன்” என்றவனின் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.
ஆட்டோ ஒன்றை பிடித்துக்கொண்டு அவன் விரும்பி செல்லும் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றான். கைக்கூப்பி மனமுருக வேண்டியவனின் விழிகளில் நீர் நிறைந்திருந்தது.
அரைமணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தான். அவன் எப்போதும் வருபவன் என்பதாலும் அவ்வப்போது கோவிலுக்கு நன்கொடை அளிப்பவன் என்பதாலும் அவனை எழச்சொல்லி அவர்கள் சொல்லியிருக்கவில்லை.
அவனுமே யாருக்கும் தொந்திரவு இல்லாது ஒரு மூலையில் தான் சென்று அமர்ந்திருந்தான். வழக்கமாய் அவன் பார்க்கும் அய்யர் அவனை நோக்கி வந்தார்.
“பெரிய வேண்டுதலா இவ்வளவு நேரம் இருக்கீங்களே” எனவும் “ஹ்ம்ம் ஆமா சாமி. நான் கேட்டதை கொடுத்திட்டா இந்த அம்மன்” என்றான்.
“சந்தோசம்” என்றவர் அவன் கையில் ஒரு மாலையை கொடுத்து அவன் முன்பே கொடுத்திருந்த அர்ச்சனையையும் அவனிடம் கொடுக்க ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தான்.
தாமரை ஊருக்கு கிளம்பிச் சென்று பத்து நாட்கள் ஓடியிருந்தது. அன்றைய நாளிற்கு பிறகு அவள் எதுவுமே பேசவில்லை. அவளின் கணவன் வந்ததும் அவள் வீட்டில் நடந்ததை சொல்ல அதற்கு முன்பே ஆருத்ரன் நடந்ததை அவனிடம் சொல்லியிருந்தான். நிர்மல் அவளை ஒரு பிடி பிடித்துவிட மீதமிருந்த நாட்களில் அவள் அடக்கியே வாசித்தாள்.
அருளாசினி உண்டாகியிருக்கும் விஷயத்தை அன்னப்பூரணி சொல்லவும் தாமரைக்கும் ஏனோ சொல்லொணாத சந்தோசம் தோன்றத் தான் செய்தது. அதை சட்டென்று வெளியில் காண்பிக்க முடியவில்லை அவளால்.
அருளாசினியுடன் ஆருத்ரனும் தினமும் பள்ளிக்கு உடன் சென்றுவிட்டுவிட்டு மாலை அவளை அழைக்கவும் அவனே தவறாது ஆட்டோவில் செல்வான்.
‘இது உனக்கில்லை அருள் எல்லாம் உன் வயித்துல வளர்ற அவங்க வாரிசுக்காக’ என்று மனசாட்சி எடுத்துக் கொடுத்தது அவளுக்கு.
முதல் நாள் விஷயம் தெரிந்த போது அவன் முகத்தில் தெரிந்த மலர்ச்சி கண்டு அவளுக்குமே அது தொற்றிக் கொண்டிருந்தது. ஏதோவொரு ஆவல் அவனை பார்க்க வேண்டும் என்று தனியே தன்னிடம் என்ன கேட்பான் என்றெல்லாம் எண்ணம் சென்றது.
ஆருத்ரனும் ஆவலோடு தான் வந்தான். ஆனால் அவளிடம் பேச அவனுக்கு தயக்கமாக இருந்தது. இப்போது பேசினால் குழந்தைக்காகதான் என்று தோன்றுமோ என்று அவன் அடக்கி வாசிக்க அதுவே அவளின் மனதில் ஒரு வருத்தத்தை கொடுத்தது.
என்ன ஏதென்று பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் அதில் என்ன இருக்கிறது என்று இருவருக்குமே தெரியவில்லை.
பெரிதாய் விரும்பி எல்லாம் மணந்திருக்கவில்லை தான். ஆனால் ஏதோவொரு தருணத்தில் அவனுக்கு அவளிடத்தில் ஒரு ஈர்ப்பு தோன்றியது உண்மையே.
அவளுக்குமே அவனிடத்தில் அது தோன்ற ஆரம்பித்திருந்தது. என்னே ஆரம்பித்த வேகத்தில் அது விரக்தியாய் உருமாறி அவள் மனதை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது.
இதற்காக தானே என்னை கட்டிக்கொண்டார். அது நடந்துவிட்டால் அடுத்து என்னாகும் என்ற எண்ணம். பெரிதாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்டவளுக்கு தன்னையறியாமல் அவனிடத்தில் ஓர் எதிர்பார்ப்பு வந்திருந்தது.
இந்நிலையில் தான் இருவரும் அஞ்சனாவை மீண்டும் நேரில் சந்தித்தனர். “அருளு இன்னைக்கு கோவிலுக்கு போயிட்டு வந்திடு. ஆடிப்புரம் இன்னைக்கு கோவில்ல விசேஷமா இருக்கும்” என்று மருமகளிடம் சொல்ல சரியென்று தலையாட்டி இருந்தாள்.
“ருத்ரா நம்ம ராணி கடையில வளையல் சொல்லியிருக்கேன். வாங்கிட்டு போய் கோவில்ல கொடுத்திரு, அருளு கையால கொடு… சாமிக்கிட்ட வைச்சுட்டு எல்லாருக்கும் கொடுத்திட்டு வந்திடுங்க” என்று முடித்தார் அவர்.
“ம்மா பைக்ல கூட்டிட்டு போகவா”
“ஏன்டா அறிவிருக்கா உனக்கு பைக்ல போறேங்கறே. நீ பைக்கை ஏரோப்ளேன் மாதிரி ஓட்டிட்டு போவே. இதுல பிள்ளைத்தாச்சி பொண்ணை வேற கூட்டிட்டு போறேன்னு சொல்ற. ஒழுங்கா ஆட்டோல போ”
“நான் கார் வாங்கப் போறேன்”
“வாங்கு எனக்கென்ன??”
“ஏன்னு கேட்க மாட்டீங்களா??”
“உனக்கு வேணும் வாங்குறே, நான் ஏன் கேக்கப் போறேன்” என்றார் அவர்.
இதோ இருவரும் கோவிலுக்கு கிளம்பிவிட்டனர். எப்போதும் செல்லும் ஆட்டோக்காரர் வர முடியாததால் வேறு வண்டியை அழைத்து வந்தான்.
அவன் அன்னை சொன்னது போல வளையலை வாங்கிக்கொண்டு இவர்கள் கோவிலுக்கு சென்று கடவுளை தொழுது முடித்து வெளியில் வந்து அமர்ந்தார்கள்.
“வளையலை எல்லார்க்கும் கொடு” என்றான் அவன்.
அவளும் அங்கு வரும் பெண்களுக்கு இரண்டிரண்டாக கொடுக்க ஆரம்பித்தாள். அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தாள் அஞ்சனா.
“என்ன வேண்டுதலா??” என்றாள் நக்கல் குரலில்.
ருத்ரன் ஏதோ சொல்ல வாயெடுக்க அருளாசினி அவனை பார்த்த பார்வையில் என்ன இருந்ததோ அமைதியாக இருந்தான்.
“ஒண்ணுத்துக்கும் ஆகாதவனை கட்டிக்கிட்டா இப்படி வேண்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான்”  என்றாள் அதே குரலில்.
அவள் பேசப்பேச ஆருத்ரனுக்கு ஆத்திரம் அதிகமாகியது. அவன் எழப் போக அவன் கை மீது வைத்து அழுத்தினாள் அருளாசினி.
“இன்னும் என்ன கொட்டணுமோ கொட்டிட்டு போங்க” என்றாள் அஞ்சனாவை பார்த்து.
“நான் என்ன குப்பையா கொட்ட வந்தேன்” என்றாள் அஞ்சனா இவள் பேச்சில் வெகுண்டு.
“உங்க மனசுல இருக்கற குப்பையை தானே கொட்டிட்டு இருக்கீங்க. அப்போ அப்படித்தானே சொல்ல முடியும். கொட்டிட்டீங்கன்னா கிளம்புங்க” என்றாள் அருளாசினி.
“ஏய் என்னடி பெரிய இவ மாதிரி பேசறே… நான் பேசினேன் நீங்க தாங்க மாட்டீங்க” என்றாள் இன்னும் ஆத்திரமாக.
“அதே தான் சொல்றேன் நான் பேசினா நீங்க தாங்க மாட்டீங்க. நீங்க யாருன்னு ஊரறிய செஞ்சிடுவேன், இவரை மாதிரி போனாப் போகுதுன்னு இருக்க மாட்டேன்” என்றாள் இவளும் அசராமல்.
“என்னைப்பத்தி உனக்கு ரொம்ப தெரியுமோ. என்னடி ஊரறிய செஞ்சிடுவேன்னு பூச்சாண்டி காட்டுறியா.எங்கே சொல்லேன் என்னன்னு”
“எனக்கு அதெல்லாம் தேவையில்லாத வேலை. இனிமே நீ வந்து என்கிட்ட ஏதாச்சும் பேசினா அதுக்கு மேல நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை” என்றவள் “என்னங்க கிளம்புங்க கண்டவங்க கூடலாம் நமக்கு பேச நேரமில்லை” என்று அவள் சொல்லவும் ஆருத்ரன் ஒரு மென்னகையுடன் அவளுடன் எழுந்துச் சென்றான். மறக்காமல் அஞ்சனாவை பார்த்து ஒரு இகழ்ச்சி புன்னகை சிந்த தவறவில்லை அவன்.

Advertisement