Advertisement

17
“என்னை எதுக்கு கூப்பிடுறே?? செஞ்சுட்டு சொல்லு வந்து டேஸ்ட் பண்றேன்” என்றுவிட்டு அந்த இடத்தை காலி செய்திருந்தாள் தாமரை.
வீம்பாக சொல்லிவிட்டோமே என்று யூடியூப்பை ஆன் செய்து செய்முறையை பார்த்தாள். ‘முடியுமா என்னால்’ என்று கேள்வி ஓடியது உள்ளே. ‘பேசாம போய் ஹெல்ப் கேட்டிருவோமா’ என்று கூட தோன்றியது.
சுயகவுரவம் வந்து தடுக்க இறால் இருந்த பாத்திரத்தை பார்த்தாள். ஏதோ புழு நெளிந்து கொண்டிருப்பது போலவே அவளுக்கு இருந்தது. இவள் அதையே பார்த்துக் கொண்டிருக்க அடிவயிற்றில் ஒரு பிரட்டல் எழ ஆரம்பித்தது.
ஹாலில் அமர்ந்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த தாமரையோ “என்ன அப்படியே வைச்சுட்டு பார்த்திட்டு இருக்கே, கழுவி எடுத்து வை” என்று அமர்ந்த வாக்கிலேயே குரல் கொடுத்தாள்.
அருளாசினிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது. வெங்காயம், தக்காளியை மட்டும் எடுத்து நறுக்கி வைத்தாள்.
அடுப்பைப் பற்ற வைத்து அதை வதக்கினாள். இன்னும் இறாலை கழுவியிருக்கவில்லை. அதை பார்த்தாலே ஏதோ செய்வது போல இருக்க தட்டை அதை மூடி வைத்துவிட்டாள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று.
மீனையும் வேறு வாங்கி வைத்திருப்பதால் அது வேறு வீசிக் கொண்டிருந்தது. ஓரிரு பூனைகள் வேறு வந்து அந்த பாத்திரத்தை இழுக்க முயற்சி செய்ய உள்ளிருந்து எழுந்து வந்தாள் தாமரை.
“உன்னை என்ன சொன்னேன் அந்த மீனை கழுவ சொன்னேன்ல. கழுவி எடுத்து உள்ள வைக்கிறது விட்டு என்ன பண்ணுறே?? பாரு ஒரு மீனை பூனை எடுத்திட்டு ஓடிருச்சு” என்றவள் பின்வாசலின் படியில் இருந்த அந்த பாத்திரத்தை எடுத்து பாத்திரம் கழுவும் இடத்திற்கு பக்கத்தில் இருந்த காலி இடத்தில் வைத்தாள்.
தாமரை அந்த புறம் செல்லவும் இவளுக்கு தாள முடியாது உமட்டல் வரவே கட்டியிருந்த கைக்குட்டை கழட்டிக் கொண்டே வெளியில் வர ஆருத்ரன் அப்போது தான் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
அவன் அறைக்குள் நுழையப் போகவும் இவளால் முடியாது அவன் மீதே அத்தனையும் எடுத்துவிட்டிருந்தாள். கண்கள் சிவந்து கண்ணீரை வேறு பொழிந்துக் கொண்டிருந்தது.
அவன் கொஞ்சம் கூட அசூசை காட்டவில்லை. “என்ன பண்ணுது உனக்கு??” என்றவன் அவளை கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று பாத்ரூமில் விட்டு வந்தான்.
தாமரை இருந்த இடத்தை விட்டு அசையாது சோபாவிலேயே அமர்ந்திருந்தாள். “எதுக்கு வாமிட் எடுக்கறே??”
அவள் பதில் பேசாது இன்னும் ஒங்கரித்துக் கொண்டிருந்தாள். வெளியே வந்தவன் “என்னக்கா பார்த்திட்டு பேசாம இருக்கே??” என்றான் தாமரையை பார்த்து.
“என்ன பேசாம இருக்கேன். அவளுக்கு வாந்தி வருது எடுக்கறா, அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்” என்றாள் அவள்.
அப்போது தான் அவனுக்கு மீன் வாடை அடிப்பது போல இருந்தது. உள்ளே சென்று பார்க்க அடுப்பில் ஏதோ வதங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகில் ஒரு பாத்திரத்தில் மீன் இருக்க மூடி வைத்த பாத்திரத்தில் இறால் இருந்தது.
“யார் இதெல்லாம் வாங்கி வைச்சா??” என்று கத்தினான்.
“நான் தான்டா வாங்கினேன். லோகு சாவி கொடுக்க வந்தான் அவனை தான் வாங்கியாற சொன்னேன்”
“நான் தான் இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. அப்புறம் எதுக்கு இதெல்லாம் வாங்கினே, உனக்கு தான் தினம் தினம் கடையில வாங்கி கொடுக்கறேன்ல அப்புறம் ஏன் இப்படி பண்ணே??” என்றான் கத்தலை விடாது.
“இப்போ என்னடா ஆகிப்போச்சு டெய்லி கடையில சாப்பிட்டா என்ன ஆகறது. அதான் வாங்கினேன், இப்போ என்ன அதுக்கு??”
“நீயெல்லாம் என் கூடப்பிறந்தவளா?? ஏன் இப்படி நடந்துக்கறே?? என்ன தான் உன் பிரச்சனை??” என்று இவன் பேசிக் கொண்டிருக்கும் போதே வேறு உடை மாறி கைக்குட்டை ஒன்றை முகத்தில் கட்டிக்கொண்டு வெளியில் வந்தாள் அருளாசினி.
இவர்களை கண்டுக்கொள்ளாது அவள் சமையலறை சென்றவள் அடுப்பில் வைத்திருந்ததை கிண்டப் போக அவனுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது. தாமரையை ஒரு முறை முறைத்தவன் அருளாசினியின் அருகே சென்று அவளை இழுத்தான்.
 
அதில் அவள் கையில் கரண்டியோடு அவன் புறம் வர “இதெல்லாம் நீ எதுக்கு செய்யறே??”
“அவங்க செய்ய சொன்னாங்க” என்றவள் மீண்டும் அந்த புறம் செல்ல “உனக்கு அறிவே இல்லையா, அவ சொன்னா நீ செய்வியா. முடியாதுன்னு சொல்ல மாட்டியா??”
“நீங்க தானே சொன்னீங்க அவங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்லி”
“டேய் என்னடா உன் பொண்டாட்டியை இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி பேசறே. ஏன் அவ இதெல்லாம் சமைக்க மாட்டாளாமா. அப்புறம் எதுக்கு உன்னை கட்டிக்கிட்டாளாம். ஆளும் பேருமா இருக்கேன்னு தான் கட்டிக்கிட்டா” என்று அவள் பாட்டுக்கு பேச அருளாசினி அமைதியாக இருந்தாள்.
“அக்கா நீ இப்போ வாயை மூடலை நான் என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது” என்று இவன் கத்த அவள் வாயை மூடுவேனா என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
“அம்மாவும் புள்ளையும் சேர்ந்துக்கிட்டு என்னைய பேசுறீங்க. எங்கப்பா இருந்திருந்தா இப்படியெல்லாம் என்னை பேச விட்டிருப்பாரா…” என்று அவள் கண்ணீர் விட அருளாசினிக்கும் அந்நேரம் அதே தான் தோன்றியது.
எங்கப்பா இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா என்று. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அவள் தன்னை மீறி வழிந்துக் கொண்டிருந்த கண்ணீரை துடைத்து மீண்டும் வேலைப் பார்க்க போக ஆருத்ரனுக்கு ஆத்திரம் பொங்கியது.
“நான் சொல்றதை நீயாச்சும் கேப்பியா மாட்டியா?? ஒழுங்கா உள்ள போய்டு, உனக்கு வராததை நீ செய்யத் தேவையில்லை. யார் சொன்னாலும் நானே சொன்னாலும் செய்யத் தேவையில்லை” என்று அவன் கத்த அடுப்பை அணைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
“என்னடா ஓவரா தான் செல்லம் கொடுக்கறீங்க அவளுக்கு. இப்படி தாங்கு தாங்குன்னு தாங்கு அப்புறம் இவளும் டாட்டா காட்டிட்டு போய்டுவா” என்று சொல்ல அங்கிருந்த தண்ணீர் குடத்தை எட்டி ஒரு உதை உதைக்க அது தண்ணீரை சிந்திக்கொண்டு உருண்டது.
“இதுக்கு மேலே நீ பேசினா மரியாதை கெட்டுப் போய்டும் சொல்லிட்டேன்”
“என்னடா நான் உண்மையை சொன்னா உங்களுக்கு வலிக்குதா…”
“வேணாம்க்கா வாயை மூடு”
“அப்படித்தான்டா பேசுவேன்” என்று அவளும் விடாது பேசினாள்.
“என் வாழ்க்கையில ஒரு தடவி பிசகிடுச்சு. அதே போல இதுவும் ஆகிடும்ன்னு சொல்லுவியா நீ. உனக்கு நம்பிக்கை இல்லைன்னா அதை உன்னோட வைச்சுக்கோ. உனக்கு அவளை பிடிக்கலைன்னா இங்க வராதா…”
“ஏன்டா நேத்து வந்தவளுக்காக என்னை வீட்டுக்கு வராதான்னு சொல்லுவியா??” என்று அவளும் கத்த அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார் அன்னப்பூரணி.
அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளாத குறையாக எதிர்த்துக் கொண்டு நிற்பதும் குடம் தண்ணீர் கீழே சிந்திக் கிடப்பதும் தான் அவர் கண்ணில்ப்பட்டது.
“நீங்க அந்த ரூமுக்கு போங்க” என்று பிள்ளைகளை அனுப்பிவிட்டு இவர்கள் அருகில் வந்தார்.
“என்ன பிரச்சனை ருத்ரா??”
“அம்மா இவன் என்னை இனிமே வீட்டுக்கு வராதான்னு சொல்றான்ம்மா…” என்றாள் அவள் அழுதுக் கொண்டே
“ருத்ரா…”
“அவ செஞ்சு வைச்ச வேலையை நீங்களே போய் பாருங்க. எனக்கு வெளிய ஆயிரம் வேலை இருக்கு இங்க வந்து என்னை பஞ்சாயத்து பண்ண வைக்கிறா உங்க பொண்ணு. நீங்களே அவகிட்ட பேசிக்கோங்க…” என்று நகர்ந்தான் அவன்.
“டேய் ருத்ரா அக்கா வேணாமாடா உனக்கு…”
“இங்க பாரு இந்த வசனமெல்லாம் என்கிட்ட பேசாத. நான் வேணும்ன்னு நீ நினைக்கலைல்ல அப்போ நீ எனக்கு வேணாம்” என்றுவிட்டு திரும்பிப் பார்க்காமல் அவன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
அங்கு கட்டிலில் படுத்திருந்தாள் அருளாசினி. அவளருகே சென்று தொப்பென்று அமர்ந்தவனுக்கு அவளைப் பார்த்ததும் இன்னும் ஆத்திரம் ஏறியது.
“ஏன்டி அவ அவ்வளவு பேசுறா நீ பேசாம நிப்பியா?? பதில் சொல்ல மாட்டியா??”
“நான் என்ன பேசணும்??”

“அவ பேசினா நீ பதில் பேசமாட்டியான்னு கேட்டேன்”
“நீங்க தான் உங்க அக்கா என்ன பண்ணாலும் கண்டுக்காம போக சொன்னீங்க”
“ஆமா சொன்ன சொல் தவறாம செய்வீங்களோ நீங்க” என்றான் நக்கல் குரலில்.
“நான் அப்படி தான் முதல்ல ஒண்ணு அப்புறம் ஒண்ணுன்னு எப்பவும் பேச மாட்டேன்” என்று அவள் சொல்ல ‘இப்போ என்னை குத்திக்காட்டினாளா என்ன’ என்ற ஓடியது அவனுக்கு.
வெளியில் அன்னப்பூரணி மகளிடம் பேசிக் கொண்டிருந்தார். “என்னாச்சு தாமரை??”
“அதான் சொன்னேன்லம்மா”
“நீ என்ன செஞ்சேன்னு கேட்டேன்??” என்றவர் அடுப்பில் இருந்த கடாயை எட்டிப்பார்த்தார். பாதி சமையலில் விட்டிருந்தது, அருகிருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தவர் மகளை முறைத்திருந்தார்.
“இதெல்லாம் நீ வாங்கினியா??”
“ஆமா இப்போ என்ன??”
“அவன் தான் செய்ய வேணாம்ன்னு சொன்னான்ல”
“தினமும் கடையில வாங்கி சாப்பிட்டா உடம்புக்கு நல்லதில்லைம்மா”
“அதனால நீ வாங்கினே அப்படித்தானே”
“ஹ்ம்ம் ஆமா”
“அப்போ ஏன் சமைக்கலை??”
“நான் எதுக்கும்மா சமைக்கணும்?? அவ இதெல்லாம் எப்போ கத்துக்கறது” என்று அவள் ஆரம்பிக்கவுமே புரிந்தது அவருக்கு வீட்டில் எதற்காய் கலவரம் நடந்திருக்கும் என்று.
“தாமரை கடைசியா சொல்றேன் உனக்கு. அவன் வாழ்க்கையில நீ தலையிடாதா. வந்தியா சந்தோசமா இருந்தியா போனோமான்னு இரு. உனக்கு பிடிக்கலைன்னா நீ பேசாத”
“ஏன்மா நான் அப்படி இருக்கணும், என் தம்பி வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறது தப்பா??”
“அப்போ என்ன பண்ணணும்ன்னு நீ நினைக்கிறே”
“இவளும் அவளை மாதிரி ஓடிப்போய்ட்டா அதுக்காக தான்மா பேசறேன். அவளை எப்பவும் நம்ம கன்ட்ரோல் வைச்சுக்கணும்மா”
“மாப்பிள்ளை உன்னை கன்ட்ரோல்ல வைக்காததுனால தான் நீ இவ்வளவு பேசிட்டு இருக்கே. உன்னையெல்லாம் நான் அடிச்சு வளர்க்காத விட்டது என் தப்பு தான்…”

“ம்மா…”
“என்னடி அம்மா?? ஊர்ல ஒருத்தி தப்பு பண்ணா எல்லாரும் அப்படியேவா இருப்பாங்க… நீ அப்படித்தான் இருக்கியா, இல்லை நான் அப்படித்தான் இருந்தேனா”
“ம்மா…”
“இனிமே என்னை அம்மான்னு கூப்பிட்டு இங்க வந்திடாதே சொல்லிட்டேன். உனக்கு என்ன வேணுமோ கேளு எல்லாம் அங்கவே வந்து செய்யறோம், இங்க வந்து என் புள்ளை வாழ்க்கையை கெடுக்கறதுன்னா நீ எப்பவும் வரவே வேணாம்” என்றுவிட்டு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் அவர்.
அங்கு அறையிலோ ஆருத்ரன் அவள் பேசியதையே யோசித்துக் கொண்டிருந்தான். ‘இவ சாதாரணமானவ இல்லை’ என்ற எண்ணம் தான் ஓடியது அவனுக்கு.
புரண்டு புரண்டு படுத்தாள் அருளாசினி. சுத்தமாய் முடியாது போகவும் மீண்டும் எழுந்து அவள் ஓட “என்ன தான் பண்ணுது உனக்கு??” என்று இவனும் பின்னாலேயே சென்றான்.
அவனுக்கு டாக்டரிடம் அழைத்துச் செல்லலாமா என்று கேட்க வேறு என்னவோ போல இருந்தது. அப்படியே அழைத்துப் போனாலும் அதே மருத்துவரிடம் மட்டும் அழைத்துப் போகக் கூடாது என்று எண்ணிக் கொண்டான்.
“ஏன் இப்படி தொடர்ந்து வாமிட் பண்ணுறே?? டாக்டர்கிட்ட போய்டலாமா??” என்றான்.
“வேண்டாம் எனக்கு இன்னும் அந்த ஸ்மெல் இருக்க போல இருக்கு. அது அந்த புழு… இல்லை பிரான் பார்த்தது ஒரு மாதிரி இருக்கு…” என்றவள் சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
அறைக்கதவு தட்டப்பட ஆருத்ரன் எழுந்துச் சென்று கதவை திறந்தான். அருளாசினி சோர்வாய் அமர்ந்திருப்பது பார்த்தவர் “என்ன பண்ணுது அருளு??” என்றார்.
“நல்லா தான் இருக்கேன் அத்தை”
“உனக்கு தெரியாததை நீ செய்யத் தேவையில்லை அருள். தாமரை சொன்னான்னா நீ ஏன் அங்க போய் நிக்கறே?? இனிமே உன் உடம்பை போட்டு வருத்திக்காத”
“ஹ்ம்ம்…”
“அவ எதாச்சும் தப்பா பேசியிருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்று அவர் சொல்ல “அத்தை நீங்க ஏன்?? நான் எதுவும் நினைக்கலை”
“அவங்க என்னை பேசினதா நான் எடுத்துக்கவே இல்லை. அதனால எனக்கு எந்த வருத்தமும் இல்லை. யாரோ தப்பு பண்ணா நானும் அப்படித்தான்னு அவங்க நினைச்சா அந்த நினைப்பு நான் எப்படி பொறுப்பாக முடியும்”
“அது அவங்க எண்ணம் அதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் அத்தை. நீங்க இனிமே இப்படியெல்லாம் பேசாதீங்க” என்றாள்.
‘நான் கூட இவளுக்கு சப்போர்ட் பண்ணித்தானே பேசினே. என்னை ஒரு மனுஷனா கூட மதிக்காம பேசினா. அம்மாகிட்ட மட்டும் குழைய குழைய பேசுறா’ என்று தான் பார்த்தான் ஆருத்ரன்.
“டாக்டர்கிட்ட போகலாம் அருளு கண்ணெல்லாம் உள்ளே போய்டுச்சு. முகமெல்லாம் வெளுத்து போச்சு, டல்லா இருக்கே” என்றார்.
“இல்லைத்தை வேணாம்…”
“நீ ஒண்ணும் சொல்லத் தேவையில்லை நாம டாக்டர்கிட்ட போறோம்.  நீ ரெடியாவு” என்றவர் “ருத்ரா சந்தோசை வண்டி எடுத்திட்டு வரச்சொல்லு ரேணுகா டாக்டர்கிட்ட போய்டலாம்”
‘என்னது அந்த டாக்டரா??’
“என்னடா நிக்கறே போ” என்று விரட்ட இதோ அவரின் கிளினிக்கிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“என்ன பிரச்சனை??” என்று இவனை முறைத்துக்கொண்டே கேட்டார் மருத்துவர்.
“நாலஞ்சு நாளா வாமிட்டா இருக்கு”
“எத்தனை நாள் தள்ளிப்போயிருக்கு??” என்று மருத்துவர் கேட்கவும் அன்னப்பூரணியின் முகம் பிரகாசமாகியது.

Advertisement