Advertisement

16
ஆருத்ரன் திரும்பி வந்த பின்னும் கூட அருளாசினி குளியலறையில் இருந்து வெளியில் வந்திருக்கவில்லை. அவள் ஒங்கரிக்கும் சத்தம் கேட்க அவனுக்கு குற்றவுணர்வாகிப் போனது. வெளியில் நின்று கதவை தட்டினான்.
ஒருவாறு தன்னை சரிப்படுத்திக்கொண்டு அவள் வெளியில் வர வெகுவாய் சோர்ந்திருந்தது தெரிந்தது அவனுக்கு.
“என்னாச்சு??”
“உமட்டிட்டு வருது”
“இந்த ஸ்மெல்னாலயா??”
“ஹ்ம்ம்…”
“நீ உட்காரு இதோ வர்றேன்” என்றவன் ரூம் ப்ரெஷ்னரை எடுத்து அறை முழுதும் மீண்டும் அடித்துவிட்டான். அவளுக்கு மீண்டும் ஒங்கரித்தது. எல்லா வாசமும் சேர்ந்து ஒரு கலவையான உணர்வை கொடுக்க குடலே வெளியே வந்துவிடும் உணர்வில் அவள் மீண்டும் எழுந்து செல்ல “ம்மோவ்…” என்று வீடே அதிர இவன் கத்திய கத்தலில் அனைவருமே எழுந்து வந்திருந்தனர் அங்கு.
பின்னால் கயிற்று கட்டிலை போட்டு படுத்திருந்த அன்னப்பூரணி “இன்னாடா எதுக்குடா இப்படி கத்துறே??” என்று தூக்கக் கலக்கத்துடன் வந்து சேர்ந்தார்.
“என்னாச்சு ஆருத்ரா??” என்றான் நிர்மலும்.
அவன் பதில் சொல்லாமல் பார்வையை குளியலறை பக்கம் செலுத்த உள்ளிருந்து ஒங்கரிக்கும் சத்தமே கேட்டது.
“அருளு வந்தாச்சாடா??”
“ஆமாம்மா நான் தான் போய் கூட்டிட்டு வந்தேன். அவளுக்கு இந்த வாடை பிடிக்கலைம்மா. வந்ததுல இருந்து ஒரே வாந்தி” என்றவன் கலவரமாய் அன்னையை பார்த்தான்.
“இப்போ இன்னாத்துக்கு இப்படி பாக்குறே. கல்யாணம் பண்ணிக்க முன்ன யோசிச்சு இருக்கணும். அய்யர் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்து நான் வீட்டுல கவுச்சி தான் தினம் சாப்பிடுவேன்னா எப்படி…” என்று மகனை இடிக்காத குறையாக பேசினார்.
“என்னது பிராமீனா!!” என்று அதிர்ந்தனர் அவனின் அக்காவும் மாமாவும்.
குழந்தைகள் கூட எழுந்து அமர்ந்து மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தனர் அங்கு என்ன நடக்கிறது என்று.
‘இவன் வஞ்சரம் மீனு தானே வாங்கினு வந்தான் இவரு இன்னா புதுசா பிறாமீனுன்னு எதையோ சொல்றாரு’ என்று அன்னப்பூரணி தன் மருமகனை பார்த்தார்.
“என்ன ஆருத்ரா இதெல்லாம்??” என்றான் அவன் கண்டிப்பான பார்வையோடு.
‘முதல்ல ஆஸ்பிட்டல்ல டாக்டர் திட்டினாங்க. இப்போ இவரா’ என்று தான் பார்த்திருந்தான் அவன்.
அதற்குள் கதவை திறந்து வெளியே வந்த அருளாசினி அங்கு அனைவரும் மொத்தமாய் கூடியிருப்பதை பார்த்து ஆருத்ரனை ஏறிட்டாள்.
அவன் பார்வையால் அக்கா மாமா என்று ஜாடை செய்ய “சாரி வந்ததும் இப்படி… தப்பா எடுத்துக்காதீங்க”
“எப்போ வந்தீங்க?? நல்லாயிருக்கீங்களா??” என்று கேட்க நிர்மல் மட்டுமே தலையாட்டினான்.
“இன்னைக்கு பசங்களுக்கு பரீட்சை லீவு போடலாம்ன்னு தான் பார்த்தேன். ஆனா சின்ன பசங்க இல்லையா கூட இருந்து கேள்வி எல்லாம் படிச்சு காமிச்சா தானே புரியும். அதான் ஸ்கூல்க்கு போக வேண்டியதா போச்சு… மன்னிச்சுடுங்க” என்றாள் தன்னிலை விளக்கமாய்.
“அதுக்கென்னம்மா பரவாயில்லை” என்றான் நிர்மல்.
தாமரை அவளை பார்த்தது பார்த்தப்படியே தான் நின்றாள். நிர்மல் அவள் கையில் இடித்தான். என்னெவென்று திரும்பி அவனைப் பார்த்தாள் அவன் மனைவி.
“பேசுறால்லா பதில் சொல்ல மாட்டியா…” என்றான் கிசுகிசுப்பாய். தாமரை அவனை முறைத்து பார்த்தாள்.
தான் வலியப்போய் பேசியும் பதில் பேசாமல் தாமரை இருக்க அருளாசினி அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசவில்லை.
“அருளு சாப்பிடுறியா இல்லை காபி போடவா” என்றார் அன்னப்பூரணி.
“பாரப்பா ஊர்ல இருந்து மகளும் மருமகனும் வந்திருக்கோம். அவங்களை கவனிக்கலை என்ன வேணும்ன்னு கேட்கலை மருமக இங்க இருக்கற ஸ்கூல்க்கு போய்ட்டு வர்றா காபி போடவான்னு கொஞ்சுறே. என்னம்மா இதெல்லாம்??” என்று அவள் அங்கேயே சொல்லிவிட அருளாசினியின் முகத்தை பார்த்தனர் அம்மாவும் பிள்ளையும்.
அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள். “அம்மா அவளுக்கு எதுவும் ஸ்பெஷலா செய்ய வேண்டாம். நீ அக்கா மாமாவை கவனிம்மா. எதுவும் வேணும்ன்னா சொல்லு லோகுகிட்ட சொல்றேன் வாங்கிட்டு வருவான். இவளை நான் பார்த்துக்கறேன் நீங்க போங்க” என்று அவர்களை அங்கிருந்து அவன் கிளப்பினான்.
‘ஹ்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்’ என்று எண்ணிக்கொண்டு வெளியில் சென்றாள் தாமரை.
“உனக்கு சாப்பிட சூடா மெதுவடை வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடறியா”
“இல்லை வேணாம் எனக்கு படுக்கணும். இன்னும் வாமிட் வர்ற மாதிரியே இருக்கு…” என்றவளின் முகச்சுருக்கம் அவனுக்கு எப்படியோ இருந்தது. கதவை அடைத்துவிட்டு அவளுக்கு தனிமை கொடுத்து வெளியில் வந்தான்.
“என்னத்தை இதெல்லாம் அந்த பொண்ணுக்கு இந்த வாடை ஆகாதுன்னா எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க??” என்றான் நிர்மல் அன்னப்பூரணியிடத்தில்.
“எங்க கேக்குறான் இவன். இவனுக்கு கவுச்சு இல்லனா இறங்க மாட்டேங்குது. அக்காவும் தம்பியும் அது இல்லாம ஒரு நாள் கூட சாப்பிட மாட்டாங்க. அக்கா வர்றான்னு நீந்திக்கிட்டு இருக்கறதை பூரா இங்க கொண்டு வந்து இறக்கிட்டான்…” என்று மகனை முறைத்தார் அவர்.
அவருக்கு மகள் பேசுவாள் என்பது ஒரு புறம் இருந்தாலும் இந்த வாடை அவளுக்கு எப்படியோ என்று எண்ணித்தான் அவளை வேலைக்கு செல்ல சொல்லியிருந்தார். அவள் வருவதற்குள் சாம்பிராணி போட்டு என்னென்னவோ அவரும் செய்து தான் பார்த்தார்.
“என்ன பண்ணுறா??”
“தூங்கணும் சொன்னா…”
“ஸ்கூல்க்கு கொஞ்சம் சின்ன டிபன் பாக்ஸ்ல கட்டிட்டு போனதுடா. அது இன்னா பத்தும், எழுப்பி எதாச்சும் சாப்பிட்டு படுக்க சொல்லுடா. நான் போய் உப்புமா செஞ்சு கொண்டு வர்றேன்” என்று அவர் உள்ளே நகர “ஒண்ணும் வேணாம் நானே வடை வாங்கிட்டு தான் வந்தேன்”
“வேணாம்ன்னு சொல்லிட்டா, நீ சாம்பிராணி போட்டியா இல்லையாம்மா??”
“ஆமாடா சாம்பிராணி போட்டதும் இந்த வாசனை எல்லாம் அப்படியே காணாம போய்டும் பாரு. நல்லா வாய்ல வந்திடும் எனக்கு” என்ற அன்னப்பூரணி மருமகனை பார்த்து வாயை மூடிக் கொண்டார்.
“கம்ப்யூட்டர் சாம்பிராணி வாங்கிட்டு வந்தேன்ல அதை போட்டு இருக்கணும்” என்றான் அவனும் விடாது.
“போயேன் நீ தான் அத்தையும் ஏத்தி வைய்யேன். வாசம் போகுதான்னு பார்ப்போம்” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
அங்கு நடப்பதை ஒரு கடுப்போடு தான் பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரை. அவள் அங்கு வந்து நான்கு நாட்கள் ஓடிவிட்டது. முதல் நாள் அவளை கவனித்ததோடு சரி அதன்பின் வீட்டில் ஒரு கருவாடு துண்டு கூட வறுக்கவில்லை என்பதே அவளுக்கு கவலையாக இருந்தது.
தன் தம்பியா இப்படி எப்படி தன்னை ஓடி ஓடி கவனிப்பான் இப்படி மாறிப் போய்விட்டானே என்று கருவிக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் சும்மாவெல்லாம் இருக்கவில்லை, அவளும் அவள் கணவரும் அன்னப்பூரணியின் அறையை எடுத்துக் கொண்டிருக்க அவள் பிள்ளைகளை தம்பியின் அறையில் படுக்க செய்தாள்.
பகலில் யாருமில்லை என்பதால் முதல் நாள் அன்னப்பூரணி பேசாமல் இருந்தார்.
இரவும் அவள் அங்கு அனுப்பவும் “தாமரை பசங்க என் கூட ஹால்ல படுத்துக்கட்டும்” என்றார் அவர்.
“இல்லைத்தை எங்க ரூம்லவே படுக்கட்டும்” என்றான் நிர்மல்.
“ஏன்?? எதுக்கு?? அப்படி எல்லாம் என் புள்ளைங்க படுக்காது. புள்ளைங்களுக்கு தனியா தான் ரூம் வேணும். அப்பா அம்மா கூட எல்லாம் புள்ளைங்களை படுக்க வைக்கிறதே இல்லை தெரியுமே”
“அது உங்க ஊர்ல இங்க நீ அப்படியா இருந்தே??” என்றார் அன்னப்பூரணி.
“நான் தான் அப்படியில்லை என் புள்ளைங்க அப்படி இருக்கக்கூடாது. அதும் இல்லாம அவங்க ஏசி இல்லாம படுக்க மாட்டாங்க. இந்த ரூம் சின்னது இதை நாங்க எடுத்துக்கறோம். அது பெரிய ரூம் தானே அங்க பசங்க படுக்கவும் இடமிருக்கு. அவங்க அங்கவே படுக்கட்டும்” என்றாள் அவள் வீம்பாய்.
“தாமரை உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா” என்று அன்னப்பூரணி பேச வர “பரவாயில்லை அத்தை பசங்க தானே படுக்கட்டுமே அதில என்ன இருக்கு” என்று அருளாசினி சொல்லிவிட பிரச்சனை அத்தோடு முடிந்தது.
இரவில் அறைக்கு படுக்க வந்த இரு பிள்ளைகளும் குசுகுசுவென்று ஏதோ காதோடு சொல்லிக்கொண்டிருக்க கீழே மனைவியோடு தரையில் பாயை விரித்து படுத்திருந்த ஆருத்ரன் “என்ன சத்தம் தூங்காம” என்றான் அதட்டலாய்.
“ஒண்ணுமில்லை மாமா” என்றாள் அக்காவின் மகள்.
“மாமா எனக்கு ஒண்ணு கேட்கணும்” என்றான் ஆகாஷ்.
“சொல்லு ஆகாஷ்” என்றதும் அவன் அருளாசினியை சுட்டிக்காட்டி “இவங்க யாரு??” என்றான்.
“அத்தை…”
“அத்தைன்னா??”
“என்னோட வைப்டா…”
“அப்போ அந்த அத்தை எங்க மாமா. அக்கா சொன்னா போன தடவை இங்க வேற ஒரு அத்தை இருந்தாங்களாமே” என்று அவன் கேட்க ஆருத்ரனுக்கு சங்கடமாகிப் போனது.
அருகிருந்தவளை பார்க்க அவள் உறங்கும் பாவனையில் இருந்தாள். இதென்னடா வம்பா போச்சு என்று தான் இருந்தது ஆருத்ரனுக்கு.
நிம்மதியா நான் கல்யாணம் பண்ணிட்டு இருக்கறது கூட பிரச்சனையா என்று தான் தோன்றியது அவனுக்கு. “என்ன மாமா ஒண்ணுமே சொல்லலை” என்றான் அவன்.
அவனுக்கு எப்படி பதில் சொல்ல என்று தெரியவில்லை. ஆனாலும் பதில் சொல்லாமல் மற்றவன் விடமாட்டான் என்று தோன்ற “அந்த அத்தைக்கு மாமாவை பிடிக்கலை” என்று சொன்னான்.
சாதாரணமாக சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தவன் அதை சொல்லி முடித்த போது உணர்ச்சியற்று இருந்தான். அருளாசினி மெல்ல திரும்பி படுத்தாள்.
“என்ன மாமா சொல்றே?? உன்னைப் போய் யாருக்காச்சும் பிடிக்காம போகுமா??” என்றாள் ஆகாஷின் தமக்கை வர்ஷினி.
அருளாசினி படுத்தவாக்கிலேயே அவளை பார்த்து கேட்டாள். “உனக்கு பாவக்காய் பிடிக்குமா??” என்று.
“அய்யே கசக்குமே” என்று பாவனையோடு அப்பெண் சொன்னாள்.
“எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவள் சொல்ல அது தனக்கானதா என்று திரும்பி மனைவியை பார்த்தவனுக்கு ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
“எல்லார்க்கும் எல்லாமே பிடிச்சிடாது பேபி. உனக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காது, எனக்கு பிடிச்சது உனக்கு பிடிக்காது. நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சது வேற யாருக்கும் கூட பிடிக்காம இருக்கலாம்”
“ஓ!! அப்படி கூட இருக்கில்லை. எனக்கு பூரி பிடிக்கும் ஆனா இவனுக்கு பிடிக்காது, இவன் சப்பாத்தி தான் சாப்பிடுவான். அது எனக்கு பிடிக்காது” என்றாள் அவள்.
“வர்ஷு பேசாம படுத்து தூங்கு” என்ற ஆருத்ரன் அருளாசினியின் அருகில் படுத்துக் கொண்டான்.
நாளை மறுநாள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றிருந்தாள் தாமரை. அன்னப்பூரணி தன் பேத்தியையும் பேரனையும் அழைத்துக்கொண்டு நகைக்கடை வரை சென்றிருந்தார்.
நிர்மல் பாஸ்போர்ட் ஆபீஸ் வரை சென்றிருந்தான். ஆருத்ரன் கடைக்குச் சென்றுவிட்டான். அன்று அருளாசினிக்கு விடுமுறை தினம் தான் வீட்டிலிருந்தாள். அவள் அறையில் படுத்துக் கொண்டிருக்க திடிரென்று கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் தாமரை.
“இங்க வந்து சொகுசா படுத்துக்கிட்டா எப்படி??” என்றாள் எடுத்த எடுப்பிலேயே
“என்னாச்சு” என்றவள் எழுந்து நின்றிருந்தாள்.
“யாரு சமைக்கிறதாம்…”
“அத்தை…”
“அவங்க என்ன உனக்கு வேலைக்காரியா, நீ மாமியாரா இல்லை அவங்க மாமியாரா இப்படி அவங்களை நீ வேலை வாங்குறே. உன் புருஷனுக்கும் எங்கம்மாவுக்கு சமைக்கிறதை விட உனக்கு வேற என்ன வேலை”
“எங்கம்மாகிட்ட உன்னை சமைக்க சொன்னா. நீ சமைச்சு வைன்னு என்கிட்ட சொல்லுது. கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போன பொண்ணுங்க அம்மா வீட்டுக்கு வர்றதே ரெஸ்ட் எடுக்கத்தான். இங்கயும் வந்து நான் தான் சமைக்கணுமா??” என்றாள் அவள்.
அமைதியாய் அவளை நிமிர்ந்து பார்த்த அருளாசினி, “இப்போ என்ன நான் சமைக்கணும் அவ்வளவு தானே நான் சமைக்கிறேன்” என்று அவள் வெளியேற உடன் வந்தாள் தாமரை.
“லோகுவை இறா வாங்கிட்டு வரச்சொல்லியிருந்தேன். பின்னாடி வைச்சிருக்கான். அதை கழுவி ப்ரை பண்ணிட்டு. மீனை குழம்பு வைச்சுடு” என்று அவள் சொல்லவும் அப்படியொரு ஆத்திரம் எழுந்தது அவளுக்கு.
அருளாசினியின் பொறுமையை அதிகமாய் சோதித்தாள் தாமரை. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு “நான் அதெல்லாம் செஞ்சதில்லை, அத்தை வரட்டும்” என்று உள்ளே செல்லப் போனாள்.
“அப்புறம் எப்போ தான் அதை கத்துக்கறது. என் தம்பி  நல்லா வாட்டசாட்டமா இருக்கான், வசதியா இருக்கான்னு தானே ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டே, அப்புறம் இதெல்லாம் செய்யலைன்னா எப்படி”

“என் தம்பி நல்லா வக்கனையா தின்னு வளர்ந்தவன் அவனுக்கு பிடிச்சதை நீ தான் செய்யணும். எங்கம்மா உங்க கூடவே வா வர முடியும். அவங்களுக்கு பிறகு நீ தானே செய்யணும். அதான் யூடியூப் எல்லாம் இருக்கே. அதை பார்த்து செஞ்சு வை…” என்றாள் மற்றவளை காயப்படுத்தும் நோக்குடன்.
அவள் பொறுமையாய் “நான் எப்படி செஞ்சாலும் நீங்க சாப்பிடுவீங்களா” என்றாள்.
“அப்போ நீ சமைச்சிடுவியா, சரி முதல்ல செய்…” என்றாள் அங்கிருந்து நகர்ந்து.
“எங்கே போறீங்க நில்லுங்க, வந்து நான் செய்யறதை பாருங்க” என்றவள் முகத்தில் கைக்குட்டை ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டாள்.
வீட்டிற்கு வந்த ஆருத்ரன் இருவரையும் ஒருவழியாக்கி விட்டிருந்தான்.

Advertisement