Advertisement

15
தாமரை தன் கணவர் இரு பிள்ளைகளுடன் மறுநாள் முன்பகலில் வந்து இறங்கியிருந்தாள். வந்ததுமே அவள் கண்கள் வீட்டைத்தான் முழுதுமாய் அலசியது.
 
‘நாங்க இங்க இருக்கோம் இவ என்ன தேடுறா’ என்று பார்த்த அன்னப்பூரணிக்கு மெதுவாய் விஷயம் புரிந்தது. லேசாய் சிரித்துக் கொண்டார் அவர். எதுவா இருந்தாலும் அவளே ஆரம்பிக்கட்டும் என்ற எண்ணம் அவருக்கு.
 
“வர்ஷினி பேபி என்ன நீங்க மாமாவை பார்த்ததும் ஓடி வருவீங்கன்னு பார்த்தா தள்ளி நிக்கறீங்க” என்ற ஆருத்ரன் தன் அக்கா மகளை பார்த்து கேட்டான்.
 
“அப்படிலாம் ஒண்ணுமில்லை மாமா…”
 
“ஆகாஷ் அக்காக்கு என்னாச்சுடா எதுக்கு இப்படி இருக்கா??” என்றவன் தன் அக்காவின் மகனை தூக்கி வைத்துக்கொண்டான் தன் தோளில்.
 
“அதெல்லாம் அவங்களுக்கு ஒண்ணும் ஆகலை. ஆமா நான் வந்து இவ்வளவு நேரமாச்சு…”
 
“அதுக்கென்னக்கா உனக்கு பசிக்குதா” என்றவன் “அம்மா…” என்று தன் அன்னையை பார்க்க “இன்னாடா” என்றார் அவர்.
 
“அக்கா வந்து இவ்வளவோ நேரமாச்சு என்னன்னு பாரும்மா. மாமாக்கும் பசிக்கும்ல அவங்களுக்கு அங்க லன்ச் டைம் முடிஞ்சி இருக்கும், நம்ம நேரமும் அவங்க நேரமும் ஒண்ணா. போம்மா எல்லாம் எடுத்து வை” என்று தன் அன்னையை விரட்டினான்.
 
“எதுக்குடா அம்மாவை விரட்டுற??”
 
“நீ தானே நேரமாச்சுன்னு சொன்னே??”
“ஆமா சொன்னேன்…”
 
“அப்போ போய் சாப்பிடு, வஞ்சரம் வாங்கி கொடுத்திருக்கேன். உனக்கு பிடிச்ச கடம்பாவை மிளகு போட்டு வறுத்து வச்சிருக்காங்க போய் வேணுங்கறதை சாப்பிடுங்க. வர்ஷு ஆகாஷ் நீங்களும் போங்க…” என்றவன் “மாமா நீங்க ரெப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிட வாங்க” என்றான்.
 
“ஏன்டா என் புருஷன் என்ன எனக்கு சோறு போடாமலா இருக்காரு. என்னவோ நாங்க இதுக்கு தான் வந்த மாதிரி பண்ணுற. நாங்க வந்து இவ்வளவு நேரமாவுது உன் பொண்டாட்டி இன்னும் வெளிய வரக்காணோம்”
 
“அப்புறம் எங்களுக்கு என்னடா மரியாதை இங்க. உங்களை எல்லாம் பார்க்கத்தானே வந்திருக்கோம். அப்படி என்ன மகாராணி அவ” என்று கத்திப் பேச அவளின் கணவன் நிர்மல் அவளை முறைத்தான்.
 
“என்னை எதுக்கு முறைக்கறீங்க??” என்று அவனையும் திரும்பி பார்த்து கேட்டாள்.
 
“ஓ!! நீ எங்களை பார்க்க வரலையா. என் பொண்டாட்டியை பார்க்கத் தான் வந்தியா, தெரிஞ்சிருந்தா அவளை ஸ்கூல்க்கு போக வேணாம்ன்னு சொல்லியிருப்பேனே” என்றான் அக்காவிற்கு குறையாத தம்பியாய்.
 
“ஏன்டா படிக்கிற புள்ளையவா கட்டிகிட்ட”
 
“படிப்பு சொல்லிக்கொடுக்குறவளை கட்டிக்கிட்டேன்”
 
“புரியுது நல்லா புரியுதுடா உனக்கு நல்லா பாடம் எடுக்கறான்னு நல்லா புரியுது” என்று அவள் பேச அன்னப்பூரணியோ “போதும் பேச்செல்லாம், பேசாம சாப்பிட வா…” என்று உள்ளிருந்து அதட்ட எழுந்து உள்ளே சென்றிருந்தாள்.
“ஏன்மா நீயாச்சும் சொல்லக்கூடாதா உன் மருமவளை லீவு போடச்சொல்லி”
 
அவர் எப்படி சொல்லியிருப்பார் மருமகளை பள்ளிக்கு செல்லுமாறு சொன்னதே அவர் தானே. முதல் நாளே அருளாசினி அவரிடம் கேட்டால் தான் விடுப்பு எடுக்கட்டுமா என்று, அன்னப்பூரணி தான் வேண்டாமென்று விட்டார்.
 
“அவ மதியத்துக்கு மேல தான் வருவா. நீ ஸ்கூல் முடிச்சுட்டு வா சரியா இருக்கும். வேணும்ன்னா இன்னொரு நாள் லீவு போட்டுக்கலாம். அவ எப்படியும் ஒரு வாரம் இங்க தான் இருப்பா” என்று முடித்திருந்தார்.
 
“எதுக்கு லீவு போடணும்??”
 
“நான் வர்றேன்னு அவளுக்கு தெரியாதா??”
 
“தெரியும்…”
 
“அப்புறம் என்ன ஆணவம் அவளுக்கு…”
 
“நீ வர்றேன்னு தெரியும் நீ அவளை என்ன பேசினேன்னு அவளுக்கு தெரியாது. எப்படி பேசுவேன்னு அவளுக்கு தெரியாதுல அதான் அவளை ஸ்கூல்க்கு போக சொல்லிட்டேன்” என்றார் அன்னப்பூரணி அசராமல்.
 
நிர்மலுக்கு தன் மனைவியை தெரியும் தான், அவள் பேசுவாள் என்று நன்றாகவே அறிவான். ஆனாலும் வீட்டிற்கு விருந்தினர் என்று வந்திருக்கும் போது இப்படித்தான் அலட்சியமாக இருப்பதா என்ற எண்ணம் அவனுக்குமே கோபத்தை கொடுத்தது.
 
தங்களை அவமானப்படுத்தும் செயலாகவே அதைப் பார்த்தான். இவர்களே அவளை வேலைக்கு செல் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால் புதிதாய் வந்தவளுக்கு தங்களின் மேல் என்ன மரியாதை இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.
 
அவன் கோபத்தை அவன் பேச்சில் காட்டவில்லை, பேசாமல் காட்டினான். எல்லாமே அடுத்த சில மணி நேரத்தில் அருளாசினி வீட்டிற்கு வரும் வரையில் தான் இருந்தது.
 
வந்தவுடனே முகம் திருப்பிக்கொண்டு கிளம்ப வேண்டாம் என்று அமைதியாக இருந்தான் அவன். ஆருத்ரனுக்கு அவனின் அமைதி யோசனையை கொடுத்தது. புரிந்தும் போனது மதியம் உண்டு முடித்து மற்றவர்கள் படுத்துவிட இவன் கிளம்பிவிட்டான் வெளியில்.
 
பள்ளிக்கு வந்திருந்தான் மனைவியை அழைக்க. கவிதாவின் கணவன் சந்தோசுக்கு போன் செய்து சொல்லிவிட்டான் அவனை பள்ளிக்கு வரவேண்டாம் என்று, தானே அருளாசினியை அழைத்து வந்துவிடுவதாக கூறியிருந்தான்.
 
பள்ளியின் வாசலில் நின்றிருந்தான். வாசலில் இருந்த செக்யூரிட்டி இவனை பார்த்து “என்ன சார்??” என்றான்.
 
“என் வைப்பை கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்”
 
“இந்த நேரத்துல ஸ்கூல் முடியாதே சார். இன்னும் ஒன் ஹவர் ஆவுமே”
 
“தெரியும்” என்பவனிடம் என்ன சொல்ல என்பது போல மேலிருந்து கீழாய் பார்த்தான் அவன்.
 
“போன் பண்ணி பாருங்க சார் வந்தா கூட்டின்னு போங்க” என்று அவன் சொல்லவும் தான் அவனுக்கு போன் ஞாபகமே வந்தது. அவளின் பழைய போனை அவள் அத்தையின் வீட்டிலேயே விட்டு வந்திருந்தாள்.
 
தவிர அந்த எண்ணை அவளுக்கு மீண்டும் உபயோகிக்கும் எண்ணம் இல்லை. அதனாலும் அவள் அதை பெரிதாய் தேடியிருக்கவில்லை. அவளின் தந்தையின் போன் அவளிடம் உண்டு தான்.
 
அதை ஏதோ பொக்கிஷம் போல பாதுக்காக்கிறாள் கண்ணால் பார்த்து வருடி என்று. ஆருத்ரன் அதையெல்லாம் கவனித்ததில்லை. அவள் வந்த புதிதில் போனில்லை என்று சொன்னது நினைவிற்கு வர வண்டியை எடுத்துக்கொண்டு சர்ரென்று விரைந்துவிட்டான்.
 
அடுத்த அரைமணி நேரத்தில் கையில் ஒரு போனுடன் பள்ளி வாயிலில் நின்றிருந்தான். செக்யூரிட்டிக்கு என்ன தோன்றியதோ “மிஸ்ஸு பேரு இன்னா சார்” என்றான்.
 
“அருளாசினி”
 
“அருள் மிஸ்ஸா இருங்க நான் போய் சொல்லிட்டு வர்றேன்” என்றவன் உள்ளே சென்றிருந்தான்.
 
சில நொடிகளில் அருளாசினி அங்கிருந்து எட்டிப்பார்த்தாள். பின் அங்கிருந்த மற்றொரு அறைக்கு வேகமாய் விரைந்து சென்றவள் சில நொடிகளில் திரும்பி வந்து முன்பு அவள் இருந்த அறைக்குள் சென்றிருந்தாள்.
 
செக்யூரிட்டி திரும்பி வந்திருந்தார் இப்போது. “இருங்க சார் வருவாங்க, சொல்லிக்கிறேன்” என்றான்.
 
“தேங்க்ஸ்”
 
“இருக்கட்டும் சார்” என்றவன் அவன் இருப்பிடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டான்.
 
அடுத்த ஐந்து நிமிடத்தில் அருளாசினி தன் கைப்பை சகிதம் வெளியே வந்தாள் இவனை நோக்கி. “சாரி லேட் பண்ணிட்டேனா”
“நான் வந்ததே  உனக்கு தெரியாதே. அப்புறம் எப்படி லேட்டாகும்”
 
“உள்ள நீங்களே வந்திருக்கலாமே செக்யூரிட்டிகிட்ட சொன்னா அனுப்பி இருப்பாரே”
 
“என்னை அவர்க்கு எப்படி தெரியும். அதான் அவரே வந்து கூப்பிட்டாருல”
 
“என்ன இந்த நேரத்துல??”
 
“அக்கா வந்திருக்கா…”
 
“வந்திட்டாங்களா…”
 
“ஹ்ம்ம்…”

“சரி போகலாம்” என்றவள் அவன் வண்டியை எடுக்க போவான் என்று பார்க்க அவன் கையில் வைத்திருந்ததை அவளிடம் நீட்டினான்.
 
“வைச்சுக்கவா” என்றவள் அவன் அதை தன்னிடத்தில் கொடுத்து வைத்துக்கொள்ள சொல்லுகிறான் என்று எண்ணியிருந்தாள்.
 
“ஹ்ம்ம் வைச்சுக்கோ உனக்கு தான்…” என்று அவன் சொல்லவும் தான் கவரையே பார்த்தாள்.
 
“போன் உன்கிட்ட இல்லைன்னு சொன்னல்ல. வாங்கணும்ன்னு நினைச்சு மறந்து போயிட்டேன், இப்போ செக்யூரிட்டி போன் பண்ணுங்க சொல்லவும் தான் ஞாபகம் வந்துச்சு. அதான் போய் வாங்கிட்டு வந்தேன்”
 
“பிடிக்குதா பாரு, இல்லைன்னா வேற மாத்திக்கலாம். தெரிஞ்ச கடை தான், பில்லு போடாம தான் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றான்.
 
முதன் முதலாய் அவளுக்காக என்று யோசித்து ஒன்றை வாங்கி வந்திருக்கிறான் அதைப் போய் வேண்டாம் என்று சொல்ல அவளால் எப்படி முடியும். அதை பிரித்து பார்த்தவள் “நல்லாயிருக்கு தேங்க்ஸ்” என்றாள்.
 
“சிம்மும் போட்டு இருக்கேன் என் நம்பரும் இருக்கு. சேவ் பண்ணி வைச்சுக்கோ”
 
“நீங்களே சேவ் பண்ணியிருக்கலாமே”
 
“என்ன நேம்ல உனக்கு போடணும்ன்னு தோணுதோ போட்டுக்கோ. நீ தானே அதை யூஸ் பண்ணப் போறே” என்றவன் வண்டியை எடுக்கச் சென்றான்.
 
“நான் லீவு போட்டிருக்கலாம்” என்றாள் வண்டியில் செல்லும் போது.
 
“பரவாயில்லை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவன் சொல்லிவிட மேற்கொண்டு எந்த பேச்சும் இல்லை அவர்களிடத்தில். வண்டி வீட்டு வாசலில் நின்றது.
 
இவள் இறங்கி உள்ளே செல்லவும் இவனும் பின்னோடு வந்தான். வீடு அமைதியாக இருந்தது. “எங்க அவங்க??”
 
“வந்து சாப்பிட்டு தூங்கிட்டாங்க” என்றான்.
 
‘என்னை கேட்கலையா’ என்று தோன்றினாலும் ஒன்றும் கேட்கவில்லை அவள். உள்ளே நுழையவும் வீட்டில் முழுதும் அடித்த வாசத்தில் அவள் முகம் சுருங்கியது.
 
அவனறியாமல் தன்னை சமாளித்துக்கொண்டு அவர்கள் அறைக்கு செல்ல அவனின் அக்காவின் பிள்ளைகள் இருவரும் அங்கு உறங்கிக் கொண்டிருந்தனர்.
 
அவனுக்கு உடனே புரிந்து போனது அது அவன் அக்காவின் வேலை என்று. அவன் கிளம்பும் வரை அவர்கள் இருவரும் அங்கு இருந்திருக்கவில்லை. அவர்களின் அருகே சென்று இவன் எழுப்ப போக “எழுப்பாதீங்க” என்றாள்.
 
“ஏன்??”
 
“தூங்குறவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றவள் குளியலறை சென்று முகம் கழுவி கையோடு எடுத்துச் சென்ற வேறு உடையை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.
 
“நீங்க கடைக்கு கிளம்பலையா??”
 
“இல்லை இன்னைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டேன். பசங்க பார்த்துப்பாங்க. நீ போய் சாப்பிடு” என்றவன் “வேணாம் வேணாம்…” என்று நிறுத்தினான் அவளை.
 
“என்னாச்சு…”
 
“ஒண்ணுமில்லை, ஆமா உனக்கு எதுவும் வாடை வீசுதா” என்றான்.
 
அவள் உள்ளே வந்த போதே அவளுக்கு குமட்டிக்கொண்டு தான் வந்தது. இருந்தாலும் இதெல்லாம் பழகிக் கொள்ள வேண்டும் என்று அவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு தான் உள்ளே வந்திருந்தாள்.
 
அவன் அன்னை சாம்பிராணி எல்லாம் காட்டியிருந்த போதும் வாடை அடிக்கவே செய்தது. மீன் வாடையை சாம்பிராணி போக்கிவிடுமா என்ன…
 
“நான் போய் உனக்கு சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வர்றேன். நீ கொஞ்ச நேரம் படுத்துக்கோ” என்று அவன் வெளியே கிளம்பிவிட்டான்.
 
ஏனோ இந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவன் போக்கில் சற்று வித்தியாசம் தான். அவளின் மருத்துவமனை வாசத்திற்கு பின்பே கொஞ்சம் மாற்றம் இருந்தது தான். இப்போது அது அதிகமாய் தெரிந்தது அவளுக்கு. எதனால் என்ற யோசனை தான் ஓடியது அவளுக்கு.
 
அறையில் புதிதாய் ரூம் ப்ரஷ்னர் ஒன்று இருக்க அதை எடுத்து மெல்ல அடித்துவிட்டு கதவை சாற்றிவிட்டு தலையணை ஒன்றை எடுத்து கட்டிலில் கீழே போட்டுக் கொண்டு படுத்துவிட்டாள்.
 
பிரியாணி வாசத்தை கூட அவளால் சுவாசிக்க முடிந்தது இந்த மீன் செய்த வாசத்தை கொஞ்சமும் அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ரூம் ப்ரஷ்னரையும் மீறி வாடை வீச எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள்.
 
அப்போது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை அது மீன் வாசத்தால் வந்த வாந்தி மட்டுமல்ல என்று.

Advertisement