Advertisement

14
அந்த நாட்கள் கடந்துவிட்டிருந்த பொழுதும் இன்றளவிலும் அது அவனுக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அஞ்சனா ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும் போதும் அவனை சீண்டி இன்னமும் வெறுப்பேற்றுவாள்.
எங்கே தன் மீது பழி எதுவும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும் அவனால் இயலாது என்ற எண்ணமும் அவள் மனதில் பதிந்து போயிருந்தது. அதுவே அவளை பேசவும் வைத்தது.
அவன் பொறுத்து போகவில்லை, பொறுத்துக்கொண்டு விலகியிருந்தான். அவனுக்கு காலம் கனியாமலா போய்விடும் திருப்பிக்கொடுக்க. 
அஞ்சனாவை பற்றிய எண்ணங்கள் அவனை இன்னமும் தகிப்புக்கு உள்ளாகி இருக்க மெதுவாய் புரண்டு படுக்கவும் “இங்க வந்து ஏன் படுத்து இருக்கீங்க??” என்று அருளாசினி வந்து கேட்கவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.
வந்தது அவள் தான் என்று தெரிந்ததும் ஒன்றும் சொல்லாமல் அவன் அசட்டையாய் திரும்பிப் படுக்கப் போக “கேட்டேன்…” என்றாள் அவள் அழுத்தமாய்.
“இப்போ வந்து கேட்டா??”
“வேற எப்போ கேட்கணும்??”
“கேட்காத அளவுக்கு நடந்திருக்கணும்”
“உள்ள வாங்க, இங்க நாம பேசிட்டு இருந்தா அத்தை எழுந்து வந்திடுவாங்க…” என்று சொல்லிவிட்டு அவள் நகர ‘இவ சொன்னா நான் பின்னாடியே போகணுமா’ என்று வீம்பு வந்தது அவனுக்கு.
‘அவ சொல்லி நீ கேட்டா தான் என்ன தப்பு’ என்று தோன்றவும் செய்யாமலில்லை. மின்விசிறியை கூட அணைக்காமல் எழுந்து அப்படியே உள்ளே சென்றுவிட்டான்.
அவள் கட்டிலின் அருகில் நின்றிருக்க இவன் உள்ளே வந்து கதவை அடைத்திருந்தான். அவள் இரு கைகளை கட்டிக்கொண்டு நிற்க ‘என்ன திமிர் இவளுக்கு, இவளும் ஓகே சொல்ல மாட்டாளாம். வெளிய படுத்து கிடந்தவனையும் உள்ள வரச்சொல்லிட்டு பேசாம வேடிக்கை பார்ப்பாலாம்’ என்று தான் பார்த்திருந்தான்.
அவள் பேசாதிருக்கவும் இவன் மீண்டும் கதவை திறக்கப் போக “எதுக்கு வெளிய போய் படுத்தீங்க??” என்றாள் வாய் திறந்து.
“ஏன்னு தெரியாதா??” என்றான் திரும்பி அவளைப் பார்த்தவாறே.
“தெரிஞ்சுக்கத்தான் கேட்கறேன்…”
“சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக்கு…”
“அப்போ சொல்லாதீங்க…”
“என்ன திமிரா??”
“கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க அதைவிட்டு எதுக்கு திமிரான்னு கேட்கறீங்க”
“நான் கூட தான் உன்கிட்ட கேட்டேன் நீ பதில் சொன்னியா??” என்றான் அவன்.
“ஓ!! என்கிட்ட கேட்டு தான் நீங்க எல்லாம் செய்யறீங்களா?? ஐ மீன் செஞ்சீங்களா??” என்ற அவளின் கேள்வியில் அவனுக்கு பதிலே வரவில்லை.
 “அதான் டாக்டர் திட்டுறாங்களே…” என்றான் மெல்லிய குரலில்.
“திட்டினா என்ன??”
“என் பொண்டாட்டியை கூட நான் தொடக்கூடாதா?? அப்படி திட்டுறாங்க” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
“எதுக்கு திட்டியிருப்பாங்க?? மூர்க்கத்தனமா நடந்ததுக்கு சொல்லியிருப்பாங்க. பொண்டாட்டியை தொடவே கூடாதுன்னு எந்தவொரு டாக்டரும் சொல்ல மாட்டாங்க”
‘இதுக்கு என்ன அர்த்தம் நான் தொடலாமா கூடாதா’ என்ற அதிதீவிர சிந்தனை அவனுக்கு.
“நான் என்ன மூர்க்கமா நடந்தேன்” என்றான் அதே குரலில்.
“இதென்ன” என்றவளின் இடையில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துக் கொண்டிருந்த அவன் விரலின் மிச்சம் மீதி தடத்தை காட்டப் போக அவன் பார்வை போன போக்கைப் பார்த்து ‘என்ன செய்யற அருள்’ என்று தட்டிக்கொண்டவள் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டாள்.
மருத்துவர் அத்தடத்தை காட்டிய போதே அவனுக்கு என்னவோ போலாகியிருந்தது. இப்போது அவளும் கேட்கவும் பதிலே சொல்ல முடியவில்லை அவனால். மன்னிப்பும் கேட்க தோன்றவில்லை.
வாய்விட்டு மன்னிப்பை வேண்டினால் தானா. அவள் முன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான். அவன் வலக்கை நீண்டு அவள் புடவையை மெல்ல விலக்கி இடையில் இருந்த தடத்தை மெல்ல நீவியது. அதில் கூச்சமாகியிருக்க அவள் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
அவன் வேறு மண்டியிட்டு அமர்ந்திருந்தது என்னவோ போலிருக்க அவள் உள்ளே தள்ளிப்போக முனைய அவன் மற்றொரு கரம் அவள் இடையை அழுத்தமாய் பிடித்தது. குனிந்து மெல்ல அந்த இடத்தில் அவன் இதழ்களால் ஒத்தடம் செய்தான். ஏதோ அன்று தான் காயம் ஏற்பட்டது போல.
“ம்ப்ச்…”
“அன்னைக்கு ஏன் சொல்லலை??”
‘என்ன?? என்ன சொல்லலை?? என்ன கேட்குறாரு??’ என்று பார்த்தாள் அவனை.
“வலிச்சிருந்தா சொல்லியிருக்கலாம்ல” என்றான் உண்மையாகவே.
“இல்… இல்லை வந்து…”
“என்னன்னு சொல்லு??”
“இன்னைக்கு மாதிரி விவேகமா இருந்திருந்தா சொல்லியிருப்பேன். அன்னைக்கு வேகமா இருந்தீங்க யார் மேலயோ இருந்த கோபம் அதை…”
“உன்கிட்ட காட்டிட்டேன்…” என்று முடித்தான் அவன்.
“இனிமே இப்படி நடக்காது” என்றவன் அவள் வயிற்றில் தன் முகத்தை அழுந்தப் பதித்திருக்க அவள் கைகள் தன்னைப்போல உயர்ந்து அவன் முடியை கோதியது. 
அவளை கலைத்து களைந்து களைத்துப்போய் ஒருவழியாய் உறங்கியிருந்தனர். விடிந்து வெகு நேரமாகியும் இருவரும் எழுந்து வந்திருக்காததால் அன்னப்பூரணி கதவை தட்ட அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் அருளாசினி.
குளியலறை சென்று முகத்தை அடித்து கழுவி வெளியே வந்து கதவை திறக்க அன்னப்பூரணி அவளைத் தான் பார்த்திருந்தார்.
“என்னாச்சும்மா மேலுக்கு முடியலையா??”
“ஒண்ணுமில்லை அத்தை நல்லா தான் இருக்கேன்…”
“ஸ்கூல்க்கு வேற டைம் ஆச்சே இன்னும் எழுந்துக்கலையேன்னு தான் தட்டினேன்” என்று அவர் சொல்லவும் தான் நேரம் பார்த்தாள்.
‘அச்சோ டைம் ஆச்சே இதுக்கு மேலே கிளம்பினா எப்போ போகறது’ என்று விழிக்க “என்னாச்சும்மா இன்னைக்கு லீவா??”
“இல்லைத்தை ஸ்கூல் இருக்கு. ஆனா டைம் ஆச்சு இன்னும் பத்து நிமிசத்துல நான் ஸ்கூல்ல இருக்கணும், எப்போ குளிச்சு கிளம்பன்னு யோசிக்கறேன்” என்றாள்.
“அதுக்கென்ன அருளு ஒரு நாளு லீவு போடு”
“அப்படில்லாம் போட முடியாது அத்தை. முன்னாடி நாளே எழுதிக் கொடுக்கணும் லீவுக்கு, நான் திரும்ப வேலைக்கு ஜாயின் பண்ணும் போதே சொன்னாங்க… நான் போய் கிளம்பறேன் ஆட்டோ அண்ணா வந்திட்டாங்களா”

“அவன் இன்னைக்கு வர முடியலைன்னு இப்போ தான் சொல்லிட்டு ஊருக்கு அவசரமா கிளம்பி போறாங்கம்மா…” என்றார் அவர்.
“வேற ஆட்டோ பிடிச்சி போய்க்கறேன்” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தவள் குளித்து வந்திருக்க ஆருத்ரன் அறையில் இல்லை. பள்ளிக்கு செல தயாராகி அவள் வெளியே வர அன்னப்பூரணி டிபனை கொண்டு வந்தார்.
“நேரமாச்சு அத்தை சாப்பிட முடியாது. நான் எதாச்சும் வாங்கி சாப்பிட்டுக்கறேன்” என்று நகரப்போக “லன்ச் செஞ்சிட்டேன் எடுத்திட்டு போ” என்று பையோடு வந்தார் அவர்.
அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் அவள். ஆருத்ரன் இன்னும் அவள் கண்ணில்படவில்லை. “போயிட்டு வர்றேன் அத்தை” என்றவள் எப்போதும் அவனிடம் சொல்லிவிட்டு எல்லாம் வேலைக்கு சென்றதில்லை.
அவள் செல்லும் நேரத்தில் பெரும்பாலும் அவன் உறங்கிக் கொண்டிருப்பான். அதனால் அவள் அப்படியே சென்றிருந்தாள். நேற்று அவனுடன் பேசிய பிறகே சில விஷயங்கள் அவளுக்கு புரிந்தது.
அவனைப் பற்றி முன்பே அவள் அறிந்தது தான், அவன் நல்ல மனிதன் என்பது. ஆனால் முன் தின நிகழ்வு அவன் என்ன மாதிரி மனிதன் என்பதை புரிய வைத்தது அவளுக்கு.
பார்க்க எப்படியோ இருக்கும் அவனுக்குள்ளும் எவ்வளவோ தவிப்புகளும் சங்கடங்களும் ஆசைகளும் ஏக்கங்களும் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்திருந்தாள். அதை ஒழுங்காய் வெளிப்படுத்த   தெரியாத மனிதன் என்பது அறிந்திருந்தாள்.
அவர்கள் அறையை ஒரு முறை பெரு மூச்சுடன் பார்த்துவிட்டு அவள் வெளியில் வர அன்னப்பூரணியும் பின்னோடு வந்தார்.
“நான் போய்க்கறேன் அத்தை நீங்க வேற ஏன் வாசல் வரை வர்றீங்க??”
“நான் வந்தா உனக்கென்ன??” என்றார் வெடுக்கென்று.
அவரின் அந்த உரிமையான பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது. இதுவரை யாரும் அவளிடம் காட்டாத உரிமை அது.
வெளி கேட்டை திறக்க ஆருத்ரன் பைக்கோடு நின்றிருந்தான். குளித்து நல்ல உடையில் டிப் டாப்பாகவே இருந்தான். அவள் திரும்பி தன் மாமியாரை பார்த்தாள். “போய் ஏறு” என்றார் அவர்.
“இல்லை…”
“நீ வந்து ஏறுறியா இல்லை நான் ஏத்தி உட்கார வைக்கவா??” என்ற அவனின் அதிகார குரலில் சட்டென்று ஏறி அமர்ந்து அன்னப்பூரணியிடம் விடைபெற வண்டி மெதுவாய் சென்றது.
“ஸ்கூல்க்கு டைம் ஆச்சு” என்றாள் மெல்லிய குரலில்.
“கேட்கலை…”
“டைம் ஆச்சு, கொஞ்சம் வேகமா போகலாம்ல”
“எனக்கு விவேகமா இருக்கணும்ன்னு தோணுது” என்றான் முன் தினம் அவள் சொல்லியதை ஞாபகப்படுத்துவது போல்.
“நானே லேட்டா போனா நல்லாயிருக்காது”
“பரவாயில்லை அதுக்காக டீச்சர் ரூல்ஸ் மீறி நடக்ககூடாதுல அதுவும் தப்பு தானே. வேகம் விவேகமல்லன்னு அடுத்தவங்களுக்கு பாடம் எடுத்தா மட்டும் போதாது அது மாதிரி நடக்கவும் செய்யணும் தானே” என்று அவன் பேசவும் அவளுக்கு அப்படியொரு ஆச்சரியம்.
இருவரும் இவ்வளவு சகஜமாக பேசுவது இதுவே முதல் முறை. முதல் நாள் அவள் ஆரம்பித்து வைத்தது தான். இப்போது அவன் அதை தொடர்கிறான். 
தாமரை போன் செய்திருந்தாள் சென்னை வருவதாக. “ருத்ரா தாமரை ரெண்டு நாள்ல ஊருக்கு வர்றேன்னு சொல்லியிருக்கா…”
“ஹ்ம்ம் ஆமாம்மா மாமா எனக்கு போன் பண்ணியிருந்தார்…”
“உன்கிட்ட சொல்லியாச்சா, அப்போ சரி…” என்றவர் “ருத்ரா உங்கக்காவுக்கு தினம் மீனு வேணும். அதில்லாம சோறு இறங்காது, நேத்தே என்கிட்ட சொல்லிட்டா…”
“ஹ்ம்ம் பார்த்துக்கலாம்மா…” என்றவன் யோசனையாய் இருந்தான்.
“என்ன யோசிக்கறே??” என்றவரிடம் “ஒண்ணுமில்லை” என்றவன் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றிருந்தான் இப்போது.
“அக்கா ரெண்டு நாள்ல இங்க வர்றா…”
“ஹ்ம்ம் தெரியும் அத்தை நேத்து சொன்னாங்க…”
“அவ… அவ ஏதாச்சும் சொன்னா பெரிசா எடுத்துக்காத…” என்றான்.
“ஹ்ம்ம் சரி…” என்று முடித்துவிட்டாள் அவள்.
“அவ அவ்வளவு பேசுறா நீ ஏன் பேசாம நின்னே” என்று அவனே அவளிடம் கேட்கும் அளவிற்கு பொறுமையாய் இருந்தவளைக் கண்டு அவனின் பொறுமை தான் பறந்திருந்தது அவள் தமக்கையின் வரவிற்கு பின். அதற்கு அருளாசினியின் பதிலில் அவன் தான் வழக்கம் போல பதில் இல்லாமல் நின்றான்.

Advertisement