Advertisement

13
அன்றைய நிகழ்வுக்கு மறுநாள் அவள் ஆருத்ரனுடன் வீட்டிற்கு வந்திருந்தாள். அவனின் தமக்கை தாமரை ஊருக்கு கிளம்புவதால் அவளுடன் அப்படியொரு ஒட்டுதலாக இருந்தாள்.
அவள் பிள்ளைகளுடன் பொழுதுபோக்குவது அவர்களுடன் வெளியே செல்வது ஊருக்கு செல்ல தேவையானது வாங்க என்று சுற்றினாள். காரணமில்லாமல் காரியமில்லை என்பதாகத்தான் இருந்தது அவள் செயல்.
அவர்களுடனே இருந்தவள் கணவனை ஒதுக்கியது யார் கண்ணிலும் படவில்லை. சம்மந்தப்பட்டவனே நம் அக்காவை கவனிக்கிறாள் அதனால் தானே இருந்து அசட்டையாக இருந்துவிட்டான்.
கிணற்று தண்ணீர் தானே யார் அள்ளிச் செல்ல போகிறார்கள் என்று நினைத்திருந்தானோ என்னவோ. தாமரையும் தன் தம்பி பொண்டாட்டியை குறித்து பெருமையாகவே தன் அன்னையிடத்தில் பேசிச் சென்றிருந்தாள்.
அவள் ஊருக்கு சென்றும் நான்கைந்து நாள் ஓடியிருந்தது. ஆருத்ரனுக்கு அந்த வாரம் முழுதும் வேலை அதிகமே, அவன் வீட்டிற்கு வருவதும் தாமதமாகவே இருந்தது. அவன் நேரமாகவே வந்தாலும் அஞ்சனா அவனை நெருங்கவிடுவதில்லை.
குளித்து வாருங்கள் என்று அவனை அந்த பக்கம் அனுப்பிவிட்டு இவள் தூக்கம் வருகிறது என்று உறங்கிவிடுவாள். சரி சிறு பெண் தானே என்று அவனும் அவளை தொந்திரவு செய்ததில்லை. அவள் மேல் கைப்போட்டுக் கொண்டு தான் உறங்குவது.
அதை மட்டும் எப்படியோ பொறுத்துக் கொண்டிருந்தாள் அவள்.  அப்படியும் அவன் உறங்கியது தெரிந்ததும் அவன் கையை விலக்கி விட்டுவிடுவாள். மறுநாள் காலையில் அவள் எழுந்துக் கொள்ளப் போக ஆருத்ரன் விழிந்திருந்தான் போலும் அவளை எழவிடாமல் இடையை அணைத்து பிடித்திருந்தான்.
தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. எப்படி இவனிடமிருந்து தப்பிப்பது என்று அவள் இருக்க அவளின் நல்ல நேரமோ அவனின் கெட்ட நேரமோ அன்னப்பூரணி குரல் கொடுத்தார்.
“ருத்ரா… அஞ்சனா…” என்று அவர் அவர்களின் அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டது. இவள் எழப்போக “எங்கே போறே இரு…” என்றான்.
“அத்தை கூப்பிடுறாங்க, போலன்னா தப்பா நினைச்சுக்குவாங்க” என்றாள்.
“அதெல்லாம் நினைக்க மாட்டாங்க. நாம புதுசா கல்யாணம் ஆனவங்கன்னு அவளுக்கும் தெரியும்”
“அது தெரியாமலா இப்போ அவங்க கதவை தட்டுறாங்க…” என்றவள் “இதோ வர்றேன் அத்தை” என்று வெளியே குரல் கொடுத்துவிட்டு சட்டென்று அவனிடமிருந்து விலகி எழுந்திருந்தாள்.
அவனுக்கு கடுப்பாக வந்தது தலையணையின் மீது தன் கோபத்தை காட்ட அது கீழே சென்று விழுந்தது. இவள் தன் உடையை சரிப்படுத்திக்கொண்டு வந்து கதவை திறந்தாள்.
“சொல்லுங்க அத்தை”
“உங்கம்மா போன் பண்ணாங்க இன்னைக்கு வர்றேன்னு சொன்னாங்கம்மா. உனக்கு போட்டாங்களாம் லைன் போகலைன்னு சொன்னாங்க”
“சரிங்கத்தை நான் இப்போ அவங்களுக்கு பேசறேன்” என்றாள்.
“நீ பேசவே வேணாம்மா அவங்களே இங்க வர்றதுக்கு தான் கிளம்பிட்டாங்க போல. நீ சீக்கிரம் குளிச்சுட்டு ரெடியா இரு…”
“சரியத்தை” என்றவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது அவள் அன்னை முதல் நாள் பேசியது. ஆடி மாதத்திற்கு அவளை அழைத்துச் செல்ல வருவதாக சொல்லியிருந்தார் அவர்.
இரவு கணவனிடம் அதைப்பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்க இப்போது தான் ஞாபகமே வந்தது அவளுக்கு.
அன்னப்பூரணி நகர்ந்துவிட இவள் குளியலறை புகுந்தாள். இவள் குளித்து தயாராகி வரவும் அவள் வீட்டினர் வரவும் சரியாக இருந்தது. அவர்களை வரவேற்றுவிட்டு இவள் அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்.
“என்னங்க அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க எழுந்திருங்க” என்று எழுப்பினாள்.
“முடியாது…” என்றவன் இவள் கைப்பிடித்து இழுக்க பொறுத்துக் கொண்டு நின்றாள் அவளுக்கு காரியம் ஆகவேண்டுமே அதனால் அமைதியாக இருந்தாள்.
“ப்ளீஸ்…”
“என்ன இன்னைக்கு காலையிலவே வந்திருக்காங்க” என்று அவன் தலை நிமிர்த்தி கேட்கவும் “ஆடி மாசம் பிறக்கப் போகுதுல அதான் என்னை கூட்டிட்டு போக வந்திருக்காங்க” என்று அவள் சொல்லவும் சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தான்.
“என்னது ஆடி மாசத்துக்கு உங்க வீட்டுக்கு போகணுமா எதுக்கு??”
“அது சம்பிரதாயம்…”
“என்ன புடலங்கா சம்பிரதாயம், ஆமா இதை ஏன் எனக்கு முன்னாடியே யாரும் சொல்லலை??”
“நேத்தே அம்மா போன் பண்ணியிருந்தாங்க நீங்க வர்றதுக்கு லேட் ஆச்சா அதான் நான் சொல்ல மறந்திட்டேன்”
“ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல”
“இதெல்லாம் போன்ல சொல்ற விஷயமா” என்றாள் அவளும் பதிலுக்கு.
“சரி எப்போ கிளம்பணும்??”
“இன்னைக்கே…”
“இன்னைக்கேவா…”

“ஹ்ம்ம் ஆமாம்…”
“டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சிட்டியா??”
“வைச்சிட்டேன்…”
“எவ்வளோ நாள் அங்க இருக்கணும்??”

“ஆடி மாசம் முடிஞ்சு தான் வரமுடியும்”
“அவ்வளவு நாளா அம்மா தனியா இருப்பாங்களே??” என்றவனுக்கு தன் மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள். ‘ஆமா இவ்வளவு நாள் அவங்க ஆளும் பேருமா இருந்திட்டாங்க நான் போகவும் அவங்க தனியாகிடுவாங்க பாரு’ என்று இடித்துக்கொண்டாள்.
அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. “சரி நான் பகல்ல தினமும் வந்து பார்த்துக்குவேன்ல அப்புறம் என்ன. நைட் வேணா லோகுவை வந்து படுத்துக்க சொல்றேன்” என்று அவன் சொல்ல ‘இவன் என்ன சொல்றான்’ என்று புரியாமல் பார்த்தாள் அவள்.
“என்ன முழிக்கிறே??”
“எதுக்கு லோகு அண்ணாவை இங்க படுக்க சொல்லணும். நீங்க தான் இங்க இருப்பீங்களே…”
“என்னது நான் இங்கயா?? அப்போ ஆடி மாசத்துக்கு போகணும்ன்னு சொன்னது…”
“அது நான் மட்டும் தானே போவேன்”
“ஏன்??”
“அது அப்படித்தான் சாங்கியம்…”
“என்ன பொல்லாத சாங்கியம் எனக்கு புரியலையே” என்றவன் அப்படியே எழுந்தவன் ஷெல்பில் இருந்து ஒரு சட்டையை எடுத்து மேலே போட்டுக்கொண்டு வெளியில் வந்தான்.
‘பல்லு கூட தேய்க்காம அப்படியே போறான் பாரு ச்சே’ என்று அருவருப்பாய் பார்த்திருந்தாள் அஞ்சனா.
வந்தவர்களிடம் வாங்க என்று கேட்டுவிட்டு அவன் அன்னைக்கு குரல் கொடுத்தான். அவர் காபியுடன் வரவும் அதை வாங்கி பருகினான். அவர் வந்தவர்களுக்கும் கொடுத்தார். ‘அய்யோ பல்லு தேய்க்காம காபி வேற குடிக்கிறான், வ்வேக்…’ என்று வந்தது அவளுக்கு.
“ஆடி மாசத்துக்கு போகணும்ன்னு சொன்னீங்களாம்” என்றான் அன்னையிடம்.
“ஆமாடா போகணும்ல…”
“அக்காவை அனுப்பலையே நாம…”
“அக்கா அப்போ மாசமா இருந்தாடா ரெட்டை படையில கூட்டிட்டு வரக்கூடாதுன்னு வரலை. அதுக்கு அடுத்த மாசம் தான் நாம அவளுக்கு சீமந்தம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டோமேடா… நீ சின்ன பையன்ல உனக்கு ஞாபகம் இருக்காது அதெல்லாம்” என்றார் அவனிடம்.
“சரி போயிட்டு ஒரு பத்து நாள் இருந்துட்டு வரட்டும். ஒரு மாசம் எதுக்கு??”
“ருத்ரா அதெல்லாம் அப்படித்தான் சும்மா பேசிட்டு இருக்கக்கூடாது” என்று தன் மகனிடம் பூரணி சொல்ல அமைதியானான்.
“இல்லை மாப்பிள்ளைக்கு இஷ்டம் இல்லைன்னா…” என்று ஆரம்பித்தார் அஞ்சனாவின் அன்னை.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க சம்மந்தி, அவனுக்கு இதெல்லாம் அவ்வளவா தெரியாது. முறைன்னு ஒண்ணு இருக்கில்ல, நீங்க கூட்டிட்டு போங்க” என்றார் அன்னப்பூரணி.
மருமகள் அங்கு சென்றால் திரும்பி வரமாட்டாள் என்று தெரிந்திருந்தால் அவரும் சம்மதித்திருக்க மாட்டாரோ?? என்னவோ??
அவள் உடைகளை எடுக்க அறைக்குள் வர அவளை கட்டிக்கொண்டான் ஆருத்ரன். அதில் அவள் நெளிந்துக் கொண்டிருக்க “நமக்குள்ள ஒண்ணுமே நடக்கலை, இப்போ நீ அங்க வேற போறே. ஒரு மாசம் கழிச்சு தான் வருவே. அது வரைக்கும் நான் என்ன செய்ய??” என்றான் அவள் முகம் பார்த்து.
‘எப்பவும் போல குப்புறடிச்சு படுத்து தூங்கு’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் அவள்.
அவள் பதில் சொல்லாதிருக்கவும் அதையே சம்மதமாய் கொண்டவன் அவளை நோக்கி குனிய அவள் கை வைத்து தடுத்தாள்.
“என்னாச்சு??”
“வேணாம் காத்திருந்தது காத்திருந்தாச்சு. இன்னும் ஒரு மாசம் தானே…”
“முத்தம் கூட கொடுக்கக் கூடாதா…”
“நீங்க பாட்டுக்கு முத்தம் கொடுப்பீங்க, அப்புறம்…” என்றுவிட்டு நிறுத்திவிட்டாள்.
அதை அவன் வெட்கம் என்று எடுத்துக்கொண்டான். “சரி போ…” என்று அவளை நிம்மதியாக அவளின் வீட்டிற்கு கிளம்பினாள்.
தன் அன்னை தந்தையுடன் அவள் அங்கு கிளம்பிச் சென்றுவிட்டாள். அவளைக் காண தினமும் சென்று வந்துக் கொண்டிருந்தான் அவன்.
புதிதாய் சில வேலைகளையும் அப்போது தான் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தான். இறுதிச்சடங்கிற்கான சாங்கியங்கள் ஒரு வருடம் முடிந்ததும் செய்ய வேண்டியது என்று அனைத்திற்கும் செய்ய ஆட்களை பேசி வைத்திருந்தான்.
அப்படி வேலைகள் வர ஆரம்பித்திருந்த தருணம் அவனால் அவளைக் காண நேரில் வரமுடியவில்லை. போனில் மட்டுமே பேச்சு, அதுவும் சாப்பிட்டியா, தூங்கிட்டியா என்பதான பேச்சுகளாகவே முடிந்தது பெரும்பாலும்.
“என்னடி உன் புருஷனை ஆளவே காணோம் இப்போலாம்” என்றார் அவளின் அன்னை.
அது தான் சாக்கென்று அவளும் அவனைப் பற்றி குறை சொல்ல ஆரம்பித்தாள் அன்னையிடம்.
“எப்பவும் இப்படித்தான்மா வீட்டுக்கு வர லேட் பண்ணுவாரு. எல்லாத்துலயும் இப்படித்தான் இருக்காரு” என்று அவள் அவ்வப்போது சொல்ல முதலில் புரியாத அவள் அன்னைக்கு ஏதோ புரிய ஒரு நாள் மகளிடம் நேராகவே கேட்டுவிட்டார் என்ன சங்கதி என்று.
“உங்களுக்குள்ள…” என்றவர் “சந்தோசமா இருந்தீங்க தானே…”
“அம்மா நான் சொல்றது உனக்கு புரியலையாம்மா. அவரால எதுவும் முடியாதும்மா. அதனால தான் இன்னைக்கு வரைக்கும் என்னை தொடவே இல்லை” என்று அப்பட்டமாய் புழுகினாள்.
அங்கு வந்த புதிதில் சாதாரணமாகத் தான் இருந்தாள் அவள். அடுத்த வீட்டு விக்னேஷ் கண்ணில் படும் வரை தான் அதெல்லாம். அவனை பார்க்கும் போதெல்லாம் அவனையும் ஆருத்ரனையும் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு தாங்கவே முடியவில்லை.
விக்னேஷ் அன்றைய நிகழ்வுக்கு பிறகு அவளுடன் பேசவில்லை. ஆனால் வேண்டியோ வேண்டாமலோ அவள் கண்ணில் விழுந்துக் கொண்டிருந்தான் அவ்வப்போது.
‘என்ன இவனும் நம்மளை பார்க்கக் மாட்டேங்குறான்’ என்பது போலத்தான் அவனை பார்க்கும் தருணங்களில் நினைத்தாள் அவள்.
என்ன தோன்றியதோ ஒரு நாள் அவனிடமே கேட்டுவிட்டாள். “அன்னைக்கு அப்புறம் என்கிட்ட நீங்க பேசவே இல்லை” என்றவளை புதிதாய் பார்ப்பது போல மேலிருந்து கீழ் வரை பார்த்தான் அவன்.
அது அவளுக்கு ஏதோவொருவித பரவசத்தை கொடுக்க அப்படியே நின்றாள். “நான் பேசுவேன் ஆனா பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்களே…”
“அன்னைக்கு மட்டும் யாரும் நினைச்சு இருக்க மாட்டாங்களா??”

“அன்னைக்கு ஏதோவொரு வேகத்துல உனக்கு புரிய வைக்கணும்ன்னு அப்படி பண்ணிட்டேன். ஆனா அதுக்கு பிறகு ஒரு நாள் கூட நான் நிம்மதியா இல்லை…”
“ஏன்??”
“நீ இன்னும் அதிகமா என்னோட நினைப்புல வர்றே… அந்த நெருக்கம்…” என்றுவிட்டு மேலே தொடராமல் நிறுத்திவிட்டான் அவன்.
அதற்கு மேல் என்னவென்று அவளும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை. அவ்வப்போது அவளுக்கு தோன்றுவதெல்லாம் ஒன்று தான் ஆருத்ரனை விட விக்னேஷ் தான் அவளுக்கு பொருத்தமானவன் என்று.
காதலில் எல்லாம் அவளுக்கு பெரிதாய் நம்பிக்கை இல்லாது போனதால் தான் திருமணத்திற்கு முந்திய காலத்தில் விக்னேஷ் அவன் விருப்பத்தை தெரிவித்த போது மறுத்திருந்தாள்.
தனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ஆருத்ரனை விட தற்போது விக்னேஷ் தான் பொருத்தமானவன் என்று தோன்ற ஆரம்பித்ததில் இருந்து ஒரே யோசனை தான் அவளுக்குள். ஆருத்ரனுடன் அவளால் ஒன்ற முடியும் என்று தோன்றவில்லை. தன்னை கெட்டவளாக காட்டிக்கொள்ள அவள் துளியும் விரும்பவில்லை.
அதனால் அவள் எடுத்த முடிவு தான் ஆருத்ரனை காயப்படுத்தி கஷ்டப்படுத்தி கூருப்போட்டிருந்தது. சுயநலம் கொண்டு அடுத்தவரை காயப்படுத்துதல் முறையாகாது தானே.
அவள் வார்த்தை என்னும் கத்தி வைத்து கீறி புண்ணாகினாள் அவனை. அவளுக்குள் அவன் மீதிருந்த ஏதோவொரு வெறுப்புணர்வு அவ்வளவையும் செய்ய வைத்தது.
சிறு வயதில் அவள் செய்த தவறை எப்படி அடுத்தவரின் மீது போட்டு அவள் ஒதுங்கிக் கொள்வாளோ அப்படியே இப்போதும் செய்திருந்தாள்.
ஆருத்ரன் போன் செய்த போது அவள் எடுக்கவில்லை. அவளாகவும் அழைப்பதை எப்போதோ நிறுத்தியிருந்தாள், கோபமாக இருக்கிறாள் என்று எண்ணி அவன் அன்று வீட்டிற்கு வந்திருக்க அவளின் அன்னை பார்த்த பார்வை அவனை யோசிக்க வைத்தது உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று.
அவர் வாங்க என்று கூட சொல்லவில்லை அப்படியே நின்றிருக்க அவனுக்கு ஆத்திரம் வந்தது. இவங்களா நமக்கு முக்கியம் அஞ்சனா தானே வேணும் என்று பேசாமல் இருந்தான்.
“அஞ்சனா இல்லையா…” என்றவன் கவனமாய் அத்தை என்ற சொல்லை தவிர்த்தான்.
“எதுக்கு??”
“எதுக்குன்னா??” என்றவனின் வார்த்தைகள் சூடாகவே வந்து விழுந்தது.
“நீங்க எதுக்கு கேட்கறீங்க??”
அவன் பொறுமை சுத்தமாய் பறந்திருந்தது. “அஞ்சனா” என்றான் அந்த வீடே அதிர.
அந்த சத்தத்தில் அவள் உள்ளிருந்து ஓடிவர “என்ன நடக்குது இங்க??” என்று அவன் கேட்க அவள் மழுக்கென்று கண்ணீர் விட்டாள்.
“எதுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணீங்க??” என்றார் அவளின் அன்னை.
“என்ன வேணும் உங்களுக்கு என்ன பேசறீங்க நீங்க??”

“அதே தான் நானும் கேட்கறேன். என்ன வேணும்ன்னு இப்போ இங்க வந்து நிக்கறீங்க… என் பொண்ணு எல்லாமே சொல்லிட்டா… ஆமாங்க நாங்க கஷ்டப்படுறவங்க தான்”
“இவங்கப்பாக்கு தினக்கூலி தான். அதுக்காக எங்க பொண்ணு கஷ்டப்படுறதை பார்த்திட்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம். நல்ல வசதியானவங்களாச்சே, பார்க்கவும் நல்ல மாதிரியா இருக்கீங்களேன்னு தான் எங்க பொண்ணை கட்டி வைச்சோம்”
“இப்படி அவ வாழ்க்கையை கெடுக்கவா உங்களுக்கு கட்டி வைச்சோம். அப்போவே இவங்கப்பா சொன்னாரு வசதின்னு பார்க்கற அவங்களுக்கு எதுவும் குறை இருக்கப் போகுதுன்னு. இப்போ தானே தெரியுது என மாதிரியான குறைன்னு”
“என் பொண்ணு நல்லா வாழணும், இனிமே நீ இந்த வீட்டுப்பக்கம் வராதே” என்று அவர் பேசப்பேச அவன் கண் மண் தெரியாத கோபத்திற்கு ஆளானான். அங்கிருந்த தண்ணீர் கேனை ஒரு கையால் அடிக்க அது தெரிந்து கீழே விழுந்தது.
“என்ன சொன்னா உங்க பொண்ணு?? என்ன பேசறீங்கன்னு புரிஞ்சு பேசறீங்களா நீங்க??” என்றான் அடக்கி வைத்த கோபத்தோடு.
“எல்லாம் புரிஞ்சு தான் பேசறோம். நீ ஒரு கையாலாகாதவன்னு” என்று அவர் சொல்லவும் அவரின் கழுத்தை நெறிக்கவே சென்றுவிட்டான் அவன்.
அந்நேரம் அவளின் தந்தை வந்துவிட அவர் இவனை அடிக்கப் பாய்ந்தார். அவரையெல்லாம் தூசி போல உதறியவன் தன் மனைவியை சிவந்த கண்களுடன் பார்த்தான்.
“நீ என்ன சொன்னே??”
அவள் பதிலே பேசவில்லை அவளுக்கு உதறல் இருந்தாலும் அவனை சும்மாவிடக் கூடாது என்றும் தோன்றியது. அவன் இப்போது நடந்துக்கொண்ட முறை அவளுக்கு இன்னும் வெறுப்பூட்டியது.
“உண்மையை தானே சொன்னேன்”
“என்ன உண்மை??”
“நீங்க யாருன்னு சொன்னேன்”
“அதான் கேட்கறேன் நான் யாருன்னு உனக்கு தெரியுமா முதல்ல. அப்புறம் நான் யாருன்னு நீ என்ன சொன்னே??”
“என்ன மிரட்டுறீங்களா??” என்றவளின் பேச்சே ரொம்பவும் அனர்த்தமாய் இருந்ததை அவனால் உணர முடிந்தது. அவர்களிடம் பேசி வீண் என்றாலும் அவளின் வாயாலே அவனைப் பற்றி என்ன சொன்னாள் என்று தெரிந்துக்கொள்ள தொடர்ந்து கேள்விகேட்டான்.
“சரி மிரட்டியே கேள்வி கேட்கறேன்னே வைச்சுக்கோ. என்ன சொன்னே என்னைப்பத்தி??”
“அதான் உண்மையை சொன்னேன்னு சொல்றேன்ல. நீங்க எதுக்கு லாயக்கு இல்லாதவர்ன்னு சொல்லிட்டேன். உங்களால நான் சந்தோசப்படலைன்னு சொல்லிட்டேன்” என்று அவள் கத்த அக்கம் பக்கம் வீட்டினரும் அங்கே கூடிவிட்டனர். அவளின் பேச்சில் கோபம் வந்தது அவனுக்கு அங்கு ஆளாளுக்கு எட்டிப்பார்க்க கூசி போனது அவனுக்கு.
வீட்டிற்கு வந்து அன்னையிடம் சொல்ல அவர் ஒரு முறை அங்கு சென்று ஆடித்தீர்த்துவிட்டார். அவனுக்கு அவளுடன் வாழும் எண்ணமும் அற்றுப்போனது. ஆனாலும் தான் யார் என்பதை நிருப்பித்தாகவே வேண்டிய கட்டாயம் அவனுக்கு.
விவாகரத்து நோட்டீஸ் அவளிடமிருந்தே முதலில் வந்திருந்தது. அதை பார்த்ததும் எங்கோ ஒரு மூளையில் இருந்த நம்பிக்கையும் விட்டுப்போக அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினான். 
அவனுக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று கோர்ட்டில் நிரூப்பித்தவன் என்னால் அவளுடன் வாழ விருப்பவில்லை. விருப்பத்திலேயே பிரிந்துவிடுகிறோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டான்.
அஞ்சனா அவள் வீட்டினரிடம் அவனுக்கு பணம் இருக்கிறது அதனால் அவன் எதோ செய்து தான் சொன்னது பொய்யென்று சொல்லிவிட்டதாகச் சொன்னதை வீட்டினரும் நம்பினர்.
விவாகரத்து முடிந்த ஆறு மாதம் வரை அவள் தனியாக தானிருந்தாள். விக்னேஷ் தன் குடும்பத்தினருடன் வந்து பெண் கேட்க அவனுக்கு கட்டி வைத்துவிட்டனர் அவள் குடும்பத்தினர். 
ஆருத்ரனின் காதுக்கு அவ்விஷயம் வந்திருந்தாலும் ஏதோவொரு காரணத்தால் அவன் அமைதியாக கடந்துவிட்டான். 

Advertisement