Advertisement

11
ஆருத்ரன் ஒரு இறுதிச்சடங்கிற்கு உறைவிப்பான் பெட்டியை (ப்ரீசர் பாக்ஸ்) அனுப்புவதற்காய் அதை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். இன்னும் தேவையான சில பொருட்களை அவனும் மற்றொருவருமாக ஏறி முடித்திருந்தனர்.
“இஸ்மாயில் நீ அங்க போய் போட்டுட்டு எனக்கு கூப்பிடு. எம்எல்ஏ வீடு பார்த்துக்கோ. கூட ராகுலையும் கூட்டிட்டு போ, லோகு மின்ட் வரைக்கும் போயிருக்கான், வந்ததும் அவனையும் வரச்சொல்றேன்…”
“எதுனாலும் எனக்கு ஒரு போன் பண்ணுடா. அவங்க சடங்குக்கு எல்லாம் ஆளு கேட்டு இருந்தாங்க. மூணு மணிக்கு அவங்களை வரச்சொல்லி இருக்கேன், வரலைன்னா உடனே எனக்கு கூப்பிடு” என்று வேலைகளை அவன் அடுக்கினான்.
“ண்ணா இவ்வளோ சொல்றதுக்கு நீயே கூட வந்திருக்கலாம்ண்ணா”
“புதைக்கிறாங்க போலடா அவங்க பெட்டி வேற கேட்டிருக்காங்க அதை ரெடி பண்ணி வாங்கிட்டு அங்க நேரா வந்திடுவேன் நானு”
“எவனும் குடிச்சுட்டு போய்டாதீங்கடா. அப்புறம் அங்க எதாச்சும் பிரச்சனைன்னா உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்.  வேலை முடிச்சுட்டு வரவும் என்னவும் பண்ணிக்கோங்க சரியா”
“சரிண்ணா நாங்க கிளம்பறோம்” என்றவன் “மணி வண்டியை எடு” என்று டிரைவரிடம் சொல்ல வண்டி கிளம்பியது.
வெகுநேரமாய் அவன் கைபேசி அழைத்துக் கொண்டிருக்க எடுத்து பார்த்தால் அவன் தமக்கை தான் அழைத்துக் கொண்டிருந்தாள். பொத்தானை அழுத்தி இவன் பேசுவதற்குள் அவளே ஆரம்பித்தாள்.
“தாமரை பேசறேன் ருத்ரா”
“தெரியுது சொல்லுக்கா”
“என்னடா ஒரு மாதிரியா பேசறே??”
“நான் ஒரு மாதிரியும் பேசலை, நீ என்ன விஷயம்ன்னு சொல்லு…”
“அம்மாக்கு போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறாங்கடா… நேத்துல இருந்து பண்ணிட்டே இருக்கேன், அப்படி என்ன கோபம் அவங்களுக்கு என் மேல”

“அதை நீ தான் சொல்லணும்”
“நான் என்னத்தை சொல்ல??”
“அப்போ போனை வைச்சுடு, என் வேலையை கெடுத்துக்கிட்டு…” என்று அவன் வைக்கப் போக “ஆமாடா என்னைக் கண்டா எல்லாருக்கும் எப்படி இருக்கு??”
“அக்கா இப்போ என்ன வேணும் உனக்கு??”
“நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா??”
“நான் என்னைக்கு நீ எனக்கு முக்கியமில்லைன்னு சொன்னேன்”
“அம்மா என்னடான்னா அன்னைக்கு போனை கட் பண்ணிடுச்சு. திரும்ப பண்ணா எடுக்க மாட்டேங்குது”
“இங்க பாரு உனக்கும் அம்மாக்கும் என்ன பிரச்சனை அதை முதல்ல நீ சொல்லு”
“பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை”
“அப்போ விடு, சும்மா என்னை தொணதொணன்னுட்டு”

“டேய் பெரிய பிரச்சனை எதுவும் இல்லைன்னு சொன்னேன்”
“நீ பிரச்சனை என்னன்னு சொல்லு அது பெரிசா சிறுசான்னு நான் முடிவு பண்ணிக்கறேன்”
“உன் பொண்டாட்டி எப்படியிருக்கான்னு கேட்டேன் அது ஒரு குத்தமா”
அவனுக்கு புரிந்து போனது பிரச்சனை எங்கு ஆரம்பித்திருக்கிறது என்று. “அது மட்டும் தான் கேட்டியா??” என்றான் சந்தேகமாய்.
“வேற என்னடா பெரிசா கேட்டேன். பார்த்தும்மா அவளை நம்புன மாதிரி இவளையும் நம்பாதீங்கன்னு சொன்னேன். அவளை மாதிரி இவளும் பண்ணிட்டா என்னாடா பண்ணுறது, நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தா தானே நல்லது”
“இப்படித்தான் அம்மாகிட்ட பேசுனியா?? அப்போ இனிமே நீ என்கிட்டயும் பேசாத வைச்சுடு” என்றவன் வைத்தும் விட்டான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் தாமரையின் கணவன் ராஜேஷ் இவனுக்கு அழைத்துவிட்டான். “மாமா சொல்லுங்க மாமா… எப்படியிருக்கீங்க??”
“ஏன் ஆருத்ரா எதுக்கு என் பொண்டாட்டியை அழ வைக்கறீங்க அம்மாவும் புள்ளையும் சேர்ந்து. அவளுக்கு கேட்க ஆளில்லைன்னு நினைச்சுட்டீங்களா, அவ எப்பவும் வாய் துடுக்கா பேசுவான்னு என்னைவிட உங்களுக்கு நல்லா தெரியும் தானே”
“ஏதோ கூடவோ குறையவோ ஒரு வார்த்தையை விட்டிருப்பா அதுக்காக ஆளாளுக்கு அவளை திட்டுறதா… நீங்க பேசலைன்னு ஒரே அழுகை மயங்கி விழுந்து ஆர்த்தி பாப்பா போன் போடவும் நான் வீட்டுக்கு ஓடி வந்திருக்கேன்”
“மாமா…”
“உங்களுக்கு இனிமே நாங்க வேணாம்ன்னா சொல்லிடுங்கப்பா. அதைவிட்டு பேசுற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க…” என்று அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
“மாமா நான் பேசலாமா” என்று இடையிட்டான் அவன் மீண்டும்.
“சொல்லு ஆருத்ரா”
“நீங்க இப்போ யாருக்காக பேசுனீங்க”
“இதென்ன கேள்வி”
“சொல்லுங்க மாமா”
“என் பொண்டாட்டிக்காக”
“எதுக்கு??”
“என்னாச்சு ஆருத்ரா உனக்கு எதுக்குன்னு கேட்குறே?? அவ என் பொண்டாட்டி நான் அவளுக்காக பேசாம வேற யார் பேசுவாங்க…”
“அதே தான் நானும் சொல்றேன். என் பொண்டாட்டிக்கும் நான் தான் பேசணும். என்னையோ அம்மாவையோ பேச அக்காக்கு எல்லா உரிமையும் இருக்கு. என் பொண்டாட்டி பத்தி எதுக்கு பேசணும்”
“பழசை பேசி எதுக்கு குத்தி காட்டணும். அக்காவுக்கு என்ன மாமா வேணும், நான் தனியா இருந்தா அதுக்கு சந்தோசமா. அப்போ இத்தனை நாளும் தம்பி நீ தனியா இருந்திடாதடான்னு சொன்னதெல்லாம் பொய்யா”
“என்ன ஆருத்ரா பேசறே?? உங்கக்கா அப்படியெல்லாம் நினைக்கிறவ இல்லை…”
“அப்படி நினைக்கலைன்னா சந்தோசம் தான் மாமா. இனிமே அவளும் முதல்ல இருக்கவ மாதிரி இருந்திட்டா என்ன பண்ணுறதுன்னு பேசினா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் மாமா”
“என்னப்பா என்கிட்டவே இப்படி பேசறே??”
“வேற எப்படி பேசணும்ன்னு சொல்லுங்க மாமா”
“உங்கக்காகிட்ட நான் பேசறேன்”
“பேசுங்க சொல்லி புரிய வைங்க”

“ஆனா ஆருத்ரா??”
“சொல்லுங்க மாமா…”
“உங்கக்கா சொன்னதுல என்ன தப்பு, அது ஒரு நியாயமான பயம் தானே…” என்றவரின் பேச்சை பாதியிலேயே வெட்டினான்.
“மாமா ப்ளீஸ் உங்கமேல எனக்கு மரியாதை இருக்கு. இனிமே இப்படி பேசுறதா இருந்தா சொல்லிடுங்க நம்ம உறவுக்குள்ள விரிசல் தான் வரும். நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.
காலையிலேயே டென்ஷன் படுத்திய அக்காவின் மீது கடுங்கோபம் வந்தது அவனுக்கு.
அருளாசினி வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்ததாள். காலையில் ஆட்டோ வந்திடும் அது போல மாலையிலும் அவளை அழைத்துச் செல்ல வந்துவிடும்.
மாடி வீட்டில் குடியிருந்த கவிதாவின் கணவரிடமே மாத வாடகைக்கு பேசிவிட்டிருந்தான் ஆருத்ரன். அன்று மதியம் இரண்டரை மணி போல வீட்டிற்கு வந்திருந்தான் அவன். 
“என்ன ருத்ரா இந்த நேரத்துல?? சாப்பிட்டியாப்பா??”
“இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்மா. அப்படியே வீட்டுக்கு வந்திட்டேன். நான் மதியம் கடையில வாங்கி சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியாம்மா??”
“சாப்பிட்டேன் ருத்ரா. எனக்கு கண்ணை கட்டிட்டு வருது நான் தூங்கப் போறேன்ப்பா” என்று அவர் அறைக்கு சென்றுவிட்டார்.
ருத்ரனும் அறைக்கு சென்று குளித்து உடைமாற்றி கட்டிலில் விழுந்தான். நல்ல உறக்கத்தில் இருந்தவனை அழைப்பு மணியோசை கலைத்திருக்க யார்றா அது என்று கடுப்போடு எழுந்து வந்து அவன் பார்க்க அவன் மனைவி நின்றிருந்தாள்.
‘இவளா… இப்போ தான் வர்றாளா’ என்று நேரம் பார்த்தவன் உள்ளே செல்லப் போக “எப்போ வந்தீங்க??”
அவள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று வந்ததில் இருந்து ஆருத்ரன் அவளருகே செல்லவேயில்லை. பேச்சும் தேவைப்பட்டால் மட்டுமே என்றிருக்க இப்போது அவளின் அக்கறையான பேச்சு அவனுக்கு உவப்பாக இருந்தது.
“ஒரு மணி நேரம் இருக்கும்”
“சாப்பிட்டீங்களா??”
‘நமக்கு ஏன் இதெல்லாம் தோணவே இல்லை, இவளை சாப்பிட்டியான்னு ஒரு டைம் கூட நாம கேட்கலையே’ என்று யோசித்தது அவன் மனம்.
“சாப்பிட்டேன் நீ??”
“ஹ்ம்ம் ஆச்சு, காலையில கட்டிட்டு போயிட்டேன்”
“சரி உள்ள போ, இப்போ எதுவும் சாப்பிடறியா??”
“இல்லை வேணாம், டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் படுக்கணும்” என்று சொல்ல வழிவிட்டான் அவளுக்கு.
அவள் முன்னே சென்று கதவை அடைத்திருக்க அவனுக்கு கோபமாக வந்தது. ‘நான் வருவேன்னு தெரியும் தானே எதுக்கு கதவை சாத்துறா’ என்று வாயிலையே பார்த்திருந்தான்.
‘மவளே அவ தூங்கி எழுந்து வரட்டும் இன்னைக்கு இருக்கு கச்சேரி, எவ்வளவு திமிரு’ என்று கருவிக்கொண்டு அங்கிருந்த சோபாவில் அவன் அமர அறைக்கதவு திறக்கப்பட்டது.
பத்து நிமிடமாகியும் இவன் உள்ளே வராததால் அவள் எட்டிப் பார்த்தாள். அவன் சோபாவில் அமர்ந்திருக்கவும் “உள்ளே வரலையா” என்று அவள் கேட்க எழுந்துச் சென்றான்.
கதவை ஓங்கி வேகமாய் அறைந்து சாற்றியவன் “கொஞ்சம் முன்னாடி எதுக்கு கதவை சாத்தினே” என்றான்.
“டிரஸ் மாத்துறதுக்கு தான்”
“ஓ!!” என்றவனின் மனம் ‘என் முன்னாடி மாத்தினா நான் என்ன பண்ணிடப் போறேன்’ என்று எண்ணியது.
அவள் புடவையில் இருந்து மாறி நைட்டியை அணிந்திருந்தாள். ‘எவன் கண்டுப்பிடிச்சான் இதைன்னு தெரியலை, அவன் கையில கிடைச்சான் அவனை பிரியாணியாக்கிடணும்’
தூக்கம் நன்றாய் கலைந்திருந்தது அவனுக்கு. அவள் கட்டிலில் ஒரு புறம் உள்ளே சென்று படுத்திருக்க அருகே படுத்திருந்தவனின் பார்வை மொத்தமும் திரும்பி படுத்திருந்தவளின் மீதே இருந்தது.
மருத்துவர் பேசியது எல்லாம் ஞாபகத்திற்கு வர முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு படுத்திருந்தான். அவளின் அருகாமையும் தலையில் காயாமல் இருந்த மல்லிகை பூவில் இருந்து வந்த மணமும் அவனை இம்சை செய்தது.
புரண்டு புரண்டு படுத்தவனால் அவளின் உறக்கமும் தடைபட அவன் புறம் திரும்பிப் படுத்தாள். “என்னாச்சு தூக்கம் வரலையா”
“இல்லை…”
“அப்போ போய் டிவி பாருங்க”
“எனக்கு டிவி வேணாம்”
“அப்போ போன்ல எதாச்சும் பாட்டு கேளுங்க தூக்கம் வரும்”
“பாட்டு வேணாம்”
இதுக்கு மேல என்ன சொல்ல என்றெண்ணியவள் “காபி வேணுமா??”
“இல்லை இப்போ நீ தான் வேணும்” என்று சொல்லிவிட அப்போது தான் அவளுக்கு நினைவே வந்தது அவன் இந்த ஒரு வாரமாக அவளை தொடாதிருப்பது…

Advertisement