Advertisement

10
“நீ பண்ணது தப்பு ருத்ரா… அருளுகிட்ட நீ தானே சரின்னு சொல்லியிருக்க, அப்புறம் நீயே வேணாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்??”
“அம்மா நான் எதையும் யோசிச்சு எல்லாம் சொல்லலை. அவளுக்கு நல்லதுன்னு நினைச்சு தான் போக வேணாம்ன்னு சொன்னேன்”
“அவ வேலைக்கு போறாளோ போகலையோ எனக்கு அதைப்பத்தி கவலையில்லை. உன் இஷ்டத்துக்கு அவளை ஆட்டி வைக்கிறதை எல்லாம் நிறுத்திக்க, நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. நீயே போய் அவகிட்ட பேசி சமாதானம் பண்ணு”
“ம்மா நான் இப்போ என்ன தப்பு பண்ணுன்னு என்னை சமாதானம் செய்ய சொல்றீங்க…”
“நீ செஞ்சது சரியா தப்பாங்கற விவாதத்துக்கு இப்போ நான் வரலை. நீ தான் போய் அவகிட்ட பேசணும், இன்னைக்கு அந்த டாக்டர் எவ்வளவு பேசினாங்க நீ பார்த்த தானே”
“எனக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சுன்னு உனக்கு தெரியுமா. உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலை ருத்ரா. இனிமேலும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன். இந்த பிரச்சனை ஆரம்பிச்சது உன்னால அதனால நீ தான் போய் பேசணும்” என்று முடித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார் அவர்.
தலையை பிடித்து அப்படியே உட்கார்ந்துவிட்டான் ஆருத்ரன். ‘நான் போய் பேசணுமா இவகிட்ட’ என்ற எண்ணம் தான் ஓடியது அவனுக்கு. ‘ஆமா நீ தான் பேசணும் உன்னால தானே எல்லாம்’ என்று மனசாட்சியும் வேறு குத்திவிட பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.
வெளியில் வந்து பார்த்த அன்னப்பூரணிக்கு மகனை என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘பேசச் சொன்னா இவன் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டான்’ என்று கோபமாக வந்தது.
அந்நேரம் அவரின் மகள் போனில் அழைக்க “சொல்லு தாமரை எப்படியிருக்க?? நல்லாயிருக்கியா, புள்ளைங்க எப்படி இருக்கு, உன் புருஷன் நல்லா இருக்காரா” என்று மகளை பேசவிடாமல் அவரே தொடர்ந்தார்.
“அம்மா என்னை பேச விடேன் நீயே எல்லாம் பேசிட்டு இருக்க. எல்லாரும் நல்லா தான் இருக்காங்க. ரெண்டு நாள் முன்னாடி பேசும் போது சொன்னேன் தானே. எப்போ போன் பண்ணாலும் அதே கேட்டுட்டு”
“சரி சொல்லு தாமரை”
“என்னத்தை சொல்ல சொல்றம்மா. என்னம்மா நடக்குது அங்க, எப்படி இருக்கா உன் புது மருமக?? இவளும் அவளை மாதிரி இருந்திட போறாம்மா”
“தாமரை சும்மா தேவையில்லாதது எல்லாம் பேசாத. எல்லாரும் ஒரே மாதிரி கிடையாது” என்று மகளை கண்டித்தார்.
“என்னம்மா புது மருமகளுக்கு சப்போர்ட்டா… இப்படித்தான் அவளுக்கும் பேசுனீங்க…” என்று அவள் இழுக்கவும் “இப்போ எதுக்கு போன் பண்ணே அதை முதல்ல சொல்லு” என்றார் அவர் கடுப்பாக.
“என்னம்மா நான் வேண்டாதவ மாதிரி பேசுறீங்க” என்றாள் அவள்.
“தாமரை சொன்னா புரிஞ்சுக்கோ. உங்கம்மா தேர்வு தப்பா போயிருக்கலாம். அதுக்காக எல்லாமே தப்பாகிடாது. என்னைக்கு இருந்தாலும் அருள் உன்னோட தம்பி பொண்டாட்டி, அதை புரிஞ்சு பேசு…”
“எத்தனை நாளைக்கு இந்த மருமக??” என்று அவள் சொல்லிவிட போனை கட் செய்து அதை தூக்கி சோபாவில் எறிந்தார் அப்பெண்மணி.
மகள் மீண்டும் அழைக்க அவர் எடுக்கவேயில்லை. அவருக்கு எளிதில் கோபமென்பது வராது. அவர் பேச்சு தான் சத்தமாக அதிகாரமாக இருக்குமே தவிர கோபத்தை காட்டி யாரிடமும் அதிகம் பேசியதில்லை அவர்.
தாமரையின் பேச்சு அவரை ரணப்படுத்தியது. அந்த வார்த்தையை தன் மகனோ மருமகளோ கேட்டால் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்று துடித்தது அந்த தாயின் மனது.
உள்ளே சென்று மருமகளை பார்த்து வந்தார். அவள் இன்னமும் உறங்குவதாக பாவனை செய்துக் கொண்டிருக்க அவள் நிஜமாக உறங்குகிறாள் என்று எண்ணி வெளியில் வந்துவிட்டார் அவர்.
மருத்துவர் அவள் விழித்தும் அவளுக்கு உணவை கொடுக்கச் சொல்லியிருந்ததால் அருளாசினி கண் விழிப்பதற்காய் காத்திருந்தார் அவர்.
இரவு எட்டு மணி போல வீட்டிற்கு வந்தான் ஆருத்ரன். மாலை வெளியே சென்றவன் இப்போது தான் வந்திருந்தான்.
“ருத்ரா இவ்வளவு நேரம் எங்க போய்ட்ட??”
“வேலை இருந்துச்சும்மா காலையில இருந்து ஆஸ்பிட்டல்ல இருந்துட்டேன். இன்னைக்கு எல்லார்க்கும் சம்பளம் கொடுக்கணும்ல அதான் கிளம்பிட்டேன்”
“கொடுத்திட்டியா??”
“ஹ்ம்ம்…”
“அக்கா உனக்கு எதுவும் போன் பண்ணாளா??”
“ஹ்ம்ம் பண்ணுச்சும்மா”
“என்ன சொன்னா??”
“நீ போன் எடுக்கலைன்னு சங்கடப்பட்டுச்சு”
“அவளுக்கு ரொம்ப கொழுப்பு ருத்ரா தேவையில்லாம அதிகம் பேசினா. அதான் போனை வைச்சுட்டேன்”
“அக்கா பத்தி தான் உனக்கு தெரியும்லம்மா… அப்புறம் ஏன்??”
“தெரியாம என்ன ஆனாலும் அவ பேச்சு எனக்கு பிடிக்கலை…”
“விடும்மா நாளைக்கு பேசு”
“இல்லை எனக்கு எப்போ மனசு ஆறுதோ அப்போ தான் பேசுவேன்” என்று அவர் முடித்துவிட அன்னையின் பிடிவாதம் அறிந்தவன் மேற்கொண்டு அவரை வற்புறுத்தவில்லை.
“நீ சாப்பிட்டியாம்மா??”
“இன்னும் இல்லைப்பா…”
“நீங்க வேற ஏன்மா என்னை படுத்தறீங்க. நேரத்துக்கு சாப்பிடுங்கம்மா. சுகர், பிபின்னு எல்லாம் வைச்சுட்டு நீங்க சரியா சாப்பிடலைன்னா எப்படி??”
“நீ சொல்றது எல்லாம் சரி தான்…”
“அப்புறம் என்ன போய் சாப்பிடுங்க போங்க”
“அம்மா முக்கியம் தான். அந்த அம்மாவை கவனிக்கற மாதிரி தான் பொண்டாட்டியையும் கவனிக்கணும், எனக்கு பிறகு நாளைக்கு உனக்கு அவ தான் எல்லாம் செய்யணும்” என்று போகிற போக்கில் சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார் அவர்.
‘என்ன சொல்றாங்க இந்தம்மா’ என்று எண்ணியவாறே அவன் அறைக்குள் நுழையப் போக “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து சாப்பிடுங்க” என்றார் அவர்.
அதை காதில் வாங்கிக்கொண்டே அவர்கள் அறைக்குள் நுழைந்தான் அவன். அருளாசினி இன்னமும் உறங்கிக் கொண்டுதானிருந்தாள். அவளின் கருமணிகள் அசைவதிலேயே புரிந்து போனது அவள் விழித்திருக்கிறாள் என்று.
நேரே சென்று குளித்து வந்தவன் கட்டிலில் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான். “அருளாசினி” என்று அவளின் முழுப்பெயர் சொல்லி அழைத்தான்.
முதல் முறையாக தன் பெயர் சொல்லி அழைக்கிறான் என்று குறித்துக் கொண்டது அவள் மனது. விழிகளை மலர்த்தி அவனைப் பார்த்தாள்.
“பேசணும், பேசலாமா இப்போ??”
அவளிடம் பதில்லை மெதுவாய் எழுந்து அமர்ந்தாள். உடல் இன்னும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை அவளுக்கு. லேசாய் தடுமாற அவன் கைக்கொடுத்து அமர வைத்தான். பின்னால் தலையணை வைத்துவிட அதில் சாய்ந்துக் கொண்டாள். 
“இப்போ உனக்கு என்ன தேவை??”
மெல்ல சிரித்தாள் ‘இன்னுமா உனக்கு புரியவில்லை’ என்று கேட்பது போல இருந்தது அது.
“நான் உனக்கு நல்லதுன்னு நினைச்சு தான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கினான்.
“நான் பேசலாமா” என்றவளை நன்றாய் ஏறிட்டு பார்த்தான்.
“மூணு வேளை சோறு பாதுக்காப்பான இடம் அப்புறம் உனக்கு என்ன தேவைன்னு கேட்டீங்க…” என்று இடை நிறுத்தினாள்.
“மூணு வேளை சோறு கூட நான் விரும்பினா தான் சாப்பிட முடியும்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கிறேன். என்னோட தேவைகள் ஒவ்வொண்ணுக்கும் நான் உங்களை எதிர்பார்த்து நிற்கணுமான்னு சொல்லுங்க”
“அதிலென்ன தப்பிருக்கு”
“தப்புன்னு நான் சொல்லலை. நான் அப்படியிருக்க விரும்பலை, என்னோட அப்பாவோட வேலை எந்த நேரமும் எனக்கு கிடைக்கலாம். எங்க அப்பா பாதியில விட்டுட்டு போனதை நான் தொடரணும்ன்னு விரும்பறேன்”
“அதுவுமில்லாம நான் ஆசைப்பட்டு படிச்ச படிப்பு. எங்கப்பா மாதிரி ஒரு நல்ல ஆசிரியரா நான் வரணும், என்னோட லட்சியத்தை யாருக்காகவும் மாத்திக்க என்னால முடியாது, இதுக்கு மேல உங்களுக்கு எப்படி புரிய வைக்கன்னு எனக்கு தெரியலை”
“நீ வேலைக்கு போகணும் அவ்வளவு தானே…  தாராளமா போ, எப்போன்னு மட்டும் சொல்லிடு…”
“அப்பா வேலை கிடைக்கற வரைக்கும் நான் முதல்ல பார்த்திட்டு இருந்த நர்சரி வேலைக்கு போறேன்”
“எனக்கு அதெல்லாம் தேவையில்லை, என்னைக்குல இருந்து வேலைக்கு போகணும்”
“நாளைக்கே போகவா” என்றாள் அவன் அனுமதி கொடுத்த பரவசத்தில்.
“நாளைக்கு வேணாம்…”
“ஏன்??” என்றவளின் முகம் வாடிப் போனது.
“சனி ஞாயிறுல உங்க ஸ்கூல் இருக்க வாய்ப்பில்லை தானே” என்று அவன் சொல்லவும் அசடு வழிந்தாள்.
“எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்கு நீ ரெஸ்ட் எடுக்கறது நல்லது. திங்கள்கிழமை வேலைக்கு போனாப் போதும். எத்தனை மணிக்கு கிளம்பணும்ன்னு சொன்னா நான் வண்டிக்கு சொல்லிடுவேன்”
“இல்லை வண்டி எல்லாம் வேண்டாம். நானே போய்டுவேன் எனக்கு பஸ் நம்பர் மட்டும் சொன்னாப் போதும்”
“நீ சொன்னதை நான் கேட்டேன் தானே. நான் சொல்றதுக்கு மறுக்கறதா இருந்தா வேலைக்கே போக வேணாம். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை” என்றுவிட அமைதியானாள் அவள்.
“ருத்ரா” என்று குரல் கொடுத்துவிட்டு சில நொடிகளுக்கு பின் அறைக்குள் நுழைந்தார் அன்னப்பூரணி.
“வாங்கம்மா” என்றவன் கட்டிலில் சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டு அவன் அன்னைக்கு வழி கொடுத்தான் அமரச்சொல்லி.
“இருக்கட்டும் ரெண்டு பேரும் பேசிட்டே இருந்தா எப்படி சாப்பிட வாங்க??”
“நீங்க சாப்பிட்டீங்களா??”
“ஹ்ம்ம் சாப்பிட்டேன்” என்றவர் “ஆனாலும் அருளு உன் கோவத்தை நீ இப்படி சாப்பாட்டுல காட்டினது தப்பு. எதுவா இருந்தாலும் பேசி தீர்க்கணும். முடியலன்னா என்கிட்ட சொல்லியிருக்கணும்” என்றார் கண்டிப்பு குரலில்.
“அம்மா கிளம்பும்மா பேசாம. இப்போ எதுக்கு அவளை இப்படி சொல்றே” என்றான் ஆருத்ரன் எரிச்சலாய்.
‘இவன் பொண்டாட்டியை சொன்னா இவன் ஏன் கடுப்பாகுறான்’என்று எண்ணியவர் “ஏன்டா நான் இப்போ சொன்னதுல என்ன தப்பு”
“அவ சாப்பிட்டாளா இல்லையான்னு நீங்க தான் பார்த்திருக்கணும். இப்போ வந்து பேசினா ஆச்சா” என்ற மகனை ‘நீயா பேசியது’ என்பது போல் பார்த்தார் அவர்.
“ஏன்டா இவ எனக்கு பொண்டாட்டியா இல்லை உனக்கா” என்றார் அவர். உனக்கு நான் அம்மாடா என்ற பாவம் தான் அவரிடத்தில் இப்போது.
“ம்மோவ் என்னம்மா பேசறே??”

“பின்னே இவரு பொண்டாட்டியை இவர் பார்த்துக்க மாட்டாராம். நாங்க பார்த்துக்கணுமாம் ஆனா கேள்வி கேட்க கூடாதாம், ஒரு வார்த்தை பேசக்கூடாதாம்”
“அவகிட்ட என்னை பார்த்துக்கச் சொல்லி சொல்லத் தெரியுதுல. அவ சாப்பிட்டாளா இல்லையான்னு ஒரு நாளாச்சும் நீ கேட்டியா??”
“ம்மா…”
“நீ சொன்னதுல இருந்து அவ என்னை சாப்பிட வைச்சா. நான் அவளை சாப்பிட்டியான்னு கேட்டதுக்கு சாப்பிட்டேன்னு சொன்னா. இதுக்கு மேல என்னை என்னடா செய்யச் சொல்றே”
“நேத்து கூட நாம சேர்ந்து சாப்பிடலாம்ன்னு சொன்னேன். இல்லை அத்தை எனக்கு பசிக்கலை அப்புறம் சாப்பிடறேன்னு சொன்னா”
“அத்தை என்னை மன்னிச்சுடுங்க”
“நான் யாரும்மா உன்னை மன்னிக்க. இந்த வீட்டில உன் புருஷன் மட்டும் தான் இருக்காங்கற மாதிரி நீ நடந்துக்கிட்ட, அவனுக்கு எந்த நினைப்பும் இல்லை. ஆளாளுக்கு உங்க இஷ்டத்துக்கு நடந்துக்கிட்டு இப்போ எனக்கு தானே கெட்ட பேரு”
“என்னோட அக்கறையை உங்களுக்கு காட்டணும்ன்னு எனக்கு அவசியமில்லை. புருஷன் பொண்டாட்டிகுள்ள நடுவுல போகக்கூடாதுன்னு தள்ளியிருந்தா என்ன பண்ணி வைச்சிருக்கீங்க ரெண்டு பேரும்” என்று கத்தி தீர்த்துவிட்டார் அவர்.
“அத்தை எனக்கு அம்மா இல்லை. நான் பிறந்ததுல இருந்து அவளை நேர்ல பார்த்தது இல்லை, போட்டோல மட்டும் தான் பார்த்திருக்கேன். எங்கம்மா இருந்திருந்தா இப்படி தான் என்கிட்ட நடந்துப்பாங்களோன்னு உங்களோட கண்டிப்பும், கவனிப்பும் எனக்கு புரிய வைக்குது”
“மனசார கேட்கறேன் அத்தை. நான் பண்ணது தப்பு தான் என்னை மன்னிச்சுடுங்க” என்றாள் உளமார.
“வந்து சாப்பிடுங்க” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
திங்கள்கிழமை காலையில் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது அவள் பள்ளிச் செல்ல.

Advertisement