Advertisement

1
வடசென்னையின் முக்கிய பகுதியான ராயபுரத்தின் ஒரு பகுதி அது. மாளிகை என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல பெரிய மாடி வீடு அது, புதிதாய் கட்டப்பட்டிருந்த வீடு. அதன் முன் பகுதியில் இன்னமும் பிரிக்கப்படாத பந்தல் மாலை நேரக்காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
வாழை மரமும் என்னால் கணம் தாங்க முடியவில்லை எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடுவேன் என்பதாக ஊசலாடிக் கொண்டிருந்தது. அந்த பெரிய இரும்பு கேட்டை தள்ளி திறந்துக்கொண்டு வெளியில் வந்தார் அன்னப்பூரணி, அவ்வீட்டின் உரிமையாளர்.
தூக்கி செருகிய கொண்டை வெற்றிலை போடுவதால் காவியாய் இருக்கும் பற்களும் உதடுகளுமாக வாசலில் வந்து நின்றவர் “டேய் லோகு” என்று குரல் கொடுக்க வெளியில் போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன் ஓடிவந்து அவர் முன் நின்றான்.
“சொல்லுமோவ்”
“பந்தலை எப்போடா பிரிக்க போறீங்க, நாளைக்கு வந்து பிரிக்க சொல்லிடு. ஆமா எங்கடா போய்ட்டான் உங்க அண்ணன் மதியம் ஏதோ போன் வந்துச்சு எந்திச்சு போனவன் தான் இன்னும் வரலை”
“அண்ணன் வேலையா போயிருக்குமோவ்”
“ஏன்டா இத்தினி பேரு இருக்கீங்க அவன் ஒருத்தன் தான் எல்லாத்துக்கும் அலையணுமா. நல்லா பண்றீங்கடா நீங்க. இன்னைக்கு இன்னா நாளு தெரியும் தானேடா”
“அம்மா நான் எண்ணூர் வரைக்கும் போயிட்டேன்மா. நம்ம இஸ்மாயிலு தண்டையார்பேட்டைக்கு போய்ட்டான். உங்களுக்கே தெரியும் நம்ம முனியாண்டிக்கு இன்னும் வேலை பழகலைன்னு அதான் அண்ணனே கிளம்பிருச்சு…” என்றான் அவன்.
“ஆமா என்ன வேலையா போயிருக்கான். எந்த ஏரியாக்குடா போயிருக்கான்??”
“நம்ம தண்டலு கார்த்திக்கோட பாட்டி செத்து போச்சு, அதான் அண்ணன் அங்க போயிருக்கு வண்டி எடுத்துக்குனு”
“நல்லா இருக்குடா கதை. காலையில கல்யாணம் பண்ணிட்டு இப்போ அவன் போக வேண்டிய இடமாடா அது. இத்தனை பேரு இருக்கீங்கன்னு தான் பேரு, ஒண்ணுத்துக்கும் துப்பில்லை… அவனுக்கு சீக்கிரம் போனு போட்டு வரச்சொல்லுடா”
“நான் இப்போ பண்ணா எடுக்க மாட்டான், வேலை மேல இருக்கேன்னு சொல்லிருவான்… நீ பண்ணி பேசு அங்க போகணும்ன்னா நீ போயிட்டு வா இல்லைன்னா அந்த ராகுலை கூட்டிட்டு போய் விடு” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
உள்ளே வந்தவர் ஹாலின் இடது புறத்தில் இருந்த அந்த பெரிய படுக்கையறைக்குள் நுழைந்தார். “ஏன்மா இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்கவே இருக்கப் போறே?? பொழுது போவுது, எந்திச்சு போய் குளிச்சுட்டு வா, காபி போட்டு கொடுக்கறேன் குடிச்சுட்டு ரெடியாவு”
“உன் புருஷன் வந்திருவான் கொஞ்ச நேரத்துல” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர்.
அன்னப்பூரணி உள்ளே வந்ததும் அவரின் கணீர் குரலில் தன்னைப்போல எழுந்து நின்றிருந்தாள் அருளாசினி. காலையில் தான் அவளுக்கு திருமணம் முடிந்தது என்றால் யாரும் நம்பமாட்டார்கள், முகத்தில் அதற்கான களை சுத்தமாய் இல்லை. மற்ற நாளை போலத்தான் இருந்தாள். 
என்னே கழுத்தில் புதிதாய் மின்னியது அந்த மஞ்சள் கயிறு, அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. அதே கவலைதோய்ந்த முகம், முன்பு அதில் எப்போதும் ஒரு பயம் இருக்கும், இப்போது அது இல்லை.
கவலையை மீறிய ஒரு நிம்மதி உணர்வு தெரிந்தது அதில். அன்னப்பூரணி சொல்லவும் ஒரு பெருமூச்சுடன் தன் பெட்டி இருந்த இடத்தை நோக்கிச் சென்றாள்.
கையில் அகப்பட்ட ஒரு புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள். அவள் வெளியில் வரவும் அன்னப்பூரணி அவளை அழைத்தார்.
“இந்தம்மா இங்க வா…” என்றார் அவர் வெளியில் இருந்து.
அவள் வந்து நிற்கவும் “இதென்ன காகிதம் மாதிரி புடவையை எடுத்து கட்டியிருக்க, நல்ல புடவையா கட்டிட்டு நில்லும்மா. இந்தா அதுக்கு முன்ன இந்த காபியை குடி” என்று அவர் நீட்ட அதை வாங்கிக் குடித்தாள்.
காலையில் திருமணம் முடிந்த பிறகு உணவருந்தியது. மதியம் கூட சாப்பிட்டிருக்கவில்லை, தண்ணீர் கூட அருந்தியிருக்காததால் அந்த காபி அப்படியொரு இதமாய் இருந்தது அவளுக்கு.
“கொஞ்ச நேரத்துல பூ கொண்டு வரச்சொல்லியிருக்கேன், தலையை சீவிட்டு பூவை வைச்சுக்கோ. இங்க ஹால்ல வந்து உட்கார்ந்து டிவி பார்த்திட்டு இரு. உள்ள ரூம்ல கொஞ்சம் வேலையிருக்கு” என்றார் அவர்.
அவள் தலையாட்டவும் நகரப்போனவர் “ஆமா உன் பேரென்ன??”
‘என்ன என் பேரு கூட தெரியாதா இவங்களுக்கு. அப்புறம் எப்படி என்னை அவங்க பையனுக்கு கட்டி வைச்சாங்க’ என்று தான் பார்த்தாள் அவள்.
“என்ன பேரு தானே கேட்டேன் உன் சொத்தையா கேட்டேன். எதுக்கு இப்படி நிக்கறே??”
“அருளாசினி”
“அருளாசினியா எப்படி கூப்பிடுவாங்க…” என்று முணுமுணுத்தார் சத்தமாக.
“அருள்ன்னு கூப்பிடுவாங்க”
“ஆம்பிளை பேரு மாதிரி இருக்காது…” என்று கேட்டுவிட்டு “ஹ்ம்ம் சரி நானும் அப்படியே கூப்பிட்டுக்கறேன்” என்று முடித்துவிட்டார்.
குடித்து முடித்த கிளாசோடு அவர் அங்கிருந்து நகர “ஒரு நிமிஷம்மா” என்றாள் அவள்.
“நான் உனக்கு அம்மா இல்லை அத்தை இனிமே அப்படியே கூப்பிடு”
“ஹ்ம்ம் சரி அத்தை”
“எதுக்கு கூப்பிட்டே??”
“அதை என்கிட்ட கொடுங்க நான் வாஷ் பண்றேன்” என்றவள் கையை நீட்ட மறுக்காமல் கொடுத்தார் அவர்.
“நேரா போனா கிட்சன் தான், அங்க கழுவிக்க”
“ஹ்ம்ம்” என்றவாறே நகர்ந்தாள் அவள்.
சிறிது நேரத்தில் அவள் திரும்பி வரவும் வாசலில் “யக்கா பூ கொண்டாந்துருக்கேன்க்கா” என்ற குரல் கேட்க அன்னப்பூரணி அங்கு சென்றார்.
ஒரு பை நிறைய பூவை வாங்கிக்கொண்டு வந்தவர் அந்த பையில் இருந்த மல்லிகைப் பூவை எடுத்து அவளிடம் கொடுத்தார். “தலை சீவி இந்த பூவை வைச்சுக்கோ” என்றுவிட்டு நகர்ந்துவிட்டார்.
சிறிது நேரத்தில் இரு பெண்கள் உள்ளே வந்தவர்கள் இவள் இருந்த அறைக்குள் சென்றார்கள். வேலை முடித்து அவர்கள் வெளியில் வர அன்னப்பூரணியும் சமையலறையில் இருந்து வந்தார்.
“என்ன கனகா வேலை முடிஞ்சுதா??”
“முடிஞ்சுச்சுக்கா…”
“கொஞ்சம் உட்காரு காபி குடிப்ப”
“இருக்கட்டும்க்கா வீட்டுல வேலை இருக்கு, போட்டது போட்டபடி அப்படியே வந்துட்டேன்க்கா…”

“ஒரு வாய் காபி குடிச்சா ஒண்ணும் வேலை கேட்டு போகாது, இரு” என்றவர் “அருளு” என்று அழைக்க அருளாசினி திரும்பி பார்த்தாள்.
“அடுப்புல பாலு வைச்சிருக்கேன் காபி கலந்து எடுத்திட்டு வா…” என்று சொல்ல இயந்திரம் போல உள்ளே சென்றாள் அவள்.
“காப்பித்தூளு அடுப்புகிட்டவே வைச்சிருக்கேன், சக்கரையும் பக்கத்துலவே இருக்கு…” என்று வெளியில் இருந்தே குரல் கொடுத்தார் அவர்.
“ஏன்கா நீயே போடக்கூடாதா… அந்த பிள்ளை புதுசு தானே, எதெது எங்கெங்க இருக்குன்னு அதுக்கு தெரியாதுல”
“அதெல்லாம் அவ நல்லா செய்வா கனகா… இப்படியே விட்டா எப்போ இதெல்லாம் கத்துக்கறது” என்று அவர் முடித்துவிட்டார்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்க சிறிது நேரத்தில் காபியுடன் வந்தாள் அருளாசினி. ஒரு தட்டில் வந்தவர்களுக்கு மிக்சரும் பிஸ்கட்டும் கொண்டு வந்திருந்தாள்.
அதைப்பார்த்ததும் அன்னப்பூரணி திருப்தியுற்றவராக “எடுத்துக்கோங்க” என்று அவர்களை பார்த்து சொன்னார்.
வந்தவர்களும் சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். நேரம் தான் சென்றதே தவிர அவளுக்கு மாலையிட்டவன் இன்னமும் வீட்டிற்கு வந்தபாடில்லை.
அன்னப்பூரணி இங்குமங்கும் நடைப்போட்டு கொண்டிருந்தார். வெளி கேட்டுக்கு அருகே நின்றிருந்தவர் யாருக்கோ போன் போட்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தார். எல்லாம் காதில் விழுந்தாலும் அதை மனதில் ஏற்றிக்கொள்ளவில்லை அருளாசினி.
“அருளு” என்று அவர் அழைக்கவும் “சொல்லுங்க அத்தை” என்று வெளியில் சென்றாள்.
“இன்னும் என் மவன் வரலை, நீ சாப்பிடு அவன் கொஞ்ச நேரத்துல வந்திடுவான்…”
“இல்லை எனக்கு வேணாம்…”
“எது சாப்பாடா”
“ஹ்ம்ம்”
“ஏன்??”
“பசிக்கலை”
“காலையில சாப்பிட்டது தானே, எப்படி பசிக்காம இருக்கும். போ போய் சாப்பிட்டு சொல்றதை கேளு” என்றார் அவர் அதிகாரமாய்.
அந்த தோரணையில் அவள் தலை தன்னைப்போல ஆடியது. “எல்லாமே மேசையில இருக்கு, எடுத்துப்போட்டு சாப்பிடு”
“ஹ்ம்ம்…” என்றவள் தயங்கி நின்றாள் உள்ளே செல்லாமல்.
“இன்னும் என்ன??”
“இல்லை வந்து நீங்க… நீங்களும் சாப்பிட வாங்களேன்” என்று அவள் சொல்லவும் கடுகடுவென்றிருந்த அவர் முகம் ஒரு நொடி இளகியது அவளின் பேச்சில்.
“நான் சாப்பிடாம எங்கே போகப் போறேன். அவனை கூட்டிட்டு வரச்சொல்லி சொல்லிவிட்டிருந்தேன். அது என்னன்னு பார்த்திட்டு வர்றேன், நீ போய் சாப்பிடு” என்றார் சற்று தணிந்த குரலில்.
அவள் உணவருந்தி முடித்து மீண்டும் ஹாலில் வந்து அமர உள்ளே நுழைந்தார் பூரணி. “சாப்பிட்டியா??”
“சாப்பிட்டேன் அத்தை”
“இப்போ வந்திடுவான் நீ உள்ளார ரூமுக்கு போய்டு, தூங்கிராத… நான் சாப்பிட்டு பாலை காய்ச்சி பிளாஸ்க்ல ஊத்தி எடுத்தாரேன்” என்று சொல்லி நகர அவள் எழுந்து அறைக்குள் சென்றாள்.
அறைக்கதவை திறக்கவும் குப்பென்று பூவின் மணம் நாசியை நிறைத்தது. கட்டில் முழுக்க பன்னீர் ரோஜாவினால் அலங்கரிப்பட்டிருந்தது.
‘இப்படியொரு நாள் என் வாழ்க்கையில வரும்ன்னு நினைச்சு கூட பார்க்கலை…’ என்றெண்ணியவளுக்கு கண்கள் கரித்து கண்ணீர் பெருகியது. 
வெகு நேரமாய் அமர்ந்து இருந்தவள் பூரணி பிளாஸ்க்கை கொண்டு வந்து வைத்த பின்னர் சற்று  பின்னால் சாய்ந்து படுக்க வெகு நாட்களாய் உறக்கம் தொலைத்திருந்த அவள் விழிகள் தன்னைப்போல மூடிக்கொண்டது. பன்னிரண்டு மணிக்கு மேலே தான் வீட்டிற்கே வந்திருந்தான் ஆருத்ரா.
கதவை அவனே திறந்துக்கொண்டு உள்ளே வந்தவன் வலது  புறத்தில் இருந்த படுக்கையறையை எட்டிப் பார்க்க அங்கே அவன் அன்னை அன்னப்பூரணி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு கதவை சாற்றிவிட்டு எதிர்புறத்தில் இருந்த அவன் அறைக்குள் நுழைந்தான்.
லேசாய் சாற்றியிருந்த கதவை திறக்க அங்கு அவன் மனைவி ஓவியமாய் படுத்திருப்பது கண்ணில் விழ அவளை ஓரிரு நிமிடம் நின்று பார்வையால் விழுங்கியவன் குளியலறை நோக்கிச் சென்றான்.
அவன் வந்த அரவம் கேட்டதுமே கண் விழித்திருந்தாள் அருளாசினி. அவன் குளியலறை செல்லவும் அவள் எழுந்து அமர்ந்தாள்.
அவன் குளித்து வெளியே வந்தவன் “முழிச்சிட்டியா?? இவ்வளவு நேரம் தூங்காமையா இருந்தே??”
“இல்லை இப்போ தான்…”
“ஓ!! சரி தான்” என்றவன் கதவை தாழிட்டு வந்து அவளருகே அமர்ந்தான்.
“நீ தூங்கி இருந்தாலும் நானே எழுப்பியிருப்பேன்”
“என்ன விஷயம்??” என்று அவள் கேட்க அவன் கரம் விளக்கணைத்து அவள் தோளில் கைவைத்தது. அவனின் முரட்டுத்தனமான அதரங்கள் அவள் கன்னத்தில் அழுந்த பதிந்தது.

Advertisement