Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 9
கதிர், அஞ்சலி இருக்குமிடம் சென்று அவளையே பார்த்தபடி நிற்க,   கோவிலில்
கூடியிருந்த எல்லோரின் பார்வையும் இவர்கள் மேல் தான் சுவாரசியமாக படிந்து
மீண்டது, அவர்களின் பார்வை எல்லாம்  கதிரை பாதித்தாகவே தெரியவில்லை,
அவன் அஞ்சலியைவே  தீவிரமாக நோட்டமிட்ட படி, ஸ்வேதாவிடம்,  “மாமாக்கு
பொட்டு” என்று தன் வெறும் நெற்றியை காட்ட, அஞ்சலிக்கு முள்ளின் மேல்
அமர்ந்திருப்பது போல் இருந்தது,
“பொட்டு..”  என்றதும் 6 வயது ஸ்வேதாவிற்கு, இது அவளின் பழைய விளையாட்டு
என்பது ஞாபகம் இருந்தாலும், கதிரை ஞாபகம் இல்லாமல் தயக்கமாக  பார்க்க,
அவளின் தயக்கத்தை புரிந்து தோளை குலுக்கி கொண்ட கதிர், விலகி செல்ல
நினைக்கும் பொழுது,
அங்கு வந்த கொண்டிருந்த அசோக்கை பார்த்தவனின் முகத்தில் நொடியில் தோன்றி
மறைந்த கோவகுறுஞ்சிரிப்பில் அவனை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த
அஞ்சலி  உஷராக அவனை பார்த்தாள்,
“அவளின் எண்ணம் சரியே..!!”   என்பது போல், கண்களில் பயத்தோடு தன்னை
பார்த்தவாறு  அமர்ந்திருந்த அஞ்சலியை நெருங்கியவன்,  அவளின் கையில்
வைத்திருந்த பூஜை கூடையில் இருந்த திருநீறையும், குங்குமத்தையும்,
மெலிதாக நடுங்கி கொண்டிருந்த அஞ்சலியின் கையை பிடித்து இழுத்து விரலில்
தொட செய்து,   தன் நெற்றியில் வைத்து விட, அஞ்சலியோடு பார்த்து
கொண்டிருந்த அனைவருமே திகைத்து போயினர்,
எல்லாம் கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்துவிட, அவனையே பார்த்து கொண்டே
வேகமாக வந்த அசோக், கதிரின் செயலில், அவனை கோவமாக  நெருங்கி,
ஆத்திரத்தோடு “என்னடா செய்ற நீ..?” என்று  கத்தவே செய்தான்.
கதிரோ அசோக்கின் கோவத்தால் பாதிக்கப்பட்டதாகவே தெரியவில்லை, எப்போதும்
போல் அலட்சியமாக,  “நான் என்ன செஞ்சேன்..?  பொட்டு வைக்கிறது ஒன்னும்
தப்பில்லையே..!!”   என்று  ஒன்றும் தெரியாதவன் போல் மறுபடியும் அசோக்கையே
பார்த்து கேள்வி  கேட்க, “இவன் மட்டும் எப்பவும் கேட்ட கேள்விக்கு பதில்
சொல்லவே மாட்டான்..” என்று கதிரை பார்த்து நொந்தவன்,
“பொட்டு வைக்கிறது  ஒண்ணும் தப்பில்லை,  ஆனா அஞ்சலி கையை பிடிச்சி ஏண்டா
வச்ச..?”  என்று குமுறவே,
“ம்ம்.. வேண்டுதல், அவ கையில தான் இன்னிக்கு போட்டு வச்சிக்கணும்ன்னு
வேண்டுதல் அதான்”, என்று நக்கலாக வார்த்தையாட,
“ம்ஹூம்.. இவன் அடங்கமாட்டான்”,  எவ்வளவு நேரம் பேசினாலும் இவன்
இதுபோலத்தான் பேசி வைப்பான், இது வேலைக்காகாது,  இவன்கிட்ட அப்பறமா
பேசிக்கலாம், “எல்லாரும் வேற இங்கேயே தான் பார்க்கிறாங்க,  அப்பறம்  வேறு
வினையே வேண்டாம்”  என்று அவசரமாக முடிவெடுத்தவன், தன் குடும்பத்தை கிளம்ப
சொல்ல, அவர்களுக்கும் அங்கிருந்து செல்லவே விருப்பம் என்பதால், வேகமாக
கிளம்பவும்,
படக்கென  தன்னை கடந்த அஞ்சலியின் கையை பிடித்து விட, விதிர் விதிர்த்து
போன அஞ்சலி, பயத்துடனும், பதட்டத்துடனும் அவனை பார்க்க, அவனோ குறும்பாக
சிரித்தபடி, அவளின் தலையிலிருந்த இலையை தட்டிவிட, அவனின் செயலில் மிச்சம்
மீதி  இருந்த பொறுமையும் பறந்துவிட,  கோவமாக அவனை நெருங்கிய அசோக்,
 “டேய்.. அவ கையை விட்றா முதல்ல..”  என்று கத்தியவாறே, அவனின்
கையிலுருந்து அஞ்சலியின் கையை பிரிக்க,  “ம்ஹூம்.. நானா விட்டாதான்
உண்டு..”  என்றவனை, மேலும் ஆத்திரமாக பார்த்த அசோக்,
“வேண்டாம்டா..   இதெல்லாம் செய்யாதா..? எல்லாரும் இங்கேயேதான்
பாக்கிறாங்க,”  என்று கண்களில் எச்சரிக்கை மின்ன  சொல்ல,
“எது எல்லாம் செய்யக்கூடாது..?”  என்று வேண்டுமென்றே , அவன் கண்கள்
காட்டும் எச்சரிக்கயை புறக்கணித்தவன்,  இன்னும் அஞ்சலியின் கையை விடாமல்
பிடித்தபடியே இருக்க,  அஞ்சலியோ அவனிடமிருந்து கையை விடுவிக்க இழுக்க,
அவளை திரும்பி பார்த்து நக்கலாக சிரித்தவன், மறுபடியும் அசோக்கை
கடுப்பேத்த ஆரம்பித்தான்.
“டேய்.. சொன்னா கேளு, முதல்ல  அவ கையை  விடு..”   என்று மறுபடியும் அசோக்
கேட்கவும், கதிரின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து, அவ்விடத்தில் கடுமை
தேங்க ஆரம்பித்தது,
“ஏன்.. அப்போதான் உன் தங்கச்சிக்கு  அந்த ராஜேஷ் மாப்பிள்ளையா வருவானா..?
 என்று  உக்கிரமாக கண்களில் கனலோடு அஞ்சலியின் கையை விடாமல் இறுக்கி
பிடித்தவாறே கேட்க,
அவனின் கேள்வியில் அதிர்ந்த அசோக்  கண்களில் மெலிதான பயத்துடன் அவனை
பார்க்க,  கதிரின் கை இறுக்கத்தில் வலித்த கையை விடுவிக்க போராடி
கொண்டிருந்த அஞ்சலி,  கதிரின் கேள்வியில் அதிர்ந்து,  அச்சத்தோடு அவனை
பார்த்தவள், பின் வேகமாக திரும்பி தன் அண்ணனை முறைத்து பார்த்தாள்.
கதிரின் பேச்சிலும், செயலிலும் கொதித்து போயிருந்த லதா, அவனின்
கேள்வியில், தன் பொறுமையை கைவிட்டவர்  கோவமாக, “ஏன் எங்க அஞ்சலிக்கு
மாப்பிள்ளை பார்த்தா என்ன தப்பு..? என்று அவனால்  தினம் தினம்  அஞ்சலி
படும் வேதனையை பார்த்து மனம் நொந்திருந்தவர்  எகிறவே  செய்தார்.
“என்னது அவளுக்கு மாப்பிள்ளை பாக்கிறதுல என்ன தப்பா..?” என்று திடீரென
ஆங்காரமாய் கர்ஜிக்க, அவனின் அதீத கோவத்தில் நடுங்கி போன அஞ்சலி,
பயத்துடன் கதிரை பார்க்க, அவனின் முகம் மிகவும் இறுகி செந்தணலாக கொதித்து
கொண்டிருந்தது, அப்போதும் லதா மறுபடியும் விடாமல்,
“ஆமா.. அவளுக்கு மாப்பிள்ளை பாக்கிறதை பத்தி நீங்க ஏன் கேள்வி கேட்க
கேட்குறீங்க..?” என்று பொரிய,  அதில் கதிரின் கோவம் அதிகம்தான் ஆகியது,
அதை அஞ்சலியும், அசோக்கும் உணர்ந்து கொண்டாலும், லதா கிடைத்திருக்கும்
சந்தர்ப்பத்தை விட மனமில்லாதவராய், மேலும்,
“அஞ்சலி விஷயத்துல கேள்விகேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை”,  என்று
கொந்தளிக்க,
“அஞ்சலி மீதான உரிமையை பற்றி லதா பேசவும்”,  பற்றியிருந்த அஞ்சலியின்
கையை மேலும் இறுக பற்றியவன், அசோக்கை நெருப்பு பார்வை பார்த்தான். அதில்
நொந்து போன அசோக், “ஏய் கொஞ்ச நேரம் பேசாம  இருடி..” என்று லதாவை அதட்ட,
“ஏங்க அவர் பேசுறதை கேட்டீங்கல்ல” என்று லதா கணவனிடம்  கோவமாக கேட்கும்
போதே,  “அண்ணி ப்ளீஸ் அண்ணி” என்று அஞ்சலியும், “பேசாம இருடி..” என்று
அசோக்கும் கோவமாக  கத்த,
 “ம்க்கும்..”  என்று வாயை மூடிக்கொண்டு  கோவமாக முகத்தை திருப்பி கொண்ட
லதா, கதிரை முறைப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவனோ லதாவின் முறைப்பை
கண்டுகொள்ளாமல்,
அஞ்சலியையும், அசோக்கையும் மிகக்கடுமையாக பார்த்தவன்,  ஒரு  விரல்
நீட்டி, “கொன்னுடுவேன்..”  என்று மிரட்டியவன்,  உடனடியாக அங்கிருந்து
கிளம்பிவிடவும்,
அஞ்சலி கோவத்துடனும், பதட்டத்துடனும்,   “ண்ணா.. அவர் என்ன என்னமோ
சொல்லறாரு, அதெல்லாம் உண்மையா..?”  என்று   கேட்க,  அசோக்கிற்கு   இவளை
வேற சமாளிக்கணுமா..? என்று சலிப்பாக இருந்தது,
“ஒரே ஒரு ப்ரண்டையும்,   ஒரே ஒரு தங்கச்சியும் வச்சிக்கிட்டு நான் பட்ற
பாடு இருக்கே  கடவுளே..!!”   என்று மனதுக்குள் நொந்தவன், வெளியே
அஞ்சலியிடம் “அண்ணன் என்கிற அதிகாரத்தோடு தான் பேசினான்”, இல்லயெனில்
அஞ்சலியை சமாளிக்க முடியாதே.
 “அஞ்சலி எது பேசறதா இருந்தாலும், நீ ஈவினிங் டியூட்டி முடிச்சிட்டு
வந்ததுக்கு அப்பறம் பேசிக்கலாம்,  இப்போ முதல்ல ஹாஸ்பிடலுக்கு கிளம்பு,
முதநாளே லேட்டா போகணுமா..?  கிளம்பு”  என்று அஞ்சலியை பேசவிடாமல்,
அவசரமாக கிளப்பி கொண்டு ஹாஸ்பிடலில் விட்டபிறகே நிம்மதியானான் அசோக்.
ஆனால் அவனின் நிம்மதி மாலை வரைதான் நீடித்தது, அஞ்சலி வந்தவுடனே அவனிடம்,
கதிர் சொன்னதற்கு விளக்கம் கேட்டு பிடிவாதமாய் நிற்க,  வேறுவழி இல்லாமல்
பஞ்சாயத்து நடந்த அன்று இரவு சுந்தரம் சொன்னதை சொல்லிவிட்டான்,
அதில் அதிர்ந்து போன அஞ்சலி,  கண்களில் பயத்துடனும், கலக்கத்துடனும் தன்
அண்ணனை பார்க்க, அவளின் உணர்வுகளை புரிந்து கொண்ட அசோக், பாசமாக அவளின்
தலையை கோதியவன்,   “ச்சு.. பயப்படாத அஞ்சலி, எல்லாம் சமாளிச்சிக்காலம்
சரியா”, என்று ஆறுதல் சொல்லவும் தான் அஞ்சலிக்கு சிறிது  நிம்மதியானது,
இப்படியே இன்னும் ஒரு வாரம்  கழிந்துவிட, அன்று இரவு அவளின் அறைக்கு வந்த
மீனாட்சி மகளிடம், அவளின் திருமணத்தை பற்றி பேச, பதறி போனவள்,
“வேண்டாம்..”  என்று உறுதியாக மறுக்கவும்,
“அஞ்சலி.. இப்போ கல்யாணம் செஞ்சுகிறதுல  உனக்கு என்ன பிரச்சனை..?” என்று
மீனாட்சி, மகளிடம் ஆதங்கமாக கேட்க,
 “ம்மா.. ப்ளீஸ், நான் இன்னும் கொஞ்சநாள் இப்படியே இருக்கேனே, எனக்கு
கல்யாணம் எல்லாம் வேண்டாம்மா..” என்று அஞ்சலி இறைஞ்சுதலோடு தன்
அம்மாவிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே.
 “இப்போ கல்யாணம் வேணாமா..? இல்லை எப்பவும் கல்யாணம் வேணாமா..?” என்று
கூர்மையாக கேட்டபடி சுந்தரம் வர,   “ப்பா..”  என்ற அஞ்சலி பதில் சொல்ல
முடியாமல் திணற,
“சொல்லு அஞ்சலி, இப்போ கல்யாணம் வேணாம்ங்கிறீயா..? இல்லை எப்பவுமே
வேணாம்ங்கிறியா..?” என்று சமீபகாலமாக அவரின் மனதில் முளைத்த உறுத்தலுடன்
மகளை கூர்மையாக பார்த்தபடி அழுத்தமாக கேட்டார் சுந்தரம்.
அவரின் கூர்மையான பார்வையிலும், சந்தேகமான பேச்சிலும், கலக்கம் கொண்ட
அஞ்சலியின் மனம் நிலையில்லாமல் தவிக்க ஆரம்பித்தது.  “அவளால்  எப்படி
தனக்கு திருமணம் வேண்டாம்ங்கிற  காரணத்தை சொல்ல முடியும்..?”
காரணத்தை மட்டுமா சொல்ல முடியாது..? அவரிடம் தன் மனதை  பற்றியும்,  அதில்
கதிர் மேல் இன்னமும் தனக்கு  இருக்கும் காதலை  பற்றியும் தானே சொல்ல
முடியாது, இப்போது மட்டுமல்ல.. எப்போதும் தானே,
 “அவளால் எக்காலத்திலும்.. எச்சூழ்நிலையிலும்..  கதிரை  தன் மனதை விட்டோ,
வாழ்க்கையை விட்டோ  ஒதுக்க  முடியாதே, அப்படி இருக்கும் போது அவளால்
எப்படி திருமணம்..? நினைக்கும் போதே கதிரை நினைத்து பயம் வேறு வந்து
தொலைத்தது, அதுவே அவளுக்கு இன்னுமும் கோவத்தை கூட்டியது,
 “தப்பு செய்தது அவன், ஏன் இன்னமும் செய்து கொண்டிருக்கிறான், அவனின்
செயலால், வைராக்கியத்தால் மாட்டிக்கொண்டு தவிப்பது அவள்தானே”, என்று
மனதில் குமுறியவள்,
தந்தையின் திருமண பேச்சில்  “எல்லையில்லா வெறுப்பும்,  ஒவ்வாமையும்
தோன்றவே”, தன்னை அறியாமலே முகத்தை சுழித்து விட்டாள்,
அவளின் முகத்தையே கூர்மையாக, ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருந்த
சுந்தரத்திற்கு மகளின் முகத்தில் தெரிந்த ஒவ்வாமையில் கவலையே உண்டானது,
“அஞ்சலிக்கு ஏன்  திருமணம் செய்ய பிடிக்கவில்லை..? என்ன காரணமாக
இருக்கும்..?”  என்று அடுத்து வந்த நாட்களில் எல்லாம் அதுவே பெரிய
யோசனையாக இருந்தவர், தாளமுடியாமல்  ஒரு நாள் மகளை அழைத்து அவளிடமே
கேட்கவும்  செய்தார்,
“ஏன் பாப்பா உனக்கு கல்யாணம்  செஞ்சுக்க பிடிக்கலை..? ஏதாவது காரணம்
இருக்கா..? இல்லை யாரையாவது..?”  என்று “மகளிடம்  நீ யாரையாவது
காதலிக்கிறாயா..?”  என்று ஒரு அப்பாவாக கேட்க முடியும், அதனாலே கேட்க
முடியாமல் தடுமாற, அஞ்சலிக்கு   தந்தையின் தடுமாற்றத்தில், தன்னை குறித்த
கவலையில்,  குற்ற உணர்ச்சியே உண்டானது,
“ஆனாலும்.. ம்ஹூம்.. கண்டிப்பாக முடியாதே..?” என்று மனதை கல்லாக்கி
கொண்டவள், தந்தையிடம் சமாதானமாக,
“ப்பா.. அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீங்க என்னை நினச்சு கவலைப்படறதை
பார்க்க எனக்கு உண்மையிலே ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா”, என்று
வருத்தத்துடன் சொன்னவளின், கையை பிடித்து கொண்ட சுந்தரம்,
 “அப்பறம் ஏன் பாப்பா கல்யாணம் செய்ய ஒத்துக்க மாட்டேன்கிற..?” என்று
கவலை கலந்த சந்தேகத்தோடுதான் கேட்டார், அவரின்  தொடரும் சந்தேகத்தில்,
உள்ளுக்குள் மறுகிய அஞ்சலியால்  “எப்படி நடந்ததை பற்றியும், கதிரின் மேல்
தான் கொண்ட காதலை  பற்றியும்  சொல்ல முடியும்”,
“அதுவும் தங்கள் இருவருக்கும் இடையில் உள்ள மலையளவு பகையில்,   எந்த
முகத்தை வைத்து கொண்டு, நான் அவரை காதலிக்கிறேன்..” என்று சொல்வது,
“அதுவும் நான் மட்டுமே அவரை 8 வருடமாக காதலிக்கிறேன், அவர் இல்ல,   ஏன்
அவருக்கு என் காதல் தெரிய கூட செய்யாது”,  என்று  இதையெல்லாம் மனதில்
நினைக்கும் போது, அவளுக்கே அவளின் செயல் பெரிய அபத்தமாக தெரிய, இன்னும்
மனதில் சோர்ந்து போனாள் அஞ்சலி.
“காதல்..”  இந்த ஒரு சொல், தன் வாழ்க்கையில், மனதில் எப்படி..? எப்பொழுது
வந்தது.?  என்று அவளுக்கே தெரியாத போது, அவளால் எப்படி தன் மனதை
கடிவாளமிட்டு தடுத்திருக்க முடியும்..?
ஆனால் வந்துவிட்டதே..!!, “வந்த காதல் அவள் உயிர் வரை பாய்ந்து இரண்டற
கலந்து விட்டதே, அவளால் எப்படி அதை வெளியேற்றவோ..? ஒதுக்கவோ..? மறக்கவோ
..?” முடியும்,
“ஏன் இப்பொழுதும் அவள் கதிரை  காதலித்ததற்காக வருத்தப்படவே இல்லையே,
அவளின் வருத்தமெல்லாம் தன் காதலை எப்படி மற்றவர்களுக்கு சொல்லி புரிய
வைக்க முடியும்..?”  என்பதே, சுந்தரம் தன் முகத்தையே பார்ப்பதை கண்டு
சுதாரித்து கொண்ட அஞ்சலி,
 “எனக்கு இன்னும் கொஞ்சநாள் மட்டும் டைம் கொடுங்கப்பா, ப்ளீஸ்..” என்று
கெஞ்சிவளின் மனதில்   “இதற்கு நிரந்தர வழி கண்டுபிடிக்க வேண்டும்” என்றே
இருக்க, அதற்கு தான் டைம் கேட்டாள்,  மகள் கெஞ்சவும், இப்போதைக்கு
ஒத்துக்கொண்ட சுந்தரம்,
“சரி பாப்பா..  ஆனால், அடுத்த டைம் என்கிட்ட  நீ இதையே எதிர்பார்க்க
கூடாது” என்று முடிவாக சொல்ல, அவரிடம் தெரிந்த உறுதியில் அஞ்சலியின்
மனதிற்குள்  “திக்கென்று”  இருந்தாலும், வெளியே சாதாரணமாக, “சரிப்பா..”
என்றுவிட்டாள்.
நாட்கள் வழக்கம் போல் நகர்ந்து கொண்டிருக்க, அஞ்சலி தன் கலங்கும் மனதை
நிலைப்படுத்தி கொண்டு,  தான் மிகவும் நேசிக்கும் டாக்டர்  பணியில்
முழுமனதாக  தன்னை ஈடுபடுத்தி கொண்டாள்,
அன்றும் அதுபோல காலையிலே சீக்கிரமாக  ஹாஸ்பிடல் டியூட்டிக்கு காரில்
சென்று கொண்டிருக்கும் போது, கார் வழியிலே பிரேக் டவுன் ஆகிவிவிட,
அவளுக்கு அளவில்லா பதட்டம் உண்டானது,
அன்று  சீனியர் டாக்டருடன்  நடக்கும் ஆப்ரேஷனிற்கு  அசிஸ்டன்ட்டாக இருக்க
  அவளை தான் சொல்லயிருந்தனர். அதனாலே சீக்கிரமாக கிளம்பி வந்தவளை கார்
இப்படி காலைவரிவிட, பதட்டத்துடனே,
“அண்ணா.. உங்ககிட்ட நான் நேத்தே சொல்லியிருந்தேன் இல்லை, இன்னிக்கு
என்னோட டியூட்டி ஆப்பரேஷன் தியேட்டர்லன்னு, இன்னும் கொஞ்ச நேரத்துல நான்
அங்க இருக்கணும், இப்போ என்ன செய்ய..?”  என்று தங்கதுரையிடம் கேட்டு
கொண்டே, போன் எடுத்து உடனே வரச்சொல்லி அஷோக்கிற்கு தகவல்
சொல்லிக்கொண்டிருக்க,
அப்போது சரியாக  புல்லட்டில் வந்த கதிர், இவர்கள் கார் நின்று
கொண்டிருப்பதை பார்த்து விட்டு, வண்டியை நிறுத்தியவன், வண்டியிலே
அமர்ந்தபடி, தங்கதுரையை கூப்பிட்டு “என்ன  பிரச்சனை..?” என்று அஞ்சலியின்
முகத்தில் தெரிந்த பதட்டத்தை பார்த்தபடியே விசாரித்தான்,
அவனின் வரவில் முன் போல் அஞ்சலிக்கு அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை,
இப்பொழுதெல்லாம் அவள் எங்கு சென்றாலும், ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அவள்
கண்களில் பட்டு விடுவான், அவள் ஹாஸ்பிடல் டியூட்டி முடித்துவிட்டு
வரும்போதோ,  இல்லை போகும்போதோ கண்டிப்பாகவே வழியில் தென்படுவான்.
முன் போல் எல்லாம் அவனின் தரிசனத்திற்கு அஞ்சலி மெனக்கெடவோ.. ஏங்கவோ
வேண்டியதில்லை தான், ஆனாலும் அவனின் தொடர் வருகையை வெறுக்கும் மனம், அவன்
வராமல் இருந்தால் தவிக்கவும் செய்தது,
அவன் தூர நின்றாலும் வெதும்பும் காதல் மனம், அவன் அருகில் வந்தாலும்
வெதும்பும் தான் செய்கிறது.. ஆனால் “காதலால் அல்லாமல்  விரக்தியில்,
வருத்தத்தில்”,
முன்னெல்லாம் தன்னை முழுமூச்சோடு தவிர்த்தவன், “இன்று தன்னை விடாமல்
தொடரும் காரணம்..?”  அதை நினைக்கும் போதே நெஞ்செல்லம் கனத்தது,
இதுதான் “வாழ்நாள் முழுமைக்குமான தன் விதி, நிலை” என்று உறுதியாக
தெரிந்தாலும், ஒரு சதவீதம் கூட அதை ஏற்று கொள்ளமுடியாமல் அவ்வப்போது
விரக்தியில், வலியில் ரணமாக கொதிக்கும் தன் மனதை சமன்படுத்துவதே
அஞ்சலிக்கு பெரும்பாடாக இருந்தது,
இவை எல்லாவற்றை விட “இத்தனை வருட தன் தவக்காதலுக்கு கிடைத்த
அங்கீகாரத்தை, தோல்வியை தான் அவளால் தாங்கவே முடியவில்லை”,     அதுவே
அவளை  இன்னும் இன்னும் கதிர் மேல் கோவத்தை காட்ட  தூண்ட, அவனோ அவளின்
கோவத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை,
எப்பொழுதும் போல் வருபவன், பார்க்கும் தூரத்தில் இருந்து அவளை தீர்க்கமாக
பார்ப்பதோடு சரி, பேச முயற்சி செய்வதே இல்லை. இதோ இப்பொழுதும் வந்தவன்,
அஞ்சலியை பார்த்து கொண்டே தான் தங்கதுரையிடம் விசாரிக்க,  கேட்டு
தெரிந்து கொண்டு, “ஏதாவது செய்வான்..?” என்று மனதில் ஒரு மூலையில் அஞ்சலி
நம்பி கொண்டிருக்க,
அவனோ..  “அண்ணே  உங்க மகன் இப்போ பன்னிரண்டாம் வகுப்பு தானே.. நல்லா
படிக்கிறானா..?” என்று அவரிடம் கதை பேச ஆரம்பித்துவிட,  அவனின் செயலில்
கடுப்பான அஞ்சலியால், மனதிற்குள் அவனை வறுக்க மட்டுமே முடிந்தது,
 அப்பொழுது “என்ன பிரச்சனை அஞ்சலி..?”  என்று அவ்வழியாக வந்த அஞ்சலியின்
ஒன்று விட்ட “மாமா மகன் ராகுல்”, அங்கிருந்த கதிரை சந்தேகமாக பார்த்தபடி
கேட்டான்.

Advertisement