Advertisement

“கதிர்..  நீ அவங்க பொண்ணை தூக்கினதால அவங்க பாதிக்கபட்டிருக்காங்க, அதை
இல்லன்னு நீ சொல்லவே முடியாது, அதுக்கு உன்னோட பதில் என்ன..?”  என்று
தலைமை கண்டிப்புடன் கேட்க,
“அவங்க செஞ்சதால  நான் பாதிக்கப்படலயா..?,  என்னோட  கல்யாணம் நின்னது
இல்லாமல், என் உசுருக்கு உசுரான என் அம்மாவையும்  பறிகொடுத்துட்டு நான்
இப்பவரைக்கும் கஷ்டப்பட்டுட்டு இருக்கேனே, அதுக்கு  உங்களோட பதில்
என்ன..?,  என்று கண்களில் வலியோடு ஆத்திரத்தோடு கர்ஜித்த கதிரை கண்ட
மாறனிற்கும், அசோக்கிற்கும்  வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ந்து
எல்லையில்லா கோவத்தோடு,
“இதுக்கும் மூணு வருஷத்துக்கு முன்னாடி  வந்த பிரச்சனை எனக்கும்,
ரத்தினத்துக்கும் வந்த பிரச்சனை, ஆனா அதை ஊர் பிரச்சனையா, கட்சி,
இனப்பிரச்சனையா மாத்தினது நானோ, ரத்தினமோ கிடையாது, நீங்க எல்லாம்தான்”,
“நான் சொல்ரது எங்க பக்க ஆளுங்களையும் சேர்த்துதான், ஆனா இதுல
பாதிக்கப்பட்டது யார்ன்னா..?  நான்தான்..,  உங்க  எல்லாருடைய சண்டையால,
பேச்சால தான் எங்க அம்மா மனசுடைஞ்சு, உடம்பும் தாங்காம, மனசும்
தாங்காம..?? “
“அதனால நீங்க ஒரு பக்க பாதிப்பை மட்டும் நியாயப்படுத்தி பொதுவுல இப்படி
பேசமுடியாது, பாதிப்புங்கிறது எத்தனை வருஷம் ஆனாலும் பாதிப்பு தான், அது
மாறாது”, என்று முடித்துவிட,
“கதிர்.. உனக்கு நடந்தது கொடுமையான விஷயம்தான், அதை இல்லன்னு யாராலும்
மறுக்கவே முடியாது,   ஆனா அதுக்காக  பழிவாங்க  நீ இப்படி செய்றதும்
தப்புதான்,  முடிஞ்சது முடிஞ்சதாவே  இருக்கட்டும், விட்டுடு கதிர்”,
என்று தலைமை பொறுமையாகவே சொன்னார்,
ஆனால் கதிரோ, “இன்னும் கொஞ்சநாள் மட்டும் தான், அதுக்கு அப்பறம் நானும்
எதுவும் செய்யமாட்டேன்”,  என்று இடக்காக டைம் கேட்க,
“கதிர் நீ ரொம்ப இடக்கா பேசற, நீ செஞ்சது தப்பு,  இது உனக்கும் தெரியும்,
இங்கிருக்கிற எல்லாருக்கும் தெரியும், அதுக்கு என்ன பதில் அதை மட்டும்
சொல்லு..?”  என்று  கதிரின் அடாவடி தனத்தால் தலைமை காண்டாகி கத்த,
“என்னை பொறுத்தவரை நான் செஞ்சது எனக்கு தப்பாவே தெரியல, என்
கல்யாணத்தன்னிக்கே நான் கட்டிக்க போற  பொண்ணை எவனாவது திருட்டுத்தனமா
தூக்கினா..?,  என்  இடத்துல மீசை வச்ச, மானமுள்ள, ரோஷமான ஆம்பிள்ளை எவன்
இருந்தாலும் அவனும் என்னை போலத்தான் செய்வான்”,
“ஆனா ஒண்ணு..  நான் மத்தவங்களை மாதிரி யாருக்கும் தெரியாம இருட்டுல
திருட்டுத்தனமா பொண்ணை  தூக்கலை,   நல்லா எல்லாருக்கும் தெரியறமாதிரிதான்
பொண்ணை தூக்கினேன்”,
“நீ  கல்யாணம்  பண்ணிக்க போற பொண்ணையே உன்னால காப்பாத்த முடியலையே..?
நீயெல்லாம் ஒரு  ஆம்பிளையா..?ன்னு  என்னை  அன்னிக்கு இதே பஞ்சாயத்துல
வீரப்பா கேட்ட ஆம்பளைங்க  எல்லாம் அன்னிக்கு அவங்க வீட்டு பொண்ணை
தூக்கினப்போ எங்க போனாங்கன்னு  தான் எனக்கு தெரியல..”  என்று யோசிப்பது
போல் பகிரங்கமாக கேவலப்படுத்தவும்,
சுந்தரத்தின் ஆட்கள் அவனின் பேச்சில் கொதித்து சண்டைக்கு கிளம்ப, இதை
தான் எதிர்பார்த்த கதிரும், தன்னிடம்  கோவமாக கத்தியவர்களை, வேண்டுமென்றே
தூண்டிவிட்டு அடி வெளுக்க, சிறிது நேரத்திலே பஞ்சாயத்து, போர்களமானது.
“சுந்தரத்திற்கு சரி,  மாறனிற்கும் சரி,  இந்த சூழ்நிலையில் தாங்கள் என்ன
பேசினாலும்..?, செய்தாலும்..?  இது பெரிதாகிவிடும் என்று அனுபவ அறிவு
எச்சரிக்க, அமைதியகாவே இருந்தனர்,
அதிலும் சுந்தரத்திற்கு கதிரின் பேச்சில் ரத்தம் கொதித்தாலும், “இது
பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கும் நேரம்” என்று மனக்கணக்கு இட்டவர்,
அமைதியாகவே இருந்தார்.
“கதிர்..  இந்த பிரச்சனையை  நீ  இப்படி  தொடர்து சரியில்லை, நீ என்ன
சொன்னாலும் நீ செஞ்சது தப்பு தான்,  அதுவும் நீ கல்யாணம் செஞ்சிக்க
இருந்த பொண்ணை தூக்கினது ரத்தினம் தான், சுந்தரம் இல்லை, அவர் பொண்ணை
தூக்கி நீ தப்புதான் செஞ்சிருக்க”,
“ஊர் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கே, வீட்டு பொண்ணுங்களை பிரச்னையில
கொண்டு வர்றது எப்பவும், எந்த காரணத்துக்காகனாலும்,  யார் செஞ்சாலும்
தப்புதான், அதுக்கு மன்னிப்பே கிடையாது”,
“ஏன் ரத்தினம் பொண்ணை தூக்கினத்துக்காக அபராதம் கட்டினதும் இல்லாம, அவரை
இந்த ஊரை விட்டு 5 வருஷம் ஒதுக்கி வைக்கல, அப்படித்தான் உனக்கும் தண்டனை”
என்று தலைமை தன் நியாயத்தை நிலை நாட்ட,
அப்பொழுது எழுந்து நின்ற சுந்தரம், “யாருக்கும் எந்த தண்டனையும்
வேண்டாம், நாங்க செஞ்சதுக்கு, பதிலுக்கு அவங்க செஞ்சதும்  சரியா போச்சு,
எனக்கு இனியும் இந்த பிரச்சனை தொடர கூடாது, அவ்வளவுதான்”,
“அதனால  அவரை ஊர் முன்னாடி, எல்லாத்தையும் இதோட விட்டுடுறேன்னு வாக்கு
கொடுக்க சொல்லுங்க”, என்று  சுந்தரம், பஞ்சாயத்தில் வைத்து கதிரை மடக்க
பார்க்க, அதை புரிந்து கொண்ட கதிர் கிண்டலாகவே சிரித்தான்.
“இதுக்கு உன்னோட பதில் என்னப்பா..?” என்று தலைமை கதிரிடம் கேட்க,
“இந்த பிரச்சனை இதோட  முடிக்கணும்ன்னு அவர் ரொம்ப விருப்பட்றார், ஆனா..
என் கணக்கு இன்னும் பாக்கி இருக்கு, அது முடிஞ்சா தான்..? பேச்சே, அதனால
கூடிய சீக்கிரம் எல்லாரும்  இன்னொரு முக்கியமான  பஞ்சாயத்துக்கு
ரெடியாகிக்கோங்க”, என்று
“இதுதான் என் முடிவு.. இதிலிருந்து நான் பின்வாங்க போவதில்லை..” என்று
கதிர் உறுதியாக முடித்துவிட, சுந்தரத்திற்கு அவனின் பேச்சில் கோவம்
கொந்தளித்தாலும்,
“தண்டனை கொடுத்து இதை பெரிது செய்யாமல், தன் ஒரு மகளின்
வருங்காலத்திற்காக, ஒன்றுமே இல்லாததுபோல் முடிக்க நினைத்தவர்,
“யாருக்கும் எந்த தண்டனையும் தேவையில்லை”  என்று பஞ்சாயத்தை தானே
முடித்துவிட்டார்.
“அசோக்.. நாம அஞ்சலிக்கு கல்யாணம் செய்றது  தான் இப்போதைக்கு இருக்கிற
ஒரே வழி”  என்று  பஞ்சாயத்து நடந்த  அன்று இரவு சுந்தரம் மகனிடம்
சொன்னவர், அசோக்கின் அதிர்ச்சியை கவனிக்காமல்  தொடர்ந்து,
“எக்காலத்திலும் வீட்டு பொண்ணுங்களோட  மானம், மரியாதை தான் அந்த
குடும்பத்தோட மானமும், மரியாதையும், அதனால நாம முதல்ல அஞ்சலிக்கு
கல்யாணம் முடிச்சுட்டு..??  அப்பறம்  கதிரை என்ன செய்யறது தான்
பாக்கலாம்..” என்று முடிவுடன் சொல்ல,
அவரின் முடிவை கேட்டு அதிர்ந்த அஷோக், “வேண்டாம்ப்பா, அது சரிப்பட்டு
வராது”, என்று  அவசரமாக சொல்லவும்,   சுந்தரம் கோவத்தோடு பார்க்க,
“இல்லப்பா.. அது இப்போ போய் அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்தா தேவையில்லாத
பேச்சு..”  என்று இழுக்க,
“அது எல்லாம் ஒண்ணும் பிரச்னையில்லை, நம்ம கண்ணன் முன்னமே அவர் மகன்
ராஜேஷுக்கு அஞ்சலியை கேட்டிருந்தார், நாமதான் வேண்டாம்ன்னு
நிப்பாட்டியிருந்தோம்,  ஆனா அவங்க இப்பவும், அஞ்சலியை கட்டிக்க ரெடியா
தான் இருக்காங்க”,
“என்ன மாப்பிள்ளை மட்டும் ஒரு ரெண்டு மாசத்துக்கு கான்பிரன்சுக்காக
பாரின் போயிருக்காராம், அவர் வந்தவுடனே நிச்சயம் பண்ணி, அடுத்த
முகூர்த்தத்திலே கல்யாணம் முடிச்சிடலாம்” என்று அசோக்கின் மறுப்பை
கண்டுகொள்ளாமல் உறுதியாக முடித்துவிட்டார்.
 இதற்கிடையில் அஞ்சலி, தான்  வேலை பார்க்க பேங்களூர் போவதாக சொல்ல, முன்
போல் மகளின் முடிவை மீனாட்சியால்  எதிர்க்க முடியாமல், கணவரிடம் ஆலோசனை
கேட்டார்,
சுந்தரமோ.. “மகள் வெளியூர் சென்றுவிட்டாள் எப்படி அவளுக்கு திருமணம்
செய்ய..? மீண்டும் தள்ளி தான் போகும்..” என்று யோசித்தவர் , பின்
மகளிடமே,
“நீ இங்க நம்ம கண்ணனோட ஹாஸ்ப்பிடல்லே கொஞ்ச நாளைக்கு வேலை பாரு அஞ்சலி,
அடுத்து என்ன செய்றதுன்னு யோசிப்போம்” என்று  அஞ்சலிக்கே தெரியாமல்
இப்பொழுதே திருமணத்திற்கு அடிக்கல் நாட்டி, உத்தரவாக முடித்து விட,
அஞ்சலியால் அவரின்  பேச்சை மீற முடியாமல், அவர்களின் “குடும்ப  நண்பர்,
கண்ணனின் ஹாஸ்பிடலிலே” வேலை செய்ய அந்த  மாத முதல் நாள் தன் வேலையை
தொடங்க  ஹாஸ்பிடலில்  சேருவதற்காக கிளம்பியவள்,
 எப்போதும் போல் தன் இஷ்டதெய்வமான அம்மனிடம் ஆசீர்வாதம் வாங்க
லதாவுடனும், ஸ்வேதாவுடனும் வந்திருந்தாள், கதிரின் பிரச்சனை முடிந்து
மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும், எல்லோரின் பார்வையும் அஞ்சலியை தொட்டு
மீளாமல் இல்லை,
ஆனால்.. இவை  எல்லாம்  நடக்கும் என்று அவளுக்கு  முன்னமே தெரிந்து
இருந்ததால்,   ஓரளவிற்கு தன் மனதை தயார்படுத்தி தான் இருந்தாள்.
இருந்தாலும், எல்லோரின் விதவிதமான பார்வை அவளுக்கு மிகவும் வலிக்க தான்
செய்தது,
எப்போதும் போல் தன் மனத்துயரை எல்லாம் அம்மன் காலடியில் இறக்கியவளுக்கு,
மனம் கொஞ்சம் லேசாக உணர, லதா, ஸ்வேதாவுடன் வெளியே அமர்ந்தவளின்
பார்வையில்  பளிச்சென பட்டது, “அவளுக்கு நேர் எதிரே  அமர்ந்திருந்த கதிர்
தான்”,
அதுவும் தன்னையே விடாமல் பார்க்கும் அவனின் கூர்மையான பார்வையில்,
கோவத்தோடு முகம் திருப்பி கொண்டவளுக்கு, மூன்று வருடங்களுக்கு முன் இதே
இடத்தில தன்னை பார்க்காமல் அமர்ந்திருந்த  அந்த  கதிர் ஞாபகத்திற்கு
வராமல் இல்லை,
“அன்று அவன் பார்க்காமல் இருந்ததற்காக வேதனை பட்டவள், இன்று அவன்
பார்ப்பதற்காக கோவம் கொண்டாள், வாழ்க்கையே எப்பொழுதும் விசித்திரம்
தானே!!”
லதாவிற்கு கதிரை பார்க்க.. பார்க்க அவனிடம் சென்று “ஏன் இப்படி
செய்தாய்..?” என்று சண்டை போட்டுவிடலாமா..? என்று தீவிரமாக  யோசித்தபடி
அவனை முறைத்து கொண்டிருக்க,
அஞ்சலியையையே  பார்த்தபடி அமர்ந்திருந்த  கதிர்  எழுந்து நேரே  இவர்களை
நோக்கி   வர தொடங்கவும்,  ஒருவேளை   “நம்மகிட்ட தான் வராரோ..?”  என்று
யோசித்தபடியே பார்த்து கொண்டிருந்த லதா, அவன் தங்களின் அருகே வரவர
கோவத்தோடு, பதட்டமும் உண்டானது, மெலிதாக அஞ்சலியிடம்,
 “அஞ்சலி..   கதிர் இங்க நம்மகிட்ட தான் வரார் பாரு”  என்று  அவசரமாக
சொல்ல,  அதுவரை  கோவத்தில் முகம் திருப்பியிருந்த  அஞ்சலி,  அதிச்சியுடன்
வேகமாக  திரும்பி  அவனை பார்க்க, அவன் அதற்குள் அவர்களை
நெருங்கியிருந்தான்,

Advertisement