Advertisement

நெகிழியினியில் நெஞ்சம் கொண்டேன் 8 1
அஞ்சலியை தூக்கி சென்றதும் இல்லாமல், தைரியமாக தங்களின் எதிரே
அலட்சியமாகவும், திமிராகவும் அமர்ந்திருந்த  கதிரை கண்டு சுந்தரத்திற்கு
கோவம் கொந்தளித்தாலும், முதலில் பொறுமையாக பேச எண்ணியவர்,
“ஏன் இப்படி செஞ்ச..?” என்று  எந்த விதமான சுற்றி வளைத்தலும் இல்லாமல்
நேரடியாக  கதிரை   பார்த்து  கேட்க, அவரின் கேள்வியில் மெலிதாக  சிரித்த
கதிர்,
 “நான் ஏன்  இப்படி செய்ய கூடாது..?” என்று பதில் கேள்வி கேட்க, அசோக்
அவனின் கேள்வியில், “இவனை..” என்று  பல்லை கடித்து கொண்டு முறைக்க, கதிர்
அவனை  பார்த்து மேலும் நக்கலாக சிரித்தான்.
“நான் ஏற்கனவே என்னோட  தரப்பு நியாத்தையெல்லம் அசோக் மூலமா சொல்லியாச்சு,
அப்படி இருந்தும் நம்பாம இப்படி  செய்றது..?” என்று  பதிலை எதிர்பார்த்து
கேள்வியாக இழுத்தார் சுந்தரம், அவரின் கேள்வியை புரிந்து கொண்டவன்,
 “நான் உங்க நியாயத்தை ஏத்துக்கலைன்னு அர்த்தம் ..” என்று  அடாவடியாக
சொல்லவும், சில நொடி மௌனமான சுந்தரம்,
“நான் தெரிஞ்சி செய்யல,  என்னை அறியாம நடந்த தப்புன்னு நான்
ஒத்துக்கிட்டேன், இருந்தும் நீ அதை ஏத்துக்கமா நான் இப்படித்தான்
செய்வேன்னா அது சரிப்பட்டு  வராது..” என்று சுந்தரம் பொறுமையை கைவிட்டு
எச்சரிக்கை விடுக்கும் குரலில் சொல்லவும்,
அதை புரிந்து கொண்டு நன்றாக நிமிர்ந்து அமர்ந்த கதிர்,  சுந்தரத்தை
தீர்க்கமாக பார்த்து கொண்டே,   “சரிவராதுன்னு பெரியவங்க நீங்க சொன்னா
அது சரியாத்தான் இருக்கும், ஆனா பாருங்க நான் எல்லாத்துக்கும் தயாரா தான்
இதுல இறங்கியிருக்கேன்”,
 சோ.. “நான் செய்யறதுக்கு ஆப்போசிட்ல {என்று சுந்தரத்தை குறிப்பிட்டு}
எப்படி..? என்ன..? எதிர்வினை வரும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்,
அதனால..” என்று சொன்னவன், அலட்சியமாக தோளை குலுக்கி கொண்டு “அதை எல்லாம்
சந்திக்கவும் நான் ரெடி” என்ற பார்வையை தாங்கி அவரை பார்த்தான்.
அவனின் பதிலில் உள்ள தைரியத்தில், தெளிவில், உறுதியில் சுந்தரத்திற்கு
கட்டுக்கடங்கா கோவமும் எரிச்சலும் வர, அதையே அவர் அவர் தொடர்ந்து பேசிய
வார்த்தையிலும்  பிரதிபலித்தது,
“மூணு வருஷத்துக்கு முன்னே இதே பிரச்னை வந்தபோது உங்க அண்ணன்ங்க
தூண்டிவிட்டு,   நிறைய சண்டை,பிரச்சனை நடந்து நிறைய பேர் அடிபட்டு,
உதைபட்டு நம்ம ஊரே கொஞ்சநாளைக்கு ஒரே கலவரமாத்தான் இருந்துச்சி”,
“இந்த டைம் மறுபடியும்  நீங்க  இதே பிரச்சனையை ஆரம்பிச்சி வச்சப்போவும்,
என்னோட தலையீடலாதான் என்னோட ஆளுங்க அமைதியா இருந்துட்டாங்க,  இது
உங்களுக்கு பயந்து இல்லை, நம்ம பிரச்சனைக்கு ஊர் கஷ்டப்படறது
பிடிக்கமாத்தான்”,
“ஆனா.. அதுக்காக எல்லா நேரமும் நான் இதே போல் சும்மா இருப்பேன்னு நீங்க
நினைச்சிக்க கூடாது.. என்று  அந்த வயதுக்கே உரிய அதிகாரத்தோடு, ஒரு
தலைவனாகவும் சுந்தரம் எச்சரிக்க, அதை நன்றாக புரிந்து கொண்ட கதிர்,
“நம்ம பிரச்சனைக்கு,  ஊர் கஷ்டப்படக்கூடாதுன்ற  எண்ணம் எனக்கு எப்போதுமே
உண்டு, அதனாலதான் என்னோட பிரச்சனையை நான் மட்டுமே  பாத்துக்கிறேன், ஏன்
என் வீட்டு ஆளுங்களை கூட நான் தள்ளித்தான் வச்சிருக்கேன்”, என்று கதிரும்
தன் நிலைப்பாட்டை சொல்ல, அவன் சொல்வதில் இருந்த உண்மை சுந்தரத்திற்கும்
தெரியும் என்றாலும், தன் கோவத்தை கைவிடாதவாறே,
“உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வேறுபாடு ரத்தத்திலே ஊறுன ஒண்ணு, என்னை
பொறுத்தவரை நாம சண்டை போட்டுக்க கூட, ஒன்னு சேர்றதை நான் விரும்பல, ஏன்
உங்க அப்பாவுமே  அப்படித்தான் நினைப்பார், அதனால எல்லாத்தயும் இதோட
முடிச்சிகிட்டா ரொம்ப நல்லது..” என்று  முடிவாக  சொல்லவும் நக்கலாக
சிரித்த கதிர்,
“இது ஊர் பிரச்சனையோ..? இல்லை கட்சி பிரச்சனையோ..? இல்லை
இனப்பிரச்சனையோ..? கிடையாது,   இது முழுக்க முழுக்க என்னோட சுயம் சார்ந்த
பிரச்சனை, இதை ஊர்   பிரச்சனையா நானோ, உங்க ரத்தினமோ மாத்தலை,  அதனால..
இதுல என்னை சொல்றதுக்கு ஒண்ணுமில்லை, நான் சொல்றதுக்கும் ஒன்னும் இல்லை”
என்று உறுதியாக  சொன்னவாறே, தோரணையாக எழுந்து நின்று அவரை பார்த்து கை
குவித்து வணக்கம் வைத்தவன்,
 “நான் கிளம்புறேன்,  நாம எவ்வளவு பேசினாலும் இதற்கான தீர்வு கிடையாது,
சோ..  நான் வரேன்”  என்றவன் கிளம்பவும், அசோக் வேகமாக இடையிட்டு,
“கதிர், இதுவரைக்கும்  நாம நம்ம பிரச்னைக்குள்ள வீட்டு பொண்ணுங்களை
கொண்டு வந்ததே  இல்லை, ஆனா நீ இப்போ புதுசா ஆரம்பிக்கற   வேண்டாம்,  இது
சரியில்லை,  ஏதா இருந்தாலும் நாம நமக்குள்ளயே பேசி தீத்துக்கலாம்..”
என்று  ஒரு அண்ணனாக  கொதிக்கவும், அவனை கூர்மையாக கதிர்,
“நானா இதை எல்லாம் ஆரம்பிச்சி வைக்கலை,  நீங்க தான் என் கல்யாணத்துல
ஆரம்பிச்சு வச்சீங்க,   நீங்க ஆரம்பிச்சு வைச்சதை நான் தொடர்றேன்
அவ்வளவுதான்”,
“இன்னும் சொல்லப்போனா இந்த விஷயத்துல என்னோட குருவே நீங்கதானே,
உங்ககிட்ட இருந்து தான் நானே இதெல்லாம் கத்துக்கிட்டேன்”, என்று
ஆரம்பிக்கும் போது கோவத்தோடு ஆரம்பித்ததாலும், முடிக்கும் போது அவன்
பாணியில் கிண்டலாகவே முடித்தான்,
 அதில் பல்லை கடித்த அசோக், “அதான் நாங்க சொல்றதை எல்லாம் நம்பாம பழிக்கு
பழி செஞ்சாச்சே,  இன்னும்  இதுல நீ  தொடர்ந்து  செய்ய என்னதான்
இருக்கு..?”  என்று கோவம் கலந்த ஆற்றாமையுடன்,  மறைமுக எரிச்சலோடு கேட்க,
அவனை பார்த்து கண்ணடித்து சத்தமாக சிரித்த கதிர்,
“என்ன..? எல்லாம் முடிஞ்ச மாதிரி பேசுறீங்க,   நான் இன்னும் ஆரம்பிக்கவே
இல்லையே..” என்ற அவனின் பதில்,  “என்னோட  ஊகம் சரிதான், இவன் இன்னும்
செய்ய போகிறான்..”  என்று சுந்தரத்திற்கு உறுதியானது.
“இன்னும் என்னடா செய்ய போற நீ..?” என்று அசோக் அயர்ச்சி கலந்த பயத்துடன் கேட்க,
“ம்ம்..  சொன்னா எல்லாம் அவ்வளவு இன்டரெஸ்டிங்கா இருக்காது,   செய்யும்
பொது நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க..”  என்று அசோக்கையும்,
சுந்தரத்தையும் கோவம் கலந்த குறுஞ்சிரிப்புடன் கிண்டலாக  பார்த்து
சொன்னவன், அவனுடைய புல்லட்டில் ஏறி பறந்துவிட்டான்.
“கதிர்..  என்னப்பா இதெல்லாம்..?”  என்று இரண்டு நாட்கள் கழித்து
வீட்டிற்கு வந்த தம்பியிடம்,  நாயகி மனத்தாங்கலோடு கேட்க, மாறனோ எதுவும்
பேச விரும்பாமல் கண்களாலே மகனை பொசுக்கி கொண்டிருந்தார், கதிருக்கு
அக்காவின் வருத்தமும், தந்தையின் கோவமும் புரியாமல் இல்லை, ஆனாலும்
எப்போதும் போல்  அலட்சியம் கலந்த திமிருடனே,
“க்கா..   நான் என்ன செய்றேன்னு தெரிஞ்சுதான் செய்றேன்,  சோ.. யாரும்
எனக்கு  எதுவும் புரியவைக்க முயற்சி  செய்யாதீங்க..”  அப்பறம்,  “இனி
இதை பத்தி எப்போவும், யாரும் என்கிட்ட எதுவும் கேட்க கூடாது,  நானும்
பதில் சொல்லமாட்டேன்..”  என்று முடித்தவன்,
மேலே தன் ரூமிற்கு சென்று தன்னுடைய உடமைகளை எல்லாம் கொண்டு வந்தவன்,
“நான் கொஞ்ச நாளைக்கு நம்ம தோட்ட வீட்டிலே இருந்துக்கிறேன்” என்று தகவல்
போல் சொன்னவன், கிளம்பவும்,
“இல்லாட்டி மட்டும் இங்கேயே இருந்திடற மாதிரி தான்..” என்று மனதுள்
கடுப்பாக நொடித்த மாறன்,   “நாளைக்கு இவன் செஞ்ச நல்ல  வேலைக்கு
பஞ்சாயத்து வச்சிருக்காங்க, அதுக்கு என்ன..? எப்படி..?ன்னு பதில்
சொல்லிட்டு போகச்சொல்லு” என்று கோவமாக கேட்கவே  நின்றவன்,  தன் அக்காவை
பார்த்து கொண்டே,
“பஞ்சாயத்துல ஏதா இருந்தாலும் நானே பேசிக்கிறேன், அவர் யாருக்கும் எந்த
பதிலும் சொல்ல தேவையிருக்காது”, அப்பறம்,
“நம்ம ஆளுங்களை பஞ்சாயத்துல எதுவும் பேசவே கூடாதுன்னு, நான் சொன்னதா
சொல்லிட சொல்லுங்க, அப்படியும் மீறி  யாராவது ஏதாவது பேசிட்டா,
அவங்களுக்கு வர பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை”, என்று கைகளை
முறுக்கியவாறு தன் அண்ணன்களின் திட்டத்தை உணர்ந்த கதிர், அவர்களை
பார்த்து  மிரட்டலாக சொல்லி சென்றான்.
மறுநாள் மாலை கோவிலில் சொன்னது போல் பஞ்சாயத்து ஆரம்பிக்க, எல்லோரும்
வந்திருந்தனர், பஞ்சாயத்து யார் மீதோ அவனை தவிர, அவன் எப்போதும் போல்
லேட்டாகவே வந்தான். தலைமை ஆட்களுக்கு அவனை பற்றி நன்றாகவே தெரிந்ததால்,
அதை பற்றி எதுவும் கேட்காமல், முதலில் பொதுவாக பேசியவர்கள், அடுத்து
சுந்தரத்திடமும், மாறனிடமும் பேசபோக,
“பஞ்சாயத்து என்மேல தான், அதனால நீங்க எது கேட்கிறதா இருந்தாலும், என்னை
மட்டும்தான் கேட்கணும்..” என்று கதிர் தலையிட்டு சத்தமாக  சொன்னான்,
“சரிப்பா.. உன்கிட்டேயே கேட்கிறோம், நீ  செஞ்சது சரியா..?,  ஒரு வீட்டு
பொம்பளப்புள்ளை தான் அந்த வீட்டு கவுரவமே, அப்படி இருக்கிறப்போ, எல்லாம்
தெரிஞ்ச பெரிய குடும்பத்துல பிறந்துட்டு நீ ஒரு பொம்பள பிள்ளையை இப்படி
தூக்கிட்டு போறது எல்லாம் தப்பு இல்லையா..? என்று மூத்தவர் கண்டிப்புடன்
கேட்டார்.
“ஆமாப்பா.. உனக்கு நடந்ததுக்கு, அவங்களை பழிவாங்க நினைக்கிறது  ரொம்ப
பெரிய தப்பு”  என்று மற்றொருவர் சொல்லி கொண்டிருக்கும் போதே, இடையிட்ட
கதிர்,
 “நான் ஏன் பழி வாங்கக்கூடாது..? நான் என் புத்தனா..? யார் எனக்கு என்ன
செஞ்சாலும் பொறுமையா உட்காந்து வேடிக்கை பார்க்க, நான் சாதாரண மனுஷன்,
நான் இப்படித்தான் செய்வேன்..” என்று சொல்ல, அவனின் அடங்காத பதிலில்
எல்லோரும் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் ஒரு நொடி முழுக்கவே
செய்தனர்,
“அதுக்காக இப்படி, கல்யாணமாகாத புள்ளையை தூக்கிட்டு போன, நாளைக்கு அந்த
பொண்ணுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்..?” என்று தலைமை கேட்கவே, நக்கலாக
சிரித்த கதிர்,
“என்னங்கய்யா இது..? கல்யாணம் ஆகாத  புள்ளையை தான் தூக்கணும், இல்லாட்டி
அவ புருஷன என்னை வெட்டிடமாட்டானா..?” என்று கேட்டான், எப்போதும் போல்
அவனின் பதில் கேள்வி  கேட்கும் பழக்கத்தில்   “இவனை..”  என்று மாறனும்,
அசோக்கும் ஒன்றாகவே பல்லை கடித்தனர்.

Advertisement