Advertisement

நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 5

“அஞ்சலி.. இன்னைக்கு என்ன பிளான் உனக்கு..?”  என்று அஞ்சலியின் “ரூம்
மெட் ரேகா”  கேட்க,    “ம்ம்.. இப்போதைக்கு ஒன்னும் இல்லை, பட்
வீட்டுக்கு பேசணும், காலையிலுருந்து மூணு டைம் கூப்புட்டுட்டாங்க..”
என்று யோசனையாக சொல்லவும்,

“ஓகே.. நீ பேசு  அஞ்சலி,  நான்  கொஞ்சம் ஷாப்பிங் போயிட்டு வந்துடுறேன்”,
என்று ரேகா விடைபெற்று செல்ல, அஞ்சலி நேரத்தை பார்த்துவிட்டு,
வீட்டுக்கு கால் செய்யவும், எடுத்தது லதா,

“அண்ணி.. எப்படி இருக்கீங்க..? ஸ்வேதா, அப்பா, அம்மா, அண்ணா எல்லாம்
எப்படி இருக்காங்க..?”  என்று  அஞ்சலி கேட்டு கொண்டிருக்கும் பொழுதே,
இடையிட்ட லதா,

 “அஞ்சலி.. எல்லாரும் நல்லாயிருக்காங்க, இப்போ நான் சொல்றதை கொஞ்சம்
கேளு, இந்த வார கடைசியில நீ ஊருக்கு வரமாதிரி இருக்கும்”, என்று
சொல்லவும், புரியாமல் விழித்த அஞ்சலி,   “ஏன் அண்ணி..? என்ன ஆச்சு..?
எதாவது பிரச்சனையா..?”  என்று குழப்பத்துடன் கேட்டாள்,

“பிரச்சனை எதாவது இருந்தா தான் நீ  ஊருக்கு வருவியா அஞ்சலி..?  அப்போ உன்
அம்மா போய் சேரப்போறேன்னு வேணும்ன்னா வச்சிக்கோ” என்ற மீனாட்சியின்
கோபகுரலில்,   “ம்மா.. என்ன ஆச்சு..? ஏன் இவ்வளவு கோவமா இப்படி
பேசுறீங்க..?” என்று கவலையுடன் கேட்டாள்,

“நான் ஏன் இவ்வளவு  கோவமா பேசுறேன்னு உனக்கு தெரியாதா அஞ்சலி..? என்று
மீனாட்சி கேட்க, அவரின் கோவம் எதனால என்று தெரிந்து வைத்திருந்த
அஞ்சலியால் பதில் சொல்ல முடியவில்லை, அதானாலே அமைதியாக இருக்க,
மீனாட்சியோ மேலும் பொரிந்து கொண்டிருந்தார்,

நீ ஊருக்கு  வந்தே மூணு வருஷத்துக்கு மேல ஆகுது, எப்போ கேட்டாலும் எதாவது
 காரணத்தை சொல்லிட்டு இருக்க, நாங்க  தான் வந்து உன்னை பாத்துட்டு வர
வேண்டியதா இருக்கு”,

“போதும் அஞ்சலி.. இதுக்கு மேல உன்னிஷ்டத்துக்கு எல்லாம் விட முடியாது,
அசோக் இந்த வார கடைசியில் உனக்கு டிக்கெட் போட்டுட்டான் பாரு,  எந்த
காரணமும் சொல்லாம நீ கிளம்பி வர, அவ்வளவுதான்..”  என்று  அஞ்சலி பேச
வருவதை கூட கேட்காமல் போனை வைத்துவிடவும், அஞ்சலி தன் கையிலுருக்கும்
போனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

மீனாட்சி சொன்னது போல் அஞ்சலி ஊரை விட்டு வந்தே   மூன்று வருடங்களுக்கு
மேலாகிறது,  அத்தனை வருடம் கடந்தும்  “அவள்  காதல் தரும் அந்த வலி,
வேதனை,  கதிருக்கான ஏக்கம் எல்லாம் குறைந்தபாடில்லை, ஏன்  இன்னும்..
இன்னும்.. தான் அதிகம் ஆகியது என்றே சொல்லலாம்”,

இத்தனைக்கும் அவளோ.. அவளிடமோ கதிரை பற்றி பேச யாருமில்லை, வீட்டிலும்
அவள் காதல் தெரிந்த தங்கதுரை, லதா இருவரிடமும்  அங்கிருந்து கிளம்பும்
போதே,   “இனி  எக்காரணத்தை முன்னிட்டும்  கதிரை பற்றி   அவளிடம் எதுவும்
பேசவோ,  சொல்லவோ  வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டிருந்தாள்,
அவர்களும் அவளின் உணர்வை மதித்து இன்று வரை அவளிடம் கதிரை பற்றி எதுவும்
பேசுவதில்லை,

மூன்று வருடங்களுக்கு முன்பு  எல்லாம் அஞ்சலி.. வேறு பெயரில்  கதிரை,
சோசியல் மீடியாக்கள் மூலம் தொடர்வாள்,  அப்படி தெரிந்தது தான் அவனுக்கு
கல்யாணம் என்ற விஷயமும், அதற்கு பிறகு அவள் அதையும் செய்வதில்லை,  இப்படி
எல்ல விதத்திலும் அவனை விட்டு அவள் விலகி இருந்தாலும்,

“அவன் மேல் கொண்ட காதல் மட்டும்,   ஒரு நொடியும் நீங்காமல் அவன் பின்னே
சுற்றி  கொண்டுதான் இருக்கிறது,  அப்படி இருக்கும் போது அவளால் எப்படி
ஊருக்கு செல்ல முடியும்..?”

அதனாலே தன் மேல்படிப்பு முடிந்ததும், அங்கேயே வேலை தேடி கொண்டு அங்கேயே
இருந்துவிட்டாள்,  வருடம் இருமுறை வீட்டினர் வந்து அவளை பார்த்துவிட்டு
செல்ல,  இத்தனை நாள்  அவள் சொல்வதை கேட்டு பொறுமையாக இருந்த மீனாட்சி
இப்போது ஊருக்கு வந்துதான் ஆகவேண்டும் என்று பிடிவாதாமாய் நிற்கவும்,
அவரை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தாள் அஞ்சலி.

அதோடு அவளுக்கு அவர்கள் “ஏன் ஊருக்கு வர சொல்கிறார்கள்” என்ற ஊகமும்
இருந்தது, போனவருடமே மீனாட்சி அவளின் திருமண பேச்சை எடுக்க,  பதறி  போன
அஞ்சலி,   “ஒருவருடம் மட்டும் இங்கே வேலை பார்த்துவிட்டு,  அப்பறமா
மொத்தமா வந்துடுறேன்”,  என்று படாத பாடுபட்டு சம்மதம் வாங்கியிருந்தாள்,

இப்பொழுது ஒரு வருடம் கடந்து சில மாதங்கள் ஆகியும் அவள் ஊருக்கு வராமல்
இருக்க, கோவமான மீனாட்சி, இன்று உறுதியுடன் சொல்லிவிட, முதலில் என்ன
செய்வதென்று திணறியவள், பின் சப்போர்டிற்காக தன் தந்தைக்கு அழைக்க,
எடுத்ததென்னமோ மீனாட்சி  தான்,

“அப்பா..”   என்று அழைக்கவும்,  “அப்பா   இல்லடி,  உன் அம்மா  தான்,
அடுத்து நீ  உங்க அப்பாவுக்கு   தான் கூப்பிடுவேன்ன்னு எனக்கு நல்லா
தெரியும்டி”, என்று  நக்கலாக சொன்னாலும் அதில் தெரிந்த கோவத்தில்,

“ம்மா.. ஏன்ம்மா  இப்போ ஊருக்கு வந்துதான் ஆகணும்ன்னு  இப்படி பிடிவாதம்
பிடிக்கிறீங்க..?”  என்று சலிப்புடன் கேட்டாள் அஞ்சலி,

“படிப்பை  முடிச்சாச்சு, அதுக்கு அப்பறம் ஒரு வருஷத்துக்கு மேல நீ
ஆசைப்பட்ட மாதிரி  அங்கேயே வேலையும் பாத்தாச்சு, அப்பறம் ஊருக்கு வரத்தில
உனக்கு என்ன பிரச்சனை அஞ்சலி..?”  என்று கூர்மையாக கேட்கவும், அவரின்
கேள்வியில் இருந்த நியாயத்தில்,  சந்தேகத்தில் பதில் சொல்ல முடியாமல்
திணறியவள்,

“ம்மா.. எனக்கு ஊருக்கு வரக்கூடாதுன்னு  எல்லாம் இல்லை, ஆனா இன்னும்..”
என்று அஞ்சலி முடிக்குமுன்னே இடையிட்ட  மீனாட்சி,   “அஞ்சலி.. நல்லா
கவனிச்சுக்கோ, இந்த டைம் நீ எந்த காரணத்தை சொன்னாலும் நான்
கேட்கப்போறதில்லை,  வாரக்கடைசில  நீ   கிளம்பி  ஊருக்கு வர,
அவ்வளவுதான்.. இதுல எந்த மாற்றமும் இல்லை..”  என்று அம்மாவின் அதிகாரத்தை
நிரூபித்தவர், வைக்குமுன்,

“நீ வீட்ல யாருக்கு கால் பண்ணாலும் நான் தான் எடுப்பேன், அதனால போன்
செஞ்சு டைம் வேஸ்ட் பண்ணாம, அங்கிருந்து  மொத்தமா கிளம்பறதுக்கு  வழியை
பாரு ”  என்று   “இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம்..” என்று
சிவகாமி போல் சொன்னவர் வைத்துவிடவும், அவரின் உறுதியில் நொந்து போனாள்
அஞ்சலி,

அவர்  அத்தோடு மட்டும் நிறுத்தாமல்  அஞ்சலி வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கே
அசோக்கின் மூலம்,  “அவளின் அம்மா சீரியசாக இருப்பதால்,  அவளை உடனே
வேலையை விட்டு அனுப்புமாறு மெயில் அனுப்பியது  மட்டுமில்லாமல்”,   அவள்
தங்கியிருக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனருக்கும் போன் செய்து, இதே காரணத்தை
சொன்னவர்,  “அவள் இந்த வாரம் வீட்டை  நிரந்தரமாக  காலி செய்வதாகவும்,
நீங்கள் வேறு ஆள் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்றும் சொல்லிவிட்டார்,

அஞ்சலி எவ்விதத்திலும்  ஏமாற்ற முடியாதபடி செய்துவிட,  அவரின் செயலில்
அஞ்சலிக்கு எல்லையில்லா கோவத்தோடு, வருத்தமும் உண்டானது,  “போங்க,
இங்கிருந்து கிளம்புறேன், ஆனா அப்பவும் கண்டிப்பா ஊருக்கு  எல்லாம்  வர
மாட்டேன்..!!”  என்று தன்னுள்ளே உறுதியாக முடிவெடுத்தவள், அந்த வார
இறுதியில்  அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பிளைட்டில் இல்லாமல் வேறு
பிளைட்டில்  கிளம்பியும் விட்டாள்,

ஆனால்  சென்னைக்கு இல்லை,  அவள் முன்னமே ஏற்பாடு செய்திருந்தது போல்
பெங்களூருக்கு தான் வந்திருந்தாள், லண்டனில் இருக்கும் போதே ஆன்லைன்
மூலம் இங்கிருக்கும் ஹாஸ்பிடலில் வேலை தேடி கொண்டவள், அங்கு செல்வதற்காக
வெளியே  வரவும்,  அவள் முன் ஒரு பெரிய கட்சி படையே  அசோக்கின் தலைமையில்
நின்றிருந்தது,

அதை கண்டு முதலில் அதிர்ந்தவள், பின் தன் அண்ணனை முறைக்க, அவனோ..
“இதெல்லாம் என் ஏற்பாடு இல்லை, எல்லாமே அம்மா தான்” என்று அப்ரூவர்
ஆகிவிட, எல்லோரின் முன்னிலையிலும் எதுவும் சொல்லமுடியாமல் அமைதியாக
வெளியே வந்தவள்,

தன் அண்ணனிடம் தனியாக சென்று,  “தான் இங்கேயே இருப்பதாக சொல்லிவிட”,
அவனோ எதுவும் பேசாமல், தன் அன்னைக்கு அழைத்து அவளின் கையில் கொடுத்து
ஒதுங்கி கொண்டான்,  மீனாட்சியோ,

 “நீ இப்போ ஊருக்கு வரலைன்னா..? அடுத்து என்னை எப்பவும் பார்க்க
முடியாது..”  என்று எல்லா அம்மாக்களையும் போல  “எமோஷனல் பிளாக் மெயில்
செய்ய”,  ஆத்திரத்தில் பல்லை கடித்த அஞ்சலி வேறு வழி இல்லாமல், தன்
அண்ணனுடன் கிளம்பியவள், அங்கிருந்து  பிளைட்டில்  சென்னை  வரவும், அங்கு
தங்கதுரை அவளுக்காக காத்திருக்க, அவரிடம் நலம் விசாரித்தவாறே  அவருடன்
அவள்  மட்டும்  காரில் ஏறிக்கொள்ள, அசோக் அவன் படையுடன் மற்ற கார்களில்
பின் தொடர்ந்தான்,

மறுபடியும் ஊருக்கு செல்வதை நினைக்க நினைக்க அஞ்சலியின் மனம் முழுவதும்
உணர்ச்சி போராட்டத்தில் கொந்தளித்து கொண்டிருந்தது,  “தான்  நினைத்தது
என்ன..?  இங்கு நடந்து கொண்டிருப்பது என்ன..? இதில் இருந்து எப்படி
தப்பிக்க போகிறேன்..?  தன்னால் எப்படி கதிர் இருக்கும் ஊரில் இருக்க
முடியும்..?”

“அதுவும் அவன்.. அவன் ???  குடும்பமாக வாழ்வதை தன்னால் எப்படி பார்க்க
முடியும்..?  அப்படியே எங்காவது  பார்த்து விட்டாலும் தன்னால் அவனை
சாதாரணமாக  கடந்து விட முடியுமா..?”  என்று பலவாறாக தன்னுள்ளே யோசித்து
மருகி கொண்டிருந்தவளை, அமைதியாக பார்த்து கொண்டிருந்த தங்கதுரைக்கு
அவளின் நிலைய நினைத்து வருத்தபட மட்டுமே முடிந்தது,

“ஊர் நெருங்க..  நெருங்க அப்படியே காரிலிருந்து குதித்து விடலாமா..?”
என்று கூட தவிக்க ஆரம்பித்து விட்டாள் அஞ்சலி,  அதுவும் அந்த ஒத்தையடி
பாதை  வரவர இன்னும் இன்னும்  தவித்தவளின் மனதில் கதிரின் எண்ணங்களே,  இது
போல் ஒரு  இரவு நேரத்தில் தான் 8 வருடங்களுக்கு முன்பு   கதிரை
பார்த்தேன், அந்த நாள் என் வாழ்வையே தலைகீழாக சுழற்றி போட்டுவிடும் என்று
கனவிலும் நினைக்கவில்லையே,

ஆனால்.. என்று  கண்மூடியவாறே காதலின் வலியை, தோல்வியை இன்னுமே ஏற்று
கொள்ள முடியாமல்  திணறி கொண்டிருந்தவளை, வேகமாக சென்று கொண்டிருந்த  கார்
 திடீரென கீறிச்சிட்டு நிற்கும்  குலுங்களில் கண் திறந்தவளின் முன்னே அதே
ஒற்றையடி பாதை,

அதில்  ஜீப்   ஒன்று  நின்று கொண்டிருக்க,  அதின் மேல் திமிராக கால் மேல்
கால் போட்டு  அமர்ந்திருந்தான் “கதிர்”,  தன் எண்ணங்களின் நாயகனை நேரில்
காணவும்,  முதலில்  கனவோ..? என்று  நம்பமுடியாமல்  தன் கண்களை  நன்றாக
கசக்கி  மீண்டும்  பார்த்தவளின் முன்பு அதே பிம்பம் தான்,  நம்பமுடியாமல்
அவனையே அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருக்கும்  போதே ஜீப்பிலுருந்து
குதித்த கதிர்,

அவர்களின் காரை நோக்கி  கம்பீரமாக நடந்து வர, அவனின் கம்பீரத்தில்,
இன்னும் கூடி தெரிந்த ஆண்மையின் அழகில்   இத்தனை வருட பிரிவிற்கும்
சேர்த்து கண் இமை  சிறிதும் அசையாமல்  தன்னையே மறந்து அவனையே பார்த்து
கொண்டிருந்தவளின், பக்க கதவை தானே திறந்தவன்,

 அவளையே பார்த்தவாறு, அவளின் முன் தன் கையை நீட்ட,   எத்தனையோ நாள்கள்
தன் கனவில் வந்த நிகழ்வை இன்று நேரிலே  காணவும், அவளுக்கு உறுதியாக
தோன்றியது இது  கனவு என்று தான், அந்த காதல் கனவுலகிலே மிதந்து
கொண்டிருந்த அஞ்சலி,

காதலுடன் அவனின்  கையின் மேல் தன் கையை வைக்கவும், அவனின் முதல்
ஸ்பரிசத்தில் சிலிர்த்த தன் உடலை  உணர்ந்தது போல்  மின்னலென அவனின்
முகத்தில்  ஒரு நொடி தோன்றி மறைந்த  குறுஞ்சிரிப்பின் அழகில், இன்னும்
காதலுடன் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவளின் கையை  உறுதியுடன்
பற்றியவன் இறக்கவும்,  அவனையே மெய்மறந்து  கனவிலே இருப்பது போல் பார்த்து
கொண்டிருந்த அஞ்சலியும் இறங்கினாள்,

அப்பொழுது,  தம்பி..  தம்பி.. என்ற தங்கதுரையின் பதட்ட குரல் சத்தமாக
ஒலிக்கவும்,  முதலில் புரியாமல் விழித்தவள்,  பின்  திரும்பி தங்கதுரையை
பார்க்க,  அவரை இருவர் வலுவாக பிடித்து கொண்டிருக்க, அதிர்ந்து
சுற்றிலும் பார்த்தவள்,

 அப்பொழுதுதான் தன் காதல்  மாயலோகத்தில் இருந்து  முகத்தில் சூடுதண்ணி
அடித்தது போல் வேகமாக விழித்தவள்,  தன்னை சுற்றி நடந்து கொண்டிருப்பதை
உணர்ந்தாள், உணர்ந்த நொடி நம்ப முடியாத உச்ச கட்ட அதிர்ச்சியில்  ஒரு
நொடி சிலையாய் நின்றவள், அடுத்த நொடி வேகமாக திரும்பி  தன் பக்கத்தில்
நின்றிருந்த கதிரை பார்க்க,

அவனோ  சிறிது தூரத்தில் நின்று கத்தி கொண்டிருந்த அசோக்கை  தீவிரமாக
பார்த்து கொண்டிருந்தான்,  அசோக்கின் காரின் முன்னால் ஒரு பெரிய மரம்
வெட்டப்பட்டு  சாய்க்கப்பட்டிருக்க, அவனால் அந்த மரத்தை தாண்டி காரை
எடுக்க முடியாமல் போக, வேகமாக  கீழே  இறங்கி வர,

 அவன் முன் நூறு பேர் கொண்ட ஒரு பெரும்படையே நின்று அவனும் அவனின்
ஆட்களும் எவ்விதத்திலும் வெளியே வர முடியாதபடி  கையில் ஆயுதங்களுடன்
சுற்றி ஒரு அரண் போல் நின்று கொண்டிருந்தது,  அசோக் அதை பற்றி எல்லாம்
கவலை படாமல்,  தன் எதிரில் இருந்தோரை தள்ளியும், தாக்கியும் முன்னால்
வரமுயற்சி செய்து கொண்டிருந்தபடியே, கதிரை நோக்கி கோவத்தோடு கத்தவும்
செய்தான்,

“கதிர்.. என்ன செய்றன்னு  தெரிஞ்சி தான் செய்றியா..? வேண்டாம்டா  இதை
செய்யாதா..  நாம  பேசலாம், சொன்னா கேளுடா” என்று கத்தி கொண்டிருக்க,
அவனையே  இன்னதென்று கண்டுபிடுக்க முடியாத பார்வையால் பார்த்த
கொண்டிருந்தான்  கதிர்,

அசோக்காலும், அவனின் ஆட்களாலும்,  தங்களை சுற்றி நின்று  கொண்டிருந்த
கதிரின் ஆட்களை சிறிது கூட நகர்த்த முடியாமல் திணற,  அப்படியும் அசோக்
தன் தங்கையின்   மானத்தை காப்பாற்ற  முடிந்தவரை போராடி கொண்டே,
மறுபடியும் கதிரிடம்,

  “வேண்டாம் கதிர்..  இப்ப நீ செய்ய நினைக்கிறது ரொம்ப பெரிய தப்புடா,
இதை செய்யாத..?  வேண்டாம்டா, சொன்னா கேளு,   நாம பேசலாம், என்று
ஆத்திரமாக   கத்தவே  செய்தான்,

அசோக் கத்துவதையே  இறுக்கத்துடன் பார்த்து கொண்டிருந்த கதிர், திடீரென்று
பெருங்குரல் எடுத்து சிரிக்க, அவ்விரவு நேரத்தில் அவனின் சிரிப்பு
பயங்கரமாக எதிரொலித்தது,

அவனின்  பக்கத்திலே அவனின் கையை பற்றியபடி  நின்றிருந்த அஞ்சலி,  அவனின்
திடீர் பெருஞ்சிரிப்பில்  பயத்தில்  தூக்கி போட,  அதை தன் கையில் உணர்ந்த
கதிர், ஒரு நொடி திரும்பி அவளின் பயத்தை  கூர்மையாக  பார்த்தவன், பின்
அவளை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு, மறுபடியும் அசோக்கிடம்
திரும்பியவன்   சத்தமாக,

“பேச்சா..? இனி பேச்செல்லம்  ஒண்ணும் கிடையாது..? ஒன்லி செயல் மட்டும்
தான்,  அதுவும் நான் மட்டும் தான் செய்வேன், உங்களால்  முடிஞ்சா
தடுத்துக்கோங்க..” என்று திமிரும்.. தெனாவட்டுமாக கத்தியவன், அஞ்சலியின்
கையை பற்றி இழுக்க,  அவன் செய்ய போகும் செயலின் தீவிரத்தை உணர்ந்த
அஞ்சலி,

“கதிரா..? அவளுடைய கதிரா..?  இப்படி..?”  என்று உள்ளுக்குள் அவனின் செயலை
நினைத்து  உயிரோடு மரித்து கொண்டிருந்தாலும்,  வெளியே  “காதலனே ஆனாலும்,
தன் பெண்மையின் மரியாதையை, மானத்தை காப்பாற்ற”,  அவன் இழுத்த போது,
நின்ற இடத்திலே ஒரு அடி கூட அசையாமல்  தரையில் தன் கால்களை  ஊன்றி
வலுவாக  நின்றாள்,

அவளின் அழுத்தத்தில், திரும்பி அவளை உறுத்து பார்த்த கதிர், மறுபடியும்
தன் கையை பற்றி வலுவாக இழுக்க, அப்படியும் நகராமல் உறுதியாக நின்ற அஞ்சலி
 அவனை தீயாக  முறைத்து பார்க்க,  அவளின் பார்வையை சிறிதும் கண்டு கொள்ளாத
 கதிர், மறுபடியும்  அவளின்  கையை  பற்றி இழுக்க, அப்பொழுதும் தன் பலம்
கொண்ட மட்டும் உறுதியாக நின்றவளை,

பெருங்கோவதோடு நெருங்கியவன், தன்  இரும்பு கையால் ஓங்கி இடியென ஒரு
அறைவிடவும்,  அவனின் பயங்கரமான அறையை தாங்காத அஞ்சலி தள்ளாட,  அப்படியே
அவளை  தூக்கி தன் தோள் மேல் போட்டு  கொண்டவன், அசோக் கத்த.. கத்த..
அங்கிருந்த அவனின் ஜீப்பில் அஞ்சலியை கிடத்தியவன் அங்கிருந்து
கிளம்பியும் விட்டான்…

8 வருடங்களுக்கு முன்பு எவ்விடத்தில் வைத்து “அவளின் பெண்மையின்
மரியாதையையும், மானத்தையும் காப்பாற்றினானோ,  இன்று அதே இடத்தில வைத்து
அவனே  அதை  களவாடியும்  கொண்டு சென்றுவிட்டான்”.

Advertisement