Advertisement

அதிலும் சுந்தரனோ, விஷயம் கேள்வி பட்டதில் இருந்து, நெஞ்சை பிடித்து கொண்டு அமைதியாக அமர்ந்தவர்  தான், அதற்கு பிறகு எதுவும் பேசவே இல்லை, அவரை பார்த்து,  மகளின் நிலைய நினைத்து அழுது..  அழுது..  மிகவும் சோர்ந்து போயிருந்த மீனாட்சியின் அருகிலே அமர்ந்திருந்த லதா, அடிக்கடி அசோக்கிடம் “அஞ்சலி கிடைத்தாளா..?” என்று  விசாரித்து கொண்டிருக்க, வீடே மயான அமைதியில் இருள் சூழ்ந்து, அனைவரின் வேதனையை காட்டுவதாக  இருந்தது,

மறுநாள் பொழுது விடியும் நேரம், அஞ்சலி படுத்திருக்கும்  கட்டிலின் மேல் கால் நீட்டி சேரில்  அமர்ந்திருந்த கதிரின் சிந்தனை முழுவதும், அடுத்து என்ன..? எப்படி..?  என்றே இருக்க,   அப்பொழுது அஞ்சலியிடம் லேசான அசைவு தெரியவும்,  அவளையே பார்த்து கொண்டிருந்தவன், அவள் கண் முழித்து தன்னை பார்க்க, அங்கு மூலையில் இருந்த பாத்ரூமை கைகாட்டி விட்டு  எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

அவன் வெளியே செல்லவும்,  விறைப்பாக செல்லும் அவனின் முதுகையே வெறித்து பார்த்து கொண்டிருந்த அஞ்சலி,  வெகு நேரம் முன்பே  விழித்து விட்டாள், விழித்து விட்டவள் லேசாக கண் திறந்து பார்க்க, முதலில் மங்கலாக தெரிந்த கதிரின் உருவத்தை கண்டு, “எப்போதும் போல் வரும் கனவோ..?” என்று விழித்தவள்,

பின்பே இருக்கும் இடம் புரிய, அடுத்தடுத்து வேகமாக நேற்றிரவு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர, மீண்டும் கண்களில் கண்ணீர் துளிர்க்க, அழும் தன் மீது தானே வெறுப்பு கொண்டவள், மீண்டும்    கண்களை   லேசாக  திறந்து அங்கு அமர்ந்திருந்த கதிரை  பார்க்க, அவன் முகமோ நெற்றி சுருங்கி, கண்கள் மூடி கொண்டு தீவிர சிந்தனையில்  இருந்தது,

அவனின் முகத்தை இவ்வளவு அருகாமையில் பார்த்ததும் அஞ்சலியின் மனதில் முதலில்  தோன்றியது எல்லாம் கடந்த காலத்தில்  அவனுக்காக அவள் தவித்த தவிப்பே,  அவள் அவனை காதலிக்க ஆரம்பித்த நாளில் இருந்து, கதிரை பார்க்க எவ்வளவு மெனக்கெட்டிருப்பாள்..?, 

அதிலும் அவர்கள் இருப்பது ஓர் வளர்ந்த கிராமமும் இல்லாமல்,  டவுனும் இல்லாமல் இடைப்பட்ட ஊராக இருப்பதால், அப்படி எல்லாம் நினைத்தவுடன் அவளால் கதிரை பார்த்து விட முடியாது, அது எல்லாம் அவளின் காதல் பட்ட மனதிற்கு புரிய வேண்டுமே, அவனை ஒரு நொடி பார்க்க அவளின் மனது ஏங்கவே செய்யும், பார்ப்பதற்கே இப்படி என்றால் “அவன் அருகாமை, அவனின் நெருக்கம், அவனின் மனம்,  அவனின் தொடுகை..” எல்லாம் இத்தனை வருடம் அவளின் கனவில் மட்டுமே நிகழ்ந்த ஒன்று..

ஆனால்  இன்று  “அவனின் முதல் குறுஞ்சிரிப்பு, முதல் ஸ்பரிசம், முதல் தொடுகை, முதல் நெருக்கம், என்று எல்லாமே நிஜத்திலே அனுபவித்தாலும், அவளால் அதை எல்லாம் ஏற்று கொள்ள முடியவில்லை” என்று தான் சொல்ல வேண்டும்,  இதோ இப்பொழுதும்  கதிர் இவ்வளவு அருகில் இருந்தாலும் அவனை பார்க்க கூட தோன்றாமல் கண்களை மூடி கொள்ளவே விரும்பினாள்.

“இவரை ஒரு நிமிஷம் பார்க்க மாட்டோமா..? இவர் கூடவே  ஒரு அஞ்சு நிமிஷம் இருக்க மாட்டோமா..? இவர் என்னை சும்மா கூட யாரோ போல பார்க்க மாட்டாரா..? என்று இத்தனை வருடம் அவள் தவித்த தவிப்பென்ன..? துடித்த துடிப்பென்ன..?”

 ஏன் மூன்று வருடம் முன்பும் கோவிலில் அவன் பிறந்த நாளில் எதிரேயே நின்றிருந்த தன்னை அவன் சாதாரணமாக கூட பார்க்காமல் செல்ல, அன்று எவ்வளவு துடித்தேன், அழுதேன்”. என்று மனம் குமுற,  அதற்கு மேலும் அவனின் அருகாமையை பொறுக்க முடியாமல்   லேசாக தன் அசைவை  காட்டவே,

அவள் எதிர்பார்த்தது போல் அவன் வெளியே செல்லவும், எழுந்து அமர்ந்தவளிடம், நேற்றைய சோர்வு இன்னும் மிச்சமிருக்க, தலை லேசாக சுற்றவும், சில நிமிடம் கண்மூடி அமர்ந்து, தன்னை தானே சமாளித்தவள், அவன் கைகாட்டி விட்ட பாத்ரூமிற்கு சென்றவள்,

அங்கிருக்கும் கண்ணாடியில் தன் முகம் பார்க்க, அதில் கதிரின் அறைந்த தடம் ஐந்து விரல் பதிய நன்றாக தெரிய, உதட்டில் ஓர் ஓரமாக ரத்தம் வேறு உறைந்து போயிருந்தது, அதை காணவும், “ராட்சஸன்..” என்று கதிரை மனதில் பொறிந்தவள், லேசாக முகம் கழுவி மேலும் தன்னை நிதானபடுத்தி கொண்டு,  வெளியே வந்தவள்,

 அக்கட்டிலிலும்,  சேரிலும் அமர பிடிக்காமல், அங்கிருந்த மூடிய ஜன்னலோரம் சென்று அதை திறந்தவளுக்கு அப்பொழுதுதான், அவள் இருக்குமிடம் எந்த இடம் என்று புரிந்தது,  “இது.. இந்த பண்ணை வீடு  அவளுக்காக, அவளின் அப்பா வாங்கி கொடுத்த பண்ணை வீடு”,

சுற்றிலும் 50 ஏக்கராவிற்கு மேல் இருக்க, நடுவில் தனியே இருக்கும் இந்த பண்ணை வீட்டிற்கு  இவர்கள் யாரும் அவ்வளவுவாக வருவதில்லை, பராமரிப்பிற்கு ஆட்கள் இருக்க, தோட்ட வேலை எப்பொழுதும் போல் அசோக்கின் மேற்பார்வையில் நடக்கும், இவை எல்லாம் இவனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும், இல்லையெனில் இந்த இடத்திற்கு அவன் அவளை கொண்டு வந்திருக்க முடியாது,

“எப்படி இது  இவனுக்கு தெரிந்திருக்கும், ஒருவேளை இவனுடைய ஆட்கள் யாராவது..?”  என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் நேற்று அசோக், கதிரிடம் பேசும்  போது, அவனின் பேச்சில்  இருந்த  உரிமை ஞாபகத்திற்கு வர, நம்ப முடியாமல்  அதிர்ச்சியில் சிலையானாள்,

 “அப்படி என்றால், அன்று நான் அண்ணனிடம்.. அய்யோ கடவுளே..”  என்று வாய்விட்டு சொன்னவள், பின் இருக்குமிடம் உணர்ந்து, தன் மன போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவள், சில நிமிடம் கண் மூடி தீவிரமாக யோசிக்க.. யோசிக்க அவளுக்கு ஒரு தெளிவு கிடைத்தது.  “இருக்கட்டும்.. வீட்ல போய் அண்ணாகிட்ட பேசிக்கலாம்” என்று மனதில் ஆத்திரமாக நினைத்தவள், அடுத்து  விடிய போகும் வேளைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திலே அவளின் முகத்தில் சூரிய ஒளி பாய, அந்நேரம் வாசலில் கேட்ட தொடர் ஹார்ன் சத்தத்தில், தனக்கான அவனின் அழைப்பு என்று உள்மனம் உந்த, கலங்கிய தன் மனதை தயார்படுத்தி கொண்டு வெளியே வந்தவள், அங்கு ஜீப்பில் ட்ரைவிங்க் சீட்டில் நேர்பார்வையுடன், விறைப்பாக கதிர் அமர்ந்திருக்க, ஒரு நிமிடம் ஆழ்ந்து சுவாசித்தவள், பின் அமைதியாகவே பின் சீட்டில் அமர்ந்து கண்மூடி கொண்டாள்,

அவனை கேட்க, திட்ட, அடிக்க.. ஏன் கொல்ல கூட மனம் துடித்தாலும், அவளின் பாழாய் போன காதல் அவளை எதுவும் செய்ய விடாமல் தடுக்க, தன் மேல் தானே வெறுப்பு கொண்டவள், அதே வெறுப்புடன் கண்  திறந்து கதிரை பார்க்க, சரியாக அந்நொடி கதிரும் முன் கண்ணாடி வழியாக அவளின் வெறுப்பான பார்வையை, மிக ஆழ்ந்த பார்வையுடன்  சந்திக்க, அவனின் பார்வை சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள முடியாமல் திணறியவள், ஆயாசமாக  மீண்டும் கண் மூடி கொண்டாள்,

“இது தான் முதல் முறை.. இருவரின் பார்வையும் சந்திப்பது, ஆனாலும் அந்நொடியை நினைத்து உள்ளுக்குள் வெறுக்கவே செய்தாள் அஞ்சலி”,  ஊர் முகப்பு வர, அங்கேயே கதிரின் ஆட்கள் இருநூறு பேறுக்கு மேல் காத்திருந்து இவனுக்கு வழி விட்டு நிற்க, இவன் சென்றவுடன் அவர்களும் தங்களின் கார்களில், பைக்குகளில் பின் தொடர, தன் கையை தூக்கி அவர்களை  வேண்டாம் என்று  சைகை செய்தவன், தான் மட்டும் அஞ்சலியுடன் அவள் வீடு சென்றான்.

அங்கே ஒரு பெரிய பட்டாளமே நிற்க,  கதிர் ஜீப்பை கொண்டு வந்து நிறுத்தவும்,   அவனின் செயலில் கொதித்து போயிருந்த சுந்தரத்தின் ஆட்கள் அவனை  தாக்க பாய்ந்து வர, ஜீப்பில் இருந்து குதித்த கதிர், முதலில் வந்தவனை தன் வலது கால் தூக்கி உதைக்க, அவன் தூர போய் விழுகவும்,

அடுத்து வந்தவர்களை, கையில் இருக்கும் காப்பை கழற்றி விரலிடுக்கில் வைத்தவன், அதாலே வந்தவர்களின் மூக்கில், வயிற்றில் குத்த, என்று கொஞ்சம் கூட அசராமல், சுந்தரத்தின் ஆட்களை பந்தாட, விஷயம் கேள்விப்பட்டு வேகமாக வெளியே வந்த சுந்தரம், தன் ஆட்களை பார்த்து “நிறுத்துங்க.. எல்லாரும் நிறுத்துங்க..” என்று கத்தவும் தான் நிலைமை  கொஞ்சம் கட்டுக்குள் வந்ததது,

மீனாட்சியும், லதாவும் அஞ்சலியை பார்த்து வேகமாக அவளிடம் வர பார்க்க, அவர்களை அங்கேயே நிற்க சொல்லி கை காட்டிய கதிர்,  கழற்றிய காப்பை மீண்டும் கையில் போட்டு அதை மேலேற்றியவன், மீசையை இன்னும் நன்றாக மேல் நோக்கி முறுக்கி விட்டவாறே, சுற்றி இருக்கும் எல்லோரையும் வீட்டின் வாசல் படியில் ஒரே இரவில் மிகவும் ஒடுங்கி போயிருந்த சுந்தரத்தை பார்த்தவன்,

 ஜீப்பை நெருங்கி அவனின் செயல்களையே  வெறுப்போடு பார்த்து கொண்டிருந்த அஞ்சலியை கையை பிடித்து இறக்கியவன்,   “நான் ஆம்பளையா..? இல்லையான்னு..?  இப்போ உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன், என்று  நெஞ்சை நிமிர்த்து கொண்டு கம்பீரமாக, தெனாவட்டாக  சொல்ல, அவனின் வார்த்தையில் அஞ்சலி கூசி கூனி குறுகி போனாள். 

அவனின் விஷம் தடவிய  கொடிய வார்த்தைகளில் மிக ஆழமான காயப்பட்ட அஞ்சலி,  எல்லோரையும் நக்கலாக பார்த்த கதிர், கிளம்பவும்,  “இதுக்கு நீங்க என்னை கொன்னே போட்டிருக்கலாம்..”  என்று அளவில்லா விரக்தியில், ஆத்திரத்தில், கண்களில் கனல்  தெறிக்க சொல்ல,

அவளின் வார்த்தையில் கதிரின் கால்கள் அசைவற்று நின்றுவிட, அவனை கை தசைகள் இறுக, கழுத்து நரம்புகள் புடைத்து, கண்கள் ரத்தமென சிவந்து அவனின் அளவில்லா கோவத்தை பறைசாற்றியது. இதெல்லாம் ஓர் நொடி தான், அடுத்த நொடி எப்போதும் போல் திமிராக.. தெனாவட்டாக  பார்த்தவாறே அவளை மிகவும் நெருங்கி நின்றவன்,

“தேவைப்பட்டா அதையும் செய்வேண்டி..” என்று  அவளின் கண்களை பார்த்தவாறே மிக அழுத்தமாக  சொன்னவன்,  ஜீப்பை கிளப்பி கொண்டு சென்றும்விட்டான்.

Advertisement