Advertisement

நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 6

கதிர்..  அஞ்சலியை தூக்கி  சென்ற பின்னும், கதிரின் ஆட்கள் அஷோக்கையும், அவனின் ஆட்களையும் விடாமலே சுற்றி வளைத்து  நின்றிருக்க, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அசோக், அவனின் ஆட்களோடு கதிரின் ஆட்களை வலுவாக தாக்க ஆரம்பித்தான்,

இருந்தும் கதிரின் ஆட்கள் அசோக்கின் அடியை தடுத்தனரே தவிர திருப்பி தாக்கவில்லை, அப்பொழுது அக்கூட்டத்தின் தலைவன் பொலிந்தருந்தவனுக்கு போன் வர  உடனடியாக எடுத்து பேசியவன், மறுமுனை சொல்வதற்கு,  “சரி தம்பி..”   என்றுவிட்டு வைத்தவன்,  உடனே அஷோக்கிற்கும், அவனின் ஆட்களுக்கும் வழிவிட, “அசோக்கிற்கு நன்றாக புரிந்தது  அது கதிர் தான்”  என்று, அதில் மேலும் ஆத்திரமடைந்தவன்,

“என் தங்கச்சியை கண்டுபிடிச்சுட்டு உங்களை எல்லாம் வச்சிக்கிறேண்டா கச்சேரி..”  என்று எல்லோரையும் பார்த்து உக்கிரமாக கத்தியவன்,  தன் தந்தைக்கு தகவல் தெரிவித்துவிட்டு,   இரவு முடிவதற்குள் அஞ்சலியை  தேடி கண்டுபிடிக்க தன் ஆட்களுடன் விரைந்து சென்றவன்,

தனக்கு  கதிரை பற்றி தெரிந்த வரை “அவன் அஞ்சலியுடன் எங்கு எல்லாம்  சென்றிருக்க கூடும்..”  என்ற கணக்கீடுடன்,  தங்கள் முழு படைபலத்தையும் பயன்ப்படுத்தி  சென்னை, பெங்களூர், மற்றும் வேலூரையே  சல்லடை  போட்டு இன்ச் இன்ச்சாக சலிக்க ஆர்மபித்தான், 

“அஞ்சலியை கதிர் தூக்கி சென்று விட்டான்..”  என்ற தகவல் நொடியில் காற்றை போல் வேகமாக சுற்று வட்டாரம் எல்லாம் பரவ ஆரம்பித்தது, விஷயம் கேள்வி பட்டவுடன் சுந்தரம்,  நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்துவிட,

“என் பொண்ணு இந்த ஊருக்கே வரமாட்டேன்னு தானே  சொன்னா.. நான்தான் அவளை வம்படியா வரவச்சேனே”, என்று  மீனாட்சி மகளை நினைத்து அழுதே கரைந்தார்   என்றால் விஷயம் கேள்விப்பட்ட லதாவிற்கு கதிரின் மேல் கோவமும், ஆதங்கமும்  கொந்தளித்தது, 

“அஞ்சலிக்கு கதிரின் மேல் இருக்கும் தீவிர காதல் தெரிந்தவர் என்பதால்,  தற்பொழுது  அவனின் செயலால்   அஞ்சலியின் மனம்  எப்படி துடிக்கும்..”  என்று  நன்றாகவே புரிந்து  கொண்டதால்,  அவளை நினைத்து வேதனை பட மட்டுமே முடிந்தது அவரால்,

 கதிரின் ஜீப்பில் அரை மயக்க நிலையில் பயணப்பட்டு கொண்டிருந்த அஞ்சலிக்கு,   “இதெல்லம் கொடூர கனவாக இருந்துவிட கூடாதா..?”  என்று அவளின் மனம்  இடைவிடாமல் அரற்றி கொண்டிருந்தது, 

“அவளின் கதிரா இப்படி..? இவனையே நான் உயிருக்கு உயிராக நேசித்து இதுநாள் வரை துன்பபட்டு கொண்டிருந்தேன்,.   இல்லை.. இல்லை  இது என் கதிரே இல்லை..  இது வேறு யாரோ..?   என் கதிர் இது போல் எல்லாம் செய்ய கூடியவனே இல்லை,   இவன் வேறு   யாரோதான்..  என்று அவளின் உள்ளம்  கதிரின் செயலில் துடித்து கொண்டிருக்க, 

ஜீப் ஓரிடத்தில் நிற்கவும், முயன்று கண்களை திறந்தவளுக்கு, அவர்கள் வந்திருப்பது ஒரு பண்ணை வீடு என்று மட்டும் கணிக்க முடிந்தது, அதற்கு பிறகு  சுற்று புறத்தை உணர அவளின் கண்களோ, உடலோ ஒத்துழைக்காமல் போக, தானாகவே கண்கள் மூடி கொண்டது, இரண்டு நாள் முழுவதும் ட்ராவலிலே  இருக்க, பிளைட்டில் கொடுத்த  சேண்ட்விச்சையும்  ஒரு நேரம் மட்டும் கடமையே என்று உண்டவள், இருந்த மனவுளைச்சலில் அதற்கு பிறகு   உணவையே  மறந்து தான் போனாள்,

அதனாலே, கதிர் அறையவும் மிச்சம் மீதி  இருந்த ஸ்ட்ரெந்தும்  கரைந்து போக அதிர்ச்சியில்,  அவன் அறைந்த அறையின் வலியில் அரை மயக்க நிலைக்கே சென்றுவிட்டாள், அவளால் ஜீப் நின்றபிறகும் இறங்குவதற்கோ, கத்துவதற்கோ கூட தெம்பில்லாமல் போக, தன் நிலையை நினைத்து மறுகியவாறே கண்களில் கண்ணீர் பெருக, படுத்து கொண்டிருந்தவளை, யாரோ கைகளில் தூக்குவது போல் இருக்க,

 மீண்டும் முயன்று தன் எதிர்ப்பை கை, கால்களை அசைத்து காட்டியபடி கண்களை திறந்தவளின் வெகு அருகில் கதிரின் முகம் தெரிய, அந்நிலையிலும் காதல் கொண்ட அவளின் பாழாய் போன மனம், அவனின் அருகாமையும், ஸ்பரிசத்தையும், ஆண்மையையும் ரசிக்கவே செய்ய, அந்நொடி அஞ்சலி  தன்னை நினைத்தே  எல்லையில்லா வெறுப்பு கொண்டவள், மறுபடியும் தானாகவே கண்களை மூடி கொண்டாள்,

என்னதான் கண்களை மூடி கொண்டாலும், அவனின்  சுவாசத்தையும், அவனின் அழுத்தமான தொடுகையையும், அவனின் பிரத்யோகமான  ஆண்மையின் மனத்தையும், உணரவே செய்ய, காதல் கொண்ட  மனம் அவனின் அருகாமையை ஏற்று கொள்ளவும் முடியாமல், வெறுக்கவும் முடியாமல் தத்தளிக்கவே செய்தது,

அவளின் நிலை இப்படி இருக்க, அவளை கையில் வைத்திருந்த கதிரோ, இன்னதென்று புரிந்து கொள்ள முடியாத பார்வையில் அவளையே பார்த்தவாறே தூக்கி வந்தவன்,  அங்கிருந்த ரூமில் உள்ள பெட்டில் படுக்க வைக்க, 

அதை உணர்ந்த அஞ்சலி, பெரு முயற்சி செய்து   வேகமாக  எழுந்து  நிற்கவும், அவளின்  உடல் அதற்கு ஒத்துழைக்காமல் போக, மீண்டும் மயக்கம் வந்து தன்னாலே விழபோனவளை, அதுவரை அவளின் செயல்களையே கூர்மையாக  பார்த்து கொண்டிருந்த கதிர், அவள் விழப்போகவும்  தாங்கி பிடித்தவன், மீண்டும் அவளை பெட்டில் படுக்க வைத்துவிட்டு, வெளியே  சென்றவன், வரும்போது  கையில் பால் டம்ளரை கொண்டு  வந்தான்,

எடுத்து வந்த பாலை, பெட்டிற்கு பக்கத்தில் இருக்கும் டேபிளில் வைத்தவன்,   கண்களின் ஓரம்  கண்ணீர்  வழிய அரை மயக்கத்தில் படுத்து  இருந்த  அஞ்சலியை  தூக்கி தன் தோள் மேல் சாய்த்து அமர்ந்தபடி, எட்டி அருகில் இருக்கும் பாலை எடுத்து அவளின் உதட்டில் பொருத்தி குடிக்க வைக்க, சிறிதளவு உணர்விருந்த அஞ்சலி, பாலை குடிக்காமல் வாயை அழுந்த மூடி கொண்டாள்,

அதை உணர்ந்த கதிர் மறுபடியும் வலுக்கட்டாயமாக உதட்டில் மேலும் அழுந்த பால்  டம்ளரை திணிக்க, அப்பொழுதும் அஞ்சலி வாயை இறுக மூடி கொண்டு, தன் எதிர்ப்பை  காட்டினாள்.  அவளின்  எதிர்ப்பில் பல்லை கடித்த கதிர், கட்டிலில் இருந்து எழுந்து கொண்டு  அப்படியே  அவளை  கட்டிலில் சாய்த்து அமர வைத்தவன்,

 அவளின் கோவமான முகத்தை பார்த்தவாறே  பால் டம்ளருடன் அவளுக்கு மிக அருகில்  வந்தவன், பட்டென்று மூக்கை அழுத்தி பிடித்தவாறே, டம்ளரை  வாயில் திணித்து பாலை குடிக்க வைக்க, அவனின் இந்த செயலை எதிர்பார்க்காத அஞ்சலியால், பாலை குடிப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை, முழு பாலையும் குடித்த பிறகே மூக்கை விட்டவன், அவள் ஆத்திரமாக முறைப்பதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்  டம்ளருடன் வெளியே சென்றுவிட்டான் ,

  பால்  குடித்த சில நொடிகளிலே, கண்கள் தூக்கத்திற்கு இழுக்கவே பாலில் தூக்க மாத்திரை கலந்திருந்ததை புரிந்து கொண்ட அஞ்சலிக்கு, கதிரின் செயலில் கோவமும், விரக்தியும், வெறுப்பே உண்டானது,  அதே எண்ணங்களுடன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்ட அஞ்சலியை, சிறிது நேரத்திற்கு பிறகு உள்ளே வந்த கதிர், அங்கிருக்கும் டேபிளில் சாய்ந்து கைகளை கட்டி கொண்டு, அஞ்சலியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளையே கூர்ந்து  பார்த்து கொண்டிருந்தான்,

அங்கு மாறனோ, சின்ன மகனின் செயலை கேள்விப்பட்டு நம்ப முடியாமல் அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, அவரின் பெரிய மகன்களோ மகிழ்ச்சியில் தம்பியின் செயலை பாராட்டி கொண்டிருந்தனர், அப்பொழுது அங்கு வேகமாக வந்த மாறனின் மகள், அவ்வீட்டின் “மூத்த பெண்   நாயகி”,  சிரித்து கொண்டிருந்த தன் தம்பிகளை வெறுப்புடன் பார்த்தவர், நேரே தன் தந்தையிடம் சென்றார்.

நாயகியை பக்கத்து ஊரிலே கொடுத்திருக்க, விஷயம் கேள்விப்பட்டவுடன்  கிளம்பிவந்தவர், தன் தந்தையிடம்,   “ப்பா.. என்னப்பா இதெல்லாம்..? எல்லோரும் என்னென்னமோ சொல்ராங்க..  நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா..? நம்ம கதிர்  அந்த சுந்தரத்தோட பொண்ண தூக்கிட்டு போயிருக்கானாமே..?, என்னால நம்ப முடியலப்பா,  இந்த அர்த்த ராத்திரியிலயும்  ஊரெல்லாம்  இதே பேச்சாத்தான் இருக்கு”, என்று தம்பியின் செயலில் அங்கலாய்க்க, மோகனோ..

“அக்கா, என்னக்கா பேசுற நீ..? நாங்களே இப்போதான் தம்பி உருப்படியா ஒரு வேலையை செஞ்சிருக்கான்ன்னு சந்தோஷ பட்டிட்டுருக்கோம்” என்று மகிழ்ச்சியில்  சொல்ல, சேகரனும் அதை ஆமோதித்தவாறே,

“ஆமாக்கா.. நாங்களும் இத்தனை வருஷம் ஆச்சே, இன்னும்  அவங்களை எல்லாம் ஒண்ணும் செய்யாம இருக்கானேன்னு மனசுக்குள்ள வெந்து போயிருந்தோம், ஆனா அவன் லேட்டா செஞ்சாலும், அந்த சுந்தரமும், அவன் குடும்பமும் தலை  நிமிர முடியாதபடி பெருசா செஞ்சுட்டான், வேணும்.. அவங்களுக்கு இன்னும் நல்லா வேணும்..”  என்று சேகர் வெற்றி கொக்கரிப்பில் சொல்லி சிரிக்க, அப்பொழுது

“வாயை மூடுங்கடா..”  என்று மாறனின் திடீர் கர்ஜிப்பில் திகைத்து போன அண்ணன், தம்பி இருவரும், அவரை அதிர்ச்சியாக  பார்க்க, அவரின் முகம் அளவில்லா கோவத்தில் ஜொலித்து கொண்டிருந்தது, 

“என்ன பேசுறோம்ன்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா..?  எது பேசறதா இருந்தாலும் உங்களுக்கும்   பொண்ணுங்க இருக்குன்னுறதை  மனசுல வச்சிக்கிட்டு பேசுங்க”, என்று வெறுப்புடன் மகன்களிடம் கத்தியவர், பின் நெற்றியை அழுந்த தேய்த்து கொண்டே, 

“போங்க..  போய் உங்க தம்பி அந்த பொண்ணை எங்க வச்சிருக்கான்னு  முதல்ல கண்டுபிடிச்சு எனக்கு தகவல் சொல்லுங்க..  கிளம்புங்க, சீக்கிரம்”  என்று மகன்களையும்,  வீட்டிற்கு வெளியே கூடியிருந்த அவருடைய ஆட்களையும்  விரட்டியவர், அங்கேயே இருந்த சேரில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார்,

அவருக்கு பக்கத்திலே கவலையுடன் அமர்ந்து கொண்ட நாயகிக்கு தம்பியின் செயலில் மனதே ஆறவில்லை, “அவனா இப்படி..?”   என்பதே அவனை பற்றி தெரிந்து வைத்திருந்த எல்லோருடைய எண்ணமாக இருந்தது,

“கதிர் இப்படி செய்வான்னு  நான் கனவுல கூட நினைச்சு பாக்கலையே, அவன் கல்யாணம் நின்னப்பவும் சரி, லட்சுமி நம்மை விட்டு”  என்று அடைத்த அழுகையை விழுங்கி கொண்டு,    “லட்சுமி நம்மை விட்டு போனப்பவும் சரி, பெரியவனுங்க அவங்களை பழி வாங்கறன்னு  எகிறனப்போ..? இவன்தானே அவங்களை எதுவும் செய்ய கூடாதுன்னு, அவங்களையும், நம்ம ஆளுங்களையும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிருந்தான், ஆனா இப்போ..? இப்போ..? இவனே..? கடவுளே நான் என்ன செய்வேன்..? என்னைக்கும் நாம நம்ம பிரச்சனையில பொண்ணுங்களை இழுத்ததே இல்லையே..? ஆனா இவன்..”  என்று மாறன் ஆத்திரமாக சொல்லி வேதனை படவும்,

நாயகியும் தம்பியின் செயலில், அதற்கு பிறகு ஏற்பட போகும் பின் விளைவுகளில், இவற்றை எல்லாம் விட அந்த பெண்.. என்று அஞ்சலியை பற்றி நினைத்தவர், அவளை பற்றி இனி இந்த ஊர் உலகம் பேச போகும் பேச்சை நினைத்து ஒரு பெண்ணாய் மிகவும் கலங்கவே செய்தார்.

அங்கு அஞ்சலியின் வீட்டிலும், நடு ஜாமம் கடந்த பிறகும், கதிரையும்.. அஞ்சலியையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி போக, எல்லோருடையின் வேதனையும்  உச்சத்தை தொட்டு நின்றது, இன்னும் சிறிது நேரத்தில் விடிய போகும் விடியலை நினைத்து எல்லோரும்  மிகவும் கலங்கவே செய்தனர்,

Advertisement