Advertisement

நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 3

“அண்ணே.. நான் என்ன சொன்ன நீங்க என்ன செஞ்சு வஞ்சிருக்கீங்க..?  நான்
உங்களை நாளைக்கு தானே தண்ணி விட சொன்னேன்,  நீங்க யாரை கேட்டு இன்னைக்கே
தண்ணி விட்டீங்க..? அந்த செடிக்கெல்லாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான்
தண்ணிவிடனும்”,   என்று  பார்மில் வேலை பார்க்கும் குமாரை பார்த்து
மெலிதான கோவத்தோடு கேட்டான் கதிர்.

 “இல்லீங்க தம்பி, அது..”   என்று  நெளிந்தவாரே  குமார் தலையை சொறிய,
அவரை கூர்மையாக பார்த்த கதிர்,  “கிட்ட  வாங்க”  என்று அதட்ட, “இல்ல..
இல்ல தம்பி.. அது கொஞ்சம் தான்”,

“நிறுத்துங்க.. நான் முதல்லே சொல்லிருக்கேன், தண்ணி அடிச்சிட்டு
எங்கிட்ட யாரும்  வேலைக்கு வரக்கூடாதுன்னு, எவ்வளவு தைரியம் இருந்தா
இவ்வளவு காலையிலே தண்ணி அடிச்சிட்டு வந்திருப்பேங்க, காசு இருக்க போய்
தானே இந்த ஜோரு, போங்க உங்களுக்கு மூணு நாள்  கூலி கிடையாது”,

“அய்யோ தம்பி.. என் குடும்பம் எப்படி..?”

 “அந்த நினைப்பு நீங்க தண்ணி அடிக்கிறதுக்கு முன்னாடியே இருந்திருக்கணும்”,

“தம்பி.. தம்பி.. இந்த ஒரு தடவை மட்டும்” என்று அவர் கெஞ்ச,
“கிடையாதுன்னு கிடையதுதான்.. இங்கிருந்து கிளம்புங்க முதல்ல”,   என்று
கண்டிப்புடன் சொல்லிவிட,   “இனி கதிரிடம் கேட்டும் பயனில்லை”   என்று
புரிந்த குமார் நொந்து போய்  கிளம்பிவிட்டர்,

“தம்பி.. உங்களை பாக்க உங்க பெரியண்ணன் மோகன் வந்திருக்கார்..”   என்று
செல்வி சொல்லவும், ஒரு நிமிடம் புருவம் சுருக்கி யோசித்தவன், “அவரை
ஆஃபீஸ் ரூம்ல உட்காரவைங்க”, என்றவன், தன் போன் எடுத்து கால் செய்ய, அந்த
பக்கம் எடுத்தவுடன்,

“நான் சொன்ன வேலை என்ன ஆச்சி..? முடிஞ்சிதா..? என்ன நான் உங்களை  நேத்தே
செய்ய சொன்னேன் தானே..?   சரி இப்போ உடனே முடிச்சுட்டு எனக்கு
கூப்பிடுங்க. அப்படியா சரி.. அப்போ நாம எப்பவும் மீட் பண்ற இடத்திலே
ஈவினிங் மீட் பண்ணலாம்”, என்று பேசி வைத்தவன், நிதானமாக அங்கேயே சுற்றி
கொண்டிருந்துவிட்டு அரை மணி நேரம் கடந்த பிறகே,  தன் அண்ணனை காண ஆபிஸ்
ரூம் சென்றான்,

“அண்ணே..  ஆனாலும் உங்க தம்பிக்கு இம்புட்டு ஏத்தம் இருக்க கூடாதுண்ணா,
நீங்க வந்தது தெரிஞ்சும் உங்களை பாக்க வராம.”,   “க்கும்..”  என்று
தொண்டை கனைக்கும் சத்தம் கேட்கவும், அதுவரை பேசிக்கொண்டிருந்த மோகனின்
தொடுப்பு முத்து, கதிரை காணவும் நடுநடுங்கி விட்டான்,

“என்ன முத்து.. சத்தம் ரொம்ப  பலமா இருக்கு போலேயே, உடம்புல நிறைய தெம்பு
இருக்கோ..?”  என்று கையில் இருக்கும் காப்பை ஏற்றியபடி நக்கலாக
கேட்டவாறே, தன் சீட்டில் கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்தவன்,  தன்
அண்ணனை  பைலை பார்க்க ஆர்மபிக்க, அவனின் உதாசீனத்தில் மோகனிற்கு  கோவம்
வந்தாலும்,  “தன்னால் அவனை எதுவும் செய்ய முடியாது”  என்பதாலே தன்
கோவத்தை  அடக்கியவன்,

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”  என்று  சொல்ல, அவரை நிமிர்ந்து பார்த்த
கதிர்,    “உங்களை பாத்தா பேச வந்தது போலே தெரியலையே..?” என்று அவனுடன்
இருக்கும் ஆட்களை கண்ணால் காட்டி மிதப்பாக கேட்டான், அதை புரிந்து கொண்ட
மோகன் தன் ஆட்களை பார்க்க அவர்கள் அடுத்த நொடி வெளியேறி இருந்தனர்,

“என்ன பேசணும்..?”  என்று கதிர் அவர் பேச வந்த விஷயத்தை பற்றி
தெரிந்தும், ஒன்றும் தெரியாதது போல் கிண்டலான குரலில்  கேட்கவும், அவனின்
கிண்டலில் சீண்ட பட்ட  மோகன், “நான் என்ன பேச வந்திருக்கேன்னு உனக்கு
தெரியாதா..?” என்று ஆத்திரமாக கத்தவும்,  கதிர் பழைய படி எதுவும் பேசாமல்
பைலை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

“ச்சே..  இவனை பத்தி தெரிஞ்சும் இவன்கிட்ட கத்திட்டேனே” என்று நொந்து போன
 மோகன், நேராகாவே விஷயத்திற்கு வந்தார், “இந்த வருஷம் கோயில் கடைத்தெரு
காண்ட்ராக்டை நீ எடுக்க போறதா நியூஸ் வந்துச்சு, அது எப்பவும் நான்
எடுக்கிற காண்ட்ராக்ட், நீ புதுசா இந்த வருஷம்   இதுல தலையிடுற,
வேண்டாம்.. ஒதுங்கிக்கோன்னு..”  சொல்லிட்டு போக தான் வந்தேன், என்று
முதலில் அமைதியாக ஆரம்பித்தாலும், இறுதியில் தன் கோவத்தை பேச்சில்
காட்டவே செய்தார் மோகன்,

அது புரிந்தாலும் கண்டு கொள்ளாமல்  “நீ என்னவாவது பேசிகொள், நான்
செய்கிறதை தான் செய்வேன் ”  என்ற ரீதியில் தெனாவட்டாக அமர்ந்திருந்த
கதிரை பார்த்த மோகனிற்கு மேலும் ரத்தம் கொதிக்கவே செய்தது,  அதனாலே,  “நீ
எப்படி அந்த கான்ட்ராக்டை எடுக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்” என்று
கதிரை பார்த்து  சவால் விடவும், அவரை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்த கதிர்,
மறுபடியும் பைலை பார்க்க ஆரம்பித்துவிடவும்,

“இந்த டைம் நீயா..? நானான்னு..? பார்த்துடுலாம்”, என்று கத்தியவர், தன்
துடுப்புகளோடு கிளம்பிட, சில நிமிடம் கண்மூடி தீவிரமாக யோசித்தவன்,
மறுபடியும் விழி திறக்கும்  போது அவன்  முகத்தில் கோபசிரிப்பே  இருந்தது,

“தம்பி..  இந்தாங்க டீ..”   என்று டீக்கடைக்காரர்   டீயை  மரியாதையுடன்
நீட்ட, அதை வாங்கி குடித்து கொண்டிருந்த கதிரின் கண்கள், ரோடை தான்
தீவிரமாக பார்த்து கொண்டிருந்தது, சிறிது நேரத்திலே, அவன் எதிர்பார்த்த
கார் வர, வெற்றி சிரிப்பு சிரித்தவன், இன்னும் நிதானமாக டீயை ரசித்து
குடிக்க ஆரம்பித்தான்,

அக்காரிலிருந்து இறங்கியவர்கள், எல்லா கடைகளுக்கும் சென்று காசு வாங்க
ஆரம்பிக்க, அதில் ஒருவன் கதிர் இருக்கும் டீ கடைக்கும் காசு வாங்க
வந்தான், வந்தவன் கதிரை கண்டு லேசாக மிரண்டாலும், டீக்கடைக்காரரிடம்
எப்போதும் போல் “குத்தகை பணத்தை  இரண்டு மடங்கு அதிகமாக பணம் வாங்க”, அதை
பார்த்தாலும் கண்டு கொள்லாமல் டீ குடித்து கொண்டிருந்த கதிர்,

அவன் பணம் வாங்கிவிட்டு தன்னை தாண்டி செல்லும் போது வேண்டுமென்றே தன்
காலை நீட்ட, அதை எதிர்பார்க்காத அவன் சமாளிக்க முடியாமல் கீழே
விழுந்துவிட, அதை பார்த்தும் கண்டுகொள்ளாமல்  தொடர்ந்தும் டீயை குடித்து
கொண்டிருந்தான் கதிர்,

விழுந்தவனுக்கு  “கதிர்  வேண்டுமென்றே தான் செய்கிறான்”  என்று
புரிந்துவிட, அமைதியாக எழுந்து நின்றவன், எதுவும் பேசாமல் கிளம்ப
பார்க்க, தானும் எழுந்து நின்ற கதிர், தன் கையை  திமிர் விடுவது போல்
தூக்கி அவனின் மூக்கில் வலுவாக  குத்து விட, ரத்தம் குபுக்கென கொட்ட
வலியை தாங்காத அவன் “ஏண்ணே..?” என்று கேட்டுவிட,

“என்னடா..  என்னையே கேள்வி கேட்குற..?”  என்று பக்கத்தில் இருக்கும்
இருக்கும் பிளாஸ்டிக் சேரை தூக்கி அவன் முதுகில் அடிக்க, தங்கள் ஆள்
அடிவாங்குவது பொறுக்கமால் மற்றவர்களும் கதிரை நோக்கி ஓடி வர, தான்
உட்கார்ந்திருந்த டீ பெஞ்சின் கால்  கட்டையை உடைத்தவன் வந்தவர்களை
பாரபட்சம் பார்க்காமல் வெளுக்க ஆரம்பித்தான்,
சிறிது நேரத்தில் கடை தெருவே அமர்க்களமாகியது, அந்த வழியே சென்ற
“சுந்தரமும்.. அசோக்கும்”  கதிரின் செயலை நின்று பார்த்து விட்டுத்தான்
சென்றனர், அடிவாங்கியவர்கள் விட்டால் போதுமென ஓடிவிட, கடைத்தெருவே கதிரை
நின்று வேடிக்கை பார்க்க, அவனோ கூலாக சென்றவன் டீக்கடையில் இருக்கும்
தண்ணீரால் முகம் கழுவி விட்டு, அவரிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்தவன்,
மேலும் ஒரு  டீயை வாங்கி நிதானமாக குடித்துவிட்டே  வீட்டிற்கு வந்தவன்,

நேரே தன் அன்னை ரூமிற்குள் செல்ல, அங்கு “மாறன் மனைவியின் பக்கம்
அமர்ந்திருக்க, பெரிய அண்னன் மோகனுடன், சின்ன அண்ணன் சேகரும்” அவனை
முறைத்தபடி நின்றிருந்தனர், அவர்களை கண்டுகொள்ளாமல் நேரே தன் அன்னையிடம்
சென்றவன்,

“என்னம்மா.. சாப்டீங்களா..?”  என்று கேட்டு கொண்டிருக்கும் போதே
ஆத்திரமாக இடையிட்ட சேகர்,   “ப்ப்பா..”   என்று கத்த, மாறனோ திரும்பி
சேகரை முறைத்தவர்,  “அம்மா இருக்கிற இடத்தில இப்படித்தான் கத்துவியா..?”
 என்று கண்டிப்புடன் கேட்டார்.
“சரி..  நான் கத்தல,  ஆனா நீங்க இவனை என்னன்னு கேளுங்க முதல்ல,  வசூல்
வாங்க போன நம்ம ஆளுங்களை வேணும்ன்னே வம்புக்கு இழுத்து அடிச்சிருக்கான்,
எதுக்கு அடிச்சான்னு எனக்கு இப்போ  தெரிஞ்சாகணும்”,  என்று கதிரை
பார்த்து கோவமாக கேட்க,

கதிரோ,  “ஆமா.. வம்பை  இழுத்துதான் அடிச்சேன்..”  என்று  அலட்சியமாக
சொன்னவன்,  “உங்களால் என்ன  செய்ய முடியும்..?”  என்பது போல் தெனாவட்டாக
பார்த்தான், அதை அங்கிருந்த அனைவரும்  புரிந்து கொள்ள, “நான் காலையில
சவால் விட்டதுக்கு பதிலா இது..?” என்று மோகன் கடுமையாக கேட்கவும்,

 “ம்ம்ம்.. அப்படி சொல்ல முடியாது,   நான் கடைத்தெருவை ஏலம் எடுக்கலண்ணா
கூட  இப்படி தான் செய்வேன்ன்னு காட்ட தான் செஞ்சேன்ன்னு வேணும்ன்னா
சொல்லலாம்”, என்று கூலாக சொன்னான். அவனின் பதிலில்  மேலும் ஆத்திரமடைந்த
அண்ணன்கள் இருவரும் மாறனை பார்க்க, அவரோ தன் மனைவியை பார்த்து,

“நாம அவங்க கிட்ட எல்லாம் காசு வாங்குறது,   நம்ம கிட்ட காசு இல்லாம
கிடையாது,  அவங்களுக்கு நம்ம மேல பயம் இருக்கணும்ன்னு தான்,  அதுல உன்
பையனை தலையிட வேண்டாம்ன்னு சொல்லிடு..”  என்று மனைவியிடம் அதிகாரமாக
சொல்ல கேட்ட லட்சுமி அம்மாளும் சரி கதிரும் சரி அதை பெரிதாக எடுத்து
கொண்டது போலே தெரியவில்லை,

அதிலும் கதிர் நக்கலாக தன் தந்தையும், அண்ணன்களையும் பார்த்தவன்,
“இல்லாதபட்டவங்க பயத்துல உங்களை மாதிரி ஆட்கள் எல்லாம்  பந்தாவா வாழ்றது
மாதிரி கேவலமான விஷயம் இந்த உலகத்துல ஒன்னும் கிடையாது, அவங்க நம்ம மேல
வைக்கிற மரியாதையில வாழ்றதுதான்  வாழ்க்கையே..!!” என்று சீரியசாக
சொன்னவன்,  பின் தன் தோள்களை அலட்சியமாக குலுக்கியவாறே, “அதெல்லாம்
உங்களுக்கு சொன்னாலும் புரியாது”, என்று முடித்துவிட்டவன்,

“ம்மா..  இங்க ஒரே அனலா இருக்கு. வாங்க நாம வெளியே போலாம்” என்றவாறே,
அவரை தூக்கி வீல் சேரில் உட்காரவைத்து வெளியே கொண்டு சென்றிட,

“ப்பா.. இதெல்லாம் சரி கிடையாது பாத்துக்கோங்க, அப்பறம் உங்க சின்ன
மகனுக்கு ஏதாவது ஆச்சுன்னா,  நீங்க எங்களை கேட்க கூடாது..?”  என்று மோகன்
மிரட்டலாக சொல்ல, அதற்கு சேகரும் தலையாட்டவும், சத்தமாக சிரித்த மாறன்,

“யாரு..?  நீங்க..  அவனை.. என்று சொல்லி கொண்டே சிரித்தவர், “அவன் மேல கை
வைக்க முடியாமத்தான் நீங்க இங்க வந்து அவன்கிட்ட பஞ்சாயத்து பேசிட்டு
இருக்கீங்க, இதுல அவன் போனதுக்கு அப்பறம் மிரட்டல் வேற” என்று
சிரித்தவர்,   பின் அவர்கள் இருவரையும் பார்த்து,

“அவன் மேல கை வைக்க உங்களால மட்டும் இல்லை யாராலும் முடியாது, அப்படியே
நீங்க அவன் மேல கை வைக்க நினைச்சாலும்  என்னை தாண்டித்தான் நீங்க அவனை
தொட முடியும்”  கடுமையாக   எச்சரிக்க, “அப்போ உங்களுக்கு எங்களை விட
அவன்தான் முக்கியமா..?”  என்று சேகர் எகிற,

“எனக்கு என் நாலு  பிள்ளைங்களுமே முக்கியம், இதுல யார்..  யார்..  மேல கை
வைக்க நினைச்சாலும் அவங்களுக்கு முத எதிரி நான் தான்”,

“அவன் எப்போ பாத்தாலும் உங்களுக்கு பிடிக்காததை தானே செய்றான்..”  என்று
மோகன் ஏற்றி விட பார்க்க, அதை புரிந்து கொண்ட மாறனோ, “அப்போ எனக்கு
பிடிக்காததை செஞ்சா அவங்களை நான் தட்டிக்கலாம்  அப்படித்தானே…?” என்று
இருவரையும் கூர்மையாக பார்த்து கொண்டு கேட்கவும், வெலவெலத்து போன
இருவரும் அவரை பயத்துடன் பார்க்க,

“எனக்கு அவன் செய்றது மட்டுமில்ல நீங்க செய்றதும் தெரியும், ஒரு
எக்ஸாம்பிள் சொல்லவா..? அந்த கடைக்காரங்ககிட்ட எல்லாம் குத்தகை பணத்தை
விட மூணு  மடங்கு காசு அதிகமா வாங்கிறீங்கன்னு எனக்கு முதல்லே தெரியும்,

அப்பறமா..  டாஸ்மாக் எல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் பினாமி
மூலமா ஏலம் எடுத்து நடத்திட்டு இருக்கீங்களே..?” அதுவும் தெரியும்,  இது
போல இன்னும் ஒரு லிஸ்டே இருக்கு, அப்போ நீங்க கதிரை  சொன்ன மாதிரி எனக்கு
பிடிக்காததை செய்ற உங்களையும்  தட்டிடாலம் அப்படித்தானே..?”  என்று தீவிர
பார்வையுடன் கேட்டவர்,

“எனக்கு என் நாலு  பிள்ளைங்களும்   ஒன்னு தான், என்ன என்னோட அரசியல்
கொள்கைகள்.. அதுக்காக நான் செய்ற வேலைகள் அவனுக்கு பிடிக்காது..
அவ்வளவுதான், அதுக்காக நாங்க ரெண்டு பேறும் ஒன்னும்  எதிரிகள்  கிடையாது,
அதனால என்னை தூண்டி விடறதை விட்டுட்டு, போய் ஆகுற வேலையை பாருங்க..”
என்று முடித்து விட்டவர், வெளியே தோட்டத்திற்கு வர

அங்கு கதிர் தன் அம்மாவுடன்  சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து
தானும் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டாலும்,  தான் சென்றால்  அவன்
சென்றுவிடுவான் என்பதால், அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டு
பார்த்தவர் உள்ளே சென்றுவிட்டார்,

“நான் வந்து அரைமணிநேரம் ஆச்சு, நீ எப்பவும் போல லேட்..”  என்று அசோக்,
புல்லட்டின் மேல் அலட்சியமாக அமர்ந்திருந்த கதிரை பார்த்து கடுப்பாக
கேட்டான்.   “ஆமா.. நான் லேட் தான், அது எனக்கும் தெரியும் தான்” என்று
திமிராக சொன்ன கதிரின் பதிலில் பல்லை கடித்த  அசோக்,

“இது என்னடா பதில்..?” என்று கேட்கவும்,   “ச்சு.. இப்போ இது ரொம்ப
முக்கியமா..? நான் சொன்ன வேலை என்ன ஆச்சு..? முடிச்சிடீங்களா..?”

“முடிச்சாச்சு.. முடிச்சாச்சு, இப்போ கண்டிப்பா கடை தெருவை ஏலம்  எடுத்து
தான் ஆகணுமா..?”

“ஆமா.. அதை வச்சிதான் என் அண்ணன்க ஓவரா தூள்றானுங்க, அவனுங்க கிட்ட
இருந்து ஒவ்வொரு பல்லா பிடுங்கனும், அதுக்கு ஆரம்பம் தான் இது”,  என்று
உறுதியாக  சொல்லவும்,

“அதுக்குத்தான் இன்னிக்கு மார்க்கெட்ல அவனுங்க ஆளுங்களை வெளு வெளுன்னு
வெளுத்தியே அப்பறம் என்ன..?”

“அதனால எல்லாம் அவனுங்க அடங்கிட மாட்டானுங்க, அடுத்து வேற ஏதாவது செய்வானுங்க”,

“சரி விடு..   ஏதா இருந்தாலும் பாத்துக்கலாம், இப்போ நான் கிளம்புறேன்,
என் தங்கச்சியை சென்னையில விடணும்”, என்றவன்  கிளம்பி  வீட்டிற்கு
வரவும், அங்கு சென்னை செல்வதற்காக தயாராக நின்று கொண்டிருந்த தங்கையிடம்,

“அஞ்சலி கிளம்பலாமா..?” என்று கேட்க,   “ம்ம்.. போலாம்ன்னா..”  என்றவள்,
“இனி தான் தங்களுடைய வீட்டிற்கோ.. ஊரிற்கோ வரப்போவது இல்லை, இன்றோடு என்
சொந்த ஊருக்கும் எனக்கும் உள்ள பந்தம் முடியபோகிறது” என்று  உள்ளுக்குள்
அழுதவளின் துயரம் தொண்டையை அடைக்க, தாங்காமல் மீனாட்சியை கட்டி
கொண்டவள், அம்மாவின் அணைப்பில் தன் வேதனையை குறைக்க முயன்றாள், ஆனால்..?
பலன் என்னமோ பூஜ்யம்தான்,

“என்னடா பாப்பா..? என்ன ஆச்சி..?”  என்று அவளின் முக கலக்கத்தில்
மீனாட்சி கவலையுடன் கேட்கவும், சுதாரித்து கொண்ட அஞ்சலி,
“ஒண்ணுமில்லைம்மா, கொஞ்சம் டயர்ட் அவ்வளவுதான்”,   “சரி நான்
கிளம்புறேன்ம்மா, பாத்துக்கோங்க”  என்று தொண்டையில் அடைத்த வேதனையை
முழுங்கி கொண்டு, முயன்று  சாதாரணமாக சொன்னவள்,

லதாவை பார்க்க, அவரின் முகத்தில் இருந்தது எல்லாம் ஆதங்கமும், கோவமும்
தான், அவரை பார்த்து சிரிக்க முயன்றவள், அவரின் கையை பிடித்து கொள்ள,
அப்போ  எங்களை எல்லாம்  விட்டுட்டு  ஒரேடியா பாரின் போக போற, இனி திரும்ப
வரவே மாட்ட, அப்படி தானே..?” என்று மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்
குரலில் குற்றசாட்டாக கேட்க,

“அண்ணி.. உங்களுக்கு  என்னோட வேதனை, கஷ்டம் எல்லாம் சொல்லி புரியவைக்க
முடியாது,  அது தினம் தினம் என்னை உயிரோட கொன்னுட்டு இருக்கிற கொடுமையான
நரக வேதனை அண்ணி”,

“இப்பவே இப்படின்னா, இன்னும் அவருக்கு கல்..”  என்று   “கல்யாணம்..”
என்ற வார்த்தையை கூட சொல்ல முடியாமல் திணறியவள்,    “ஆகி அதை தினம்..
தினம்..  நான் பார்த்து, வேண்டாம் அண்ணி, என்னால் தினமும் தீக்குளிக்க
முடியாது”,   என்று தன் வலியை  ஏற்று கொண்டு,  “இது தான் தன் நிலை” என்று
கண்ணீர் சிந்தாமல் கம்பீரமாக சொன்னவளை, மெலிதான அழுகையுடன்  கட்டி
கொண்டார் லதா,

நல்ல வேளை மீனாட்சியும்.. அசோக்கும் வேறு பேசி கொண்டிருந்ததால்  லதாவின்
அழுகையை  அவர்கள்  பார்க்காமல் போக, அதற்குள் லதாவும் சமாளித்து கொள்ள,
அஞ்சலி இருவரிடமும் விடை பெற்று கொண்டவள், இறுதியாக ஸ்வேதாவிடம் “பை..”
சொல்ல, அவள் தன் செல்ல அத்தை கிளம்புவதற்கு அழ,

அஞ்சலிக்கும் அழுகை வர பார்க்க, தன்னை சமாளித்தவள், ஸ்வேதாவையும்
சமாதானபடுத்திவிட்டு,  ஏக்கமாக தன் குடும்பத்தாரையும், வீட்டையும்,
ஊரையும் பார்த்து கொண்டே பயணித்தவள், எப்போதும் போல் அந்த ஒத்தையடி பாதை
வர கண்மூடி கொள்ளாமல்,   இறுதியாக அந்த இடத்தை புற கண்களிலும், கதிரின்
தோற்றத்தை   அகக்கண்களிலும் பார்த்தவள், மொத்தமாக கிளம்பியும்
விட்டாள்

Advertisement